Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 19

முடிவு காலத்தில் எது ‘வடதிசை ராஜாவாக’ ஆகும்?

முடிவு காலத்தில் எது ‘வடதிசை ராஜாவாக’ ஆகும்?

“முடிவு காலத்தில் தென்திசை ராஜா வடதிசை ராஜாவோடு சண்டைக்கு நிற்பான்.”தானி. 11:40.

பாட்டு 133 மீட்படைய தேவனை நாடுங்கள்

இந்தக் கட்டுரையில்... *

1. எதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு பைபிள் தீர்க்கதரிசனம் உதவுகிறது?

யெகோவாவின் மக்களுக்குச் சீக்கிரத்தில் என்ன நடக்கும்? அதற்கான பதிலை பைபிள் தெளிவாகச் சொல்கிறது. நம்மைப் பாதிக்கப்போகிற முக்கியமான சம்பவங்களைப் பற்றி அதிலிருக்கிற தீர்க்கதரிசனங்கள் சொல்கின்றன. அதுவும், இந்த உலகத்தில் இருக்கிற ரொம்பவே அதிகாரம் படைத்த அரசாங்கங்கள் என்ன செய்யப்போகின்றன என்பதைப் பற்றி ஒரு தீர்க்கதரிசனம் சொல்கிறது. தானியேல் புத்தகத்தின் 11-ம் அதிகாரத்தில் அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒன்றையொன்று எதிர்த்துப் போராடுகிற அரசாங்கங்களைப் பற்றி அது சொல்கிறது. ஒன்று, வடதிசை ராஜா. இன்னொன்று, தென்திசை ராஜா. இந்தத் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற பெரும்பாலான விஷயங்கள் ஏற்கெனவே நிறைவேறிவிட்டன. அப்படியென்றால், மீதியிருக்கும் விஷயங்களும் கண்டிப்பாக நிறைவேறும் என்பதில் உறுதியாக இருக்கலாம்.

2. தானியேல் தீர்க்கதரிசனத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு ஆதியாகமம் 3:15 மற்றும் வெளிப்படுத்துதல் 11:7; 12:17-ல் இருக்கிற என்னென்ன குறிப்புகள் நமக்கு உதவும்?

2 தானியேல் 11-ம் அதிகாரத்தில் இருக்கிற தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், கடவுளுடைய மக்கள்மேல் ஆதிக்கம் செலுத்திய ஆட்சியாளர்களையும் அரசாங்கங்களையும் பற்றிதான் இந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது என்பதை மனதில் வைக்க வேண்டும். உலக மக்கள்தொகையில் கடவுளுடைய மக்களின் எண்ணிக்கை கொஞ்சமாக இருந்தாலும் இந்த அரசாங்கங்கள் அவர்களை அடிக்கடி தாக்கியிருக்கின்றன. ஏனென்றால், சாத்தான் மற்றும் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற இந்த உலகத்தின் முக்கிய நோக்கமே, யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் சேவை செய்கிறவர்களை அடியோடு அழிக்க வேண்டும் என்பதுதான்! (ஆதியாகமம் 3:15-யும், வெளிப்படுத்துதல் 11:7; 12:17-யும் வாசியுங்கள்.) இன்னொரு விஷயத்தையும் நாம் மனதில் வைக்க வேண்டும். அதாவது, தானியேல் புத்தகத்தில் இருக்கிற தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இருக்கும் மற்ற தீர்க்கதரிசனங்களோடு ஒத்துப்போக வேண்டும். சொல்லப்போனால், மற்ற தீர்க்கதரிசனங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால்தான் தானியேல் தீர்க்கதரிசனத்தை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

3. இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

3 இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு தானியேல் 11:25-39-ல் இருக்கிற விஷயங்களை நாம் ஆராயப் போகிறோம். 1870-1991 வரை வடதிசை ராஜாவாக இருந்தது யார் என்றும், தென்திசை ராஜாவாக இருந்தது யார் என்றும் பார்ப்போம். இந்தத் தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதியை இதுவரை நாம் புரிந்துகொண்டதில் ஏன் மாற்றம் தேவை என்பதற்கான காரணங்களையும் பார்ப்போம். அடுத்த கட்டுரையில், தானியேல் 11:40–12:1 வரை இருக்கும் விஷயங்களைப் பார்ப்போம். 1991-லிருந்து அர்மகெதோன்வரை நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி அந்தத் தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதி என்ன சொல்கிறது என்பதையும் தெரிந்துகொள்வோம். இந்த இரண்டு கட்டுரைகளையும் படிக்கும்போது, “கடைசி நாட்களில் எதிரும் புதிருமான இரண்டு ராஜாக்கள்” என்ற பட்டியலைப் பார்ப்பது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும். முதலில், இந்தத் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு ராஜாக்கள் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும்

4. வடதிசை ராஜாவையும் தென்திசை ராஜாவையும் அடையாளம் கண்டுபிடிக்க எந்த மூன்று விஷயங்கள் நமக்கு உதவும்?

4 ஆரம்பத்தில், இஸ்ரவேல் தேசத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் இருந்த ராஜ்யங்களுக்குத்தான் “வடதிசை ராஜா” மற்றும் “தென்திசை ராஜா” என்ற பெயர் கொடுக்கப்பட்டது. இதை எப்படிச் சொல்லலாம்? தானியேலிடம் தேவதூதர் என்ன சொன்னார் என்று பாருங்கள். “உன்னுடைய ஜனங்களுக்கு [கடவுளுடைய ஜனங்களுக்கு] என்ன நடக்குமென்று உனக்குப் புரிய வைப்பதற்காக நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். (தானி. 10:14) கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாள்வரை இஸ்ரவேல் தேசத்தில் இருந்தவர்கள் கடவுளுடைய மக்களாக இருந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு, இயேசுவின் உண்மையுள்ள சீஷர்கள்தான் தன்னுடைய ஜனங்கள் என்பதை யெகோவா வெளிப்படையாகக் காட்டினார். அதனால், தானியேல் 11-ம் அதிகாரத்தில் இருக்கிற பெரும்பாலான விஷயங்கள் இஸ்ரவேல் தேசத்தோடு சம்பந்தப்படவில்லை, கிறிஸ்துவின் சீஷர்களோடுதான் சம்பந்தப்பட்டிருக்கின்றன. (அப். 2:1-4; ரோ. 9:6-8; கலா. 6:15, 16) காலங்கள் போகப்போக, வடதிசை ராஜாவின் அடையாளமும் தென்திசை ராஜாவின் அடையாளமும் மாறிக்கொண்டே வந்தது. அதாவது, வெவ்வேறு ராஜாக்கள் வடதிசை ராஜாவாகவும் தென்திசை ராஜாவாகவும் ஆனார்கள். இருந்தாலும், இந்த இரண்டு ராஜாக்களின் அடையாளம் தெளிவாகத் தெரிந்த காலப்பகுதியில், அவர்களுக்குள் நிறைய விஷயங்கள் ஒத்துப்போனது. முதலாவது, கடவுளுடைய மக்களின் மேல் இவர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். இரண்டாவது, கடவுளுடைய மக்களை நடத்திய விதத்திலிருந்து உண்மைக் கடவுளான யெகோவாவின் மீதிருந்த வெறுப்பைக் காட்டினார்கள். மூன்றாவது, அதிகாரத்துக்காக தொடர்ந்து போட்டிபோட்டார்கள்.

5. இரண்டாவது நூற்றாண்டிலிருந்து 19-வது நூற்றாண்டின் பிற்பகுதிவரை வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் இருந்தார்களா? விளக்குங்கள்.

5 கி.பி. இரண்டாவது நூற்றாண்டில், போலிக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ சபைக்குள் நுழைந்தார்கள். பைபிளில் இருக்கிற உண்மைகளை மறைத்து தவறான போதனைகளைப் போதித்தார்கள். அந்தச் சமயத்திலிருந்து 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை கடவுளுடைய ஊழியர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட தொகுதி பூமியில் இல்லை. போலி கிறிஸ்தவம் என்ற களை அந்தளவு செழிப்பாக வளர்ந்திருந்ததால் உண்மைக் கிறிஸ்தவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது. (மத். 13:36-43) இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்? வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் கடவுளுடைய மக்களைத் தாக்குவார்கள் என்று முன்பே பார்த்தோம். ஆனால், இரண்டாவது நூற்றாண்டிலிருந்து 19-வது நூற்றாண்டின் பிற்பகுதிவரை கடவுளுடைய மக்களின் ஒழுங்கமைக்கப்பட்ட தொகுதி இல்லாததால், வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் இருந்திருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது. * ஆனாலும், 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் மறுபடியும் தோன்றியிருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். எப்படி?

6. கடவுளுடைய மக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தொகுதியாக மறுபடியும் எப்போது உருவானார்கள்? விளக்குங்கள்.

6 கடவுளுடைய மக்கள், 1870-லிருந்து ஒரு தொகுதியாக உருவாக ஆரம்பித்தார்கள். அந்த வருஷத்தில்தான் சகோதரர் சார்ல்ஸ் டி. ரஸலும் அவருடைய நண்பர்களும் ஒன்றுசேர்ந்து பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்க ஆரம்பித்தார்கள். இவர்கள்தான் மேசியானிய அரசாங்கத்துக்காக ‘வழியைத் தயார்படுத்திய’ தூதுவர்களாக இருந்தார்கள். (மல். 3:1) அப்போது, கடவுளுடைய மக்கள் ஒரு தொகுதியாக பளிச்சென்று தெரிய ஆரம்பித்தார்கள்! அந்தச் சமயத்தில் அவர்களைத் தாக்குவதற்கு உலக வல்லரசுகள் இருந்தனவா? அடுத்து வரும் பாராக்களில் பார்க்கலாம்.

தென்திசை ராஜா யார்?

7. தென்திசை ராஜாவாக 1917 வரை இருந்தது யார்?

7 இந்த உலகத்திலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக 1870-ல் பிரிட்டன் உருவெடுத்தது. அதனிடம் பலம்படைத்த ராணுவப் படை இருந்தது. இந்தச் சாம்ராஜ்யத்தைச் சிறிய கொம்பு என்று பைபிள் சொல்கிறது. இந்தக் கொம்பு, பிரான்சு, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து என்கிற மூன்று கொம்புகளைப் பிடுங்கியது, அதாவது தோற்கடித்தது. (தானி. 7:7, 8) பிரிட்டன், 1917-வரை தென்திசை ராஜாவாக இருந்தது. அதே காலகட்டத்தில், அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக உருவாகி, பிரிட்டனுடன் கைகோர்க்க ஆரம்பித்தது.

8. கடைசி நாட்கள் முழுவதும் எது தென்திசை ராஜாவாக இருந்துவருகிறது?

8 முதல் உலகப் போரில் அமெரிக்காவும் பிரிட்டனும் ஒன்றுசேர்ந்து போர் செய்தன. இரண்டு நாடுகளும் பலம்படைத்த ராணுவக் கூட்டணியாக உருவெடுத்தன. அந்தச் சமயத்தில், இந்த இரண்டு அரசாங்கங்களும் ஒன்றுசேர்ந்து ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசாக உருவானது. தானியேல் முன்கூட்டியே சொன்னதுபோல், இந்த ராஜா ‘பலம்படைத்த மாபெரும் படையைத் திரட்டினான்.’ (தானி. 11:25) கடைசி நாட்கள் முழுவதும், ஆங்கிலோ-அமெரிக்க கூட்டணிதான் தென்திசை ராஜாவாக இருந்துவருகிறது. * அப்படியென்றால், வடதிசை ராஜா யார்?

வடதிசை ராஜா யார்?

9. வடதிசை ராஜா மறுபடியும் எப்போது தோன்றினான், தானியேல் 11:25 எப்படி நிறைவேறியது?

9 சகோதரர் ரஸலும் அவருடைய நண்பர்களும் ஒன்றுசேர்ந்து பைபிள் படிப்பு தொகுதியை ஆரம்பித்து ஒரு வருஷத்துக்குப் பிறகு, அதாவது 1871-ல், வடதிசை ராஜா மறுபடியும் தோன்றினான். அந்த வருஷத்தில், ஓட்டோ வான் பிஸ்மார்க் ஜெர்மனி சாம்ராஜ்யத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார். முதலாம் வில்ஹெல்ம் அதன் முதல் பேரரசராக ஆனார். இந்தப் பேரரசின் தலைவராக பிஸ்மார்க்கை அவர் நியமித்தார். * அடுத்த சில வருஷங்களில், ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலில் இருந்த சில நாடுகளை ஜெர்மனி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. பிரிட்டனையே எதிர்த்து சவால்விடும் அளவுக்கு அது பலம்படைத்த பேரரசாக ஆனது. (தானியேல் 11:25-ஐ வாசியுங்கள்.) ஜெர்மனி சாம்ராஜ்யம், பலம்படைத்த ராணுவப் படையையும் உலகத்திலேயே இரண்டாவது பெரிய கப்பற்படையையும் உருவாக்கியது. இவற்றைப் பயன்படுத்தி முதல் உலகப் போரில் சண்டைபோட்டது.

10. தானியேல் 11:25ஆ, 26 எப்படி நிறைவேறியது?

10 ஜெர்மனி சாம்ராஜ்யத்துக்கும் அதனால் உருவாக்கப்பட்ட ராணுவப் படைக்கும் என்ன ஆகும் என்பதைப் பற்றி தானியேல் முன்கூட்டியே சொன்னார். அதாவது, வடதிசை ராஜா “முறியடிக்கப்படுவான்” என்று சொன்னார். எப்படி? “அவனுக்கு எதிராகச் சதித்திட்டங்கள் தீட்டப்படும். . . . அவனுடைய அரண்மனை உப்பைச் சாப்பிடுபவர்களே அவனை வீழ்த்திவிடுவார்கள்.” (தானி. 11:25ஆ, தானி. 11:26அ) தானியேலின் நாட்களில் ‘அரண்மனை பொறுப்பை’ செய்த உயர் அதிகாரிகளும் “[ராஜா] சாப்பிடுகிற அதே உணவை” சாப்பிட்டார்கள். (தானி. 1:5) ஜெர்மனியின் விஷயத்தில் இது யாரைக் குறித்தது? ஜெர்மனி சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த படைத்தளபதிகள், ராணுவ ஆலோசகர்கள் உட்பட உயர் அதிகாரிகள் எல்லாரையும் குறித்தது. இந்த அதிகாரிகள் மன்னர் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார்கள். * இந்தத் தீர்க்கதரிசனம், ஜெர்மனி சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியைப் பற்றி மட்டுமல்ல தென்திசை ராஜாவோடு போர் செய்வதால் வரும் விளைவுகளைப் பற்றியும் சொன்னது. அதாவது, “அவனுடைய படை சிதறடிக்கப்படும், வீரர்கள் பலர் வெட்டி வீழ்த்தப்படுவார்கள்” என்று சொன்னது. (தானி. 11:26ஆ) இந்தத் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருப்பது போலவே, முதல் உலகப் போரில் ஜெர்மனி ‘படை சிதறடிக்கப்பட்டது.’ நிறைய பேர் ‘வெட்டி வீழ்த்தப்பட்டார்கள்.’ உலக சரித்திரத்திலேயே நிறைய பேருடைய சாவுக்கு அந்தப் போர் காரணமாக இருந்தது.

11. வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் என்ன செய்தார்கள்?

11 முதல் உலகப் போருக்கு முன்பு நடந்த சம்பவங்களைப் பற்றி தானியேல் 11:27, 28 சொன்னது. வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் “ஒரே மேஜையில் உட்கார்ந்து . . . பொய் பேசுவார்கள்” என்று அந்தத் தீர்க்கதரிசனம் சொன்னது. அது அப்படியே நிறைவேறியது! ஜெர்மனியும் பிரிட்டனும் சமாதானத்தோடு இருக்க விரும்புவதாக ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். ஆனால், 1914-ல் போர் வெடித்தபோது அவர்கள் பேசியது பொய் என்பது அம்பலமானது. அதோடு, வடதிசை ராஜா ‘ஏராளமான பொருள்களை’ சேர்ப்பான் என்றும் அந்தத் தீர்க்கதரிசனம் சொன்னது. இது எப்படி நடந்தது? 1914-க்கு கொஞ்ச வருஷங்களுக்கு முன்பே, உலகத்திலேயே இரண்டாவது பெரிய பணக்கார நாடாக ஜெர்மனி ஆனது. பிறகு, தானியேல் 11:29 மற்றும் 30-வது வசனத்தின் முதல் பாகம் சொன்னதுபோல், ஜெர்மனி தென்திசை ராஜாவோடு போர் செய்து மண்ணைக் கவ்வியது.

இரண்டு ராஜாக்களும் கடவுளுடைய மக்களைத் துன்பப்படுத்தினார்கள்

12. முதல் உலகப் போரின்போது வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் என்ன செய்தார்கள்?

12 இந்த இரண்டு ராஜாக்களும் 1914-லிருந்து ஒருவரை ஒருவர் ரொம்பவே எதிர்த்தார்கள்; கடவுளுடைய மக்களையும் எதிர்த்தார்கள். உதாரணத்துக்கு, முதல் உலகப் போரில் மற்றவர்களைக் கொல்ல மறுத்த கடவுளுடைய ஊழியர்களை ஜெர்மனி அரசாங்கமும் பிரிட்டிஷ் அரசாங்கமும் துன்புறுத்தின. அமெரிக்க அரசாங்கம், பிரசங்க வேலையை முன்னின்று வழிநடத்தியவர்களைச் சிறையில் தள்ளியது. இந்தத் துன்புறுத்தல், வெளிப்படுத்துதல் 11:7-10-ல் சொல்லியிருக்கும் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது.

13. வடதிசை ராஜா, 1933-லிருந்து, முக்கியமாக இரண்டாம் உலகப் போரின்போது என்ன செய்தான்?

13 வடதிசை ராஜா, 1933-லிருந்து, குறிப்பாக இரண்டாம் உலகப் போரின்போது, கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் கடவுளுடைய மக்களைத் தாக்கினான். ஜெர்மனியில் நாசி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஹிட்லரும் அவனுடைய ஆதரவாளர்களும் கடவுளுடைய வேலையைத் தடை செய்தார்கள். இந்த வடதிசை ராஜா, யெகோவாவின் மக்களில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொலை செய்தான். ஆயிரக்கணக்கானவர்களைச் சித்திரவதை முகாமுக்கு அனுப்பினான். தானியேல் முன்கூட்டியே சொன்னதுபோல் இதெல்லாம் நடந்தன. பிரசங்க வேலையைத் தடை செய்ததன் மூலம் வடதிசை ராஜா ‘பரிசுத்த இடத்தை தீட்டுப்படுத்தினான்,’ ‘வழக்கமான பலியை நீக்கினான்.’ (தானி. 11:30ஆ, 31அ) சொல்லப்போனால், யெகோவாவின் சாட்சிகளை ஜெர்மனியிலிருந்து பூண்டோடு அழிக்கப்போவதாக ஹிட்லர் சபதம் செய்தான்.

வடதிசை ராஜா மாறுகிறான்

14. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, எது வடதிசை ராஜாவாக உருவெடுத்தது? விளக்குங்கள்.

14 இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, கம்யூனிச கொள்கையை அடிப்படையாக வைத்திருந்த சோவியத் யூனியன், ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பாலான பகுதிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இப்படி, வடதிசை ராஜாவாக உருவெடுத்தது. கொடுங்கோல் ஆட்சி நடத்திய நாசி அரசாங்கத்தைப் போலவே சோவியத் யூனியனும் செயல்பட்டது. எப்படி? அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குக் கீழ்ப்படிவதுதான் முக்கியம் என்று நினைத்த மக்களின் மீது பயங்கர வெறுப்பைக் காட்டியது.

15. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வடதிசை ராஜா என்ன செய்தான்?

15 இரண்டாம் உலகப் போர் முடிந்த கொஞ்ச நாட்களிலேயே புதிய வடதிசை ராஜாவான சோவியத் யூனியனும் அதனுடைய கூட்டணிகளும் கடவுளுடைய மக்கள்மேல் வெறித்தனமான தாக்குதலை ஆரம்பித்தன. வெளிப்படுத்துதல் 12:15-17-ல் சொல்லப்பட்டபடி, பிரசங்க வேலையை இந்த ராஜா தடை செய்தான். ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளை சைபீரியாவுக்கு நாடுகடத்தினான். சொல்லப்போனால், கடைசி நாட்கள் முழுவதும் துன்புறுத்தல் என்கிற “ஆறு” கடவுளுடைய மக்கள்மேல் பாயும்படி வடதிசை ராஜா செய்திருக்கிறான். ஆனால், அவர்களுடைய வேலையை அவனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. *

16. தானியேல் 11:37-39-ல் இருக்கிற தீர்க்கதரிசனம் சோவியத் யூனியனின் விஷயத்தில் எப்படி நிறைவேறியது?

16 தானியேல் 11:37-39-ஐ வாசியுங்கள். இந்தத் தீர்க்கதரிசனம் சொன்னதுபோல், ‘தன்னுடைய முன்னோர்களின் கடவுளுக்கு (வடதிசை ராஜா) மதிப்புக் காட்டவில்லை’. எப்படி? மதங்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற குறிக்கோளோடு காலங்காலமாக இருந்துவந்த மத அமைப்புகளின் செல்வாக்கை ஒழித்துக்கட்ட சோவியத் யூனியன் முயற்சி செய்தது. இந்தக் குறிக்கோளை அடைவதற்கு 1918-லேயே சோவியத் அரசாங்கம் ஒரு சட்டத்தைப் போட்டது. பள்ளிகளில் நாத்திகக் கொள்கை கற்பிக்கப்படுவதற்கு அந்தச் சட்டம் அடித்தளமாக அமைந்தது. இந்த வடதிசை ராஜா, “கோட்டைகளின் தெய்வத்தை மகிமைப்படுத்துவான்” என்று அந்தத் தீர்க்கதரிசனம் சொன்னது. இது எப்படி நடந்தது? தன்னுடைய ராணுவ பலத்தை அதிகப்படுத்துவதற்கும், ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கும் ஏராளமான பணத்தை சோவியத் யூனியன் வாரி இறைத்தது. கோடிக்கணக்கான மக்களைக் கொல்லும் அளவுக்கு வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் ஆயுதங்களைக் குவித்து வைத்தார்கள்.

எதிரிகள் ஒன்றுசேர்ந்து செயல்படுகிறார்கள்

17. ‘பாழாக்குகிற’ அந்த ‘அருவருப்பு’ எது?

17 ஒரு முக்கியமான விஷயத்தைச் செய்வதற்காக வடதிசை ராஜா தென்திசை ராஜாவை ஆதரித்தான். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ‘பாழாக்குகிற’ ஒரு “அருவருப்பை” ஏற்படுத்தினார்கள். (தானி. 11:31) ஐ. நா. சபைதான் அந்த ‘அருவருப்பு!’

18. ஐக்கிய நாடுகள் சபை ஏன் ‘அருவருப்பு’ என்று அழைக்கப்படுகிறது?

18 கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டுமே கொண்டுவர முடிந்த ஒரு விஷயத்தை, அதாவது உலக சமாதானத்தை, தன்னால் கொண்டுவர முடியும் என்று ஐ. நா. சபை சொல்கிறது. அதனால்தான், அதை ‘அருவருப்பு’ என்று பைபிள் அழைக்கிறது. பொய் மதங்கள் எல்லாவற்றையும் அழிப்பதில் ஐ. நா. சபை முக்கியப் பங்கை வகிக்கப்போகிறது. அதனால், அதை ‘பாழாக்கும் அருவருப்பு’ என்று பைபிள் சொல்கிறது.—“கடைசி நாட்களில் எதிரும் புதிருமான இரண்டு ராஜாக்கள்” என்ற பட்டியலைப் பாருங்கள்.

இதையெல்லாம் ஏன் தெரிந்துவைத்திருக்க வேண்டும்?

19-20. (அ) இந்தக் கட்டுரையில் பார்த்த தகவல்களையெல்லாம் நாம் ஏன் தெரிந்துவைத்திருக்க வேண்டும்? (ஆ) அடுத்த கட்டுரையில் எந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்?

19 தானியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வடதிசை ராஜா மற்றும் தென்திசை ராஜாவைப் பற்றிய தீர்க்கதரிசனம், 1870-லிருந்து 1991 வரை நிறைவேறியது என்பதை இந்தத் தகவல்கள் காட்டுகின்றன. அதனால், இந்தத் தீர்க்கதரிசனத்தில் இருக்கும் மற்ற விஷயங்களும் கண்டிப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கை நமக்கு வருகிறது.

20 சோவியத் யூனியன் 1991-ல் சிதைந்த விஷயம் நமக்குத் தெரியும். அப்படியென்றால், இன்று வடதிசை ராஜாவாக இருப்பது யார்? இதற்கான பதிலை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாட்டு 135 முடிவுவரை சகித்திருப்பாயே!

^ பாரா. 5 ‘வடதிசை ராஜாவை’ பற்றியும் ‘தென்திசை ராஜாவை’ பற்றியும் தானியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனங்கள் தொடர்ந்து நிறைவேறி வருவதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இதை நாம் எப்படி உறுதியாகச் சொல்லலாம்? இந்தத் தீர்க்கதரிசனங்களில் இருக்கும் விவரங்களை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்?

^ பாரா. 5 இந்த பாராவில் சொல்லப்பட்டிருக்கும் காரணங்களை வைத்துப்பார்க்கும்போது, ரோம பேரரசர் ஆரெலியன் (கி.பி. 270-275) ‘வடதிசை ராஜாவாகவும்’ ஸெனோபியா ராணி (கி.பி. 267-272) ‘தென்திசை ராஜாவாகவும்’ இருக்க முடியாது என்பது தெரிகிறது. இந்தத் தகவல், தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தின் 13 மற்றும் 14-ம் அதிகாரத்தில் இருக்கிற தகவல்களை மாற்றீடு செய்கிறது.

^ பாரா. 9 1890-ல் பிஸ்மார்க்கை ராஜினாமா செய்யும்படி இரண்டாம் வில்ஹெல்ம் கட்டாயப்படுத்தினார்.

^ பாரா. 10 ஜெர்மனி சாம்ராஜ்யம் ரொம்பச் சீக்கிரத்தில் வீழ்ச்சியடைவதற்கு அந்த அதிகாரிகள் நிறைய வழிகளில் முயற்சி செய்தார்கள். உதாரணத்துக்கு, பேரரசருக்குக் கொடுத்திருந்த ஆதரவை வாபஸ் வாங்கினார்கள். போர் பற்றிய ரகசியங்களை வெளியே சொன்னார்கள். பேரரசரை ராஜினாமா செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்.

^ பாரா. 15 தானியேல் 11:34 சொன்னதுபோல், வடதிசை ராஜாவின் துன்புறுத்தலிலிருந்து கடவுளுடைய மக்களுக்குக் கொஞ்ச காலத்துக்கு விடுதலை கிடைத்தது. 1991-ல் சோவியத் யூனியன் சிதைந்தபோது இது நடந்தது.