Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 22

படிக்கும் விஷயத்தில் முன்னேறுங்கள்!

படிக்கும் விஷயத்தில் முன்னேறுங்கள்!

“மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.”—பிலி. 1:10.

பாட்டு 70 ‘அதிமுக்கியமானவற்றை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்’

இந்தக் கட்டுரையில்... *

1. படிப்பது சிலருக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது?

நாம் வாழும் இந்தக் காலத்தில், பிழைப்பை ஓட்டுவதற்காகச் சம்பாதிப்பது பெரும்பாடாக இருக்கிறது! நம் சகோதரர்களில் நிறைய பேர், தங்களுடைய குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கே அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஏராளமான சகோதரர்கள், வேலைக்குப் போய் வருவதற்கே ஒவ்வொரு நாளும் நிறைய நேரம் செலவு செய்கிறார்கள். வேறு சிலர், தங்களுடைய குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காக வேர்வை சிந்தி உழைக்கிறார்கள். இப்படிக் கடினமாக உழைக்கும் சகோதர சகோதரிகள், ஒவ்வொரு நாள் முடிவிலும் தங்களுடைய சக்தியை எல்லாம் இழந்துவிடுகிறார்கள். கடைசியில், படிப்பதற்கு அவர்களுக்குத் தெம்பே இருப்பதில்லை.

2. படிப்பதற்காக நீங்கள் எப்போது நேரத்தை ஒதுக்கியிருக்கிறீர்கள்?

2 இது ஒருபக்கம் இருந்தாலும், கடவுளுடைய வார்த்தையையும் நம்முடைய அமைப்பு வெளியிட்டிருக்கிற பிரசுரங்களையும் படிப்பதற்காக, அதுவும் ஆழமாகப் படிப்பதற்காக, நாம் கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும். யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தமும் நம்முடைய முடிவில்லாத வாழ்வும் அதைச் சார்ந்துதான் இருக்கிறது! (1 தீ. 4:15) சிலர், ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்து, அமைதியான அந்த நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு, ஆழமாகப் படிக்கிறார்கள். ராத்திரி நன்றாகத் தூங்கி எழுந்ததால், அவர்களால் தெளிவாக யோசிக்கவும் முடிகிறது. வேறுசிலர், ஆன்மீக உணவை எடுத்துக்கொள்வதற்காகவும் படித்ததை ஆழமாக யோசித்துப்பார்ப்பதற்காகவும், ஒவ்வொரு நாள் முடிவிலும் கிடைக்கிற அமைதியான சில நிமிடங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

3-4. நமக்குக் கிடைக்கும் தகவல்களின் அளவில் என்ன மாற்றம் செய்யப்பட்டது, ஏன்?

3 படிப்பதற்காக நேரத்தை ஒதுக்குவது ரொம்ப முக்கியம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். ஒருவேளை, ‘படிக்கிறதுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கே’ என்று நீங்கள் யோசிக்கலாம். அப்படியென்றால், எதைப் படிப்பது? ‘அமைப்பு வெளியிடுற எல்லாத்தையும் என்னால படிக்க முடியறது இல்லை’ என்றுகூட நீங்கள் சொல்லலாம். அமைப்பு வெளியிடுகிற எல்லா பிரசுரங்களைப் படிக்கவும், எல்லா வீடியோக்களைப் பார்க்கவும் சில சகோதரர்களால் முடிகிறது. வேறு சில சகோதரர்களால் அப்படிச் செய்ய முடிவதில்லை. இதைப் பற்றி ஆளும் குழுவுக்கு நன்றாகவே தெரியும்! அதனால்தான், அச்சு வடிவத்திலும் டிஜிட்டல் வடிவத்திலும் வருகிற தகவல்களின் அளவைக் குறைக்கும்படி சமீபத்தில் வழிநடத்துதல் கொடுத்திருக்கிறது.

4 உதாரணத்துக்கு, யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் இப்போது வெளிவருவதில்லை. ஏனென்றால், jw.org® வெப்சைட்டிலும் மாதாமாதம் வெளிவருகிற JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியிலும் உற்சாகத்தைத் தருகிற ஏராளமான அனுபவங்கள் வருகின்றன. காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் பொது இதழ், வருஷத்துக்கு மூன்று தடவைகள்தான் இப்போது வெளியிடப்படுகின்றன. யெகோவாவின் வணக்கத்தோடு சம்பந்தப்படாத மற்ற வேலைகளுக்கு நேரம் வேண்டும் என்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்படவில்லை. ‘மிக முக்கியமான காரியங்களுக்கு’ நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன. (பிலி. 1:10) இப்போது, எதற்கு முன்னுரிமை தருவது என்பதைப் பற்றிப் பார்க்கலாம். அதோடு, தனிப்பட்ட படிப்பின் மூலம் அதிக பிரயோஜனமடைய நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

எதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்று முடிவெடுங்கள்

5-6. வேறு எந்த பிரசுரங்களையும் நாம் ரொம்பவே கவனமாகப் படிக்க வேண்டும்?

5 நாம் எதற்கு முன்னுரிமை தர வேண்டும்? கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்காக ஒவ்வொரு நாளும் கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும். படித்த விஷயங்களை ஆழமாக யோசிக்கவும் கூடுதலான ஆராய்ச்சி செய்யவும் அதிக நேரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சபையின் வாராந்தர பைபிள் வாசிப்புப் பகுதி குறைக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த வாரத்துக்கான வாசிப்புப் பகுதியை வெறுமனே படித்து முடிக்க வேண்டும் என்பது நம்முடைய குறிக்கோளாக இருக்கக் கூடாது. மனதைத் தொடும் விதத்திலும் யெகோவாவிடம் நெருங்கிப் போக உதவும் விதத்திலும் படிக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.—சங். 19:14.

6 நாம் வேறு எதையும் ரொம்பவே கவனமாகப் படிக்க வேண்டும்? காவற்கோபுர படிப்புக்காகவும் சபை பைபிள் படிப்புக்காகவும் வார நாட்களில் நடக்கிற கூட்டத்தில் சிந்திக்கப்படும் மற்ற பகுதிகளுக்காகவும் நாம் தயாரிக்க வேண்டும். அதோடு, காவற்கோபுர படிப்பு இதழையும் பொது இதழையும் விழித்தெழு! பத்திரிகையையும் நாம் தவறாமல் படிக்க வேண்டும்.

7. நம்முடைய வெப்சைட் மற்றும் பிராட்காஸ்டிங்கில் வெளிவருகிற எல்லா விஷயங்களையும் பார்க்கவோ படிக்கவோ முடியவில்லை என்றால், சோர்ந்துபோக வேண்டுமா? விளக்குங்கள்.

7 ‘அப்படினா jw.org வெப்சைட்லயும் பிராட்காஸ்டிங்லயும் ஏகப்பட்ட கட்டுரைகளும் வீடியோக்களும் இருக்கே!’ என்று நீங்கள் நினைக்கலாம். இந்த உதாரணத்தை யோசித்துப்பாருங்கள். ஒரு மார்க்கெட்டில் நிறைய பொருள்கள் இருக்கின்றன. அங்கே விற்கப்படும் எல்லா பொருள்களையும் வாடிக்கையாளர்களால் வாங்க முடியாது. அதனால், எதை வாங்க வேண்டும் என்று அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அதேபோல், எலக்ட்ரானிக் வடிவில் வரும் எல்லா தகவல்களையும் உங்களால் படிக்க முடியவில்லை என்றால், சோர்ந்து போய்விடாதீர்கள். உங்களால் எந்தளவு முடியுமோ அந்தளவு பாருங்கள், படியுங்கள். படிப்பதில் என்ன அடங்கியிருக்கிறது என்றும், அதிலிருந்து நாம் எப்படி அதிக நன்மையடையலாம் என்றும் இப்போது பார்க்கலாம்.

படிப்பதும் முக்கியமான ஒரு வேலைதான்!

8. காவற்கோபுர படிப்புக்காகத் தயாரிக்கும்போது நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம், அப்படிச் செய்வதால் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

8 படிக்கிற தகவலின் மீது முழு கவனம் செலுத்துங்கள். அப்போதுதான், முக்கியமான விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். படிப்பது என்பது, மேலோட்டமாக வாசித்துக்கொண்டே போவதை அல்லது பதில்களை அடிக்கோடிடுவதை மட்டுமே குறிப்பது கிடையாது. காவற்கோபுர படிப்புக்கு நீங்கள் எப்படித் தயாரிக்கலாம்? முதலில், ஒவ்வொரு கட்டுரையின் ஆரம்பத்திலும் இருக்கிற “இந்தக் கட்டுரையில்...” என்ற பகுதியைப் பாருங்கள். அடுத்து, கட்டுரையின் தலைப்பையும் உபதலைப்புகளையும் மறுபார்வை கேள்விகளையும் பாருங்கள். பிறகு, கட்டுரையை நிதானமாகவும் கவனமாகவும் வாசியுங்கள். பாராவில் என்ன தகவல் இருக்கிறது என்பதைப் பொதுவாக அந்தந்த பாராவின் முதல் வாக்கியத்திலிருந்தே தெரிந்துகொள்ளலாம்; அதனால், அந்த வாக்கியத்தைக் கவனமாகப் பாருங்கள். கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டே போகும்போது, ஒவ்வொரு பாராவும் அந்தந்த உபதலைப்போடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று யோசியுங்கள். அதோடு, பாராவில் இருக்கிற விஷயங்கள் அந்தக் கட்டுரையின் மையப்பொருளோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்றும் யோசியுங்கள். உங்களுக்கு அதுவரை தெரியாத வார்த்தைகளோ குறிப்புகளோ இருந்தால், அவற்றையும் குறித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பற்றிப் பிறகு ஆராய்ச்சி செய்து பார்ப்பதற்கு அது உதவியாக இருக்கும்.

9. (அ) காவற்கோபுர படிப்புக்காகத் தயாரிக்கும்போது வசனங்களுக்கு ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும், அதை எப்படிச் செய்யலாம்? (ஆ) யோசுவா 1:8 சொல்வதுபோல், வசனங்களை வாசிப்பதோடு வேறு எதையும் செய்ய வேண்டும்?

9 சபையில் நடத்தப்படும் காவற்கோபுர படிப்பு, பைபிளை நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. அதனால், கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களுக்குக் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக, வாசியுங்கள் என்று போடப்பட்டிருக்கிற வசனங்களுக்கு அதிக கவனம் செலுத்துங்கள். வசனத்தில் இருக்கிற வார்த்தைகள் அல்லது சில வாக்கியங்கள், பாராவில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலோடு எப்படி ஒத்துப்போகிறது என்று பார்ப்பதற்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். அதோடு, வசனங்களை ஆழமாக யோசிப்பதற்கும், அவற்றில் சொல்லப்பட்டிருப்பதைப் போல் எப்படி நடந்துகொள்ளலாம் என்று யோசிப்பதற்கும் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.யோசுவா 1:8-ஐ வாசியுங்கள்.

பெற்றோர்களே, எப்படிப் படிக்க வேண்டும் என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் (பாரா 10) *

10. எபிரெயர் 5:14-ன்படி, படிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் பிள்ளைகளுக்குச் சொல்லித்தருவதற்கு குடும்ப வழிபாட்டில் நேரம் ஒதுக்குவது ஏன் முக்கியம்?

10 குடும்ப வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் பிள்ளைகள் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவது நியாயம்தான். குடும்ப வழிபாட்டுக்காக பெற்றோர்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பதும் உண்மைதான். அதற்காக, ஒவ்வொரு வாரமும் விசேஷமான, சுவாரஸ்யமான ப்ராஜக்ட்டுகளை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுடைய குடும்ப வழிபாட்டில், மாதாமாதம் வருகிற பிராட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை நீங்கள் பார்க்கலாம். அல்லது, நோவா கட்டிய பேழையின் மாதிரியைப் போன்ற சில விசேஷ ப்ராஜக்ட்டுகளை அவ்வப்போது செய்யலாம். இவற்றையெல்லாம் செய்தாலும், எப்படிப் படிப்பது என்று பிள்ளைகளுக்குச் சொல்லித்தருவதற்கு குடும்ப வழிபாட்டில் நேரம் ஒதுக்குவது முக்கியம். உதாரணத்துக்கு, கூட்டங்களுக்குத் தயாரிப்பதற்கு அவர்கள் கற்றுக்கொள்வது அவசியம். அதேபோல், பள்ளியில் வருகிற பிரச்சினைகளை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய கற்றுக்கொள்வதும் அவசியம். (எபிரெயர் 5:14-ஐ வாசியுங்கள்.) பைபிளிலிருக்கும் விஷயங்களைப் படிப்பதற்குப் பிள்ளைகள் தங்கள் வீட்டிலேயே கற்றுக்கொள்ளும்போது, கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கவனம் செலுத்துவது அவர்களுக்குச் சுலபமாக இருக்கும். ஏனென்றால், சபைக் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் எல்லா சமயத்திலும் வீடியோக்கள் காட்டப்படுவதில்லை. ஆனால் எவ்வளவு நேரம் படிப்பது? பிள்ளைகளின் வயதையும் சுபாவத்தையும் பொறுத்து அதை முடிவு செய்யலாம்.

11. நம்மோடு சேர்ந்து பைபிள் படிப்பவர்கள், தாங்களாகவே அர்த்தமுள்ள விதத்தில் படிக்க நாம் ஏன் சொல்லித்தர வேண்டும்?

11 எப்படிப் படிக்க வேண்டும் என்பதைப் பற்றி நம்மோடு சேர்ந்து பைபிள் படிப்பவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். பைபிளைப் படிக்க ஆரம்பித்த புதிதில், பைபிள் படிப்புக்கும் சபைக் கூட்டங்களுக்கும் அவர்கள் பதில்களைக் குறித்து வைத்திருப்பதைப் பார்க்கும்போது நாம் ரொம்பவே சந்தோஷப்படுவோம். ஆனால், ஆராய்ச்சி செய்யவும் அர்த்தமுள்ள விதத்தில் அவர்களாகவே படிக்கவும் நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, பிரச்சினைகளை எப்படிச் சமாளிப்பது என்று சபையில் இருப்பவர்களிடம் கேட்பதற்குப் பதிலாக, அவர்களாகவே பிரசுரங்களிலிருந்து ஆராய்ச்சி செய்து பார்ப்பார்கள்.

குறிக்கோளோடு படியுங்கள்

12. படிக்கும்போது என்னென்ன குறிக்கோள்களை மனதில் வைத்துக்கொள்ளலாம்?

12 ‘படிக்கிறத நினைச்சாலே சலிப்பா இருக்கு. அப்படி இருக்குறப்போ, என்னால எப்படி நல்லா அனுபவிச்சு படிக்க முடியும்?’ என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியென்றால், ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள்! உங்களால் நிச்சயம் அனுபவித்து படிக்க முடியும்! எப்படி? முதலில், கொஞ்ச நேரம் படியுங்கள். பிறகு, படிக்கிற நேரத்தை அதிகமாக்குங்கள். ஒரு குறிக்கோளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். யெகோவாவிடம் தொடர்ந்து நெருங்கிப் போவதுதான் நம்முடைய மிக முக்கியமான குறிக்கோள்! ஆனால், தற்போதைய குறிக்கோள் என்ன? ஒருவேளை, மற்றவர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் கண்டுபிடிப்பது நம்முடைய குறிக்கோளாக இருக்கலாம். அல்லது, ஏதோ ஒரு பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சி செய்வது நம்முடைய குறிக்கோளாக இருக்கலாம்.

13. (அ) தங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றித் தைரியமாகப் பள்ளியில் பேச இளைஞர்கள் என்ன செய்யலாம்? விளக்குங்கள். (ஆ) கொலோசெயர் 4:6-லிருக்கிற அறிவுரையை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்?

13 நீங்கள் பள்ளியில் படிக்கும் மாணவரா? தேசிய கீதம் பாடாததால் உங்களோடு படிக்கும் மாணவர்கள் உங்களுக்குத் தொல்லை கொடுக்கிறார்களா? இந்த விஷயத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால், அப்படிச் சொல்லுமளவுக்கு உங்களுக்குத் திறமை இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியென்றால், அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து பார்ப்பதற்கு இதுதான் சரியான சமயம்! இப்போது, இரண்டு குறிக்கோள்களை மனதில் வைத்துக்கொள்ளலாம். (1) இந்த உலகத்திலிருந்து பிரிந்திருக்க வேண்டும் என்ற தீர்மானத்தைப் பலப்படுத்த வேண்டும். (2) பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள்தான் சரி என்று மற்றவர்களை நம்ப வைக்குமளவுக்கு பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். (யோவா. 17:16; 1 பே. 3:15) முதலில், ‘தேசிய கீதத்த கட்டாயம் பாடணும்னு சொல்றதுக்கு அவங்க என்னென்ன காரணங்கள சொல்றாங்க?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பிறகு, நம்முடைய பிரசுரங்களிலிருந்து கவனமாக ஆராய்ச்சி செய்யுங்கள். உங்கள் நம்பிக்கைகள் சரியானவை என்பதை நிரூபிப்பது, நீங்கள் நினைக்குமளவுக்குக் கஷ்டம் கிடையாது. தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதால்தான் நிறைய பேர் அதைப் பாடுகிறார்கள். நீங்கள் ஓரிரண்டு குறிப்புகளைச் சொன்னால்கூட போதும், உண்மை மனதோடு கேட்பவர்களுக்குப் பதில் கிடைத்துவிடும்.கொலோசெயர் 4:6-ஐ வாசியுங்கள்.

கற்றுக்கொள்ளும் ஆசையை அதிகமாக்குங்கள்

14-16. (அ) அவ்வளவாகப் பரிச்சயமில்லாத ஒரு பைபிள் புத்தகத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? (ஆ) பதினாறாவது பாராவின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கிற வசனங்கள், ஆமோஸ் தீர்க்கதரிசன புத்தகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள எப்படி உதவுகின்றன? விளக்குங்கள். (“ பைபிள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுங்கள்!” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

14 பைபிளிலிருக்கிற சிறிய தீர்க்கதரிசன புத்தகங்களில் ஏதோவொன்றை அடுத்த வாரம் நடக்கப்போகிற கூட்டத்தில் சிந்திக்கப்போவதாக வைத்துக்கொள்வோம். ஆனால், அந்தப் புத்தகத்தைப் பற்றி உங்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை என்றால் என்ன செய்யலாம்? முதலில், அந்தப் புத்தகத்தில் என்னென்ன தகவல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்ற விஷயத்தில் உங்கள் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்படி வளர்த்துக்கொள்வதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

15 முதலில் உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த புத்தகத்தோட எழுத்தாளர பத்தி எனக்கு என்னென்ன விஷயங்கள் தெரியும்? அவரு எந்த ஊரை சேர்ந்தவரு, அவரு என்ன வேலை செஞ்சிட்டிருந்தாரு?’ அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளும்போது, அவர் ஏன் சில வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார் அல்லது ஏன் சில உதாரணங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதற்கான காரணத்தை உங்களால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் எந்த பைபிள் புத்தகத்தைப் படிக்கிறீர்களோ, அதன் எழுத்தாளரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு உதவுகிற சில சொற்றொடர்கள் அதில் இருக்கின்றனவா என்று பாருங்கள்.

16 பிறகு, அந்தப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது என்று பாருங்கள். பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பில் இருக்கிற “பைபிள் புத்தகங்களின் பட்டியல்” என்ற பகுதியில் இதை சுலபமாகப் பார்க்கலாம். அதோடு, இணைப்பு A6-லிருக்கிற தீர்க்கதரிசிகள் மற்றும் ராஜாக்கள் என்ற பட்டியலைப் பாருங்கள். நீங்கள் ஒரு தீர்க்கதரிசன புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தால் என்ன செய்யலாம்? அந்தப் புத்தகம் எழுதப்பட்ட சமயத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். மக்களிடமிருந்த என்ன தவறான குணங்களை அல்லது பழக்கங்களை மாற்றிக்கொள்ள அந்தத் தீர்க்கதரிசி உதவ வேண்டியிருந்தது? அவரோடு சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் யார்? முழு தகவலையும் தெரிந்துகொள்வதற்கு, பைபிளின் மற்ற புத்தகங்களையும் பார்க்க வேண்டியிருக்கலாம். உதாரணத்துக்கு, ஆமோஸ் தீர்க்கதரிசி காலத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது என்ன செய்யலாம்? ஆமோஸ் 1:1-ல் கொடுக்கப்பட்டிருக்கிற சில இணைவசனங்களைப் பார்க்கலாம். அதாவது, 2 ராஜாக்கள் புத்தகத்திலிருந்தும் 2 நாளாகமம் புத்தகத்திலிருந்தும் கொடுக்கப்பட்டிருக்கிற இணைவசனங்களைப் பார்க்கலாம். அதோடு, ஆமோஸ் தீர்க்கதரிசியோடு சமகாலத்தில் வாழ்ந்த ஓசியா தீர்க்கதரிசியின் புத்தகத்தையும் பார்க்கலாம். இப்படியெல்லாம் செய்யும்போது, எப்படிப்பட்ட ஒரு காலத்தில் ஆமோஸ் வாழ்ந்தார் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.—2 ரா. 14:25-28; 2 நா. 26:1-15; ஓசி. 1:1-11; ஆமோ. 1:1.

சின்னச் சின்ன குறிப்புகளுக்குக்கூட கவனம் செலுத்துங்கள்

17-18. தனிப்பட்ட படிப்பின்போது சின்னச் சின்ன குறிப்புகளைக்கூட விட்டுவிடக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ள, இந்தப் பாராக்களில் கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களை அல்லது உங்கள் மனதில் இருக்கும் உதாரணங்களைச் சொல்லுங்கள்.

17 நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு பைபிளைப் படிப்பது ரொம்ப நல்லது. உதாரணத்துக்கு, சகரியா புத்தகத்தின் 12-வது அதிகாரத்தை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். மேசியாவின் மரணத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம் இந்த அதிகாரத்தில் இருக்கிறது. (சக. 12:10) மேசியாவின் மரணத்தை நினைத்து ‘நாத்தானின் குடும்பத்தார்’ ஒப்பாரி வைப்பார்கள் என்று 12-வது வசனம் சொல்கிறது! வாசிப்பதை நிறுத்திவிட்டு, ‘நாத்தான் குடும்பத்துக்கும் மேசியாவுக்கும் என்ன சம்பந்தம்? இத பத்தி எப்படி தெரிஞ்சிக்குறது?’ என்று யோசிக்கிறீர்கள். இப்போது துப்பறியும் வேலையை ஆரம்பிக்கிறீர்கள்! இணைவசனங்களாகக் கொடுக்கப்பட்டிருக்கும் 2 சாமுவேல் 5:13, 14-ஐ எடுத்துப்பார்க்கிறீர்கள். தாவீது ராஜாவின் மகன்களில் ஒருவர்தான் நாத்தான் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கிறீர்கள். அடுத்து, 2 சாமுவேல் 5:14-ல் கொடுக்கப்பட்டிருக்கும் இணைவசனங்களான லூக்கா 3:23, 31-ஐ எடுத்துப்பார்க்கிறீர்கள். இயேசுவின் தாயான மரியாள், நாத்தானின் வம்சத்தில் வந்தவர் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். (ஆகஸ்ட் 2017 காவற்கோபுரத்தில் பக்கம் 32, பாரா 4-ஐப் பாருங்கள்.) இப்போது, உங்கள் ஆர்வம் இன்னும் அதிகமாகிறது! தாவீதின் வம்சத்தில்தான் இயேசு வருவார் என்று சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் உங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. (மத். 22:42) ஆனால், தாவீதுக்கு 20-க்கும் அதிகமான மகன்கள் இருந்தார்கள். அப்படியிருந்தும், குறிப்பாக நாத்தானின் குடும்பத்தார் இயேசுவின் மரணத்தை நினைத்து ஒப்பாரி வைப்பார்கள் என்று சகரியா சொன்னது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது!

18 இன்னொரு உதாரணத்தைக் கவனிக்கலாம். லூக்கா புத்தகத்தின் முதல் அதிகாரத்தில், காபிரியேல் தூதர் மரியாளைச் சந்தித்ததைப் பற்றியும் அவளுக்கு ஒரு மகன் பிறப்பார் என்று சொன்னதைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம். “அவர் உயர்ந்தவராக இருப்பார்; உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்; அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா அவருக்குக் கொடுப்பார். அவர் ராஜாவாக யாக்கோபுடைய வம்சத்தை என்றென்றும் ஆட்சி செய்வார்” என்று அந்த வசனம் சொல்கிறது. (லூக். 1:32, 33) இயேசு, “உன்னதமான கடவுளின் மகன்” என்று காபிரியேல் தூதர் சொன்ன முதல் விஷயத்தில் மட்டுமே ஒருவேளை நாம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், இயேசு ‘ராஜாவாக ஆட்சி செய்வார்’ என்றும் காபிரியேல் தீர்க்கதரிசனம் சொன்னதைக் கவனியுங்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டபோது மரியாள் என்ன நினைத்திருக்கலாம் என்று நாம் யோசிக்கலாம். ‘ஏரோது ராஜாவுக்குப் பதிலா இயேசு ராஜாவா ஆயிடுவாரு’ என்றோ, ‘ஏரோதுவோட வம்சத்துல வர்ற ஒருத்தருக்கு பதிலா இயேசு இஸ்ரவேலை ஆட்சி செய்யப்போறாரு’ என்றோ மரியாள் நினைத்திருப்பாளா? அப்படி இயேசு ராஜாவாக ஆகிவிட்டால், மரியாளுக்கு ராஜமாதா அந்தஸ்து கிடைத்துவிடும்! அவளுடைய குடும்பத்தார் எல்லாருக்கும் அரண்மனை வாழ்க்கை கிடைக்கும்! ஆனால், இது சம்பந்தமாக அவள் எந்தவொரு கேள்வியையும் காபிரியேலிடம் கேட்டதாக பைபிள் சொல்வதில்லை. இயேசுவின் சீஷர்களில் இரண்டு பேர் கேட்டதுபோல, அவர் ராஜாவாக ஆகும்போது தனக்கும் மதிப்புள்ள ஒரு ஸ்தானம் வேண்டும் என்று மரியாள் கேட்டதாக பைபிளில் எங்கேயும் சொல்லப்படவில்லை. (மத். 20:20-23) இந்தக் குறிப்புகளிலிருந்து மரியாள் மனத்தாழ்மையின் மணிமகுடமாக இருந்தாள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

19-20. யாக்கோபு 1:22-25 மற்றும் 4:8 சொல்வதுபோல், தனிப்பட்ட படிப்பின்போது நாம் மனதில் வைத்திருக்க வேண்டிய குறிக்கோள்கள் என்ன?

19 பைபிளையும் அமைப்பு வெளியிடுகிற பிரசுரங்களையும் படிப்பதற்கான முக்கியக் குறிக்கோளே யெகோவாவிடம் நெருங்கிப் போக வேண்டும் என்பதுதான்! இதை நாம் மறந்துவிடக் கூடாது. அதோடு, நம் ‘தோற்றம் எப்படி இருக்கிறது’ என்பதைத் தெளிவாகப் பார்ப்பதற்கு, அதாவது நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைத் தெளிவாகப் பார்ப்பதற்கு, நாம் விரும்புகிறோம். அதுமட்டுமல்ல, கடவுளைப் பிரியப்படுத்த என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வதற்கும் நாம் விரும்புகிறோம். (யாக்கோபு 1:22-25; 4:8-ஐ வாசியுங்கள்.) ஒவ்வொரு முறை தனிப்பட்ட படிப்பை ஆரம்பிப்பதற்கு முன்பும் யெகோவாவின் சக்திக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும். அந்தப் படிப்பிலிருந்து முழு நன்மையடைய உதவும்படியும், எப்படிப்பட்ட மாற்றங்களை நாம் செய்ய வேண்டும் என்பதைப் புரியவைக்கும்படியும் யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்க வேண்டும்.

20 “அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான். அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான். . . . அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்” என்று சங்கீதக்காரர் சொல்லியிருக்கிற உண்மை ஊழியரைப் போல் நாமும் இருக்கலாம்.—சங். 1:2, 3.

பாட்டு 69 உம் வழிகளை எனக்குப் போதிப்பீரே!

^ பாரா. 5 பார்ப்பதற்கும் வாசிப்பதற்கும் ஆழமாகப் படிப்பதற்கும் நிறைய விஷயங்களை யெகோவா தாராளமாகக் கொடுத்திருக்கிறார். எதைப் படிப்பது என்று முடிவு செய்ய இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும். அதோடு, ஒவ்வொரு தடவை படிக்கும்போதும், அதிலிருந்து எப்படி அதிக பிரயோஜனமடையலாம் என்பதைத் தெரிந்துகொள்ளவும் உதவும்.

^ பாரா. 61 படங்களின் விளக்கம்: காவற்கோபுர படிப்புக்காக எப்படித் தயாரிக்கலாம் என்று ஓர் அப்பா அம்மா தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தருகிறார்கள்.

^ பாரா. 63 படங்களின் விளக்கம்: பைபிள் எழுத்தாளரான ஆமோசைப் பற்றி ஒரு சகோதரர் ஆராய்ச்சி செய்கிறார். அந்த பைபிள் பதிவை வாசித்து, அதை ஆழமாக யோசிக்கும்போது, தன்னுடைய மனக்கண்ணில் அவர் பார்க்கும் காட்சிகள் பின்னால் காட்டப்பட்டிருக்கின்றன.