Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 20

வெளிப்படுத்துதல்—கடவுளுடைய எதிரிகளைப் பற்றி என்ன சொல்கிறது?

வெளிப்படுத்துதல்—கடவுளுடைய எதிரிகளைப் பற்றி என்ன சொல்கிறது?

“எபிரெய மொழியில் அர்மகெதோன் என்று அழைக்கப்பட்ட இடத்தில் அவை அவர்களைக் கூட்டிச்சேர்த்தன.”—வெளி. 16:16.

பாட்டு 150 மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்

இந்தக் கட்டுரையில்... *

1. வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்வதுபோல் சாத்தான் கடவுளுடைய மக்களை என்ன செய்கிறான்?

 கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்ததும் சாத்தான் பூமிக்குத் தள்ளப்பட்டான் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. (வெளி. 12:1-9) அதனால், பரலோகத்தில் இருக்கிறவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால், பூமியில் இருக்கிற கடவுளுடைய மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. ஏனென்றால், பூமியில் யெகோவாவை உண்மையோடு வணங்குகிற மக்களை சாத்தான் பயங்கர கோபத்தோடு தாக்குகிறான்.—வெளி. 12:12, 15, 17.

2. யெகோவாவுக்கு உண்மையாக இருக்க எது நமக்கு உதவும்?

2 சாத்தான் நம்மைத் தாக்கினாலும் நம்மால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும். அதற்கு எது நமக்கு உதவும்? (வெளி. 13:10) எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிந்து வைத்துக்கொள்வது நமக்கு உதவும். உதாரணத்துக்கு, சீக்கிரத்தில் நமக்குக் கிடைக்கப்போகிற ஆசீர்வாதங்களில் சிலவற்றைப் பற்றி வெளிப்படுத்துதல் புத்தகத்தில் அப்போஸ்தலன் யோவான் சொல்லியிருக்கிறார். அதில் ஒரு ஆசீர்வாதம் என்னவென்றால், எதிர்காலத்தில் கடவுளுடைய எதிரிகள் யாருமே இருக்க மாட்டார்கள். வெளிப்படுத்துதல் புத்தகம் இந்த எதிரிகளை எப்படி விவரிக்கிறது? அவர்களுக்கு என்ன நடக்கும் என்று சொல்கிறது? இதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கடவுளுடைய எதிரிகளை விவரிக்கும் “அடையாளங்கள்”

3. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற சில அடையாளங்கள் என்ன?

3 வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து நாம் பார்க்கப்போகிற விஷயங்கள், “அடையாளங்கள்” மூலமாகச் சொல்லப்பட்டிருப்பதாக அந்தப் புத்தகத்தின் முதல் வசனமே சொல்கிறது. (வெளி. 1:1) கடவுளுடைய எதிரிகளை அடையாளப்படுத்துகிற சில மூர்க்க மிருகங்களைப் பற்றி அந்தப் புத்தகம் சொல்கிறது. உதாரணத்துக்கு, “பத்து கொம்புகளும் ஏழு தலைகளும்” இருக்கிற ‘மூர்க்க மிருகம் ஒன்று கடலிலிருந்து ஏறி வருகிறது.’ (வெளி. 13:1) பிறகு, ‘வேறொரு மூர்க்க மிருகம் பூமியிலிருந்து எழுந்து வருகிறது.’ அது ராட்சதப் பாம்பைப் போல் பேசுகிறது, “வானத்திலிருந்து நெருப்பு வந்து பூமியில் விழும்படி” செய்கிறது. (வெளி. 13:11-13) அதற்குப் பிறகு, ‘கருஞ்சிவப்பு நிறமுள்ள ஒரு மூர்க்க மிருகம்’ வருகிறது. அந்த மிருகத்தின்மீது ஒரு விபச்சாரி சவாரி செய்துகொண்டிருக்கிறாள். இந்த மூன்று மூர்க்க மிருகங்களும் யெகோவாவையும் அவருடைய அரசாங்கத்தையும் பல காலமாக எதிர்த்துக்கொண்டிருக்கிற எதிரிகளைக் குறிக்கின்றன. அதனால், அந்த எதிரிகள் யாரென்று நாம் தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம்.—வெளி. 17:1, 3.

நான்கு பெரிய மிருகங்கள்

அந்த மிருகங்கள் “கடலிலிருந்து எழும்பி வந்தன.” (தானி. 7:1-8, 15-17) தானியேலின் காலத்திலிருந்து கடவுளுடைய மக்கள்மேல் முக்கியமாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த உலக வல்லரசுகளை அந்த மிருகங்கள் குறிக்கின்றன. (பாராக்கள் 4, 7)

4-5. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற அடையாளங்களைப் புரிந்துகொள்ள தானியேல் 7:15-17 எப்படி உதவுகிறது?

4 கடவுளுடைய எதிரிகள் யாரென்று நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அந்த மூர்க்க மிருகங்களும் விபச்சாரியும் எதைக் குறிக்கின்றன என்று தெரிந்துகொள்ள வேண்டும். இதைப் புரிந்துகொள்ள பைபிளே நமக்கு உதவி செய்கிறது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற நிறைய அடையாளங்கள் பைபிளிலுள்ள வேறு சில புத்தகங்களில் ஏற்கெனவே விளக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, ‘நான்கு பெரிய மிருகங்கள் கடலிலிருந்து எழும்பி வருவதை’ தானியேல் தீர்க்கதரிசி ஒரு கனவில் பார்த்தார். (தானி. 7:1-3) அந்தக் கனவுக்கான அர்த்தத்தையும் அவர் பதிவு செய்திருக்கிறார். அந்த நான்கு பெரிய மிருகங்கள் நான்கு ‘ராஜாக்களை,’ அதாவது அரசாங்கங்களை, குறிப்பதாக அவர் சொன்னார். (தானியேல் 7:15-17-ஐ வாசியுங்கள்.) தானியேல் புத்தகத்தில் சொல்லியிருக்கிற விளக்கத்தை வைத்துப் பார்க்கும்போது, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லியிருக்கிற மிருகங்களும் உலக அரசாங்கங்களைத்தான் குறிக்க வேண்டும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

5 இப்போது நாம் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற அடையாளங்கள் சிலவற்றைப் பார்க்கப்போகிறோம். அந்த அடையாளங்கள் எதைக் குறிக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க பைபிள் எப்படி உதவுகிறது என்றும் பார்ப்போம். முதலில், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற மூர்க்க மிருகங்களைப் பற்றிப் பார்க்கலாம். அந்த மிருகங்கள் ஒவ்வொன்றும் எதை குறிக்கிறது என்றும், அவற்றுக்கு என்ன நடக்கும் என்றும் தெரிந்துகொள்ளலாம். கடைசியாக, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

கடவுளுடைய எதிரிகள் யாரென்று தெரியவருகிறது

ஏழு தலைகள் இருக்கிற மூர்க்க மிருகம்

அது ‘கடலிலிருந்து ஏறி வந்தது.’ அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் பத்து மகுடங்களும் இருந்தன. (வெளி. 13:1-4) மனிதர்களை இதுவரை ஆட்சி செய்திருக்கிற எல்லா அரசாங்கங்களையும் அது குறிக்கிறது. அதன் ஏழு தலைகள், கடவுளுடைய மக்கள்மேல் முக்கியமாக ஆதிக்கம் செலுத்தியிருக்கிற ஏழு உலக வல்லரசுகளைக் குறிக்கின்றன. (பாராக்கள் 6-8)

6. வெளிப்படுத்துதல் 13:1-4-ல் சொல்லப்பட்டிருக்கிற ஏழு தலைகள் இருக்கிற மூர்க்க மிருகம் எதைக் குறிக்கிறது?

6 ஏழு தலைகள் இருக்கிற மூர்க்க மிருகம் எதைக் குறிக்கிறது? (வெளிப்படுத்துதல் 13:1-4-ஐ வாசியுங்கள்.) இந்த மிருகம் பார்ப்பதற்குச் சிறுத்தையைப் போல இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்களைப் போலவும் அதன் வாய் சிங்கத்தின் வாயைப் போலவும் இருந்தன. அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன. இந்த மிருகத்துக்கு இருக்கிற இந்த ஒவ்வொரு அம்சமும் தானியேல் 7-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற நான்கு மிருகங்களுக்கும் தனித்தனியாக இருந்தது. ஆனால், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற இந்த மூர்க்க மிருகத்துக்கு அந்த நான்கு மிருகங்களுடைய அம்சங்கள் எல்லாமே ஒன்றுசேர்ந்து இருந்தன. அதனால், அது வெறுமனே ஒரேவொரு அரசாங்கமாக, அதாவது ஒரேவொரு உலக வல்லரசாக, இருக்க முடியாது. அந்த மூர்க்க மிருகம், ‘எல்லா கோத்திரத்தையும் இனத்தையும் மொழியையும் தேசத்தையும் சேர்ந்தவர்களை’ ஆட்சி செய்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (வெளி. 13:7) அப்படியென்றால், இதுவரைக்கும் மனிதர்களை ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களையும் அந்த மூர்க்க மிருகம் குறிக்க வேண்டும். *பிர. 8:9.

7. மூர்க்க மிருகத்தின் தலைகள் ஒவ்வொன்றும் எதற்கு அடையாளமாக இருக்கின்றன?

7 அந்த மிருகத்தின் தலைகள் ஒவ்வொன்றும் எதற்கு அடையாளமாக இருக்கின்றன? பதிலைத் தெரிந்துகொள்ள வெளிப்படுத்துதல் 17-வது அதிகாரம் நமக்கு உதவுகிறது. அந்த அதிகாரத்தில், வெளிப்படுத்துதல் 13-வது அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற மூர்க்க மிருகத்தின் உருவத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. வெளிப்படுத்துதல் 17:10 இப்படிச் சொல்கிறது: “அவை ஏழு ராஜாக்களைக் குறிக்கின்றன: அவர்களில் ஐந்து பேர் வீழ்ச்சியடைந்தார்கள், ஒருவன் இருக்கிறான், இன்னொருவன் இன்னும் வரவில்லை; ஆனால், அவன் வரும்போது கொஞ்சக் காலம் இருப்பான்.” சாத்தான் பயன்படுத்தியிருக்கும் உலக அரசாங்கங்களில் ஏழு அரசாங்கங்கள் உலக வல்லரசுகளாக இருந்திருக்கின்றன. அந்த வல்லரசுகளைத்தான் அந்த மூர்க்க மிருகத்தின் ‘தலைகள்’ ஒவ்வொன்றும் குறிக்கின்றன. அந்த ஏழு வல்லரசுகளும் கடவுளுடைய மக்கள்மீது அதனுடைய அதிகாரத்தைக் காட்டியிருக்கின்றன அல்லது துன்புறுத்தியிருக்கின்றன. அப்போஸ்தலன் யோவான் வாழ்ந்த காலத்தில் ஐந்து வல்லரசுகளின் ஆட்சி ஏற்கெனவே முடிவுக்கு வந்திருந்தன. அதாவது எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரீஸ் ஆகிய வல்லரசுகளின் ஆட்சி முடிவுக்கு வந்திருந்தன. யோவானுக்கு இந்த வெளிப்படுத்துதல் கிடைத்தபோது, ஆறாவது உலக வல்லரசான ரோம் ஆட்சி செய்துகொண்டிருந்தது. அப்படியென்றால், ஏழாவது தலைக்கு அடையாளமாக இருக்கிற கடைசி உலக வல்லரசு எது?

8. மூர்க்க மிருகத்தின் ஏழாவது தலை எந்த உலக வல்லரசைக் குறிக்கிறது?

8 மூர்க்க மிருகத்தின் ஏழாவது தலை எதைக் குறிக்கிறது என்று கண்டுபிடிக்க தானியேல் புத்தகத்தில் இருக்கிற தீர்க்கதரிசனங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன என்று இப்போது பார்க்கலாம். இந்தக் கடைசி நாட்களில், அதாவது “எஜமானுடைய நாளில்,” எந்த உலக வல்லரசு ஆட்சி செய்கிறது? (வெளி. 1:10) ஐக்கிய அரசும் (பிரிட்டனும்) அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சேர்ந்த உலக வல்லரசு ஆட்சி செய்துகொண்டு இருக்கிறது. அதாவது, ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு ஆட்சி செய்துகொண்டு இருக்கிறது. அப்படியென்றால், வெளிப்படுத்துதல் 13:1-4-ல் சொல்லப்பட்டிருக்கிற அந்த மூர்க்க மிருகத்தின் ஏழாவது தலை, ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசுதான் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

ஆட்டுக்குட்டியின் கொம்புகளைப் போன்ற இரண்டு கொம்புகள் இருக்கிற மூர்க்க மிருகம்

இது ‘பூமியிலிருந்து எழுந்து வருகிறது,’ ‘ராட்சதப் பாம்பைப் போல் பேசுகிறது.’ ‘வானத்திலிருந்து நெருப்பு வந்து பூமியில் விழும்படியும் செய்கிறது.’ இது அற்புதங்கள் செய்கிற ‘போலித் தீர்க்கதரிசியாகவும்’ இருக்கிறது. (வெளி. 13:11-15; 16:13; 19:20) இரண்டு கொம்புகள் இருக்கிற மூர்க்க மிருகமாகவும் போலித் தீர்க்கதரிசியாகவும் இருக்கிற ஆங்கிலோ-அமெரிக்கா, பூமியில் குடியிருக்கிற மக்களை மோசம்போக்குகிறது. ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருக்கிற ‘மூர்க்க மிருகத்தின்’ ‘ஒரு உருவத்தை உண்டாக்கும்படி’ அது மக்களிடம் சொல்கிறது. (பாரா 9)

9. “ஆட்டுக்குட்டியின் கொம்புகளைப் போன்ற இரண்டு கொம்புகள்” இருக்கிற மூர்க்க மிருகம் எதைக் குறிக்கிறது?

9 அந்த ஏழாவது தலையைப் பற்றி, அதாவது ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசைப் பற்றி, வெளிப்படுத்துதல் 13-வது அதிகாரம் இன்னும் சில விஷயங்களைச் சொல்கிறது. அது “ஆட்டுக்குட்டியின் கொம்புகளைப் போன்ற இரண்டு கொம்புகள்” இருக்கிற ஒரு மூர்க்க மிருகத்தைப் போல நடந்துகொண்டதாகவும் ‘ராட்சதப் பாம்பைப் போல பேச ஆரம்பித்ததாகவும்’ அந்த அதிகாரம் சொல்கிறது. இந்த மூர்க்க மிருகத்தை ஒரு “போலித் தீர்க்கதரிசி” என்று வெளிப்படுத்துதல் 16-வது அதிகாரமும் 19-வது அதிகாரமும் சொல்கிறது. (வெளி. 16:13; 19:20) அதோடு, இந்த மூர்க்க மிருகம் “பெரிய அடையாளங்களைச் செய்தது; மனிதர்களின் கண் முன்னால் வானத்திலிருந்து நெருப்பு வந்து பூமியில் விழும்படி” செய்தது என்றும் யோவான் எழுதினார். (வெளி. 13:11-15) ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசைப் பற்றி இதேபோன்ற ஒரு விஷயத்தை தானியேலும் சொல்லியிருக்கிறார். அதாவது, அது ‘பயங்கரமான சீரழிவை உண்டாக்கும்’ என்று அவர் சொல்லியிருக்கிறார். (தானி. 8:19, 23, 24) இரண்டாவது உலகப் போரின்போது அதுதான் நடந்தது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் சேர்ந்து தயாரித்த இரண்டு அணுகுண்டுகள் பசிபிக் பகுதியில் போடப்பட்டன. இந்த பயங்கரமான சம்பவத்தினால் போர் முடிவுக்கு வந்தது. இந்த விதத்தில் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு “வானத்திலிருந்து நெருப்பு வந்து பூமியில் விழும்படி” செய்தது.

கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகம்

மகா பாபிலோன் என்ற விபச்சாரி இந்த மிருகத்தின்மேல் சவாரி செய்துகொண்டு இருக்கிறாள். இந்த மிருகம்தான் எட்டாவது ராஜா. (வெளி. 17:3-6, 8, 11) இந்த மூர்க்க மிருகம், ஆரம்பத்தில் இந்த விபச்சாரியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்குப் பிறகு இந்த மிருகமே அவளை அழித்துவிடுகிறது. இந்த விபச்சாரி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா பொய் மதங்களையும் குறிக்கிறாள். இந்த மிருகம் இன்று உலகத்தில் இருக்கிற எல்லா அரசியல் அமைப்புகளுக்கும் ஆதரவு கொடுக்கிற ஐநா சபையைக் குறிக்கிறது. (பாராக்கள் 10, 14-17)

10. ‘மூர்க்க மிருகத்தின் உருவம்’ எதைக் குறிக்கிறது? (வெளிப்படுத்துதல் 13:14, 15; 17:3, 8, 11)

10 அடுத்ததாக இன்னொரு மிருகத்தைப் பற்றிப் பார்க்கலாம். இது ஏழு தலைகள் இருக்கிற மூர்க்க மிருகத்தைப் போலவே இருக்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால், இது கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது. இது ‘மூர்க்க மிருகத்தின் உருவம்’ என்று அழைக்கப்படுகிறது. அதோடு, ‘எட்டாவது ராஜாவாக’ விவரிக்கப்பட்டிருக்கிறது. * (வெளிப்படுத்துதல் 13:14, 15; 17:3, 8, 11-ஐ வாசியுங்கள்.) அந்த “ராஜா” உருவானதாகவும், பின்பு இல்லாமல் போனதாகவும், அதற்குப் பிறகு திரும்ப வந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விவரிப்பு, உலக அரசியல் அமைப்புகளுக்கு ஆதரவு கொடுக்கிற ஐநா சபைக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கிறது! முன்பு அது, சர்வதேச சங்கம் என்ற பெயரில் இருந்தது. இரண்டாவது உலகப் போர் சமயத்தில் அது இல்லாமல் போனது. பின்பு, ஐநா சபை என்ற பெயரில் திரும்பவும் வந்தது.

11. அரசாங்கங்கள் என்ன செய்ய மனிதர்களைத் தூண்டும்? அதை நினைத்து நாம் ஏன் பயப்பட வேண்டியதில்லை?

11 இந்த மூர்க்க மிருகங்கள், அதாவது அரசாங்கங்கள், தவறான செய்திகளைப் பரப்பி மனிதர்களை யெகோவாவுக்கு எதிராகவும் அவருடைய மக்களுக்கு எதிராகவும் செயல்பட தூண்டும். இப்படிச் செய்வதன் மூலமாக அவை அர்மகெதோன் போருக்காக, அதாவது, ‘சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போருக்காகப் பூமி முழுவதுமுள்ள ராஜாக்களைக் கூட்டிச்சேர்க்கும்.’ (வெளி. 16:13, 14, 16) ஆனால், அந்த நாளை நினைத்து நாம் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், நம்முடைய கடவுள் யெகோவா உடனடியாகச் செயலில் இறங்குவார். தன்னுடைய ஆட்சியை ஆதரிக்கிறவர்களை அவர் காப்பாற்றுவார்.—எசே. 38:21-23.

12. இந்த எல்லா மிருகங்களுக்கும் என்ன நடக்கும்?

12 இந்த எல்லா மிருகங்களுக்கும் என்ன நடக்கப் போகிறது? வெளிப்படுத்துதல் 19:20-ல் அதற்குப் பதில் இருக்கிறது: “அந்த மூர்க்க மிருகம் பிடிக்கப்பட்டது. மூர்க்க மிருகத்தின் முன்னால் அற்புதங்கள் செய்த போலித் தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். இவன்தான் மூர்க்க மிருகத்தின் அடையாளக் குறியைப் பெற்றிருந்தவர்களையும் அதன் உருவத்தை வணங்கியவர்களையும் தன்னுடைய அற்புதங்களால் ஏமாற்றியவன். கந்தகம் எரிகிற நெருப்பு ஏரியில் அவன் உயிரோடு தள்ளப்பட்டான், அவனோடு மூர்க்க மிருகமும் உயிரோடு தள்ளப்பட்டது.” அப்படியென்றால், கடவுளுடைய எதிரிகளாக இருக்கிற இந்த அரசாங்கங்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போதே நிரந்தரமாக அழிக்கப்படும்.

13. சில அரசாங்கங்கள் கிறிஸ்தவர்களுக்கு என்ன பிரச்சினையைக் கொண்டுவருகின்றன?

13 நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்தவர்களாக நாம் கடவுளுக்கும், அவருடைய அரசாங்கத்துக்கும் உண்மையாக இருப்பது முக்கியம். (யோவா. 18:36) அதற்கு, உலக அரசியல் விஷயங்களில் நாம் நடுநிலையோடு இருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்வது ரொம்பவே கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், உலக அரசாங்கங்களுக்கு நாம் முழு ஆதரவு கொடுக்கும் விதத்தில் பேச வேண்டும்... நடந்துகொள்ள வேண்டும்... என்று அவர்கள் நம்மைக் கட்டாயப்படுத்தலாம். ஆனால் உலக அரசாங்கங்களுக்கு நாம் ஆதரவு கொடுத்தோம் என்றால், மூர்க்க மிருகத்தின் அடையாளக் குறியைப் பெற்றவர்களாக ஆகிவிடுவோம். (வெளி. 13:16, 17) யெகோவாவின் ஆதரவை நாம் இழந்துவிடுவோம்; பூஞ்சோலை பூமியில் வாழுகிற வாய்ப்பும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். (வெளி. 14:9, 10; 20:4) அப்படியென்றால், அரசாங்கம் நம்மை எவ்வளவுதான் வற்புறுத்தினாலும் நாம் கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்காமல் நடுநிலையோடு இருப்பது ரொம்ப முக்கியம், இல்லையா?

பேர்போன விபச்சாரிக்குக் கேவலமான முடிவு

14. வெளிப்படுத்துதல் 17:3-5-ல் சொல்லப்பட்டிருப்பது போல், என்ன ஆச்சரியமான விஷயத்தைப் அப்போஸ்தலன் யோவான் அடுத்ததாகப் பார்க்கிறார்?

14 அப்போஸ்தலன் யோவான் அடுத்ததாக இன்னொரு விஷயத்தைப் பார்த்து ‘பயங்கரமாக ஆச்சரியப்படுகிறார்.’ அது என்ன? நாம் ஏற்கெனவே பார்த்த மூர்க்க மிருகங்களில் ஒரு மிருகத்தின் மேல் ஒரு பெண் சவாரி செய்துகொண்டிருக்கிறாள். (வெளி. 17:1, 2, 6) அவள் பார்ப்பதற்கு ஒரு “பேர்போன விபச்சாரி” போல் இருக்கிறாள். அவளுடைய பெயர் “மகா பாபிலோன்.” ‘பூமியில் இருக்கிற ராஜாக்களோடு’ அவள் “பாலியல் முறைகேட்டில்” ஈடுபடுகிறாள்.—வெளிப்படுத்துதல் 17:3-5-ஐ வாசியுங்கள்.

15-16. “மகா பாபிலோன்” யார், அது நமக்கு எப்படித் தெரியும்?

15 “மகா பாபிலோன்” யார்? இந்தப் பெண், அரசியல் அமைப்பாக இருக்க முடியாது. ஏனென்றால், உலக அரசியல் தலைவர்களோடு அவள் பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. (வெளி. 18:9) சொல்லப்போனால், அந்த மூர்க்க மிருகத்தின் மேல் அவள் சவாரி செய்துகொண்டிருக்கிறாள். அதாவது, அரசியல் தலைவர்களை அவளுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாள். அதோடு அந்தப் பெண், பேராசை பிடித்த வர்த்தக அமைப்புகளாகவும் இருக்க முடியாது. ஏனென்றால், இந்த வர்த்தக அமைப்புகள், அதாவது ‘உலகத்தில் இருக்கிற வியாபாரிகள்’ மகா பாபிலோனின் அழிவைப் பார்த்துப் புலம்புவதாக வெளிப்படுத்துதல் 18-ஆம் அதிகாரம் சொல்கிறது.—வெளி. 18:11, 15, 16.

16 பைபிளில், “விபச்சாரி” என்ற வார்த்தை கடவுளை வணங்குவதாகச் சொல்லிக்கொண்டு சிலைகளை வணங்குகிறவர்களைக் குறிக்கலாம். அல்லது, இந்த உலகத்தோடு ஏதாவது ஒரு விதத்தில் நட்பு வைத்துக்கொள்கிறவர்களைக் குறிக்கலாம். (1 நா. 5:25; யாக். 4:4) அதேசமயத்தில், கடவுளை உண்மையாக வணங்குகிறவர்களை ‘கற்புள்ளவர்களுக்கும்’ ‘கன்னிப்பெண்களுக்கும்’ ஒப்பிட்டு பைபிள் சொல்கிறது. (2 கொ. 11:2; வெளி. 14:4) பைபிள் காலத்தில், பாபிலோன் பொய் வணக்கத்துக்கு ஒரு முக்கிய இடமாக இருந்தது. அப்படியென்றால், மகா பாபிலோன் உலகத்தில் இருக்கிற எல்லா பொய் மதங்களுக்கும் அடையாளமாக இருக்கிறது என்பது தெரிகிறது. சொல்லப்போனால், பொய் மதங்களின் சாம்ராஜ்யமே மகா பாபிலோன்தான்.—வெளி. 17:5, 18; “மகா பாபிலோன் என்றால் என்ன?” என்ற ஆன்லைன் கட்டுரையை jw.org-ல் பாருங்கள்.

17. மகா பாபிலோனுக்கு என்ன நடக்கும்?

17 மகா பாபிலோனுக்கு என்ன நடக்கும்? வெளிப்படுத்துதல் 17:16, 17-ல் பதில் இருக்கிறது: “நீ பார்த்த பத்துக் கொம்புகளும் மூர்க்க மிருகமும், அந்த விபச்சாரிமீது வெறுப்படைந்து அவளிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டு அவளை நிர்வாணமாக்கிவிடும். பின்பு, அவளுடைய சதையைத் தின்று, அவளை நெருப்பில் முழுவதுமாகச் சுட்டெரித்துவிடும். ஏனென்றால், கடவுள் தன்னுடைய எண்ணத்தை அவர்களுடைய இதயங்களில் வைத்தார்.” இந்த வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறபடி, எல்லா பொய் மதங்களும் முழுமையாக அழிக்கப்படும். கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகத்தைப் பயன்படுத்தி, அதாவது ஐநா சபையைப் பயன்படுத்தி, பொய் மதங்களை அழிக்க யெகோவா தேசங்களைத் தூண்டுவார்.—வெளி. 18:21-24.

18. மகா பாபிலோனுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை எப்படிக் காட்டலாம்?

18 நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய வணக்கம் ‘கடவுளுடைய பார்வையில் சுத்தமானதாக, களங்கமில்லாததாக’ இருக்கும்படி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். (யாக். 1:27) நம்முடைய வணக்கம் மகா பாபிலோனுடைய, அதாவது பொய் மதங்களுடைய, போதனைகளாலும் பண்டிகைகளாலும் கீழ்த்தரமான ஒழுக்க நெறிகளாலும் கறைபட்டுவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு, ‘அவளைவிட்டு வெளியே வர’ சொல்லி மற்றவர்களையும் நாம் தொடர்ந்து எச்சரிக்க வேண்டும். அப்போதுதான் அவளுடைய பாவங்களுக்கு அவர்களாலும் துணை போகாமல் இருக்க முடியும்.—வெளி. 18:4.

கடவுளுடைய முக்கிய எதிரிக்குக் கிடைக்கப்போகும் நியாயத்தீர்ப்பு

சிவப்புநிற ராட்சதப் பாம்பு

ஏழு தலைகள் இருக்கிற மூர்க்க மிருகத்துக்கு சாத்தான் அதிகாரத்தைக் கொடுக்கிறான். (வெளி. 12:3, 9, 13; 13:4; 20:2, 10) யெகோவாவுடைய முக்கிய எதிரியான சாத்தான் 1,000 வருஷங்களுக்கு அதலபாதாளத்தில் அடைக்கப்படுவான். அதற்குப் பிறகு, அவன் “நெருப்பும் கந்தகமும் எரிகிற ஏரியில்” தள்ளப்படுவான். (பாராக்கள் 19-20)

19. “சிவப்புநிற ராட்சதப் பாம்பு” யார்?

19 வெளிப்படுத்துதல் புத்தகத்தில் ஒரு ‘சிவப்புநிற ராட்சதப் பாம்பை’ பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. (வெளி. 12:3) இயேசுவையும் அவருடைய தூதர்களையும் எதிர்த்து இந்த ராட்சதப் பாம்பு போர் செய்கிறது. (வெளி. 12:7-9) கடவுளுடைய மக்களையும் இது தாக்குகிறது. நாம் இதுவரைக்கும் பார்த்த மூர்க்க மிருகங்களுக்கு, அதாவது மனித அரசாங்கங்களுக்கு, அதிகாரத்தைக் கொடுப்பதும் இதுதான். (வெளி. 12:17; 13:4) அப்படியென்றால், இந்த ராட்சதப் பாம்பு யார்? “பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிற” ‘பழைய பாம்புதான்’ இவன். (வெளி. 12:9; 20:2) கடவுளுடைய எதிரிகள் எல்லாருமே இவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.

20. ராட்சதப் பாம்புக்கு என்ன நடக்கும்?

20 அந்த ராட்சதப் பாம்புக்கு என்ன நடக்கும்? சாத்தானை ஒரு தேவதூதர் அதலபாதாளத்துக்குள் தள்ளுவதாக வெளிப்படுத்துதல் 20:1-3 சொல்கிறது. இது அவனைச் சிறையில் தள்ளுவது போல் இருக்கும். அதலபாதாளத்துக்குள் இருப்பதால், ‘1,000 வருஷங்கள் முடியும்வரை தேசங்களை அவனால் ஏமாற்ற’ முடியாது. கடைசியில், சாத்தானும் அவனோடு சேர்ந்த பேய்களும் “நெருப்பும் கந்தகமும் எரிகிற ஏரியில்” தள்ளப்படுவார்கள், அதாவது முழுமையாக அழிக்கப்படுவார்கள். (வெளி. 20:10) சாத்தானும் அவனுடைய பேய்களும் இல்லாத உலகத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! அது ரொம்ப அருமையாக இருக்கும், இல்லையா?

21. வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொண்ட விஷயங்களை நினைத்து நாம் ஏன் சந்தோஷப்படலாம்?

21 வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற அடையாளங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டது ரொம்ப உற்சாகமாக இருந்தது, இல்லையா? யெகோவாவின் எதிரிகள் யாரென்று அடையாளம் கண்டுபிடித்தது மட்டுமல்ல, அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதையும் நாம் பார்த்தோம். உண்மையிலேயே, “இந்தத் தீர்க்கதரிசன செய்திகளைச் சத்தமாக வாசிக்கிறவர்களும் கேட்கிறவர்களும் . . . சந்தோஷமானவர்கள்”! (வெளி. 1:3) சரி, கடவுளுடைய எதிரிகள் எல்லாரும் அழிக்கப்பட்ட பிறகு, அவருக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கப்போகின்றன? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாட்டு 23 யெகோவாவின் ஆட்சி ஆரம்பித்தது

^ கடவுளுடைய எதிரிகள் யாரென்று தெரிந்துகொள்ள வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சில அடையாளங்கள் இருக்கின்றன. அந்த அடையாளங்களைப் புரிந்துகொள்வதற்கு தானியேல் புத்தகம் நமக்கு உதவி செய்யும். இந்தக் கட்டுரையில் தானியேல் புத்தகத்தில் இருக்கிற சில தீர்க்கதரிசனங்களை, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற அதே மாதிரியான சில தீர்க்கதரிசனங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். இப்படிச் செய்யும்போது, கடவுளுடைய எதிரிகள் யாரென்று நம்மால் கண்டுபிடிக்க முடியும். அவர்களுக்கு என்ன நடக்கும் என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ ஏழு தலைகள் இருக்கிற இந்த மூர்க்க மிருகம் எல்லா உலக அரசாங்கங்களுக்கும் அடையாளமாக இருக்கிறது என்பதற்கு இன்னொரு காரணம் என்னவென்றால் அதற்கு ‘பத்துக் கொம்புகள்’ இருக்கின்றன. பொதுவாக, பத்து என்ற எண் முழுமையைக் குறிப்பதற்காக பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

^ முன்பு நாம் பார்த்த மூர்க்க மிருகத்தின் கொம்புகளில் “மகுடங்கள்,” அதாவது கிரீடங்கள் இருந்தன. (வெளி. 13:1) ஆனால், மூர்க்க மிருகத்தின் உருவம் என்று அழைக்கப்படுகிற இந்த மிருகத்துக்கு அவை இல்லை. ஏனென்றால், இந்த மிருகம் ‘அந்த ஏழு ராஜாக்களில் இருந்துதான்’ உருவாகிறது. அவர்கள்தான் இதற்கு அதிகாரத்தைக் கொடுக்கிறார்கள்.—“வெளிப்படுத்துதல் 17-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகம் எதைக் குறிக்கிறது?” என்ற ஆன்லைன் கட்டுரையை jw.org-ல் பாருங்கள்.