Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 19

வெளிப்படுத்துதல்—உங்களைப் பற்றி என்ன சொல்கிறது?

வெளிப்படுத்துதல்—உங்களைப் பற்றி என்ன சொல்கிறது?

‘இந்தத் தீர்க்கதரிசன செய்திகளைச் சத்தமாக வாசிக்கிறவர்கள் . . . சந்தோஷமானவர்கள்.’—வெளி. 1:3.

பாட்டு 15 யெகோவாவின் முதல் மகனை புகழ்ந்து பாடுங்கள்!

இந்தக் கட்டுரையில்... *

1-2. வெளிப்படுத்துதல் புத்தகம் நமக்கு ரொம்ப முக்கியமானது என்று சொல்வதற்கு ஒரு காரணம் என்ன?

 ஒருவருடைய வீட்டில் உட்கார்ந்து அவருடைய ஃபோட்டோ ஆல்பத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அதில் இருக்கிற ஃபோட்டோக்களை எல்லாம் நீங்கள் ஒவ்வொன்றாகப் பார்க்கிறீர்கள். நிறைய ஃபோட்டோக்களில் உங்களுக்குத் தெரியாதவர்கள்தான் இருக்கிறார்கள். அப்படி பார்த்துக்கொண்டே வரும்போது ஒரு ஃபோட்டோவை மட்டும் நீங்கள் உற்றுப்பார்க்கிறீர்கள். ஏன்? ஏனென்றால், அந்த ஃபோட்டோவில் நீங்கள் இருக்கிறீர்கள். ஃபோட்டோவை உன்னிப்பாகப் பார்க்கிறபோது, அதை எங்கே, எப்போது எடுத்தோம் என்பதை நீங்கள் ஞாபகப்படுத்தி பார்க்கிறீர்கள். அந்த ஃபோட்டோவில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள். நீங்கள் அந்த ஃபோட்டோவில் இருப்பதால் அது உங்களுக்கு ரொம்ப விசேஷமானதாக இருக்கும், இல்லையா?

2 ஒரு விதத்தில் வெளிப்படுத்துதல் புத்தகமும் அந்த ஃபோட்டோவைப் போல்தான் இருக்கிறது. ஏன்? அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், இந்த பைபிள் புத்தகம் நமக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. “சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களைக் கடவுள் தன்னுடைய அடிமைகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக இயேசு கிறிஸ்துவுக்கு வெளிப்படுத்தினார்” என்று இந்தப் புத்தகத்தின் முதல் வசனம் சொல்கிறது. (வெளி. 1:1) அப்படியென்றால், கடவுளுடைய ஊழியர்களான நமக்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது, எல்லா மக்களுக்காகவும் இல்லை. இந்தப் புத்தகத்தில் இருக்கிற சுவாரஸ்யமான தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தில் நமக்கும் ஒரு பங்கு இருப்பதை நினைத்து நாம் ஆச்சரியப்படுவதில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், வெளிப்படுத்துதல் புத்தகம் என்ற ஃபோட்டோவில் நாமும் இருக்கிறோம்.

3-4. வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்வதுபோல் அதிலிருக்கும் தீர்க்கதரிசனங்கள் எப்போது நிறைவேற ஆரம்பித்தது, இது என்ன செய்ய உங்களைத் தூண்டும்?

3 இந்தத் தீர்க்கதரிசனங்கள் நமக்கு முக்கியமாக இருப்பதற்கு இரண்டாவது காரணம், அது நிறைவேறுகிற காலப்பகுதிதான். வயதான அப்போஸ்தலரான யோவான் அதைப் பற்றி என்ன சொன்னார் என்று கவனியுங்கள். “நான் கடவுளுடைய சக்தியால் நம் எஜமானுடைய நாளுக்குக் கொண்டுவரப்பட்டேன்” என்று அவர் எழுதினார். (வெளி. 1:10) கி.பி. 96-ல் யோவான் இந்த வார்த்தைகளை எழுதியபோது ‘எஜமானின் நாள்’ இன்னும் வரவில்லை. அதற்கு இன்னும் ரொம்ப நாட்கள் இருந்தன. (மத். 25:14, 19; லூக். 19:12) பைபிள் தீர்க்கதரிசனங்களை வைத்துப் பார்க்கும்போது, 1914-ல் இயேசு பரலோகத்தில் ராஜாவாக ஆனபோதுதான் அந்த நாள் ஆரம்பித்தது. அந்த வருஷத்திலிருந்து வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற தீர்க்கதரிசனங்கள் நிறைவேற ஆரம்பித்தன. அந்த நிறைவேற்றத்தில் கடவுளுடைய மக்களாக இருக்கிற நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஏனென்றால், நாம் இப்போது ‘எஜமானின் நாளில்’ வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!

4 விறுவிறுப்பான சம்பவங்கள் நடக்கிற இந்தக் காலத்தில் நாம் வாழ்வதால் வெளிப்படுத்துதல் 1:3-ல் சொல்லியிருக்கிற ஆலோசனைக்கு நாம் கவனம் செலுத்துவது ரொம்ப முக்கியம். “இந்தத் தீர்க்கதரிசன செய்திகளைச் சத்தமாக வாசிக்கிறவர்களும் கேட்கிறவர்களும் இதில் எழுதப்பட்டிருப்பதைக் கடைப்பிடிக்கிறவர்களும் சந்தோஷமானவர்கள்; ஏனென்றால், குறித்த காலம் நெருங்கிவிட்டது” என்று அந்த வசனம் சொல்கிறது. அதனால், இந்த “தீர்க்கதரிசன செய்திகளை” நாம் ‘சத்தமாக வாசிக்க’ வேண்டும், ‘கேட்க’ வேண்டும், அதில் இருக்கிற விஷயங்களை ‘கடைப்பிடிக்க’ வேண்டும். அதில் சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

யெகோவாவுக்குப் பிடித்த விதத்தில் அவரை நீங்கள் வணங்க வேண்டும்

5. யெகோவாவுக்குப் பிடித்த விதத்தில் அவரை வணங்குவது முக்கியம் என்பதை வெளிப்படுத்துதல் புத்தகம் எப்படிக் காட்டுகிறது?

5 சபையில் நடக்கிற எல்லா விஷயங்களுமே இயேசுவுக்கு நன்றாகத் தெரியும் என்பதை வெளிப்படுத்துதல் புத்தகத்தின் ஆரம்ப அதிகாரங்களிலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம். (வெளி. 1:12-16, 20; 2:1) ஆசியா மைனரில் இருந்த ஏழு சபைகளுக்கும் இயேசு சொன்ன செய்தியிலிருந்து இதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. முதல் நூற்றாண்டில் இருந்த அந்தச் சபைகளுக்கு இயேசு குறிப்பாக சில ஆலோசனைகளைக் கொடுத்தார். அதாவது, அவர்களுடைய வணக்கம் யெகோவாவுக்குப் பிடித்த விதமாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார். இயேசு கொடுத்த இந்த ஆலோசனைகள் இன்றைக்கு இருக்கிற கடவுளுடைய மக்கள் எல்லாருக்குமே பொருந்தும். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? நாம் யெகோவாவோடு ஒரு நெருக்கமான பந்தத்தை வைத்திருக்கிறோமா என்று நம்முடைய தலைவரான கிறிஸ்து இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். இயேசு நம்மை வழிநடத்துகிறார், நம்மைப் பாதுகாக்கிறார். சபையில் நடக்கிற எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். யெகோவாவின் ஆதரவு நமக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அந்த ஏழு சபைகளுக்கு இயேசு கொடுத்த ஆலோசனைகளை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். அவர் என்னென்ன ஆலோசனைகளைக் கொடுத்தார் என்று இப்போது பார்க்கலாம்.

6. (அ) எபேசு சபையில் இருந்தவர்களிடம் என்ன பிரச்சினை இருந்தது? (வெளிப்படுத்துதல் 2:3, 4) (ஆ) அவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 வெளிப்படுத்துதல் 2:3, 4-ஐ வாசியுங்கள். யெகோவாமேல் நமக்கு ஆரம்பத்தில் இருந்த அன்பை விட்டுவிடக் கூடாது. எபேசு சபையில் இருந்தவர்களுக்கு இயேசு என்ன சொன்னார் என்று கவனியுங்கள். அவர்கள் சகிப்புத்தன்மையைக் காட்டினார்கள். நிறைய கஷ்டங்கள் இருந்தாலும் சோர்ந்துவிடாமல் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்தார்கள். ஆனாலும், அவர்மேல் ஆரம்பத்தில் வைத்திருந்த அன்பை விட்டுவிட்டார்கள். அதனால், மறுபடியும் அந்த அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அப்படிச் செய்யவில்லை என்றால் அவர்களுடைய வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று இயேசு சொன்னார். இன்றைக்கு நாமும் நமக்கு வருகிற பிரச்சினைகளை சகித்திருந்தால் மட்டும் போதாது. நாம் சரியான காரணங்களுக்காக சகித்திருக்க வேண்டும். நாம் என்ன செய்கிறோம் என்பதை மட்டும் அல்ல, அதை ஏன் செய்கிறோம் என்பதையும் யெகோவா பார்க்கிறார். ஒரு விஷயத்தை நாம் என்ன உள்நோக்கத்தோடு செய்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள யெகோவா ஆசைப்படுகிறார். (நீதி. 16:2) ஏனென்றால், அவர்மேல் இருக்கிற அன்பாலும் நன்றி உணர்வாலும் தூண்டப்பட்டு அவரை வணங்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்.—மாற். 12:29, 30.

7. (அ) வெளிப்படுத்துதல் 3:1-3 சொல்கிறபடி, சர்தை சபையில் இருந்தவர்களிடம் என்ன பிரச்சினை இருந்தது? (ஆ) நாம் என்ன செய்ய வேண்டும்?

7 வெளிப்படுத்துதல் 3:1-3-ஐ வாசியுங்கள். நாம் தொடர்ந்து விழிப்போடு இருக்க வேண்டும். சர்தை சபையில் இருந்தவர்களுக்கு வேறு ஒரு பிரச்சினை இருந்தது. அவர்கள் ஒருகாலத்தில் யெகோவாவுக்கு சுறுசுறுப்பாகச் சேவை செய்தார்கள். அதற்குப் பின்பு மந்தமாகிவிட்டார்கள். அதனால், “விழித்தெழு!” என்று இயேசு அவர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். அவர் சொன்ன அந்த ஆலோசனையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? யெகோவாவுக்கு நாம் செய்த சேவையை அவர் மறக்க மாட்டார் என்பது உண்மைதான். (எபி. 6:10) அதற்காக நாம் இதுவரை அவருக்குச் செய்த சேவையே போதும் என்று இருந்துவிடக் கூடாது. ஒருவேளை நம்முடைய சூழ்நிலை மாறியதால் முன்புபோல் யெகோவாவுக்கு சேவை செய்ய முடியாமல் இருக்கலாம். இருந்தாலும், “எஜமானுடைய வேலையை” நாம் தொடர்ந்து சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும். கடைசிவரை விழிப்போடு இருக்க வேண்டும்.—1 கொ. 15:58; மத். 24:13; மாற். 13:33.

8. லவோதிக்கேயா சபையில் இருந்தவர்களுக்கு இயேசு கொடுத்த ஆலோசனைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (வெளிப்படுத்துதல் 3:15-17)

8 வெளிப்படுத்துதல் 3:15-17-ஐ வாசியுங்கள். நாம் முழு இதயத்தோடும் ஆர்வத்துடிப்போடும் யெகோவாவை வணங்க வேண்டும். லவோதிக்கேயா சபையில் இருந்தவர்களுக்கு என்ன பிரச்சினை இருந்தது? அதைப் பற்றி இயேசு என்ன சொன்னார் என்று இப்போது பார்க்கலாம். யெகோவாவை வணங்கும் விஷயத்தில் அவர்கள் ‘குளிர்ச்சியாகவும் இல்லாமல் சூடாகவும் இல்லாமல் வெதுவெதுப்பாக’ இருந்தார்கள். அதாவது, அவர்களுடைய ஆர்வம் குறைந்திருந்தது. அதனால், இயேசு அவர்களைப் பார்த்து, ‘இழிவான, பரிதாபமான’ நிலையில் இருக்கிறீர்கள் என்று சொன்னார். அதனால், யெகோவாவை வணங்குகிற விஷயத்தில் அவர்களுடைய ஆர்வத் தீயை அவர்கள் மூட்டிவிட வேண்டியிருந்தது. (வெளி. 3:19) நமக்கு என்ன பாடம்? ஒருவேளை நம்முடைய ஆர்வம் கொஞ்சம் குறைந்திருந்தால், யெகோவாவும் அவருடைய அமைப்பும் நமக்காக என்ன நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். அவற்றுக்காக நன்றியோடு இருக்க வேண்டும். (வெளி. 3:18) வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக ஓடியோடி உழைத்துவிட்டு யெகோவாவை வணங்குவதை நாம் இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிடக் கூடாது.

9. பெர்கமு, தியத்தீரா சபைகளுக்கு இயேசு சொன்னபடி நாம் எந்த விஷயத்தைத் தவிர்க்க வேண்டும்?

9 விசுவாசதுரோகிகளுடைய போதனைகளை நாம் ஒதுக்கித்தள்ள வேண்டும். பெர்கமு சபையில் இருந்த சிலர் பிரிவினைகளை ஏற்படுத்துவதால் இயேசு அவர்களைக் கண்டித்தார். (வெளி. 2:14-16) அதேசமயத்தில், தியத்தீரா சபையில் இருந்தவர்கள் ‘சாத்தானுடைய ஆழங்களை’ கண்டுபிடித்து அதிலிருந்து ஒதுங்கி இருந்ததால் இயேசு அவர்களைப் பாராட்டினார். சத்தியத்தை உறுதியாகப் பிடித்துக்கொள்ளும்படி அவர்களிடம் சொன்னார். (வெளி. 2:24-26) விசுவாசத்தில் பலவீனமாக இருந்த சில கிறிஸ்தவர்கள், விசுவாசதுரோகிகள் சொல்லிக்கொடுத்த பொய் போதனைகளை நம்பி ஏமாந்து போய்விட்டார்கள். அதனால், அவர்கள் மனம் திரும்ப வேண்டியிருந்தது. இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? யெகோவாவின் யோசனைகளுக்கு எதிராக இருக்கிற எந்தவொரு போதனையையும் நாம் ஒதுக்கித்தள்ள வேண்டும். விசுவாசதுரோகிகள் ‘பக்திமான்களைப் போல் காட்டிக்கொண்டாலும்’ அவர்கள் உண்மையில் அதற்கு ‘நேர்மாறாகத்தான் நடந்துகொள்கிறார்கள்.’ (2 தீ. 3:5) நாம் கடவுளுடைய வார்த்தையை ஆழமாகப் படித்து அதிலிருக்கிற விஷயங்களைத் தெரிந்துவைத்திருந்தால், பொய் போதனைகளை நம்மால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். அதை ஒதுக்கித்தள்ளவும் முடியும்.—2 தீ. 3:14-17; யூ. 3, 4.

10. பெர்கமு, தியத்தீரா சபைகளுக்கு இயேசு சொன்னதிலிருந்து நாம் வேறு என்ன பாடத்தையும் கற்றுக்கொள்ளலாம்?

10 நாம் பாலியல் முறைகேட்டில் ஈடுபடவோ அதைக் கண்டும்காணாமல் விட்டுவிடவோ கூடாது. பெர்கமு, தியத்தீரா சபைகளில் இன்னொரு பிரச்சினையும் இருந்தது. அங்கே இருந்த சிலர் பாலியல் முறைகேட்டை ஒதுக்கித்தள்ளாமல் இருந்தார்கள். அதனால், அவர்களை இயேசு கண்டித்தார். (வெளி. 2:14, 20) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நாம் நிறைய வருஷங்களாக யெகோவாவுக்கு சேவை செய்திருக்கலாம். நிறைய பொறுப்புகளும் நமக்கு இருக்கலாம். ஆனால் அதற்காக, ஒழுக்கங்கெட்ட விதத்தில் நாம் நடந்துகொண்டோம் என்றால் யெகோவா அதைப் பொறுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. (1 சா. 15:22; 1 பே. 2:16) ஒழுக்க விஷயத்தில் இந்த உலகம் எவ்வளவு சீரழிந்துகொண்டு வந்தாலும் சரி, நாம் யெகோவா கொடுத்திருக்கிற உயர்ந்த ஒழுக்கநெறிகளின்படி நடக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.—எபே. 6:11-13.

11. இதுவரை என்ன விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்? (“ நமக்குப் பாடங்கள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

11 இதுவரை நாம் என்ன கற்றுக்கொண்டோம்? யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நாம் அவரை வணங்குகிறோமா என்று யோசித்துப்பார்க்க வேண்டும். ஒருவேளை, நம் வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்ளாமல் போகும் விதத்தில் நாம் எதையாவது செய்துகொண்டிருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். (வெளி. 2:5, 16; 3:3, 16) சபைகளுக்கு இன்னொரு விஷயத்தையும் இயேசு சொன்னார். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

துன்புறுத்தலைச் சகிக்கத் தயாராக இருங்கள்

சாத்தான் பரலோகத்திலிருந்து கீழே தள்ளப்பட்ட பிறகு அவன் கடவுளுடைய மக்களை எப்படித் தாக்கியிருக்கிறான்? (பாராக்கள் 12-16)

12. சிமிர்னா, பிலதெல்பியா சபைகளுக்கு இயேசு சொன்னதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (வெளிப்படுத்துதல் 2:10)

12 இயேசு அடுத்ததாக சிமிர்னா, பிலதெல்பியா சபைகளுக்கு என்ன சொன்னார் என்று பார்க்கலாம். அங்கிருந்த கிறிஸ்தவர்களிடம் துன்புறுத்தலைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று இயேசு சொன்னார். ஏனென்றால், அவர்கள் துன்புறுத்தலை உண்மையோடு சகித்திருந்தால் அவர்களுக்கு யெகோவா பலன் கொடுப்பார் என்று சொன்னார். (வெளிப்படுத்துதல் 2:10-ஐ வாசியுங்கள்; 3:10) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நமக்கும் துன்புறுத்தல் வரும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும். அதைச் சகிக்கத் தயாராக இருக்க வேண்டும். (மத். 24:9, 13; 2 கொ. 12:10 ) இந்த விஷயத்தை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வது ஏன் ரொம்ப முக்கியம்?

13-14. வெளிப்படுத்துதல் 12-ஆம் அதிகாரத்தில் சொல்லியிருக்கிற சம்பவங்களால் கடவுளுடைய மக்கள் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?

13 ‘எஜமானின் நாளில்,’ அதாவது நாம் வாழ்கிற இந்தக் காலத்தில் கடவுளுடைய மக்களுக்கு துன்புறுத்தல் வரும் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. வெளிப்படுத்துதல் 12-ஆம் அதிகாரத்தில் பார்க்கிறபடி, இயேசு ராஜாவான உடனே பரலோகத்தில் ஒரு போர் நடந்தது. அந்தப் போரில் மிகாவேலும், அதாவது, பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவும், அவருடைய பரலோகப் படைகளும், சாத்தானுக்கு எதிராகவும் அவனுடைய பேய்களுக்கு எதிராகவும் போர் செய்தார்கள். (வெளி. 12:7, 8) அந்தப் போரில் கடவுளுடைய எதிரிகள் தோற்கடிக்கப்பட்டு கீழே பூமிக்குத் தள்ளப்பட்டார்கள். இதனால், பூமியில் இருக்கிற மக்களுக்குப் பயங்கரமான கஷ்டங்கள் வந்தன. (வெளி. 12:9, 12) இந்தச் சம்பவத்தால் கடவுளுடைய மக்கள் எப்படிப் பாதிக்கப்பட்டார்கள்?

14 அடுத்து என்ன நடந்தது என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. சாத்தான் பூமிக்குத் தள்ளப்பட்ட பின்பு அவனால், திரும்பவும் பரலோகத்துக்குப் போக முடியவில்லை. அதனால், பூமியில் மீதியாக இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்மேல் அவனுடைய கோபத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறான். ஏனென்றால், அவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக பூமியில் இருக்கிறார்கள். அதோடு, “இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுக்கும் வேலையை” செய்துகொண்டிருக்கிறார்கள். (வெளி. 12:17; 2 கொ. 5:20; எபே. 6:19, 20) இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறி வருகிறது?

15. வெளிப்படுத்துதல் 11-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற ‘இரண்டு சாட்சிகள்’ யாருக்கு அடையாளமாக இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது?

15 பிரசங்க வேலையை வழிநடத்திக்கொண்டிருந்த பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களைத் தாக்கும்படி கடவுளுடைய எதிரிகளை சாத்தான் தூண்டினான். பொறுப்பில் இருந்த அந்தச் சகோதரர்கள்தான் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற ‘இரண்டு சாட்சிகள்.’ அடையாள அர்த்தத்தில் இவர்கள் கொல்லப்பட்டதாக வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. * (வெளி. 11:3, 7-11) 1918-ல் பொறுப்பில் இருந்த எட்டு சகோதரர்கள்மேல் எதிரிகள் பொய்க் குற்றச்சாட்டு போட்டு அவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனையைக் கொடுத்தார்கள். அதனால், இவர்களுடைய வேலை ஒரேயடியாக முடிவுக்கு வந்துவிட்டது என்று நிறைய பேர் நினைத்தார்கள்.

16. ஆச்சரியமான என்ன விஷயம் 1919-ல் நடந்தது, ஆனால் அந்தச் சமயத்திலிருந்து சாத்தான் என்ன செய்துகொண்டு இருக்கிறான்?

16 இந்த “இரண்டு சாட்சிகளை” கொஞ்ச நாட்களுக்குப் பிறகு கடவுள் திரும்பவும் உயிரோடு கொண்டுவருவார் என்றும் வெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசனம் சொன்னது. இது எப்படி நிறைவேறியது? சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்ட அடுத்த வருஷத்திலேயே ஆச்சரியமான ஒரு விஷயம் நடந்தது. மார்ச் 1919-ல் பரலோக நம்பிக்கையுள்ள இந்தச் சகோதரர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்கள்மேல் போடப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்பட்டன. உடனே இந்தச் சகோதரர்கள் பிரசங்க வேலையை ஆரம்பித்தார்கள். ஆனால், கடவுளுடைய மக்களைத் தாக்குவதை சாத்தான் நிறுத்தவே இல்லை. அந்தச் சமயத்திலிருந்து சாத்தான் கடவுளுடைய மக்கள்மேல் துன்புறுத்தலை ‘வெள்ளம்’ போல பாய வைத்திருக்கிறான். (வெளி. 12:15) அதனால், நம் ஒவ்வொருவருக்கும் உண்மையிலேயே “சகிப்புத்தன்மையும் விசுவாசமும் தேவை.”—வெளி. 13:10.

யெகோவா கொடுத்த வேலையை மும்முரமாகச் செய்யுங்கள்

17. கடவுளுடைய மக்களை சாத்தான் தாக்கினாலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து அவர்களுக்கு எப்படி உதவி கிடைத்திருக்கிறது?

17 எதிர்பார்க்காத இடத்திலிருந்து கடவுளுடைய மக்களுக்குக் கொஞ்சம் உதவி கிடைக்கும் என்று வெளிப்படுத்துதல் 12-ஆம் அதிகாரம் சொல்கிறது. அதாவது, துன்புறுத்தல் என்ற “வெள்ளத்தை” “பூமி” தன் வாயைத் திறந்து குடிக்கும் என்று அந்த அதிகாரம் சொல்கிறது. (வெளி. 12:16) இந்தத் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருப்பதுதான் நடந்திருக்கிறது. எப்படியென்றால், சாத்தானுடைய உலகத்தில் இருக்கிற சில அமைப்புகளே கடவுளுடைய மக்களுக்கு சிலசமயங்களில் உதவி செய்திருக்கின்றன. உதாரணத்துக்கு, கடவுளுடைய மக்களுக்கு நீதிமன்ற வழக்குகளில் நிறைய தடவை வெற்றி கிடைத்திருக்கிறது. இதனால், அவர்களுக்கு ஓரளவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. இந்தச் சுதந்திரத்தை அவர்கள் எப்படிப் பயன்படுத்தி இருக்கிறார்கள்? தங்களுக்குக் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி யெகோவா கொடுத்த வேலையை அவர்கள் நல்ல விதத்தில் செய்துகொண்டிருக்கிறார்கள். (1 கொ. 16:9) இந்த வேலையில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது?

என்ன இரண்டு செய்திகளைக் கடவுளுடைய மக்கள் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்? (பாராக்கள் 18-19)

18. இந்தக் கடைசி நாட்களில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை என்ன?

18 முடிவு வருவதற்கு முன், ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை’ அவருடைய மக்கள் உலகம் முழுவதும் அறிவிப்பார்கள் என்று இயேசு தீர்க்கதரிசனம் சொன்னார். (மத். 24:14) இந்த வேலையைச் செய்வதில் அவர்களுக்கு ஒரு தேவதூதருடைய உதவியோ அல்லது நிறைய தேவதூதர்களுடைய உதவியோ இருக்கிறது. ஏனென்றால், “பூமியில் குடியிருக்கிற எல்லா தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும் இனத்தினருக்கும் நித்திய நல்ல செய்தியை” ஒரு தேவதூதர் அறிவித்துக்கொண்டிருந்தார் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது.—வெளி. 14:6.

19. யெகோவாவை நேசிக்கிறவர்கள் வேறென்ன செய்தியையும் சொல்ல வேண்டியிருக்கிறது?

19 நாம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை மட்டுமே சொன்னால் போதாது. வெளிப்படுத்துதல் 8-10 அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிற தேவதூதர்கள் செய்கிற வேலைக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டியிருக்கிறது. கடவுளுடைய அரசாங்கத்தை ஒதுக்கித்தள்ளுகிறவர்களுக்குக் கிடைக்கப்போகிற பயங்கரமான தண்டனைகளைப் பற்றி அந்தத் தேவதூதர்கள் அறிவிக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளாக நாம், சாத்தானுடைய உலகத்தில் இருக்கிற வித்தியாசமான அமைப்புகளுக்கு எதிராக கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்தியைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்தச் செய்தி, ‘ஆலங்கட்டியையும் நெருப்பையும்’ போல் இருக்கிறது. (வெளி. 8:7, 13) முடிவு ரொம்பப் பக்கத்தில் இருப்பதை மக்கள் தெரிந்துகொண்டால்தான் அவர்களால் தங்களுடைய வாழ்க்கையில் பெரிய பெரிய மாற்றங்களைச் செய்து யெகோவாவுடைய கோபத்தின் நாளிலிருந்து தப்பிக்க முடியும். (செப். 2:2, 3) ஆனால், இந்தச் செய்தியை நிறைய பேர் வெறுக்கிறார்கள். அதனால், இந்தச் செய்தியைச் சொல்வதற்கு நமக்குத் தைரியம் தேவை. மிகுந்த உபத்திரவத்தின்போது நாம் கடைசியாக ஒரு நியாயத்தீர்ப்பு செய்தியைச் சொல்வோம். அது மக்களுக்கு இன்னும் கடுமையான செய்தியாக இருக்கும்.—வெளி. 16:21.

தீர்க்கதரிசனத்தில் இருக்கிற விஷயங்களைக் கடைப்பிடியுங்கள்

20. அடுத்த இரண்டு கட்டுரைகளில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

20 வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசன செய்திகளை நாம் கவனமாகக் ‘கடைப்பிடிக்க’ வேண்டும். ஏனென்றால், அவை நிறைவேறுகிற காலத்தில்தான் நாம் வாழ்கிறோம். (வெளி. 1:3) ஆனால், துன்புறுத்தலை உண்மையோடு சகிப்பதற்கும் இந்தச் செய்திகளைத் தைரியமாக மற்றவர்களுக்குச் சொல்வதற்கும் எது நமக்கு உதவியாக இருக்கும்? இரண்டு விஷயங்களைத் தெரிந்துகொள்வது நமக்கு உதவியாக இருக்கும்: (1) கடவுளுடைய எதிரிகள் யார், அவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றியும் (2) கடவுளுக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்குக் கிடைக்கப்போகிற ஆசீர்வாதங்களைப் பற்றியும் வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்வது நமக்கு உதவி செய்யும். அதைப் பற்றி அடுத்த இரண்டு கட்டுரைகளில் பார்க்கப்போகிறோம்.

பாட்டு 32 என்றும் நாம் யெகோவாவின் பக்கம்

^ விறுவிறுப்பான சம்பவங்கள் நடக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்! வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற தரிசனங்கள் எல்லாம் இன்று நிறைவேறிவருகின்றன. இந்தத் தீர்க்கதரிசனங்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கட்டுரையிலும் அடுத்த இரண்டு கட்டுரைகளிலும் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற சில முக்கிய விஷயங்களைப் பார்ப்போம். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமாக நாம் எப்படி யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி அவரை வணங்க முடியும் என்றும் தெரிந்துகொள்வோம்.

^ நவம்பர் 15, 2014 காவற்கோபுரத்தில் பக்கம் 30-ல் இருக்கிற “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.