Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 24

உங்கள் குறிக்கோள்களை உங்களால் நிச்சயம் அடைய முடியும்

உங்கள் குறிக்கோள்களை உங்களால் நிச்சயம் அடைய முடியும்

“நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருக்க வேண்டும். நாம் சோர்ந்துபோகாமல் இருந்தால் ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்.”—கலா. 6:9.

பாட்டு 84 தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை

இந்தக் கட்டுரையில்... a

1. என்ன செய்வது நம்மில் நிறைய பேருக்குத் திண்டாட்டமாக இருக்கிறது?

 நீங்கள் எப்போதாவது ஒரு குறிக்கோளை வைத்துவிட்டு அதை அடைய முடியாமல் திண்டாடியிருக்கிறீர்களா? b நிறைய பேர் அப்படித் திண்டாடியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, இன்னும் நன்றாக ஜெபம் பண்ண வேண்டும்... அடிக்கடி ஜெபம் பண்ண வேண்டும்... என்று ஃபிலிப் ஆசைப்பட்டார். ஆனால், அதற்காக நேரம் ஒதுக்குவது அவருக்குப் பெரிய பிரச்சினையாக இருந்தது. எரிக்கா, வெளி ஊழியக் கூட்டத்துக்கு நேரத்தோடு போய்ச் சேர வேண்டுமென்று குறிக்கோள் வைத்தார். ஆனாலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு கூட்டத்துக்கும் லேட்டாகத்தான் போய்ச் சேர்ந்தார். டோமாஷ், முழு பைபிளையும் படித்து முடிக்க திரும்பத் திரும்ப முயற்சி செய்தார். “நான் மூன்று தடவை முயற்சி பண்ணினேன். ஆனாலும் ஒவ்வொரு தடவையும் லேவியராகமம் புத்தகத்தைக்கூட என்னால் தாண்ட முடியவில்லை. ஏனென்றால், என்னால் பைபிளை ரசித்துப் படிக்கவே முடியவில்லை” என்று அவர் சொல்கிறார்.

2. நீங்கள் ஏற்கெனவே வைத்த ஒரு குறிக்கோளை இன்னும் அடையவில்லை என்றால் ஏன் சோர்ந்துபோக வேண்டியது இல்லை?

2 நீங்கள் ஏற்கெனவே வைத்த ஒரு குறிக்கோளை இன்னும் அடையாமல் இருக்கிறீர்களா? அப்படியென்றால், தோற்றுப்போய்விட்டதாக நினைத்து சோர்ந்துபோகாதீர்கள். பொதுவாக, ஒரு சின்ன குறிக்கோளை அடைவதற்கே நிறைய நேரமும் கடின உழைப்பும் தேவை. உங்கள் குறிக்கோளை நீங்கள் அடைய ஆசைப்படுவதே ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. அதாவது, யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற பந்தத்தை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்கள்... உங்களால் முடிந்த சிறந்ததை அவருக்குக் கொடுக்க ஆசைப்படுகிறீர்கள்... என்பதைக் காட்டுகிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா உயர்வாகப் பார்க்கிறார். உங்களால் கொடுக்க முடியாததை அவர் கண்டிப்பாக எதிர்பார்க்க மாட்டார். (சங். 103:14; மீ. 6:8) அதனால், உங்கள் சூழ்நிலையில் உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை உங்கள் குறிக்கோளாக வையுங்கள். அந்தக் குறிக்கோளை அடைய நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

தீவிரமான ஆசை தேவை

ஆசையை அதிகமாக்கும்படி யெகோவாவிடம் கேளுங்கள் (பாராக்கள் 3-4)

3. குறிக்கோளை அடைய வேண்டுமென்ற தீவிரமான ஆசை நமக்கு இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

3 குறிக்கோளை அடைய வேண்டுமென்ற தீவிரமான ஆசை நமக்கு இருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். அப்படிப்பட்ட ஆசை இருக்கும் ஒருவர்தான், தலைகீழாக நின்றாவது அந்தக் குறிக்கோளை அடைய முயற்சி செய்வார். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். காற்று தொடர்ந்து வீசினால்தான் ஒரு பாய்மரப் படகு அது சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரும். காற்று பலமாக வீசும்போது அது இன்னும் சீக்கிரமாகப் போய்ச் சேரும். அதேபோல், குறிக்கோளை அடைய வேண்டுமென்ற தீவிரமான ஆசை இருந்தால்தான் நம்மால் அதை அடைய முடியும். எந்தளவுக்கு அந்த ஆசை இருக்கிறதோ அந்தளவுக்குச் சீக்கிரமாக அதை அடைய முடியும். எல் சால்வடாரில் இருக்கும் டேவிட் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “நமக்குள் ஆசை பற்றியெரியும்போதுதான் நாம் தீயாய் உழைப்போம். நம் குறிக்கோளை அடைவதற்கு எதுவுமே இடைஞ்சலாக வராதபடி பார்த்துக்கொள்வோம்.” அப்படியென்றால், உங்களுக்குள்ளும் அந்தத் தீவிரனமான ஆசை வருவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

4. நாம் எதற்காக ஜெபம் செய்யலாம்? (பிலிப்பியர் 2:13) (படத்தையும் பாருங்கள்.)

4 ஆசை அதிகமாவதற்காக ஜெபம் பண்ணுங்கள். யெகோவா தன் சக்தியை உங்களுக்குக் கொடுத்து, குறிக்கோளை அடைய வேண்டுமென்ற ஆசையை இன்னும் அதிகமாக்குவார். (பிலிப்பியர் 2:13-ஐ வாசியுங்கள்.) சிலசமயம், ஒரு குறிக்கோளை வைக்க வேண்டுமென்று தெரிந்திருப்பதால் எப்படியாவது அதை வைத்துவிடுவோம். அது நல்ல விஷயம்தான். ஆனால், அந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமென்ற ஆசை நமக்கு ஒருவேளை இருக்காது. உகாண்டாவில் இருக்கும் நாரினா என்ற சகோதரியின் விஷயத்தில் இதுதான் நடந்தது. எப்படியாவது ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க வேண்டுமென்று அவர் குறிக்கோள் வைத்தார். ஆனாலும், அதை அடைய வேண்டுமென்ற ஆசை அந்தளவுக்கு அவருக்கு இல்லை. ஏனென்றால், சொல்லிக்கொடுக்கும் திறமை தனக்கு இல்லை என்று அவர் நினைத்தார். அதன் பிறகு என்ன செய்தார்? அவரே சொல்கிறார்: “பைபிள் படிப்பை ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆசையை இன்னும் அதிகமாக்கச் சொல்லி நான் தினமும் யெகோவாவிடம் கேட்டேன். அதேசமயத்தில், சொல்லிக்கொடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள என் பங்கில் முயற்சி பண்ணினேன். சில மாதங்களிலேயே, பைபிள் படிப்பை ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆசை எனக்குள் ரொம்பத் தீவிரமாகிவிட்டது. அதே வருஷத்தில் இரண்டு பைபிள் படிப்புகளை ஆரம்பித்தேன்.”

5. நாம் எதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் நம் குறிக்கோளை அடைய வேண்டுமென்ற ஆசை அதிகமாகும்?

5 யெகோவா உங்களுக்காக செய்திருப்பதையெல்லாம் யோசித்துப் பாருங்கள். (சங். 143:5) அப்போஸ்தலன் பவுல், தனக்கு யெகோவா காட்டிய அளவற்ற கருணையைப் பற்றி யோசித்துப் பார்த்தார். அதனால், யெகோவாவுக்காகக் கடினமாக உழைக்க வேண்டுமென்ற ஆசை அவருக்குள் தீவிரமானது. (1 கொ. 15:9, 10; 1 தீ. 1:12-14) அதேபோல், யெகோவா உங்களுக்காக செய்திருப்பதையெல்லாம் எந்தளவு யோசிக்கிறீர்களோ அந்தளவு உங்களுடைய குறிக்கோளை அடைய வேண்டுமென்ற ஆசை அதிகமாகும். (சங். 116:12) ஹோண்டுராஸில் இருக்கும் ஒரு சகோதரி, ஒழுங்கான பயனியராக ஆக வேண்டுமென்ற குறிக்கோளை வைத்தார். அதை அடைய எது அவருக்கு உதவியது? அவரே சொல்கிறார்: “யெகோவா என்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று யோசித்துப் பார்த்தேன். அவருடைய மக்களைக் கண்டுபிடிக்க அவர் எனக்கு உதவி செய்தார். அவர் எப்போதும் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார், என்னைப் பாதுகாக்கிறார். இதைப் பற்றியெல்லாம் யோசித்துப் பார்த்ததால், அவர்மேல் எனக்கு இருந்த அன்பு இன்னும் அதிகமானது, பயனியர் ஊழியம் செய்ய வேண்டுமென்ற ஆசையும் அதிகமானது.”

6. நம் குறிக்கோளை அடைய வேண்டுமென்ற ஆசையை அதிகமாக்குவதற்கு வேறு எதுவும் உதவி செய்யும்?

6 குறிக்கோளை அடைவதால் வரும் நன்மைகளை யோசித்துப் பாருங்கள். வெளி ஊழியக் கூட்டத்துக்கு நேரத்தோடு போக வேண்டுமென்று எரிக்கா குறிக்கோள் வைத்ததைப் பற்றி முன்பே நாம் பார்த்தோம். அந்தக் குறிக்கோளை அடைய எது அவருக்கு உதவி செய்தது? “வெளி ஊழியக் கூட்டத்துக்கு லேட்டாகப் போவதால் எவ்வளவு விஷயங்களை நான் மிஸ் பண்ணுகிறேன் என்று புரிந்துகொண்டேன். நான் சீக்கிரமாகப் போகும்போது சகோதர சகோதரிகளைப் பார்த்துப் பேச முடிகிறது, அவர்களோடு நேரம் செலவிட முடிகிறது. அதுமட்டுமல்ல, ஊழியத்தை இன்னும் நன்றாகவும் சந்தோஷமாகவும் செய்ய உதவுகிற நல்ல நல்ல ஆலோசனைகளைக்கூடத் தெரிந்துகொள்ள முடிகிறது” என்று அவர் சொல்கிறார். நேரத்தோடு போவதால் வரும் நன்மைகளைப் பற்றி எரிக்கா யோசித்துப் பார்த்ததால், அவருடைய குறிக்கோளை அடைய அவரால் முடிந்தது. உங்கள் குறிக்கோளை அடைவதற்காக நீங்கள் என்னென்ன நன்மைகளைப் பற்றி யோசித்துப் பார்க்கலாம்? இன்னும் நன்றாக பைபிளை வாசிக்க வேண்டும் அல்லது இன்னும் நன்றாக ஜெபம் பண்ண வேண்டும் என்று நீங்கள் குறிக்கோள் வைத்திருந்தால், யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் நட்பை அது எப்படிப் பலப்படுத்தும் என்று யோசித்துப் பாருங்கள். (சங். 145:18, 19) ஒரு கிறிஸ்தவக் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் குறிக்கோள் வைத்திருந்தால், மற்றவர்களோடு இன்னும் நல்ல நண்பராக இருக்க அது எப்படி உதவி செய்யும் என்று யோசித்துப் பாருங்கள். (கொலோ. 3:14) என்னென்ன காரணங்களுக்காக உங்கள் குறிக்கோளை அடைய ஆசைப்படுகிறீர்கள் என்று யோசித்து ஒரு லிஸ்ட் போடுங்கள். அதன் பிறகு, அந்த லிஸ்ட்டை அடிக்கடி எடுத்துப் பாருங்கள். முன்பு நாம் பார்த்த டோமாஷ் இப்படிச் சொல்கிறார்: “ஒரு குறிக்கோளை அடைய நிறைய காரணங்கள் இருந்தால், முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து உழைப்பேன்.”

7. குறிக்கோளை அடைய ஹூலியோவுக்கும் அவருடைய மனைவிக்கும் எது உதவியாக இருந்தது?

7 குறிக்கோளை அடைய உதவும் நண்பர்களோடு நேரம் செலவிடுங்கள். (நீதி. 13:20) இன்னும் நிறைய ஊழியம் செய்ய வேண்டுமென்று சகோதரர் ஹூலியோவும் அவருடைய மனைவியும் குறிக்கோள் வைத்தார்கள். அந்தக் குறிக்கோளை அடைய அவர்களுக்கு எது உதவி செய்தது? அவரே சொல்கிறார்: “எங்கள் குறிக்கோளை அடைய யாரெல்லாம் உதவியாக இருப்பார்களோ அவர்களை எங்கள் நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தோம். எங்கள் குறிக்கோளைப் பற்றி அவர்களோடு கலந்துபேசினோம். அவர்களில் நிறைய பேர் ஏற்கெனவே அதே மாதிரியான குறிக்கோள்களை வைத்து அதை அடைந்திருக்கிறார்கள். அதனால், எங்களுக்கு நல்ல நல்ல ஆலோசனைகளைக் கொடுக்க அவர்களால் முடிந்தது. அதுமட்டுமல்ல, எங்கள் நண்பர்கள் அடிக்கடி எங்களிடம் வந்து, ‘எப்படிப் போகிறது?’ என்று கேட்பார்கள். நாங்கள் சோர்ந்துபோயிருந்த சமயத்திலெல்லாம் அவர்கள் எங்களை உற்சாகப்படுத்தினார்கள்.”

தீவிரமான ஆசை இல்லாதபோது

உங்களுடைய குறிக்கோளை அடைவதற்காக உழையுங்கள் (பாரா 8)

8. ஆசை இருக்கும்போது மட்டும் குறிக்கோளை அடைய உழைக்க வேண்டுமென்று நாம் நினைத்தால் என்ன நடக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)

8 உண்மையில், குறிக்கோளை அடைய வேண்டுமென்ற ஆசை எல்லா நாளுமே நமக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது. அதற்காக நம் குறிக்கோளை நம்மால் அடையவே முடியாது என்று அர்த்தமா? இல்லை! பாய்மரப் படகின் உதாரணத்தை மறுபடியும் பார்க்கலாம். காற்று பலமாக இருக்கும்போது, சேர வேண்டிய இடத்துக்கு அது சீக்கிரமாகப் போய்ச் சேரும். ஆனால், எல்லா நாளும் ஒரே மாதிரி காற்று அடிக்கும் என்று சொல்ல முடியாது. சில நாட்களில், காற்றே அடிக்காமல்கூடப் போய்விடலாம். அதற்காக படகை ஓட்டுபவர், ‘இனி அவ்வளவுதான், ஒன்றும் செய்ய முடியாது’ என்று முடிவு பண்ணிவிடுவாரா? இல்லை! சில பாய்மரப் படகுகளில் மோட்டார் இருக்கும், இல்லையென்றால் துடுப்புகள் இருக்கும். படகை ஓட்டுபவர் இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி, சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேருவார். குறிக்கோளை அடைய வேண்டுமென்ற ஆசை அந்தக் காற்று மாதிரி! சில நாட்களில் அது பலமாக இருக்கும், மற்ற நாட்களில் அது இருக்கவே இருக்காது. அதனால், ஆசை இருக்கும்போது மட்டும் நம் குறிக்கோளை அடைய நாம் உழைத்தால், அந்தக் குறிக்கோளை அடையவே முடியாது. காற்றே அடிக்கவில்லை என்றாலும், படகை ஓட்டுபவர் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச்சேர எப்படி மற்ற வழிகளைப் பயன்படுத்துவாரோ அதேபோல் நமக்கு ஆசை இல்லையென்றாலும் நம் குறிக்கோளை அடைய தொடர்ந்து உழைக்க வேண்டும். அது சுலபம் இல்லைதான், ஆனால் அதற்குக் கைமேல் பலன் கிடைக்கும். அதை எப்படிச் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். ஆனால் அதற்குமுன், நம் மனதில் வரும் ஒரு கேள்வியைப் பற்றிப் பார்க்கலாம்.

9. ஆசை இல்லாதபோது ஒரு குறிக்கோளை அடைய உழைப்பது தவறா? விளக்குங்கள்.

9 நாம் சந்தோஷமாகவும் ஆசை ஆசையாகவும் சேவை செய்ய வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (சங். 100:2; 2 கொ. 9:7) அப்படியென்றால், நமக்கு ஆசை இல்லாதபோது ஒரு குறிக்கோளை அடைய உழைப்பது தவறா? பவுலின் உதாரணத்தைக் கவனியுங்கள். “என்னுடைய உடலை அடக்கியொடுக்கி அடிமைபோல் நடத்தி வருகிறேன்” என்று அவர் சொன்னார். (1 கொ. 9:25-27) சரியானதைச் செய்ய வேண்டுமென்ற உந்துவிப்பு இல்லாத சமயத்தில்கூட தன்னையே கட்டாயப்படுத்தி அதை அவர் செய்தார். அப்படிப்பட்ட சேவையை யெகோவா ஏற்றுக்கொண்டாரா? கண்டிப்பாக! சொல்லப்போனால், பவுல் எடுத்த முயற்சிகளை அவர் ஆசீர்வதித்தார்.—2 தீ. 4:7, 8.

10. ஆசை இல்லாத சமயத்தில்கூட ஒரு குறிக்கோளை அடைய உழைப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

10 அதேபோல், குறிக்கோளை அடைய வேண்டுமென்ற ஆசை இல்லாதபோதுகூட அதற்காக நாம் உழைப்பதைப் பார்க்கும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார். ஏனென்றால், நமக்கு அந்த விஷயத்தைச் செய்ய பிடிக்கவில்லை என்றாலும், யெகோவாவைப் பிடித்திருப்பதால் அதைச் செய்ய முயற்சி பண்ணுகிறோம் என்று அவருக்குத் தெரியும். அதனால், பவுலை ஆசீர்வதித்தது போலவே நம்மையும் அவர் ஆசீர்வதிப்பார். (சங். 126:5) அவருடைய ஆசீர்வாதத்தை ருசிக்க ருசிக்க, ஆசை என்ற தீ நமக்குள் பற்றியெரிய ஆரம்பிக்கும். போலந்தில் இருக்கும் லூட்சைனா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “சிலசமயம், வெளி ஊழியத்துக்குப் போகவே எனக்குப் பிடிக்காது. அதுவும் களைப்பாக இருக்கும் சமயத்தில் கேட்கவே வேண்டாம். ஆனால், கிளம்பிப் போய்விட்டால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.” சரி, தீவிரமான ஆசை இல்லாத சமயத்தில் நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

11. சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள யெகோவா எப்படி நமக்கு உதவி செய்வார்?

11 சுயக்கட்டுப்பாட்டுக்காக ஜெபம் செய்யுங்கள். சுயக்கட்டுப்பாடு இருந்தால் நம் உணர்ச்சிகளையும் செயல்களையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும். பொதுவாக, கெட்ட விஷயங்களைச் செய்யாமல் இருப்பதற்குத்தான் சுயக்கட்டுப்பாடு தேவை என்று நாம் நினைப்போம். ஆனால், நல்ல விஷயங்களைச் செய்வதற்குக்கூட நமக்கு சுயக்கட்டுப்பாடு தேவை. அதுவும், ஒரு விஷயத்தைச் செய்வது கஷ்டமாக இருந்தால் அல்லது அதைச் செய்ய வேண்டுமென்ற ஆசை நமக்கு இல்லையென்றால் கண்டிப்பாக சுயக்கட்டுப்பாடு தேவை. சுயக்கட்டுப்பாடு என்பது கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில் ஒன்று. (கலா. 5:22, 23) அதனால், கடவுளுடைய சக்திக்காக ஜெபம் பண்ணுங்கள், அப்போதுதான் அந்த முக்கியமான குணத்தை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். (லூக். 11:13) முன்பு நாம் பார்த்த டேவிட், தனிப்பட்ட படிப்பைத் தவறாமல் படிக்க வேண்டுமென்று குறிக்கோள் வைத்தார். அதைச் செய்ய ஜெபம் எப்படி அவருக்கு உதவி செய்தது என்று அவர் சொல்கிறார்: “சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள உதவி செய்யும்படி நான் யெகோவாவிடம் கேட்டேன். அவரும் எனக்கு உதவி செய்தார். அதனால், என்னுடைய தனிப்பட்ட படிப்பை என்னால் இன்னும் நன்றாகச் செய்ய முடிந்தது, அதைத் தவறாமலும் செய்ய முடிந்தது.”

12. குறிக்கோளை அடையும் விஷயத்தில் பிரசங்கி 11:4-ல் இருக்கும் நியமம் நமக்கு எப்படி உதவும்?

12 எல்லாமே கைகூடிவருவதற்காகக் காத்திருக்காதீர்கள். இந்த உலகத்தில், ‘எல்லாமே கைகூடிவரும் காலம்’ என்ற ஒன்று அநேகமாக வராது. அதனால், நாம் அதற்காக காத்திருந்தால் நம் குறிக்கோளை அடையவே முடியாது. (பிரசங்கி 11:4-ஐ வாசியுங்கள்.) டேனியல் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “நூற்றுக்கு நூறு நாம் எதிர்பார்ப்பது போலவே சூழ்நிலை அமையும் என்று சொல்ல முடியாது. ஆனால், நல்ல சூழ்நிலைகளை நம்மால் அமைத்துக்கொள்ள முடியும். அதற்கு நாம்தான் முதல்படி எடுத்து வைக்க வேண்டும்.” நாம் செய்ய நினைப்பதை ஏன் தள்ளிப்போடக் கூடாது என்பதற்கு இன்னொரு காரணத்தை உகாண்டாவில் இருக்கும் பவுல் என்ற சகோதரர் சொல்கிறார்: “கஷ்டமான சூழ்நிலையில்கூட ஒன்றைச் செய்ய ஆரம்பித்துவிட்டோம் என்றால் நம்மை ஆசீர்வதிக்க யெகோவாவுக்கு நாம் ஒரு வாய்ப்பு கொடுப்பதுபோல் இருக்கும்.”—மல். 3:10.

13. குறிக்கோளை அடைகிற விஷயத்தில் நாம் சின்னதாக ஆரம்பிப்பது ஏன் நல்லது?

13 சின்னதாக ஆரம்பியுங்கள். ரொம்ப கஷ்டமான ஒரு விஷயத்தைச் செய்வதை நம் குறிக்கோளாக வைத்திருந்தால், அதைச் செய்ய வேண்டுமென்ற ஆசை நமக்கு வராமல் போய்விடலாம். உங்களுக்கும் அப்படித்தானா? அப்படியென்றால், எடுத்தவுடனேயே அகலக்கால் வைக்க நினைப்பதற்குப் பதிலாக, சின்னச் சின்னப் படிகளை எடுத்து வைக்க ஏன் முயற்சி பண்ணக் கூடாது? உதாரணத்துக்கு, ஒரு குணத்தை வளர்ப்பதை உங்கள் குறிக்கோளாக வைத்திருந்தால், சின்னச் சின்ன விதங்களில் அந்தக் குணத்தைக் காட்டுவதற்கு நீங்கள் ஏன் முதலில் முயற்சி பண்ணக் கூடாது? ஒருவேளை, பைபிளை முழுவதுமாகப் படித்து முடிக்க வேண்டுமென்று குறிக்கோள் வைத்திருந்தால், தினமும் மணிக்கணக்காகப் படிக்க நினைப்பதற்குப் பதிலாக சில நிமிஷங்கள் மட்டும் படிக்க ஆரம்பிக்கலாம், இல்லையா? முன்பு நாம் பார்த்த டோமாஷ், ஒரே வருஷத்தில் பைபிளை படித்து முடிக்க வேண்டுமென்ற குறிக்கோளை வைத்திருந்தார். ஆனால், அதைச் செய்வது அவருக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “முதலில் நிறைய நிறைய படிக்க வேண்டும் என்று அட்டவணை போட்டேன். ஆனால், அவ்வளவு வேகமாக என்னால் படிக்க முடியவில்லை. அதனால், மறுபடியும் வேறொரு அட்டவணையைப் போட்டேன். இந்தத் தடவை, தினமும் சில பாராக்களை மட்டும் படித்து அதைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்க்க முடிவு செய்தேன். அதற்குப் பிறகு, பைபிளைப் படிப்பது எனக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.” இப்படி, டோமாஷுக்கு பைபிள்மேல் ஆர்வம் அதிகமாக அதிகமாக, அதைப் படிக்கிற நேரத்தையும் அவர் அதிகமாக்க ஆரம்பித்தார். கடைசியில், முழு பைபிளையும் படித்து முடித்துவிட்டார். c

தடங்கல்கள் வரும்போது சோர்ந்துபோகாதீர்கள்!

14. நமக்கு என்னென்ன தடங்கல்கள் வரலாம்?

14 சிலசமயம், நமக்கு என்னதான் ஆசை இருந்தாலும்... எவ்வளவுதான் சுயக்கட்டுப்பாடு இருந்தாலும்... நம் குறிக்கோளை அடைய முடியாத மாதிரி ஏதாவது தடங்கல் வந்துவிடலாம். உதாரணத்துக்கு, “எதிர்பாராத சம்பவங்கள்” நடந்துவிடலாம்; அதனால், நம் குறிக்கோளை அடைவதற்காக உழைக்க நேரம் இல்லாமல் போய்விடலாம். (பிர. 9:11) அல்லது, ஒரு பிரச்சினையால் நாம் மனம் ஒடிந்துபோய்விடலாம், எதையுமே செய்ய நமக்குப் பலம் இல்லாமல் போய்விடலாம். (நீதி. 24:10) ஒருவேளை, பாவ இயல்பினால் அவ்வப்போது நாம் சறுக்கிவிடலாம்; அதனால், நம் குறிக்கோளை எட்டிப்பிடிப்பது கஷ்டமாகிவிடலாம். (ரோ. 7:23) சிலசமயம், வெறுமனே களைப்பாக இருப்பதுகூட நமக்கு ஒரு தடங்கலாக இருக்கலாம். (மத். 26:43) இந்த எல்லா தடங்கல்களையும் தாண்டி நம் குறிக்கோளை அடைய எது உதவி செய்யும்?

15. தடங்கல் வந்துவிட்டது என்பதற்காக நாம் தோற்றுப்போய்விட்டோம் என்று அர்த்தமா? விளக்குங்கள். (சங்கீதம் 145:14)

15 தடங்கல் தோல்விக்கு அறிகுறி அல்ல என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நமக்குப் பிரச்சினைகளும் கஷ்டங்களும் திரும்பத் திரும்ப வரலாம் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் நம்மால் தாண்டிவர முடியும் என்றும் அது சொல்கிறது, அதுவும் யெகோவாவின் உதவியோடு! (சங்கீதம் 145:14-ஐ வாசியுங்கள்.) முன்பு நாம் பார்த்த ஃபிலிப் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “நான் எவ்வளவு தடவை விழுகிறேன் என்பது முக்கியம் அல்ல. எவ்வளவு தடவை மறுபடியும் எழுந்து ஓடுகிறேன் என்பதுதான் முக்கியம். அதுதான் என் வெற்றியே.” முன்பு நாம் பார்த்த டேவிட் இப்படிச் சொல்கிறார்: “எனக்கு வரும் தடைகளையும் தடங்கல்களையும் ஒரு பெரிய பிரச்சினையாக நான் பார்ப்பதில்லை. யெகோவாமேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்பதைக் காட்டுவதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறேன்.” அப்படியென்றால், உங்களுக்கு வரும் தடங்கல்கள் எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் முன்னேறிப் போய்க்கொண்டே இருந்தால், யெகோவாவின் மனதைச் சந்தோஷப்படுத்த ஆசைப்படுகிறீர்கள் என்பதை அவருக்குக் காட்டுவீர்கள். உங்களுடைய குறிக்கோளை அடைவதற்காக நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்வதைப் பார்க்கும்போது யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார், இல்லையா?

16. நமக்கு வருகிற தடங்கல்களிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?

16 தடங்கல்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். தடங்கல் ஏன் வந்தது என்று முதலில் யோசித்துப் பாருங்கள். அதற்குப் பிறகு, ‘மறுபடியும் தடங்கல் வராமல் இருப்பதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். (நீதி. 27:12) சிலசமயம், நமக்கு ஒத்துவராத ஒரு குறிக்கோளை நாம் வைத்ததால்கூட நமக்குத் தடங்கல் வந்திருக்கலாம். உங்கள் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறதா? அப்படியென்றால், நீங்கள் வைத்த குறிக்கோள் உங்களுக்கு ஒத்துவருகிறதா என்று மறுபடியும் யோசித்துப் பாருங்கள். d உங்களுக்கு ஒத்துவராத ஒரு குறிக்கோளை நீங்கள் அடையவில்லை என்பதற்காக நீங்கள் தோற்றுப்போய்விட்டதாக யெகோவா ஒருநாளும் நினைக்க மாட்டார்.—2 கொ. 8:12.

17. நாம் ஏற்கெனவே செய்து முடித்த விஷயங்களை ஏன் யோசித்து பார்க்க வேண்டும்?

17 ஏற்கெனவே செய்திருப்பதை யோசித்துப் பாருங்கள். “உங்களுடைய உழைப்பை . . . மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் கிடையாது” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 6:10) அதனால், உங்களுடைய உழைப்பை நீங்களும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் ஏற்கெனவே என்னவெல்லாம் செய்து முடித்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, நீங்கள் ஏற்கெனவே யெகோவாவோடு ஒரு நட்பை வளர்த்திருக்கலாம், மற்றவர்களிடம் அவரைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கலாம்,  ஞானஸ்நானமும் எடுத்திருக்கலாம். இப்படி ஏற்கெனவே நீங்கள் நல்ல நல்ல குறிக்கோளை வைத்து அதை அடைந்திருக்கலாம். அதையெல்லாம் உங்களால் அடைய முடிந்திருக்கிறதென்றால், இப்போது வைத்திருக்கிற குறிக்கோளையும் கண்டிப்பாக அடைய முடியும்!—பிலி. 3:16.

பயணத்தைச் சந்தோஷமாக அனுபவியுங்கள் (பாரா 18)

18. குறிக்கோளை அடைவதற்காக உழைக்கும்போது என்ன செய்ய நாம் மறந்துவிடக் கூடாது? (படத்தையும் பாருங்கள்.)

18 யெகோவாவின் உதவியோடு உங்கள் குறிக்கோளைக் கண்டிப்பாக உங்களால் அடைய முடியும்! படகை ஓட்டுபவர், சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரும்போது ரொம்ப சந்தோஷப்படுவார். அதேசமயத்தில், போகிற வழியெல்லாம் அந்தப் பயணத்தை அவர் சந்தோஷமாக அனுபவிப்பார். அதேபோல், உங்களுடைய குறிக்கோளை அடைவதற்காக நீங்கள் தொடர்ந்து உழைக்கும்போது, யெகோவா எப்படியெல்லாம் உங்களுக்கு உதவி செய்கிறார்... எப்படியெல்லாம் உங்களை ஆசீர்வதிக்கிறார்... என்பதைப் பார்த்து சந்தோஷப்பட மறந்துவிடாதீர்கள்! (2 கொ. 4:7) நீங்கள் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து உழைத்தால் இன்னும் பெரிய ஆசீர்வாதங்கள் உங்களைத் தேடிவரும்.—கலா. 6:9.

பாட்டு 126 விழிப்பாய், தைரியமாய் நில்லுங்கள்!

a யெகோவாவுடைய சேவையில் குறிக்கோள்களை வைக்கச் சொல்லி நம் அமைப்பு அடிக்கடி நமக்குச் சொல்கிறது. ஒருவேளை, நாம் ஏற்கெனவே ஒரு நல்ல குறிக்கோளை வைத்திருக்கலாம். ஆனால், அதை அடைய முடியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கலாம். நம் குறிக்கோளை அடைவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

b வார்த்தைகளின் விளக்கம்: யெகோவாவுடைய சேவையில் குறிக்கோளை வைப்பது, அவருக்கு இன்னும் முழுமையாகச் சேவை செய்யவும் அவருடைய மனதை சந்தோஷப்படுத்தவும் ஏதோவொன்றைச் செய்ய உழைப்பதைக் குறிக்கிறது. நாம் புதிதாக ஒன்றைச் செய்ய அல்லது ஏற்கெனவே செய்துகொண்டிருப்பதை இன்னும் நன்றாகச் செய்ய குறிக்கோள் வைக்கலாம். உதாரணத்துக்கு, ஒரு கிறிஸ்தவக் குணத்தை வளர்த்துக்கொள்ள நாம் குறிக்கோள் வைக்கலாம். அல்லது, பைபிள் வாசிப்பு, தனிப்பட்ட படிப்பு, வெளி ஊழியம் போன்றவற்றை இன்னும் நன்றாகச் செய்ய குறிக்கோள் வைக்கலாம்.

c தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் புத்தகம், பக். 10-11, பாரா 4-ஐப் பாருங்கள்.

d இதைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, ஜூலை 15, 2008 காவற்கோபுரத்தில் வந்த “நியாயமான எதிர்பார்ப்புகளால் மகிழ்ச்சி காண...” என்ற கட்டுரையைப் பாருங்கள்.