Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 20

இன்னும் நன்றாக ஜெபம் செய்ய...

இன்னும் நன்றாக ஜெபம் செய்ய...

“உங்களுடைய இதயத்தில் இருப்பதையெல்லாம் அவர்முன் ஊற்றிவிடுங்கள்.”—சங். 62:8.

பாட்டு 45 என் இதயத்தின் தியானம்

இந்தக் கட்டுரையில்... a

எந்தத் தயக்கமும் இல்லாமல் யெகோவாவிடம் நாம் ஜெபம் செய்யலாம். நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்துக்காகவும் அவரிடம் உதவி கேட்கலாம் (பாரா 1)

1. நாம் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறார்? (படத்தையும் பாருங்கள்.)

 நமக்கு ஆறுதலும் வழிநடத்துதலும் தேவைப்படும்போது நாம் யாரிடம் கேட்கலாம்? யெகோவாவிடம் கேட்கலாம் என்பதில் சந்தேகமே இல்லை. சொல்லப்போனால், உதவி கேட்டு ஜெபம் செய்யும்படி யெகோவாவே சொல்கிறார். அதுவும், நாம் ‘எப்போதும் ஜெபம் செய்ய’ வேண்டும்... அடிக்கடி ஜெபம் செய்ய வேண்டும்... என்று அவர் ஆசைப்படுகிறார். (1 தெ. 5:17) எந்தத் தயக்கமும் இல்லாமல் அவரிடம் நாம் ஜெபம் செய்யலாம். நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்துக்காகவும் அவரிடம் உதவி கேட்கலாம். (நீதி. 3:5, 6) யெகோவா தாராள குணமுள்ளவராக இருப்பதால், எத்தனை தடவை வேண்டுமானாலும் நாம் ஜெபம் செய்யலாம் என்று சொல்கிறார்.

2. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?

2 ஜெபம் என்பது நமக்குக் கிடைத்த பெரிய பாக்கியம். அதற்காக நாம் யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கிறோம். ஆனாலும், ஜெபம் செய்ய நேரத்தை ஒதுக்குவது சிலசமயம் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். இன்னும் நன்றாக ஜெபம் செய்ய வேண்டுமென்றும் நாம் ஆசைப்படலாம். இதற்குத் தேவையான உற்சாகமும் உதவியும் பைபிளைப் படிக்கும்போது நமக்குக் கிடைக்கும். ஜெபம் செய்ய நேரம் ஒதுக்குவதைப் பற்றி இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, இன்னும் நன்றாக ஜெபம் பண்ணுவதற்கு என்ன ஐந்து முக்கியமான விஷயங்களை நம் ஜெபத்தில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பார்ப்போம்.

ஜெபம் செய்ய இயேசு நேரம் ஒதுக்கினார்

3. ஜெபத்தைப் பற்றி இயேசு எதைப் புரிந்து வைத்திருந்தார்?

3 ஜெபத்தை யெகோவா எவ்வளவு முக்கியமாக நினைக்கிறார் என்பதை இயேசு நன்றாகப் புரிந்து வைத்திருந்தார். உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் செய்த ஜெபங்களுக்கு யெகோவா எப்படிப் பதில் கொடுத்தார் என்பதை இந்தப் பூமிக்கு வருவதற்கு ரொம்ப காலத்துக்கு முன்பிருந்தே அவர் கண்கூடாகப் பார்த்திருந்தார். அன்னாள், தாவீது, எலியா போன்றவர்கள் செய்த மனப்பூர்வமான ஜெபங்களுக்கு யெகோவா பதில் கொடுத்தபோது அவருக்குப் பக்கத்திலேயே இயேசு இருந்தார். (1 சா. 1:10, 11, 20; 1 ரா. 19:4-6; சங். 32:5) அதனால், அடிக்கடி ஜெபம் செய்யும்படியும் நம்பிக்கையோடு ஜெபம் செய்யும்படியும் இயேசு தன் சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்.—மத். 7:7-11.

4. இயேசு செய்த ஜெபங்களிலிருந்து நாம் என்னவெல்லாம் கற்றுக்கொள்கிறோம்?

4 ஜெபம் செய்யும் விஷயத்தில் இயேசு தன் சீஷர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தார். ஊழியம் செய்த காலப்பகுதி முழுவதும் அவர் அடிக்கடி ஜெபம் செய்தார். இயேசுவுக்கு நிறைய வேலை இருந்தது, அதோடு அவரைச் சுற்றி எப்போதும் நிறைய பேர் இருந்தார்கள். ஆனாலும், ஜெபம் செய்வதற்கு அவர் நேரத்தை ஒதுக்கினார். (மாற். 6:31, 45, 46) உதாரணத்துக்கு, விடியற்காலையில், இன்னமும் இருட்டாக இருந்தபோதே, எழுந்து தனிமையான ஓர் இடத்துக்குப் போய் ஜெபம் செய்தார். (மாற். 1:35) ஒரு தடவை, ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு ராத்திரி முழுக்கக்கூட அவர் ஜெபம் செய்ததாக பைபிள் சொல்கிறது. (லூக். 6:12, 13) இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரியும் அவர் திரும்பத் திரும்ப ஜெபம் செய்துகொண்டே இருந்தார். ஏனென்றால், உச்சக்கட்ட சோதனையைத் தாங்கிக்கொண்டு, இந்தப் பூமியில் தனக்குக் கொடுக்கப்பட்ட மிக முக்கியமான பொறுப்பை அவர் செய்து முடிக்க வேண்டியிருந்தது.—மத். 26:39, 42, 44.

5. ஜெபம் செய்யும் விஷயத்தில் நாம் எப்படி இயேசுவைப் போல் நடந்துகொள்ளலாம்?

5 நாம் எவ்வளவு வேலையாக இருந்தாலும், ஜெபம் செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். இதுதான் இயேசுவின் முன்மாதிரியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஒரு பாடம். இயேசுவைப் போலவே நாம் ஒருவேளை காலையில் கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஜெபம் செய்யலாம் அல்லது ராத்திரி இன்னும் கொஞ்ச நேரம் விழித்திருந்து ஜெபம் செய்யலாம். அப்படிச் செய்யும்போது, இந்த விசேஷமான பாக்கியத்துக்காக நாம் யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்ட முடியும். லின் என்ற சகோதரி, ஜெபத்தைப் பற்றி முதன்முதலில் தெரிந்துகொண்டபோது பூரித்துப்போனார்! “எந்தச் சமயத்திலும் என்னால் யெகோவாவிடம் பேச முடியும் என்று தெரிந்துகொண்டபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதுமுதல் அவரை என்னுடைய நெருங்கிய நண்பராகப் பார்க்க ஆரம்பித்தேன். அவரிடம் இன்னும் நன்றாக ஜெபம் செய்ய ஆசைப்பட்டேன்” என்று அவர் சொல்கிறார். நம்மில் நிறைய பேரும் அதேபோல் ஆசைப்படுவோம் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படியென்றால், ஐந்து முக்கியமான விஷயங்களை நம் ஜெபத்தில் சேர்த்துக்கொள்ளலாம். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஜெபம் செய்வதற்கு ஐந்து முக்கியமான விஷயங்கள்

6. எதைப் பெற்றுக்கொள்ள யெகோவா தகுதியானவர் என்று வெளிப்படுத்துதல் 4:10, 11 சொல்கிறது?

6 யெகோவாவைப் புகழுங்கள். 24 மூப்பர்கள் பரலோகத்தில் யெகோவாவை வணங்குவதை ரொம்ப பிரமிப்பான ஒரு தரிசனத்தில் அப்போஸ்தலன் யோவான் பார்த்தார். அவர்கள் யெகோவாவைப் புகழ்ந்து, அவர் “மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்” என்று சொன்னார்கள். (வெளிப்படுத்துதல் 4:10, 11-ஐ வாசியுங்கள்.) உண்மையுள்ள தேவதூதர்களுக்குக்கூட யெகோவாவைப் புகழ்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவர்கள் பரலோகத்தில் அவர்கூடவே இருக்கிறார்கள், அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர் செய்வதையெல்லாம் பார்த்து அவருடைய குணங்களை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். யெகோவா எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பார்க்கப் பார்க்க அவரைப் புகழ வேண்டுமென்ற ஆசை அவர்களுக்கு அதிகமாகிறது.—யோபு 38:4-7.

7. எதற்கெல்லாம் நாம் யெகோவாவைப் புகழலாம்?

7 நாமும் ஜெபத்தில் யெகோவாவைப் புகழ வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்? அவரிடம் எதுவெல்லாம் நமக்குப் பிடித்திருக்கிறது, எதையெல்லாம் ரசிக்கிறோம் என்று அவரிடம் சொல்லலாம். நீங்கள் பைபிளைப் படிக்கும்போது, யெகோவா காட்டும் நிறைய குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்வீர்கள். அதில் உங்கள் மனதைத் தொட்ட குணங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். (யோபு 37:23; ரோ. 11:33) அந்தக் குணங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று யெகோவாவிடம் சொல்லுங்கள். நமக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கும் யெகோவா உதவி செய்வதற்காகக்கூட நாம் அவரைப் புகழலாம். அவர் எப்போதுமே நம்மைக் கவனித்துக்கொள்கிறார், நம்மைப் பாதுகாக்கிறார்.—1 சா. 1:27; 2:1, 2.

8. என்ன சில காரணங்களுக்காக நாம் யெகோவாவுக்கு நன்றி சொல்லலாம்? (1 தெசலோனிக்கேயர் 5:18)

8 யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள். ஜெபத்தில் யெகோவாவுக்கு நன்றி சொல்ல நமக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. (1 தெசலோனிக்கேயர் 5:18-ஐ வாசியுங்கள்.) நம்மிடம் இருக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்காகவும் நாம் அவருக்கு நன்றி சொல்லலாம். ஏனென்றால், எல்லா நல்ல பரிசுகளுமே அவரிடமிருந்துதான் வருகின்றன. (யாக். 1:17) உதாரணத்துக்கு, இந்த அழகான பூமிக்காக அவருக்கு நாம் நன்றி சொல்லலாம், அவருடைய அற்புதமான படைப்புகளுக்காக நன்றி சொல்லலாம். அதேபோல், நமக்கு உயிர் கொடுத்ததற்காக... அருமையான குடும்பத்தையும் நண்பர்களையும் கொடுத்ததற்காக... நல்ல எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுத்ததற்காக... நன்றி சொல்லலாம். அதுமட்டுமல்ல, அவரோடு நெருக்கமான நட்பை அனுபவிக்க நமக்கு வாய்ப்புக் கொடுத்ததற்காகவும் அவருக்கு நன்றி சொல்லலாம்.

9. யெகோவாவுக்கு நன்றி சொல்லும் பழக்கத்தை நாம் வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?

9 தனிப்பட்ட விதமாக யெகோவா நமக்குச் செய்திருக்கும் விஷயங்களை யோசித்துப் பார்த்து நன்றி சொல்ல கண்டிப்பாக முயற்சி தேவை. ஏனென்றால், நன்றிகெட்ட ஒரு உலகத்தில் நாம் வாழ்கிறோம். மக்கள் தங்களிடம் இருக்கும் விஷயங்களுக்கு நன்றியோடு இருக்க நினைப்பதில்லை, இன்னும் என்ன வேண்டும் என்றுதான் யோசிக்கிறார்கள். நாமும் அவர்களைப் போல் யோசிக்க ஆரம்பித்துவிட்டால், ஜெபத்தில் ‘இது வேண்டும், அது வேண்டும்’ என்றுதான் யெகோவாவிடம் கேட்டுக்கொண்டிருப்போம். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமென்றால், யெகோவா நமக்காகச் செய்யும் எல்லாவற்றுக்கும் நன்றி சொல்லும் பழக்கத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.—லூக். 6:45.

யெகோவாவுக்கு நன்றி சொல்லும்போது, நம்மால் கஷ்டத்தைச் சகித்துக்கொள்ள முடியும் (பாரா 10)

10. நன்றியோடு இருப்பது கஷ்டத்தைச் சகித்துக்கொள்ள ஒரு சகோதரிக்கு எப்படி உதவி செய்தது? (படத்தையும் பாருங்கள்.)

10 நன்றியோடு இருப்பது, கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள நமக்கு உதவும். ஜனவரி 15, 2015 காவற்கோபுரத்தில் வந்த யுங்-சூக் என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவருக்கு நுரையீரல் புற்றுநோய் முற்றிப்போயிருந்தது திடீரென்று தெரியவந்தது. அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “விஷயம் தெரிந்ததும் அப்படியே இடிந்துபோய்விட்டேன். எல்லாவற்றையுமே நான் இழந்துவிட்ட மாதிரி இருந்தது. ரொம்ப பயமாக இருந்தது” என்று அவர் சொன்னார். இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க எது அவருக்கு உதவியது? ஒவ்வொரு நாளும் தூங்கப்போவதற்குமுன் அவர் மொட்டைமாடிக்குப் போய் யெகோவாவிடம் சத்தமாக ஜெபம் செய்தார். அந்த நாளில் யெகோவா அவருக்காகச் செய்த ஐந்து நல்ல விஷயங்களுக்காக நன்றி சொன்னார். அப்படிச் செய்ததால், யெகோவா அவர்மேல் அக்கறையாக இருக்கிறார் என்று அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அதோடு, யெகோவாவை இன்னும் அதிகமாக நேசிக்க அது அவரைத் தூண்டியது. கஷ்டமான எந்தச் சூழ்நிலையிலும் யெகோவா நம்மைத் தாங்குகிறார் என்று அவர் தெரிந்துகொண்டார். வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளைவிட யெகோவா நமக்கு செய்திருக்கிற நல்ல விஷயங்கள்தான் நிறைய இருக்கின்றன என்றும் புரிந்துகொண்டார். இந்தச் சகோதரியைப் போலவே நாமும் கஷ்டத்தில் இருக்கும்போதுகூட யெகோவாவுக்கு நன்றி சொல்லலாம். அதற்கு நமக்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஜெபத்தில் அவருக்கு நன்றி சொல்லும்போது, நம்மால் கஷ்டத்தைச் சகித்துக்கொள்ள முடியும், பதட்டப்படாமல் நிம்மதியாக இருக்கவும் முடியும்.

11. இயேசு பரலோகத்துக்குப் போன பிறகு அவருடைய சீஷர்களுக்கு ஏன் தைரியம் தேவைப்பட்டது?

11 ஊழியம் செய்ய தைரியம் தரச் சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள். இயேசு பரலோகத்துக்குப் போவதற்குக் கொஞ்சம் முன்பு, “எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும்” தனக்குச் சாட்சிகளாக இருக்க வேண்டுமென்று தன் சீஷர்களுக்கு ஞாபகப்படுத்தினார். (அப். 1:8; லூக். 24:46-48) கொஞ்ச நாளிலேயே, யூத மதத் தலைவர்கள் அப்போஸ்தலர்களான பேதுருவையும் யோவானையும் கைது செய்து நியாயசங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். இனி பிரசங்கிக்கக் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளை போட்டார்கள், சொல்லப்போனால் அவர்களை மிரட்டினார்கள். (அப். 4:18, 21) அப்போது பேதுருவும் யோவானும் என்ன செய்தார்கள்?

12. அப்போஸ்தலர் 4:29, 31-ன்படி, சீஷர்கள் என்ன செய்தார்கள்?

12 யூத மதத் தலைவர்கள் மிரட்டியபோது பேதுருவும் யோவானும் அவர்களிடம், “கடவுள் சொல்வதைக் கேட்காமல் நீங்கள் சொல்வதைக் கேட்பது கடவுளுக்கு முன்னால் சரியாக இருக்குமா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது” என்று சொன்னார்கள். (அப். 4:19, 20) பேதுருவும் யோவானும் விடுதலையான பிறகு, யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய உதவி கேட்டு சீஷர்கள் எல்லாரும் ஜெபம் செய்தார்கள். “உங்கள் வார்த்தையை முழு தைரியத்தோடு பேசிக்கொண்டே இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்கள். மனப்பூர்வமாக அவர்கள் செய்த அந்த ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்தார்.—அப்போஸ்தலர் 4:29, 31-ஐ வாசியுங்கள்.

13. ஜின்-ஹியூக் என்ற சகோதரரின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

13 பிரசங்கிக்கக் கூடாதென்று அரசாங்க அதிகாரிகள் சொன்னாலும் தொடர்ந்து பிரசங்கிப்பதன் மூலம், முதல் நூற்றாண்டு சீஷர்களைப் போலவே நாமும் நடந்துகொள்ளலாம். ஜின்-ஹியூக் என்ற சகோதரரின் அனுபவத்தைப் பார்க்கலாம். நடுநிலைக்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே, தனித்தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், தேவையில்லாத எந்த விஷயத்தைப் பற்றியும் அவர்களிடம் பேசக் கூடாதென்று சொல்லிவிட்டார்கள். முக்கியமாக, பைபிளைப் பற்றிப் பேச அவருக்கு அனுமதி இல்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தைரியமாகவும் சாதுரியமாகவும் நல்ல செய்தியைச் சொல்ல உதவி கேட்டு அவர் ஜெபம் செய்தார். (அப். 5:29) “நான் கேட்ட மாதிரியே யெகோவா எனக்கு தைரியத்தையும் ஞானத்தையும் கொடுத்தார். அதனால், நிறைய பேருடைய சிறைக் கதவுக்கு வெளியில் நின்றே ஐந்து நிமிஷ பைபிள் படிப்பை என்னால் ஆரம்பிக்க முடிந்தது. அதன் பிறகு, ராத்திரியில் கடிதங்களை எழுதி அடுத்த நாள் கைதிகளிடம் கொண்டுபோய்க் கொடுப்பேன்” என்று அவர் சொல்கிறார். ஊழியத்தை நல்லபடியாகச் செய்து முடிக்க யெகோவா உதவி செய்வார் என்று நாமும் நம்பிக்கையோடு இருக்கலாம். ஜின்-ஹியூக்கைப் போல நாமும் தைரியத்துக்காகவும் ஞானத்துக்காகவும் ஜெபம் செய்யலாம்.

14. பிரச்சினைகளைச் சமாளிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? (சங்கீதம் 37:3, 5)

14 பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவாவிடம் உதவி கேளுங்கள். நம்மில் நிறைய பேருடைய உடல் அல்லது மனம் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம்... அன்பானவர்களை மரணத்தில் இழந்து நாம் தவித்துக்கொண்டு இருக்கலாம்... குடும்பப் பிரச்சினைகளால், துன்புறுத்தலால், அல்லது வேறு சில பிரச்சினைகளால்கூட நாம் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கலாம். அதுவும், கொள்ளைநோய், போர் போன்றவை வந்துவிட்டால் ஏற்கெனவே இருக்கும் பிரச்சினைகளைச் சமாளிப்பது நமக்கு இன்னும் கஷ்டமாகிவிடலாம். அந்த மாதிரி சூழ்நிலையில், உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டிவிடுங்கள். ஒரு நெருக்கமான நண்பரிடம் பேசுவதுபோல் அவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். யெகோவா ‘உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வார்’ என்று நம்பிக்கையோடு இருங்கள்.சங்கீதம் 37:3, 5-ஐ வாசியுங்கள்.

15. ‘உபத்திரவத்தில் சகித்திருக்க’ ஜெபம் எப்படி நமக்கு உதவி செய்யும்? ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

15 விடாமல் ஜெபம் செய்வது, ‘உபத்திரவத்தில் சகித்திருக்க’ நமக்கு உதவும். (ரோ. 12:12) நாம் படும் பாடுகள் யெகோவாவுக்குத் தெரியும், ‘உதவிக்காக நாம் கதறுவதை அவர் கேட்கிறார்.’ (சங். 145:18, 19) இது எவ்வளவு உண்மை என்பதை 29 வயது பயனியர் சகோதரியான க்றிஸ்டி புரிந்துகொண்டார். திடீரென்று அவருக்கு நிறைய உடல்நலப் பிரச்சினைகள் வந்துவிட்டன. அதனால், அவருக்குப் பயங்கரமான மனச்சோர்வும் வந்துவிட்டது. அதற்குப் பிறகு, அவருடைய அம்மா படுத்த படுக்கையாகிவிட்டார். இதைப் பற்றி அவர் சொல்லும்போது, “ஒவ்வொரு நாளையும் சமாளிக்க பலம் கேட்டு நான் யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்தேன். அவரிடம் நெருக்கமாக இருப்பதற்காக, கூட்டங்களுக்குப் போவது... தனிப்பட்ட படிப்பு படிப்பது... போன்ற எல்லாவற்றையும் நான் தவறாமல் செய்தேன். சோதனையான அந்தக் காலகட்டத்தைச் சமாளிக்க ஜெபம் எனக்கு ரொம்பவே உதவி செய்தது. யெகோவா எப்போதுமே என்கூட இருக்கிறார் என்பதை யோசித்தபோது ரொம்ப ஆறுதலாக இருந்தது. என்னுடைய உடல்நலப் பிரச்சினைகள் தீரவில்லைதான். ஆனாலும், யெகோவா என் ஜெபத்தைக் கேட்டு மனநிம்மதியைத் தந்தார், பதட்டப்படாமல் இருக்க உதவினார்” என்று சொன்னார். “கடவுள்பக்தி உள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுதலை செய்ய . . . யெகோவா அறிந்திருக்கிறார்” என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.—2 பே. 2:9.

கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட (1) யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் பண்ணுங்கள், (2) உங்கள் பங்கில் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள், (3) யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் நட்பைப் பலப்படுத்துங்கள் (பாராக்கள் 16-17)

16. கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட நமக்கு ஏன் யெகோவாவின் உதவி தேவை?

16 கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட யெகோவாவிடம் உதவி கேளுங்கள். நாம் பாவ இயல்புள்ள மனிதர்களாக இருப்பதால் எப்போதுமே கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. அந்தப் போராட்டத்தில் நம்மை ஜெயிக்க விடாமல் பண்ணுவதற்காக சாத்தான் எல்லா முயற்சியும் செய்கிறான். நம் மனதைக் கெடுப்பதற்காக அவன் பயன்படுத்தும் ஒரு விஷயம், தரங்கெட்ட பொழுதுபோக்கு. அப்படிப்பட்ட பொழுதுபோக்கு நம் மனதைக் கெட்ட யோசனைகளால் நிரப்பிவிடும். அந்த யோசனைகள் யெகோவாவின் பார்வையில் நம்மை அசுத்தமாக்கிவிடும், கடைசியில் மோசமான பாவத்தைக்கூட செய்ய வைத்துவிடும்.—மாற். 7:21-23; யாக். 1:14, 15.

17. கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட ஜெபம் செய்வதோடு நம் பங்கில் என்ன செய்ய வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

17 கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட கண்டிப்பாக நமக்கு யெகோவாவின் உதவி தேவை. அதனால்தான், “சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க எங்களுக்கு உதவி செய்யுங்கள், பொல்லாதவனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று ஜெபம் செய்யும்படி இயேசு சொல்லிக்கொடுத்தார். (மத். 6:13) நமக்கு உதவி செய்ய யெகோவா ஆசைப்படுகிறார். ஆனால், நாம் முதலில் அவரிடம் உதவி கேட்க வேண்டும். அதேசமயத்தில், நம் பங்கில் செய்ய வேண்டியதையும் செய்ய வேண்டும். சாத்தானுடைய உலகத்தில் பிரபலமாக இருக்கும் கெட்ட விஷயங்களைப் படிப்பதையோ கேட்பதையோ நாம் தவிர்க்க வேண்டும். (சங். 97:10) அதற்குப் பதிலாக, பைபிளைப் படித்து நம் மனதை நல்ல விஷயங்களால் நிரப்ப வேண்டும். கூட்டங்களில் கலந்துகொள்வதும் ஊழியம் செய்வதும்கூட நம் மனதைப் பாதுகாக்கும். இதையெல்லாம் நாம் செய்யும்போது, நம்மால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் யெகோவா அனுமதிக்க மாட்டார். அவரே இந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார்!—1 கொ. 10:12, 13.

18. ஜெபத்தைப் பற்றி நாம் என்னவெல்லாம் கற்றுக்கொண்டோம்?

18 மோசமான கடைசிக் காலத்தில் நாம் வாழ்கிறோம். அதனால், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நாம் ஒவ்வொருவரும் எப்போதையும்விட இப்போது அதிகமாக ஜெபம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் மனம்விட்டு ஜெபம் செய்ய நேரம் ஒதுக்குங்கள். நம் ‘இதயத்தில் இருப்பதையெல்லாம் அவர்முன் ஊற்றிவிட’ வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (சங். 62:8) யெகோவா செய்யும் எல்லாவற்றுக்கும் அவரைப் புகழுங்கள், நன்றி சொல்லுங்கள். தைரியமாக ஊழியம் செய்ய அவரிடம் உதவி கேளுங்கள். பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும், கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவி கேட்டு அவரிடம் கெஞ்சுங்கள். யெகோவாவிடம் தவறாமல் ஜெபம் செய்வதைத் தடுப்பதற்கு எதையுமே... யாரையுமே... அனுமதிக்காதீர்கள்! சரி, நாம் செய்யும் ஜெபங்களுக்கு யெகோவா எப்படிப் பதில் கொடுக்கிறார்? இந்த முக்கியமான கேள்வியைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாட்டு 42 என் ஜெபம்

a நம் ஜெபங்கள், உயிர் நண்பருக்கு மனம்விட்டு எழுதும் கடிதங்கள்போல் இருக்க வேண்டுமென்று நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், ஜெபம் செய்ய நேரத்தை ஒதுக்குவது சிலசமயம் கஷ்டமாக இருக்கலாம். அதோடு, எதைப் பற்றி ஜெபம் செய்வதென்றே நமக்குத் தெரியாமல் இருக்கலாம். இந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.