Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடைசி நாட்களில் எதிரும் புதிருமான இரண்டு ராஜாக்கள்

கடைசி நாட்களில் எதிரும் புதிருமான இரண்டு ராஜாக்கள்

இந்தப் பட்டியலில் இருக்கும் தீர்க்கதரிசனங்கள் ஒரே காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை விவரிக்கின்றன. நாம் ‘முடிவு காலத்தில்’ இருக்கிறோம் என்பதை இவை காட்டுகின்றன.—தானி. 12:4.

  • வசனங்கள்: வெளி. 11:7; 12:13, 17; 13:1-8, 12

    தீர்க்கதரிசனம்: பல நூற்றாண்டுகளாக “மூர்க்க மிருகம்” பூமியை வலம் வருகிறது. முடிவு காலத்தில், அதனுடைய ஏழாவது தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. பிறகு, அது குணமானது. “பூமியிலிருந்த எல்லாரும்” அந்த மிருகத்தின் பின்னால் போனார்கள். அதைப் பயன்படுத்தி, “மீதியாக இருக்கிறவர்களோடு” சாத்தான் ‘போர் செய்தான்.’

    நிறைவேற்றம்: பெரிய வெள்ளத்துக்குப் பிறகு, யெகோவாவை எதிர்க்கும் அரசாங்கங்கள் தோன்றின. 3000 வருஷங்களுக்குப் பிறகு, அதாவது முதல் உலகப் போரின்போது, பிரிட்டன் ரொம்பவே பலவீனமடைந்தது. அமெரிக்காவுடன் கூட்டுச்சேர்ந்ததும் அது பலமானது. குறிப்பாக முடிவு காலத்தில், சாத்தான் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் அரசாங்கங்களைப் பயன்படுத்தி கடவுளுடைய மக்களைத் துன்புறுத்துகிறான்.

  • வசனங்கள்: தானி. 11:25-45

    தீர்க்கதரிசனம்: முடிவு காலத்தில், வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் எதிரும் புதிருமாக இருப்பார்கள்.

    நிறைவேற்றம்: ஜெர்மனியும் ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசும் போட்டிபோட்டன. 1945-ல் சோவியத் யூனியனும் அதன் கூட்டணிகளும் வடதிசை ராஜாவாக உருவெடுத்தன. 1991-ல் சோவியத் யூனியன் சிதைந்தது. காலப்போக்கில், ரஷ்யாவும் அதன் கூட்டணிகளும் வடதிசை ராஜாவாக உருவெடுத்தன.

  • வசனங்கள்: ஏசா. 61:1; மல். 3:1; லூக். 4:18

    தீர்க்கதரிசனம்: மேசியானிய அரசாங்கம் நிறுவப்படுவதற்கு முன்பாக, ‘வழியைத் தயார்படுத்துவதற்கு’ தன்னுடைய “தூதுவரை” யெகோவா அனுப்பினார். இந்த தொகுதியைச் சேர்ந்தவர்கள், “தாழ்மையானவர்களுக்கு நல்ல செய்தி சொல்ல” ஆரம்பித்தார்கள்.

    நிறைவேற்றம்: 1870-லிருந்து, சி. டி. ரஸலும் அவருடைய நண்பர்களும் பைபிளில் இருக்கிற உண்மைகளை விளக்குவதற்குக் கடினமாக உழைத்தார்கள். பிரசங்கிக்கும் பொறுப்பு கடவுளுடைய ஊழியர்களுக்கு இருப்பதை 1881-ல் புரிந்துகொண்டார்கள். “1,000 பிரசங்கிப்பாளர்கள் தேவை,” “பிரசங்கிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம்” போன்ற கட்டுரைகளை வெளியிட்டார்கள்.

  • வசனங்கள்: மத். 13:24-30, 36-43

    தீர்க்கதரிசனம்: கோதுமைப் பயிர்களுக்கு இடையே களைகளை எதிரி விதைக்கிறான். அறுவடைக் காலம்வரை அவை இரண்டும் சேர்ந்தே வளர்வதற்கு அனுமதிக்கப்பட்டன. பிறகு, கோதுமையிலிருந்து களைகள் பிரித்தெடுக்கப்பட்டன.

    நிறைவேற்றம்: 1870-லிருந்து உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும் போலி கிறிஸ்தவர்களுக்கும் இருந்த வித்தியாசம் தெளிவாகத் தெரிந்தது. முடிவு காலத்தின்போது, உண்மைக் கிறிஸ்தவர்கள் போலி கிறிஸ்தவர்களிலிருந்து பிரிக்கப்பட்டு கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள்.

  • வசனங்கள்: தானி. 2:31-33, 41-43

    தீர்க்கதரிசனம்: வெவ்வேறு உலோகங்களாலான சிலையின் பாதங்கள், இரும்பு மற்றும் களிமண் கலவையால் செய்யப்பட்டிருந்தன.

    நிறைவேற்றம்: ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசின் கீழ் இருக்கும் புரட்சி செய்கிற மக்களை களிமண் குறிக்கிறது. இரும்புபோல் செயல்படாதபடி இந்த வல்லரசை இவர்கள் பலவீனமாக்குகிறார்கள்.

  • வசனங்கள்: மத். 13:30; 24:14, 45; 28:19, 20

    தீர்க்கதரிசனம்: “களஞ்சியத்தில்” “கோதுமை” சேர்க்கப்படுகிறது. ‘வீட்டாரை’ கவனிப்பதற்கு “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” நியமிக்கப்படுகிறார்கள். “உலகம் முழுவதும்” “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய . . . நல்ல செய்தி” பரவுகிறது.

    நிறைவேற்றம்: கடவுளுடைய மக்களைக் கவனித்துக்கொள்வதற்காக 1919-ல் உண்மையுள்ள அடிமை நியமிக்கப்பட்டது. அதுமுதல், பைபிள் மாணாக்கர்கள் பிரசங்க வேலையை படுசுறுசுறுப்பாகச் செய்ய ஆரம்பித்தார்கள். இன்று, 200-க்கும் அதிகமான தேசங்களில் பிரசங்க வேலை நடக்கிறது. 1000-க்கும் அதிகமான மொழிகளில் பிரசுரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

  • வசனங்கள்: தானி. 12:11; வெளி. 13:11, 14, 15

    தீர்க்கதரிசனம்: “மூர்க்க மிருகத்தைப் போன்ற ஓர் உருவத்தை” உண்டாக்குவதில், இரண்டு கொம்புள்ள மூர்க்க மிருகம் முன்னின்று செயல்பட்டது. அந்த உருவத்துக்கு அது “உயிர்மூச்சு” கொடுத்தது.

    நிறைவேற்றம்: சர்வதேச சங்கத்தை ஏற்படுத்துவதில் ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசு முன்னின்று செயல்பட்டது. மற்ற தேசங்களும் இந்த அமைப்பை ஆதரித்தன. 1926-1933 வரை வடதிசை ராஜாவும் இதில் இணைந்திருந்தான். கடவுளுடைய அரசாங்கத்துக்கு போய் சேர வேண்டிய மகிமையை மக்கள் இன்று ஐ. நா. சபைக்கு எப்படிக் கொடுக்கிறார்களோ, அதேபோல் அன்றும் சர்வதேச சங்கத்துக்குக் கொடுத்தார்கள்.

  • வசனங்கள்: தானி. 8:23, 24

    தீர்க்கதரிசனம்: கொடூரமான ராஜா, “பயங்கரமான சீரழிவை” உண்டாக்குவான்.

    நிறைவேற்றம்: ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசு சீரழிவை ஏற்படுத்தியது. உதாரணத்துக்கு, இரண்டாம் உலகப் போரின்போது, தன்னுடைய எதிரி தேசத்தின் மீது இரண்டு அணு குண்டுகளைப் போட்டதன் மூலம் அதுவரை இல்லாதளவு பயங்கர சீரழிவை ஏற்படுத்தியது.

  • வசனங்கள்: தானி. 11:31; வெளி. 17:3, 7-11

    தீர்க்கதரிசனம்: பத்து கொம்புகளைக் கொண்ட “கருஞ்சிவப்பு நிறமுள்ள” மூர்க்க மிருகம் அதலபாதாளத்திலிருந்து ஏறி வந்து, எட்டாவது ராஜாவாக ஆனது. இந்த ராஜாவைத்தான் ‘பாழாக்கும் அருவருப்பு’ என்று பைபிள் சொல்கிறது.

    நிறைவேற்றம்: இரண்டாம் உலகப் போரின்போது, சர்வதேச சங்கம் செயலிழந்தது. போருக்குப் பிறகு ஐ. நா. சபை ‘ஏற்படுத்தப்பட்டது.’ கடவுளுடைய அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட வேண்டிய மகிமையை சர்வதேச சங்கத்துக்கு மக்கள் எப்படிக் கொடுத்தார்களோ, அதேபோல் ஐ. நா. சபைக்கும் கொடுத்தார்கள். ஐ. நா. சபை மதங்களைத் தாக்கும்.

  • வசனங்கள்: 1 தெ. 5:3; வெளி. 17:16

    தீர்க்கதரிசனம்: “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பை தேசங்கள் வெளியிடும். “பத்துக் கொம்புகளும் மூர்க்க மிருகமும்” ‘விபச்சாரியை’ தாக்கி அவளை அழித்துவிடும். பிறகு, தேசங்கள் அழியும்.

    நிறைவேற்றம்: சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவந்துவிட்டதாக தேசங்கள் உரிமைபாராட்டும். ஐ. நா. சபையை ஆதரிக்கும் தேசங்கள் பொய் மத அமைப்புகளை அழிக்கும். அப்போது, மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும். சாத்தானுடைய உலகம் முழுவதும் அர்மகெதோன் போரில் அழிக்கப்படும்போது மிகுந்த உபத்திரவம் முடிவுக்கு வரும்.

  • வசனங்கள்: எசே. 38:11, 14-17; மத். 24:31

    தீர்க்கதரிசனம்: கடவுளுடைய மக்களின் தேசத்தை கோகு தாக்குவான். பிறகு, “தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை” தேவதூதர்கள் கூட்டிச்சேர்ப்பார்கள்.

    நிறைவேற்றம்: வடதிசை ராஜா மற்ற அரசாங்கங்களுடன் சேர்ந்துகொண்டு கடவுளுடைய மக்களைத் தாக்குவான். இதற்குப் பிறகு, ஏதோவொரு கட்டத்தில், மீதியிருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

  • வசனங்கள்: எசே. 38:18-23; தானி. 2:34, 35, 44, 45; வெளி. 6:2; 16:14, 16; 17:14; 19:20

    தீர்க்கதரிசனம்: கோகுவையும் அவனுடைய படைவீரர்களையும் அழிப்பதன் மூலம், ‘வெள்ளைக் குதிரையின் மேல்’ ‘உட்கார்ந்திருப்பவர்’ “ஜெயித்து” முடிப்பார். “மூர்க்க மிருகம்” ‘நெருப்பு ஏரியில் . . . தள்ளப்படும்.’ அந்த பெரிய சிலையும் நொறுக்கப்படும்.

    நிறைவேற்றம்: கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவான இயேசு, கடவுளுடைய மக்களைக் காப்பாற்றுவார். தன்னோடு சேர்ந்து ஆட்சி செய்யப்போகிற 1,44,000 பேரோடும் தேவதூதர்களின் படையோடும் வந்து தேசங்களின் கூட்டணியை, அதாவது சாத்தானுடைய அரசியல் அமைப்புகள் எல்லாவற்றையும், அழிப்பார்.