படிப்புக் கட்டுரை 22
நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஞானம்
“யெகோவாவே ஞானத்தைக் கொடுக்கிறார்.”—நீதி. 2:6.
பாட்டு 89 கேட்போம், கடைப்பிடிப்போம், ஆசி பெறுவோம்
இந்தக் கட்டுரையில்... *
1. யெகோவா கொடுக்கிற ஞானம் நம் எல்லாருக்கும் ஏன் தேவை? (நீதிமொழிகள் 4:7)
நீங்கள் எப்போதாவது ரொம்ப முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் கண்டிப்பாக ஞானத்துக்காக ஜெபம் செய்திருப்பீர்கள். ஏனென்றால், நல்ல தீர்மானத்தை எடுக்க அது ரொம்ப முக்கியம் என்று உங்களுக்குத் தெரியும். (யாக். 1:5) “எல்லாவற்றையும்விட ஞானம்தான் முக்கியம்” என்று சாலொமோன் ராஜாவும் எழுதியிருக்கிறார். (நீதிமொழிகள் 4:7-ஐ வாசியுங்கள்.) உலகம் கொடுக்கிற ஞானத்தைப் பற்றி இங்கே சாலொமோன் பேசவில்லை. யெகோவா கொடுக்கிற ஞானத்தைப் பற்றித்தான் பேசியிருக்கிறார். (நீதி. 2:6) ஆனால், இன்றைக்கு நமக்கு வருகிற பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு கடவுள் கொடுக்கிற ஞானம் உதவுமா? கண்டிப்பாக உதவும்! எப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
2. நாம் உண்மையிலேயே ஞானமுள்ளவர்களாக ஆவதற்கு ஒரு வழி என்ன?
2 நாம் உண்மையிலேயே ஞானமுள்ளவர்களாக ஆவதற்கு ஒரு வழி, ஞானத்துக்குப் பேர்போன இரண்டு பேர் சொல்லிக்கொடுத்த விஷயங்களை ஆராய்ச்சி செய்து பார்ப்பதும் அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும்தான். முதலில் நாம் சாலொமோனைப் பற்றிப் பார்க்கலாம். “சாலொமோனுக்கு ஞானத்தையும் பகுத்தறிவையும் மிக அதிகமாகக் கடவுள் கொடுத்தார்” என்று பைபிள் சொல்கிறது. (1 ரா. 4:29) இரண்டாவதாக, நாம் இயேசுவைப் பற்றிப் பார்க்கலாம். இந்தப் பூமியில் வாழ்ந்தவர்களிலேயே இயேசுதான் ரொம்ப ஞானமுள்ளவராக இருந்தார். (மத். 12:42) அதனால்தான் இயேசுவைப் பற்றி ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்கிறது: “யெகோவாவின் சக்தி அவர்மேல் தங்கியிருக்கும். அது அவருக்கு ஞானத்தையும், புரிந்துகொள்ளும் திறனையும் கொடுக்கும்.”—ஏசா. 11:2.
3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
3 கடவுள் கொடுத்த ஞானத்தைப் பயன்படுத்தி சாலொமோனும் இயேசுவும் முக்கியமான விஷயங்களைப் பற்றி நல்ல ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதில் மூன்று விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். பண விஷயத்தில்... வேலை விஷயத்தில்... நம்மை நாமே பார்க்கிற விஷயத்தில்... சமநிலையாக இருப்பது ஏன் முக்கியம் என்று பார்க்கலாம்.
பண விஷயத்தில் சமநிலை
4. சாலொமோனுக்கும் இயேசுவுக்கும் ஒரே மாதிரியான வசதி வாய்ப்புகள் இருந்ததா? விளக்குங்கள்.
4 சாலொமோன் ஒரு கோடீஸ்வரராக இருந்தார். அவர் பெரிய மாளிகையில் வாழ்ந்தார். (1 ரா. 10:7, 14, 15) ஆனால் இயேசுவுக்கு நிறைய பொருள்களோ சொந்தமாக ஒரு வீடோ இல்லை. (மத். 8:20) இருந்தாலும், பண விஷயத்தில் இவர்கள் இரண்டு பேருமே சமநிலையாக இருந்தார்கள். ஏனென்றால், இவர்கள் இரண்டு பேருக்குமே ஞானத்தைக் கொடுத்தது யெகோவாதான்.
5. பண விஷயத்தில் சாலொமோன் எப்படிச் சமநிலையாக இருந்தார்?
5 ‘பணம் பாதுகாப்பு தரும்’ என்று சாலொமோன் சொன்னார். (பிர. 7:12) பணத்தை வைத்து நம் வாழ்க்கைக்குத் தேவையானதை வாங்க முடியும். நாம் ஆசைப்படுகிற சில விஷயங்களைக்கூட வாங்க முடியும். இருந்தாலும், பணத்தைவிட முக்கியமான சில விஷயங்கள் இருப்பதைப் பணக்காரராக இருந்த சாலொமோன் புரிந்துவைத்திருந்தார். உதாரணத்துக்கு, “நிறைய சொத்துகளைச் சம்பாதிப்பதைவிட நல்ல பெயரைச் சம்பாதிப்பது சிறந்தது” என்று அவர் எழுதினார். (நீதி. 22:1) பணம் பணம் என்று அதன் பின்னாலேயே போகிறவர்கள், இருப்பதை வைத்துத் திருப்தியாக இருக்க மாட்டார்கள் என்று சாலொமோன் சொன்னார். (பிர. 5:10, 12) அதுமட்டுமல்ல, பணத்தை ஒரு பெரிய கோட்டையாக நம்ப வேண்டாம் என்றும் அவர் சொன்னார். ஏனென்றால், பணம் திடீரென்று ஒருநாள் இல்லாமல் போய்விடலாம்.—நீதி. 23:4, 5.
6. பணம், பொருள் விஷயத்தில் இயேசு எப்படிச் சமநிலையாக இருந்தார்? (மத்தேயு 6:31-33)
6 இயேசுவும்கூட பணம், பொருள் விஷயத்தில் சமநிலையாக இருந்தார். அவர் சாப்பாட்டையும் திராட்சமதுவையும் சந்தோஷமாக அனுபவித்து சாப்பிட்டார். (லூக். 19:2, 6, 7) ஒரு சந்தர்ப்பத்தில் ரொம்பத் தரமான திராட்சமதுவைச் செய்தார். அதுதான் அவர் செய்த முதல் அற்புதம். (யோவா. 2:10, 11) அவர் இறந்த அன்றுகூட ரொம்ப விலை உயர்ந்த துணியைப் போட்டிருந்தார். (யோவா. 19:23, 24) ஆனால் வாழ்க்கையில் பணம், பொருளுக்கே அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சொல்லப்போனால், “யாராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது” என்று தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். (மத். 6:24) கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுத்தால் யெகோவா நம்முடைய தேவைகளைப் பார்த்துக்கொள்வார் என்று இயேசு சொல்லிக்கொடுத்தார்.—மத்தேயு 6:31-33-ஐ வாசியுங்கள்.
7. பண விஷயத்தில் சமநிலையாக இருந்ததால் ஒரு சகோதரர் எப்படி நன்மை அடைந்திருக்கிறார்?
7 பண விஷயத்தில் பைபிள் சொல்கிற ஞானமான ஆலோசனைகளைக் கடைப்பிடித்ததால் நம்முடைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் நன்மை அடைந்திருக்கிறார்கள். டேனியேல் என்ற கல்யாணமாகாத சகோதரருடைய அனுபவத்தைக் கவனிக்கலாம். “டீனேஜ் வயசுல இருக்குறப்போ, யெகோவாவுக்கு சேவை செய்றதுதான் என் வாழ்க்கைல முக்கியமா இருக்கணும்னு நான் முடிவெடுத்தேன்” என்று அவர் சொல்கிறார். டேனியேல் அவருடைய வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டதால் அவருடைய நேரத்தையும் திறமைகளையும் யெகோவாவுடைய அமைப்பில் நிறைய வேலைகளைச் செய்வதற்காகப் பயன்படுத்த முடிந்தது. “உண்மைய சொல்லணும்னா, நான் எடுத்த இந்த முடிவ நினைச்சு நான் வருத்தப்பட்டதே இல்ல. என்னோட வாழ்க்கையில நான் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தா, நிறைய பணம் சம்பாதிச்சிருக்கலாம். ஆனா, இப்ப எனக்கு இருக்குற அருமையான நண்பர்கள் யாருமே கிடைச்சிருக்க மாட்டாங்க. கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்குறேங்கிற திருப்தியும் எனக்கு கிடைச்சிருக்காது. யெகோவா எனக்கு கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களோட ஒப்பிடுறப்போ பணம், பொருள் எல்லாம் ஒண்ணுமே இல்ல” என்று டேனியேல் சொல்கிறார். நாமும் பணம், பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், யெகோவாவுக்கு சேவை செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று இதிலிருந்து தெரிகிறது.
வேலை விஷயத்தில் சமநிலை
8. வேலை விஷயத்தில் சாலொமோன் சமநிலையாக இருந்தார் என்று நமக்கு எப்படித் தெரியும்? (பிரசங்கி 5:18, 19)
8 கடினமாக உழைப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை “கடவுள் தரும் பரிசு” என்று சாலொமோன் சொன்னார். (பிரசங்கி 5:18, 19-ஐ வாசியுங்கள்.) “எல்லா விதமான கடின உழைப்பும் நல்ல பலனைத் தரும்” என்றும் அவர் எழுதினார். (நீதி. 14:23) இந்த வார்த்தைகள் ரொம்பவே உண்மை என்று சாலொமோனுக்குத் தெரியும். ஏனென்றால், அவர் ஒரு கடின உழைப்பாளியாக இருந்தார். அவர் தனக்காக நிறைய மாளிகைகளைக் கட்டினார், திராட்சைத் தோட்டங்களையும் பூங்காக்களையும் அமைத்தார், குளங்களை வெட்டினார், நிறைய நகரங்களையும் கட்டினார். (1 ரா. 9:19; பிர. 2:4-6) அவருடைய கடின உழைப்பால் அவருக்குச் சந்தோஷம் கிடைத்தது. ஆனால் உண்மையான சந்தோஷம் கிடைக்க வேண்டுமென்றால் வேறு சில விஷயங்களையும் செய்ய வேண்டும் என்பதை சாலொமோன் புரிந்துவைத்திருந்தார். அவர் யெகோவாவுக்காகவும் கடினமாக உழைத்தார். உதாரணத்துக்கு, யெகோவாவை வணங்குவதற்காக பிரமாண்டமான ஒரு ஆலயத்தைக் கட்டும் வேலையை அவர் மேற்பார்வை செய்தார். அந்த வேலை ஏழு வருஷங்களுக்கு நடந்தது. (1 ரா. 6:38; 9:1) இப்படி வித்தியாசமான நிறைய வேலைகளைச் செய்த பிறகு, சாலொமோன் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார். ஒரு நபர் யெகோவாவுக்காகக் கடினமாக உழைப்பதுதான் வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால்தான் அவர் இப்படி எழுதினார்: “இதுவரை சொன்ன விஷயங்களின் சாராம்சம் என்னவென்றால், உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.”—பிர. 12:13.
9. வேலைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்காதபடி இயேசு எப்படிப் பார்த்துக்கொண்டார்?
9 இயேசுவும்கூட ஒரு கடின உழைப்பாளியாக இருந்தார். அவர் இளம் வயதில் மர வேலை செய்தார். (மாற். 6:3) அவருடைய குடும்பம் ரொம்பப் பெரியதாக இருந்ததால், குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக அவருடைய பெற்றோர் கடினமாக உழைத்தார்கள். குடும்பத்துக்காக இயேசுவும் உழைத்ததை நினைத்து அவர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்கள். இயேசு பரிபூரணமான ஒரு மனிதராக இருந்ததால் அவருடைய வேலையும் பக்காவாக இருந்திருக்கும். அதனால், அவர் செய்த பொருள்களுக்கு ரொம்ப மவுசு இருந்திருக்கும்! இயேசு தன்னுடைய வேலையை ரொம்ப சந்தோஷமாக செய்திருப்பார். ஆனாலும், யெகோவாவை வணங்குவதற்கும் நேரம் இருக்கும்படி அவர் பார்த்துக்கொண்டார். (யோவா. 7:15) பின்பு அவர் ஒரு முழுநேர ஊழியராக ஆனபோது, தன்னுடைய போதனைகளைக் கேட்க வந்தவர்களிடம் இப்படிச் சொன்னார்: “அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, முடிவில்லாத வாழ்வைத் தரும் அழியாத உணவுக்காகவே பாடுபடுங்கள்.” (யோவா. 6:27) அதுமட்டுமல்ல, “பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்” என்று மலைப் பிரசங்கத்தில் இயேசு சொல்லிக்கொடுத்தார்.—மத். 6:20.
10. கடினமாக வேலை செய்கிறவர்களுக்கு என்ன பிரச்சினை வரலாம்?
10 வேலை விஷயத்தில் சமநிலையாக இருப்பதற்கு யெகோவா தருகிற ஞானமான ஆலோசனைகள் நமக்கு உதவும். நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதால், “பாடுபட்டு நேர்மையாக உழைக்க வேண்டும்” என்று நமக்குத் தெரியும். (எபே. 4:28) நாம் நேர்மையாக இருப்பதையும் கடினமாக உழைப்பதையும் நம்முடைய முதலாளிகள் பார்க்கலாம். நாம் நன்றாக வேலை செய்வதாக அவர்கள் பாராட்டலாம். அதனால், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் வர வேண்டும் என்பதற்காக நமக்கே தெரியாமல் நிறைய நேரம் நாம் வேலை செய்ய ஆரம்பித்துவிடலாம். ஒருவேளை, நல்ல எண்ணத்தோடு நாம் அப்படிச் செய்யலாம். ஆனால், சீக்கிரத்திலேயே யெகோவாவுக்கும் குடும்பத்துக்கும் வேண்டியதைச் செய்வதற்கு நமக்கு நேரம் இல்லை என்பது புரியலாம். அந்த மாதிரி சூழ்நிலையில் நாம் உடனடியாக மாற்றங்கள் செய்ய வேண்டும். முக்கியமான விஷயங்களுக்கு நேரம் இருக்கும்படி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
11. வேலை விஷயத்தில் சமநிலையாக இருப்பதைப் பற்றி ஒரு சகோதரர் என்ன தெரிந்துகொண்டார்?
11 வில்யம் என்ற இளம் சகோதரர் வேலை விஷயத்தில் சமநிலையாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் கண்ணாரப் பார்த்திருக்கிறார். ஒரு மூப்பரிடம் முன்பு அவர் வேலை செய்தார். அந்த மூப்பரைப் பற்றி வில்யம் இப்படிச் சொல்கிறார்: “வேலை விஷயத்துல சமநிலையா இருக்குறதுல அவர் ஒரு நல்ல உதாரணமா இருந்தாரு. அவர் ரொம்ப கடினமா வேலை செய்வாரு. அவருடைய வேலை ரொம்ப தரமா இருந்ததால வாடிக்கையாளர்கள் எல்லாருக்கும் அவரை ரொம்ப பிடிச்சிருந்துச்சு. இருந்தாலும், வேலை நேரம் முடிஞ்சதும் எல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சுட்டு குடும்பத்துக்காகவும் யெகோவாவுக்காகவும் அவர் நேரம் செலவு செய்வாரு. இன்னொரு விஷயம் என்னென்னா அவர் எப்பவுமே ரொம்ப சந்தோஷமா இருப்பாரு!” *
நம்மை நாமே பார்க்கிற விஷயத்தில் சமநிலை
12. சாலொமோன் ஆரம்பத்தில் தன்னைப் பற்றி எப்படிச் சமநிலையாக யோசித்தார்? ஆனால் பிறகு எப்படி நடந்துகொண்டார்?
12 இளம் வயதிலிருந்த சாலொமோன், ராஜாவான புதிதில் தன்னைப் பற்றிச் சமநிலையாக யோசித்தார். தன்னுடைய வரம்புகளைப் புரிந்து நடந்துகொண்டார். யெகோவாவிடம் ஆலோசனை கேட்டார். (1 ரா. 3:7-9) பெருமையாக நடந்துகொள்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்து வைத்திருந்தார். அதனால் “அகம்பாவம் வந்தால் அழிவு வரும். ஆணவம் வந்தால் அடிசறுக்கும்” என்று அவர் எழுதினார். (நீதி. 16:18) வருத்தமான விஷயம் என்னவென்றால், அவர் சொன்ன இந்த ஆலோசனைக்கு அவரே கீழ்ப்படியாமல் போய்விட்டார். ஒரு கட்டத்தில், யெகோவாவுடைய கட்டளைகளை மதிக்காமல் அகம்பாவத்துடன் நடந்துகொண்டார். உதாரணத்துக்கு, எபிரெய ராஜாக்களுக்கு யெகோவா ஒரு கட்டளை கொடுத்திருந்தார். “ராஜாவின் இதயம் கடவுளைவிட்டு விலகாமல் இருக்க வேண்டுமானால் அவர் நிறைய மனைவிகளை வைத்துக்கொள்ளக் கூடாது” என்று சொல்லியிருந்தார். (உபா. 17:17) ஆனால் சாலொமோன் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் 700 மனைவிகளையும் 300 மறுமனைவிகளையும் வைத்துக்கொண்டார். அவர்களில் நிறைய பேர் சிலைகளை வணங்கினார்கள். (1 ரா. 11:1-3) ஒருவேளை சாலொமோன், “இதனால எனக்கு எந்த பிரச்சினையும் வராது” என்று நினைத்திருக்கலாம். ஆனால், யெகோவாவுடைய பேச்சைக் கேட்காமல் போனதால் வந்த மோசமான விளைவுகளை அவர் அனுபவித்தார்.—1 ரா. 11:9-13.
13. இயேசு மனத்தாழ்மையாக நடந்துகொண்டதைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
13 இயேசு தன்னைப் பற்றிச் சமநிலையாக யோசித்தார். மனத்தாழ்மையாக நடந்துகொண்டார். அவர் பூமிக்கு வருவதற்கு முன்பு யெகோவாவுடன் சேர்ந்து நிறைய அற்புதமான விஷயங்களைச் செய்தார். எப்படியென்றால், “பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை எல்லாம் அவர் மூலம்தான் படைக்கப்பட்டன” என்று பைபிள் சொல்கிறது. (கொலோ. 1:16) அப்பாவோடு சேர்ந்து செய்த இந்த வேலைகள் எல்லாம் ஞானஸ்நானம் எடுத்தபோது அவருக்கு ஞாபகம் வந்திருக்கும். (மத். 3:16; யோவா. 17:5) ஆனால், அதையெல்லாம் நினைத்து அவர் பெருமையாக நடந்துகொள்ளவில்லை. மற்றவர்களைவிட தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளவும் இல்லை. சொல்லப்போனால், “மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்குமே” வந்ததாக அவர் சீஷர்களிடம் சொன்னார். (மத். 20:28) அவரால் எதையுமே சொந்தமாகச் செய்ய முடியாது என்று அடக்கத்தோடு சொன்னார். (யோவா. 5:19) அவருக்கு எவ்வளவு மனத்தாழ்மை, இல்லையா? அவர் நமக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறார்.
14. நம்மைப் பற்றி சமநிலையாக யோசிக்க இயேசு சொன்ன வார்த்தைகள் எப்படி உதவுகின்றன?
14 நம்மைப் பற்றி நாம் சமநிலையாக யோசிக்க வேண்டும் என்று இயேசு தன்னுடைய சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். “உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது” என்று இயேசு ஒருசமயம் அவர்களிடம் சொன்னார். (மத். 10:30) இந்த வார்த்தைகள் நமக்கு ஆறுதலாக இருக்கிறது. அதுவும் நமக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தால், இது ரொம்பவே ஆறுதலாக இருக்கும்! யெகோவா நம்மேல் ரொம்ப அக்கறை வைத்திருக்கிறார் என்பதையும் அவருடைய பார்வையில் நாம் விலைமதிப்புள்ளவர்களாக இருக்கிறோம் என்பதையும் இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. ஒருவேளை, யெகோவாவை வணங்குவதற்கும் புதிய உலகத்தில் வாழ்வதற்கும் நமக்குத் தகுதியில்லை என்று நினைத்தோம் என்றால் நம்மைப் பற்றி யெகோவா யோசிப்பதையே தவறென்று நாம் நினைப்பதுபோல் ஆகிவிடும்.
15. (அ) நம்மைப் பற்றிச் சமநிலையாக யோசிப்பது சம்பந்தமாக காவற்கோபுர பத்திரிகை என்ன சொல்கிறது? (ஆ) பக்கம் 24-ல் இருக்கிற படம் காட்டுகிறபடி நம்மைப் பற்றி அளவுக்கு அதிகமாக யோசித்தோம் என்றால் என்ன ஆசீர்வாதங்களை நாம் இழந்துவிடலாம்?
15 நம்மை நாமே பார்க்கிற விஷயத்தில் சமநிலையாக இருப்பதைப் பற்றிக் கிட்டத்தட்ட 15 வருஷங்களுக்கு முன்பு வந்த ஒரு காவற்கோபுர பத்திரிகையில் இப்படிச் சொல்லியிருந்தது: “தற்பெருமை கொள்ளும் அளவுக்கு நம்மைப் பற்றி நாம் மிதமிஞ்சி எண்ண விரும்ப மாட்டோம்; அதேபோல், நம்மைப் பற்றி நாம் மிகத் தாழ்வாகவும் எண்ணக் கூடாது. மாறாக, நம்மைப் பற்றி நியாயமான கண்ணோட்டத்தை—நம்முடைய பலங்களையும் பலவீனங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் கண்ணோட்டத்தை—வளர்த்துக்கொள்வதே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். இதைக் குறித்து கிறிஸ்தவ பெண்மணி ஒருவர் இவ்வாறு கூறினார்: ‘நான் மகா மோசமானவளும் அல்ல, வானத்திலிருந்து குதித்தவளும் அல்ல. என்னிடம் நல்ல குணங்களும் இருக்கின்றன, கெட்ட குணங்களும் இருக்கின்றன, எல்லோரும் அப்படித்தான்.’” * நம்மை நாமே பார்க்கிற விஷயத்தில் சமநிலையாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்று இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது, இல்லையா?
16. நமக்கு ஞானமான ஆலோசனைகளை யெகோவா ஏன் கொடுக்கிறார்?
16 தன்னுடைய வார்த்தை மூலமாக யெகோவா நமக்கு ஞானமான ஆலோசனைகளைக் கொடுக்கிறார். அவர் நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார். நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். (ஏசா. 48:17, 18) நம்முடைய வாழ்க்கையில் யெகோவாவுடைய சேவைக்கு முதலிடம் கொடுப்பதுதான் ஞானமான விஷயமாக இருக்கும். அதுதான் நமக்கு உண்மையான சந்தோஷத்தையும் கொடுக்கும். அப்படி நாம் செய்யும்போது நிறைய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க முடியும். அதாவது பணத்துக்கோ... வேலைக்கோ... தங்களுக்கோ... அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவர்களுக்கு வருகிற பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க முடியும். அதனால், ஞானமாக நடக்கவும் யெகோவாவுடைய இதயத்தைச் சந்தோஷப்படுத்தவும் நாம் தீர்மானமாக இருக்கலாம்.—நீதி. 23:15.
பாட்டு 94 கடவுளுடைய வார்த்தைக்கு நன்றி!
^ சாலொமோனும் இயேசுவும் ஞானத்துக்குப் பேர்போனவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு அந்த ஞானத்தை கொடுத்தது யெகோவா அப்பாதான். பண விஷயத்தில்... வேலை விஷயத்தில்... நம்மை நாமே பார்க்கிற விஷயத்தில்... எப்படிச் சமநிலையாக இருக்கலாம் என்பதைப் பற்றி சாலொமோனும் இயேசுவும் சொன்ன ஆலோசனைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இந்த மூன்று விஷயங்களைப் பற்றி பைபிள் சொல்கிற ஆலோசனைகளின்படி நடந்ததால் நம் சகோதர சகோதரிகள் எப்படி நன்மை அடைந்திருக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.
^ “கடின உழைப்பு சந்தோஷத்தைத் தரும்—எப்படி?” என்ற கட்டுரையை பிப்ரவரி 1, 2015 ஆங்கில காவற்கோபுரத்தில் பாருங்கள்.
^ “உண்மையான சந்தோஷத்துக்கு பைபிள் வழிகாட்டுகிறது” என்ற கட்டுரையை ஆகஸ்ட் 1, 2005 காவற்கோபுரத்தில் பாருங்கள்.
^ படவிளக்கம்: ஜானும் டாமும் ஒரே சபையில் இருக்கிற இளம் சகோதரர்கள். ஜான் தன்னுடைய காரைப் பார்த்துக்கொள்வதற்கே ரொம்ப நேரம் செலவு செய்கிறார். டாம் தன்னுடைய காரில் மற்றவர்களை ஊழியத்துக்கும் கூட்டங்களுக்கும் கூட்டிக்கொண்டுப் போகிறார்.
^ படவிளக்கம்: ஜான் ஓவர்டைம் செய்துகொண்டிருக்கிறார். அவருடைய முதலாளியைச் சந்தோஷப்படுத்த வேண்டுமென்று நினைப்பதால் வேலை நேரம் முடிந்த பிறகும் முதலாளி கொடுக்கிற வேலைகளைச் செய்கிறார். உதவி ஊழியராக இருக்கிற டாம், அதே சாயங்காலத்தில் மேய்ப்பு சந்திப்பு செய்வதற்காக ஒரு மூப்பருடன் போகிறார். வாரத்தில் சில சாயங்காலங்களில், யெகோவாவை வணங்குவதற்காக நேரம் ஒதுக்கி வைத்திருப்பதாக டாம் ஏற்கெனவே முதலாளியிடம் சொல்லியிருக்கிறார்.
^ படவிளக்கம்: ஜான், தன்னையே ரொம்ப முக்கியமாக நினைக்கிறார். டாம், யெகோவாவை ரொம்ப முக்கியமாக நினைக்கிறார். மாநாட்டு மன்றத்தைப் புதுப்பிக்கும் வேலையைச் செய்யும்போது அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள்.