Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

படகுகளைக் கட்டுவதற்கு பைபிள் காலங்களில் நாணற்புற்களைப் பயன்படுத்தினார்களா?

நாணற்புல்

அந்தக் காலத்தில் இருந்த எகிப்து மக்கள் நாணற்புற்களைப் பயன்படுத்தி பேப்பர்களைத் தயாரித்தார்கள் என்பதும் எழுதுவதற்கு அந்தப் பேப்பர்களைப் பயன்படுத்தினார்கள் என்பதும் எல்லாருக்கும் தெரிந்த விஷயம். * தகவல்களை எழுதி வைப்பதற்கு ரோமர்களும் கிரேக்கர்களும்கூட இதே முறையைத்தான் பின்பற்றினார்கள். ஆனால், எழுதுவதற்கு மட்டுமல்ல, படகுகளைக் கட்டுவதற்கும் நாணற்புற்கள் பயன்படுத்தப்பட்டன என்பது நிறைய பேருக்குத் தெரியாது.

எகிப்தில் ஒரு கல்லறையில் சித்தரிக்கப்பட்டிருந்த நாணற்புல் படகுகள் மாதிரியே செய்யப்பட்ட மாதிரி படகுகள்

“ஆறுகள் ஓடும் பகுதியில்” வாழ்கிற “எத்தியோப்பிய தேசத்து” மக்கள் ‘கடல் வழியாகத் தூதுவர்களை அனுப்புவதாகவும்’ அதுவும் ‘அவர்களை நாணற்புல் படகுகளில் அனுப்புவதாகவும்’ கிட்டத்தட்ட 2,500 வருஷங்களுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசி எழுதினார். மேதிய பெர்சியர்கள் பாபிலோனைக் கைப்பற்றப் போவதைப் பற்றி எரேமியா தீர்க்கதரிசி சொன்னபோது, பாபிலோனியர்கள் தப்பித்து விடக் கூடாது என்பதற்காக அவர்களுடைய “நாணற்புல் படகுகள்” கொளுத்தப்படும் என்று சொன்னார்.—ஏசா. 18:1, 2; எரே. 51:32.

நாணற்புற்களைப் பயன்படுத்தி படகுகளைக் கட்டுகிற தொழில் எகிப்தில் நடந்து கொண்டிருந்தது என்பதற்கான ஆதாரங்களைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். படகுகளைக் கட்டுவதற்கு பைபிள் காலங்களில் நாணற்புல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. பைபிளை நம்புகிறவர்கள் இதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், பைபிள் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது.—2 தீ. 3:16.

நாணற்புல் படகுகள் எப்படிக் கட்டப்பட்டன?

எகிப்தில் இருக்கிற கல்லறைகளில் சில ஓவியங்களும், அந்தக் கல்லறையின் சுவர்களில் செதுக்கப்பட்ட சித்திரங்களும் இருக்கின்றன. அந்தக் காலத்திலிருந்த மக்கள் நாணற்புற்களை எப்படிச் சேகரித்தார்கள் என்பதைப் பற்றியும், அதைப் பயன்படுத்தி எப்படிப் படகுகளைக் கட்டினார்கள் என்பதைப் பற்றியும் இதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த மக்கள் தண்டுகளை வெட்டி, ஒன்றாகச் சேர்த்து இறுக்கமாகக் கட்டுவார்கள். அந்தத் தண்டுகள் முக்கோண வடிவத்தில் இருப்பதால் அதைக் கட்டுவது சுலபமாக இருந்தது. கட்டிய பின்பு வலுவாகவும் இருந்தது. நாணற்புல் படகுகளின் நீளம் 55 அடிக்கும் மேலே (17 மீ.) இருந்ததாகவும் அதன் ஒவ்வொரு பக்கத்திலும் 10-ல் இருந்து 12 துடுப்புகள் போடுகிற அளவுக்கு இடம் இருந்ததாகவும் எ கம்பேனியன் டு ஏன்ஷியன்ட் ஈஜிப்ட் என்ற புத்தகம் சொல்கிறது.

நாணற்புல் படகுகளை எப்படிச் செய்வது என்பதைப் பற்றிக் காட்டுகிற எகிப்திய சித்திரம்

ஏன் நாணற்புற்களைப் பயன்படுத்தினார்கள்?

நைல் நதியை ஒட்டியிருக்கிற இடங்களில் நாணற்புல் ஏராளமாகக் கிடைத்தது. அதோடு, நாணற்புற்களைப் பயன்படுத்தி படகுகளைக் கட்டுவது சுலபமாக இருந்தது. பெரிய பெரிய படகுகளைக் கட்டுவதற்கு மக்கள் மரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததற்கு அப்புறமும்கூட தெப்பங்களைக் கட்டவும் சின்ன படகுகளைக் கட்டவும் மீனவர்களும் வேட்டைக்காரர்களும் நாணற்புற்களைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

நாணற்புல் படகுகள் ரொம்ப காலத்துக்குப் பிரபலமாக இருந்தன. அப்போஸ்தலர்கள் காலத்தில் வாழ்ந்த கிரேக்க எழுத்தாளர் ப்ளூடார்க், தான் வாழ்ந்த காலத்தில் மக்கள் நாணற்புல் படகுகளைப் பயன்படுத்தியதாகச் சொன்னார்.

^ நாணற்புற்கள் சதுப்பு நிலங்களிலும் நீரோட்டம் குறைவாக இருக்கிற ஆறுகளிலும் வளரும். இது கிட்டத்தட்ட 16 அடி (5 மீ.) உயரத்துக்கு வளரும். அதன் அடித்தண்டின் விட்டம் கிட்டத்தட்ட 6 அங்குலம் (15 செ.மீ.) ஆகும்.