Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 14

’இதனால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்’

’இதனால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்’

“நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.”—யோவா. 13:35.

பாட்டு 106 அன்பெனும் குணத்தை வளர்த்தல்

இந்தக் கட்டுரையில்... a

யெகோவாவின் சாட்சியாக இல்லாதவர்கள், யெகோவாவுடைய மக்களுக்குள் இருக்கிற அன்பைப் பார்க்கும்போது எப்படி உணருகிறார்கள்? (பாரா 1)

1. நம்முடைய கூட்டங்களுக்கு முதல் தடவையாக வருகிறவர்களுக்கு எது ரொம்பப் பிடித்திருக்கிறது? (படத்தையும் பாருங்கள்.)

 யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடக்கிற கூட்டத்துக்கு, ஒரு கணவனும் மனைவியும் முதல் தடவையாகப் போனார்கள். சபையில் இருந்தவர்கள் எல்லாரும் இவர்களை அன்பாக வரவேற்றது அவர்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அவர்களுக்குள் இருந்த அன்பைப் பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் வீட்டுக்குத் திரும்பும்போது, அந்த மனைவி தன்னுடைய கணவரிடம், ‘யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களிடமிருந்து ரொம்ப வித்தியாசமாக இருக்கிறார்கள். அவர்களுடன் இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது’ என்று சொன்னார்.

2. யெகோவாவை வணங்குவதை ஏன் சிலர் நிறுத்தியிருக்கிறார்கள்?

2 யெகோவாவுடைய மக்களுக்குள் இருக்கிற அன்பு விசேஷமானது. இந்த அன்பை வேறெங்கும் பார்க்க முடியாது. ஆனால், யெகோவாவின் சாட்சிகளும் தவறு செய்கிற இயல்புள்ளவர்கள்தான். (1 யோ. 1:8) சபையில் இருக்கிற ஒருவரைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளும்போது அவர்களிடம் இருக்கிற குறைகளும் கண்ணுக்குத் தெரியும். (ரோ. 3:23) ஆனால், சிலர் அந்தக் குறைகளைப் பார்த்து யெகோவாவை வணங்குவதையே நிறுத்தியிருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

3. இயேசுவின் உண்மையான சீஷர்களுக்கு அடையாளம் என்ன? (யோவான் 13:34, 35)

3 இந்தக் கட்டுரையின் முக்கிய வசனத்தை மறுபடியும் பாருங்கள். (யோவான் 13:34, 35-ஐ வாசியுங்கள்.) உண்மையான கிறிஸ்தவர்களுடைய அடையாளம் என்ன? அன்புதான்! பரிபூரணம் கிடையாது. இதில் இயேசு சொன்னதைக் கவனித்தீர்களா? ‘அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்’ என்று சொல்லவில்லை. “நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்றுதான் சொன்னார். அப்படியென்றால், சபைக்குள் இருக்கிறவர்கள் மட்டுமல்ல, சபைக்கு வெளியே இருக்கிறவர்களும் நாம் ஒருவர்மேல் ஒருவர் காட்டுகிற சுயநலமில்லாத அன்பைப் பார்த்து, நாம்தான் உண்மையான கிறிஸ்தவர்கள் என்று புரிந்துகொள்வார்கள் என்று இயேசு சொன்னார்.

4. உண்மையான கிறிஸ்தவர்களைப் பற்றிச் சிலர் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்?

4 யெகோவாவின் சாட்சிகளாக இல்லாத சிலர் ஒருவேளை இப்படியெல்லாம் கேட்கலாம்: ‘இயேசுவின் உண்மையான சீஷர்கள் யார் என்று எப்படி அன்பை வைத்துக் கண்டுபிடிப்பது? இயேசு தன்னுடைய சீஷர்களிடம் எப்படி அன்பைக் காட்டினார்? இன்று இயேசுவைப் போல் எப்படி நடந்துகொள்ள முடியும்?’ இந்தக் கேள்விகளுக்கு யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறவர்களும் பதில் தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். அப்படிச் செய்தால்தான், நம்மால் முழுமையாக அன்பு காட்ட முடியும். அதுவும் முக்கியமாக, ஒருவருடைய குறைகள் நமக்குத் தெரியும்போதும் அன்பு காட்ட முடியும்.—எபே. 5:2.

அன்புதான் உண்மைக் கிறிஸ்தவர்களுடைய ஒரே அடையாளம், ஏன்?

5. யோவான் 15:12, 13-ல் இயேசு என்ன சொன்னார் என்பதை விளக்குங்கள்.

5 விசேஷமான ஒரு அன்பை வைத்து தன்னுடைய சீஷர்களைக் கண்டுபிடிக்கலாம் என்று இயேசு சொன்னார். (யோவான் 15:12, 13-ஐ வாசியுங்கள்). “நான் உங்கள்மேல் அன்பு காட்டியதுபோல் நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும்” என்று இயேசு கட்டளை கொடுத்திருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம்? இயேசுவே அதற்குப் பதில் சொல்கிறார்—தேவைப்பட்டால், சகோதரர்களுக்காக உயிரையே கொடுக்கிற அளவுக்கு அன்பு காட்டுவது. அதுதான், சுயநலமில்லாத அன்பு! b

6. அன்பு ரொம்ப முக்கியம் என்று கடவுளுடைய வார்த்தை எப்படிச் சொல்கிறது?

6 அன்பு ரொம்ப முக்கியம் என்று கடவுளுடைய வார்த்தையும் சொல்கிறது. பைபிளில் உங்களுக்குப் பிடித்த வசனம் எது என்று கேட்டால், நிறைய பேர் இந்த வசனங்களைத்தான் சொல்வார்கள்: “கடவுள் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோ. 4:8) “உன்மேல் நீ அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்.” (மத். 22:39) “அன்பு ஏராளமான பாவங்களை மூடும்.” (1 பே. 4:8) “அன்பு ஒருபோதும் ஒழியாது.” (1 கொ. 13:8) இதுபோல் இன்னும் நிறைய வசனங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் அன்பு என்ற அருமையான குணத்தை வளர்த்துக்கொள்வதும், அதைக் காட்டுவதும் எவ்வளவு முக்கியம் என்று வெளிப்படையாகச் சொல்கின்றன.

7. ஏன் சாத்தானால் உண்மையான அன்பை வைத்து மக்களை எப்போதுமே ஒன்றுசேர்க்க முடியாது?

7 நிறையப் பேர் இப்படிக் கேட்கிறார்கள்: ‘எல்லா மதங்களுமே நாங்கள்தான் உண்மையைச் சொல்லிக் கொடுக்கிறோம் என்கிறார்கள். ஆனால், கடவுளைப் பற்றி ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு மாதிரி சொல்லிக்கொடுக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, உண்மை மதம் எது என்று நாம் எப்படித் தெரிந்துகொள்வது?’ மக்கள் இப்படிக் குழம்பிப்போவதற்கு காரணமே சாத்தான்தான். அவர்கள் உண்மை மதத்தைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக நிறைய பொய் மதங்களை அவன் உருவாக்கி வைத்திருக்கிறான். ஆனால் உலகம் முழுவதும் இருக்கிற மக்களை அன்பினால் ஒன்று சேர்க்கிற ஒரு மதத்தை அவனால் உருவாக்கவே முடியாது. யெகோவாவால் மட்டும்தான் அது முடியும். ஏனென்றால், உண்மையான அன்பு அவரிடம் இருந்துதான் வருகிறது. அவருடைய சக்தியும் ஆசீர்வாதமும் இருக்கிற மக்களால்தான், ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட முடியும். (1 யோ. 4:7) அதனால்தான் இயேசு தன்னுடைய உண்மையான சீஷர்களிடம் மட்டும்தான் இப்படிப்பட்ட சுயநலமில்லாத அன்பு இருக்கும், அதை வைத்து அவர்களைக் கண்டுபிடித்துவிடலாம் என்று சொன்னார்.

8-9. யெகோவாவின் சாட்சிகளுக்குள் இருக்கிற அன்பு, நிறைய பேருடைய மனதை எப்படித் தொட்டிருக்கிறது?

8 இயேசு சொன்னபடி, உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒருவர்மேல் ஒருவர் காட்டுகிற அன்பை வைத்தே நிறைய பேர் அவர்களை அடையாளம் கண்டுபிடித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஈயேன் என்ற ஒரு சகோதரர் அவர் கலந்துகொண்ட முதல் மாநாட்டைப் பற்றிச் சொல்கிறார். அந்த மாநாடு அவர் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு ஸ்டேடியத்தில் நடந்தது. ஒருசில மாதங்களுக்கு முன்புதான் அதே ஸ்டேடியத்துக்கு ஒரு விளையாட்டு போட்டியைப் பார்ப்பதற்காக அவர் போயிருந்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: “அதற்கும் இந்த மாநாட்டுக்கும் பயங்கர வித்தியாசம். அங்கே யெகோவாவின் சாட்சிகள் மரியாதையுடன் நடந்துகொண்டார்கள். அவர்கள் போட்டிருந்த உடைகள் நேர்த்தியாக இருந்தது. பிள்ளைகளும் ரொம்ப நன்றாக நடந்துகொண்டார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் ரொம்ப சமாதானமாக, நிம்மதியாக இருந்ததைப் பார்த்தேன். அதற்காகத்தான் நான் ஏங்கிக்கொண்டிருந்தேன். அன்று நான் கேட்ட பேச்சுகள் எதுவுமே என் ஞாபகத்தில் இல்லை. ஆனால், சாட்சிகள் நடந்துகொண்ட விதம் மட்டும் என் ஞாபகத்திலிருந்து போகவே இல்லை.” c நாம் அப்படி நடந்துகொள்வதற்கு காரணம், நமக்குள் இருக்கிற உண்மையான அன்புதான். நம்முடைய சகோதர, சகோதரிகள்மேல் நாம் அன்பு வைத்திருப்பதால் அவர்களிடம் கனிவாக, மரியாதையாக நடந்துகொள்கிறோம்.

9 இன்னொரு அனுபவத்தைப் பார்க்கலாம். ஜான் என்ற ஒரு சகோதரர் முதல் தடவையாக கூட்டத்துக்குப் போனபோது என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார்: “அங்கே இருந்தவர்கள் எல்லாரும் ரொம்ப நட்பாக பழகினார்கள் . . . அவர்கள் எல்லாரும் பரிசுத்தவான்கள் என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் காட்டிய உண்மையான அன்பைப் பார்த்து, இதுதான் உண்மையான மதமாக இருக்கும் என்று சந்தேகமே இல்லாமல் நம்பினேன்.” d இதுபோன்ற அனுபவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம். யெகோவாவுடைய மக்கள் திரும்பத் திரும்ப, ‘நாங்கள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள்’ என்று நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

10. கிறிஸ்தவ அன்பைக் காட்டுவதற்கு எப்போது நமக்கு அருமையான வாய்ப்பு கிடைக்கும்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

10 நாம் ஏற்கெனவே பார்த்தபடி, நாம் எல்லாருமே பாவம் செய்கிற இயல்புள்ளவர்கள்தான். சில சமயங்களில், நம்முடைய சகோதர சகோதரிகள் செய்வதோ சொல்வதோ நம்மைக் கஷ்டப்படுத்திவிடலாம். e (யாக். 3:2) அப்படிப்பட்ட சமயங்களிலும் அவர்களிடம் அன்பு காட்ட நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. நாம் நடந்துகொள்கிற விதத்தில் அவர்கள்மேல் அன்பு இருப்பதை நாம் காட்டலாம். இந்த விஷயத்தில் இயேசு நமக்கு எப்படி முன்மாதிரியாக இருக்கிறார்? அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?—யோவா. 13:15.

அப்போஸ்தலர்களிடம் இயேசு எப்படி அன்பைக் காட்டினார்?

சீஷர்கள் மோசமான குணங்களைக் காட்டியபோதும் இயேசு அவர்களிடம் அன்பாக நடந்துகொண்டார் (பாராக்கள் 11-13)

11. யாக்கோபும் யோவானும் என்ன மோசமான குணத்தைக் காட்டினார்கள்? (படத்தையும் பாருங்கள்.)

11 தன்னுடைய சீஷர்கள் எந்தத் தப்புமே செய்யக் கூடாது, எல்லாவற்றிலும் சரியாக இருக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கவில்லை. அவர்களிடமிருந்த சில குறைகளையும், தப்பான குணங்களையும் மாற்றிக்கொண்டு யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதற்கு அன்பாக அவர்களுக்கு உதவி செய்தார். ஒருசமயம், இயேசுவுடைய இரண்டு சீஷர்களான யாக்கோபும் யோவானும், இயேசு ராஜாவாக ஆன பிறகு தங்களுக்கு முக்கியமான இடத்தைக் கொடுக்க வேண்டும் என்று அவர்களுடைய அம்மா மூலமாக இயேசுவிடம் கேட்டார்கள். (மத். 20:20, 21) இதிலிருந்து யாக்கோபுக்கும் யோவானுக்கும் ‘மற்றவர்களைவிட நான்தான் முக்கியமான ஆளாக இருக்க வேண்டும்’ என்ற ஆசையும், பெருமையும் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.—நீதி. 16:18.

12. யாக்கோபும், யோவானும் மட்டும்தான் மோசமாக நடந்துகொண்டார்களா? விளக்குங்கள்.

12 அந்தச் சமயத்தில் யாக்கோபும் யோவானும் மட்டும்தான் இப்படி மோசமாக நடந்துகொண்டார்களா? மற்ற சீஷர்கள் எல்லாரும் என்ன செய்தார்கள்? “நடந்ததைக் கேள்விப்பட்ட மற்ற பத்துப் பேரும் அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபப்பட்டார்கள்.” (மத். 20:24) இவர்கள் இரண்டு பேருடன் மற்ற சீஷர்கள் ரொம்பக் கோபமாக, காரசாரமாக சண்டைப் போட்டிருப்பார்கள். ஒருவேளை அவர்கள் எல்லாரும் இப்படிச் சொல்லியிருக்கலாம்: ‘என்ன தைரியம் இருந்தால் அரசாங்கத்தில் முக்கியமான இடம் வேண்டும் என்று இரண்டு பேரும் போய்க் கேட்டிருப்பீர்கள்? நீங்கள் மட்டும்தான் இயேசுவுடன் சேர்ந்து ரொம்ப உழைத்தீர்களா? ஏன், முக்கியமான இடத்துக்குப் போகும் தகுதி எங்களுக்கெல்லாம் இல்லையா?’ இப்படி அவர்கள் என்ன சொல்லியிருந்தாலும் சரி, ஒருவர்மேல் ஒருவர் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை அந்தச் சமயத்தில் சீஷர்கள் மறந்து போய்விட்டார்கள்.

13. அப்போஸ்தலர்களுடைய குறைகள் தெரிந்தபோது இயேசு எப்படி நடந்துகொண்டார்? (மத்தேயு 20:25-28)

13 இந்தச் சமயத்தில் இயேசு எப்படி நடந்துகொண்டார்? அவர் கோபத்தில் கொதித்துப் போகவில்லை. ‘இனிமேல் நீங்கள் எல்லாரும் எனக்கு சீஷர்களாக இருக்க வேண்டாம். யார் உண்மையிலேயே மனத்தாழ்மையாக இருக்கிறார்களோ, அன்பு காட்டுகிறார்களோ அவர்களைக் கண்டுபிடித்து அவர்களை என்னுடைய அப்போஸ்தலர்களாக வைத்துக்கொள்கிறேன்’ என்று இயேசு சொல்லவில்லை. சீஷர்கள் நல்லவர்கள்தான் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால் பொறுமையாக அவர்களிடம் பேசினார். (மத்தேயு 20:25-28-ஐ வாசியுங்கள்.) யார் பெரியவர் என்ற பிரச்சினை வருவது இது முதல் தடவையும் அல்ல, கடைசி தடவையும் அல்ல. ஆனால் இயேசு அவர்களிடம் எப்போதுமே அன்பாகத்தான் நடந்துகொண்டார்.—மாற். 9:34; லூக். 22:24.

14. இயேசுவுடைய அப்போஸ்தலர்கள் என்ன மாதிரியான சூழலில் வளர்ந்தார்கள்?

14 அப்போஸ்தலர்கள் வளர்ந்த கலாச்சாரத்தை இயேசு கண்டிப்பாக யோசித்துப் பார்த்திருப்பார். (யோவா. 2:24, 25) முக்கியமான பெரிய பொறுப்பில் இருப்பதுதான் கௌரவம், அதுதான் மதிப்பு என்று அன்றிருந்த மதத் தலைவர்கள் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். சீஷர்களும் அதைப் பார்த்துதான் வளர்ந்தார்கள். (மத். 23:6; ஆராய்ச்சி குறிப்பில் இருக்கிற, ஜெபக்கூடத்தின் முன்வரிசை இருக்கைகள் என்ற வீடியோவை ஒப்பிட்டுப் பாருங்கள்.) யூத மதத் தலைவர்கள் தங்களைத் தாங்களே நீதிமான்களாக நினைத்துக்கொண்டார்கள். f (லூக். 18:9-12) இதுபோன்ற சூழ்நிலையில் வளர்ந்த அப்போஸ்தலர்களும், தங்களைப் பற்றி என்ன நினைத்தார்கள், மற்றவர்களை எப்படிப் பார்த்தார்கள் என்பதை இயேசு நன்றாகப் புரிந்துவைத்திருந்தார். (நீதி. 19:11) இயேசு அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கவில்லை, நியாயமாக நடந்துகொண்டார். அவர்கள் தப்பு செய்தபோது பொறுமையை இழந்து உணர்ச்சிவசப்படவும் இல்லை. அவர்களுடைய நல்ல மனது இயேசுவுக்குத் தெரியும். அதனால் அவர்களுக்கு பொறுமையாக உதவி செய்தார். நான்தான் ரொம்ப முக்கியம் என்று பெருமையாக நடந்துகொள்வதற்கு பதிலாக, அன்பாக இருப்பதுதான் முக்கியம் என்று சொல்லிக்கொடுத்தார்.

நாம் எப்படி இயேசுவைப் போல் நடந்துகொள்ளலாம்?

15. யாக்கோபு மற்றும் யோவானுடைய விஷயத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்?

15 இந்தச் சம்பவத்திலிருந்து நாம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். யாக்கோபும், யோவானும் அரசாங்கத்தில் முக்கியமான இடத்தைக் கேட்டது தவறுதான். அதேசமயத்தில், அவர்களுக்குள் இருக்கிற ஒற்றுமையைக் கெடுத்துப் போடுகிற அளவுக்கு மற்ற அப்போஸ்தலர்கள் நடந்துகொண்டதும் தவறுதான். ஆனால், இயேசு 12 அப்போஸ்தலர்களிடமும் ரொம்பப் பாசமாக அன்பாக நடந்துகொண்டார். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? மற்றவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது மட்டுமல்ல, பதிலுக்கு நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதும் ரொம்ப முக்கியம். நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? ஒருவர் நடந்துகொண்ட விதம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அவர் அப்படிச் செய்ததற்கு நான் ஏன் இவ்வளவு கோபப்படுகிறேன்? இது என்னிடம் இருக்கிற குறையா? நான் எதையாவது சரி செய்துகொள்ள வேண்டுமா? ஒருவேளை அவர் ஏதாவது பிரச்சினையில் இருந்ததால்தான் இப்படி நடந்துகொண்டாரா? என் கோபம் நியாயம் என்று நான் நினைத்தாலும், அவர் செய்ததை மன்னித்துவிட்டு என்னால் அவரிடம் அன்பாக இருக்க முடியுமா?’ மற்றவர்களிடம் நாம் எந்தளவுக்கு அன்பாக நடந்துகொள்கிறோமோ, அந்தளவுக்கு நாம் இயேசுவுடைய உண்மையான சீஷர்கள் என்பதை நிரூபிப்போம்.

16. இயேசுவின் உதாரணத்திலிருந்து நாம் வேறென்ன கற்றுக்கொள்கிறோம்?

16 நாம் நம்முடைய சகோதர சகோதரிகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று இயேசுவின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம். (நீதி. 20:5) இயேசுவினால் மற்றவர்களுடைய மனதில் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நம்மால் அதைத் தெரிந்துகொள்ள முடியாது என்பது உண்மைதான். ஆனால், நம் சகோதர சகோதரிகள் நம்மை எரிச்சல்படுத்துகிற மாதிரி நடந்துகொண்டாலும் நம்மால் பொறுமையாக பொறுத்துப்போக முடியும். (எபே. 4:1, 2; 1 பே. 3:8) அவர்களுடைய பின்னணியைப் பற்றி நாம் தெரிந்துகொண்டால், இதைச் செய்வது சுலபமாக இருக்கும். அதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

17. ஒரு சகோதரரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டது, ஒரு வட்டார கண்காணிக்கு எப்படி உதவியது?

17 கிழக்கு ஆப்பிரிக்காவில் சேவை செய்கிற ஒரு வட்டார கண்காணி, அங்கிருக்கிற ஒரு சகோதரர் ரொம்ப முரட்டுத்தனமாக இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தார். பிறகு அந்த வட்டார கண்காணி என்ன செய்தார்? அவர் இப்படிச் சொல்கிறார்: “அந்தச் சகோதரரை ஒதுக்குவதற்கு பதிலாக அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.” அப்படிச் செய்தபோது, அந்தச் சகோதரர் வளர்ந்த சூழ்நிலையை அந்த வட்டார கண்காணி தெரிந்துகொண்டார். அதனால்தான் அவருடைய குணம் இப்படி இருக்கிறது என்றும் புரிந்துகொண்டார். அதன்பின் அந்த வட்டார கண்காணி இப்படிச் சொன்னார்: “அப்படியொரு சூழலில் வளர்ந்தவர், அதுபோன்ற குணங்களை எல்லாம் விட்டு வருவது ரொம்ப கஷ்டம். இந்தளவு மாறுவதற்கே அவர் நிறைய முயற்சி எடுத்திருக்கிறார் என்று தெரிந்தபோது, எனக்கு அவரை ரொம்பப் பிடித்துப்போனது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்.” உண்மைதான், நம்முடைய சகோதர சகோதரிகளை நன்றாகப் புரிந்துகொள்ள முயற்சி எடுக்கும்போது அவர்கள்மேல் உண்மையான அன்பைக் காட்ட முடியும்.

18. சகோதர சகோதரிகள் யாராவது நம்மைக் கஷ்டப்படுத்திவிட்டால் நம்மை நாமே என்னென்ன கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்? (நீதிமொழிகள் 26:20)

18 சில சமயங்களில், ஒரு சகோதரரோ அல்லது சகோதரியோ நம்மைக் கஷ்டப்படுத்திவிட்டால், அவர்களிடம் அதைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும் என்று நமக்குத் தோன்றும். ஆனால் அதற்கு முன்பு நம்மை நாமே இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது நல்லது. ‘என்ன நடந்தது என்று முழுமையாக எனக்குத் தெரியுமா?’ (நீதி. 18:13) ‘என்னைக் கஷ்டப்படுத்துவதற்காக இதை வேண்டுமென்றேதான் அவர் செய்தாரா?’ (பிர. 7:20) ‘நானும் எப்போதாவது இதுபோன்ற தவறைச் செய்திருக்கிறேனா?’ (பிர. 7:21, 22) ‘நான் இதைப் பற்றி அவரிடம் போய்ப் பேசினால், இருப்பதைவிட பிரச்சினை இன்னும் மோசமாகுமா?’ (நீதிமொழிகள் 26:20-ஐ வாசியுங்கள்.) நேரமெடுத்து நம்மை நாமே இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டால், அவர்கள்மேல் இருக்கிற அன்பினால் பிரச்சினையைப் பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டுவிடுவோம்.

19. என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

19 ஒரு தொகுதியாக யெகோவாவின் சாட்சிகள் தாங்கள்தான் இயேசுவுடைய உண்மையான சீஷர்கள் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் சகோதர சகோதரிகளிடம் குறைகள் இருந்தாலும், அவர்கள்மேல் சுயநலமில்லாத அன்பைக் காட்டும்போது நாம் ஒவ்வொருவரும் உண்மையிலேயே இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். அப்படி நாம் செய்யும்போது, உண்மையான மதம் எது என்று கண்டுபிடிக்க மற்றவர்களுக்கு உதவுவோம். அதோடு, அவர்களும் நம்மோடு சேர்ந்து அன்பான கடவுளான யெகோவாவை வணங்க உதவுவோம். உண்மை கிறிஸ்தவர்களின் அடையாளமான அன்பைத் தொடர்ந்து காட்ட வேண்டும் என்று நாம் தீர்மானமாக இருப்போம்.

பாட்டு 17 நான் ஆசையாய் செய்வேன்

a நமக்குள் இருக்கிற உண்மையான அன்பைப் பார்த்து நிறைய பேர் யெகோவாவைப் பற்றியும், பைபிள் உண்மைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டிருக்கிறார்கள். நாம் எல்லாரும் பாவம் செய்பவர்கள்தான். அதனால் சில சமயங்களில் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுவது கஷ்டமாக இருக்கிறது. ஆனால், அந்த அன்பு ஏன் ரொம்ப ரொம்ப முக்கியம்? மற்றவர்களிடம் இருக்கிற குறைகள் தெரியும்போதும், நாம் எப்படி இயேசுவைப் போலவே நடந்துகொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

c காவற்கோபுரம் நவம்பர் 1, 2012 பக்கம் 13-14-ல் இருக்கிற “கடைசியில் என் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்தது” என்ற ஆங்கில கட்டுரையைப் பாருங்கள்.

d காவற்கோபுரம் மே 1, 2012 பக்கம் 18-19-ல் இருக்கிற “என் வாழ்க்கை நன்றாக இருந்த மாதிரி இருந்தது” என்ற ஆங்கில கட்டுரையைப் பாருங்கள்.

e 1 கொரிந்தியர் 6:9, 10-ல் சொல்லியிருக்கிற, மூப்பர்கள் கவனிக்க வேண்டிய மோசமான பாவங்களைப் பற்றி இந்தக் கட்டுரை சொல்லவில்லை.

f ஒரு ரபி இப்படிச் சொன்னார்: “இந்த உலகத்தில் ஆபிரகாமைப் போல நீதிமான்கள் குறைந்தது முப்பது பேராவது இருப்பார்கள். ஒருவேளை முப்பது பேர் இருந்தால் அவர்களில் இரண்டு பேர், நானும் என் மகனும்தான். பத்து பேர் இருந்தால், அவர்களில் இரண்டு பேர், நானும் என் மகனும்தான். ஐந்து பேர் இருந்தால் அவர்களில் இரண்டு பேர், நானும் என் மகனும்தான். ஒருவேளை இரண்டு பேர்தான் இருந்தார்கள் என்றால், அந்த இரண்டு பேர் நானும் என் மகனும்தான். ஒரே ஒருவர்தான் என்றால் அது நான் மட்டும்தான்.”