Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 10

பாட்டு 13 ஏசு நமக்கு முன்மாதிரி

ஞானஸ்நானத்துக்குப் பிறகும் இயேசுவைப் பின்பற்றுங்கள்

ஞானஸ்நானத்துக்குப் பிறகும் இயேசுவைப் பின்பற்றுங்கள்

“யாராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே துறந்து, தன் சித்திரவதைக் கம்பத்தை தினமும் சுமந்துகொண்டு, தொடர்ந்து என் பின்னால் வர வேண்டும்.”லூக். 9:23.

என்ன கற்றுக்கொள்வோம்?

அர்ப்பணிப்புக்கு ஏற்றமாதிரி வாழ்கிறோமா என்று யோசித்துப் பார்க்க இந்தக் கட்டுரை உதவும். குறிப்பாக, சமீபத்தில் ஞானஸ்நானம் எடுத்தவர்கள் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையாக இருக்க உதவும்.

1-2. ஞானஸ்நானம் எடுத்த பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

 ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் குடும்பத்தில் ஒருவராக ஆவது உண்மையிலேயே ஒரு பெரிய சந்தோஷம்! இந்த சந்தோஷத்தை அனுபவிப்பவர்கள் தாவீது சொன்ன வார்த்தைகளை ஒத்துக்கொள்வார்கள்: “உங்களுடைய பிரகாரங்களில் தங்குவதற்காக நீங்கள் யாரைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பக்கத்தில் கொண்டுவருகிறீர்களோ அவர் சந்தோஷமானவர்” என்று அவர் எழுதினார்.—சங். 65:4.

2 யெகோவா எப்படிப்பட்ட ஆட்களைத் தன்னுடைய பிரகாரத்தில், அதாவது குடும்பத்தில், சேர்த்துக்கொள்கிறார்? போன கட்டுரையில் பார்த்த மாதிரி, தன்னிடம் நெருங்கி வர ஆசைப்படுகிறவர்களிடம் யெகோவா நெருங்கிப் போகிறார். (யாக். 4:8) யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது நீங்கள் ஒரு விசேஷமான விதத்தில் அவரிடம் நெருங்கிப் போகிறீர்கள். யெகோவா கண்டிப்பாக, ‘போதும் போதும் என்கிற அளவுக்கு ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழிவார்!’—மல். 3:10, அடிக்குறிப்பு; எரே. 17:7, 8.

3. அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்த கிறிஸ்தவர்களுக்கு என்ன முக்கியமான பொறுப்பு இருக்கிறது? (பிரசங்கி 5:4, 5)

3 ஞானஸ்நானம் ஒரு ஆரம்பம்தான்! அதற்குபிறகு உங்களுடைய அர்ப்பணிப்புக்கு ஏற்றமாதிரி வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். அதுவும், விசுவாசத்தை உரசிப் பார்க்கிற பிரச்சினைகளோ சோதனைகளோ வந்தால்கூட உறுதியாக இருங்கள். (பிரசங்கி 5:4, 5-ஐ வாசியுங்கள்.) இயேசுவின் சீஷராக, அவரை போலவே நடப்பதற்கும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கும் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். (மத். 28:19, 20; 1 பே. 2:21) இதை செய்வதற்கு இந்தக் கட்டுரை உதவி செய்யும்.

சோதனைகள் வந்தாலும் இயேசுவைப் பின்பற்றுங்கள்

4. எந்த அர்த்தத்தில் இயேசுவின் சீஷர்கள் “சித்திரவதைக் கம்பத்தை” சுமக்க வேண்டும்? (லூக்கா 9:23)

4 ஞானஸ்நானம் எடுத்த பிறகு, வாழ்க்கையில் பிரச்சினைகளே வராது என்று சொல்ல முடியாது. சொல்லப்போனால், தன்னுடைய சீஷர்கள் “சித்திரவதைக் கம்பத்தை” சுமக்க வேண்டும் என்று இயேசு தெளிவாக சொன்னார்; அதுவும் “தினமும்!” (லூக்கா 9:23-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், தன்னுடைய சீஷர்கள் எப்போதுமே கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள் என்று இயேசு சொன்னாரா? இல்லை! அவர்களுக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கும்தான். இருந்தாலும், சில பிரச்சினைகளையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றுதான் சொன்னார். அவற்றில் சில பிரச்சினைகள் ரொம்பவே வேதனையாகக்கூட இருக்கலாம்.—2 தீ. 3:12.

5. தியாகங்கள் செய்கிறவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று இயேசு சொன்னார்?

5 ஒருவேளை, குடும்பத்தில் இருந்து உங்களுக்கு எதிர்ப்பு வந்திருக்கலாம். அல்லது, கடவுளுடைய அரசாங்கத்துக்காக பணம் பொருளை நீங்கள் தியாகம் செய்திருக்கலாம். (மத். 6:33) நீங்கள் செய்த எதையுமே யெகோவா மறக்க மாட்டார். (எபி. 6:10) இயேசுவும் இப்படி சொல்லியிருக்கிறார்: “எனக்காகவும் நல்ல செய்திக்காகவும் வீட்டையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ அம்மாவையோ அப்பாவையோ பிள்ளைகளையோ வயல்களையோ தியாகம் செய்கிறவன், இந்தக் காலத்தில் துன்புறுத்தல்களோடுகூட, 100 மடங்கு அதிகமாக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் அம்மாக்களையும் பிள்ளைகளையும் வயல்களையும் பெறுவான்; வரப்போகும் காலத்தில் முடிவில்லாத வாழ்வையும் நிச்சயம் பெறுவான்.” (மாற். 10:29, 30) நாம் செய்கிற தியாகங்களைவிட நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்தான் அதிகம்! இது எவ்வளவு உண்மை என்பதை நீங்களே அனுபவித்திருப்பீர்கள்.—சங். 37:4.

6. ஞானஸ்நானம் எடுத்த பிறகும் நீங்கள் ஏன் ‘உடலின் ஆசையை’ எதிர்த்து போராட வேண்டியிருக்கும்?

6 ஞானஸ்நானம் எடுத்த பிறகும்கூட ‘உடலின் ஆசையை’ எதிர்த்து நீங்கள் போராட வேண்டியிருக்கலாம். (1 யோ. 2:16) ஏனென்றால், இப்போதும் நீங்கள் பாவ இயல்புள்ளவர்தான். சில சமயங்களில் அப்போஸ்தலன் பவுல் மாதிரியே உங்களுக்கும் தோன்றலாம். “கடவுளுடைய சட்டத்தைக் குறித்து என் உள்ளத்தின் ஆழத்தில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஆனால், என் மனதின் சட்டத்துக்கு விரோதமாகப் போராடுகிற வேறொரு சட்டம் என் உடலில் இருப்பதைப் பார்க்கிறேன். என் உடலில் இருக்கிற அந்தப் பாவச் சட்டம் என்னைச் சிறைபிடித்து வைத்திருக்கிறது” என்று அவர் சொன்னார். (ரோ. 7:22, 23) உங்களுக்குள் இருக்கும் பாவ இயல்பை நினைத்து நீங்கள் சோர்ந்துபோகலாம். ஆனால், யெகோவாவுக்கு அர்ப்பணித்தபோது நீங்கள் கொடுத்த வாக்கைப் பற்றி யோசிக்கும்போது, தொடர்ந்து போராட உங்களுக்குப் பலம் கிடைக்கும். உண்மை என்னவென்றால், கெட்ட ஆசைகள் வரும்போது உங்களுடைய அர்ப்பணிப்பு உங்களைப் பாதுகாக்கிறது. எப்படி?

7. யெகோவாவுக்கு அர்ப்பணித்தது அவருக்கு உண்மையாக இருக்க உங்களுக்கு எப்படி உதவும்?

7 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்கும்போது, நீங்கள் உங்களையே துறக்கிறீர்கள். அதாவது, உங்களுடைய விருப்பம், ஆசை, லட்சியம் போன்றவை யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவற்றை விட்டுக்கொடுக்க நீங்கள் தயாராகிறீர்கள். (மத். 16:24) அதனால் சோதனை வரும்போது, என்ன செய்ய வேண்டும் என்பதில் உங்களுக்குக் குழப்பமோ சந்தேகமோ இருக்காது. ஏனென்றால், அர்ப்பணித்த சமயத்திலேயே யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருப்பீர்கள். அவரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதில் இப்போதும் தீர்மானமாக இருக்கிறீர்கள். ஒரு விதத்தில் நீங்களும் யோபு மாதிரிதான்! பயங்கரமான கஷ்டம் வந்தபோது “நான் என்னுடைய உத்தமத்தை விடமாட்டேன்” என்று அவர் சொன்னார்.—யோபு 27:5.

8. அர்ப்பணித்தபோது கொடுத்த வாக்குறுதியை யோசித்துப் பார்ப்பது, தவறான ஆசைகளைக் கட்டுப்படுத்த உங்களுக்கு எப்படி உதவும்?

8 அர்ப்பணித்தபோது கொடுத்த வாக்குறுதியை யோசித்துப் பார்ப்பது தவறான ஆசைகளைக் கட்டுப்படுத்த உதவும். உதாரணத்துக்கு, இன்னொருவருடைய மணத்துணையோடு நெருக்கமாக பழகுவதை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கண்டிப்பாக அப்படி செய்ய மாட்டீர்கள்! ஏனென்றால், அப்படி செய்யக் கூடாது என்று நீங்கள் அர்ப்பணித்தபோதே முடிவெடுத்திருக்கிறீர்கள். தப்பான எண்ணங்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட்டால், பிற்பாடு அதோடு போராட வேண்டிய அவசியமே இருக்காது. ‘பொல்லாதவர்களின் பாதையில் போகாமல்’ ‘அதைவிட்டு விலகியே’ இருப்பீர்கள்.—நீதி. 4:14, 15.

9. அர்ப்பணித்தபோது கொடுத்த வாக்கைப் பற்றி யோசித்துப் பார்ப்பது, யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க எப்படி உதவும்?

9 கூட்டங்களுக்குத் தவறாமல் போக முடியாத மாதிரி ஒரு வேலை உங்களுக்குக் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். ஏனென்றால், கூட்டங்களுக்குத் தடையாக இருக்கிற ஒரு வேலைக்குப் போகக்கூடாது என்று நீங்கள் ஏற்கெனவே முடிவு எடுத்திருப்பீர்கள். ‘முதலில் வேலையில் சேர்ந்துகொள்ளலாம், பிறகு, யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க வழி கண்டுபிடிக்கலாம்’ என்று யோசிக்க மாட்டீர்கள். இயேசுகூட தன்னுடைய அப்பாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரை மாதிரியே நீங்களும் இருக்க நினைப்பீர்கள்; யெகோவாவுக்குப் பிடிக்காத எதையும் செய்ய மாட்டீர்கள்.—மத். 4:10; யோவா. 8:29.

10. ஞானஸ்நானம் எடுத்த பிறகும், இயேசுவை “தொடர்ந்து” பின்பற்ற யெகோவா உங்களுக்கு எப்படி உதவி செய்வார்?

10 சோதனைகளும் கஷ்டங்களும் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுக்கிறது. அதாவது, இயேசுவை “தொடர்ந்து” பின்பற்றுவதற்கு உறுதியாக இருக்கிறோம் என்பதைக் காட்ட வாய்ப்பு கொடுக்கிறது. யெகோவாவும் உங்களுக்குக் கண்டிப்பாக உதவி செய்வார். பைபிள் இப்படிச் சொல்கிறது: “கடவுள் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் அவர் அனுமதிக்க மாட்டார். அதைச் சகித்துக்கொள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் அவர் வழிசெய்வார்.”—1 கொ. 10:13.

இயேசுவை எப்படித் தொடர்ந்து பின்பற்றலாம்

11. இயேசுவைத் தொடர்ந்து பின்பற்றுவதற்கு ஒரு வழி என்ன? (படத்தையும் பாருங்கள்.)

11 இயேசு, யெகோவாவுக்கு முழு மனசோடு சேவை செய்தார். ஜெபம் செய்வதன் மூலம் அவரோடு நெருங்கியிருந்தார். (லூக். 6:12) நீங்களும் யெகோவாவோடு நெருக்கமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்வதை வழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள். இப்படி செய்யும்போது நீங்கள் இயேசுவைத் தொடர்ந்து பின்பற்ற முடியும். சொல்லப்போனால், பைபிள்கூட, “முன்னேற்றப் பாதையில் நாம் எதுவரை போயிருந்தாலும் சரி, அதே பாதையில் தொடர்ந்து சீராக நடக்க வேண்டும்” என்று சொல்கிறது. (பிலி. 3:16) யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த சகோதர சகோதரிகளுடைய அனுபவங்களை நீங்கள் பார்க்கலாம். ஒருவேளை, அவர்கள் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்திருக்கலாம் அல்லது, தேவை அதிகம் இருக்கிற இடத்துக்குக் குடிமாறி போயிருக்கலாம். முடிந்தால், நீங்களும் அப்படியொரு குறிக்கோளை வையுங்கள். யெகோவாவுடைய மக்களாக நாம் எல்லாருமே ஊழியத்தை அதிகமாக செய்ய ஆசைப்படுகிறோம். (அப். 16:9) ஒருவேளை அவர்களைப் போல் செய்ய முடியவில்லை என்றால், உங்களையே தாழ்வாக நினைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் தொடர்ந்து சகித்திருப்பதுதான் ரொம்ப முக்கியம். (மத். 10:22) உங்களுடைய திறமைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றமாதிரி யெகோவாவுக்கு சேவை செய்யுங்கள். அந்த சேவையைக் குறைத்து எடைபோடாதீர்கள்.—சங். 26:1.

ஞானஸ்நானத்துக்குப் பிறகு, யெகோவாவிடம் நெருங்கிப் போக உதவும் விஷயங்களை செய்ய குறிக்கோள் வையுங்கள் (பாரா 11)


12-13. உங்களுடைய ஆர்வம் குறைவதுபோல் இருந்தால் நீங்கள் என்ன செய்யலாம்? (1 கொரிந்தியர் 9:16, 17) (“ தொடர்ந்து ஓட...” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

12 ஒருவேளை ஏதோவொரு கட்டத்தில் நீங்கள் மனதிலிருந்து ஜெபம் செய்யாதது போலவோ, ஊழியத்தைக் கடமைக்காக செய்வது போலவோ, ஆசை ஆசையாக பைபிளைப் படிக்காதது போலவோ தோன்றலாம். ஞானஸ்நானத்துக்குப் பிறகு இந்தமாதிரி நீங்கள் உணர்ந்தால், உடனே கடவுளுடைய சக்தி உங்களை விட்டுப் போய்விட்டது என்று நினைக்காதீர்கள். நாம் பாவ இயல்புள்ள மனிதர்களாக இருப்பதால் நம்முடைய உணர்ச்சிகள் நேரத்துக்கு நேரம் மாறலாம். ஒருவேளை உங்களுடைய ஆர்வம் குறைய ஆரம்பித்தால், அப்போஸ்தலன் பவுலுடைய உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். அவர் இயேசுவைப் பின்பற்றுவதற்கு கடினமாக முயற்சி செய்தார். இருந்தாலும், ஒருசமயத்தில் இருந்த ஆர்வம் இன்னொரு சமயத்தில் இல்லாததை உணர்ந்தார். (1 கொரிந்தியர் 9:16, 17-ஐ வாசியுங்கள்.) “அதை விருப்பமில்லாமல் செய்தால்கூட, என்னிடம் ஒரு நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் சொன்னார். வேறு வார்த்தையில் சொன்னால், அவருக்குள் எப்படிப்பட்ட உணர்ச்சிகள் இருந்தாலும் அதை ஓரங்கட்டி வைத்துவிட்டு ஊழியத்தை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

13 நீங்களும் உணர்ச்சிகளை வைத்து மட்டுமே முடிவெடுக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் சரியானதை செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருங்கள். அப்படி இருந்தால், போகப்போக நீங்கள் யோசிக்கிற விதம் மாறிவிடும். என்ன ஆனாலும் சரி, யெகோவாவோடு நெருக்கமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துகொண்டே இருங்கள். இப்படி செய்தால், ஞானஸ்நானத்துக்குப் பிறகும் உங்களால் இயேசுவைப் பின்பற்ற முடியும். நீங்கள் இப்படித் தொடர்ந்து செய்வதைப் பார்த்து மற்றவர்களும் பலம் பெறுவார்கள்.—1 தெ. 5:11.

“எப்போதும் சோதித்து பாருங்கள் . . . எப்போதும் ஆராய்ந்து பாருங்கள்”

14. நீங்கள் அடிக்கடி என்ன செய்ய வேண்டும், ஏன்? (2 கொரிந்தியர் 13:5)

14 ஞானஸ்நானம் எடுத்த பிறகு, உங்களைப் பற்றி அடிக்கடி யோசித்துப் பாருங்கள். (2 கொரிந்தியர் 13:5-ஐ வாசியுங்கள்.) நீங்கள் தினமும் ஜெபம் செய்கிறீர்களா, பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்கிறீர்களா, கூட்டங்களிலும் ஊழியத்திலும் கலந்துகொள்கிறீர்களா என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். இவற்றை இன்னும் எப்படி நன்றாக செய்யலாம் என்றும் பாருங்கள். இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பைபிளில் இருக்கிற அடிப்படை விஷயங்களை என்னால் விளக்க முடிகிறதா? ஊழியத்தை சந்தோஷமாக செய்ய நான் ஏதாவது செய்ய வேண்டுமா? யெகோவாவிடம் குறிப்பாக சில விஷயங்களைக் கேட்டு ஜெபம் செய்கிறேனா? அவரையே முழுமையாக நம்பியிருக்கிறேன் என்பதை என் ஜெபங்கள் காட்டுகிறதா? நான் தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்கிறேனா? கூட்டங்களில் இன்னும் நன்றாக கவனிக்கவும் பதில் சொல்லவும் நான் என்ன செய்யலாம்?’

15-16. ஒரு சகோதரரின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

15 உங்களுடைய பலவீனங்களைப் பற்றியும் நேர்மையாக யோசித்துப் பாருங்கள். ராபர்ட் என்ற சகோதரர் தனக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி சொல்கிறார்: “எனக்கு கிட்டத்தட்ட 20 வயது இருந்தபோது பகுதி நேர வேலையை செய்துகொண்டு இருந்தேன். ஒருநாள் வேலை முடிந்ததும், என்னோடு வேலை செய்கிற பெண் என்னை அவளுடைய வீட்டுக்குக் கூப்பிட்டாள். ‘வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள், நாம் ஜாலியாக இருக்கலாம், வா!’ என்று சொன்னாள். ஆரம்பத்தில், என்னால் வர முடியாது என்பதற்கு சில சாக்குப்போக்குகளை சொன்னேன். ஆனால், அப்புறம்தான் ‘முடியாது’ என்று உறுதியாக சொன்னேன், அதற்கான காரணத்தையும் சொன்னேன்.” ராபர்ட் அந்த சோதனையை சமாளித்துவிட்டார்; அது பாராட்ட வேண்டிய விஷயம்தான். ஆனால், அந்த சம்பவத்தைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது அதை இன்னும் நன்றாக சமாளித்திருக்கலாமோ என்று யோசித்தார். அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “போத்திபாருடைய மனைவியிடம் யோசேப்பு சொன்ன மாதிரி, ஆரம்பத்திலேயே அவளிடம் முடியாது என்று நான் உறுதியாக சொல்லவில்லை. (ஆதி. 39:7-9) ‘முடியாது’ என்று சொல்வது எனக்கு கஷ்டமாக இருந்திருக்கிறது; அதை நினைக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. யெகோவாவோடு இருந்த நட்பை இன்னும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அப்போதுதான் புரிந்துகொண்டேன்.”

16 ராபர்ட் மாதிரியே நீங்களும் உங்களைப் பற்றி நேர்மையாக யோசித்துப் பாருங்கள். அது உங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். ஒருவேளை ஒரு சோதனைக்கோ கெட்ட ஆசைக்கோ நீங்கள் இணங்கியிருக்க மாட்டீர்கள். ஆனால், ‘முடியாது’ என்று சொல்வதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டீர்கள் என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் இன்னும் முன்னேற வேண்டும் என்று தோன்றினால் சோர்ந்துவிடாதீர்கள். உங்களுக்கு இருக்கும் பலவீனத்தைக் கண்டுபிடித்ததை நினைத்து சந்தோஷப்படுங்கள். அதைப்பற்றி ஜெபம் செய்யுங்கள். ஒழுக்க விஷயத்தில் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதற்குத் தேவையான படிகளை எடுங்கள்.—சங். 139:23, 24.

17. ராபர்ட்டின் அனுபவத்தில் யெகோவாவுடைய பெயர் எப்படி சம்பந்தப்பட்டிருந்தது?

17 ராபர்ட்டின் அனுபவம் அதோடு முடிந்துவிடவில்லை. அவர் சொல்வதைக் கவனியுங்கள்: “என்கூட வேலை செய்த பெண்ணிடம் ‘முடியாது’ என்று சொன்னப் பிறகு, அவள் என்னிடம் ‘நான் வைத்த டெஸ்டில் நீ பாஸ் ஆகிவிட்டாய்’ என்று சொன்னாள். ‘எனக்கு புரியவில்லை, நீ என்ன சொல்கிறாய்’ என்று கேட்டேன். அப்போது அவள், முன்பு யெகோவாவின் சாட்சியாக இருந்த ஒருவன் தன்னுடைய ஃபிரண்டு என்று சொன்னாள். அவன் அவளிடம் ‘சாட்சிகளாக இருக்கும் இளைஞர்கள் எல்லாருமே வெளியே ஒரு மாதிரியும் சபைக்குள் ஒரு மாதிரியும் இருப்பார்கள். வாய்ப்பு கிடைத்தால் தப்பு செய்துவிடுவார்கள்’ என்று சொன்னதாக அவள் என்னிடம் சொன்னாள். நானும் அப்படித்தானா என்று டெஸ்ட் பண்ணிப் பார்ப்பதாக அவனிடம் அவள் சொல்லியிருக்கிறாள். நல்லவேளை, யெகோவாவுடைய பெயரைக் கெடுப்பதுபோல் நான் எதையும் செய்துவிடவில்லை. இதை நினைத்து நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.”

18. ஞானஸ்நானம் எடுத்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறீர்கள்? (“ உங்களுக்காகவே இரண்டு கட்டுரைகள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

18 அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது, என்ன ஆனாலும் யெகோவாவுடைய பெயரை பரிசுத்தப்படுத்த நீங்கள் ஆசையாக இருப்பதைக் காட்டுகிறீர்கள். உங்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன... எப்படிப்பட்ட ஆசைகளைக் கட்டுப்படுத்துகிறீர்கள்... என்றெல்லாம் யெகோவாவுக்கு நன்றாக தெரியும். அவருக்கு உண்மையாக இருக்க நீங்கள் எடுக்கிற முயற்சிகளை அவர் கண்டிப்பாக ஆசீர்வதிப்பார். தன்னுடைய சக்தி மூலமாக உங்களுக்குத் தேவையான பலத்தைத் தருவார். (லூக். 11:11-13) யெகோவாவின் உதவியோடு, ஞானஸ்நானம் எடுத்த பிறகும் உங்களால் தொடர்ந்து இயேசுவைப் பின்பற்ற முடியும்.

உங்கள் பதில் என்ன?

  • எந்த அர்த்தத்தில் கிறிஸ்தவர்கள் “சித்திரவதை கம்பத்தைத் தினமும்” சுமக்கிறார்கள்?

  • ஞானஸ்நானம் எடுத்த பிறகு இயேசுவை “தொடர்ந்து” பின்பற்றுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

  • அர்ப்பணித்தபோது கொடுத்த வாக்குறுதியைப் பற்றி யோசித்துப் பார்ப்பது தொடர்ந்து உண்மையாக இருக்க உங்களுக்கு எப்படி உதவி செய்யும்?

பாட்டு 89 கேட்போம், கடைப்பிடிப்போம், ஆசி பெறுவோம்