Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 21

யெகோவா உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்

யெகோவா உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்

“நான் பலவீனமாக இருக்கும்போது பலமுள்ளவனாக இருக்கிறேன்.”—2 கொ. 12:10.

பாட்டு 73 தைரியத்தைத் தாருங்கள்

இந்தக் கட்டுரையில்... *

1-2. யெகோவாவின் சாட்சிகள் நிறைய பேருக்கு என்னென்ன கஷ்டங்கள் வருகின்றன?

 ஊழியத்தை முழுமையாகச் செய்து முடிக்கச் சொல்லி தீமோத்தேயுவிடம் பவுல் சொன்னார். தீமோத்தேயுவிடம் மட்டுமல்ல, ஒரு விதத்தில் நம்மிடமும் சொல்லியிருக்கிறார். (2 தீ. 4:5) அவர் சொன்னதைச் செய்வதற்கு நாம் நிறைய முயற்சி எடுக்கிறோம். ஆனாலும், அதில் சில சவால்கள் இருக்கின்றன. ஊழியத்தைச் செய்வதற்கு நிறைய சகோதர சகோதரிகளுக்கு தைரியம் தேவைப்படுகிறது. (2 தீ. 4:2) ஏனென்றால், சில நாடுகளில் நம்முடைய வேலைக்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கின்றன. இன்னும் சில நாடுகளில், நம்முடைய வேலை தடையே செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி நாடுகளில் இருக்கிற சகோதர சகோதரிகள் தங்களைச் சிறையில் போட்டுவிடுவார்கள் என்று தெரிந்திருந்தும் ஊழியத்தைச் செய்வதற்கு நிறைய முயற்சி எடுக்கிறார்கள்.

2 இதுமட்டுமல்ல, வேறு சில பிரச்சினைகளும் யெகோவாவின் சாட்சிகளைப் பாடாகப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, குடும்பத்தின் அடிப்படை தேவைகளைச் செய்து கொடுப்பதற்கே சிலர் ரொம்ப நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஊழியத்தை அதிகமாக செய்ய வேண்டுமென்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், வேலை செய்து வேலை செய்து சனி, ஞாயிறுகளில் அவர்களுடைய பலமெல்லாம் போய்விடுகிறது. இன்னும் சிலர் நோயாலும், வயதாவதாலும் கஷ்டப்படுகிறார்கள். சொல்லப்போனால், அவர்களால் வீட்டைவிட்டு வெளியேகூட வர முடிவதில்லை. ‘நான் எதுக்குமே லாயக்கில்லை’ என்ற எண்ணத்தோடும் சிலர் போராடுகிறார்கள். “சில சமயங்கள்ல சோர்வான எண்ணங்கள் என்னை திக்குமுக்காட வைக்குது. அத கட்டுப்படுத்துறதிலயே என் பலமெல்லாம் போயிடுது. கடைசியில ஊழியத்துக்குப் போறதுக்கு எனக்கு சக்தியில்லாம இருக்கு. அதனால என் மனசாட்சி என்னை குத்திட்டே இருக்கு” என்று மேரி * என்ற சகோதரி சொல்கிறார்.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

3 நமக்கு என்ன கஷ்டம் இருந்தாலும் அதைச் சமாளிப்பதற்கு யெகோவா உதவுவார். நம்மால் முடிந்தளவுக்கு அவருக்கு நன்றாகச் சேவை செய்வதற்கு நமக்குப் பலம் கொடுப்பார். எப்படி என்று பார்ப்பதற்கு முன்பு பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் அவர் எப்படிப் பலம் கொடுத்தார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

ஊழியத்தை முழுமையாகச் செய்வதற்கு யெகோவா பலம் தருவார்

4. பவுலுக்கு என்னென்ன கஷ்டங்கள் வந்தன?

4 பவுலுக்கு நிறைய கஷ்டங்கள் வந்தன. முக்கியமாக, மற்றவர்கள் அவரை அடித்தபோதும்... கல்லெறிந்தபோதும்... சிறையில் தள்ளியபோதும்... அவருக்கு நிறைய பலம் தேவைப்பட்டது. (2 கொ. 11:23-25) சில சமயங்களில், சோர்வான எண்ணங்களும் அவரை வாட்டியெடுத்தன. (ரோ. 7:18, 19, 24) அதோடு, அவருக்கு இருந்த ஏதோவொரு உடல்நல பிரச்சினை, அவருடைய “உடலில் ஒரு முள்” மாதிரி குத்திக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். யெகோவா அதை எடுத்துப்போட வேண்டுமென அவர் ஏங்கினார்.—2 கொ. 12:7, 8.

ஊழியத்தை முழுமையாகச் செய்வதற்கு பவுலுக்கு எது உதவியாக இருந்தது? (பாராக்கள் 5-6) *

5. கஷ்டங்கள் இருந்தாலும், பவுல் என்னவெல்லாம் செய்தார்?

5 கஷ்டங்கள் இருந்தாலும், தொடர்ந்து ஊழியம் செய்வதற்கு யெகோவா பவுலுக்கு உதவினார். உதாரணத்துக்கு, ரோமில் அவர் வீட்டுக்காவலில் இருந்தபோது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை நிறைய பேரிடம் தைரியமாகப் பிரசங்கித்தார். ஒருவேளை, அரசாங்க அதிகாரிகளிடம்கூட அவர் பிரசங்கித்திருக்கலாம். (அப். 28:17; பிலி. 4:21, 22) ரோம அரசனின் மெய்க்காவலர்களிடமும் அவரைப் பார்க்க வந்தவர்களிடமும் பிரசங்கித்தார். (அப். 28:30, 31; பிலி. 1:13) அதே சமயத்தில், யெகோவாவின் சக்தியால் தூண்டப்பட்டு கடிதங்களையும் எழுதினார். இன்றைக்கு வரைக்கும் அந்தக் கடிதங்கள் நமக்கு பிரயோஜனமாக இருக்கின்றன. அதோடு, பவுலின் தைரியத்தைப் பார்த்து ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கும் தைரியம் வந்தது. அதனால், அவர்கள் ‘கடவுளுடைய வார்த்தையைப் பயமில்லாமல் இன்னும் தைரியமாக அறிவித்தார்கள்.’ (பிலி. 1:14) சில சமயங்களில், பவுலால் அதிகமாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும், அவரால் என்ன முடியுமோ அதைச் செய்தார். சொல்லப்போனால், அவருடைய சூழ்நிலை ‘நல்ல செய்தி பரவுவதற்கு [உதவியாகத்தான்] இருந்தது.’—பிலி. 1:12.

6. ஊழியத்தை முழுமையாகச் செய்வதற்கு எது பவுலுக்கு உதவியது என்று 2 கொரிந்தியர் 12:9, 10 சொல்கிறது?

6 தன்னுடைய பலத்தால் அல்ல, யெகோவாவின் பலத்தால்தான் தன்னால் எல்லாவற்றையும் செய்ய முடிந்தது என்பதைப் பவுல் நன்றாகப் புரிந்துகொண்டார். “பலவீனமாக இருக்கும்போது” யெகோவாவின் பலம் “முழுமையாகக் கிடைக்கும்” என்று அவர் சொன்னார். (2 கொரிந்தியர் 12:9, 10-ஐ வாசியுங்கள்.) யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்ததால்தான், துன்புறுத்தல்... சிறைவாசம்... இன்னும் வேறு கஷ்டம் இருந்தாலும் தொடர்ந்து அவரால் ஊழியம் செய்ய முடிந்தது.

ஊழியத்தை முழுமையாகச் செய்வதற்கு தீமோத்தேயுவுக்கு எது உதவியாக இருந்தது? (பாரா 7) *

7. தீமோத்தேயுவுக்கு என்னென்ன கஷ்டங்கள் இருந்தன?

7 பவுலுடன் சேர்ந்து ஊழியம் செய்த தீமோத்தேயுவுக்கும் கடவுளுடைய சக்தி தேவைப்பட்டது. ரொம்ப தூரமான இடங்களுக்கு பவுல் மிஷனரி சேவைக்குப் போனபோது இவரும் போனார். அதோடு, சபைகளுக்குப் போய் அங்கிருந்த சகோதர சகோதரிகளைப் பலப்படுத்தச் சொல்லி பவுல் அவரை அனுப்பினார். (1 கொ. 4:17) அந்த மாதிரி சமயங்களில் எல்லாம், தனக்கு தகுதியில்லை என்று தீமோத்தேயு நினைத்திருக்கலாம். அதனால்தான், “நீ இளைஞனாக இருப்பதால் யாரும் உன்னை அற்பமாக நினைக்காதபடி பார்த்துக்கொள்” என்று பவுல் அவரிடம் சொல்லியிருக்கலாம். (1 தீ. 4:12) இந்த மாதிரி சேவை செய்துகொண்டிருந்த சமயத்தில், தீமோத்தேயுவின் உடலிலும் ஒரு முள் இருந்தது. அதாவது, அவருக்கு ‘அடிக்கடி உடல்நலக் குறைவு’ ஏற்பட்டது. (1 தீ. 5:23) இருந்தாலும், நல்ல செய்தியைத் தொடர்ந்து பிரசங்கிப்பதற்கும் சகோதரர்களுக்குச் சேவை செய்வதற்கும் தேவையான பலத்தை யெகோவா தன்னுடைய சக்தியின் மூலமாகக் கொடுப்பார் என்பதை அவர் உறுதியாக நம்பினார்.—2 தீ. 1:7.

கஷ்டங்கள் இருந்தாலும் உண்மையோடு இருக்க யெகோவா பலம் தருகிறார்

8. இன்றைக்கு யெகோவா எப்படி நமக்குப் பலம் தருகிறார்?

8 இன்றைக்கும் நாம் தொடர்ந்து உண்மையோடு சேவை செய்வதற்கு ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ யெகோவா நமக்குக் கொடுக்கிறார். (2 கொ. 4:7) எப்படி? நான்கு வழிகளில். 1. ஜெபம், 2. பைபிள், 3. சகோதர சகோதரிகள், 4. ஊழியம்.

ஜெபத்துக்கு பதில் கொடுப்பதன் மூலம் யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார் (பாரா 9)

9. ஜெபம் நமக்கு எப்படி உதவும்?

9 ஜெபம். “எல்லா சந்தர்ப்பங்களிலும்” ஜெபம் செய்யச் சொல்லி எபேசியர் 6:18-ல் பவுல் சொல்கிறார். அப்படிச் செய்தோம் என்றால், கடவுள் நம்மைப் பலப்படுத்துவார். பொலிவியாவில் இருக்கிற ஜானியின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவருக்கு அடுத்தடுத்து கஷ்டங்கள் வந்தன. அவருடைய மனைவியின் உடல்நலமும் அவருடைய அப்பா அம்மாவின் உடல்நலமும் ரொம்ப மோசமானது. அவர்கள் மூன்று பேரையும் கவனித்துக்கொள்ள ஜானி ரொம்ப கஷ்டப்பட்டார். கடைசியில், அவருடைய அம்மா இறந்துவிட்டார். அவருடைய மனைவியும் அப்பாவும் குணமாவதற்கு ரொம்ப நாள் எடுத்தது. “இதுக்கு மேல தாங்க முடியாதுங்கிற நிலம வந்தப்ப எல்லாம் என் மனசுல என்ன ஓடிக்கிட்டிருந்தது என்பத நான் யெகோவாகிட்ட சொன்னேன். அது எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு” என்று ஜானி சொல்கிறார். இந்தக் கஷ்டங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள பலத்தை யெகோவா கொடுத்தார். பொலிவியாவில் மூப்பராகச் சேவை செய்கிற ரோனால்டு என்ற சகோதரருக்கும் இதே கஷ்டம்தான் வந்தது. அவருடைய அம்மாவுக்குப் புற்றுநோய் இருப்பதாகத் தெரியவந்த ஒரே மாதத்துக்குள் அவர் இறந்துவிட்டார். இதைச் சமாளிப்பதற்கு எது அவருக்கு உதவியது? “என் மனசில இருந்த வேதன எல்லாம் யெகோவாகிட்ட கொட்டினேன். வேற யாரயும்விட அவர் என்னை நல்லா புரிஞ்சுக்குவார்னு எனக்கு நல்லா தெரியும். என்னை பத்தி நான் புரிஞ்சு வெச்சிருக்கிறதவிட அவர் என்னை நல்லா புரிஞ்சு வெச்சிருக்கிறது எனக்கு தெரியும்” என்று அவர் சொல்கிறார். ஆனால், சில சமயங்களில் என்ன சொல்லி ஜெபம் செய்வதென்றே நமக்குத் தெரியாமல் இருக்கலாம். நம்முடைய உணர்வுகளை வார்த்தைகளில் சொல்ல முடியாமல் நாம் திணறலாம். அந்த மாதிரி சமயங்களிலும் ஜெபம் செய்யச் சொல்லி யெகோவா நம்மை அன்பாக கேட்டுக்கொள்கிறார்.—ரோ. 8:26, 27.

பைபிள் வழியாக யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார் (பாரா 10)

10. எபிரெயர் 4:12 சொல்கிறபடி, பைபிளைத் தினமும் வாசிப்பதும் அதை ஆழமாக யோசித்துப் பார்ப்பதும் ஏன் ரொம்ப முக்கியம்?

10 பைபிள். பலத்துக்காகவும் ஆறுதலுக்காகவும் பவுல் எப்படி வேதவசனங்களை நம்பியிருந்தாரோ அதே மாதிரி இன்றைக்கு நாமும் நம்பியிருக்கலாம். (ரோ. 15:4) பைபிளை நாம் நன்றாகப் படித்து ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, படித்த விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அது நம்முடைய சூழ்நிலைமைக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதை யோசித்துப் பார்ப்பதற்கும் யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுப்பார். (எபிரெயர் 4:12-ஐ வாசியுங்கள்.) நாம் ஏற்கெனவே பார்த்த ரோனால்டு இப்படிச் சொல்கிறார்: “தினமும் ராத்திரி பைபிள் படிக்கிற பழக்கம் எனக்கு இருக்கு. அத நினைச்சு நான் சந்தோஷப்படறேன். யெகோவாவோட குணத்த பத்தியும் தன்னோட ஊழியர்கள்கிட்ட அவர் எவ்வளவு அன்பா நடந்துக்கிறாருங்கறத பத்தியும் நிறைய யோசிப்பேன். இப்படி செய்றதால இழந்துபோன பலம் திரும்பவும் எனக்கு கிடைக்குது.”

11. கணவனை இழந்த ஒரு சகோதரியை பைபிள் எப்படிப் பலப்படுத்தியது?

11 பைபிளை படித்து நன்றாக யோசித்துப் பார்க்கும்போது நம்முடைய சூழ்நிலைமையைப் பற்றி சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள முடியும். இப்படிச் செய்தது கணவனை இழந்த ஒரு சகோதரிக்கு உதவியாக இருந்தது. யோபு புத்தகத்தைப் படிக்கச் சொல்லி ஒரு மூப்பர் அவரிடம் சொன்னார். முதலில் அவர் அந்தப் புத்தகத்தைப் படித்தபோது யோபுவைப் பற்றி அவர் தப்பாக நினைத்தார். “யோபு, நீங்க ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறீங்க” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார். ஆனால், யோபு மாதிரிதான் இவரும் யோசித்திருக்கிறார் என்பதை அப்புறம்தான் புரிந்துகொண்டார். அப்படிப் புரிந்துகொண்டதால் அவர் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள முடிந்தது. கணவனை இழந்த துக்கத்தைச் சமாளிப்பதற்கான பலமும் அவருக்குக் கிடைத்தது.

சகோதர சகோதரிகள் வழியாக யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார் (பாரா 12)

12. சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி யெகோவா நம்மை எப்படிப் பலப்படுத்துகிறார்?

12 சகோதர சகோதரிகள். இந்த வழியிலும் யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார். சகோதர சகோதரிகளைப் பார்த்து, “ஒருவருக்கொருவர் உற்சாகம் பெற” ஏங்குவதாக பவுலும் எழுதினார். (ரோ. 1:11, 12) நாம் ஏற்கெனவே பார்த்த மேரி, சகோதர சகோதரிகளுடைய நட்பை உயர்வாக மதிக்கிறார். “என்னோட கஷ்டத்த பத்தி தெரியாத சகோதர சகோதரிகள வெச்சுகூட யெகோவா என்னை பலப்படுத்துவாரு. என்னை பலப்படுத்துற மாதிரி அவங்க ஏதாவது சொல்வாங்க, இல்லேனா கார்டு அனுப்புவாங்க. அந்தச் சமயத்தில் அதுதான் எனக்கு ரொம்பத் தேவையா இருந்திருக்கும். அதுமட்டுமில்ல, என்னை மாதிரியே கஷ்டப்பட்ட சகோதரிகள்கிட்ட மனசுவிட்டு பேச முடிஞ்சது. அவங்க அனுபவங்கள்ல இருந்தும் நிறைய கத்துக்க முடிஞ்சது. சகோதர சகோதரிகள் என்மேல ரொம்ப அன்பு வெச்சிருக்காங்கன்றத மூப்பர்கள் எப்பவும் எனக்கு ஞாபகப்படுத்துவாங்க” என்று மேரி சொல்கிறார்.

13. சபைக் கூட்டங்களில் நாம் எப்படி ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம்?

13 சகோதர சகோதரிகளை நாம் நிறைய சமயங்களில் உற்சாகப்படுத்தலாம். அதற்கு முக்கியமான ஒரு சமயம் என்றால், சபைக் கூட்டங்களுக்கு கூடி வருவதைப் பற்றிச் சொல்லலாம். அப்படிக் கூடி வரும்போது சகோதர சகோதரிகள்மேல் பாசத்தைக் காட்டுவதற்கும் அவர்களை பாராட்டுவதற்கும் நீங்கள் ஏதாவது சொல்லலாம், இல்லையா? பீட்டர் என்ற ஒரு மூப்பர் ஒரு தடவை சபைக் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னாடி ஒரு சகோதரியை உற்சாகப்படுத்தினார். அந்தச் சகோதரியின் கணவர் சத்தியத்தில் இல்லை. “உங்கள இங்க பாக்கறது எங்க எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? உங்க ஆறு பிள்ளைகளயும் நீங்க ரெடி பண்ணி, குறிப்புகள சொல்லிக்கொடுத்து கூட்டங்களுக்கு கூட்டிக்கிட்டு வர்றீங்க” என்று அந்தச் சகோதரியிடம் சொன்னார். இதைக் கேட்டதும் அந்தச் சகோதரிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவருக்கு கண்ணீரே வந்துவிட்டது. “உண்மையச் சொன்னா, இன்னைக்கு என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நீங்க சொன்னத கேட்டது என் மனசுக்கு இதமா இருக்கு” என்று அந்தச் சகோதரி சொன்னார்.

ஊழியம் செய்யும்போது யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார் (பாரா 14)

14. ஊழியம் செய்வது நமக்கு எப்படி நன்மையைத் தருகிறது?

14 ஊழியம். பைபிள் சத்தியங்களை மற்றவர்களிடம் சொல்லும்போது, அதை அவர்கள் ஆர்வமாக கேட்டாலும்சரி, கேட்காவிட்டாலும்சரி, நமக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது. (நீதி. 11:25) சகோதரி ஸ்டேசியும் இதை அனுபவித்திருக்கிறார். அவருடைய குடும்பத்தில் இருக்கிற ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டார். அந்தச் சமயத்தில் அவர் அப்படியே மனம் உடைந்துபோய்விட்டார். ‘நான் இன்னும் ஏதாவது உதவி செஞ்சிருக்கனுமோ?’ என்ற எண்ணம் அவருடைய மனதைக் குடைந்துகொண்டே இருந்தது. வேறு எதைப் பற்றியும் அவரால் யோசிக்க முடியவில்லை. இந்தச் சூழ்நிலைமையைச் சமாளிப்பதற்கு எது அவருக்கு உதவியது? ஊழியம்தான்! ஊழியத்துக்குப் போனபோது, மற்ற மக்களுடைய தேவைகளைப் பற்றி அவர் யோசிக்க ஆரம்பித்தார். “அந்தச் சமயத்தில யெகோவா எனக்கு ஒரு பைபிள் படிப்பு கொடுத்தாரு. அவங்க வேகமா முன்னேற்றம் செய்ய ஆரம்பிச்சாங்க. அது எனக்கு உற்சாகமா இருந்துச்சு. ஊழியம்தான் எனக்கு தெம்பு குடுக்குது” என்று அவர் சொல்கிறார்.

15. மேரி சொன்னதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

15 சூழ்நிலை மாறும்போது, ‘என்னால் அதிகமா ஊழியம் செய்ய முடியலையே’ என்று நினைத்து சிலர் கவலைப்படுகிறார்கள். நீங்களும் கவலைப்படுகிறீர்களா? அப்படியென்றால், உங்களால் முடிந்ததைச் செய்யும்போது யெகோவா அதைப் பார்த்துச் சந்தோஷப்படுகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். நாம் ஏற்கெனவே பார்த்த மேரி, வேறொரு மொழி பேசுகிற சபைக்கு மாறிப் போனார். அந்தச் சமயத்தில் அவ்வளவாக எதுவும் செய்ய முடியவில்லையே என்று நினைத்து கவலைப்பட்டார். “கொஞ்ச நாள் வரைக்கும் கூட்டத்துல என்னால சின்ன சின்ன பதிலதான் சொல்ல முடிஞ்சது. இல்லேனா ஒரு வசனத்த மட்டும்தான் வாசிக்க முடிஞ்சது. ஊழியத்திலயும் என்னால துண்டுப்பிரதிய மட்டும்தான் குடுக்க முடிஞ்சது” என்று அவர் சொல்கிறார். அந்த மொழியைச் சரளமாகப் பேசுகிற சகோதர சகோதரிகள் செய்வது போல் தன்னால் செய்ய முடியவில்லையே என்று நினைத்து கவலைப்பட்டார். ஆனாலும், தன்னுடைய எண்ணத்தை அவர் மாற்றிக்கொண்டார். அதிகமாக செய்ய முடியவில்லை என்றாலும் யெகோவா தன்னைப் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொண்டார். “மக்களால புரிஞ்சுக்க முடியாதளவுக்கு பைபிள் சத்தியங்கள் அவ்வளவு கஷ்டம் இல்ல. அவங்களோட வாழ்க்க மார்றது அந்த சத்தியத்தாலதான். நாம ஒரு மொழிய எவ்வளவு சரளமா பேசறோம்ங்கறத பொறுத்து இல்ல” என்று அவர் சொல்கிறார்.

16. வீட்டைவிட்டு வெளியே போக முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு எப்படிப் பலம் கிடைக்கும்?

16 வீட்டைவிட்டு வெளியே போய் ஊழியம் செய்ய முடியாத சூழ்நிலை சிலருக்கு இருக்கலாம். ஆனால், ஊழியம் செய்ய வேண்டுமென்ற தீராத ஆசை அவருக்கு இருக்கலாம். யெகோவா அதைப் பார்க்கிறார், சந்தோஷப்படுகிறார். அந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கிறவர்களைப் பார்க்க வருகிறவர்களிடமும், அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களிடமும் பைபிளைப் பற்றிப் பேசுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பார். ஆனால், முன்பு போல் இப்போது ஊழியம் செய்ய முடியவில்லையே என நினைத்து நாம் கவலைப்பட்டோம் என்றால் நாம் சோர்ந்துவிடுவோம். இப்போது யெகோவா நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டோம் என்றால், எப்பேர்ப்பட்ட கஷ்டம் இருந்தாலும் அதைச் சந்தோஷத்தோடு சமாளிப்பதற்கு தேவையான பலம் நமக்குக் கிடைக்கும்.

17. உடனடியாகப் பலன் தராததுபோல் தெரிந்தாலும் தொடர்ந்து ஊழியம் செய்வது ஏன் முக்கியம் என்பதை பிரசங்கி 11:6 எப்படிக் காட்டுகிறது?

17 நாம் விதைக்கிற எந்த விதை முளைக்கும் என்று நமக்குத் தெரியாது. (பிரசங்கி 11:6-ஐ வாசியுங்கள்.) இப்போது, 80 வயதைத் தாண்டிய சகோதரி பார்பராவின் அனுபவத்தைக் கவனிக்கலாம். போன் வழியாகவும் கடிதம் வழியாகவும் சாட்சி கொடுப்பது அவரது வழக்கம். இப்படி, ஒரு தடவை கடிதம் வழியாகச் சாட்சி கொடுத்தபோது, மார்ச் 1, 2014 ஆங்கில காவற்கோபுரத்தையும் சேர்த்து அனுப்பியிருந்தார். அதில், “கடவுள் உங்களுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார்” என்ற ஒரு கட்டுரை இருந்தது. இவர் யாருக்குக் கடிதம் எழுதினாரோ அந்தத் தம்பதி ஒருகாலத்தில் யெகோவாவின் சாட்சியாக இருந்தவர்கள். ஆனால், இந்த விஷயம் சகோதரி பார்பராவுக்குத் தெரியாது. அந்தத் தம்பதி திரும்பத் திரும்ப அந்தப் பத்திரிகையைப் படித்தார்கள். யெகோவாவே தன்னிடம் நேரடியாகப் பேசுவதாக அந்தக் கணவர் நினைத்தார். கணவனும் மனைவியுமாக கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட 27 வருஷங்களுக்கு அப்புறம் மறுபடியும் யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள். ஒரு கடிதம் எழுதியது எவ்வளவு பெரிய பலனைக் கொடுத்திருக்கிறது, பார்த்தீர்களா? இது சகோதரி பார்பராவை எந்தளவுக்குப் பலப்படுத்தியிருக்கும்!

1. ஜெபம், 2. பைபிள், 3. சகோதர சகோதரிகள், 4. ஊழியம் இந்த வழிகளில் யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார் (பாராக்கள் 9-10, 12, 14)

18. யெகோவாவிடமிருந்து பலம் கிடைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

18 ஜெபம்... பைபிள்... சகோதர சகோதரிகளின் நட்பு... ஊழியம்... இந்த எல்லா வழிகளிலும் யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார். இந்த எல்லாவற்றையும் நாம் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டோம் என்றால், நம்மைப் பலப்படுத்துகிற சக்தி யெகோவாவுக்கு இருக்கிறது என்பதையும் நமக்கு உதவி செய்வதற்கு அவர் தயாராக இருக்கிறார் என்பதையும் நாம் நம்புகிறோம் என்று அர்த்தம். யெகோவா, ‘தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்கு தன்னுடைய பலத்தைக் காட்டுகிறார்.’ அதனால், நாம் எப்போதுமே அவரை நம்பியிருக்கலாம்.—2 நா. 16:9.

பாட்டு 61 சாட்சிகளே, முன்னே செல்லுங்கள்!

^ இன்றைக்கு நாம் நிறைய பிரச்சினைகளுடன் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அதையெல்லாம் சமாளிப்பதற்கு யெகோவா நமக்கு உதவுவார். அப்போஸ்தலன் பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் நிறைய பிரச்சினைகள் இருந்தன. ஆனாலும், தொடர்ந்து அவர்கள் சேவை செய்வதற்கு யெகோவா உதவினார். இதைப் பற்றியும் இன்றைக்கு நமக்கு எந்த நான்கு வழிகளில் அவர் உதவுகிறார் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

^ பெயர் மாற்றப்பட்டுள்ளது.

^ படவிளக்கம்: பவுல் ரோமில் வீட்டுக்காவலில் இருக்கும்போது, நிறைய சபைகளுக்குக் கடிதம் எழுதுகிறார், அவரைப் பார்க்க வந்தவர்களிடம் பிரசங்கிக்கிறார்.

^ படவிளக்கம்: தீமோத்தேயு சபைகளைச் சந்திக்கும்போது அங்கிருக்கிற சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துகிறார்.