Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 9

பாட்டு 75 “சொல்லுங்கள், நான் செல்கின்றேன்!”

யெகோவாவுக்கு அர்ப்பணிக்க நீங்கள் தயாரா?

யெகோவாவுக்கு அர்ப்பணிக்க நீங்கள் தயாரா?

“யெகோவா எனக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைமாறு செய்வேன்?”சங். 116:12.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவாவோடு ஒரு நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொண்டால் அவருக்கு வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்... ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்... என்ற ஆசை உங்களுக்கே வரும்.

1-2. ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

 கடந்த ஐந்து வருஷங்களில், பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சிகளாக ஆகியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள், முதல் நூற்றாண்டில் இருந்த தீமோத்தேயு மாதிரி “சிசுப் பருவத்திலிருந்தே” சத்தியத்தைக் கற்றுக்கொண்டவர்கள். (2 தீ. 3:14, 15) வேறு சிலருக்கு பெரியவர்களானப் பிறகு, சத்தியம் கிடைக்கிறது. உதாரணத்துக்கு, வயதான ஒரு பெண் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்தார். அவர் ஞானஸ்நானம் எடுத்தபோது அவருக்கு வயது 97!

2 நீங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்துக்கொண்டிருக்கலாம். அல்லது, உங்கள் அப்பா அம்மா, சின்ன வயதிலிருந்தே யெகோவாவைப் பற்றி உங்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கலாம். அப்படியென்றால், ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி நீங்கள் யோசிக்கிறீர்களா? அந்தக் குறிக்கோளை வைத்திருப்பதற்காக நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம். ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு நீங்கள் உங்களையே யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணிப்பது என்றால் என்ன என்று இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வீர்கள். அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதை ஏன் தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை என்றும் புரிந்துகொள்வீர்கள்.

அர்ப்பணிப்பது என்றால் என்ன?

3. யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த சிலரைப் பற்றி சொல்லுங்கள்.

3 அர்ப்பணிப்பது என்பது, பரிசுத்தமான ஒரு நோக்கத்துக்காக தனியாக பிரித்துவைப்பதைக் குறிக்கிறது. அன்றிருந்த இஸ்ரவேல் தேசம் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அந்த தேசத்திலும் சிலர் விசேஷமான விதத்தில் அர்ப்பணிக்கப்பட்டிருந்தார்கள். உதாரணத்துக்கு, ஆரோன், விசேஷமான ஒரு பொறுப்பை செய்வதற்காக, அதாவது, இஸ்ரவேல் தேசத்தின் தலைமை குருவாக இருப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தார். இதற்கு அடையாளமாக, பளபளப்பான தங்கத் தகட்டை தன்னுடைய தலைப்பாகையில் போட்டிருந்தார். அது, ‘அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளமாக’ இருந்தது. (லேவி. 8:9) நசரேயர்களும்கூட யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தார்கள். நசரேயர் என்ற வார்த்தை, “நாசிர்” என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வருகிறது. அதன் அர்த்தம்: “பிரித்துவைக்கப்பட்டவர்,” “அர்ப்பணிக்கப்பட்டவர்.” திருச்சட்டத்தில், நசரேயர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தன. அவர்கள் அதன்படி வாழ்ந்தார்கள்.—எண். 6:2-8.

4. (அ) யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய முடிவெடுக்கிறார்கள்? (ஆ) ‘தன்னையே துறப்பது’ என்றால் என்ன அர்த்தம்? (படத்தையும் பாருங்கள்.)

4 அர்ப்பணிக்கும்போது இயேசுவின் சீஷராக ஆவதற்கும் யெகோவாவுடைய விருப்பத்துக்கு முதலிடம் கொடுப்பதற்கும் முடிவெடுக்கிறீர்கள். அர்ப்பணிப்பதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது? இயேசு இப்படி சொன்னார்: ‘யாராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே துறக்க வேண்டும்.’ (மத். 16:24) “தன்னையே துறந்து” என்ற கிரேக்க வார்த்தை “தனக்குத்தானே வேண்டாம் என்று சொல்வதையும்” குறிக்கிறது. யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களை அவருடைய ஊழியர்கள் செய்ய மாட்டார்கள்; அதற்கு ‘வேண்டாம்’ என்று சொல்வார்கள். (2 கொ. 5:14, 15) அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் “பாவ இயல்புக்குரிய செயல்கள்.” உதாரணத்துக்கு, பாலியல் முறைகேடு. (கலா. 5:19-21; 1 கொ. 6:18) யெகோவாவுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதால் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியாமல் போய்விடுமா? யெகோவாமேல் உண்மையிலேயே அன்பு இருந்தால்... அவருடைய சட்டங்கள் நம்முடைய நல்லதுக்குத்தான் என்று நினைத்தால்... அவை நம்மைக் கட்டுப்படுத்துவதாக நினைக்க மாட்டோம். (சங். 119:97; ஏசா. 48:17, 18) இதைப் பற்றி நிக்கோலஸ் என்ற சகோதரர் இப்படிச் சொன்னார்: “யெகோவாவுடைய சட்டங்களை, நம்முடைய சுதந்திரத்தைப் பறிக்கிற சிறைக் கம்பிகளாகவும் பார்க்கலாம், சிங்கத்திடமிருந்து நம்மை பாதுகாக்கிற கூண்டு கம்பிகளாகவும் பார்க்கலாம். அது நம் கையில்தான் இருக்கிறது.”

யெகோவாவுடைய சட்டங்களை உங்கள் சுதந்திரத்தைப் பறிக்கும் சிறைக் கம்பிகளாக பார்க்கிறீர்களா அல்லது, சிங்கத்திடமிருந்து பாதுகாக்கிற கூண்டு கம்பிகளாக பார்க்கிறீர்களா? (பாரா 4)


5. (அ) யெகோவாவுக்கு எப்படி உங்களை அர்ப்பணிக்கலாம்? (ஆ) அர்ப்பணிப்பதற்கும் ஞானஸ்நானம் எடுப்பதற்கும் என்ன வித்தியாசம்? (படத்தையும் பாருங்கள்.)

5 யெகோவாவுக்கு எப்படி உங்களை அர்ப்பணிக்கலாம்? அவரை மட்டுமே வணங்குவீர்கள் என்றும் வாழ்க்கையில் அவருடைய விருப்பத்தை செய்வதற்குதான் முதலிடம் கொடுப்பீர்கள் என்றும் ஜெபத்தில் அவருக்கு வாக்குக் கொடுப்பதன் மூலமாக செய்யலாம். வேறு வார்த்தைகளில் சொன்னால், “முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும்” அவர்மேல் அன்பு காட்டுவீர்கள் என்று நீங்கள் அவருக்கு வாக்குக் கொடுக்கிறீர்கள். (மாற். 12:30) அர்ப்பணிக்கும்போது நீங்கள் அவருக்குக் கொடுக்கும் வாக்கு ரொம்ப முக்கியமானது; அதை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. அந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்று நீங்களும் ஆசைப்படுவீர்கள், யெகோவாவும் அதை எதிர்பார்க்கிறார். அர்ப்பணிப்பது என்பது உங்களுக்கும் யெகோவாவுக்கும் நடுவில் நடக்கிற தனிப்பட்ட விஷயம். ஆனால், ஞானஸ்நானம் அப்படியில்லை. நீங்கள் அர்ப்பணித்திருப்பதை எல்லாருக்கும் காட்டுவதற்காக எடுக்கிற படி அது.—பிர. 5:4, 5.

அர்ப்பணிப்பது என்றால், யெகோவாவை மட்டும்தான் வணங்குவீர்கள் என்றும் அவருடைய விருப்பத்தை செய்வதற்குதான் உங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பீர்கள் என்றும் தனிப்பட்ட விதமாக அவருக்கு வாக்குக் கொடுப்பது (பாரா 5)


ஏன் அர்ப்பணிக்க வேண்டும்?

6. யெகோவாவுக்கு அர்ப்பணிக்க எது ஒருவரைத் தூண்டுகிறது?

6 உங்களுக்கு யெகோவாமேல் நிறைய அன்பு இருக்கிறது. அதனால்தான் உங்களுடைய வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்கிறீர்கள். இந்த அன்பு, ஏதோ உணர்ச்சிவசப்பட்டு வரும் அன்பு கிடையாது. ‘திருத்தமான அறிவு’ கிடைத்ததாலும் ‘ஆன்மீக விஷயங்களைப் பற்றி புரிந்துகொண்டதாலும்’ உங்களுக்கு யெகோவாமேல் இருந்த அன்பு அதிகமாகியிருக்கிறது. (கொலோ. 1:9) அதுமட்டுமல்ல, பைபிளை ஆழமாகப் படித்ததால் இந்த மூன்று விஷயங்களையும் நீங்கள் உறுதியாக நம்ப ஆரம்பித்திருக்கிறீர்கள்: (1) யெகோவா உண்மையிலேயே இருக்கிறார், (2) பைபிள் அவருடைய சக்தியால் எழுதப்பட்ட புத்தகம், (3) அவர் தன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தன்னுடைய அமைப்பைப் பயன்படுத்துகிறார்.

7. அர்ப்பணிப்பதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும்?

7 அர்ப்பணிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் பைபிளின் அடிப்படை விஷயங்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும், கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும். (மத். 28:19, 20) யெகோவாமேல் இருக்கும் அன்பு அதிகமாக அதிகமாக அவருக்கு மட்டும்தான் பக்தியைக் கொடுக்க வேண்டும் என்று மனசார ஆசைப்பட வேண்டும். இப்படிப்பட்ட அன்பு உங்களுக்கு இருந்தால், பைபிள் படிப்பு எடுத்தவர்களுக்காகவோ அப்பா அம்மாவுக்காகவோ நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க மாட்டீர்கள். அல்லது, நண்பர்கள் எல்லாரும் ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார்கள் என்பதற்காக நீங்களும் எடுக்க மாட்டீர்கள். உண்மையிலேயே யெகோவாமேல் இருக்கும் அன்பினால் எடுப்பீர்கள்.

8. யெகோவாவுக்கு அர்ப்பணிக்க நன்றியுணர்வு உங்களை எப்படித் தூண்டும்? (சங்கீதம் 116:12-14)

8 யெகோவா உங்களுக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று யோசித்துப் பார்த்தால், வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஆசை வரும். (சங்கீதம் 116:12-14-ஐ வாசியுங்கள்.) “நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும்” யெகோவாவிடமிருந்துதான் வருகிறது என்று பைபிள் சொல்கிறது. (யாக். 1:17) யெகோவா கொடுத்த ஒரு பெரிய பரிசுதான் இயேசுவின் மீட்புவிலை! இந்த ஏற்பாடு இருப்பதால்தான் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை உங்களால் வைத்துக்கொள்ள முடிகிறது. மரணமே இல்லாமல் வாழ்வோம் என்ற நம்பிக்கையும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. (1 யோ. 4:9, 10, 19) அதுமட்டுமல்ல, இன்னும் நிறைய ஆசீர்வாதங்களை யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். இதற்கெல்லாம் நீங்கள் அவருக்கு நன்றி காட்ட வேண்டும், இல்லையா? எப்படி நன்றி காட்டுவீர்கள்? உங்களையே அவருக்கு அர்ப்பணிப்பதன் மூலமாகத்தான்! (உபா. 16:17; 2 கொ. 5:15) நன்றி காட்டுவதைப் பற்றி இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் 46-வது பாடத்தில் 4-வது குறிப்பு சொல்கிறது. அதில், உங்கள் பரிசுகளை யெகோவாவுக்குக் கொடுங்கள் என்ற மூன்று நிமிட வீடியோவும் இருக்கிறது.

அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் தயாரா?

9. மற்றவர்கள் அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் என்பதற்காக ஏன் ஒருவர் அர்ப்பணிக்கக் கூடாது?

9 அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க நான் இன்னும் தயாராகவில்லை என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ ஒருவேளை சில மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டியிருக்கலாம். அல்லது, உங்களுடைய விசுவாசம் பலமாக இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படலாம். (கொலோ. 2:6, 7) உண்மைதான், பைபிள் படிக்கிற எல்லாருக்குமே யெகோவாமேல் இருக்கும் அன்பு ஒரேமாதிரி வளராது. இளம் பிள்ளைகள் எல்லாருமே ஒரு குறிப்பிட்ட வயதில் ஞானஸ்நானம் எடுத்துவிடுவார்கள் என்றும் சொல்ல முடியாது. அதனால், எந்தெந்த விஷயங்களில் நீங்கள் முன்னேற வேண்டும் என்று யோசித்து மாற்றங்களை செய்யுங்கள்; உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.—கலா. 6:4, 5.

10. ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் தயாராக இல்லை என்று தோன்றினால் என்ன செய்வது? (“ சத்தியத்தில் வளர்க்கப்பட்ட பிள்ளைகளுக்கு” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

10 ஞானஸ்நானம் எடுக்க நான் இன்னும் தயாராக இல்லை என்று உங்களுக்குத் தோன்றினாலும், அதை ஒரு குறிக்கோளாக வைத்து உழையுங்கள். மாற்றங்களை செய்ய உதவ சொல்லி ஜெபம் செய்யுங்கள். (பிலி. 2:13; 3:16) கண்டிப்பாக யெகோவா உங்கள் ஜெபத்தைக் கேட்டு உதவுவார்.—1 யோ. 5:14.

ஏன் சிலர் தயங்குகிறார்கள்

11. தனக்கு உண்மையாக இருக்க யெகோவா எப்படி நமக்கு உதவி செய்வார்?

11 அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க எந்தத் தடையும் இல்லாதவர்கள்கூட இந்தப் படியை எடுக்கத் தயங்கலாம். ஞானஸ்நானத்துக்குப் பிறகு ஏதாவது பெரிய பாவம் செய்து சபைநீக்கம் செய்யப்பட்டால் என்ன செய்வது என்று நீங்கள் பயப்படுகிறீர்களா? அப்படிப் பயப்படத் தேவையில்லை. தனக்கு உண்மையாக இருப்பதற்கு யெகோவா தன்னுடைய மக்களுக்கு உதவி செய்வார். அவருக்கு ‘ஏற்ற விதத்தில் நடந்து அவரை முழுமையாகப் பிரியப்படுத்துவதற்கும்’ உதவுவார். (கொலோ. 1:10) சரியானதை செய்வதற்குப் பலம் கொடுப்பார். ஏற்கெனவே நிறைய பேருக்கு அதைக் கொடுத்தும் இருக்கிறார். (1 கொ. 10:13) அவர் அப்படி கொடுப்பதால்தான், நிறைய பேர் அவருக்கு உண்மையாக இருக்கிறார்கள். ரொம்ப கொஞ்சம் பேர்தான் சபைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

12. பெரிய பாவத்தை செய்யாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?

12 நாம் எல்லாருமே பாவிகளாக இருப்பதால் தவறு செய்ய வேண்டும் என்ற ஆசை வரலாம். (யாக். 1:14) ஆனால் அப்படி ஒரு ஆசை வரும்போது, அதை செய்வதும் செய்யாததும் நம் கையில்தான் இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எப்படி வாழ வேண்டும் என்று முடிவு செய்வது உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனால், உலகத்தில் இருப்பவர்களுக்கு வேறு கருத்துகள் இருக்கலாம்; ஆசைகளைக் கட்டுப்படுத்தவே முடியாது என்று அவர்கள் சொல்லலாம். அது உண்மையில்லை! கெட்ட ஆசைகளை உங்களால் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த முடியும். அதற்கு நீங்கள் தினமும் ஜெபம் செய்ய வேண்டும், தவறாமல் பைபிள் படிக்க வேண்டும், கூட்டங்களுக்கு வர வேண்டும், பைபிளைப் பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டும். இதையெல்லாம் தவறாமல் செய்துகொண்டே இருந்தால் உங்களால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும். யெகோவாவும் உங்களுக்கு உதவி செய்வார் என்பதை மறந்துவிடாதீர்கள்.—கலா. 5:16.

13. யோசேப்பு எப்படி நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி?

13 ஒரு கெட்ட ஆசை வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று முன்பே யோசித்து வைக்கலாம். அப்படி செய்யும்போது யெகோவாவுக்கு உங்களால் உண்மையாக இருக்க முடியும். நிறைய பேர் அப்படி செய்திருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. அவர்களும் நம்மைப் போல் பாவ இயல்புள்ள மனிதர்கள்தான். யோசேப்பைப் பற்றி யோசித்துப் பாருங்கள். போத்திபாரின் மனைவி யோசேப்பை தன்னுடைய வலையில் விழ வைக்க நிறைய தடவை முயற்சி செய்தாள். அந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் யோசேப்பு தெளிவாக இருந்தார்; அவருக்கு எந்தக் குழப்பமும் இருக்கவில்லை. ‘அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை’ என்று பைபிள் சொல்கிறது. அதுமட்டுமல்ல, “நான் எப்படி இவ்வளவு பெரிய தவறு செய்து, கடவுளுக்கு விரோதமாகப் பாவம் பண்ணுவேன்” என்று சொன்னார். (ஆதி. 39:8-10) இதிலிருந்து என்ன தெரிகிறது? தப்பு செய்வதற்கான சூழ்நிலை வருவதற்கு முன்பே என்ன செய்ய வேண்டும் என்பதை யோசேப்பு தெரிந்துவைத்திருந்தார். அதனால்தான் அவரால் உறுதியாக இருக்க முடிந்தது.

14. கெட்ட விஷயங்களுக்கு ‘முடியாது’ என்று சொல்ல நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?

14 நீங்கள் எப்படி யோசேப்பு மாதிரி உறுதியாக இருக்கலாம்? தப்பு செய்வதற்கான ஒரு சூழ்நிலை வந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இப்போதே முடிவு செய்யுங்கள். யெகோவா வெறுக்கிற விஷயங்களை ‘செய்யவே மாட்டேன்’ என்று சொல்லப் பழகிக்கொள்ளுங்கள். அந்த மாதிரி விஷயங்களை மனதில்கூட அசைபோடாதீர்கள். (சங். 97:10; 119:165) இப்படியெல்லாம் செய்தால், தப்பு செய்ய தூண்டும் ஒரு சூழ்நிலையில் பாவம் செய்துவிட மாட்டீர்கள். ஏனென்றால், என்ன செய்ய வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருப்பீர்கள்.

15. யெகோவாவை ‘ஊக்கமாகத் தேடுவதை’ ஒருவர் எப்படிக் காட்டலாம்? (எபிரெயர் 11:6)

15 ‘இதுதான் சத்தியம் என்று எனக்குத் தெரியும்... யெகோவாவைதான் வணங்க வேண்டும் என்றும் தெரியும்... ஆனால் அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க தயக்கமாக இருக்கிறது!’ என்று யோசிக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் தாவீது ராஜாவைப் போல யெகோவாவிடம் உதவிக்காக கெஞ்சலாம். தாவீது இப்படிக் கெஞ்சினார்: “கடவுளே, என்னை ஆராய்ந்து பார்த்து, என் இதயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். என்னைச் சோதித்துப் பார்த்து, என் மனதிலுள்ள கவலைகளைப் புரிந்துகொள்ளுங்கள். எனக்குள் தவறான எண்ணம் ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள். முடிவில்லாத பாதையில் என்னை வழிநடத்துங்கள்.” (சங். 139:23, 24) அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதை நீங்கள் ஒரு குறிக்கோளாக வைத்து அதற்காக உழைத்தால், யெகோவாவை ‘ஊக்கமாகத் தேடுகிறீர்கள்’ என்று அர்த்தம். அப்படித் தேடுகிறவர்களை அவர் கட்டாயம் ஆசீர்வதிப்பார்.எபிரெயர் 11:6-ஐ வாசியுங்கள்.

யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்

16-17. சத்தியத்தில் வளர்க்கப்பட்ட இளம் பிள்ளைகளை யெகோவா எப்படி ஈர்க்கிறார்? (யோவான் 6:44)

16 இயேசுவின் சீஷர்கள் ஒவ்வொருவரையும் யெகோவாதான் ஈர்க்கிறார். (யோவான் 6:44-ஐ வாசியுங்கள்.) இது எவ்வளவு பெரிய விஷயம்! உங்களையும் யெகோவாதான் ஈர்த்திருக்கிறார். ஒவ்வொரு நபரிடமும் இருக்கிற நல்ல விஷயங்களை அவர் கவனிக்கிறார். ஒவ்வொருவரையும் “விசேஷ சொத்தாக” பார்க்கிறார்; உங்களையும்தான்!—உபா. 7:6.

17 சத்தியத்தில் வளர்க்கப்பட்ட இளம் பிள்ளையா நீங்கள்? அப்படியென்றால், ‘அப்பா அம்மா யெகோவாவை வணங்குவதால்தான் நானும் அவரை வணங்குகிறேன். யெகோவா என்னை ஈர்க்கவில்லை!’ என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். ஆனால், “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று பைபிள் சொல்கிறது. (யாக். 4:8; 1 நா. 28:9) அதனால், யெகோவாவிடம் நெருங்கிப் போக நீங்கள் முதல்படி எடுத்தால், அவரும் பதிலுக்கு உங்களிடம் நெருங்கி வருவார். கூட்டத்தில் ஒருவராக யெகோவா உங்களைப் பார்ப்பதில்லை; உங்களைத் தனிப்பட்ட விதமாக பார்க்கிறார். நீங்கள் சத்தியத்தில் வளர்க்கப்பட்டிருந்தாலும், உங்களை அவர் தன்பக்கமாக ஈர்த்திருக்கிறார். அதனால் அவரிடம் நெருங்கிப் போய்க்கொண்டே இருங்கள்; யாக்கோபு 4:8 சொல்வதுபோல், அவரும் உங்களிடம் நெருங்கி வருவார்.—2 தெசலோனிக்கேயர் 2:13-ஐ ஒப்பிடுங்கள்.

18. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்? (சங்கீதம் 40:8)

18 அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது நீங்கள் இயேசுவைப் போல் நடந்துகொள்கிறீர்கள். தன்னிடம் யெகோவா எதையெல்லாம் எதிர்பார்த்தாரோ அதையெல்லாம் இயேசு மனசார செய்தார். (சங்கீதம் 40:8-ஐ வாசியுங்கள்; எபி. 10:7) அடுத்த கட்டுரையில், ஞானஸ்நானத்துக்குப் பிறகு யெகோவாவுக்கு எப்படி உண்மையாக சேவை செய்யலாம் என்பதை கற்றுக்கொள்வீர்கள்.

உங்கள் பதில் என்ன?

  • யெகோவாவுக்கு அர்ப்பணிப்பது என்றால் என்ன அர்த்தம்?

  • அர்ப்பணிப்பதற்கு நன்றியுணர்வு எப்படி உங்களைத் தூண்டும்?

  • பெரிய பாவத்தை செய்துவிடாமல் இருக்க எது உங்களுக்கு உதவும்?

பாட்டு 38 அவர் உன்னைப் பலப்படுத்துவார்