Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

ரூத்தை மீட்கிற உரிமை இருந்த ஒருவன், ரூத்தைக் கல்யாணம் செய்துகொண்டால் அவனுக்கு “நஷ்டம்” வரும் என்று ஏன் சொன்னான்? (ரூத் 4:1, 6)

பைபிள் காலங்களில், கல்யாணமான ஒருவர் குழந்தை இல்லாமல் இறந்துவிட்டால் அவருடைய சொத்தும் நிலமும் என்ன ஆகும்? அவருடைய குடும்பப் பெயர் ஒரேயடியாக அழிந்துபோய்விடுமா? இவற்றுக்கெல்லாம் திருச்சட்டத்தில் பதில் இருந்தது.

ஒருவர் இறந்துவிட்டால் அல்லது அவர் ஏழையாகி தன்னுடைய நிலத்தை விற்றுவிட்டால், அந்த நிலம் என்ன ஆகும்? அந்த நிலத்தை மீட்கிற உரிமை அவருடைய கூடப்பிறந்த ஒரு சகோதரனுக்கு அல்லது அவருடைய நெருங்கிய சொந்தக்காரருக்குப் போய்ச் சேரும். அதனால் அந்த நிலம், குடும்பத்தைவிட்டு வேறு யார் கைக்கும் போய்விடாமல் இருக்கும்.—லேவி. 25:23-28; எண். 27:8-11.

இறந்துபோனவருடைய குடும்பப் பெயர் அழியாமல் இருப்பதற்கு என்ன ஏற்பாடு இருந்தது? இறந்துபோனவருடைய சகோதரரில் ஒருவர், இறந்தவருடைய மனைவியைக் கல்யாணம் செய்துகொண்டு கொழுந்தனுடைய கடமையைச் செய்கிற ஏற்பாடு இருந்தது. அவர்களுக்குப் பிறக்கிற குழந்தையை இறந்தவருடைய வாரிசாகப் பார்த்தார்கள். இறந்தவருடைய சொத்துகள் எல்லாம் அந்தக் குழந்தைக்குத்தான் போய்ச் சேர்ந்தது. அதுமட்டுமல்ல, இந்த அன்பான ஏற்பாடு அந்த விதவைக்கு மறுபடியும் ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்தது. ரூத்தின் விஷயத்திலும் இதுதான் நடந்தது.—உபா. 25:5-7; மத். 22:23-28.

ரூத்தின் மாமியார்தான் நகோமி. நகோமியின் கணவர் எலிமெலேக்கும் அவருடைய இரண்டு பையன்களும் இறந்த பிறகு அவரைக் கவனித்துக்கொள்ள யாருமே இல்லை. (ரூத் 1:1-5) நகோமியும் ரூத்தும் யூதாவுக்குத் திரும்பி வந்தார்கள். அங்கே எலிமெலேக்குக்கு ஒரு நெருங்கிய சொந்தக்காரர் இருந்தார். அவர்தான் போவாஸ். எலிமெலேக்கின் நிலத்தை மீட்கிற உரிமை உள்ளவர்களில் போவாசும் ஒருவர். அதனால் நகோமி ரூத்திடம், நிலத்தை மீட்கச் சொல்லி போவாசிடம் கேட்கச் சொன்னார். (ரூத் 2:1, 19, 20; 3:1-4) ஆனால், அவரைவிட நெருங்கிய சொந்தக்காரன் ஒருவன் இருந்தது போவாசுக்குத் தெரியும். மீட்கும் உரிமை அவனுக்குத்தான் முதலில் இருந்தது. அந்த ஆளின் பெயர் பைபிளில் இல்லை.—ரூத் 3:9, 12, 13.

அந்த ஆள் ஆரம்பத்தில் நிலத்தை மீட்பதாகச் சொன்னான். (ரூத் 4:1-4) நிலத்தை வாங்குவது அவனுக்கு ஒரு செலவுதான். ஆனாலும், அதில் அவனுக்கு ஒரு லாபம் இருந்ததாக நினைத்தான். எப்படி? நகோமிக்கு வயதாகிவிட்டதால், எலிமெலேக்கின் நிலத்துக்கு நகோமியின் மூலமாக ஒரு வாரிசு வர முடியாது என்று அவனுக்குத் தெரியும். அப்படியென்றால், நிலம் அவனுடைய கைக்கு வந்துவிடும். அதைத்தான் அவன் லாபமாக நினைத்தான்.

ஆனால், ரூத்தைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிந்ததும் அவன் மனம் மாறிவிட்டான். “என்னால் அதை மீட்டுக்கொள்ள முடியாது. ஏனென்றால், எனக்கு நஷ்டம் வந்துவிடும்” என்று சொன்னான். (ரூத் 4:5, 6) அவன் ஏன் மனம் மாறினான்?

அவனோ வேறு யாராவதோ ரூத்தைக் கல்யாணம் செய்துகொண்டு, ரூத்துக்கு ஒரு மகன் பிறந்தால், அந்த மகனுக்கு எலிமெலேக்கின் நிலம் போய்ச் சேரும். அப்படியென்றால், “நஷ்டம்” வந்துவிடும் என்று அவன் ஏன் சொன்னான்? இதைப் பற்றி பைபிள் சொல்லவில்லை. ஒருவேளை, இந்த நான்கு விஷயங்களில் எதையாவது மனதில் வைத்து அவன் அப்படிச் சொல்லியிருக்கலாம்:

  • முதலாவதாக, அவன் முதலீடு செய்த பணம் வீணாகப் போய்விடும். ஏனென்றால், எலிமெலேக்கின் நிலம் கடைசியில் அவனுக்குச் சொந்தமானதாக இருக்காது. அது ரூத்தின் மகனுக்குத்தான் போய்ச் சேரும்.

  • இரண்டாவதாக, ரூத்தை மட்டுமல்ல நகோமியையும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அவனுக்கு வந்துவிடும்.

  • மூன்றாவதாக, அவனுக்கு ஏற்கெனவே பிள்ளைகள் இருந்தார்கள் என்றால், அவர்களுடன் சேர்த்து ரூத் மூலமாகப் பிறக்கிற மற்ற பிள்ளைகளுக்கும் சொத்தில் பங்கு போய்ச் சேரும்.

  • நான்காவதாக, அவனுக்கு ஏற்கெனவே பிள்ளைகள் இல்லையென்றால், ரூத் மூலமாகப் பிறக்கிற மகனுக்கு எலிமெலேக்கின் நிலமும் போய்ச் சேரும், அவனுடைய நிலமும் போய்ச் சேரும். அப்படியென்றால், அவனுடைய வாரிசாகக் கருதப்படாமல் எலிமெலேக்கின் வாரிசாகக் கருதப்படும் பிள்ளைக்குத்தான் அவனுடைய நிலம் போய்ச் சேரும். இதுபோன்ற ஒரு நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு நகோமிக்கு உதவி செய்ய அவனுக்கு மனமில்லை. அதனால், அவனுக்கு அடுத்ததாக மீட்கிற உரிமையோடு இருந்த போவாசிடமே அந்தப் பொறுப்பை விட்டுவிட்டான். போவாசும் ‘இறந்துபோனவரின் பெயரிலேயே சொத்து தொடர்ந்து இருப்பதற்காக’ அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.—ரூத் 4:10.

அந்த ஆள் அவனுடைய பெயரையும் சொத்தையும் கட்டிக்காப்பதிலேயே குறியாக இருந்தான். அந்தளவுக்கு சுயநலமாக நடந்துகொண்டான். அதனால் என்ன ஆனது தெரியுமா? அவன் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்றாகிவிட்டது. அவனுடைய பெயர் நிலைத்திருப்பதற்குப் பதிலாக, அது யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. அதுமட்டுமல்ல, போவாசுக்குக் கிடைத்த பெரிய பாக்கியத்தை, அதாவது மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் வம்சாவளிப் பட்டியலில் இடம்பெறும் பாக்கியத்தை, அவன் இழந்துவிட்டான். கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு உதவி செய்ய மனமில்லாமல் சுயநலமாக நடந்துகொண்டதால் அந்த ஆளுக்கு எவ்வளவு பெரிய இழப்பு பார்த்தீர்களா!—மத். 1:5; லூக். 3:23, 32.