Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 19

நீதிமான் தடுமாறி விழ மாட்டான்

நீதிமான் தடுமாறி விழ மாட்டான்

“உங்களுடைய சட்டத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு. எதுவுமே அவர்களைத் தடுமாறி விழ வைக்காது.”—சங். 119:165.

பாட்டு 122 அசைக்க முடியாதவர்களாக இருங்கள்!

இந்தக் கட்டுரையில்... *

1-2. ஓர் எழுத்தாளர் என்ன சொன்னார், இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

 இன்று லட்சக்கணக்கான ஜனங்கள் இயேசுவை நம்புவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவர் சொல்லிக் கொடுத்த விஷயங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. (2 தீ. 4:3, 4) இதைப் பற்றி ஓர் எழுத்தாளர் இப்படிச் சொன்னார்: “இன்னைக்கு ‘இயேசு’ மாதிரியே ஒருத்தர் நம்மகூட இருந்து, அவர் போதிச்ச அதே விஷயங்கள போதிச்சார்னா, . . . , ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாடி எப்படி அவர ஒதுக்கித் தள்ளினாங்களோ அதே மாதிரி இப்பவும் ஒதுக்கித் தள்ளிருவோமான்னு கேட்டப்போ, . . . பொதுவா, ஆமாம்னுதான் பதில் வந்துச்சு.”

2 முதல் நூற்றாண்டில் இருந்த நிறைய பேர் இயேசுவின் போதனைகளைக் காதாரக் கேட்டார்கள். அவர் செய்த அற்புதங்களைக் கண்ணாரப் பார்த்தார்கள். ஆனாலும், அவர்மேல் விசுவாசம் வைக்கவில்லை. ஏன்? அதற்கான நான்கு காரணங்களைப் போன கட்டுரையில் பார்த்தோம். இன்னும் நான்கு காரணங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அதோடு, இயேசுவின் சீஷர்களாக இருக்கிற நம்மை மற்றவர்கள் ஏன் ஒதுக்கித் தள்ளுகிறார்கள் என்றும் பார்க்கப்போகிறோம். இதையெல்லாம் பார்த்து நாம் எப்படித் தடுமாறாமல் இருக்கலாம் என்பதையும் பார்க்கப்போகிறோம். யெகோவாவின் சாட்சியாக ஆகத் தயங்குகிறவர்களுக்குப் போன கட்டுரை மாதிரியே இந்தக் கட்டுரையும் ரொம்ப உதவியாக இருக்கும்.

(1) இயேசு பாரபட்சமில்லாமல் நடந்துகொண்டார்

பாவிகளாகக் கருதப்பட்டவர்களோடு இயேசு பழகியதால் நிறைய பேர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதே விஷயம் இன்றும் சிலரை எப்படிப் பாதிக்கலாம்? (பாரா 3) *

3. இயேசுவை மற்றவர்கள் ஒதுக்கித் தள்ளியதற்கு ஒரு காரணம் என்ன?

3 இயேசு எல்லா விதமான மக்களிடமும் பழகினார். பணக்காரர்களோடும் அதிகாரத்தில் இருக்கிறவர்களோடும் சேர்ந்து சாப்பிட்டார். அதே சமயத்தில், ஏழைகளோடும் ஆதரவு இல்லாதவர்களோடும் நிறைய நேரம் செலவு செய்தார். மற்றவர்களால் ‘பாவிகள்’ என்று அழைக்கப்பட்டவர்களிடம் கரிசனையோடு நடந்துகொண்டார். இதையெல்லாம் பார்த்து தலைக்கனம் பிடித்த சிலர் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய சீஷர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிட்டுக் குடிக்கிறீர்கள்?” என்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு இயேசு, “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை. நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் மனம் திருந்தும்படி அழைக்க வந்திருக்கிறேன்” என்று அவர்களிடம் சொன்னார்.—லூக். 5:29-32.

4. முதல் நூற்றாண்டு யூதர்கள் எதைப் பற்றி தெரிந்துவைத்திருக்க வேண்டும்?

4 வேதவசனங்கள் என்ன சொல்கின்றன? மேசியா வருவதற்கு ரொம்ப வருஷங்களுக்கு முன்பே இந்த உலகம் அவரை ஏற்றுக்கொள்ளாது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்லியிருந்தார். அவர், “ஜனங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார். ஒருவிதத்தில், அவருடைய முகம் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது. நாம் அவரை வெறுத்தோம்; அவரைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை” என்று எழுதினார். (ஏசா. 53:3) இயேசுவை ‘ஜனங்கள்’ இப்படி ஒதுக்குவார்கள் என்பதை முதல் நூற்றாண்டு யூதர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

5. இயேசுவின் சீஷர்களாக இருக்கிற நம்மைப் பற்றி இன்றைக்கு நிறைய பேர் என்ன நினைக்கிறார்கள்?

5 இதே பிரச்சினை இன்றும் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. பிரபலமானவர்களையும் வசதியானவர்களையும் இந்த உலகத்தின் பார்வையில் அறிவாளிகளாக இருக்கிறவர்களையும் மதத் தலைவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் எல்லாம் கடவுள் வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டிருந்தாலும் அவர்களைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாகச் சேவை செய்துகொண்டு சுத்தமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பவர்களை மதத் தலைவர்கள் மட்டமாகப் பார்க்கிறார்கள். ஏனென்றால், இந்த உலகத்தின் பார்வையில் அவர்கள் பிரபலமானவர்கள் கிடையாது. பவுல் சொன்ன மாதிரி, இந்த உலகத்தின் பார்வையில் “தாழ்வாக” இருக்கிறவர்களை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார். (1 கொ. 1:26-29) அவரைப் பொறுத்தளவுக்கு அவருடைய ஊழியர்கள் எல்லாரும் உயர்வானவர்கள்தான்.

6. மத்தேயு 11:25, 26-ல் இயேசு சொன்னபடி, கடவுளுடைய மக்களைப் பற்றி நாம் என்ன நினைக்க வேண்டும்?

6 நாம் தடுமாற்றம் அடையாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? (மத்தேயு 11:25, 26-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய மக்களைப் பற்றி இந்த உலகம் என்ன நினைக்கிறதோ, அதே மாதிரி நீங்களும் நினைக்காதீர்கள். தாழ்மையான ஜனங்களை வைத்துதான் யெகோவா தன்னுடைய வேலையைச் செய்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். (சங். 138:6) அதோடு, இந்த உலகத்தின் பார்வையில் அறிவாளிகளாகவும் ஞானிகளாகவும் இல்லாதவர்களை வைத்து யெகோவா எவ்வளவு விஷயங்களைச் சாதிக்கிறார் என்பதையும் யோசித்துப்பாருங்கள்.

(2) தவறான போதனைகளை இயேசு வெட்டவெளிச்சமாக்கினார்

7. பரிசேயர்களை வெளிவேஷக்காரர்கள் என்று இயேசு ஏன் சொன்னார், அதைக் கேட்டது அவர்களுக்கு எப்படி இருந்தது?

7 இயேசு தைரியமாக மதத் தலைவர்களின் முகத்திரையைக் கிழித்தார். உதாரணத்துக்கு, ‘உங்களோட அப்பா அம்மாவ கவனிச்சிக்கிறதவிட கைகள எப்படிக் கழுவுறதுங்கிறத பத்திதான் நீங்க பெரிசா நினைக்கறீங்க’ என்று அவர்கள் முகத்துக்கு நேராகச் சொன்னார். (மத். 15:1-11) அவர் சொன்னதைக் கேட்டு அவருடைய சீஷர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். அதனால்தான் அவரிடம், “நீங்கள் சொன்னதைக் கேட்டு பரிசேயர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “என் பரலோகத் தகப்பன் நடாத எந்தச் செடியும் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இரண்டு பேருமே குழியில்தான் விழுவார்கள்” என்று சொன்னார். (மத். 15:12-14) மதத் தலைவர்களைப் பார்த்து இயேசு பயந்துவிடவில்லை, அவர் தொடர்ந்து மற்றவர்களுக்குச் சத்தியத்தைச் சொல்லிக் கொடுத்தார்.

8. எல்லா போதனைகளையும் கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை என்று இயேசு எப்படிக் காட்டினார்?

8 பொய் மத போதனைகளை இயேசு வெட்டவெளிச்சமாக்கினார். எல்லா போதனைகளையும் கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை என்று சொன்னார். நிறைய பேர் அழிவுக்குப் போகிற விசாலமான பாதையில் போய்க்கொண்டிருப்பதாகவும் கொஞ்சம் பேர் மட்டும்தான் முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற குறுகலான பாதையில் போய்க்கொண்டிருப்பதாகவும் சொன்னார். (மத். 7:13, 14) இப்படிச் சொல்வதன் மூலமாக கடவுளுக்குச் சேவை செய்வதாகச் சிலர் சொல்லிக்கொண்டாலும் உண்மையிலேயே அவர்கள் சேவை செய்வதில்லை என்று சொன்னார். “போலித் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு வருவார்கள்; ஆனால், உண்மையில் அவர்கள் பசிவெறிபிடித்த ஓநாய்கள். அவர்களுடைய கனிகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்வீர்கள்” என்று சொன்னார்.—மத். 7:15-20.

தவறான நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் இயேசு கண்டித்ததால் நிறைய பேர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதே விஷயம் இன்றும் சிலரை எப்படிப் பாதிக்கலாம்? (பாரா 9) *

9. இயேசு வெட்டவெளிச்சமாக்கிய சில தவறான போதனைகள் என்ன?

9 வேதவசனங்கள் என்ன சொல்கின்றன? யெகோவாவின் வீட்டின் மேலுள்ள பக்திவைராக்கியம் மேசியாவுக்குள் பற்றியெரியும் என்று வேதவசனங்கள் முன்கூட்டியே சொன்னது. (சங். 69:9; யோவா. 2:14-17) அந்தப் பக்திவைராக்கியம் இருந்ததால்தான் தவறான நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் இயேசு வெட்டவெளிச்சமாக்கினார். உதாரணத்துக்கு, ஒரு மனுஷன் இறந்த பின்பு அவனுடைய ஆத்துமா எங்கேயோ போய் உயிர்வாழ்ந்து கொண்டிருப்பதாக பரிசேயர்கள் சொன்னார்கள். ஆனால், அப்படி எங்கேயும் போய் வாழ்வதில்லை என்றும் அவர்கள் வெறுமனே தூங்கிக் கொண்டிருப்பது மாதிரிதான் இருக்கிறார்கள் என்றும் இயேசு சொன்னார். (யோவா. 11:11) உயிர்த்தெழுதல் என்ற ஒன்று நடக்கவே நடக்காது என்று சதுசேயர்கள் சாதித்தார்கள். ஆனால், லாசருவை உயிரோடு கொண்டு வந்ததன் மூலமாக அவர்கள் சொல்வது பொய் என்று இயேசு நிரூபித்தார். (யோவா. 11:43, 44; அப். 23:8) பரிசேயர்கள் விதியை நம்பினார்கள், எல்லாவற்றையும் கடவுள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார் என்றும் மனிதர்கள் முடிவெடுப்பதற்கு எதுவுமே இல்லை என்றும் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். ஆனால், மனிதர்களுக்கு முடிவெடுக்கிற சுதந்திரம் இருப்பதாக இயேசு சொல்லிக்கொடுத்தார். கடவுளை வழிபடுவதா வேண்டாமா என்று அவர்களே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் சொன்னார்.—மத். 11:28.

10. நாம் கற்றுக்கொடுக்கிற விஷயங்கள் ஏன் நிறைய பேருக்குப் பிடிப்பதில்லை?

10 இதே பிரச்சினை இன்றும் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. பைபிளைப் பயன்படுத்தி மக்களுடைய மத நம்பிக்கைகள் தவறு என்பதை நாம் காட்டுகிறோம். அதனால், நம்மை அவர்களுக்குப் பிடிப்பதில்லை. கெட்டவர்களை கடவுள் நரகத்தில் போட்டு வாட்டி வதைக்கிறார் என்று மதத் தலைவர்கள் போதிக்கிறார்கள். அவர்களுடைய மதத்தில் இருக்கிற உறுப்பினர்களை அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக இந்தப் போதனையைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அன்பே உருவான கடவுளை வணங்கும் நாம் இந்தப் போதனைகள் எல்லாம் தப்பு என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறோம். ஆத்துமா அழியாது என்றும் மதத் தலைவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். ஆனால், இந்தப் போதனை பைபிளில் இல்லை என்பதை நாம் எடுத்துக் காட்டுகிறோம். ஒருவேளை இது உண்மையாக இருந்தது என்றால், உயிர்த்தெழுதல் நடப்பதில் அர்த்தமில்லாமல் போய்விடுமே! நிறைய மதங்களைச் சேர்ந்தவர்கள் விதியை நம்புகிறார்கள். அதாவது, ஏற்கெனவே கடவுள் எல்லாவற்றையும் முடிவு பண்ணிவிட்டார் என்றும் நாம் எதையும் முடிவு பண்ண முடியாது என்றும் நம்புகிறார்கள். ஆனால், முடிவெடுக்கிற சுதந்திரம் நமக்கு இருக்கிறது என்றும் கடவுளை வணங்குவதா வேண்டாமா என்று முடிவெடுப்பதுகூட நம்முடைய கையில்தான் இருக்கிறது என்றும் நாம் சொல்லிக்கொடுக்கிறோம். இதையெல்லாம் பார்த்து மதத் தலைவர்கள் கொதித்துப்போய்விடுகிறார்கள்.

11. யோவான் 8:45-47 சொல்கிறபடி, கடவுள் நம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்?

11 நாம் தடுமாற்றம் அடையாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? நாம் சத்தியத்தை நேசிப்பவர்களாக இருந்தோம் என்றால் கடவுள் சொல்கிற எல்லாவற்றையும் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும். (யோவான் 8:45-47-ஐ வாசியுங்கள்.) பிசாசாகிய சாத்தான் மாதிரி இல்லாமல் சத்தியத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நம்முடைய நம்பிக்கைகளை எப்போதுமே விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. (யோவா. 8:44) இயேசு மாதிரியே நாமும் ‘பொல்லாததை அடியோடு வெறுத்துவிட’ வேண்டும் என்றும் ‘நல்லதை உறுதியாகப் பிடித்துக்கொள்ள’ வேண்டும் என்றும் கடவுள் எதிர்பார்க்கிறார்.—ரோ. 12:9; எபி. 1:9.

(3) இயேசு துன்புறுத்தப்பட்டார்

இயேசு சித்திரவதைக் கம்பத்தில் இறந்ததால் நிறைய பேர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதே விஷயம் இன்றும் சிலரை எப்படிப் பாதிக்கலாம்? (பாரா 12) *

12. இயேசு இறந்த விதம் யூதர்கள் நிறைய பேருக்கு ஏன் தடைக்கல்லாக இருந்தது?

12 யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் போனதற்கான இன்னொரு காரணத்தைப் பற்றி பவுல் சொன்னார். “நாமோ மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிக்கிறோம்; அந்தச் செய்தி யூதர்களுக்குத் தடைக்கல்லாக . . . இருக்கிறது” என்று சொன்னார். (1 கொ. 1:23) ஏன் தடைக்கல்லாக இருந்தது? இயேசுவை மரக் கம்பத்தில் அறைந்ததால் அவரை மேசியாவாக யூதர்களால் பார்க்க முடியவில்லை. ஒரு குற்றவாளியாகவும் பாவியாகவும்தான் பார்க்க முடிந்தது.—உபா. 21:22, 23.

13. இயேசுவை ஒதுக்கித் தள்ளியவர்கள் எதை உணராமல் போய்விட்டார்கள்?

13 இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதையும், அவர்மேல் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய் என்பதையும் உணராமல் போய்விட்டார்கள். அதோடு, அவரை அநியாயமாக நடத்தினார்கள் என்பதையும் உணராமல் போய்விட்டார்கள். அவரை விசாரணை செய்தவர்கள் நீதியைக் காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள். யூத உச்ச நீதிமன்றத்தை அவசர அவசரமாகக் கூட்டினார்கள், அவரை முறைப்படி விசாரிக்கவில்லை. (லூக். 22:54; யோவா. 18:24) இயேசுவுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களையும் நியாயமாக விசாரிக்கவில்லை. இயேசுவுக்கு, “மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுகள் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.” இந்தச் சதித்திட்டம் பலிக்கவில்லை என்று தெரிந்தவுடனே அவருடைய வார்த்தையிலிருந்தே அவரைச் சிக்க வைப்பதற்குத் தலைமைக் குரு முயற்சி செய்தார். இப்படி, எல்லாவற்றையும் சட்டவிரோதமாகச் செய்தார்கள். (மத். 26:59; மாற். 14:55-64) இதோடு விட்டுவிட்டார்களா? இல்லை. இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பின்பும் புரளியைக் கிளப்ப முயற்சி செய்தார்கள். இயேசுவின் கல்லறை ஏன் காலியாக இருந்தது என்பதைப் பற்றிக் கதைகட்டிவிடுவதற்காக அந்தக் கல்லறையைக் காவல் காத்த ரோமப் படைவீரர்களுக்கு “ஏராளமான வெள்ளிக் காசுகளை” கொடுத்தார்கள்.—மத். 28:11-15.

14. மேசியாவின் இறப்பு பற்றி வேதவசனங்கள் என்ன சொல்கின்றன?

14 வேதவசனங்கள் என்ன சொல்கின்றன? மேசியா சாக வேண்டியது அவசியம் என்பதை யூதர்கள் நிறைய பேர் உணராமல் இருந்தார்கள். ஆனால், தீர்க்கதரிசனம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்: “அவர் தன்னுடைய உயிரையே கொடுப்பார். குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்படுவார். பலருடைய பாவங்களைச் சுமப்பார். குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேசுவார்.” (ஏசா. 53:12) தீர்க்கதரிசனங்கள் இவ்வளவு தெளிவாகச் சொல்லியிருக்கும்போது அவர் ஒரு பாவியாக இறப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமே இல்லை!

15. யெகோவாவின் சாட்சிகளை அரசாங்கங்கள் எப்படியெல்லாம் நடத்தியிருக்கின்றன?

15 இதே பிரச்சினை இன்றும் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. இயேசுமேல் எப்படி அநியாயமாகக் குற்றம்சாட்டி அவருக்குத் தண்டனை கொடுத்தார்களோ, அதே மாதிரி இன்று யெகோவாவின் சாட்சிகளையும் அநியாயமாக நடத்துகிறார்கள். சில உதாரணங்களைப் பார்க்கலாம். 1930-க்கும் 1950-க்கும் இடையில் அமெரிக்காவில் நமக்கு எதிராக நிறைய வழக்குகள் போடப்பட்டன. கடவுளை வணங்குவதற்கு நமக்கு இருக்கிற சுதந்திரத்தைப் பறிப்பதற்கு முயற்சி செய்யப்பட்டது. சில நீதிபதிகள் நம்மிடம் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டது தெளிவாகத் தெரிந்தது. கனடாவில் இருக்கிற கியூபெக்கில், கத்தோலிக்க சர்ச்சும் அரசாங்கமும் கூட்டுச் சேர்ந்துகொண்டு நம்முடைய வேலையைத் தடை செய்தன. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொன்ன ஒரே காரணத்துக்காக நிறைய பிரஸ்தாபிகள் சிறையில் தள்ளப்பட்டார்கள். நாசி அரசாங்கம் ஜெர்மனியில் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, யெகோவாவுக்கு உண்மையாக இருந்த இளம் சகோதரர்கள் நிறைய பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. சமீப வருஷங்களில், ரஷ்யாவில் இருக்கிற சகோதர சகோதரிகளைச் சிறையில் தள்ளியிருக்கிறார்கள். பைபிளைப் பற்றி அவர்கள் மற்றவர்களிடம் சொன்னதை, “மதவெறியைத் தூண்டுகிற செயல்” என்று சொல்லி அநியாயமாகப் பழிபோட்டிருக்கிறார்கள். ரஷ்ய மொழியில் இருக்கிற புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் யெகோவாவின் பெயர் இருக்கிறது என்ற காரணத்துக்காக “மதவெறியைத் தூண்டும் புத்தகம்” என்று சொல்லி அதைத் தடையும் பண்ணியிருக்கிறார்கள்.

16. ஒன்று யோவான் 4:1 சொல்கிறபடி, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி மற்றவர்கள் பரப்புகிற கட்டுக்கதைகளை நம்பி நாம் ஏன் ஏமாந்து விடக் கூடாது?

16 நாம் தடுமாற்றம் அடையாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். மலைப்பிரசங்கத்தில் தன்னுடைய சீஷர்கள்மீது, “இல்லாததையும் பொல்லாததையும்” மற்றவர்கள் சொல்வார்கள் என்று இயேசு எச்சரித்திருந்தார். (மத். 5:11) இதற்குப் பின்னால் இருப்பது எல்லாம் சாத்தான்தான். நம்முடைய எதிரிகள் நம்மைப் பற்றி படுமோசமான பொய்களைப் பரப்புவதற்கு சாத்தான் அவர்களைத் தூண்டுகிறான். (வெளி. 12:9, 10) இந்த மாதிரி பொய்களை நாம் ஒதுக்கித் தள்ள வேண்டும். இதையெல்லாம் பார்த்து நாம் பயந்துவிடக் கூடாது. நம்முடைய விசுவாசத்தையும் இழந்துவிடக் கூடாது.—1 யோவான் 4:1-ஐ வாசியுங்கள்.

(4) இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டார், கைவிடப்பட்டார்

யூதாஸ் அவரைக் காட்டிக்கொடுத்ததால் நிறைய பேர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதே விஷயம் இன்றும் சிலரை எப்படிப் பாதிக்கலாம்? (பாரா 17-18) *

17. இயேசு சாவதற்கு முன்னாடி நடந்த எந்தச் சம்பவங்களைப் பார்த்து சிலர் அவரை ஏற்றுக்கொள்ளாமல் போயிருக்கலாம்?

17 இயேசு சாவதற்குக் கொஞ்சம் முன்பு, 12 அப்போஸ்தலர்களில் ஒருவன் அவரைக் காட்டிக் கொடுத்தான். இன்னொரு அப்போஸ்தலன் மூன்று தடவை இயேசுவை யாரென்றே தெரியாது என்று சொல்லிவிட்டார். மற்ற அப்போஸ்தலர்கள் அவர் சாவதற்கு முன்னாடி அவரை விட்டு ஓடிப்போய்விட்டார்கள். (மத். 26:14-16, 47, 56, 75) இதையெல்லாம் பார்த்து இயேசு ஆச்சரியப்படவில்லை. சொல்லப்போனால், அவர்கள் இப்படி எல்லாம் செய்வார்கள் என்று அவர் முன்கூட்டியே சொல்லியிருந்தார். (யோவா. 6:64; 13:21, 26, 38; 16:32) இதை எல்லாம் பார்த்து சிலர் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் போயிருக்கலாம். ‘இயேசுவோட அப்போஸ்தலர்கள் இப்படிப்பட்ட ஆளுகள்னா அவங்ககூட சேர்றதுக்கு எனக்கு இஷ்டமில்ல’ என்று நினைத்திருக்கலாம்.

18. இயேசு இறப்பதற்கு முன்பு என்னென்ன தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேறின?

18 வேதவசனங்கள் என்ன சொல்கின்றன? மேசியா 30 வெள்ளிக் காசுகளுக்குக் காட்டிக் கொடுக்கப்படுவார் என்று வேதவசனங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லியிருந்தன. (சக. 11:12, 13) அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவன்தான் அந்தத் துரோகத்தைச் செய்வான் என்று இன்னொரு தீர்க்கதரிசனம் சொன்னது. (சங். 41:9) “மேய்ப்பனை வெட்டு, ஆடுகள் சிதறி ஓடட்டும்” என்றும் சகரியா தீர்க்கதரிசி எழுதினார். (சக. 13:7) இயேசு சாவதற்கு முன்னாடி நடந்த சம்பவங்களைப் பார்த்து அன்றைக்கு இருந்த மக்கள் தடுமாற்றம் அடைந்திருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, ஏற்கெனவே சொன்ன தீர்க்கதரிசனங்கள்தான் நிறைவேறி வருகின்றன என்பதைப் புரிந்துகொண்டு தங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்க வேண்டும்.

19. கடவுள் பக்தியுள்ள ஜனங்கள் எதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்?

19 இதே பிரச்சினை இன்றும் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. நன்கு பரிட்சயமான சாட்சிகள் சிலர் சத்தியத்தை விட்டு விலகி விசுவாசதுரோகிகளாக மாறியிருக்கிறார்கள். அதோடு, மற்றவர்களையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள். நம்மைப் பற்றி தப்புத்தப்பான விஷயங்களையும் பாதி உண்மைகளையும் அப்பட்டமான பொய்களையும் செய்தித்தாள்களில்... டிவியில்... ரேடியோக்களில்... இன்டர்நெட்டில்... பரப்பியிருக்கிறார்கள். ஆனால், கடவுள் பக்தியுள்ள ஜனங்கள் இதையெல்லாம் பார்த்து தடுமாற்றம் அடைவதில்லை. இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்று பைபிள் முன்கூட்டியே சொல்லியிருப்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.—மத். 24:24; 2 பே. 2:18-22.

20. சத்தியத்தை விட்டு விலகிப் போனவர்களைப் பார்த்து நாம் தடுமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? (2 தீமோத்தேயு 4:4, 5)

20 நாம் தடுமாற்றம் அடையாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டும்? பைபிளையும் பிரசுரங்களையும் நாம் தவறாமல் படிக்க வேண்டும். விடாமல் ஜெபம் செய்ய வேண்டும். யெகோவா கொடுத்திருக்கிற வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலமாக நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். (2 தீமோத்தேயு 4:4, 5-ஐ வாசியுங்கள்.) இப்படி, விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொண்டோம் என்றால், நம்மைப் பற்றி வருகிற தப்புத்தப்பான செய்திகளைக் கேட்டு நாம் ஆடிப்போய்விட மாட்டோம். (ஏசா. 28:16) யெகோவாவையும் பைபிளையும் சகோதர சகோதரிகளையும் நேசித்தோம் என்றால், சத்தியத்தை விட்டு விலகிப் போனவர்களைப் பார்த்து நாம் தடுமாற்றம் அடைய மாட்டோம்.

21. நாம் சொல்லும் செய்தியை இன்றைக்கு நிறைய பேர் ஒதுக்கித் தள்ளினாலும் நாம் என்ன நம்பிக்கையோடு இருக்கலாம்?

21 முதல் நூற்றாண்டில் நிறைய பேர் தடுமாற்றம் அடைந்து இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் போய்விட்டார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், நிறைய பேர் அவரை ஏற்றுக்கொள்ளவும் செய்தார்கள். நியாய சங்க உறுப்பினர்களில் குறைந்தபட்சம் ஒருவராவது அவருடைய சீஷராக ஆகியிருக்க வேண்டும். “ஏராளமான குருமார்களும்” அவரை ஏற்றுக்கொண்டார்கள். (அப். 6:7; மத். 27:57-60; மாற். 15:43) இன்றும் லட்சக்கணக்கான ஆட்கள் இயேசுவை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால், பைபிளில் இருக்கிற சத்தியங்களை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதை ரொம்ப நேசிக்கிறார்கள். “உங்களுடைய சட்டத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு. எதுவுமே அவர்களைத் தடுமாறி விழ வைக்காது” என்று பைபிள் சொல்வது எவ்வளவு உண்மை!—சங். 119:165.

பாட்டு 124 என்றும் உண்மையுள்ளோராய்

^ அன்றைக்கு இருந்த ஜனங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் போனதற்கும் அவருடைய சீஷர்களாக இருக்கும் நம்மை இன்று மற்றவர்கள் ஒதுக்கித் தள்ளுவதற்கும் நான்கு காரணங்களைப் போன கட்டுரையில் பார்த்தோம். இன்னும் நான்கு காரணங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அதோடு, யெகோவாவை நேசிக்கிற ஜனங்கள் இதையெல்லாம் பார்த்து தடுமாறாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கப்போகிறோம்.

^ படவிளக்கம்: மத்தேயுவோடும் மற்ற வரி வசூலிப்பவர்களோடும் சேர்ந்து இயேசு சாப்பிடுகிறார்.

^ படவிளக்கம்: ஆலயத்தில் இருந்த வியாபாரிகளை விரட்டியடிக்கிறார்.

^ படவிளக்கம்: சித்திரவதைக் கம்பத்தைச் சுமக்கிறார்.

^ படவிளக்கம்: முத்தம் கொடுத்து இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுக்கிறான்.