Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 11

ஞானஸ்நானம் எடுக்க எப்படித் தயாராகலாம்?

ஞானஸ்நானம் எடுக்க எப்படித் தயாராகலாம்?

“ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை?”—அப். 8:36.

பாட்டு 50 என் அர்ப்பண ஜெபம்

இந்தக் கட்டுரையில்... a

உலகம் முழுவதும் சிறியவர்களும் சரி, பெரியவர்களும் சரி, முன்னேற்றம் செய்து ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் (பாராக்கள் 1-2)

1-2. ஒருவேளை இப்போது நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க தயாராக இல்லையென்றால், ஏன் சோர்ந்துபோக வேண்டிய அவசியம் இல்லை? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)

 ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் இதைவிட அருமையான லட்சியம் வேறெதுவும் இல்லை. ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் தயாரா? நீங்கள் தயாராக இருந்தால்... மூப்பர்களும் நீங்கள் தயாராக இருப்பதாக நினைத்தால்... அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது அதை நழுவ விடாதீர்கள். யெகோவாவின் சேவையில் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

2 ஒருவேளை, நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு இன்னும் சில முன்னேற்றங்களை செய்ய வேண்டும் என்று மூப்பர்கள் சொல்கிறார்களா? இல்லையென்றால் உங்களுக்கே அப்படித் தோன்றுகிறதா? அப்படியென்றால், சோர்ந்துபோய்விடாதீர்கள். நீங்கள் சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, அந்த முக்கியமான படியை எடுத்து வைக்க உங்களால் முன்னேற முடியும்.

“எனக்கு என்ன தடை?”

3. எத்தியோப்பிய அதிகாரி பிலிப்புவிடம் என்ன கேட்டார், நமக்கு என்ன கேள்வி வருகிறது? (அப்போஸ்தலர் 8:36, 38)

3 அப்போஸ்தலர் 8:36, 38-ஐ வாசியுங்கள். ஒரு எத்தியோப்பிய அதிகாரி நற்செய்தியாளரான பிலிப்புவிடம், “ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை?” என்று கேட்டார். எத்தியோப்பிய அதிகாரிக்கு ஞானஸ்நானம் எடுக்க ஆசை இருந்தது. ஆனால், அந்த முக்கியமான படியை எடுத்து வைக்க உண்மையிலேயே அவர் தயாராக இருந்தாரா?

எத்தியோப்பிய அதிகாரி யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் (பாரா 4)

4. கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதை எத்தியோப்பிய அதிகாரி எப்படிக் காட்டினார்?

4 எத்தியோப்பிய அதிகாரி ‘கடவுளை வணங்குவதற்காக எருசலேமுக்கு போயிருந்தார்.’ (அப். 8:27) அவர் யூத மதத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு மாறி இருந்திருக்க வேண்டும். அப்படியென்றால், எபிரெய வேதாகமத்தில் யெகோவாவைப் பற்றி இருக்கிற விஷயங்கள் கண்டிப்பாக அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அவர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருந்தார். பிலிப்பு அந்த எத்தியோப்பிய அதிகாரியைப் பார்க்கப் போனபோது அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்று ஞாபகம் இருக்கிறதா? ஏசாயா தீர்க்கதரிசனத்தை அவர் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்தார். (அப். 8:28) அதில் ரொம்ப ஆழமான பைபிள் உண்மைகள் இருக்கின்றன. ஏதோ கொஞ்சம் அடிப்படை விஷயங்கள் தெரிந்தால் போதும் என்று அவர் நினைக்கவில்லை. நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

5. கற்றுக்கொண்டதற்கு ஏற்றபடி எத்தியோப்பிய அதிகாரி என்ன செய்தார்?

5 இவர் எத்தியோப்பிய கந்தாகே ராணியின் முக்கிய அதிகாரி. இவர்தான் அந்த ‘ராணியின் சொத்துகள் எல்லாவற்றையும் நிர்வகித்தார்.’ (அப். 8:27) அதனால் அவருக்கு நிறைய வேலைகள் இருந்திருக்கும். எப்போதும் பிஸியாகத்தான் இருந்திருப்பார். ஆனாலும், யெகோவாவை வணங்குவதற்கு அவர் நேரம் ஒதுக்கினார். சத்தியத்தைக் கற்றுக்கொண்டதே போதும் என்று அவர் நினைக்கவில்லை, கற்றுக்கொண்ட மாதிரி வாழ வேண்டும் என்று நினைத்தார். அதனால்தான், யெகோவாவை வணங்குவதற்காக எத்தியோப்பியாவிலிருந்து எருசலேமில் இருக்கிற கடவுளுடைய ஆலயத்துக்குப் போனார். அவ்வளவு தூரம் போவதற்கு நிறைய நேரமும், பணமும் செலவாகியிருக்கும். ஆனால், யெகோவாவை வணங்குவதற்காக அவர் எதையும் செய்யத் தயாராக இருந்தார்.

6-7. யெகோவாவின் மேலிருந்த அன்பை எத்தியோப்பிய அதிகாரி எப்படிப் பலப்படுத்திக்கொண்டே இருந்தார்?

6 எத்தியோப்பிய அதிகாரி பிலிப்புவிடமிருந்து புதிதாக சில உண்மைகளைத் தெரிந்துகொண்டார். இயேசுதான் மேசியா என்றும் தெரிந்துகொண்டார். (அப். 8:34, 35) தனக்காக இயேசு செய்ததையெல்லாம் யோசித்துப் பார்த்தபோது அவருக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கும்! அதற்குப் பிறகு அவர் என்ன செய்தார்? அவர் ஏற்கெனவே யூத மதத்துக்கு மாறியிருந்தார். மதிப்பு மரியாதையோடும் இருந்தார். இதுவே போதும் என்று அவர் இருந்திருக்கலாம். ஆனால், யெகோவாவின்மேலும் அவர் மகனின்மேலும் அவருக்கு இருக்கிற அன்பு அதிகமானதால், தன்னுடைய வாழ்க்கையை மாற்றும் முக்கியமான தீர்மானத்தை எடுத்தார். ஞானஸ்நானம் எடுத்து இயேசுவின் சீஷராக ஆக வேண்டும் என்று நினைத்தார். அவர் தயாராக இருப்பதைப் பார்த்ததால்தான் பிலிப்பு அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

7 எத்தியோப்பிய அதிகாரியைப் போல் செய்தால், உங்களாலும் ஞானஸ்நானத்துக்குத் தயாராக முடியும். நீங்களும் முழு நம்பிக்கையோடு தைரியமாக “ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை?” என்று சொல்வீர்கள். எத்தியோப்பிய அதிகாரி செய்த எதையெல்லாம் நாமும் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். அவர் கற்றுக்கொண்டே இருந்தார். கற்றுக்கொண்டதற்கு ஏற்றபடி வாழ்ந்தார். கடவுள்மேல் அன்பை வளர்த்துக்கொண்டே இருந்தார்.

கற்றுக்கொண்டே இருங்கள்

8. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யோவான் 17:3 சொல்கிறது?

8 யோவான் 17:3-ஐ வாசியுங்கள். இயேசு சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டுதான் பைபிளைப் படிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தீர்களா? ஆம், நம்மில் நிறைய பேர் அப்படித்தான் செய்தோம். அதே வார்த்தைகள், நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் சொல்கின்றன. ‘ஒரே உண்மையான கடவுளை தெரிந்துகொண்டே இருப்பதற்கு’ முடிவே கிடையாது. (பிர. 3:11) ஏனென்றால், கற்றுக்கொள்வதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. காலம் முழுக்க அவரைப் பற்றித் தெரிந்துகொண்டே தான் இருப்போம். அதற்கு ஒரு முடிவே இருக்காது. எந்தளவுக்கு யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு அவரிடம் நெருங்கிப் போவோம்.—சங். 73:28.

9. பைபிளில் இருக்கிற அடிப்படை உண்மைகளை தெரிந்துகொண்ட பிறகு நாம் என்ன செய்ய வேண்டும்?

9 யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்தபோது முக்கியமான சில உண்மைகளைப் பற்றி மட்டும் நீங்கள் தெரிந்திருப்பீர்கள். எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் இதைத்தான் அப்போஸ்தலன் பவுல் ‘அடிப்படை விஷயங்கள்’ என்று சொல்கிறார். ‘அடிப்படை போதனைகள்’ முக்கியம் இல்லை என்று பவுல் இங்கே சொல்லவில்லை. அது, ஒரு குழந்தைக்குத் தெம்பு கொடுக்கிற பால் மாதிரி இருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறார். (எபி. 5:12; 6:1) அதேநேரம் எல்லா கிறிஸ்தவர்களும் அடிப்படை போதனைகளை மட்டுமல்ல, பைபிளில் இருக்கிற ஆழமான உண்மைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னார். பைபிளில் இருக்கிற ஆழமான விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையை நீங்கள் வளர்த்திருக்கிறீர்களா? யெகோவாவைப் பற்றியும், அவருடைய நோக்கத்தைப் பற்றியும் நிறைய கற்றுக்கொண்டு முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறீர்களா?

10. சிலருக்கு படிப்பது என்றாலே ஏன் கஷ்டமாக இருக்கிறது?

10 நம்மில் நிறைய பேருக்கு படிப்பது என்றாலே கஷ்டமாக இருக்கும். உங்களுக்கும் அப்படித்தானா? ஸ்கூலில் நீங்கள் படிப்பில் புலியா? அங்கே வாசிக்கவும் படிக்கவும் நன்றாகக் கற்றுக்கொண்டீர்களா? நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசை ஆசையாகப் படிப்பீர்களா? இல்லையென்றால் புத்தகத்தை திறந்து படிப்பதே உங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காதா? கவலைப்படாதீர்கள். நிறைய பேருக்கு அப்படித்தான் இருக்கிறது. ஆனால், யெகோவாவால் உங்களுக்கு உதவி செய்ய முடியும். அவரை மாதிரி சொல்லிக்கொடுக்க யாருமே இல்லை. அவர்தான் பெஸ்ட் டீச்சர்.

11. யெகோவா ‘மகத்தான போதகர்’ என்பதை எப்படி நிரூபித்துக் காட்டியிருக்கிறார்?

11 யெகோவா தன்னை ‘மகத்தான போதகர்’ என்று சொல்கிறார். (ஏசா. 30:20, 21) அவர் அன்பாக, பொறுமையாக, புரிந்து நடந்துகொள்கிற டீச்சர். அவருடைய மாணவர்களிடம் நல்லதை மட்டும்தான் பார்ப்பார். (சங். 130:3) நம்மால் செய்ய முடியாததை நாம் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்க மாட்டார். இப்படி யோசித்துப் பாருங்கள்: மூளை என்ற அருமையான பரிசை நமக்குக் கொடுத்ததே அவர்தான். (சங். 139:14) கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை நமக்குள்ளேயே இருக்கிறது. நாம் என்றைக்கும் சந்தோஷமாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் நம்மைப் படைத்தவரும் ஆசைப்படுகிறார். அப்படியென்றால், பைபிள் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ‘ஏக்கத்தை வளர்த்துக்கொள்வது’ சரியாக இருக்கும். (1 பே. 2:2) உங்களால் எட்ட முடிந்த குறிக்கோள்களை வையுங்கள். தவறாமல் பைபிள் படிப்பதற்கு அட்டவணைப் போட்டு, அதை ஒழுங்காகச் செய்யுங்கள். (யோசு. 1:8) யெகோவாவின் உதவியால் உங்களால் சந்தோஷமாக படிக்கவும் முடியும், அவரைப் பற்றி நிறைய நிறைய தெரிந்துகொள்ளவும் முடியும்.

12. தனிப்பட்ட படிப்பில் இயேசுவைப் பற்றி ஏன் அதிகமாகப் படிக்க வேண்டும்?

12 இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும், அவர் செய்த ஊழியத்தைப் பற்றியும் தவறாமல் யோசித்துப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள். இப்போது நாம் வாழ்கிற கஷ்டமான காலத்திலும் யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால், இயேசுவை நெருக்கமாகப் பின்பற்ற வேண்டும். (1 பே. 2:21) இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று அவர் வெளிப்படையாகவே சொல்லியிருந்தார். (லூக். 14:27, 28) ஆனால், உண்மையாக அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவரைப் போலவே அதில் ஜெயிப்பார்கள் என்றும் அவர் உறுதியாக இருந்தார். (யோவா. 16:33) இயேசுவின் வாழ்க்கையில் நடந்தவற்றைப் படியுங்கள். ஒவ்வொரு நாளும் அவரைப் போலவே வாழ்வதற்கு குறிக்கோள்களை வையுங்கள்.

13. யெகோவாவிடம் நாம் எதற்காக ஜெபம் செய்துகொண்டே இருக்க வேண்டும், ஏன்?

13 அறிவு மட்டும் இருந்தால் போதாது. அந்த அறிவை வைத்து யெகோவாவைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். யெகோவாமேல் அன்பையும், நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். (1 கொ. 8:1-3) நீங்கள் படிக்க படிக்க நம்பிக்கையை அதிகமாக்கும்படி யெகோவாவிடம் உதவி கேட்டுக்கொண்டே இருங்கள். (லூக். 17:5) அப்படி நீங்கள் ஜெபத்தில் கேட்கும்போது யெகோவா தாராளமாக உதவி செய்வார். கடவுளைப் பற்றித் திருத்தமாக தெரிந்துகொள்ளும்போது உண்மையான நம்பிக்கை வரும். அதற்கு ஏற்றபடி நாம் வாழவும் ஆரம்பித்துவிடுவோம்.—யாக். 2:26.

கற்றுக்கொண்டதற்கு ஏற்றபடி வாழுங்கள்

பெருவெள்ளம் வரப்போகிறது என்று தெரிந்துகொண்ட நோவாவும் அவருடைய குடும்பமும் தங்களுடைய நம்பிக்கையைச் செயலில் காட்டினார்கள் (பாரா 14)

14. கற்றுக்கொண்டதற்கு ஏற்றபடி நடப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு என்ன சொல்கிறார்? (படத்தையும் பாருங்கள்.)

14 இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் கற்றுக்கொண்டதற்கு ஏற்றபடி வாழ்வது ஏன் முக்கியம் என்று அப்போஸ்தலன் பேதுருவும் சொல்கிறார். நோவாவின் வாழ்க்கையில் நடந்ததைப் பற்றிச் சொல்கிறார். யெகோவா நோவாவிடம், ‘நான் ஒரு பெரிய வெள்ளத்தைக் கொண்டுவந்து கெட்டவர்களை எல்லாம் அழிக்கப் போகிறேன்‘ என்று சொன்னார். நோவாவும் அவருடைய குடும்பமும் பெருவெள்ளம் வரப்போகிறது என்று தெரிந்து வைத்திருந்தார்கள். இதனால் மட்டும்தான் அவர்கள் காப்பாற்றப்பட்டார்களா? அந்தப் பெருவெள்ளம் வருவதற்கு முன்பு, “நோவா பேழையைக் கட்டிக்கொண்டிருந்த நாட்களில்” என்று பேதுரு சொல்வதைக் கவனியுங்கள். (1 பே. 3:20) அப்படியென்றால் நோவாவும், அவருடைய குடும்பமும் யெகோவாவிடமிருந்து தெரிந்துகொண்டதற்கு ஏற்றபடி நடந்திருக்கிறார்கள், ஒரு பெரிய பேழையையே கட்டியிருக்கிறார்கள். (எபி. 11:7) இதை ஞானஸ்நானத்தோடு ஒப்பிட்டு பேதுரு பேசுகிறார்: “இதற்கு ஒப்பாக இருக்கிற ஞானஸ்நானம், . . . உங்களைக் காப்பாற்றுகிறது.” (1 பே. 3:21) பேழையைக் கட்டுவதற்கு நோவாவும் அவருடைய குடும்பமும் வேலை செய்ததைப் போலவே ஞானஸ்நானம் எடுக்கத் தயாராக நீங்களும் வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லலாம். ஞானஸ்நானம் எடுக்க தயாராவதற்கு நீங்கள் என்ன வேலை செய்ய வேண்டும்?

15. உண்மையாக மனம் திருந்தியிருப்பதை எப்படிக் காட்டலாம்?

15 நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம், உண்மையிலேயே நம்முடைய பாவங்களிலிருந்து மனம் திருந்துவதுதான். (அப். 2:37, 38) உண்மையாக மனம் திருந்தினால் உண்மையாக மாற்றங்களைச் செய்வோம். ஒழுக்கக்கேடாக வாழ்வது, புகையிலையைப் பயன்படுத்துவது, அசிங்கமான கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்ற யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களை நீங்கள் விட்டிருக்கிறீர்களா? (1 கொ. 6:9, 10; 2 கொ. 7:1; எபே. 4:29) இதுவரை விடவில்லை என்றால் அதை விடுவதற்கு முயற்சி செய்துகொண்டே இருங்கள். உங்களுக்கு பைபிள் படிப்பு எடுக்கிறவர்களிடம் அதைப் பற்றிப் பேசுங்கள். சபை மூப்பர்களிடம் உதவி கேளுங்கள். ஒருவேளை, நீங்கள் அப்பா-அம்மாவுடன் இருக்கிற சின்னப் பிள்ளைகளாக இருந்தால் ஞானஸ்நானம் எடுக்க தடையாக இருக்கிற கெட்ட பழக்கவழக்கங்களை விடுவதற்கு, அப்பா-அம்மாவிடம் உதவி கேளுங்கள்.

16. யெகோவாவை வணங்குவதற்கு எதையெல்லாம் தவறாமல் செய்ய வேண்டும்?

16 வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒழுங்காக, தவறாமல் செய்வது ரொம்ப முக்கியம். அவற்றில் ஒன்றுதான் கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போய் அவற்றில் கலந்துகொள்வது. (எபி. 10:24, 25) ஊழியத்துக்குப் போகிற அளவுக்கு நீங்கள் முன்னேறி விட்டீர்கள் என்றால் அதைத் தவறாமல் செய்யுங்கள். மற்றவர்களுடைய உயிரைக் காப்பாற்றுகிற வேலையை நீங்கள் எந்தளவுக்குச் செய்கிறீர்களோ, அந்தளவுக்குச் சந்தோஷமாக இருப்பீர்கள். (2 தீ. 4:5) ஒருவேளை இளம் பிள்ளைகளாக இருந்தால், இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கூட்டத்துக்குப் போக வேண்டும், ஊழியத்துக்குப் போக வேண்டும் என்று அப்பா-அம்மாதான் எனக்கு ஞாபகப்படுத்துகிறார்களா? அல்லது, நானே முயற்சியெடுத்துப் போகிறேனா?’ நீங்களே முயற்சியெடுத்துப் போகும்போது யெகோவாமேல் இருக்கிற நம்பிக்கையை, அன்பை, நன்றியைக் காட்டுவீர்கள். இவையெல்லாம்தான் ‘கடவுள்பக்திக்குரிய செயல்கள்.’ யெகோவாவுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு. (2 பே. 3:11; எபி. 13:15) யாரும் கட்டாயப்படுத்தாமல் மனதார நாம் கொடுக்கிற பரிசுகள்தான் யெகோவாவைச் சந்தோஷப்படுத்தும். (2 கொரிந்தியர் 9:7-ஐ ஒப்பிடுங்கள்.) இதைச் செய்யத்தான் நாமும் ஆசைப்படுகிறோம். ஏனென்றால், நம்மிடம் இருப்பதிலேயே மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுப்பதுதான் நமக்குச் சந்தோஷம்.

யெகோவாமேல் இருக்கிற அன்பை வளர்த்துக்கொண்டே இருங்கள்

17-18. ஞானஸ்நானத்துக்கு முன்னேற எந்த முக்கியமான குணம் உங்களுக்கு உதவி செய்யும், ஏன்? (நீதிமொழிகள் 3:3-6)

17 ஞானஸ்நானம் எடுப்பதற்காக நீங்கள் முன்னேற்றம் செய்யும்போது உங்களுக்குப் பிரச்சினைகள் வரும். நீங்கள் நம்புகிற விஷயங்களை யாராவது கேலி செய்யலாம், அதற்காக உங்களை எதிர்க்கலாம், ஏன் கொடுமையும் படுத்தலாம். (2 தீ. 3:12) ஒரு கெட்ட பழக்கத்தை நீங்கள் எப்படியாவது விட்டுவிட வேண்டும் என்று ரொம்ப முயற்சி செய்வீர்கள். ஆனால், சில நேரத்தில் அந்தப் பழக்கத்தை விட முடியாமல் அதைச் செய்து விடுவீர்கள். இல்லையென்றால் ஒரு குறிக்கோளை வைத்திருப்பீர்கள், அதையெல்லாம் அடைவதற்கு ரொம்ப நாள் ஆகும் என்று பொறுமையிழந்து வெறுத்துப்போய் விடுவீர்கள். ஆனாலும், சோர்ந்து போகாமல் இருக்க ஒரு முக்கியமான குணம் உங்களுக்கு உதவும். அதுதான் யெகோவாமேல் இருக்கும் அன்பு.

18 உங்களிடம் இருப்பதிலேயே ரொம்ப அருமையான, அழகான குணம் யெகோவாமேல் நீங்கள் வைத்திருக்கும் அன்புதான். (நீதிமொழிகள் 3:3-6-ஐ வாசியுங்கள்.) யெகோவாமேல் நீங்கள் கொள்ளை அன்பு வைத்தால் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினைகள் வந்தாலும், நீங்கள் அதைச் சமாளித்துவிடுவீர்கள். யெகோவா அவரை வணங்குகிறவர்கள்மேல் மாறாத அன்பைக் காட்டுகிறார் என்று பைபிள் அடிக்கடி சொல்கிறது. அப்படியென்றால், அவர்களை விட்டுப் போகவும் மாட்டார், அவர்கள்மேல் அன்பு காட்டுவதை நிறுத்தவும் மாட்டார். (சங். 100:5) கடவுள் தன்னைப் போலவேதான் உங்களையும் படைத்திருக்கிறார். (ஆதி. 1:26) அவர் காட்டுகிற அன்பை உங்களாலும் காட்ட முடியுமா?

நீங்களும் தினமும் யெகோவாவுக்கு உங்களுடைய நன்றியைச் சொல்லலாம் (பாரா 19) b

19. யெகோவா உங்களுக்காக செய்த எல்லாவற்றுக்கும் நீங்கள் எப்படி ரொம்ப நன்றியோடு இருக்கலாம்? (கலாத்தியர் 2:20)

19 நன்றி காட்டுவதிலிருந்து ஆரம்பியுங்கள். (1 தெ. 5:18) ‘யெகோவா என்மேல் எப்படியெல்லாம் அன்பு காட்டியிருக்கிறார்’ என்று ஒவ்வொரு நாளும் யோசித்துப் பாருங்கள். உங்களுக்காக அவர் செய்த விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லி மறக்காமல் ஜெபத்தில் நன்றி சொல்லுங்கள். ‘யெகோவா என்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார், எனக்காக எதையெல்லாம் செய்கிறார்’ என்று பவுலைப் போலவே நீங்களும் யோசித்துப் பாருங்கள். (கலாத்தியர் 2:20-ஐ வாசியுங்கள்.) ‘நானும் பதிலுக்கு என்னுடைய அன்பைக் காட்ட வேண்டுமா?’ என்று யோசித்துப் பாருங்கள். யெகோவாமேல் இருக்கும் அன்புதான் பிரச்சினைகள் வரும்போது விடாமல் சகித்திருக்கவும் அதை நன்றாகச் சமாளிக்கவும் உங்களுக்கு உதவும். வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை தவறாமல் செய்வதற்கும், யெகோவாமேல் இருக்கிற அன்பை ஒவ்வொரு நாளும் காட்டுவதற்கும் இதுதான் உதவி செய்யும்.

20. யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்க நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், இது ஏன் சிறந்த தீர்மானம்?

20 யெகோவாமேல் இருக்கும் அன்பு வளர வளர நீங்கள் ஒரு ஸ்பெஷல் ஜெபத்தைச் செய்வீர்கள். அதில் உங்களையே அவருக்கு அர்ப்பணிப்பீர்கள். மறந்துவிடாதீர்கள், ஒருதடவை உங்களை யெகோவாவுக்கு அர்ப்பணித்துவிட்டீர்கள் என்றால் அதற்குப் பிறகு என்றைக்கும் நீங்கள் அவருக்குத்தான் சொந்தம். நீங்கள் அர்ப்பணிக்கும்போது, வாழ்க்கையில் நல்லது கெட்டது எது வந்தாலும் சரி, யெகோவாவுக்குச் சேவை செய்வேன் என்று வாக்குக் கொடுக்கிறீர்கள். இதை ஒரே தடவைதான் கொடுக்க முடியும். அர்ப்பணிக்கும்போது நாம் ரொம்ப ரொம்ப முக்கியமான படியை எடுத்து வைக்கிறோம். இதை யோசித்துப் பாருங்கள்: உங்கள் வாழ்க்கையில் நிறைய தீர்மானங்கள் எடுத்திருப்பீர்கள். ஆனால் யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பதைவிட சிறப்பான தீர்மானத்தை நீங்கள் எடுக்கவே முடியாது. (சங். 50:14) யெகோவாமேல் நீங்கள் வைத்திருக்கிற அன்பை குறைத்துப்போட சாத்தான் முயற்சி செய்கிறான். ஏனென்றால் நீங்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க மாட்டீர்கள் என்று அவன் நம்புகிறான். ஒருநாளும் சாத்தானை ஜெயிக்க விடாதீர்கள். (யோபு 27:5) யெகோவாமேல் உங்களுக்கு அசைக்கமுடியாத அன்பு இருந்தால், அர்ப்பணித்ததற்கு ஏற்றபடி வாழ்வீர்கள். பரலோகத்தில் இருக்கிற உங்கள் அப்பாவிடம் இன்னும் நெருங்கிப் போய்க்கொண்டே இருப்பீர்கள்.

21. ஞானஸ்நானத்தை ஏன் ஆரம்பம் என்று சொல்கிறோம்?

21 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்த பிறகு அடுத்த முக்கியமான படி எடுப்பதற்கு உங்கள் சபையில் இருக்கும் மூப்பர்களிடம் பேசுங்கள். ஞானஸ்நானம் எடுத்ததும் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள். அதுதான் ஆரம்பமே. முடிவே இல்லாமல் யெகோவாவுக்குச் சேவை செய்யப்போகிற வாழ்க்கையின் ஆரம்பம். அதனால், இப்போதே யெகோவாமேல் இருக்கிற அன்பை அதிகமாக்குங்கள், ஒவ்வொரு நாளும் அன்பை அதிகமாக்குவதற்கு குறிக்கோள் வையுங்கள். இப்படிச் செய்துகொண்டே இருந்தால், ஒருநாள் நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பீர்கள். அந்த நாளை உங்களால் மறக்கவே முடியாது. ஆனால், இது ஆரம்பம்தான். யெகோவாவின்மேலும் அவருடைய மகனின்மேலும் இருக்கிற உங்கள் அன்பு தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கட்டும்.

பாட்டு 135 யெகோவாவின் அன்பு வேண்டுகோள்: ‘என் மகனே, ஞானமாக நடந்திடு’

a நாம் ஞானஸ்நானம் எடுப்பதற்கான காரணங்கள் சரியாக இருந்தால்தான் நம்மால் அதற்காக முன்னேற முடியும். அதேநேரம் நாம் சரியானதையும் செய்ய வேண்டும். பைபிள் படிக்கிறவர்கள் ஞானஸ்நானத்துக்கு தயாராக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று எத்தியோப்பிய அதிகாரியின் உதாரணத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

b பட விளக்கம்: ஒரு சகோதரி யெகோவா தனக்காக செய்த எல்லாவற்றுக்கும் நன்றியோடு இருப்பதை ஜெபத்தில் சொல்கிறார்.