படிப்புக் கட்டுரை 20
நம்பிக்கையோடு ஊழியம் செய்யுங்கள்
“கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இரு.”—பிர. 11:6.
பாட்டு 70 நல் உள்ளங்கள் தேடிச் செல்வோம்
இந்தக் கட்டுரையில்... *
1. சீஷர்களுக்கு இயேசு என்ன முன்மாதிரி வைத்தார், ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள்? (அட்டைப் படம்.)
இயேசு ஊழியம் செய்த காலம் முழுவதும் ஆர்வத்தோடு ஊழியம் செய்தார். சீஷர்களும் அதே மாதிரி செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டார். (யோவா. 4:35, 36) அவர் உயிரோடிருந்த வரைக்கும் அவர்களும் ஆர்வமாக ஊழியம் செய்தார்கள். (லூக். 10:1, 5-11, 17) ஆனால், எதிரிகள் அவரைக் கைது செய்து கொலை செய்த பின்பு, கொஞ்சக் காலத்துக்கு அவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. (யோவா. 16:32) இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பின்பு ஊழியத்துக்கு முதலிடம் கொடுக்கச் சொல்லி சீஷர்களை உற்சாகப்படுத்தினார். அவர் பரலோகத்துக்கு ஏறிப் போன பின்பு சீஷர்கள் சுறுசுறுப்பாக ஊழியம் செய்தார்கள். எந்தளவுக்குத் தெரியுமா? “எருசலேம் முழுவதையும் உங்கள் போதனையால் நிரப்பியிருக்கிறீர்கள்” என்று அவர்களுடைய எதிரிகள் சொல்லும் அளவுக்கு ஊழியம் செய்தார்கள்.—அப். 5:28.
2. ஊழிய வேலையை யெகோவா எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார்?
2 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் செய்த ஊழியத்தை இயேசு வழிநடத்தினார், யெகோவா அதை ஆசீர்வதித்தார். அதனால், சீஷர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது. உதாரணத்துக்கு, கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளில் கிட்டத்தட்ட 3,000 பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். (அப். 2:41) அந்தச் சமயத்திலிருந்து சீஷர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது. (அப். 6:7) அதோடு, கடைசி நாட்களில் ஊழிய வேலை இன்னும் பிரமாண்டமான அளவில் நடக்கும் என்று இயேசு அன்றைக்கே சொன்னார்.—யோவா. 14:12; அப். 1:8.
3-4. சில இடங்களில் ஊழியம் செய்வது ஏன் கஷ்டமாக இருக்கிறது? இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
3 நாம் எல்லாருமே ஊழியத்தைச் சந்தோஷமாகச் செய்ய வேண்டும். ஆனால், எல்லா சமயத்திலும் அப்படியிருக்க முடிவதில்லை. ஏன்? சில நாடுகளில், மக்களை வீடுகளில் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. அப்படியே அவர்கள் வீடுகளில் இருந்தாலும், அவர்கள் ஆர்வம் காட்டுவதே இல்லை. ஆனால், மற்ற நாடுகளில் ஏராளமான பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு பைபிள் படிப்பு எடுப்பதற்கு சாட்சிகள்தான் இல்லை. அதனால், மக்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
4 உங்களுடைய ஊரில் ஊழியம் செய்வது எப்படியிருக்கிறது? கஷ்டமாக இருக்கிறதா? கவலைப்படாதீர்கள்! நிறைய பேருக்குப் பிரசங்கிப்பதற்கு சிலர் என்ன செய்திருக்கிறார்கள் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அதோடு, மக்கள் ஆர்வம் காட்டினாலும் காட்டாவிட்டாலும், நாம் எப்படி நம்பிக்கையோடு ஊழியம் செய்யலாம் என்றும் பார்க்கப்போகிறோம்.
மக்களைப் பார்க்க முடியவில்லை என்றாலும் நம்பிக்கையோடு இருங்கள்
5. ஊழியத்தில் என்னென்ன சவால்கள் வருகின்றன?
5 சில இடங்களில், பலத்த பாதுகாப்பு நிறைந்த அடுக்கு மாடிக் குடியிருப்புகள் இருக்கின்றன. அங்கு இருக்கிற மக்களை நேரில் பார்த்து நம்மால் பேச முடிவதில்லை. ஏனென்றால், அங்கு இருக்கிற செக்யூரிட்டிகள் நம்மை உள்ளே விடுவதில்லை. அங்கு குடியிருக்கிற யாராவது நம்மை வரச் சொல்லியிருந்தால் மட்டும்தான் நம்மை உள்ளே விடுவார்கள். வேறு சில ஊர்களில் இந்தப் பிரச்சினை இல்லை. தாராளமாக எல்லா வீடுகளுக்கும் போக முடிகிறது. ஆனால், பெரும்பாலும் மக்கள் வீடுகளில் இருப்பதில்லை. இன்னும் சில ஊர்களில், கொஞ்சப் பேர் மட்டுமே வாழ்கிற ஒதுக்குப்புறமான இடங்களில் சாட்சிகள் ஊழியம் செய்கிறார்கள். ஒருவரைப் பார்ப்பதற்காக ரொம்ப தூரம் பயணம் செய்து போகிறார்கள். அப்படியே போனாலும் அவர்கள் வீடுகளில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. உங்களுக்கும் இந்தச் சவால்கள் இருக்கின்றனவா? சோர்ந்துபோகாதீர்கள். இந்தத் தடைகளையெல்லாம் எப்படிச் சமாளிக்கலாம் என்பதையும் நிறைய பேரைப் பார்த்துப் பேசுவதற்கு என்ன செய்யலாம் என்பதையும் இப்போது கவனிக்கலாம்.
6. எந்த விதத்தில் நாம் மீனவர்கள் மாதிரி இருக்கிறோம்?
6 ஒருவிதத்தில், நாம் மீனவர்கள் மாதிரி என்று இயேசு சொன்னார். (மாற். 1:17) சில சமயங்களில், மீனவர்கள் நாள்கணக்காக கடலில் இருந்தாலும் ஒரு மீன்கூட கிடைக்காது. இருந்தாலும், அவர்கள் சோர்ந்துவிட மாட்டார்கள். நேரத்தை... இடத்தை... மீன் பிடிக்கிற விதத்தை... மாற்றுவார்கள். ஊழியத்தில் நாமும் இதையே செய்யலாம். எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
7. வெவ்வேறு நேரங்களில் ஊழியம் செய்வதால் என்ன நன்மை?
7 வேறொரு நேரத்தில் ஊழியம் செய்துபாருங்கள். எந்த நேரத்தில் போனால், நிறைய பேரைப் பார்க்க முடியுமோ அந்த நேரத்தில் ஊழியத்துக்குப் போங்கள். ஏனென்றால், எப்படியிருந்தாலும் மக்கள் வீட்டுக்கு வருவார்கள்தானே! மத்தியானத்திலும் சாயங்காலத்திலும் ஊழியத்துக்குப் போகும்போது, மக்களைப் பார்க்க முடிவதாக நிறைய சகோதர சகோதரிகள் சொல்கிறார்கள். ஏனென்றால், அந்தச் சமயத்தில் மக்கள் சாவகாசமாக இருப்பார்கள். நாம் சொல்வதைக் கேட்பதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. டேவிட் என்ற மூப்பர் செய்கிற மாதிரியும் செய்துபாருங்கள். அவர் ஒரு பகுதியில் ஊழியம் செய்யும்போது, எந்தெந்த வீடுகளில் எல்லாம் ஆட்கள் இல்லையென்று பார்த்து வைத்துக்கொள்வார். கொஞ்ச நேரம் ஊழியம் செய்த பின்பு திரும்பவும் அந்த வீடுகளுக்கு வந்து ஆட்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பார். “அப்படி போறப்போ, நிறைய பேர பாக்க முடியுது” என்று அவர் சொல்கிறார். *
8. பிரசங்கி 11:6 சொல்கிறபடி நாம் எப்படிச் செய்யலாம்?
8 வீடுகளில் மக்களைப் பார்த்துப் பேசுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இதைத்தான் இந்தக் கட்டுரையின் முக்கிய வசனம் நமக்கு ஞாபகப்படுத்துகிறது. (பிரசங்கி 11:6-ஐ வாசியுங்கள்.) ஏற்கெனவே பார்த்த டேவிட் இதைத்தான் செய்தார். ஒரு வீட்டுக்கு அவர் நிறைய தடவை போயும் யாரையுமே பார்க்க முடியவில்லை. கடைசியாக, ஒருவரை அந்த வீட்டில் பார்த்தார். அவர் பைபிளில் ஆர்வம் காட்டினார். “நான் கிட்டத்தட்ட எட்டு வருஷமா இந்த வீட்டில இருக்கறேன். ஆனா, ஒரு தடவகூட யெகோவாவின் சாட்சிகள பாத்ததில்ல” என்று அவர் சொன்னார். டேவிட் இப்படிச் சொல்கிறார்: “மக்கள வீடுகள்ல பாக்கறதுக்கு தொடர்ந்து முயற்சி செய்யறப்ப, பெரும்பாலும் அவங்க நாம சொல்ற செய்திய கேப்பாங்க.”
9. வீடுகளில் பார்க்க முடியாதவர்களைப் பார்ப்பதற்காக சில சகோதர சகோதரிகள் என்ன முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள்?
9 வெவ்வேறு இடங்களில் ஊழியம் செய்துபாருங்கள். மக்களை வீடுகளில் பார்க்க முடியாததால், சகோதர சகோதரிகளில் சிலர் ஊழியம் செய்கிற இடங்களை மாற்றியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, அவர்கள் தெரு ஊழியம் செய்கிறார்கள், வீல் ஸ்டாண்ட் ஊழியமும் செய்கிறார்கள். அப்படிச் செய்யும்போது, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்க்க முடியாத ஆட்களை எல்லாம் அவர்களால் பார்க்க முடிகிறது. அதாவது, பெரிய பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வாழ்கிறவர்களை எல்லாம் நேரில் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பூங்காக்களிலும்... சந்தைகளிலும்... வியாபார பகுதிகளிலும்... மக்கள் நம்மிடம் தயக்கமில்லாமல் பேசுவதாகவும் நம்முடைய பிரசுரங்களை வாங்கிக்கொள்வதாகவும் நிறைய சகோதர சகோதரிகள் சொல்கிறார்கள். பொலிவியாவில் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்கிற சகோதரர் ப்ளோரன் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். “நாங்க சந்தைகளுக்கும் மத்த வியாபார பகுதிகளுக்கும் மத்தியானம் 1 மணி முதல் 3 மணி வரைக்கும் போவோம். அந்த நேரத்துல வியாபாரிகள் கொஞ்சம் சாவகாசமாக இருப்பாங்க. அந்தச் சமயத்தில நம்மகிட்ட நல்லா பேசறாங்க. பைபிள் படிப்புகளகூட ஆரம்பிக்க முடியுது.”
10. மக்களிடம் நல்ல செய்தியைச் சொல்வதற்கு நீங்கள் எந்தெந்த விதங்களில் எல்லாம் முயற்சி செய்து பார்க்கலாம்?
10 வெவ்வேறு விதங்களில் ஊழியம் செய்துபாருங்கள். ஒருவரைப் பார்ப்பதற்காக நீங்கள் நிறைய தடவை முயற்சி எடுத்திருக்கிறீர்கள். வெவ்வேறு நேரத்திலும் போயிருக்கிறீர்கள். ஆனாலும், அவரை உங்களால் பார்க்க முடியவில்லை. இப்போது என்ன செய்யலாம்? கேத்தரீனா என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: “வீடுகள்ல பாக்க முடியாதவங்களுக்கு நான் கடிதம் எழுதறேன். நேரில பாத்து என்ன சொல்லனும்னு நினைக்கிறனோ அத அந்த கடிதங்கள்ல எழுதறேன்.” இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? ஊழியப் பகுதியில் இருக்கிறவர்களுக்கு பைபிள் சத்தியங்களைச் சொல்வதற்கு ஏதாவது ஒரு வழியில் முயற்சி செய்யுங்கள்.
மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் நம்பிக்கையோடு இருங்கள்
11. என்னென்ன காரணங்களால் மக்களுக்கு ஆர்வம் இல்லாமல் போகலாம்?
11 பைபிளைப் பற்றி நாம் சொல்வதைச் சிலர் ஆர்வமாகக் கேட்பதில்லை. கடவுளைப் பற்றியோ பைபிளைப் பற்றியோ தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால், இந்த உலகத்தில் நடக்கிற அநியாய அக்கிரமங்களைப் பார்த்து அவர்கள் நொந்து போயிருக்கிறார்கள். அதனால், கடவுள்மேல் அவர்களுக்கு நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது. அதுமட்டுமல்ல, பைபிள்படி வாழ்வதாகச் சொல்லிக்கொண்டு அதன்படி வாழாத மதத் தலைவர்களைப் பார்த்து அவர்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள். அதனாலும் அவர்கள் பைபிளை ஏற்றுக்கொள்வதில்லை. இன்னும் சிலர் வேலை... குடும்பம்... அவர்களுடைய சொந்த பிரச்சினை... என்று எப்போது பார்த்தாலும் அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். பைபிள் அவர்களுக்கு உதவும் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இந்த மாதிரி மக்களுக்கு ஆர்வமே இல்லாவிட்டாலும் நாம் எப்படிச் சந்தோஷமாக ஊழியம் செய்யலாம்?
12. பிலிப்பியர் 2:4 சொல்கிறபடி செய்யும்போது ஊழியத்தில் நமக்கு என்ன பலன் கிடைக்கும்?
12 மக்கள்மேல் அக்கறை காட்டுங்கள். அப்படிக் காட்டியதால், முதலில் நாம் சொல்லும் செய்தியை ஆர்வமாகக் கேட்காத நிறைய பேர் பின்பு கேட்டிருக்கிறார்கள். (பிலிப்பியர் 2:4-ஐ வாசியுங்கள்.) இதைப் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்த டேவிட் என்ன சொல்கிறார் என்று கேட்கலாம்: “யாராவது ஆர்வம் இல்லன்னு சொன்னாங்கன்னா, பைபிளயும், பிரசுரத்தயும் மூடி பைக்குள்ள வெச்சிட்டு, ‘நீங்க தப்பா நெனக்கலீனா உங்களுக்கு ஏன் ஆர்வமில்லன்னு தெரிஞ்சுக்கலாமா?’னு நாங்க கேப்போம்.” நாம் மக்கள்மேல் ஆர்வம் காட்டுகிறோமா இல்லையா என்பதை அவர்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். நாம் என்ன சொன்னோம் என்பதை ஒருவேளை அவர்கள் மறந்துவிடலாம். ஆனால் அவர்கள்மேல் நாம் அக்கறை காட்டியதை அவர்கள் ஞாபகம் வைத்துக்கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, அவர்கள் நம்மைப் பேசவிடவில்லை என்றாலும் நாம் அவர்கள்மீது அக்கறை காட்டுகிறோம் என்பதை நம்முடைய நடத்தையாலும் முகபாவத்தாலும் காட்ட வேண்டும்.
13. மக்களுடைய தேவைகளைப் புரிந்துகொண்டு நாம் எப்படிப் பேசலாம்?
13 மக்களுக்கு என்ன தேவை, எதில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்பதையெல்லாம் புரிந்துகொண்டு அவர்களிடம் பேசினோம் என்றால், அவர்கள்மீது நாம் அக்கறை காட்டுகிறோம் என்று அர்த்தம். உதாரணத்துக்கு, நீங்கள் போயிருக்கிற வீட்டில் பிள்ளைகள் இருக்கிறார்களா? அப்படியென்றால், பிள்ளைகளை வளர்ப்பதைப் பற்றியும் குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் பைபிளிலிருந்து காட்டலாம். அப்போது, ஒருவேளை அதை அவர்கள் ஆர்வமாகக் கேட்கலாம். நீங்கள் போயிருக்கிற வீட்டில் நிறைய பூட்டுகள் தொங்குகின்றனவா? அப்படியென்றால், இந்த உலகத்தில் நாம் பயந்து பயந்துதான் வாழ வேண்டியிருக்கிறது என்பதைப் பற்றியும் இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வு வரப் போகிறது என்பதைப் பற்றியும் அவர்களிடம் சொல்லலாம். எந்தச் சூழ்நிலைமை இருந்தாலும் சரி, பைபிள் எப்படி அவர்களுக்கு உதவும் என்பதைப் புரிய வைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். “என் வாழ்க்கய பைபிள் எப்படியெல்லாம் மாத்தியிருக்குங்கறத நான் அடிக்கடி ஞாபகப்படுத்திக்குவேன்” என்று நாம் ஏற்கெனவே பார்த்த கேத்தரீனா சொல்கிறார். அதனால், அவர் நம்பிக்கையோடு பேசுகிறார். அவர் முகத்தில் தெரிகிற அந்த நம்பிக்கையை மக்களாலும் பார்க்க முடிகிறது.
14. நீதிமொழிகள் 27:17 சொல்கிறபடி, ஊழியம் செய்யும்போது எப்படி ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம்?
14 மற்றவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதற்கும் தான் பயன்படுத்திய முறைகளை பவுல் தீமோத்தேயுவுக்கும் கற்றுக்கொடுத்தார். அதே முறைகளை மற்ற சகோதர சகோதரிகளுக்கும் சொல்லிக் கொடுக்கச் சொல்லி பவுல் தீமோத்தேயுவைக் கேட்டுக்கொண்டார். (1 கொ. 4:17) தீமோத்தேயுவை மாதிரியே இன்றைக்கு நாமும் நம் சபையில் இருக்கிற அனுபவமுள்ளவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். (நீதிமொழிகள் 27:17-ஐ வாசியுங்கள்.) சகோதரர் ஷானின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். கொஞ்சக் காலத்துக்கு அவர் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் பயனியர் ஊழியம் செய்துகொண்டிருந்தார். அங்கிருந்த மக்களில் நிறைய பேர் அவர்களுடைய மதத்தைத் தவிர மற்ற மதங்களில் ஆர்வம் காட்டவே இல்லை. இந்தச் சூழ்நிலையிலும் அவரால் எப்படிச் சந்தோஷமாக ஊழியம் செய்ய முடிந்தது? “முடிஞ்சப்ப எல்லாம் மத்தவங்களோட சேந்து ஊழியத்துக்கு போவேன். ஒரு வீட்டிலேந்து இன்னொரு வீட்டுக்கு போற அந்த இடைவெளியில நானும் என்கூட வர்றவரும் இன்னும் திறமயா எப்படி ஊழியம் செய்யலாங்கறத பத்தி பேசிக்குவோம். ஏற்கெனவே ஒரு வீட்ல எப்படி பேசினோங்கறத பத்தி கலந்து பேசுவோம். அதே சூழ்நில இன்னொரு வீட்ல வந்தா, வேற மாதிரி எப்படி பேசலாங்கறத பத்தி யோசிப்போம்” என்று ஷான் சொல்கிறார்.
15. ஜெபம் செய்வது ஏன் முக்கியம்?
15 உதவிகேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். நீங்கள் ஊழியத்துக்குப் போகிற ஒவ்வொரு தடவையும் அவரிடம் உதவி கேளுங்கள். அவருடைய சக்தி இல்லாமல் நம்மால் எதையுமே செய்ய முடியாது. (சங். 127:1; லூக். 11:13) நீங்கள் அப்படி ஜெபம் செய்யும்போது, ஊழியத்தில் உங்களுக்கு என்ன தேவையோ அதைச் சொல்லிக் கேளுங்கள். உதாரணத்துக்கு, நல்ல செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு மனது இருக்கிற ஒருவரைக் கண்டுபிடிக்க உதவச் சொல்லி நீங்கள் கேட்கலாம். கேட்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், பார்க்கிற எல்லாரிடமும் பிரசங்கிப்பதன் மூலமாக உங்கள் ஜெபத்திற்குத் தகுந்த மாதிரி உழைக்க வேண்டும்.
16. ஊழியத்தைச் சந்தோஷமாகச் செய்வதற்கு ஆழமாக ஆராய்ச்சி செய்து படிப்பது ஏன் முக்கியம்?
16 ஆழமாக ஆராய்ச்சி செய்து படியுங்கள். ‘நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 12:2) நாம் எந்தளவுக்குக் கடவுளைப் பற்றி நன்றாகப் படித்து தெரிந்து வைத்துக்கொள்கிறோமோ அந்தளவுக்கு நமக்குச் சந்தேகங்கள் இருக்காது. ஊழியத்திலும் நம்மால் உறுதியாகப் பேச முடியும். ஏற்கெனவே பார்த்த கேத்தரீனா இப்படிச் சொல்கிறார்: “கொஞ்ச நாளைக்கு முன்னாடி பைபிள்ல இருக்கிற சில அடிப்படை போதனைகள் மேல எனக்கு இருக்கிற நம்பிக்கய பலப்படுத்தனுங்கிறது எனக்குப் புரிஞ்சது. அதனால, படைப்பாளர்னு ஒருத்தர் இருக்காருங்கறதுக்கும் பைபிள் கடவுளோட வார்த்தங்கறதுக்கும், இன்னைக்கு கடவுளுக்குன்னு ஒரு அமைப்பு இருக்குங்கறதுக்கும் என்னென்ன ஆதாரங்கள் இருக்குங்கிறத பத்தி விளக்கமா படிச்சேன்.” இப்படிப் படித்ததால் தன்னுடைய விசுவாசம் பலப்பட்டதாகவும் ஊழியத்தை இன்னும் சந்தோஷமாக செய்ய முடிந்ததாகவும் கேத்தரீனா சொல்கிறார்.
நாம் ஏன் தொடர்ந்து நம்பிக்கையோடு ஊழியம் செய்ய வேண்டும்?
17. இயேசு ஏன் தொடர்ந்து நம்பிக்கையோடு ஊழியம் செய்தார்?
17 இயேசு சொன்ன செய்தியைச் சிலர் ஆர்வமாகக் கேட்கவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து நம்பிக்கையோடு ஊழியம் செய்தார். ஏனென்றால், சத்தியத்தை மக்கள் தெரிந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை அவர் புரிந்துவைத்திருந்தார். அதோடு, எத்தனை பேருக்கு உதவ முடியுமோ அத்தனை பேருக்கு உதவ வேண்டுமென அவர் ஆசைப்பட்டார். ஆரம்பத்தில் சிலர் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், போகப் போக ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அவருடைய சொந்த குடும்பத்தில் என்ன நடந்ததென்று யோசித்துப் பாருங்கள். அவர் மூன்றரை வருஷங்கள் ஊழியம் செய்தபோது அவருடைய சகோதரர்களில் ஒருவர்கூட அவருடைய சீஷராக ஆகவில்லை. (யோவா. 7:5) ஆனால், இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர்கள் கிறிஸ்தவர்களாக ஆனார்கள்.—அப். 1:14.
18. நாம் ஏன் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டும்?
18 யார் சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நமக்குத் தெரியாது. சிலர் சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ளலாம், சிலருக்குக் கொஞ்சம் காலம் எடுக்கலாம். ஆரம்பத்தில் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட நம்முடைய நல்ல நடத்தையையும் குணத்தையும் பார்த்து கடைசியில் ‘கடவுளை மகிமைப்படுத்தலாம்’.—1 பே. 2:12.
19. ஒன்று கொரிந்தியர் 3:6, 7-ல் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
19 நாம் நடுகிறோம், தண்ணீர் ஊற்றுகிறோம். ஆனால், கடவுள்தான் வளர வைக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. (1 கொரிந்தியர் 3:6, 7-ஐ வாசியுங்கள்.) எத்தியோப்பியாவில் சேவை செய்யும் கட்டோஹும் என்ற சகோதரர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்: “அவ்வளவா ஊழியம் செய்யப்படாத ஒரு பகுதியில நான் இருக்கறேன். கிட்டத்தட்ட 20 வருஷங்களா நான் மட்டும்தான் யெகோவாவின் சாட்சியா இருந்தேன். ஆனா, இன்னைக்கு 14 பிரஸ்தாபிகள் இங்க இருக்காங்க. என் மனைவியயும், மூணு பிள்ளைகளயும் சேத்து 13 பேர் ஞானஸ்நானம் எடுத்துட்டாங்க. இப்ப சராசரியா 32 பேர் கூட்டங்களுக்கு வர்றாங்க.” நல்ல ஜனங்களை யெகோவா தன்னுடைய அமைப்பு பக்கமாக ஈர்ப்பார் என்ற நம்பிக்கையோடு அவர் தொடர்ந்து பொறுமையாக ஊழியம் செய்தார். அப்படிச் செய்ததை நினைத்து இப்போது ரொம்ப சந்தோஷப்படுகிறார்.—யோவா. 6:44.
20. எந்த விதத்தில் நாம் மீட்புப் படைவீரர்கள் மாதிரி இருக்கிறோம்?
20 ஒவ்வொரு மனிதரின் உயிரும் யெகோவாவின் பார்வையில் ரொம்ப ரொம்ப மதிப்பானது. இந்த உலகத்துக்கு முடிவு வருவதற்கு முன்னாடி, எல்லா தேசங்களிலும் இருக்கிற மக்களைக் கூட்டிச் சேர்க்கிற வேலையை அவருடைய மகனுடன் சேர்ந்து செய்யும் பாக்கியத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். (ஆகா. 2:7) பிரசங்க வேலையைச் செய்வது மீட்புப் பணியில் ஈடுபடுவது மாதிரி இருக்கிறது. நாம் எல்லாருமே மூழ்கிக்கொண்டிருக்கிற கப்பலில் இருக்கிறவர்களைக் காப்பாற்றுவதற்காக அனுப்பப்பட்ட மீட்புப் படைவீரர்கள் மாதிரி இருக்கிறோம். கப்பலில் மூழ்கிக்கொண்டிருக்கும் எல்லாரையும் காப்பாற்ற முடியவில்லை என்றாலும், மீட்புப் படைவீரர்கள் செய்யும் வேலை ரொம்ப முக்கியமான வேலை. ஊழியம் செய்கிற விஷயத்திலும் இதுதான் உண்மை. மூழ்கிக்கொண்டிருக்கும் இந்த சாத்தானின் உலகத்தில் இன்னும் எத்தனை பேரைக் காப்பாற்ற வேண்டியிருக்கும் என்று நமக்குத் தெரியாது. ஆனால், நம்மில் யாரை வேண்டுமானாலும் பயன்படுத்தி யெகோவா அவர்களைக் காப்பாற்றுவார். “எல்லாத்தோட கூட்டு முயற்சியினாலதான் பைபிள் படிப்பு படிக்கிற ஒவ்வொருத்தரும் ஞானஸ்நானம் எடுக்கிறாங்க” என்று பொலிவியாவில் இருக்கிற சகோதரர் ஏன்ட்ரியாஸ் சொல்கிறார். இதே எண்ணத்தை நாமும் வளர்த்துக்கொள்ளலாம். அப்படிச் செய்தோம் என்றால், யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார். நாம் செய்கிற ஊழியம் உண்மையிலேயே நமக்கு சந்தோஷத்தை அள்ளித் தரும்.
பாட்டு 66 சந்தோஷமான செய்தியைச் சொல்வோம்
^ நாம் ஊழியத்துக்குப் போகும்போது சில சமயங்களில் மக்கள் வீடுகளில் இருப்பதில்லை. இல்லையென்றால், ஆர்வம் காட்டுவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் நாம் எப்படி நம்பிக்கையோடு ஊழியம் செய்யலாம்? அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
^ இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிற மாதிரி ஊழியம் செய்கிறபோது, அந்தந்த நாட்டில் இருக்கிற தகவல் பாதுகாப்பு சட்டத்தை மீறாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
^ படவிளக்கம்: (மேலிருந்து கீழ்): மக்களை அவ்வளவாகப் பார்க்க முடியாத ஒரு பகுதியில் ஒரு கணவனும் மனைவியும் ஊழியம் செய்கிறார்கள். முதல் வீட்டுக்காரர் வேலையில் இருக்கிறார். இரண்டாவது வீட்டுக்காரர் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். மூன்றாவது வீட்டுக்காரர் கடையில் இருக்கிறார். அந்தக் கணவனும் மனைவியும் முதல் வீட்டுக்காரரை அதே நாள் சாயங்காலத்தில் போய்ப் பார்க்கிறார்கள். இரண்டாவது வீட்டுக்காரரை ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் பொது ஊழியத்தில் பார்க்கிறார்கள். மூன்றாவது வீட்டுக்காரருக்குப் போன் செய்து பேசுகிறார்கள்.