Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 13

பாட்டு 127 நான் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும்

யெகோவா உங்களை ஏற்றுக்கொள்கிறார்

யெகோவா உங்களை ஏற்றுக்கொள்கிறார்

“நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்.”லூக். 3:22.

என்ன கற்றுக்கொள்வோம்?

“யெகோவா என்னை நினைத்து சந்தோஷப்படுவாரா?” என்ற சந்தேகத்தை நாம் எப்படி தூக்கியெறியலாம் என்று கற்றுக்கொள்வோம்.

1. யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்யும் சிலர் என்ன யோசிக்கலாம்?

 ஒரு தொகுதியாக யெகோவா தன்னுடைய மக்களை ஏற்றுக்கொள்கிறார். அவர்களை “பார்த்து சந்தோஷப்படுகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங். 149:4) ‘ஒரு தொகுதியாக யெகோவா தன்னுடைய மக்களை ஏற்றுக்கொள்கிறார் என்று எனக்குத் தெரியும், ஆனால் என்னைப் பார்த்து அவர் சந்தோஷப்படுவாரா? என்னை ஏற்றுக்கொள்வாரா?’ என்ற சந்தேகம் சிலசமயம் நமக்கு வரலாம். பைபிள் காலங்களில் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்த நிறைய பேருக்குக்கூட இப்படிப்பட்ட சந்தேகம் வந்திருக்கிறது.—1 சா. 1:6-10; யோபு 29:2, 4; சங். 51:11.

2. யெகோவா யாரை ஏற்றுக்கொள்கிறார்?

2 பாவ இயல்புள்ள மனிதர்களை யெகோவா ஏற்றுக்கொள்கிறார் என்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், யெகோவா நம்மை ஏற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசுமேல் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். (யோவா. 3:16) ஞானஸ்நானம் எடுக்கும்போது, நாம் செய்த பாவங்களிலிருந்து மனம் திருந்தி இருக்கிறோம் என்பதையும் யெகோவாவின் விருப்பத்தை செய்ய வாக்கு கொடுத்திருக்கிறோம் என்பதையும் வெளிப்படையாக காட்டுகிறோம். (அப். 2:38; 3:19) இப்படி, யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள நாம் முயற்சிகள் எடுக்கும்போது அவர் அதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார். அர்ப்பணித்த சமயத்தில் நாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சி செய்தால் யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வார், நம்மை அவருடைய நெருங்கிய நண்பராக பார்ப்பார்.—சங். 25:14.

3. இப்போது எதைப் பற்றி பார்ப்போம்?

3 ஆனால், கடவுள் தங்களை ஏற்றுக்கொள்வதில்லை என்று ஏன் சிலர் நினைக்கிறார்கள்? யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதை எப்படிக் காட்டுகிறார்? கடவுள் நம்மைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்தலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.

‘கடவுள் என்னை ஏற்றுக்கொள்வதில்லை’ என்று ஏன் சிலர் நினைக்கிறார்கள்?

4-5. ‘எதற்குமே லாயக்கில்லை’ என்று தோன்றினால் எதை நீங்கள் உறுதியாக நம்பலாம்?

4 “நான் எதற்குமே லாயக்கில்லை!” என்ற எண்ணத்தோடு நம்மில் நிறைய பேர் சின்ன வயதிலிருந்து போராடி இருக்கிறோம். (சங். 88:15) ஏட்றியன் என்ற ஒரு சகோதரர் இப்படி சொல்கிறார்: “நான் எதற்குமே லாயக்கில்லை என்று அடிக்கடி தோன்றும். புதிய உலகத்துக்குள் வருவதற்கு எனக்குத் தகுதி இல்லை என்று தோன்றும். அதனால், எங்களைக் குடும்பமாக அங்கே கூட்டிக்கொண்டு வந்துவிடுங்கள் என்று நான் சின்ன வயதில் ஜெபம் செய்திருக்கிறேன்.” டோனி என்ற இன்னொரு சகோதரரும் அப்படி யோசித்திருக்கிறார். அவருடைய அப்பா அம்மா யெகோவாவின் சாட்சிகள் கிடையாது. “என்னுடைய அப்பா அம்மா என்னை நேசிப்பதாகவோ என்னை நினைத்து பெருமைப்படுவதாகவோ சொன்னதே இல்லை. அதனால், அவர்களை சந்தோஷப்படுத்த என்னால் எதையுமே செய்ய முடியாது என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் இருந்தது” என்கிறார் டோனி.

5 இந்தமாதிரி எண்ணங்கள் வந்தால், நாம் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்: யெகோவாவே நம்மை அவர் பக்கமாக இழுத்திருக்கிறார். (யோவா. 6:44) நம்மிடம் இருக்கும் ஏதோவொரு நல்லதை அவர் பார்த்திருக்கிறார். ஒருவேளை, அதை நாம்கூட கவனித்திருக்க மாட்டோம்; ஆனால் அவர் கவனித்திருக்கிறார். நாம் உண்மையிலேயே எப்படிப்பட்டவர்கள் என்பது அவருக்குத் தெரியும். (1 சா. 16:7; 2 நா. 6:30) அவர் உங்களைப் பொக்கிஷமாக பார்ப்பதாக பைபிள் சொல்கிறது; இதை நீங்கள் தாராளமாக நம்பலாம்.—1 யோ. 3:19, 20.

6. முன்பு செய்த பாவங்களை நினைத்து அப்போஸ்தலன் பவுல் எப்படி உணர்ந்தார்?

6 சத்தியத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு செய்த சில விஷயங்கள் நம்மைப் போட்டு வாட்டி எடுக்கலாம்; குற்ற உணர்வால் நாம் தவிக்கலாம். (1 பே. 4:3) யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்கிற கிறிஸ்தவர்களும் பாவ இயல்பால் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுக்கும் அப்படித்தான் இருக்கிறதா? யெகோவா உங்களை மன்னிக்கவே மாட்டார் என்று தோன்றுகிறதா? உங்களுக்கு மட்டுமல்ல, யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்த நிறைய பேருக்கு இந்தமாதிரி எண்ணங்கள் இருந்திருக்கிறது. அப்போஸ்தலன் பவுலும்கூட தன்னிடம் இருந்த பாவ இயல்பை நினைத்து வேதனைப்பட்டார். (ரோ. 7:24) அவர் மனம் திருந்தி ஞானஸ்நானம் எடுத்திருந்தார்; இருந்தாலும், “அப்போஸ்தலர்கள் எல்லாரிலும் நான் அற்பமானவன்” என்றும் “பாவிகளில் பெரும் பாவி நான்தான்” என்றும் சொன்னார்.—1 கொ. 15:9; 1 தீ. 1:15.

7. நாம் எதை நம்பலாம்?

7 நாம் உண்மையிலேயே மனம் திருந்தினால் யெகோவா நம்மை மன்னிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார். (சங். 86:5) அதனால், நீங்கள் செய்த தவறை நினைத்து வருத்தப்பட்டு மனம் திருந்தியபோதே கடவுள் உங்களை மன்னித்துவிட்டார் என்று நீங்கள் நம்பலாம்.—கொலோ. 2:13.

8-9. ‘நிறைய செய்துகொண்டே இருந்தால்தான் யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார்’ என்ற எண்ணத்தை எப்படித் தவிர்க்கலாம்?

8 யெகோவாவின் சேவையில் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றுதான் நாம் எல்லாருமே ஆசைப்படுகிறோம். இருந்தாலும், யெகோவா நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் நிறைய நிறைய செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். அமாண்டா என்ற சகோதரி சொல்வதைப் பாருங்கள்: “யெகோவாவுக்கு நான் நிறைய செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படி செய்தால்தான் நான் என்னுடைய ‘பெஸ்டை’ அவருக்குக் கொடுக்கிறேன் என்று எனக்குத் தோன்றும். அதனால், என்னுடைய சக்திக்கு மிஞ்சி அவருக்கு சேவை செய்வேன். ஆனால் அப்படி செய்ய முடியாமல் போகும்போது என்னையே நினைத்து வருத்தப்படுவேன். அதேமாதிரி யெகோவாவும் என்னை நினைத்து வருத்தப்படுகிறார் என்று யோசிப்பேன்.”

9 இந்தமாதிரி எண்ணங்களை நாம் விட்டுவிட வேண்டும். அதற்கு எது உதவும்? யெகோவா உண்மையிலேயே எப்படிப்பட்ட கடவுள் என்று யோசிப்பது உதவும். அவர் கறாரானவர் கிடையாது; வளைந்துகொடுக்கும் கடவுள்! நம்மால் முடியாததை அவர் எதிர்பார்ப்பது கிடையாது. நம்மால் முடிந்ததை மனசார செய்யும்போது அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார். பைபிளில் இருக்கும் உதாரணங்களும் அதைத்தான் காட்டுகின்றன. பவுலைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர் நிறைய வருஷங்கள் ஊழியம் செய்தார்; ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்தார்; நிறைய சபைகளை உருவாக்கினார். இருந்தாலும், சில சூழ்நிலைகளில், அவராலும் நிறைய செய்ய முடியாமல் போனது. அப்போதெல்லாம் கடவுள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் போய்விட்டாரா? இல்லை! தன்னால் எவ்வளவு முடிந்ததோ அதை பவுல் தொடர்ந்து செய்தார்; யெகோவாவும் அவரை ஆசீர்வதித்தார். (அப். 28:30, 31) அதேபோல், நம்முடைய சூழ்நிலையும் சிலசமயத்தில் மாறலாம். நாம் எவ்வளவு செய்கிறோம் என்று யெகோவா பார்ப்பதில்லை, மனசார செய்கிறோமா என்றுதான் பார்க்கிறார். நம்மை ஏற்றுக்கொள்வதை யெகோவா எப்படியெல்லாம் காட்டுகிறார் என்று இப்போது பார்க்கலாம்.

நம்மை ஏற்றுக்கொள்வதை யெகோவா எப்படியெல்லாம் காட்டுகிறார்?

10. யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதை நாம் எப்படிப் புரிந்துகொள்ளலாம்? (யோவான் 16:27)

10 பைபிள் மூலமாக. யெகோவா யார்மேல் பாசம் வைத்திருக்கிறாரோ அவர்களை ஏற்றுக்கொள்வதை வெளிப்படையாக காட்டுகிறார். இயேசு பூமியில் இருந்தபோது யெகோவா அவர்மேல் அன்பு வைத்திருந்ததையும் அவரை ஏற்றுக்கொள்வதையும் இரண்டு சந்தர்ப்பங்களில் சொன்னார். (மத். 3:17; 17:5) யெகோவா உங்களைப் பற்றியும் இப்படி சொல்ல வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? இன்றைக்கு யெகோவா பரலோகத்திலிருந்து பேசுவது இல்லைதான்! ஆனால் தன்னுடைய வார்த்தையான பைபிள் மூலமாக பேசுகிறார். இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்ன வார்த்தைகள் சுவிசேஷ புத்தகங்களில் இருக்கின்றன. அதைப் படிக்கும்போது யெகோவாவின் குரலை நம்மால் “கேட்க” முடியும். (யோவான் 16:27-ஐ வாசியுங்கள்.) ஏனென்றால், இயேசு தன் அப்பாவை அப்படியே பின்பற்றினார். பாவ இயல்புள்ள தன் சீஷர்கள் தவறுகள் செய்தபோதுகூட இயேசு அவர்களை ஏற்றுக்கொண்டார். இதைப் பற்றியெல்லாம் படிக்கும்போது யெகோவாவும் நம்மை அப்படித்தான் ஏற்றுக்கொள்வார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.—யோவா. 15:9, 15.

யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதை நிறைய வழிகளில் காட்டுகிறார் (பாரா 10)


11. யெகோவா நம்மை ஏற்றுக்கொள்ளாததால்தான் நமக்குக் கஷ்டங்கள் வருகிறதா? விளக்குங்கள். (யாக்கோபு 1:12)

11 தன்னுடைய செயல்கள் மூலமாக. நமக்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் கொடுத்து யெகோவா நமக்கு உதவுகிறார். ஆனால், சிலசமயங்களில் நமக்குக் கஷ்டங்கள் வரும்போது அவர் அவற்றை அனுமதிக்கிறார், யோபுவுக்கு அனுமதித்த மாதிரி! (யோபு 1:8-11) கஷ்டங்கள் வருகிறது என்பதற்காக யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதில்லை என்று அர்த்தம் ஆகிவிடாது. நாம் அவர்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம்... அவரை எவ்வளவு நம்புகிறோம்... என்பதைக் காட்டுவதற்கு அந்தக் கஷ்டங்கள் வாய்ப்புகளைக் கொடுக்கின்றன. (யாக்கோபு 1:12-ஐ வாசியுங்கள்.) இந்தக் கஷ்டங்களை சகித்துக்கொள்ள அவர் நமக்கு உதவும்போது, நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பை உணர முடிகிறது.

12. டிமிட்டிரியின் அனுபவத்தில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

12 ஆசியாவில் இருக்கிற டிமிட்டிரி என்ற சகோதரரின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று பாருங்கள். அவருக்குத் திடீரென்று வேலை போய்விட்டது. நிறைய மாதங்கள் வேலை தேடியும் கிடைக்கவே இல்லை. ஆனாலும் யெகோவாமேல் நம்பிக்கை வைத்து அந்த சமயத்தில் நிறைய ஊழியம் செய்தார். ஆனால் நாட்கள் போய்க்கொண்டே இருந்தது, அவருக்கு வேலை கிடைக்கவே இல்லை. கொஞ்ச நாளில் அவருக்கு உடம்பு முடியாமல்போனது, படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். அப்போது, ஒரு கணவனாகவும் அப்பாவாகவும் தான் எதற்குமே லாயக்கில்லை என்ற எண்ணம் அவருக்கு வர ஆரம்பித்தது. யெகோவாவுக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டதோ என்றுகூட யோசிக்க ஆரம்பித்தார். பிறகு ஒருநாள், அவருடைய மகள் ஏசாயா 30:15-ல் இருக்கிற வார்த்தைகளை ஒரு பேப்பரில் பிரிண்ட் செய்து அவரிடம் கொடுத்தாள். “நீங்கள் பதட்டம் அடையாமல் என்மேல் நம்பிக்கை வைத்தால் பலமாக இருப்பீர்கள்” என்று அந்த வசனம் சொல்கிறது. அவருடைய மகள் அவரிடம், “அப்பா, எப்போதெல்லாம் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் இந்த வசனத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னாள். உண்மையிலேயே யெகோவா தன்னைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார் என்பதை டிமிட்டிரி அப்போது புரிந்துகொண்டார். ஏனென்றால், அதுவரை அவருடைய குடும்பத்துக்குத் தேவையான சாப்பாடு, துணிமணி, தங்குவதற்கு இடம் என எல்லாமே இருந்தது. “நான் செய்ய வேண்டியதெல்லாம் பதட்டப்படாமல் யெகோவாமேல் நம்பிக்கை வைக்க வேண்டும், அவ்வளவுதான்!” என்று சொல்கிறார் டிமிட்டிரி. இந்த சகோதரரை மாதிரியே நீங்களும் கஷ்டங்களோடு போராடிக்கொண்டு இருக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவுக்கு உங்கள்மேல் அன்பு இருக்கிறது என்பதையும் கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள அவர் கண்டிப்பாக உதவி செய்வார் என்பதையும் முழுமையாக நம்புங்கள்.

யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதை நிறைய வழிகளில் காட்டுகிறார் (பாரா 12) a


13. யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதை யார் மூலமாக காட்டுகிறார், எப்படி?

13 சகோதர சகோதரிகள் மூலமாக. நம்மேல் அன்பு வைத்திருப்பதையும் நம்மை ஏற்றுக்கொள்வதையும் சகோதர சகோதரிகள் மூலமாக யெகோவா காட்டுகிறார். சரியான நேரத்தில் நம்மைப் பலப்படுத்தும் விதத்தில் பேச அவர்களை அவர் தூண்டலாம். ஆசியாவில் இருக்கிற ஒரு சகோதரியின் அனுபவத்தைப் பாருங்கள். அவருக்குக் கஷ்டத்துக்குமேல் கஷ்டம் வந்தது. வேலை போய்விட்டது, உடம்பும் ரொம்ப முடியாமல் போனது. அவருடைய கணவரும் ஒரு பெரிய பாவத்தை செய்துவிட்டார்; அதனால், அவரால் தொடர்ந்து மூப்பராக சேவை செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் அந்த சகோதரிக்கு எப்படி இருந்தது? “என்னை சுற்றி ஏன் இதெல்லாம் நடக்கிறது என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான்தான் ஏதோ தப்பு செய்துவிட்டேனோ... யெகோவாவுக்கும் என்னைப் பிடிக்காமல் போய்விட்டதோ... என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்” என்கிறார். யெகோவாவுக்கு உண்மையிலேயே தன்மேல் அன்பு இருப்பதைக் காட்ட சொல்லி அவர் கெஞ்சிக் கேட்டார். யெகோவா அதை எப்படிக் காட்டினார்? “சபையில் இருக்கிற மூப்பர்கள் என்னிடம் பேசினார்கள். யெகோவா உண்மையிலேயே என்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை அவர்கள் எனக்குப் புரியவைத்தார்கள்.” ஆனால் கொஞ்ச நாளுக்குப் பிறகு, யெகோவா தன்மேல் அன்பு வைத்திருப்பதைக் காட்ட சொல்லி அவர் மறுபடியும் கெஞ்சினார். யெகோவா எப்படிப் பதில் கொடுத்தார்? “அன்றைக்கே எங்கள் சபையில் இருந்த சகோதர சகோதரிகள் எனக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்தார்கள். அவர்கள் எழுதியிருந்த ஆறுதலான வார்த்தைகளைப் படிக்கப் படிக்க யெகோவா என் ஜெபத்தைக் கேட்டிருக்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது” என்கிறார். இந்த அனுபவத்தில் இருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? சகோதர சகோதரிகளின் அன்பான வார்த்தைகள் மூலமாக யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதையும் நம்மேல் அன்பு வைத்திருப்பதையும் காட்டுகிறார்.—சங். 10:17.

யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதை நிறைய வழிகளில் காட்டுகிறார் (பாரா 13) b


14. யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதை வேறு எப்படிக் காட்டுகிறார்?

14 தேவையான சமயத்தில் சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி நமக்கு ஆலோசனை கொடுப்பதன் மூலமாகக்கூட யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதைக் காட்டுகிறார். முதல் நூற்றாண்டில், அப்போஸ்தலன் பவுலுக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுத்து 14 கடிதங்களை அவர் எழுத வைத்தார். அந்தக் கடிதங்களில் அன்பான, அதேசமயத்தில் உறுதியான ஆலோசனைகள் இருந்தன. ஏன் அந்த ஆலோசனைகளை யெகோவா கொடுத்தார்? ஏனென்றால், அவர் ஒரு அன்பான அப்பா. தான் “நேசிக்கிற” பிள்ளைகளை அவர் கண்டிக்கிறார். (நீதி. 3:11, 12) அதனால், பைபிளிலிருந்து யாராவது நமக்கு ஆலோசனை கொடுத்தால், யெகோவா நம்மேல் அன்பு வைத்திருப்பதால்தான் நமக்கு அந்த ஆலோசனை கிடைக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்; அவருக்கு நம்மைப் பிடிக்காததால் கிடையாது. (எபி. 12:6) யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதை வேறு எப்படியெல்லாம் காட்டுகிறார்?

யெகோவா நம்மை ஏற்றுக்கொள்கிறார் என்பதற்கு வேறுசில ஆதாரங்கள்

15. யெகோவா யாருக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுக்கிறார், அது ஏன் நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது?

15 யெகோவா யாரையெல்லாம் ஏற்றுக்கொள்கிறாரோ அவர்களுக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுக்கிறார். (மத். 12:18) நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘கடவுளுடைய சக்தி உண்டாக்குகிற குணங்களை நான் காட்டுகிறேனா?’ யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு இருந்ததைவிட இப்போது நான் மற்றவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்கிறேனா? கடவுளுடைய சக்தி உண்டாக்குகிற குணங்களை நாம் வாழ்க்கையில் எந்தளவுக்குக் காட்டுகிறோமோ அந்தளவுக்கு யெகோவாவின் அங்கீகாரம் நமக்கு இருக்கிறது என்பது தெளிவாக தெரியும்!—“ கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

யெகோவா உங்களை ஏற்றுக்கொள்வதை உங்களால் பார்க்க முடிகிறதா? (பாரா 15)


16. நல்ல செய்தியை சொல்ல யெகோவா யாரைப் பயன்படுத்துகிறார், அதை நினைக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? (1 தெசலோனிக்கேயர் 2:4)

16 யெகோவா யாரை ஏற்றுக்கொள்கிறாரோ அவர்களுக்கு நல்ல செய்தியை சொல்லும் பொறுப்பைக் கொடுக்கிறார். (1 தெசலோனிக்கேயர் 2:4-ஐ வாசியுங்கள்.) இந்த விஷயம் உண்மை என்று ஜோஸ்லின் என்ற ஒரு சகோதரியும் புரிந்துகொண்டார். ஒருநாள் ஜோஸ்லின் தூங்கி எழுந்தபோது மனதளவில் ரொம்ப சோர்ந்துபோயிருந்தார். “எனக்கு எதுவுமே செய்ய தோன்றவில்லை. உடம்பிலும் தெம்பே இல்லாத மாதிரி இருந்தது. ஆனால் நான் பயனியரிங் செய்துகொண்டிருந்தேன். அன்றைக்கு ஊழியத்துக்குப் போக வேண்டிய நாள். அதனால், ஜெபம் செய்துவிட்டு ஊழியத்துக்குப் போனேன்” என்கிறார் ஜோஸ்லின். அன்றைக்கு அவர் மேரி என்ற ஒரு பெண்ணை சந்தித்தார். அவர் பைபிள் படிக்க ஒத்துக்கொண்டார். கொஞ்ச மாதத்துக்குப் பிறகு ஒரு விஷயத்தை ஜோஸ்லினிடம் மேரி சொன்னார். கடவுளிடம் உதவி கேட்டு வேண்டிக்கொண்டிருந்த சமயத்தில்தான் ஜோஸ்லின் மேரியின் கதவைத் தட்டியிருக்கிறார். இதைக் கேட்டதும் ஜோஸ்லினுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. “நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன் என்று யெகோவாவே என்னிடம் சொல்வதுபோல் இருந்தது” என்று ஜோஸ்லின் சொல்கிறார். நாம் செய்யும் ஊழியத்துக்கு எப்போதுமே நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்ல முடியாதுதான்! இருந்தாலும், நல்ல செய்தியை சொல்வதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளை எடுக்கும்போது யெகோவா அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகிறார்.

யெகோவா உங்களை ஏற்றுக்கொள்வதை உங்களால் பார்க்க முடிகிறதா? (பாரா 16) c


17. மீட்புவிலையைப் பற்றி விக்டோரியா சொன்னதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? (சங்கீதம் 5:12)

17 யெகோவா யாரையெல்லாம் ஏற்றுக்கொள்கிறாரோ அவர்களுடைய பாவங்களை மீட்புவிலையின் அடிப்படையில் மன்னிக்கிறார். (1 தீ. 2:5, 6) ஆனால், நம் இதயம் நம்மை வேறுமாதிரி நினைக்க வைக்கலாம். மீட்பு விலையில் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும், யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதில்லை என்று அது சொல்லலாம். அந்தமாதிரி சமயங்களில், நாம் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்: நம்முடைய சொந்த உணர்வுகளை நம்மால் எல்லா சமயத்திலும் நம்ப முடியாது; ஆனால் யெகோவாவை நம்பலாம். மீட்புவிலையில் விசுவாசம் வைக்கிறவர்களை யெகோவா நீதிமான்களாகப் பார்க்கிறார்; அவர்களை ஆசீர்வதிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 5:12-ஐ வாசியுங்கள்; ரோ. 3:26) மீட்புவிலையால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி விக்டோரியா என்ற சகோதரி ஆழமாக யோசித்துப் பார்த்தார். அவர் சொல்கிறார்: “யெகோவா ரொம்ப காலமாக என்னிடம் பொறுமையாக இருந்திருக்கிறார். . . . நான்தான் அவரிடம், ‘என் மனதை தொடும் அளவுக்கு உங்கள் அன்பு அப்படி ஒன்றும் பெரிதில்லை. என்னை மீட்பதற்கு உங்கள் மகனின் பலி போதாது’ என்று சொல்லிக்கொண்டு இருந்தேன்.” மீட்புவிலையால் கிடைக்கும் ஆசீர்வாதங்களை ஆழமாக யோசித்து பார்த்ததால் சகோதரி விக்டோரியாவால் யெகோவாவின் அன்பை உணர முடிந்தது. நீங்களும் அதைப் பற்றி யோசித்தால் யெகோவா காட்டும் அன்பையும் அவருடைய அங்கீகாரத்தையும் உணர முடியும்.

யெகோவா உங்களை ஏற்றுக்கொள்வதை உங்களால் பார்க்க முடிகிறதா? (பாரா 17)


18. யெகோவாமேல் தொடர்ந்து அன்பு காட்டினால் எதில் நாம் உறுதியாக இருக்கலாம்?

18 இவ்வளவு நேரம் கற்றுக்கொண்ட விஷயங்களைக் கடைப்பிடிக்க முயற்சி செய்தாலும், சிலசமயங்களில் நாம் சோர்ந்துபோகலாம். யெகோவா உண்மையிலேயே என்னை ஏற்றுக்கொள்கிறாரா என்று யோசிக்க ஆரம்பித்துவிடலாம். ஒருவேளை, நீங்களும் அப்படி யோசித்தால் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: ‘தன்னிடம் தொடர்ந்து அன்பு காட்டுகிறவர்களை’ யெகோவா ஏற்றுக்கொள்கிறார். (யாக். 1:12) அதனால், யெகோவாவிடம் நெருங்கி போங்கள். அவர் உங்கள்மேல் அன்பு வைத்திருப்பதையும் உங்களை ஏற்றுக்கொள்வதையும் எப்படியெல்லாம் காட்டுகிறார் என்பதைக் கவனியுங்கள். யெகோவா “நம் ஒருவருக்கும் தூரமானவராக” இல்லை.—அப். 17:27.

உங்கள் பதில் என்ன?

  • யெகோவா தங்களை ஏற்றுக்கொள்வதில்லை என்று சிலர் ஏன் நினைக்கிறார்கள்?

  • யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதை எப்படியெல்லாம் காட்டுகிறார்?

  • யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வார் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்?

பாட்டு 88 வழிகாட்டுங்கள் என் தேவனே!

a பட விளக்கம்: நடித்துக் காட்டப்பட்டவை

b பட விளக்கம்: நடித்துக் காட்டப்பட்டவை

c பட விளக்கம்: நடித்துக் காட்டப்பட்டவை