Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 13

படைப்பைப் பயன்படுத்தி யெகோவாவைப் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்

படைப்பைப் பயன்படுத்தி யெகோவாவைப் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்

‘இவற்றையெல்லாம் படைத்தது யார்?’—ஏசா. 40:26.

பாட்டு 11 யெகோவாவைப் போற்றும் படைப்புகள்

இந்தக் கட்டுரையில்... a

1. பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள்?

 பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவர்மேல் அன்பு வைப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான் உங்களுடைய ஆசை என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் கடவுளைப் பார்க்க முடியாது. பிறகு எப்படிக் கடவுள் நிஜமானவர், அவரிடம் நெருங்கிப்போக முடியும் என்று உங்கள் பிள்ளைகளுக்குப் புரிய வைப்பீர்கள்?—யாக். 4:8.

2. யெகோவாவுடைய குணங்களைப் பற்றிப் பெற்றோர்கள் எப்படிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாம்?

2 பிள்ளைகள் யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு ஒரு முக்கியமான வழி, அவர்களோடு சேர்ந்து பைபிளைப் படிப்பதுதான். (2 தீ. 3:14-17) இளம் பிள்ளைகள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள இன்னொரு வழியும் இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. நீதிமொழிகள் புத்தகத்தில் ஒரு அப்பா தன்னுடைய பையனிடம் பேசுவது போல் ஒரு பதிவு இருக்கிறது. அதில் அவர், படைப்பில் தெரிகிற யெகோவாவுடைய குணங்களை மறந்துவிடாதே. அதை எப்போதும் உன் கண் முன்னால் வைத்துக்கொள் என்று சொல்கிறார். (நீதி. 3:19-21) யெகோவாவின் குணங்களைப் பற்றி பிள்ளைகள் தெரிந்துகொள்வதற்குப் படைப்புகளை பெற்றோர்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

படைப்பைப் பயன்படுத்திப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்

3. பிள்ளைகள் என்ன செய்ய பெற்றோர்கள் உதவ வேண்டும்?

3 “பார்க்க முடியாத [கடவுளுடைய] குணங்களை, . . . உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகப் பார்க்க முடிகிறது” என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 1:20) பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை வெளியே கூட்டிக்கொண்டு போவது உங்களுக்குப் பிடிக்கும். அந்த நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ‘படைப்புகளுக்கும்’ யெகோவாவுடைய குணங்களுக்கும் இருக்கிற சம்பந்தத்தைப் பிள்ளைகள் பார்க்க உதவி செய்யுங்கள். இந்த விஷயத்தில் பெற்றோர்கள் எப்படி இயேசுவைப் போல் நடந்துகொள்ளலாம் என்று இப்போது பார்க்கலாம்.

4. சீஷர்களுக்குக் கற்றுக்கொடுக்க படைப்புகளை இயேசு எப்படிப் பயன்படுத்தினார்? (லூக்கா 12:24, 27-30)

4 படைப்பைப் பயன்படுத்தி இயேசு எப்படிச் சொல்லிக்கொடுத்தார் என்று யோசித்துப் பாருங்கள். ஒருசமயம், அவருடைய சீஷர்களிடம் அண்டங்காக்கைகளையும் காட்டுப் பூக்களையும் கவனித்துப் பாருங்கள் என்று சொன்னார். (லூக்கா 12:24, 27-30-ஐ வாசியுங்கள்.) இயேசு ஏதோ ஒரு மிருகத்தையோ செடியையோ பற்றிச் சொல்லியிருந்திருக்கலாம். ஆனால், தன்னுடைய சீஷர்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு பறவையைப் பற்றியும் பூவைப் பற்றியும்தான் சொன்னார். ஒருவேளை, இயேசு இதைச் சொல்லிக் கொண்டிருந்தபோதே அங்கே காக்கைகள் பறந்துகொண்டிருந்திருக்கலாம், பூக்களும் பூத்திருந்திருக்கலாம். இயேசு அதையெல்லாம் காட்டி சொல்லிக்கொடுப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இந்த உதாரணங்களை எல்லாம் சொன்ன பிறகு இயேசு என்ன செய்தார்? ஒரு முக்கியமான பாடத்தை அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். அவர்களுடைய பரலோக அப்பா தாராள குணமுள்ளவர், இரக்கமுள்ளவர் என்று சொல்லிக்கொடுத்தார். அண்டங்காக்கைகளையும், காட்டுப் பூக்களையும் யெகோவா கவனித்துக்கொள்வதுபோல், அவருக்கு உண்மையாகச் சேவை செய்கிறவர்களுக்கு உணவும் உடையும் கொடுத்து கவனித்துக்கொள்வார்.

5. பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றிச் சொல்லிக்கொடுக்க படைப்புகளை எப்படிப் பயன்படுத்தலாம்? அதற்கு சில உதாரணங்களைக் கொடுங்கள்.

5 பெற்றோர்களே, நீங்கள் எப்படி இயேசுவைப் போல் சொல்லிக்கொடுக்கலாம்? உங்களுக்கு ரொம்பப் பிடித்த படைப்புகளைப் பற்றி, ஒருவேளை உங்களுக்கு ரொம்பப் பிடித்த மிருகத்தைப் பற்றியோ செடியைப் பற்றியோ, உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். அப்படிச் சொல்லும்போது, அதிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொண்டீர்கள் என்றும் மறக்காமல் சொல்லுங்கள். பின்பு, உங்கள் பிள்ளைகளிடம் அவர்களுக்கு எந்தச் செடி பிடிக்கும், எந்த மிருகம் பிடிக்கும் என்று கேளுங்கள். அவர்களுக்குப் பிடித்த படைப்புகளிலிருந்து யெகோவாவுடைய குணங்களைப் பற்றி சொல்லிக்கொடுக்கும்போது அதை இன்னும் நன்றாகக் கவனித்துக் கேட்பார்கள்.

6. கிறிஸ்டோபரின் அம்மாவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 படைப்பிலிருந்து யெகோவாவைப் பற்றிச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதற்காக அதைப் பற்றிப் பெற்றோர்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டுமா? தேவையில்லை. அண்டங்காக்கைகளின் சாப்பாட்டு பழக்கம் என்ன, காட்டுப் பூக்களின் செல்கள் எப்படி வேலை செய்கின்றன என்று இயேசு ஒவ்வொன்றையும் விலாவாரியாக சொல்லிக்கொடுக்கவில்லை. ஒருவேளை, எப்போதாவது இப்படி விலாவாரியாக உங்கள் பிள்ளைகளுக்குச் சொன்னால் அவர்கள் கேட்பார்கள். ஆனால் அவர்களுக்குப் புரிய வைப்பதற்கு, ஒரு சின்ன விஷயத்தையோ, ஒரு சின்ன கேள்வியையோ கேட்டாலே போதுமானதாக இருக்கும். கிறிஸ்டோபர் என்ற ஒரு சகோதரர் அவருடைய சின்ன வயதில் நடந்ததைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “என்னுடைய அம்மா சுற்றியிருக்கிற படைப்பை நாங்கள் கவனிப்பதற்காக குட்டியாக சில விஷயங்களைத்தான் சொல்வார்கள். உதாரணத்துக்கு, மலைகளைக் காட்டி, ‘அதை பார், அது எவ்வளவு பெரியதாக அழகாக இருக்கிறது! யெகோவா சூப்பர், இல்லையா’ என்று சொல்வார். கடல் பக்கமாக போகும்போது, ‘இந்த அலைகள் எவ்வளவு வேகமாக வருகிறது பார்! யெகோவாவுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது’ என்று சொல்வார். இவையெல்லாம் சின்னச் சின்ன வார்த்தைகள்தான். ஆனால் எங்களை ரொம்ப யோசிக்க வைத்த அர்த்தமுள்ள வார்த்தைகள்” என்று கிறிஸ்டோபர் சொல்கிறார்.

7. படைப்பிலிருந்து கற்றுக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு எப்படிப் பயிற்சி கொடுக்கலாம்?

7 பிள்ளைகள் வளர வளர படைப்புகளை அவர்களே கவனித்துப் பார்ப்பதற்கும், அதிலிருந்து யெகோவாவுடைய குணங்களைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கும் நீங்கள் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கலாம். யெகோவாவுடைய படைப்பில் ஏதாவது ஒன்றைக் காட்டி, ‘இதிலிருந்து யெகோவாவைப் பற்றி நீ என்ன கற்றுக்கொண்டாய்?’ என்று கேட்கலாம். அவர்கள் சொல்கிற பதிலைக் கேட்டு கண்டிப்பாக நீங்கள் அசந்து போய்விடுவீர்கள்.—மத். 21:16.

பிள்ளைகளுக்கு எப்போதெல்லாம் படைப்பைக் காட்டி சொல்லிக்கொடுக்கலாம்?

8. “வழியில் நடக்கிறபோது” இஸ்ரவேலில் இருந்த பெற்றோர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் கிடைத்தன?

8 “வழியில் நடக்கிறபோது” யெகோவாவுடைய கட்டளைகளைப் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று இஸ்ரவேலில் இருந்த பெற்றோர்களுக்கு யெகோவா சொல்லியிருந்தார். (உபா. 11:19) அவர்கள் நடந்துபோகும்போது வழியில் நிறைய இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருப்பார்கள். விதவிதமான மிருகங்கள், பறவைகள், பூக்களையெல்லாம் பார்த்திருப்பார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெற்றோர்கள் யெகோவா படைத்ததைப் பற்றியெல்லாம் பேசி, பிள்ளைகளுடைய ஆர்வத்தைத் தூண்டியிருப்பார்கள். பெற்றோர்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளிடம் படைப்பைப் பற்றிப் பேசுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதற்காக சில பெற்றோர்கள் என்ன செய்தார்கள் என்று இப்போது பார்க்கலாம்.

9. புனிதா மற்றும் கேட்யாவிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

9 இந்தியாவில் ஒரு பெரிய நகரத்தில் வாழ்கிற புனிதா என்ற ஒரு அம்மா இப்படிச் சொல்கிறார்: “எங்களுடைய சொந்தக்காரர்களைப் பார்க்க எங்கள் ஊருக்குப் போவோம். அது கொஞ்சம் கிராமம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாவுடைய அருமையான படைப்புகளைப் பற்றிச் சொல்லிக்கொடுப்போம். அங்கே நெருக்கடியான தெருக்கள் இருக்காது, வண்டி சத்தமும் இருக்காது. அப்போது எங்கள் பிள்ளைகளால் இயற்கையை நன்றாகப் பார்த்து ரசிக்க முடிவதை நாங்கள் புரிந்துகொண்டோம்.” பெற்றோர்களே, ஒரு அழகான இடத்தில் உங்களுடன் சேர்ந்து நேரம் செலவிட்டதை பிள்ளைகள் எப்போதுமே மறக்க மாட்டார்கள். மால்டோவாவில் இருக்கிற கேட்யா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “என்னுடைய சின்ன வயதில் மறக்க முடியாத ஞாபகம் எதுவென்றால், என் அப்பா-அம்மாவுடன் சேர்ந்து கிராமத்துக்குப் போனதுதான். யெகோவா படைத்ததை எல்லாம் நின்று கவனிக்க என் அப்பா-அம்மா சின்ன வயதிலேயே எனக்கு சொல்லிக்கொடுத்தார்கள். அவருடைய படைப்புகள் மூலமாக அவரைப் பார்ப்பதற்கும் சொல்லிக்கொடுத்தார்கள். இதற்காக என் அப்பா-அம்மாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.”

நகரத்தில் வாழ்ந்தாலும் யெகோவாவுடைய படைப்புகளைப் பார்க்க முடியும், அதிலிருந்து அவரைப் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியும் (பாரா 10)

10. இயற்கையைப் பார்க்க கிராமங்களுக்குப் போக முடியாத பெற்றோர்கள் என்ன செய்யலாம்? (“ பெற்றோர்களுக்கு உதவி” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

10 ஒருவேளை கிராமங்களுக்கெல்லாம் போவதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையா? இந்தியாவில் இருக்கிற அமோல் என்ற ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “நாங்கள் இருக்கிற இடத்தில் அப்பா-அம்மா இரண்டு பேரும் வேலைக்குப் போவார்கள். நிறைய நேரம் வேலை செய்வார்கள். கிராமங்களுக்குப் போய்விட்டு வருவதற்கெல்லாம் நிறைய பணம் செலவாகும். ஆனால், ஒரு சின்ன பார்க்குக்கோ, மொட்டை மாடிக்கோ போனால்கூட அங்கே இருக்கிற யெகோவாவுடைய படைப்புகளைப் பார்க்க முடியும். அவருடைய குணங்களைப் பற்றிப் பேச முடியும்.” நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தாலே, உங்களைச் சுற்றி நீங்கள் இருக்கிற இடத்திலேயே எக்கச்சக்கமான படைப்புகள் இருக்கும். அதைக் காட்டியே உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்கலாம். (சங். 104:24) பறவைகள், பூச்சிகள், செடிகள் என நிறைய படைப்புகளை உங்களால் பார்க்க முடியும். ஜெர்மனியில் இருக்கிற கரீனா இப்படிச் சொல்கிறார்: “என் அம்மாவுக்கு பூக்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது வழியில் இருக்கிற அழகான பூக்களையெல்லாம் என்னிடம் காட்டுவார்கள்.” படைப்பைப் பற்றி நிறைய வீடியோக்களையும், பிரசுரங்களையும் நம்முடைய அமைப்பு தயாரித்திருக்கிறது. அவற்றைப் பயன்படுத்தியும்கூட நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாம். நீங்கள் எங்கே வாழ்ந்தாலும்சரி, யெகோவாவுடைய படைப்பைக் கவனித்துப் பார்க்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்கலாம். படைப்புகளைக் காட்டியே யெகோவாவுடைய குணங்களைப் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியும். அதற்குச் சில உதாரணங்களை இப்போது நாம் பார்க்கலாம்.

யெகோவாவின் ‘பார்க்க முடியாத குணங்கள் தெளிவாகத் தெரிகின்றன’

11. யெகோவாவுடைய அன்பைப் பற்றிப் புரிந்துகொள்ள பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்?

11 உங்கள் பிள்ளைகள் யெகோவாவின் அன்பைப் புரிந்துகொள்ள, மிருகங்கள் அவற்றின் குட்டிகளை எவ்வளவு பாசமாகப் பார்த்துக்கொள்கிறது என்று காட்டலாம். (மத். 23:37) நாம் ரசிப்பதற்காகவே படைப்பில் இருக்கும் விதவிதமான விஷயங்களைக் காட்டியும் நீங்கள் சொல்லிக்கொடுக்கலாம். முன்பு நாம் பார்த்த கரீனா இப்படிச் சொல்கிறார்: “நானும் அம்மாவும் நடந்துபோகும்போது, வழியில் பூக்களைப் பார்த்தால், ‘அதைக் கவனித்து பார்’ என்று அம்மா சொல்வார். ஒவ்வொரு பூவும் வித்தியாசமாக இருப்பதை பார்க்கும்போதும், அதனுடைய அழகைப் பார்க்கும்போதும் யெகோவா நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று யோசித்துப் பார்க்கச் சொல்வார். இத்தனை வருடங்களாகியும் இப்போதும் நான் ஒவ்வொரு பூவையும் நின்று கவனிப்பேன். அதன் கலர், அது எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது, பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது என்றெல்லாம் கவனிப்பேன். அதைப் பார்க்கும்போதெல்லாம் யெகோவா நம்மேல் வைத்திருக்கிற அன்புதான் என் ஞாபகத்துக்கு வரும்.”

நம்முடைய உடலை யெகோவா எவ்வளவு அற்புதமாக படைத்திருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டி, கடவுளுடைய ஞானத்தைப் பற்றிப் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் (பாரா 12)

12. கடவுளுடைய ஞானத்தைப் புரிந்துகொள்ள பெற்றோர்கள் எப்படிப் பிள்ளைகளுக்கு உதவி செய்யலாம்? (சங்கீதம் 139:14) (படத்தையும் பாருங்கள்.)

12 உங்கள் பிள்ளைகள் யெகோவாவின் ஞானத்தைப் புரிந்துகொள்ள உதவுங்கள். யெகோவாவுக்கு நம்மைவிட பல மடங்கு ஞானம் இருக்கிறது. (ரோ. 11:33) உதாரணத்துக்கு, மேகங்களுக்கு உள்ளே தண்ணீர் இருக்கிறது. அது ரொம்ப கனமாக இருந்தாலும், மேகங்கள் எந்தக் கஷ்டமும் இல்லாமல் அழகாக மிதந்துகொண்டே போவதைக் காட்டுங்கள். (யோபு 38:36, 37) பிறகு நம்முடைய உடல் எவ்வளவு அற்புதமாக படைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள். (சங்கீதம் 139:14-ஐ வாசியுங்கள்.) விளாடிமர் என்ற ஒரு அப்பா என்ன செய்தார் என்று பாருங்கள். அவர் இப்படிச் சொல்கிறார்: “ஒருநாள் என்னுடைய பையன் சைக்கிளிலிருந்து கீழே விழுந்ததால் அவனுக்கு அடிபட்டுவிட்டது. கொஞ்ச நாளுக்குப் பிறகு அந்தக் காயம் சரியாகிவிட்டது. அப்போது, நம் உடம்பு தானாகவே சரிசெய்துகொள்கிற விதத்தில் செல்களை யெகோவா படைத்திருக்கிறார் என்று நானும் என் மனைவியும் அவனுக்கு சொல்லிக்கொடுத்தோம். ஒருவேளை, ஒரு காருக்கு இப்படி அடிபட்டிருந்தால், அது தன்னைத் தானே சரிசெய்துகொள்ள முடியாது. மனிதன் உருவாக்கிய எந்தப் பொருள்களிலும் இந்த அதிசயம் நடக்காது என்று அவனுக்குப் புரிய வைத்தோம். இந்த விஷயம் யெகோவாவுடைய ஞானத்தைப் புரிந்துகொள்ள என் பையனுக்கு உதவியாக இருந்தது.”

13. யெகோவாவின் சக்தியைப் பற்றிப் புரிந்துகொள்ள பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எப்படி உதவி செய்யலாம்? (ஏசாயா 40:26)

13 வானத்தை அண்ணாந்து பாருங்கள் என்று யெகோவா சொல்கிறார். நட்சத்திரங்கள் ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் நிறுத்தி வைப்பதற்கு யெகோவாவுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். (ஏசாயா 40:26-ஐ வாசியுங்கள்.) ‘வானத்தை அண்ணாந்து பார், அங்கே என்னவெல்லாம் தெரிகிறது என்று யோசித்துப் பார்’ என்று நீங்களும் உங்கள் பிள்ளைகளிடம் சொல்லலாம். தைவானில் இருக்கிற ஷீன்ஷீங் என்ற சகோதரி அவருடைய சின்ன வயதில் நடந்ததைப் பற்றிச் சொல்கிறார். “ஒரு தடவை என்னுடைய அம்மா காட்டுப் பக்கமாக ஒரு ‘கேம்ப்’-க்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கே சிட்டியிலிருந்து வருகிற லைட் வெளிச்சம் எதுவும் இல்லாமல் ராத்திரி நேரத்தில் வானத்தில் இருந்த நட்சத்திரங்களைப் பார்த்தோம். அந்தச் சமயத்தில் என்னுடன் படிக்கிற பிள்ளைகளிடமிருந்து வருகிற தொல்லையால் நான் ரொம்ப சோர்ந்துபோயிருந்தேன். என்னால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியுமா என்று குழம்பிப்போயிருந்தேன். இந்த நட்சத்திரங்களை எல்லாம் படைக்க வேண்டும் என்றால் யெகோவாவுக்கு எவ்வளவு சக்தி இருக்கும் என்று என் அம்மா என்னை யோசித்துப் பார்க்க சொன்னார். ‘அந்தச் சக்தியை வைத்து உனக்கும் அவர் உதவி செய்வார், என்ன பிரச்சினை வந்தாலும் அதைச் சமாளிக்க உதவி செய்வார்’ என்று சொன்னார். அங்கே போய்ப் படைப்புகளை எல்லாம் பார்த்துவிட்டு வந்த பிறகு யெகோவாவைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற என்னுடைய முடிவிலும் உறுதியாக இருந்தேன்.”

14. யெகோவா சந்தோஷமான கடவுள் என்று படைப்புகளிலிருந்து உங்கள் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்?

14 படைப்பைப் பார்க்கும்போது யெகோவா எவ்வளவு சந்தோஷமான கடவுள் என்று தெரிந்துகொள்கிறோம். அவரிடம் நகைச்சுவை உணர்வு இருக்கிறது. பெரும்பாலும் எல்லா மிருகங்களும் பறவைகளும் மீன்களும் சேட்டை செய்து விளையாடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். (யோபு 40:20) மிருகங்கள் சேட்டை செய்து விளையாடுவதைப் பார்த்து உங்கள் பிள்ளைகள் குஷியாகி இருக்கிறார்களா? ஒருவேளை, பூனைக்குட்டிகள் பந்தை துரத்திக்கொண்டு ஓடுவதைப் பார்த்திருப்பார்கள். நாய்க்குட்டிகள் கட்டிப்புரண்டு ஒன்றோடு ஒன்று விளையாடுவதையும் பார்த்திருப்பார்கள். இதுபோல் மிருகங்கள் செய்கிற சேட்டையை ரசித்துப் பார்த்து உங்கள் பிள்ளைகள் சந்தோஷத்தில் சிரிக்கும்போது, யெகோவா எவ்வளவு சந்தோஷமான கடவுள் என்று நீங்கள் ஏன் அவர்களுக்கு ஞாபகப்படுத்தக் கூடாது?—1 தீ. 1:11.

குடும்பமாக யெகோவாவுடைய படைப்புகளைப் பார்த்து ரசியுங்கள்

உங்களுடன் சேர்ந்து இயற்கையை ரசிக்கும்போது, பிள்ளைகள் எந்தவித கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பார்கள், மனம் திறந்து பேசவும் ஆசைப்படுவார்கள் (பாரா 15)

15. பிள்ளைகளுடைய மனதில் இருப்பதைத் தெரிந்துகொள்ள பெற்றோர்களுக்கு எது உதவும்? (நீதிமொழிகள் 20:5) (படத்தையும் பாருங்கள்.)

15 சிலசமயம் பிள்ளைகள் தங்களுக்கு வரும் பிரச்சினைகளைப் பற்றி வெளிப்படையாக பேச மாட்டார்கள். அது பெற்றோர்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. உங்களுக்கும் அப்படித்தான் இருக்கிறதா? அப்படியென்றால், பிள்ளைகளுடைய மனதில் இருப்பதை நீங்கள்தான் வெளியே கொண்டுவர வேண்டும். (நீதிமொழிகள் 20:5-ஐ வாசியுங்கள்.) சில பெற்றோர்களால், பிள்ளைகளுடன் சேர்ந்து இயற்கை காட்சிகளை ரசிக்கும்போது அவர்களிடம் சுலபமாக பேச முடிந்திருக்கிறது. ஏன்? அதற்கு ஒரு காரணம், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அப்போது பெரிதாக எந்தவித கவனச்சிதறல்களும் இருக்காது. தைவானில் இருக்கிற மசாயீக்கோ என்ற ஒரு அப்பா இன்னொரு காரணத்தைப் பற்றிச் சொல்கிறார்: “நாங்கள் எங்கள் பிள்ளைகளை வெளியே கூட்டிக்கொண்டு போவோம். மலைகளில் ஏறுவோம், கடற்கரை பக்கமாக நடந்து போவோம். அப்போது எந்தக் கவலையும் இல்லாத அமைதியான, சந்தோஷமான சூழல் இருக்கும். அந்தச் சமயத்தில் அவர்கள் மனதில் என்ன இருக்கிறது, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது சுலபமாக இருந்திருக்கிறது.” ஏற்கெனவே பார்த்த கேட்யா இப்படிச் சொல்கிறார்: “ஸ்கூல் முடிந்த பிறகு என் அம்மா என்னை அடிக்கடி ஒரு அழகான பார்க்குக்கு கூட்டிக்கொண்டு போவார். என் மனதில் இருக்கிற கவலைகளைப் பற்றியும் ஸ்கூலில் நடந்ததைப் பற்றியும் என் அம்மாவிடம் பேசுவதற்கு அந்த அமைதியான சூழல் எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது.”

16. படைப்புகளைப் பார்த்து ரசிக்கும்போது குடும்பங்கள் எப்படிச் சந்தோஷமாக ஜாலியாக இருக்கலாம்?

16 குடும்பங்கள் அமைதியான சூழலில் ஜாலியாக சந்தோஷமாக இருக்க யெகோவாவுடைய படைப்புகள் உதவி செய்கின்றன. இதனால் குடும்பத்தில் இருக்கிறவர்களுக்குள் அன்பு அதிகமாகிறது. “சிரிப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது,” “துள்ளிக் குதிப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது” என்று பைபிளும் சொல்கிறது. (பிர. 3:1, 4 அடிக்குறிப்பு.) நமக்குப் பிடித்த விஷயங்களையெல்லாம் செய்து சந்தோஷமாக இருப்பதற்காகவே அழகழகான இடங்களை இந்தப் பூமியில் யெகோவா படைத்து வைத்திருக்கிறார். குடும்பத்தோடு இயற்கையைச் சுற்றிப்பார்க்கப் போவது நிறைய பேருக்குப் பிடித்திருக்கிறது. அவர்கள் இயற்கைக் காட்சிகள் இருக்கிற கிராமங்கள்... மலைப்பகுதிகள்... கடற்கரைகள்... போன்ற இடங்களுக்கெல்லாம் போகிறார்கள். சில பிள்ளைகளுக்கு பார்க்கில் ஓடியாடி விளையாடுவது பிடிக்கும். மிருகங்களைப் பார்த்து ரசிப்பது பிடிக்கும். ஆற்றில், ஏரியில், கடலில் நீச்சல் அடிக்க பிடிக்கும். இயற்கையை ரசித்துக்கொண்டே பொழுதைப் போக்குவதற்கு யெகோவாவுடைய படைப்பில் எவ்வளவு அருமையான விஷயங்கள் இருக்கின்றன!

17. படைப்புகளைப் பார்த்து ரசிக்க பெற்றோர்கள் ஏன் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்?

17 கடவுள் கொடுக்கப்போகிற பூஞ்சோலை பூமியில் பெற்றோர்களும் பிள்ளைகளும் சேர்ந்து இதுவரை பார்க்காத அளவுக்கு யெகோவாவுடைய படைப்புகளைப் பார்த்து ரசிக்கப்போகிறார்கள். இன்றுபோல் நாம் மிருகங்களைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அதுவும் நம்மைப் பார்த்து பயப்படாது. (ஏசா. 11:6-9) சந்தோஷமாக யெகோவாவுடைய படைப்புகளைப் பார்த்து நாம் ரசித்துக்கொண்டே இருப்போம். அதற்கு முடிவே இருக்காது. (சங். 22:26) ஆனால் பெற்றோர்களே, புதிய உலகம் வரும்வரை காத்திருக்காதீர்கள். இப்போதே உங்கள் பிள்ளைகள் படைப்புகளைப் பார்த்து ரசிக்க சொல்லிக்கொடுங்கள். படைப்புகளை வைத்து உங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றிச் சொல்லிக்கொடுத்தால், தாவீது ராஜா சொன்ன மாதிரியே அவர்களும் சொல்வார்கள்: “யெகோவாவே, . . . உங்களுடைய செயல்களுக்கு ஈடிணையே இல்லை.”—சங். 86:8.

பாட்டு 134 பிள்ளைகள் கடவுள் தந்த சொத்து

a நிறைய சகோதர சகோதரிகளுக்கு தங்கள் அப்பா-அம்மாவுடன் சேர்ந்து படைப்புகளைப் பார்த்து ரசித்த அழகான நினைவுகள் இன்னும் ஞாபகம் இருக்கும். அந்தச் சமயத்தில் யெகோவாவுடைய குணங்களைப் பற்றி அவர்களுடைய அப்பா-அம்மா சொல்லிக்கொடுத்ததையும் மறந்திருக்க மாட்டார்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா? படைப்பைப் பயன்படுத்தி யெகோவாவுடைய குணங்களைப் பற்றி நீங்கள் அவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்? அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.