Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

2012-ல், உக்ரைனிலிருக்கிற ஸ்ன்யா ஆப்ஷாவில் நடந்த மாவட்ட மாநாடு

அமோக அறுவடை!

அமோக அறுவடை!

கடைசிக் காலத்தில் தன்னுடைய சீஷர்கள் நிறைய அறுவடை செய்வார்கள் என்று இயேசு முன்கூட்டியே சொன்னார். (மத். 9:37; 24:14) அவருடைய வார்த்தைகள், உக்ரைனில் இருக்கிற ட்ரேன்ஸ்கார்ப்பத்தியா என்ற பகுதியில் எப்படி விசேஷமான விதத்தில் நிறைவேறியிருக்கிறது என்று பார்க்கலாம். அந்தப் பகுதிக்குப் பக்கத்தில் இருக்கிற மூன்று ஊர்களில் மட்டுமே 50 சபைகள் இருக்கின்றன; 5,400-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள்! * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அந்த மூன்று ஊர்களில் இருக்கிற மொத்த மக்கள் தொகையில், நான்கு பேருக்கு ஒருவர் யெகோவாவின் சாட்சி!

அந்தப் பிராந்தியங்கள் எப்படிப்பட்டவை? “இங்க இருக்குற ஜனங்க பைபிள மதிக்கிறாங்க, நியாயமா நடந்துக்குறது முக்கியம்னு நினைக்குறாங்க, நெருக்கமான குடும்பப் பிணைப்புகள் இங்க இருக்கு, ஒருத்தருக்கொருத்தர் உண்மையிலயே ஒத்தாசையா இருக்காங்க” என்று சொல்கிறார் உள்ளூரில் இருக்கிற வாசிலி என்ற சகோதரர். “நம்ம நம்பிக்கைகள அவங்க எல்லா சமயத்திலயும் ஏத்துக்குவாங்கனு சொல்ல முடியாது. ஆனா, பைபிள்ல இருந்து நாம எதையாவது காட்டுனா, கவனமா கேட்பாங்க” என்றும் அவர் சொல்கிறார்.

அவ்வளவு அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிற அந்தப் பகுதியில் பிரசங்கிக்கும்போது, நம் சகோதர சகோதரிகள் வழக்கத்துக்கு மாறான சவால்களைச் சந்திக்கிறார்கள். உதாரணத்துக்கு, அங்கிருக்கிற ஒரு சபையில் 134 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள்; ஆனால், அந்தப் பிராந்தியத்தில் வெறும் 50 வீடுகள்தான் இருக்கின்றன. இந்த வித்தியாசமான சூழ்நிலைக்குத் தகுந்தபடி பிரஸ்தாபிகள் எப்படித் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்?

நிறைய பிரஸ்தாபிகள், தேவை அதிகமுள்ள இடத்துக்கு மாறிப்போகிறார்கள். 90 வயதான யோனாஷ் என்ற சகோதரர், “பிரசங்கிக்குறதுக்கு எங்க பிராந்தியத்துல, ஒரு பிரஸ்தாபிக்கு ரெண்டு வீடுதான் இருக்கு” என்று சொல்கிறார். அதோடு, “இதுக்கு முன்னாடி, 160 கிலோ மீட்டர் தூரம் போய், நியமிக்கப்படாத ஒரு பிராந்தியத்துல ஊழியம் செஞ்சேன். அந்த ஜனங்ககிட்ட ஹங்கேரியன் மொழியிலதான் பேச வேண்டியிருந்துச்சு. ஆனா, இப்ப எனக்கு உடல்நிலை மோசமாயிட்டதுனால, என் கிராமத்துலயே நான் ஊழியம் செய்றேன்” என்றும் அவர் சொல்கிறார். மற்ற பிராந்தியங்களில் பிரசங்கிப்பதற்கு பிரஸ்தாபிகள் நிறைய தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. “ரயில பிடிக்கிறதுக்கு நான் காலையில 4 மணிக்கெல்லாம் எழுந்துடுவேன். சாயங்காலம் 6 மணி ரயில பிடிக்கிற வரைக்கும் ஊழியம் செய்வேன். ஒரு வாரத்துக்கு ரெண்டு மூணு தடவை இப்படி ஊழியம் செய்வேன்” என்று யோனாஷ் சொல்கிறார். தன்னுடைய முயற்சி பலன் தந்ததாக அவர் நினைக்கிறாரா? “அப்படி ஊழியம் செஞ்சது, எனக்கு சந்தோஷத்த கொடுத்துச்சு. ஒதுக்குப்புறமா இருந்த ஒரு குடும்பத்துக்கு சத்தியத்தை கத்துக்கொடுக்குற பாக்கியம் எனக்கு கிடைச்சுது” என்று அவர் சொல்கிறார்.

சபையில் இருக்கிற எல்லாராலும் அவ்வளவு தூரம் போய் பிரசங்கிக்க முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், பெரியவர்கள்முதல் சிறியவர்கள்வரை எல்லா பிரஸ்தாபிகளும், உள்ளூரில் முழுமையாகப் பிரசங்கிக்கக் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். இதன் பலனாக, அந்த மூன்று ஊர்களிலும் நடந்த நினைவுநாள் நிகழ்ச்சியில் (2017) கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை, மொத்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அந்த ஊர்களின் மொத்த மக்கள் தொகையில் பாதிப் பேர் வந்திருந்தார்கள்! நாம் எங்கே சேவை செய்தாலும், ‘எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்வதற்கு’ வாய்ப்புகள் இருக்கின்றன என்பதில் சந்தேகமே இல்லை.—1 கொ. 15:58.

^ பாரா. 2 அந்த மூன்று ஊர்களின் பெயர்கள்: ஹலபோக் போட்டிக், செரெட்ன்யெ வோட்யானெ, ஸ்ன்யா ஆப்ஷா.