Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 22

பார்க்க முடியாத பொக்கிஷங்களுக்கு நன்றி காட்டுங்கள்!

பார்க்க முடியாத பொக்கிஷங்களுக்கு நன்றி காட்டுங்கள்!

‘பார்க்க முடிந்த காரியங்கள்மீது அல்ல, பார்க்க முடியாத காரியங்கள் மீதே உங்களுடைய கண்களைப் பதிய வையுங்கள்.’2 கொ. 4:18.

பாட்டு 57 என் இதயத்தின் தியானம்

இந்தக் கட்டுரையில்... *

1. பரலோகப் பொக்கிஷங்களைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?

எல்லா பொக்கிஷங்களையும் நம்மால் பார்க்க முடியும் என்று சொல்ல முடியாது. சொல்லப்போனால், பார்க்க முடியாத சில பொக்கிஷங்கள்தான் ரொம்பவே மதிப்பானவை! பொருள் செல்வங்களைவிட ரொம்ப ரொம்ப மதிப்புள்ள பரலோகப் பொக்கிஷங்களைப் பற்றி மலைப் பிரசங்கத்தில் இயேசு சொன்னார். அதோடு, “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உங்கள் இதயமும் இருக்கும்” என்ற உண்மையையும் சொன்னார். (மத். 6:19-21) பொதுவாக, எதைப் பொக்கிஷமாக நினைக்கிறோமோ அதைத் தேடிப் போக வேண்டும் என்ற ஆசை நமக்கு வரும். கடவுளிடம் நல்ல பெயரை எடுப்பதன் மூலம் “பரலோகத்தில் நாம் பொக்கிஷங்களை” சேர்த்து வைக்கிறோம். அந்தப் பொக்கிஷங்களை யாராலும் அழிக்கவும் முடியாது திருடவும் முடியாது என்று இயேசு சொன்னார்.

2. (அ) நம்மை என்ன செய்யும்படி 2 கொரிந்தியர் 4:17, 18-ல் பவுல் சொல்கிறார்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 ‘பார்க்க முடியாத காரியங்கள் மீது உங்களுடைய கண்களைப் பதிய வையுங்கள்’ என்று பவுல் சொன்னார். (2 கொரிந்தியர் 4:17, 18-ஐ வாசியுங்கள்.) புதிய உலகத்தில் நாம் அனுபவிக்கப்போகிற ஆசீர்வாதங்களையும் வேறுசில ஆசீர்வாதங்களையும்தான் பார்க்க முடியாத காரியங்கள் என்று பவுல் சொன்னார். ஆனால், பார்க்க முடியாத நான்கு பொக்கிஷங்களிலிருந்து இன்றே நாம் எப்படிப் பிரயோஜனமடையலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அந்தப் பொக்கிஷங்கள்: கடவுளிடம் நமக்கு இருக்கும் நட்பு, ஜெபம் என்ற பரிசு, கடவுளுடைய சக்தியின் உதவி, ஊழியம் செய்யும்போது பரலோகத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் உதவி. இந்தப் பொக்கிஷங்களுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

யெகோவாவுடன் இருக்கும் நட்பு

3. பார்க்க முடியாத பொக்கிஷங்களில் ரொம்ப ரொம்ப உயர்ந்தது எது, அது எப்படிச் சாத்தியமாகிறது?

3 பார்க்க முடியாத பொக்கிஷங்களில் ரொம்ப ரொம்ப உயர்ந்தது யெகோவாவுடன் இருக்கும் நட்பு. (சங். 25:14) பாவ இயல்புள்ள மனிதர்களிடம் நட்பு வைத்துக்கொண்டு, அதேசமயத்தில் யெகோவாவால் எப்படிப் பரிசுத்தமாகவும் இருக்க முடிகிறது? இயேசுவின் மீட்புப் பலி ‘உலகத்தின் பாவங்களைப் போக்குவதால்,’ யெகோவாவால் அப்படி இருக்க முடிகிறது! (யோவா. 1:29) மனிதர்களுக்கு ஒரு மீட்பரை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற தன்னுடைய நோக்கம் கண்டிப்பாக நிறைவேறும் என்பது யெகோவாவுக்கு முன்கூட்டியே தெரியும். அதனால்தான், கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த மனிதர்களிடம் அவரால் நட்பு வைத்துக்கொள்ள முடிந்தது.—ரோ. 3:25.

4. கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த மனிதர்களில் யெகோவாவுக்கு நண்பர்களாக இருந்த சிலரைப் பற்றிச் சொல்லுங்கள்.

4 கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த சில மனிதர்கள் கடவுளுடைய நண்பர்களாக இருந்தார்கள். உதாரணத்துக்கு, கடவுள்மீது ஆபிரகாம் அசைக்க முடியாத விசுவாசத்தை வைத்திருந்தார். அவர் இறந்து ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகும் யெகோவா அவரை ‘என் நண்பன்’ என்று சொன்னார். (ஏசா. 41:8) தன்னுடைய நண்பர்கள் இறந்துவிட்டாலும் அவர்களை இன்றும் நண்பர்களாகத்தான் யெகோவா பார்க்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. யெகோவாவின் ஞாபகத்தில் ஆபிரகாம் இன்னும் இருக்கிறார். (லூ. 20:37, 38) அடுத்ததாக, யோபுவை பற்றி யோசித்துப்பாருங்கள். பரலோகத்தில் எல்லா தேவதூதர்களுக்கு முன்பாகவும் யோபுவைப் பற்றி யெகோவா நம்பிக்கையோடு பேசினார். “அவன் நேர்மையானவன், உத்தமன். எனக்குப் பயந்து நடக்கிறான், கெட்டதை வெறுத்து ஒதுக்குகிறான்” என்று யெகோவா சொன்னார். (யோபு 1:6-8) தானியேலை பற்றி யெகோவா என்ன நினைத்தார்? பொய்த் தெய்வங்களைக் கும்பிட்ட தேசத்தில் கிட்டத்தட்ட 80 வருஷங்களாக தானியேல் உண்மையோடு யெகோவாவுக்குச் சேவை செய்தார். “கடவுளுக்கு நீ மிகவும் பிரியமானவன்” என்று தேவதூதர்கள் மூன்று தடவை அவரிடம் சொன்னார்கள். (தானி. 9:23; 10:11, 19) தான் நெஞ்சார நேசித்த தன்னுடைய நண்பர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவரப்போகிற அந்த நாளுக்காக யெகோவா ஏங்கிக்கொண்டிருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.—யோபு 14:15.

பார்க்க முடியாத பொக்கிஷங்களுக்கு என்னென்ன வழிகளில் நாம் நன்றி காட்டலாம்? (பாரா 5) *

5. யெகோவாவிடம் நெருங்கிய நட்பு வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

5 பாவ இயல்புள்ள லட்சக்கணக்கான மக்கள் இன்றும் யெகோவாவிடம் நெருங்கிய நட்பு வைத்திருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என்று உலகம் முழுவதும் இருக்கிற நிறைய பேர் தங்களுடைய நடத்தையின் மூலம் யெகோவாவின் நண்பர்களாக ஆக வேண்டும் என்பதைக் காட்டுகிறார்கள். யெகோவா “நேர்மையானவர்களுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்.” (நீதி. 3:32) இந்த லட்சக்கணக்கான பேர், இயேசுவின் மீட்புப் பலியில் விசுவாசம் வைத்திருப்பதால் யெகோவாவிடம் நட்பு வைத்துக்கொள்ள முடிகிறது. அந்த விசுவாசத்தின் அடிப்படையில், நம்மை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும் வாய்ப்பை யெகோவா தருகிறார். இந்த முக்கியமான படிகளை எடுக்கும்போது ஏற்கெனவே தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்த லட்சக்கணக்கான கிறிஸ்தவர்களோடு நாமும் சேர்ந்துகொள்கிறோம். அவர்களோடு சேர்ந்து இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக மிக உயர்ந்தவரான யெகோவாவிடம் ‘நெருங்கிய நட்பு’ வைத்துகொள்ள முடிகிறது.

6. யெகோவாவிடம் இருக்கும் நட்பை நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

6 யெகோவாவிடம் இருக்கும் நட்பை நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதைச் சில வழிகளில் காட்டலாம். ஆபிரகாமும் யோபுவும் எப்படி நூறு வருஷங்களுக்கும் மேல் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்களோ, அதேபோல் எத்தனை வருஷங்களாக அவருக்கு நாம் சேவை செய்து வந்திருந்தாலும் தொடர்ந்து உண்மையாக இருக்க வேண்டும். தானியேலைப் போல, நம்முடைய உயிரைவிட யெகோவாவிடம் இருக்கிற நட்பைத்தான் நாம் பெரிதாக நினைக்க வேண்டும். (தானி. 6:7, 10, 16, 22) யெகோவாவின் உதவியோடு எப்பேர்ப்பட்ட சோதனைகளையும் நம்மால் சகிக்க முடியும். அவரிடம் இருக்கிற நெருங்கிய நட்பை இழந்துவிடாமல் இருக்க முடியும்.—பிலி. 4:13.

ஜெபம் என்ற பரிசு

7. (அ) நீதிமொழிகள் 15:8-ன்படி நம்முடைய ஜெபங்கள் யெகோவாவுக்கு எப்படி இருக்கின்றன? (ஆ) நம்முடைய ஜெபங்களுக்கு யெகோவா எப்படிப் பதில் தருகிறார்?

7 பார்க்க முடியாத இன்னொரு பொக்கிஷம், ஜெபம்! பொதுவாக, நெருங்கிய நண்பர்கள் தங்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வார்கள். யெகோவாவிடம் இருக்கும் நட்பிலும் இது சாத்தியமாகுமா? நிச்சயமாக! பைபிள் வழியாக யெகோவா பேசுகிறார். தன்னுடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் நம்மிடம் சொல்கிறார். ஜெபம் செய்வதன் மூலம் நாம் யெகோவாவிடம் பேசுகிறோம். நம் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்களையும் உணர்வுகளையும் அவரிடம் கொட்டுகிறோம். நாம் பேசுவதைக் கேட்பது யெகோவாவுக்கு ரொம்பப் பிடிக்கும். (நீதிமொழிகள் 15:8-ஐ வாசியுங்கள்.) நம்முடைய ஆருயிர் நண்பரான யெகோவா, நம்முடைய ஜெபங்களைக் கேட்பது மட்டுமல்ல அதற்குப் பதிலும் கொடுக்கிறார். சிலசமயங்களில் பதில்கள் உடனே கிடைக்கலாம், சிலசமயங்களில் நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கலாம். ஆனாலும், சரியான நேரத்தில் சிறந்த விதத்தில் அவர் நமக்குப் பதில் கொடுப்பார் என்பதில் உறுதியாக இருக்கலாம். எல்லா சமயங்களிலும் நாம் எதிர்பார்க்கும் பதில்கள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. உதாரணத்துக்கு, நாம் அனுபவிக்கும் சோதனைகளை நீக்குவதற்குப் பதிலாக “அதைச் சகித்துக்கொள்வதற்கு” தேவையான ஞானத்தையும் பலத்தையும் அவர் கொடுக்கலாம்.—1 கொ. 10:13.

(பாரா 8) *

8. ஜெபம் என்ற பரிசுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?

8 ஜெபம் என்ற விலைமதிக்க முடியாத பரிசுக்கு நன்றி காட்ட ஒரு வழி, “எப்போதும் ஜெபம் செய்யுங்கள்” என்ற பைபிள் அறிவுரைக்குக் கீழ்ப்படிவது! (1 தெ. 5:17) ஜெபம் செய்யச் சொல்லி யெகோவா நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, நமக்கு இருக்கும் சுதந்திரத்தை மதிக்கிறார்; “விடாமல் ஜெபம் செய்யுங்கள்” என்று நம்மிடம் கேட்டுக்கொள்கிறார். (ரோ. 12:12) ஒவ்வொரு நாளும் அடிக்கடி ஜெபம் செய்வதன் மூலம் நம் நன்றியைக் காட்டலாம். நம்முடைய ஜெபத்தில் அவருக்கு நன்றி சொல்லவும் அவரைப் புகழவும் மறந்துவிடக் கூடாது.—சங். 145:2, 3.

9. ஜெபத்தைப் பற்றி ஒரு சகோதரர் என்ன சொல்கிறார், ஜெபத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

9 நாம் நிறைய வருஷங்கள் யெகோவாவுக்குச் சேவை செய்திருந்தால், நம்முடைய ஜெபங்களுக்கு எப்படியெல்லாம் அவர் பதில் தந்திருக்கிறார் என்பதை ருசித்திருப்போம். நாம் எந்தளவுக்கு அதை ருசிக்கிறோமோ அந்தளவுக்கு ஜெபத்தின் மேல் இருக்கிற நன்றி அதிகமாகும். 47 வருஷங்களாக முழுநேர ஊழியம் செய்கிற கிறிஸ் என்ற சகோதரர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: “விடியற்காலையில எழுந்து யெகோவாகிட்ட ஜெபம் செய்றது எவ்வளவு சந்தோஷமா இருக்கு! சூரிய கதிர்கள் பனித்துளிகள் மேல பட்டு, அது ஜொலிக்கிற அந்த சமயத்துல யொகோவாகிட்ட பேசுறது ரொம்ப புத்துணர்ச்சியா இருக்கு. இப்படி செய்றதால ஜெபம்ங்குற பரிசுக்கும் யெகோவா கொடுத்த மத்த பரிசுகளுக்கும் நன்றி சொல்லணுங்குற ஆசை அதிகமாகுது. ஒவ்வொரு நாளோட கடைசியில ஜெபம் செஞ்சிட்டு, சுத்தமான மனசாட்சியோட படுக்கப்போறது மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு.”

கடவுளுடைய சக்தி என்ற பரிசு

10. கடவுளுடைய சக்தியை நாம் ஏன் பொக்கிஷமாக நினைக்க வேண்டும்?

10 பார்க்க முடியாத இன்னொரு பரிசு, கடவுளுடைய சக்தி! அதை நாம் பொக்கிஷமாக நினைக்க வேண்டும். கடவுளுடைய சக்திக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யும்படி இயேசு சொன்னார். (லூக். 11:9, 13) அந்தச் சக்தியின் மூலம் யெகோவா நமக்குச் சக்தியைக் கொடுக்கிறார். சொல்லப்போனால், ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ கொடுக்கிறார். (2 கொ. 4:7; அப். 1:8) கடவுளுடைய சக்தி நமக்கு இருந்தால், எப்பேர்ப்பட்ட சோதனைகளையும் நம்மால் சமாளிக்க முடியும்.

(பாரா 11) *

11. கடவுளுடைய சக்தி நமக்கு எப்படியெல்லாம் உதவுகிறது?

11 நம்முடைய நியமிப்புகளை நல்லபடியாகச் செய்து முடிக்க கடவுளுடைய சக்தி நமக்கு உதவும். நம்முடைய திறமைகளைப் பட்டைதீட்ட அந்தச் சக்தியால் முடியும். கிறிஸ்தவர்களாக, நம்முடைய பொறுப்புகளைச் சரியாகச் செய்து முடிக்க இந்தச் சக்தி உதவும். நமக்குக் கிடைக்கிற பலன்கள் நம்முடைய திறமையால் அல்ல, கடவுளுடைய சக்தியின் உதவி இருந்ததால்தான் கிடைத்தன என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.

12. சங்கீதம் 139:23, 24-ன்படி, கடவுளுடைய சக்திக்காக நாம் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?

12 கடவுளுடைய சக்திக்கு நன்றி காட்ட இன்னொரு வழி இருக்கிறது. ‘என் மனசுல ஏதாவது கெட்ட எண்ணங்களும் ஆசைகளும் இருக்கானு கண்டுபிடிக்கிறதுக்கு உங்க சக்திய கொடுங்க’ என்று கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்வதுதான் அது! (சங்கீதம் 139:23, 24-ஐ வாசியுங்கள்.) இப்படி ஜெபம் செய்யும்போது, நம்முடைய மனதில் ஏதாவது கெட்ட எண்ணங்கள் இருக்கின்றனவா என்று கண்டுபிடிப்பதற்குத் தன்னுடைய சக்தியை யெகோவா கொடுப்பார். அதைக் கண்டுபிடித்த பிறகு, ‘என் மனசுல இருக்கிற கெட்ட எண்ணங்களயும் ஆசைகளயும் வேரோட பிடுங்கி எறியறதுக்கு உங்க சக்திய கொடுங்க யெகோவாவே’ என்று ஜெபம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், கடவுளுடைய சக்தி கிடைப்பதற்குத் தடையாக இருக்கிற எந்த விஷயத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவோம்.—எபே. 4:30.

13. கடவுளுடைய சக்திக்கு ரொம்ப நன்றியோடு இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

13 கடவுளுடைய சக்தி இன்று எதையெல்லாம் சாதித்து வருகிறது என்பதை நாம் யோசித்துப்பார்க்க வேண்டும். அப்போது, அந்தச் சக்திக்காக நாம் ரொம்ப நன்றியோடு இருப்போம். பரலோகத்துக்கு இயேசு போவதற்கு முன்பு, “கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெற்று, . . . பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று தன் சீஷர்களிடம் சொன்னார். (அப். 1:8) அவர் சொன்னது இன்று அப்படியே நடந்து வருகிறது. பூமியின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் சுமார் 85,00,000 மக்கள் யெகோவாவை வணங்கி வருகிறார்கள். அதுமட்டுமல்ல, “அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு” ஆகிய குணங்களை வளர்த்துக்கொள்வதற்குக் கடவுளுடைய சக்தி உதவுவதால், அவருடைய மக்கள் எல்லாரும் ஒரே குடும்பமாக, சமாதானமாக இருக்கிறார்கள். (கலா. 5:22, 23) கடவுளுடைய சக்தி விலைமதிக்க முடியாத ஒரு பரிசு என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள், இல்லையா?

பரலோகத்திலிருந்து கிடைக்கும் உதவி

14. ஊழியம் செய்யும்போது, பார்க்க முடியாத என்ன பொக்கிஷம் நமக்கு உதவியாக இருக்கிறது?

14 யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் தேவதூதர்களுக்கும் ‘சக வேலையாட்களாக’ இருப்பது, பார்க்க முடியாத இன்னொரு பொக்கிஷம். (2 கொ. 6:1) சீஷராக்கும் வேலையைச் செய்யும்போது இவர்களோடு சேர்ந்து நாம் வேலை செய்கிறோம். “நாங்கள் கடவுளுடைய சக வேலையாட்களாக இருக்கிறோம்” என்று தன்னைப் பற்றியும் இந்த வேலையைச் செய்கிற மற்றவர்களைப் பற்றியும் பவுல் சொன்னார். (1 கொ. 3:9) ‘எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்குங்கள்’ என்று இயேசு தன்னுடைய சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தபோது, “உங்கள் கூடவே இருக்கிறேன்” என்றும் சொன்னார். அதனால், ஊழியம் செய்யும்போது நாம் இயேசுவின் சக வேலையாட்களாகவும் இருக்கிறோம். (மத். 28:19, 20) தேவதூதர்களோடு சேர்ந்து நாம் எப்படி வேலை செய்கிறோம்? ‘பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு . . . நித்திய நல்ல செய்தியை’ அறிவிக்கும்போது தேவதூதர்கள் நம்மை வழிநடத்துகிறார்கள். (வெளி. 14:6) இப்படி, தேவதூதர்களுக்கும் நாம் சக வேலையாட்களாக இருக்கிறோம்.

15. ஊழியத்தில் யெகோவாவுக்கு இருக்கும் முக்கியமான பங்கை எடுத்துக்காட்டும் ஒரு பைபிள் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

15 பரலோகத்திலிருந்து கிடைக்கும் உதவியால் நம்மால் நிறைய சாதிக்க முடிகிறது. கடவுளுடைய அரசாங்கத்தின் செய்தி என்கிற விதையை நாம் விதைக்கும்போது, சில விதைகள் நல்ல இதயம் என்கிற நிலத்தில் விழுந்து முளைக்கின்றன. (மத். 13:18, 23) இந்த விதைகள் முளைத்து நன்றாக பலன் தருவதற்கு யார் காரணம்? “தகப்பன் ஒருவனை ஈர்க்காவிட்டால்” யாரும் தன்னுடைய சீஷர்களாக ஆக முடியாது என்று இயேசு சொன்னார். (யோவா. 6:44) எப்படி? பைபிள் சொல்லும் ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். பிலிப்பி நகரத்துக்கு வெளியே இருந்த பெண்களிடம் பவுல் சாட்சி கொடுத்த சம்பவத்தைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அந்தப் பெண்களில் ஒருவர்தான் லீதியாள். “பவுல் சொன்ன விஷயங்களை ஏற்றுக்கொள்ளும்படி யெகோவா அவளுடைய இதயத்தை முழுமையாகத் திறந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (அப். 16:13-15) லீதியாளைப் போலவே லட்சக்கணக்கானவர்களை யெகோவா ஈர்த்திருக்கிறார்.

16. ஊழியத்தில் கிடைக்கும் நல்ல பலன்கள் எல்லாவற்றுக்கும் யார் காரணம்?

16 ஊழியத்தில் கிடைக்கும் நல்ல பலன்கள் எல்லாவற்றுக்கும் யார் காரணம் என்பதைப் பற்றி கொரிந்து சபைக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். “நான் நட்டேன், அப்பொல்லோ தண்ணீர் ஊற்றினார். ஆனால், கடவுள்தான் வளர வைத்தார். அதனால், நடுகிறவனுக்கும் பெருமை சேருவதில்லை, தண்ணீர் ஊற்றுகிறவனுக்கும் பெருமை சேருவதில்லை; வளர வைக்கிற கடவுளுக்குத்தான் பெருமை சேரும்” என்று அவர் சொன்னார். (1 கொ. 3:6, 7) பவுலைப் போலவே, ஊழியத்தில் கிடைக்கும் நல்ல பலன்களுக்கு நாம் எப்போதுமே யெகோவாவுக்குத்தான் புகழ் சேர்க்க வேண்டும்.

17. யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் தேவதூதர்களுக்கும் ‘சக வேலையாட்களாக’ இருக்கிற பாக்கியத்திற்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?

17 யெகோவா, இயேசு மற்றும் தேவதூதர்களுடைய ‘சக வேலையாட்களாக’ இருப்பதற்கு நன்றி காட்ட ஒரு வழி, ஆர்வத்துடிப்புடன் நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதுதான்! இதைச் செய்வதற்கு, “பொது இடங்களிலும் வீடு வீடாகவும்” பிரசங்கிப்பது உட்பட ஏராளமான வழிகள் இருக்கின்றன. (அப். 20:20) நிறைய பேர், சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதைச் சந்தோஷமாகச் செய்கிறார்கள். யாரையாவது புதிதாகப் பார்க்கும்போது நட்பு ரீதியில் அவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லிவிட்டு, அவர்களிடம் பேச முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து பேச விரும்பினால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சாதுரியமாகச் சொல்கிறார்கள்.

(பாரா 18) *

18-19. (அ) சத்திய விதைகளுக்கு நாம் எப்படித் தண்ணீர் ஊற்றலாம்? (ஆ) பைபிள் படிப்பு படித்த ஒருவருக்கு யெகோவா எப்படி உதவினார் என்பதை விளக்குங்கள்.

18 கடவுளுடைய ‘சக வேலையாட்களாக,’ சத்திய விதைகளை விதைத்தால் மட்டும் போதாது, தண்ணீர் ஊற்றவும் வேண்டும். யாராவது ஆர்வம் காட்டினால், அவர்களை மறுபடியும் போய் பார்க்க வேண்டும். நம்மால் முடியவில்லை என்றால், வேறு யாராவது அவர்களைப் போய் பார்த்து படிப்பு நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் தொடர்ந்து படிக்கும்போது, தங்களுடைய யோசனைகளை மாற்றிக்கொள்வதற்கு யெகோவா அவர்களுக்கு உதவுவார். அதைப் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!

19 இப்போது தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் ரஃபலலானீ என்பவரைப் பற்றிப் பார்க்கலாம். மந்திர சக்தியின் மூலம் மற்றவர்களைக் குணப்படுத்தும் தொழிலை அவர் செய்துகொண்டிருந்தார். பைபிள் படிப்பை ஆரம்பித்ததற்குப் பிறகு, படித்த விஷயங்கள் அவருக்கு ரொம்பப் பிடித்துப் போனது. ஆனால், இறந்துபோன முன்னோர்களிடம் பேசுவதைப் பற்றி பைபிள் சொல்லும் கருத்தை ஏற்றுக்கொள்வது அவருக்குக் கஷ்டமாக இருந்தது. (உபா. 18:10-12) ஆனாலும், கொஞ்சம் கொஞ்சமாகக் கடவுளுடைய உதவியை அவர் ஏற்றுக்கொண்டார். யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொண்டார். கடைசியில், தன்னுடைய தொழிலையும் விட்டுவிட்டார். தன்னுடைய பிழைப்பே அதை நம்பிதான் இருக்கிறது என்று தெரிந்திருந்தும் அவர் அந்த மாற்றத்தைச் செய்தார். அவருக்கு இப்போது 60 வயது ஆகிறது. “யெகோவாவின் சாட்சிகள் எனக்கு நிறைய உதவிகள செஞ்சாங்க. வேற ஒரு வேலையில சேர்றதுக்கும் உதவுனாங்க. எல்லாத்துக்கும் மேல யெகோவாவுக்கு நான் ரொம்ப நன்றியோட இருக்குறேன். என்னோட வாழ்க்கைய சுத்தமா வெச்சிக்கிறதுக்கு அவர் உதவி செஞ்சிருக்காரு. அதனால, ஞானஸ்நானம் எடுத்த ஒரு யெகோவாவின் சாட்சியா என்னால ஊழியம் செய்ய முடியுது” என்று அவர் சொல்கிறார்.

20. என்ன செய்ய நீங்கள் முடிவு எடுத்திருக்கிறீர்கள்?

20 பார்க்க முடியாத நான்கு பொக்கிஷங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் சிந்தித்தோம். அந்தப் பொக்கிஷங்களிலேயே ரொம்ப ரொம்ப மதிப்புள்ளது, யெகோவாவிடம் நமக்கு இருக்கும் நெருங்கிய நட்புதான்! இந்தப் பொக்கிஷம், பார்க்க முடியாத மற்ற மூன்று பொக்கிஷங்களான ஜெபம், கடவுளுடைய சக்தியின் உதவி, பரலோகத்திலிருந்து கிடைக்கும் உதவி ஆகியவற்றிலிருந்து நன்மையடைவதற்கு உதவுகிறது. பார்க்க முடியாத இந்தப் பொக்கிஷங்களுக்கு என்றென்றும் நன்றியோடு இருக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். யெகோவா நம்முடைய அருமை நண்பராக இருப்பதற்கு எப்போதும் அவருக்கு நன்றி சொல்லலாம்.

பாட்டு 19 பூஞ்சோலை பூமி—தேவனின் வாக்கு

^ பாரா. 5 பார்க்க முடிந்த சில பொக்கிஷங்களைப் பற்றி முந்தின கட்டுரையில் பார்த்தோம். பார்க்க முடியாத சில பொக்கிஷங்களைப் பற்றியும், அவற்றுக்கு நாம் எப்படி நன்றியோடு இருக்கலாம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இந்தப் பொக்கிஷங்களைக் கொடுத்த யெகோவாவுக்கு இன்னும் எப்படி அதிக நன்றி காட்டலாம் என்றும் பார்ப்போம்.

^ பாரா. 58 படவிளக்கம்: (1) ஒரு சகோதரி யெகோவாவின் படைப்புகளைப் பார்த்து ரசிக்கும்போது, அவரோடு தனக்கிருக்கும் நட்பைப் பற்றி ஆழமாக யோசிக்கிறார்.

^ பாரா. 60 படவிளக்கம்: (2) அதே சகோதரி சாட்சி கொடுப்பதற்குத் தைரியத்தைத் தரும்படி யெகோவாவிடம் கேட்கிறார்.

^ பாரா. 63 படவிளக்கம்: (3) சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்குக் கடவுளுடைய சக்தி அந்தச் சகோதரிக்கு உதவுகிறது.

^ பாரா. 66 படவிளக்கம்: (4) சந்தர்ப்ப சாட்சி கொடுத்த அந்தப் பெண்ணிடம் பைபிள் படிப்பை நடத்துகிறார். பிரசங்கிக்கும் வேலையையும் சீஷராக்கும் வேலையையும் தேவதூதர்களின் ஆதரவோடு அந்தச் சகோதரி செய்கிறார்.