Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 10

ஏன் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்?

ஏன் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்?

’நீங்கள் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் எடுங்கள்.’—அப். 2:38.

பாட்டு 34 உத்தம பாதையில் செல்வேன்

இந்தக் கட்டுரையில்... a

1-2. ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கும்போது என்ன நடக்கும், இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

 மாநாட்டில் ஞானஸ்நானம் எடுக்கப் போகிறவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு அவர்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்படும். அதற்கு அவர்கள் சத்தமாகவும் உறுதியாகவும் ‘ஆம்’ என்று பதில் சொல்வார்கள். அவர்கள் குடும்பத்தில் இருக்கிறவர்களும், நண்பர்களும் அவர்களைப் பெருமையாக பார்ப்பார்கள். ஞானஸ்நானம் எடுத்து தண்ணீரிலிருந்து வெளியே வரும்போது அவர்கள் முகம் சந்தோஷத்தில் பூரித்துப்போகும். அவர்களைப் பார்த்து எல்லாருமே கை தட்டுவார்கள். இதே மாதிரிதான் ஒவ்வொரு வாரமும் சராசரியாக ஆயிரக்கணக்கானவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவுக்கு சாட்சிகளாக ஆகிறார்கள்.

2 ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், இந்தப் பொல்லாத உலகத்தில் நீங்கள் மட்டும் தனியாகத் தெரிவீர்கள். ஏனென்றால், நீங்கள் ‘யெகோவாவைத் தேடுகிறீர்கள்.’ (சங். 14:1, 2) நீங்கள் சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, ஞானஸ்நானம் எடுக்கப்போகிற உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை. ஏற்கெனவே ஞானஸ்நானம் எடுத்தவர்களும் யெகோவாவுக்கு என்றென்றைக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். யெகோவாவுக்குச் சேவை செய்ய நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் மூன்று காரணங்களை இப்போது நாம் பார்க்கலாம்.

உண்மையும் நீதியும் உங்களுக்குப் பிடிக்கும்

ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பிருந்து இப்போதுவரை சாத்தான் யெகோவாவின் பெயரைக் கெடுத்துக்கொண்டுதான் இருக்கிறான் (பாரா 3-4)

3. யெகோவாவுடைய மக்களுக்கு உண்மையும் நீதியும் ஏன் பிடிக்கும்? (சங். 119:128, 163)

3 ‘உண்மையை நேசிக்க’ சொல்லி யெகோவா தன்னுடைய மக்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். (சக. 8:19) நீதியைத் தேட வேண்டும் என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். (மத். 5:6) அப்படியென்றால், கடவுளுடைய பார்வையில் சரியானதையும் நல்லதையும் சுத்தமானதையும் செய்ய வேண்டும் என்ற ஆசை நமக்குள் பற்றியெரிய வேண்டும். உண்மையும் நீதியும் உங்களுக்குப் பிடிக்குமா? அதில் எங்களுக்குச் சந்தேகமே இல்லை. கெட்ட விஷயங்கள், தப்பான விஷயங்கள், பொய் என இவை எல்லாமே உங்களுக்கு அருவருப்பாகத்தான் இருக்கும். (சங்கீதம் 119:128, 163-ஐ வாசியுங்கள்.) பொய் பேசுவது இந்த உலகத்தை ஆட்சி செய்கிற சாத்தானுடைய ஒரு குணம். (யோவா. 8:44; 12:31) யெகோவாவுடைய பரிசுத்தமான பெயரைக் களங்கப்படுத்துவது சாத்தானுடைய லட்சியங்களில் ஒன்று. ஏதேன் தோட்டத்தில் பிரச்சினை ஆரம்பித்த சமயத்திலிருந்து கடவுளைப் பற்றி அவன் நிறைய பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறான். யெகோவா சுயநலமானவர், நேர்மையில்லாத ஆட்சியாளர், மனிதர்களுக்கு நல்லது செய்யாதவர் என்றெல்லாம் சாத்தான் பழி போட்டிருக்கிறான். (ஆதி. 3:1, 4, 5) யெகோவாவைப் பற்றி சாத்தான் சொன்ன பொய்கள் எல்லாம் இன்றும் மக்கள் மனதில் விஷம் போல் பரவியிருக்கிறது. ‘உண்மையை நேசிக்க’ ஆசையில்லாத மக்களை சாத்தான் கெட்ட வழிக்குக் கொண்டுபோகிறான், அவர்களைத் தப்பு செய்ய தூண்டுகிறான்.—ரோ. 1:25-31.

4. யெகோவா ‘சத்தியத்தின் கடவுள்’ என்பதை எப்படிக் காட்டியிருக்கிறார்? (படத்தையும் பாருங்கள்.)

4 யெகோவா ‘சத்தியத்தின் கடவுள்.’ (சங். 31:5) யாரெல்லாம் அவரை நேசிக்கிறார்களோ அவர்களுக்கு உண்மைகளை தாராளமாக சொல்லிக் கொடுக்கிறார். இப்படி சாத்தானுடைய பொய்களில் மாட்டிக்கொண்டிருப்பவர்களை விடுதலை செய்து அவர்களைக் காப்பாற்றுகிறார். நேர்மையாக, நீதியாக நடந்துகொள்வதற்கு அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். அதனால் அவர்களுக்குச் சுயமரியாதையும் மன நிம்மதியும் கிடைக்கிறது. (நீதி. 13:5, 6) நீங்கள் பைபிளைப் படித்தபோது, யெகோவா உங்களுக்கும் இதையெல்லாம் செய்தாரா? யெகோவாவுடைய வழிதான் உங்களுக்கும் எல்லா மனிதர்களுக்கும் சிறந்தது என்று நீங்கள் கற்றிருப்பீர்கள். (சங். 77:13) அதனால் கடவுளுடைய நீதியான வழியில் நடக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்கள். (மத். 6:33) உண்மையை எல்லாரிடமும் சொல்ல வேண்டும் என்றும் யெகோவாவைப் பற்றி சாத்தான் சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவீர்கள். இவற்றையெல்லாம் எப்படிச் செய்யலாம்?

5. உண்மையும் நீதியும் உங்களுக்குப் பிடிக்கும் என்று எப்படிக் காட்டலாம்?

5 ‘சாத்தானுடைய பொய்யை இனிமேல் நான் நம்ப மாட்டேன். சத்தியத்தைத்தான் உறுதியாக பிடித்திருப்பேன், யெகோவாதான் என்னுடைய ஆட்சியாளர், அவர் எதை சரி என்று சொல்கிறாரோ அதைத்தான் செய்ய நான் ஆசைப்படுவேன்’ என்று சொல்கிற மாதிரி உங்களால் வாழ்ந்து காட்ட முடியும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ‘இனிமேல் உங்களுக்காகத்தான் வாழப் போகிறேன்’ என்று யெகோவாவிடம் ஜெபத்தில் அர்ப்பணியுங்கள். அவருக்கு அர்ப்பணித்ததை ஞானஸ்நானம் எடுப்பதன் மூலமாக எல்லாருக்கும் காட்டுங்கள். உண்மையையும் நீதியையும் நேசித்தீர்கள் என்றால் ஞானஸ்நானம் எடுத்தே ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வரும்.

இயேசு கிறிஸ்துவை உங்களுக்குப் பிடிக்கும்

6. இயேசு கிறிஸ்துமேல் அன்பு வைப்பதற்கு சங்கீதம் 45:4-ல் என்னென்ன காரணங்கள் இருக்கின்றன?

6 உங்களுக்கு ஏன் இயேசு கிறிஸ்துவை ரொம்பப் பிடிக்கும்? அதற்கான நல்ல காரணங்கள் சங்கீதம் 45:4-ல் இருக்கின்றன. (வாசியுங்கள்.) சத்தியம், நீதி, மனத்தாழ்மை என்றால் இயேசுவுக்கு ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கும் சத்தியம், நீதி என்றால் ரொம்பப் பிடிக்குமா? அப்படியென்றால், கண்டிப்பாக இயேசுவையும் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் சந்தேகமே இல்லை. சத்தியத்தின் பக்கம் தைரியமாக நிற்பதை இயேசு எப்படியெல்லாம் காட்டினார் என்று யோசித்துப் பாருங்கள். (யோவா. 18:37) சரி, இயேசு மனத்தாழ்மையாக இருப்பதை எப்படிக் காட்டினார்?

7. இயேசு காட்டிய மனத்தாழ்மை ஏன் உங்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது?

7 மனத்தாழ்மையாக இருப்பது எப்படி என்று இயேசு வாழ்ந்து காட்டினார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், எப்போதுமே அவர் தனக்குப் புகழைத் தேடிக்கொள்ளவில்லை. எல்லா புகழையும் தன்னுடைய அப்பாவுக்குத்தான் கொடுத்தார். (மாற். 10:17, 18; யோவா. 5:19) இப்படியொரு மனத்தாழ்மையைப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? கடவுளுடைய மகன்மேல் உங்களுக்கு அன்பு வருகிறதா? அவரைப் போலவே இருக்க வேண்டும் என்ற ஆசை வருகிறதா? கண்டிப்பாக வரும். இயேசு ஏன் மனத்தாழ்மையாக இருந்தார்? ஏனென்றால், அவருடைய அப்பா மனத்தாழ்மையாக இருக்கிறார். இயேசுவுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அதனால் இயேசுவும் அவரைப் போலவே இருந்தார். (சங். 18:35; எபி. 1:3) யெகோவாவுடைய குணங்களை அப்படியே காட்டிய இயேசுவை உங்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறதா?

8. இயேசு நம்முடைய ராஜாவாக இருப்பதை நினைத்து ஏன் சந்தோஷப்படலாம்?

8 இயேசுவைப் போல் ஒரு சிறப்பான ராஜா கிடையவே கிடையாது. அதனால் நமக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். யெகோவா தன்னுடைய மகனுக்குப் பயிற்சி கொடுத்து, அவரை ராஜாவாக நியமித்திருக்கிறார். (ஏசா. 50:4, 5) இயேசுவும் சுயநலமே இல்லாமல் நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார். (யோவா. 13:1) உங்களுடைய ராஜா இயேசுவுக்கு, உங்கள் முழு அன்பையும் பெறத் தகுதி இருக்கிறது. தன்மேல் உண்மையிலேயே அன்பு வைத்திருக்கிறவர்களைத்தான் இயேசு தன்னுடைய நண்பர்கள் என்று சொல்கிறார். ஏனென்றால், அவர்கள் இயேசுவின் கட்டளைகளின்படி நடக்கிறார்கள். (யோவா. 14:15; 15:14, 15) யெகோவாவுடைய மகனுக்கே நண்பராக இருப்பதை நினைக்கும்போது எவ்வளவு பெருமையாக இருக்கிறது!

9. இயேசுவின் ஞானஸ்நானத்துக்கும் அவரைப் பின்பற்றுகிறவர்களின் ஞானஸ்நானத்துக்கும் என்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?

9 தன்னைப் பின்பற்றுகிறவர்கள் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று இயேசு கட்டளை கொடுத்திருந்தார். (மத். 28:19, 20) அதற்கு அவரே முன்மாதிரியாகவும் இருந்தார். இயேசுவின் ஞானஸ்நானத்துக்கும் அவரைப் பின்பற்றுகிறவர்களின் ஞானஸ்நானத்துக்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. (“ இயேசுவின் ஞானஸ்நானமும் அவரைப் பின்பற்றுகிறவர்களின் ஞானஸ்நானமும் எப்படி வித்தியாசப்படுகிறது?” என்ற பெட்டியைப் பாருங்கள்.) ஆனால், சில ஒற்றுமைகளும் இருக்கின்றன. இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது தன்னுடைய அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தன்னையே கொடுத்தார். (எபி. 10:7) அதேபோல், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களும் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பதைக் காட்டுவதற்காக ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். இனி தங்களுடைய விருப்பத்தைவிட யெகோவாவுடைய விருப்பத்தைச் செய்வதைத்தான் தங்கள் வாழ்க்கையில் முக்கியமாக நினைப்பார்கள். இப்படி எஜமானைப் போல் நடந்துகொள்கிறார்கள்.

10. ஞானஸ்நானம் எடுக்க இயேசுமேல் வைத்திருக்கிற அன்பு உங்களுக்கு எப்படி உதவும்?

10 இயேசுதான் யெகோவாவுடைய ஒரே மகன் என்பதையும், நம்முடைய ராஜாவாக இயேசுவைத்தான் கடவுள் நியமித்திருக்கிறார் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். இயேசு அப்படியே யெகோவாவைப் போல் மனத்தாழ்மையாக இருந்தார் என்று நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். பசியில் இருந்தவர்களுக்கு இயேசு சாப்பாடு கொடுத்தார், சோர்ந்து போனவர்களைப் பலப்படுத்தினார், உடம்பு சரியில்லாதவர்களைக் குணப்படுத்தினார் என்றும் நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். (மத். 14:14-21) இன்று அவருடைய சபையை எப்படி வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் நீங்கள் பார்க்கிறீர்கள். (மத். 23:10) கடவுளுடைய அரசாங்கத்தில் ராஜாவாக இதைவிட பெரிய பெரிய விஷயங்களைச் செய்யப்போகிறார் என்று உங்களுக்குத் தெரியும். அப்படியென்றால், இயேசுவை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று எப்படிக் காட்டலாம்? அவரைப் போல் நீங்கள் நடக்கும்போது காட்டலாம். (யோவா. 14:21) அதற்கு முதல் படிதான், யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பது.

யெகோவாவை உங்களுக்குப் பிடிக்கும்

11. ஞானஸ்நானம் எடுப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்று கேட்டால் நீங்கள் எதைச் சொல்வீர்கள், ஏன்?

11 நாம் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முக்கியமான காரணம் என்ன? கடவுள் கொடுத்த கட்டளைகளிலேயே ரொம்ப முக்கியமான கட்டளை என்னவென்று இயேசு சொன்னார்: “உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்.” (மாற். 12:30) இப்படித்தான் நீங்களும் கடவுள்மேல் அன்பு வைத்திருக்கிறீர்களா?

இப்போது நீங்கள் அனுபவிக்கிற விஷயங்களும் இனிமேல் நீங்கள் அனுபவிக்கப்போகிற எல்லா நல்ல விஷயங்களுமே யெகோவா கொடுத்ததுதான் (பாரா 12-13)

12. உங்களுக்கு ஏன் யெகோவாவைப் பிடிக்கும்? (படத்தையும் பாருங்கள்.)

12 யெகோவாமேல் அன்பு காட்டுவதற்கு எக்கச்சக்கமான காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, “உயிரின் ஊற்று” யெகோவாதான் என்று நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். “நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும்” அவர் கொடுத்ததுதான் என்றும் நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். (சங். 36:9; யாக். 1:17) நாம் சந்தோஷமாக அனுபவிக்கிற ஒவ்வொரு நல்ல விஷயங்களும், தாராளமாக கொடுக்கிற நம் அன்பான கடவுள் யெகோவாவிடமிருந்து வந்திருக்கின்றன.

13. மீட்கும் பலிதான் மிகச் சிறந்த பரிசு என்று ஏன் சொல்கிறோம்?

13 யெகோவா நமக்காக கொடுத்த மிகப் பெரிய பரிசு மீட்கும் பலிதான். ஏன் அப்படிச் சொல்கிறோம்? யெகோவாவுக்கும் அவருடைய மகனுக்கும் நடுவிலிருந்த அன்பைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர்கள் எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள்? இயேசு இப்படிச் சொன்னார்: “என் தகப்பன் என்மேல் அன்பு காட்டுகிறார்.” “தகப்பன்மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன்.” (யோவா. 10:17; 14:31) பல கோடி வருஷங்களாக இரண்டு பேரும் ஒன்றாக இருந்தார்கள். ஒருவர்மேல் ஒருவர் உயிரையே வைத்திருந்தார்கள். (நீதி. 8:22, 23, 30) இதை யோசித்துப் பாருங்கள்: இவ்வளவு பாசமுள்ள மகன் கஷ்டப்பட்டு சாவதற்கு யெகோவா அனுமதித்தார். அவர் துடிதுடித்து சாவதைப் பார்த்தபோது யெகோவாவும் துடித்துப் போயிருப்பார். யெகோவா மனிதர்கள்மேல்—உங்கள்மேல்—வைத்திருக்கிற பாசத்துக்கு அளவே இல்லை. நாம் எல்லாரும் என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காக அவருடைய செல்ல மகனையே பலியாக கொடுக்கிற அளவுக்கு நம்மேல் அன்பு வைத்திருக்கிறார். (யோவா. 3:16; கலா. 2:20) நாம் யெகோவாமேல் அன்பு வைக்க இதற்குமேல் வேறென்ன காரணம் வேண்டும்?

14. உங்கள் வாழ்க்கையில் எதைச் சிறந்த லட்சியம் என்று நினைக்கிறீர்கள்?

14 யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள அவர்மேல் இருக்கிற உங்கள் அன்பு அதிகமாகும். அப்போது யெகோவாவிடம் நெருங்கிப் போக வேண்டும், எப்போதும் அவரிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்கள். ‘என் மனதைச் சந்தோஷப்படுத்து’ என்று யெகோவாவும் உங்களிடம் அன்பாக கேட்கிறார். (நீதி. 23:15, 16) இதைக் கண்டிப்பாக உங்களால் செய்ய முடியும். சும்மா வார்த்தையில் மட்டுமல்ல, உங்கள் செயலிலும் அதைக் காட்ட முடியும். நீங்கள் வாழ்கிற விதமே யெகோவாமேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டிவிடும். (1 யோ. 5:3) யெகோவாவைச் சந்தோஷப்படுத்துகிற விதமாக வாழ வேண்டும் என்பதைவிட சிறந்த லட்சியம் வேறு எதுவுமே கிடையாது.

15. உங்களுக்கு யெகோவாமேல் அன்பிருக்கிறது என்பதை எப்படிக் காட்டலாம்?

15 உங்களுக்கு யெகோவாமேல் அன்பு இருக்கிறது என்பதை எப்படிக் காட்டுவீர்கள்? முதலில், ஒரே உண்மையான கடவுளான யெகோவாவிடம் ஸ்பெஷலாக ஜெபம் செய்து உங்களையே நீங்கள் அர்ப்பணிப்பீர்கள். (சங். 40:8) அடுத்து, நீங்கள் அர்ப்பணித்திருப்பதை ஞானஸ்நானம் எடுத்து எல்லார் முன்பும் காட்டுவீர்கள். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தபடி, உங்கள் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத, சந்தோஷமான, முக்கியமான நாள் அதுவாகத்தான் இருக்கும். நீங்கள் ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிப்பீர்கள். உங்களுக்காக இல்லை, யெகோவாவுக்காக. (ரோ. 14:8; 1 பே. 4:1, 2) இது ஒருவேளை மலையைத் தாண்டுகிற மாதிரி தெரியலாம். ஆனால் தாண்டிவிட்டீர்கள் என்றால் சந்தோஷமான சிறந்த வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துவிடுவீர்கள். அது எப்படி?

16. யெகோவாவுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவர்களுக்கு சங்கீதம் 41:12-ல் சொல்லியிருக்கிறபடி என்னென்ன ஆசீர்வாதங்களை அவர் கொடுப்பார்?

16 அள்ளி அள்ளிக் கொடுப்பதில் யெகோவாவை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. நீங்கள் அவருக்காக என்ன கொடுத்தாலும் சரி, அதைவிட பல மடங்கு அதிகமாகத்தான் அவர் திருப்பிக் கொடுப்பார். (மாற். 10:29, 30) சீக்கிரம் அழியப்போகிற இந்த உலகத்தில்கூட சிறந்த, திருப்தியான, சந்தோஷமான வாழ்க்கையை யெகோவா உங்களுக்குக் கொடுப்பார். இது வெறும் ஆரம்பம்தான். நீங்கள் ஞானஸ்நானம் எடுத்ததும் ஆரம்பிக்கப்போகிற புது வாழ்க்கைக்கு முடிவே இல்லை. என்றென்றும் உங்கள் அன்பான அப்பா யெகோவாவுக்குச் சேவை செய்வீர்கள். உங்களுக்கும் அவருக்கும் இருக்கிற பாசம் அதிகமாகிக்கொண்டே போகும். அவரைப் போலவே நீங்களும் என்றென்றைக்கும் வாழ்வீர்கள்.—சங்கீதம் 41:12-ஐ வாசியுங்கள்.

17. யெகோவாவிடம் இல்லாத எதை உங்களால் அவருக்குக் கொடுக்க முடியும்?

17 அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் படிகளை எடுக்கும்போது, யெகோவா பொக்கிஷமாக பார்க்கிற ஒன்றை அவருக்குக் கொடுக்கிற வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது. நம்மிடம் இருக்கிற எல்லா நல்ல விஷயங்களையும் கொடுத்தது யெகோவாதான். நாம் சந்தோஷமாக இருப்பதற்கு காரணமும் அவர்தான். இந்த வானத்துக்கும் பூமிக்கும் சொந்தக்காரர் அவர்தான். ஆனால் அவரிடம் இல்லாத ஒரு விஷயத்தை நம்மால் அவருக்குக் கொடுக்க முடியும். அதுதான் மனப்பூர்வமாக, உண்மையாக நாம் அவருக்குச் செய்கிற சேவை. (யோபு 1:8; 41:11; நீதி. 27:11) வாழ்க்கையில் இதைவிட பெரிதாக வேறென்ன செய்துவிட முடியும்? நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முக்கிய காரணம் நீங்கள் யெகோவாமேல் வைத்திருக்கிற அன்புதான், அதில் சந்தேகமே இல்லை.

நீங்கள் தயாரா?

18. என்னென்ன கேள்விகளை நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்?

18 நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பீர்களா? இதற்கான பதிலை நீங்கள் மட்டும்தான் சொல்ல முடியும். அதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்றால், ‘நான் ஏன் தயங்குகிறேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். (அப். 8:36) இதுவரை நாம் பார்த்த மூன்று காரணங்களை யோசித்துப் பாருங்கள். முதலில், உண்மையும் நீதியும் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். ‘எல்லாரும் உண்மையைப் பேசி சரியானதைச் செய்கிற நாளைப் பார்க்க நான் ஆசைப்படுகிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இரண்டாவது, இயேசுவை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். ‘கடவுளுடைய மகனை ராஜாவாக ஏற்றுக்கொண்டு அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற நான் ஆசைப்படுகிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். மூன்றாவதாக, எல்லாவற்றையும் விட முக்கியமாக, யெகோவாவை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். ‘யெகோவாவை கடவுளாக ஏற்றுக்கொண்டு அவருக்குச் சேவை செய்து அவருடைய மனதை சந்தோஷப்படுத்த ஆசைப்படுகிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘ஆம்’ என்று பதில் சொன்னீர்களா? அப்படியென்றால், நீங்கள் ஏன் ஞானஸ்நானம் எடுக்கக் கூடாது? ஏன் இன்னும் தயங்குகிறீர்கள்?—அப். 16:33.

19. ஞானஸ்நானம் எடுக்க ஏன் தயங்கக் கூடாது? விளக்குங்கள். (யோவான் 4:34)

19 ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா வேண்டாமா என்று தயங்குகிறீர்களா? அப்படியென்றால், இயேசு சொன்ன இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். (யோவான் 4:34-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதை சாப்பாட்டோடு ஒப்பிட்டு இயேசு பேசினார். ஏன்? சாப்பிட்டால் நமக்குதான் நல்லது. அதேபோல், யெகோவா நம்மை எதைச் செய்யச் சொன்னாலும், அது நமக்குதான் நல்லது என்று இயேசுவுக்கு நன்றாகவே தெரியும். நமக்குக் கெடுதல் தருகிற எதையுமே யெகோவா செய்யச் சொல்ல மாட்டார். நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பது யெகோவாவுடைய விருப்பமா? ஆம். (அப். 2:38) அவர் சொல்வதைக் கேட்டு ஞானஸ்நானம் எடுப்பது உங்களுக்குத்தான் நல்லது. அதில் சந்தேகமே வேண்டாம். தடபுடலான விருந்து சாப்பாடு சாப்பிட யாருமே தயங்க மாட்டோம். அப்படியென்றால், ஞானஸ்நானம் எடுப்பதற்கு மட்டும் ஏன் தயங்க வேண்டும்?

20. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

20 ‘ஏன் தயங்குகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு ‘நான் இன்னும் தயாராகவில்லை’ என்று நிறைய பேர் பதில் சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கிற முக்கியமான தீர்மானமே யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதுதான். அதனால் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக யோசியுங்கள். அதற்கு தயாராக முயற்சி செய்யுங்கள். ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் உண்மையாகவே ஆசைப்படுகிறீர்களா? அதற்குத் தயாராக இப்போதே நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலை அடுத்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

பாட்டு 28 யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்

a பைபிளைப் படிக்கிற ஒவ்வொருவருமே ஞானஸ்நானம் என்ற முக்கிய படியை எடுப்பது ரொம்ப முக்கியம். ஆனால், அந்தப் படியை எடுக்க எது அவர்களைத் தூண்டும்? ஒரே வார்த்தையில் சொன்னால், அன்பு. ஆனால் எதன்மேல் அன்பு? யார்மேல் அன்பு? அதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஞானஸ்நானம் எடுத்த பிறகு ஒரு கிறிஸ்தவராக நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்றும் பார்ப்போம்.