வாசகர் கேட்கும் கேள்விகள்
மேவிபோசேத்துக்கு தாவீது ராஜா கருணை காட்டினார் என்று 2 சாமுவேல் 21:7-9 சொல்கிறது. பிறகு ஏன் மேவிபோசேத்தைக் கொலை செய்வதற்கு தாவீது ஒப்படைத்தார்?
இந்த வசனங்களை வாசித்த உடனே சிலருடைய மனதில் இந்தக் கேள்விதான் வரும். ஆனால், மேவிபோசேத் என்ற பெயரில் இரண்டு பேர் இருந்தார்கள். அந்தப் பதிவை விலாவாரியாக வாசித்துப் பார்த்தால் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
இஸ்ரவேலை ஆட்சி செய்த சவுல் ராஜாவுக்கு ஏழு மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தார்கள். சவுலுடைய முதல் மகன் யோனத்தான். சவுலுக்கு, மேவிபோசேத் என்ற இன்னொரு மகனும் இருந்தான். அவன் சவுலுக்கும் அவருடைய மறுமனைவி ரிஸ்பாளுக்கும் பிறந்தவன். யோனத்தானுக்கும் மேவிபோசேத் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். அப்படியென்றால், சவுல் ராஜாவுக்கு மேவிபோசேத் என்ற பெயரில் ஒரு மகனும் இருந்தான், ஒரு பேரனும் இருந்தான்.
ஒருசமயத்தில், சவுல் ராஜா இஸ்ரவேலர்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருந்த கிபியோனியர்களை வெறுக்க ஆரம்பித்தார். அவர்கள் எல்லாரையும் பூண்டோடு ஒழித்துக்கட்ட முயற்சி செய்தார். அவர்களில் நிறைய பேரைக் கொலை செய்ததாகத் தெரிகிறது. அப்படி செய்தது பெரிய தவறு. ஏனென்றால், யோசுவாவின் காலத்தில் இஸ்ரவேலர்களுடைய தலைவர்கள் கிபியோனியர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.—யோசு. 9:3-27.
சவுல் ராஜாவின் காலத்திலும் அந்த ஒப்பந்தம் மாறவில்லை. ஆனால், அவர் அந்த ஒப்பந்தத்தை மீறி கிபியோனியர்களை ஒழித்துக்கட்ட முயற்சி செய்தார். அதனால், சவுல்மேலும் அவருடைய குடும்பத்தார்மேலும் “கொலைப்பழி” விழுந்தது. (2 சா. 21:1) சவுல் இறந்த பிறகு, தாவீது ராஜாவாக ஆனார். மீதியிருந்த கிபியோனியர்கள் தாவீதிடம் வந்து சவுல் செய்த பெரிய தவறைப் பற்றிச் சொன்னார்கள். நடந்த தவறுக்குப் பரிகாரம் செய்வதற்கும், தேசத்தை யெகோவா ஆசீர்வதிப்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் தாவீது கேட்டார். அதற்குப் பரிகாரமாக அவர்கள் பணமோ பொருளோ கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, தங்களை ‘துடைத்தழிக்கத் திட்டம் போட்டவருடைய’ ஏழு மகன்களையும் கொன்றுபோடுவதற்கு தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டார்கள். (எண். 35:30, 31) அவர்கள் கேட்டதை தாவீது செய்தார்.—2 சா. 21:2-6.
கிபியோனியர்கள் இதைக் கேட்பதற்கு முன்பாகவே சவுலும் யோனத்தானும் போரில் இறந்துபோயிருந்தார்கள். ஆனால், யோனத்தானின் மகன் மேவிபோசேத் உயிரோடுதான் இருந்தார். அவர் குழந்தையாக இருந்தபோது ஒரு விபத்தில் அவருடைய கால்கள் ஊனமாகிவிட்டன. அதனால், தன்னுடைய தாத்தாவோடு சேர்ந்து கிபியோனியர்களை அவர் தாக்கவில்லை. தாவீது தன்னுடைய உயிர் நண்பனாக இருந்த யோனத்தானோடு ஒரு ஒப்பந்தம் செய்திருந்தார். அந்த ஒப்பந்தத்தின்படி யோனத்தானையும் அவருடைய சந்ததியையும் பாதுகாப்பதாக தாவீது சொன்னார். (1 சா. 18:1; 20:42) அதனால்தான், பைபிள் இப்படிச் சொல்கிறது: “மேவிபோசேத்துக்கு ராஜா [தாவீது] கருணை காட்டினார். ஏனென்றால், தாவீதும் சவுலின் மகன் யோனத்தானும் யெகோவாவுக்கு முன்னால் ஒருவருக்கொருவர் உறுதிமொழி கொடுத்திருந்தார்கள்.”—2 சா. 21:7.
இருந்தாலும் கிபியோனியர்களின் கோரிக்கையை தாவீது மதித்தார். அதனால், சவுலின் இரண்டு மகன்களையும் ஐந்து பேரன்களையும் கிபியோனியர்களின் கையில் ஒப்படைத்தார். அந்த இரண்டு மகன்களில் ஒருவருடைய பெயர் மேவிபோசேத். (2 சா. 21:8, 9) தாவீது இப்படிச் செய்ததால் தேசத்தின்மேல் விழுந்த கொலைப்பழி முடிவுக்கு வந்தது.
இதை வெறும் ஒரு கதையாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. இதிலிருந்து முக்கியமான ஒரு விஷயத்தை நாம் தெரிந்துகொள்ளலாம். சவுலின் இரண்டு மகன்கள்மேலும் ஐந்து பேரன்கள்மேலும் எந்தத் தவறும் இல்லாமல் இருந்திருந்தால் அவர்களை இப்படிக் கொலை செய்ததை யெகோவா ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். ஏனென்றால், ‘அப்பா செய்த பாவத்துக்காகப் பிள்ளைகளுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது. ஒருவன் செய்த பாவத்துக்காக அவனுக்கு மட்டும்தான் மரண தண்டனை கொடுக்க வேண்டும்’ என்று கடவுளுடைய சட்டம் தெளிவாகச் சொல்லியிருந்தது. (உபா. 24:16) அப்படியென்றால், கிபியோனியர்களைப் பூண்டோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற திட்டத்தில் அந்த ஏழு பேருக்கும் பங்கு இருந்ததாகத் தெரிகிறது. அதனால், அவர்கள் செய்த தவறுக்கான கூலி அவர்களுக்குக் கிடைத்தது.
இந்தப் பதிவிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? தவறு செய்துவிட்டு ‘மற்றவர்கள் சொன்னதால்தான் செய்தேன்’ என்று சொல்லி ஒருவர் தப்பிக்க முடியாது. தான் செய்த தவறுக்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். பைபிள் சொல்கிற பொன்மொழி இதுதான்: “உன் பாதையில் இருக்கிற தடைகளையெல்லாம் எடுத்துப்போடு. அப்போது, உன் வழிகளெல்லாம் உறுதியாகும். வலது பக்கமோ இடது பக்கமோ சாயாதே. கெட்ட வழியில் கால்வைக்காதே.”—நீதி. 4:24-27; எபே. 5:15.