Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 21

வெளிப்படுத்துதல்—உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது?

வெளிப்படுத்துதல்—உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது?

“ஆமென்! எஜமானாகிய இயேசுவே, வாருங்கள்.”—வெளி. 22:20.

பாட்டு 142 நம்பிக்கை ஒரு நங்கூரம்

இந்தக் கட்டுரையில்... *

1. எல்லா மக்களும் என்ன முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது?

 இன்றைக்கு மக்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தை ஆட்சி செய்வதற்கு உரிமையுள்ள யெகோவாவுக்கு ஆதரவு கொடுப்பதா, அல்லது அவருடைய கொடூரமான எதிரியான சாத்தானுக்கு ஆதரவு கொடுப்பதா என்ற முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவரும் யாராவது ஒருவருக்கு ஆதரவு கொடுத்துத்தான் ஆக வேண்டும். இந்த விஷயத்தில் யாரும் மதில்மேல் பூனையாக இருக்க முடியாது. அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதைப் பொறுத்துதான் அவர்களுடைய எதிர்காலம் இருக்கும். (மத். 25:31-33, 46) அதாவது, ‘மிகுந்த உபத்திரவத்தின்போது,’ வாழ்வா அழிவா என்ற அடையாளம் அதைப் பொறுத்துதான் அவர்களுக்குக் கிடைக்கும்.—வெளி. 7:14; 14:9-11; எசே. 9:4, 6.

2. (அ) நாம் என்ன செய்ய வேண்டும் என்று எபிரெயர் 10:35-39 சொல்கிறது? (ஆ) வெளிப்படுத்துதல் புத்தகம் நமக்கு எப்படி உதவும்?

2 எபிரெயர் 10:35-39-ஐ வாசியுங்கள். யெகோவாவுடைய ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக முடிவு எடுத்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் நல்ல ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். மற்றவர்களும் அதே தீர்மானம் எடுப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். அதைச் செய்வதற்கு வெளிப்படுத்துதல் புத்தகம் உங்களுக்கு உதவும். ஏனென்றால், யெகோவாவை எதிர்க்கிறவர்களுக்கு என்ன நடக்கும் என்றும் அவருடைய ஆட்சிக்கு உண்மையாக ஆதரவு கொடுக்கிறவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்றும் அது சொல்கிறது. இந்த முக்கியமான உண்மைகளை நாம் ஆழமாகப் படிக்க வேண்டும். அப்போதுதான் யெகோவாவை வணங்குவதற்கு நாம் எடுத்த தீர்மானத்தில் உறுதியாக இருக்க முடியும். அதுமட்டுமல்ல, மற்றவர்களும் சரியான தீர்மானம் எடுத்து யெகோவாவைத் தொடர்ந்து வணங்குவதற்கு நம்மால் உதவ முடியும்.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

3 இந்தக் கட்டுரையில் இரண்டு கேள்விகளுக்குப் பதில்களைப் பார்க்கப்போகிறோம். (1) கடவுளுடைய ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கிறவர்களுக்கு என்ன கிடைக்கும்? (2) வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லியிருக்கிற கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகத்துக்கு ஆதரவு கொடுக்கிறவர்களுக்கு என்ன நடக்கும்?

யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

4. பரலோகத்தில் இயேசுவோடு எந்தத் தொகுதி இருப்பதை அப்போஸ்தலன் யோவான் பார்க்கிறார்?

4 அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் இரண்டு தொகுதிகளைப் பார்க்கிறார். யெகோவாவுடைய ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கிறது. முதல் தொகுதியில் 1,44,000 பேர் இருக்கிறார்கள். (வெளி. 7:4) பரலோகத்தில் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்வதற்காக அவர்கள் பூமியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இயேசுவோடு சேர்ந்து அவர்கள் பூமியை ஆட்சி செய்வார்கள். (வெளி. 5:9, 10; 14:3, 4) அவர்கள் பரலோக சீயோன் மலையில் இயேசுவோடு நிற்பதைத் தரிசனத்தில் யோவான் பார்க்கிறார்.—வெளி. 14:1.

5. பரலோக நம்பிக்கையுள்ள 1,44,000 பேரில் பூமியில் மீதியாக இருக்கிறவர்களுக்கு சீக்கிரத்தில் என்ன நடக்கும்?

5 அப்போஸ்தலர்களுடைய காலத்திலிருந்து இன்றுவரை 1,44,000 பேரில் ஒருவராக ஆவதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். (லூக். 12:32; ரோ. 8:17) ஆனால், கடைசி நாட்களில் அவர்களில் கொஞ்சம் பேர்தான் பூமியில் மீதியாக இருப்பார்கள் என்று யோவானிடம் சொல்லப்படுகிறது. மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்னால், “மீதியாக இருக்கிற” இந்தக் கொஞ்சம் பேருக்குக் கடைசி “முத்திரை” கிடைக்கும். (வெளி. 7:2, 3; 12:17) அவர்களை யெகோவா ஏற்றுக்கொண்டதற்கு இது அடையாளமாக இருக்கும். அதற்குப் பிறகு, மிகுந்த உபத்திரவத்தின் ஒரு கட்டத்தில் அவர்கள் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள். 1,44,000 பேரில் ஏற்கெனவே யாரெல்லாம் பரலோகத்தில் இருக்கிறார்களோ அவர்களோடு இவர்களும் சேர்ந்துகொள்வார்கள். இந்த 1,44,000 பேரும் கடவுளுடைய அரசாங்கத்தில் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்வார்கள்.—மத். 24:31; வெளி. 5:9, 10.

6-7. (அ) யோவான் அடுத்ததாக எந்தத் தொகுதியைப் பார்க்கிறார், அவர்களைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? (ஆ) பரலோக நம்பிக்கை உள்ளவர்களில் பூமியில் மீதியாக இருக்கிறவர்களுக்கும் ‘திரள் கூட்டமான மக்களுக்கும்’ வெளிப்படுத்துதல் ஏழாவது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் ஏன் முக்கியமாக இருக்கின்றன?

6 பரலோகத்துக்குப் போகிற தொகுதியைப் பார்த்த பிறகு, “திரள்கூட்டமான மக்கள்” இருக்கிற இன்னொரு தொகுதியை யோவான் பார்க்கிறார். எண்ண முடியாத அளவுக்கு நிறைய பேர் இந்தத் தொகுதியில் இருக்கிறார்கள். (வெளி. 7:9, 10) இவர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பித்தவர்கள். தங்களுடைய உடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கியவர்கள்” என்று சொல்கிறது. (வெளி. 7:14) மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பித்த பிறகு, இந்த “திரள் கூட்டமான மக்கள்” இதே பூமியில் நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள்.—சங். 37:9-11, 27-29; நீதி. 2:21, 22; வெளி. 7:16, 17.

7 நாம் பரலோகத்துக்குப் போகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் சரி, பூமியில் வாழப் போகிறவர்களாக இருந்தாலும் சரி, வெளிப்படுத்துதல் ஏழாவது அதிகாரத்தின் நிறைவேற்றத்தை நாம் பார்ப்போம் என்று உறுதியாக நம்பலாம். இந்த இரண்டு தொகுதிகளில் இருக்கிறவர்களுக்கும் அப்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும், இல்லையா? யெகோவாவுடைய ஆட்சிக்கு ஆதரவு கொடுத்ததை நினைத்து நாம் சந்தோஷத்தில் பூரித்துப்போவோம். மிகுந்த உபத்திரவத்தைப் பற்றி வெளிப்படுத்துதல் புத்தகம் நமக்கு வேறென்ன சொல்கிறது?—மத். 24:21.

கடவுளை எதிர்க்கிறவர்களுக்கு என்ன நடக்கும்?

8. மிகுந்த உபத்திரவம் எப்போது ஆரம்பிக்கும், அந்தச் சமயத்தில் நிறைய மக்கள் என்ன செய்வார்கள்?

8 முந்தின கட்டுரையில் பார்த்தது போல உலகத்தில் இருக்கிற அரசியல் அமைப்புகள், எல்லா பொய் மதங்களுக்கும் அடையாளமாக இருக்கிற மகா பாபிலோனைச் சீக்கிரத்தில் அழித்துவிடும். (வெளி. 17:16, 17) அதுதான் மிகுந்த உபத்திரவத்தின் ஆரம்பம். அந்த இக்கட்டான சமயத்தில் புதிதாக நிறைய பேர் யெகோவாவை வணங்க ஆரம்பித்து விடுவார்களா? இல்லை. அதற்குப் பதிலாக, அரசியல் அமைப்புகளிடமும் வியாபார அமைப்புகளிடமும் பாதுகாப்பு தேடிப் போவார்கள். இந்த அமைப்புகளை மலைகளோடு ஒப்பிட்டு வெளிப்படுத்துதல் ஆறாவது அதிகாரம் சொல்கிறது. தன்னுடைய அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்காததால் யெகோவா அவர்களை தன்னுடைய எதிரிகளாகத்தான் பார்ப்பார்.—லூக். 11:23; வெளி. 6:15-17.

9. மிகுந்த உபத்திரவத்தின்போது யெகோவாவின் மக்கள் எப்படி மற்றவர்களிலிருந்து வித்தியாசமாகத் தெரிவார்கள், அதனால் அவர்களுக்கு என்ன நடக்கும்?

9 மிகுந்த உபத்திரவம் நடக்கிற அந்த மோசமான காலகட்டத்தில் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறவர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாகத் தெரிவார்கள். இந்த முழு பூமியிலும் அவர்கள் மட்டும்தான் ‘மூர்க்க மிருகத்துக்கு’ ஆதரவு கொடுக்காமல் யெகோவாவை வணங்கிக்கொண்டு இருப்பார்கள். (வெளி. 13:14-17) அவர்கள் இப்படி உறுதியாக இருப்பதைப் பார்க்கும்போது யெகோவாவை எதிர்க்கிறவர்களுக்கு பயங்கர கோபம் வரும். அதனால் தேசங்கள் எல்லாம் ஒரு கூட்டணியாக சேர்ந்துகொண்டு, உலகம் முழுவதும் இருக்கிற கடவுளுடைய மக்களைத் தாக்கும். இந்தத் தாக்குதலைத்தான் மாகோகு தேசத்தின் கோகுவின் தாக்குதல் என்று பைபிள் சொல்கிறது.—எசே. 38:14-16.

10. வெளிப்படுத்துதல் 19:19-21 சொல்கிறபடி தன்னுடைய மக்களை எதிரிகள் தாக்கும்போது யெகோவா என்ன செய்வார்?

10 கடவுளுடைய மக்களை எதிரி கொடூரமாகத் தாக்கும்போது யெகோவா என்ன செய்வார்? அவருடைய “கோபம் நெருப்பாகப் பற்றியெரியும்” என்று பைபிள் சொல்கிறது. (எசே. 38:18, 21-23) அடுத்ததாக என்ன நடக்கும் என்பதைப் பற்றி வெளிப்படுத்துதல் 19-வது அதிகாரம் சொல்கிறது. யெகோவா தன்னுடைய மகனை அனுப்பி தன்னுடைய மக்களைப் பாதுகாப்பார், எதிரிகளைத் தோற்கடிப்பார். உண்மையுள்ள தூதர்களும் 1,44,000 பேரும் சேர்ந்த “பரலோகப் படைவீரர்கள்” இயேசுவோடு ஒன்றுசேர்ந்து எதிரிகளைத் தாக்குவார்கள். (வெளி. 17:14; 19:11-15) இந்தப் போரின் முடிவில் என்ன நடக்கும்? யெகோவாவை எதிர்க்கிற எல்லா மக்களும் அமைப்புகளும் அடியோடு அழிக்கப்படுவார்கள்.வெளிப்படுத்துதல் 19:19-21-ஐ வாசியுங்கள்.

போருக்குப் பின் திருமணம்

11. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற முக்கியமான ஒரு சம்பவம் எது?

11 கடவுளுடைய எதிரிகள் அடியோடு அழிக்கப்பட்டதற்குப் பிறகு, அவருக்கு உண்மையாக இருக்கிற மக்கள் எப்படி உணருவார்கள்? அவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! மகா பாபிலோன் அழிக்கப்படும்போது பரலோகத்தில் இருப்பவர்கள் ரொம்பச் சந்தோஷப்பட்டாலும், அவர்கள் சந்தோஷத்தின் உச்சிக்கே போகும் அளவுக்கு இன்னொரு விஷயமும் நடக்கும். (வெளி. 19:1-3) அதுதான், “ஆட்டுக்குட்டியானவரின் திருமணம்.” சொல்லப்போனால், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற முக்கியமான ஒரு சம்பவம் இது.—வெளி. 19:6-9.

12. வெளிப்படுத்துதல் 21:1, 2 சொல்கிறபடி ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் எப்போது நடக்கும்?

12 அந்தத் திருமணம் எப்போது நடக்கும்? அர்மகெதோன் போருக்குக் கொஞ்சம் முன்னால் 1,44,000 பேர் எல்லாருமே பரலோகத்தில் இருப்பார்கள். ஆனாலும், அந்தச் சமயத்தில் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் நடக்காது. (வெளிப்படுத்துதல் 21:1, 2-ஐ வாசியுங்கள்.) அர்மகெதோன் போர் முடிந்து கடவுளுடைய எதிரிகள் எல்லாரும் அழிக்கப்பட்டதற்குப் பிறகுதான் அந்தத் திருமணம் நடக்கும்.—சங். 45:3, 4, 13-17.

13. ஆட்டுக்குட்டியானவருடைய திருமணத்தில் என்ன நடக்கும்?

13 இந்தத் திருமணத்தில் என்ன நடக்கும்? பொதுவாக, ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றுசேர்வதைத்தான் திருமணம் என்று சொல்வோம். அதேபோல, அடையாள அர்த்தத்தில் நடக்கிற இந்தத் திருமணத்தில் ராஜாவான இயேசு கிறிஸ்துவும் அவருடைய ‘மணமகளான’ 1,44,000 பேரும் ஒன்றுசேர்கிறார்கள். இந்த முக்கியமான சம்பவத்தோடு, 1,44,000 பேர் இயேசுவோடு சேர்ந்து பூமியை ஆயிரம் வருஷங்களுக்கு ஆட்சி செய்ய ஆரம்பிப்பார்கள்.—வெளி. 20:6.

அழகான நகரமும் உங்கள் எதிர்காலமும்

அடையாள அர்த்தமுள்ள புதிய எருசலேம் என்ற நகரம் “கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதை” பற்றி வெளிப்படுத்துதல் 21-வது அதிகாரம் சொல்கிறது. ஆயிர வருஷ ஆட்சியின்போது, கடவுளுக்குக் கீழ்ப்படிகிற மனிதர்களுக்கு அது அளவில்லாத ஆசீர்வாதங்களைக் கொடுக்கும் (பாராக்கள் 14-16)

14-15. வெளிப்படுத்துதல் 21-வது அதிகாரம், 1,44,000 பேரை எதனோடு ஒப்பிடுகிறது? (அட்டைப் படம்.)

14 அடுத்ததாக வெளிப்படுத்துதல் 21-வது அதிகாரம், 1,44,000 பேரை ரொம்பவே அழகான ஒரு நகரத்தோடு ஒப்பிடுகிறது. அந்த நகரத்தின் பெயர் ‘புதிய எருசலேம்.’ (வெளி. 21:2, 9) அந்த நகரம் 12 அஸ்திவாரக் கற்கள்மேல் கட்டப்பட்டிருந்தது. அந்தக் கற்களுக்குமேல் “ஆட்டுக்குட்டியானவரின் 12 அப்போஸ்தலர்களின் 12 பெயர்கள்” எழுதப்பட்டிருந்தன. அதைப் பார்த்து யோவான் சிலிர்த்துப்போனார். ஏனென்றால், அந்தக் கற்கள் ஒன்றில் அவருடைய பெயர் இருந்தது. இது அவருக்குக் கிடைத்த எவ்வளவு பெரிய பாக்கியம்!—வெளி. 21:10-14; எபே. 2:20.

15 புதிய எருசலேமைப் போன்ற ஒரு நகரத்தை எங்கேயும் பார்க்க முடியாது. இதன் முக்கியத் தெரு சுத்தமான தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நகரத்துக்கு முத்தால் செய்யப்பட்ட 12 நுழைவாசல்கள் இருந்தன. இதன் மதில்களும் அஸ்திவாரங்களும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நகரத்தின் நீளம், அகலம், உயரம் எல்லாமே ஒரே அளவில் இருந்தன. (வெளி. 21:15-21) ஆனால், ஏதோவொன்று மட்டும் குறைவதை யோவான் கவனித்தார். அதைப் பற்றி அவர் சொல்வதைக் கவனியுங்கள்: “நான் அங்கே ஆலயத்தைப் பார்க்கவில்லை; ஏனென்றால், சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா அதன் ஆலயமாக இருக்கிறார், ஆட்டுக்குட்டியானவரும் அதன் ஆலயமாக இருக்கிறார். நகரத்துக்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனோ சந்திரனோ தேவைப்படவில்லை. ஏனென்றால், கடவுளுடைய மகிமையால் அது பிரகாசித்தது, ஆட்டுக்குட்டியானவர்தான் அதன் விளக்கு.” (வெளி. 21:22, 23) யெகோவாவும் இயேசுவும் அந்த நகரத்தின் ஆலயமாக இருப்பதாக இந்த வசனம் சொல்கிறது. புதிய எருசலேமின் பாகமாக இருக்கிறவர்கள் யெகோவாவோடுதான் இருக்கப்போகிறார்கள். (எபி. 7:27; வெளி. 22:3, 4) அதனால், அவரை வணங்குவதற்கு அவர்களுக்குத் தனியாக ஒரு ஆலயம் தேவைப்படாது.

‘ஆற்றையும்’ ‘மரங்களையும்’ அடையாளப்படுத்துகிற ஏற்பாடுகளிலிருந்து யாரெல்லாம் நன்மை அடைவார்கள்? (பாராக்கள் 16-17)

16. ஆயிர வருஷ ஆட்சியில் மக்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

16 இந்த நகரத்தைப் பற்றி யோசித்துப்பார்ப்பது பரலோக நம்பிக்கை உள்ளவர்களைச் சிலிர்க்க வைத்துவிடும். ஆனால், பூமியில் வாழுகிற நம்பிக்கை இருக்கிறவர்களும், அதை நினைத்து சந்தோஷப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால், ஆயிர வருஷ ஆட்சியில் இந்தப் புதிய எருசலேம் மூலமாக ஏராளமான ஆசீர்வாதங்கள் அவர்களுக்கும் கிடைக்கப்போகிறது. இந்த ஆசீர்வாதங்கள் “வாழ்வு தரும் தண்ணீர் நிறைந்த ஆற்றை” போல பாய்ந்தோடுவதை யோவான் பார்க்கிறார். அந்த ஆற்றுக்கு இரண்டு பக்கங்களிலும் “வாழ்வு தரும் மரங்கள்” இருக்கின்றன. அவற்றின் இலைகள் “தேசத்தார் குணமாக்குவதற்கு” உதவியாக இருக்கும். (வெளி. 22:1, 2) அந்தச் சமயத்தில் வாழும் எல்லா மக்களுக்கும் இந்த ஏற்பாடுகளிலிருந்து நன்மை அடைவதற்கு வாய்ப்பு கிடைக்கும். யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்கிற எல்லாருமே கொஞ்சம் கொஞ்சமாக குறையே இல்லாத பரிபூரணர்களாக ஆகிவிடுவார்கள். அந்தச் சமயத்தில் நோய், வேதனை, அழுகை எதுவுமே இருக்காது.—வெளி. 21:3-5.

17. வெளிப்படுத்துதல் 20:11-13 சொல்கிறபடி, ஆயிர வருஷ ஆட்சியிலிருந்து யாரெல்லாம் நன்மை அடைவார்கள்?

17 அர்மகெதோன் போரிலிருந்து தப்பிக்கிற திரள் கூட்டமான மக்கள், இந்த அற்புதமான ஏற்பாடுகளிலிருந்து நன்மை அடைவார்கள். அதோடு, புதிய உலகத்தில் பிறக்கிற பிள்ளைகளும் நன்மை அடைவார்கள். இறந்துபோனவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்றும் வெளிப்படுத்துதல் 20-வது அதிகாரம் வாக்குக் கொடுக்கிறது. (வெளிப்படுத்துதல் 20:11-13-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கு உண்மையாக இருந்து இறந்துபோன “நீதிமான்களும்,” அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்காமல் இறந்துபோன “அநீதிமான்களும்” உயிரோடு எழுப்பப்படுவார்கள். (அப். 24:15; யோவா. 5:28, 29) அப்படியென்றால், இறந்துபோன எல்லாருமே ஆயிர வருஷ ஆட்சியில் உயிரோடு எழுப்பப்படுவார்களா? இல்லை. இறப்பதற்கு முன் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை வணங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதை வேண்டுமென்றே ஒதுக்கித்தள்ளியவர்கள் உயிரோடு வர மாட்டார்கள். கிடைத்த வாய்ப்பை வேண்டுமென்றே ஒதுக்கித்தள்ளியதால் பூஞ்சோலைப் பூமியில் வாழ்வதற்கான தகுதி அவர்களுக்கு இல்லை.—மத். 25:46; 2 தெ. 1:9; வெளி. 17:8; 20:15.

கடைசி சோதனை

18. ஆயிரம் வருஷங்களுக்கு முடிவில் பூமியில் நிலைமை எப்படி இருக்கும்?

18 ஆயிரம் வருஷங்களுக்கு முடிவில் பூமியில் வாழும் எல்லாருமே பரிபூரணர்களாக ஆகிவிடுவார்கள். ஆதாமிடமிருந்து வந்த பாவத்தின் பாதிப்பும் யாருக்குமே இருக்காது. (ரோ. 5:12) பாவம் என்ற அந்த சாபம் முழுமையாக ஒழிந்துபோயிருக்கும். இப்படி, பூமியில் இருக்கிற எல்லாருமே 1,000 வருஷங்களின் முடிவில் ‘உயிரோடு எழுந்திருப்பார்கள்,’ அதாவது, பரிபூரணர்களாக ஆகிவிடுவார்கள்.—வெளி. 20:5.

19. மனிதர்களுக்குக் கடைசியாக ஒரு சோதனை ஏன் தேவைப்படுகிறது?

19 இயேசுவை சாத்தான் சோதித்தபோது அவர் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். ஆனால் பரிபூரணர்களாக இருக்கிற எல்லாரையும் சோதிப்பதற்காக சாத்தானுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அவர்கள் இயேசுவைப் போல உண்மையாக இருப்பார்களா? அப்படி உண்மையாக இருப்பதை நிரூபிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். 1,000 வருஷங்களுக்கு முடிவில் சாத்தான் அதலபாதாளத்திலிருந்து விடுதலை செய்யப்படும்போது யெகோவா பக்கம் இருப்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். (வெளி. 20:7) இந்தக் கடைசி சோதனையில் யாரெல்லாம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும். கடைசியில், அவர்கள் உண்மையான விடுதலையை அனுபவிப்பார்கள். (ரோ. 8:21) யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்கிறவர்கள் சாத்தானோடும் அவனுடைய பேய்களோடும் சேர்த்து நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்.—வெளி. 20:8-10.

20. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற சிலிர்க்க வைக்கும் தீர்க்கதரிசனங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொண்ட பிறகு எப்படி உணருகிறீர்கள்?

20 வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற விஷயங்களைச் சுருக்கமாகப் பார்த்த பிறகு நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? அற்புதமான இந்தத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுகிற காலத்தில் வாழ்வதை கற்பனை செய்து பார்க்கும்போது உங்களுக்குப் புல்லரிக்கிறது, இல்லையா? இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, உங்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்க மற்றவர்களையும் அழைக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வருகிறது, இல்லையா? (வெளி. 22:17) எதிர்காலத்தில் நடக்கப்போகிற சம்பவங்களைப் பற்றி இதுவரை பார்த்தது நமக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதனால் அப்போஸ்தலன் யோவானைப் போல, “ஆமென்! எஜமானாகிய இயேசுவே, வாருங்கள்” என்று சொல்ல நாமும் ஆசைப்படுகிறோம்.—வெளி. 22:20.

பாட்டு 27 கடவுளின் மகன்கள் வெளிப்படுவர்!

[அடிக்குறிப்பு]

^ வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் பற்றிய தொடர் கட்டுரைகளில் கடைசிக் கட்டுரையை இப்போது பார்க்கப்போகிறோம். இந்தக் கட்டுரையில் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்குக் கிடைக்கப்போகிற அற்புதமான எதிர்காலத்தைப் பற்றியும், கடவுளுடைய ஆட்சியை எதிர்க்கிறவர்களுக்கு வரப்போகிற கேவலமான முடிவைப் பற்றியும் பார்க்கப்போகிறோம்.