Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 22

‘பரிசுத்தமான வழியில்’ தொடர்ந்து பயணம் செய்யுங்கள்

‘பரிசுத்தமான வழியில்’ தொடர்ந்து பயணம் செய்யுங்கள்

“ஒரு நெடுஞ்சாலை இருக்கும். அது பரிசுத்தமான வழி என்று அழைக்கப்படும்.”—ஏசா. 35:8.

பாட்டு 31 யெகோவாவின் பாதையில் நடப்போம்!

இந்தக் கட்டுரையில்... a

1-2. பாபிலோனில் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்கள் என்ன முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது? (எஸ்றா 1:2-4)

 ‘ஓர் சந்தோஷமான அறிவிப்பு! நீங்கள் எல்லாரும் உங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிப் போகலாம்!’ ராஜா செய்த இந்த அறிவிப்பைக் கேட்டபோது, பாபிலோனில் கிட்டத்தட்ட 70 வருஷங்கள் கைதிகளாக இருந்த யூதர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். (எஸ்றா 1:2-4-ஐ வாசியுங்கள்.) நிச்சயமாகவே, யெகோவாதான் இதற்குப் பின்னால் இருந்திருப்பார்! ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், பாபிலோனியர்கள் அவ்வளவு லேசில் தங்கள் கைதிகளை விடுதலை செய்ததே இல்லை. (ஏசா. 14:4, 17) அப்படிப்பட்ட பாபிலோனையே ஒரு ராஜா வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்திருந்தார். அவர்தான், தாய்நாட்டுக்குத் திரும்பலாம் என்று யூதர்களுக்கு அறிவிப்பு செய்திருந்தார். அதனால் ஒவ்வொரு யூதரும், முக்கியமாக ஒவ்வொரு குடும்பத் தலைவரும், பாபிலோனைவிட்டுப் போவதா அல்லது அங்கேயே இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டியிருந்தது. இந்த முடிவை எடுப்பது அவ்வளவு சாதாரண விஷயமாக இருந்திருக்காது. ஏன்?

2 அவர்களில் நிறைய பேர் வயதானவர்களாக இருந்திருப்பார்கள். அதனால், அவ்வளவு தூரம் பயணம் செய்வது கஷ்டம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இன்னொரு காரணம், அங்கிருந்த யூதர்களில் பெரும்பாலானோர் பாபிலோனில்தான் பிறந்து வளர்ந்திருந்தார்கள். அதனால், இஸ்ரவேலைத் தங்களுடைய சொந்த ஊராகப் பார்க்காமல் தங்கள் முன்னோர்களின் ஊராகத்தான் பார்த்தார்கள். அதுமட்டுமல்ல, சில யூதர்கள் பாபிலோனில் பெரிய பணக்காரர்களாக ஆகியிருக்கலாம். அதனால், வசதியான வீடுகளையும் தொழில்களையும் விட்டுவிட்டு முன்பின் தெரியாத இடத்துக்குப் போய் வாழ்வது கஷ்டம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

3. இஸ்ரவேலுக்குத் திரும்பிப்போக முடிவெடுத்த உண்மையுள்ள யூதர்களுக்கு என்ன ஆசீர்வாதம் காத்திருந்தது?

3 உண்மையுள்ள யூதர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரிந்திருந்தது. இஸ்ரவேலுக்குத் திரும்பிப் போவதற்காக அவர்கள் செய்யும் தியாகங்களைவிட அவர்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்தான் அதிகம்! அதில் ஒரு ஆசீர்வாதம்: அவர்களால் மறுபடியும் யெகோவாவைச் சுதந்திரமாக வணங்க முடியும்! பாபிலோனில் பொய் தெய்வங்களுக்கு 50-க்கும் அதிகமான கோவில்கள் இருந்தன. ஆனால், யெகோவாவை வணங்குவதற்கு அங்கு ஆலயமே இல்லை. திருச்சட்டத்தில் சொன்னதுபோல் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்த இடமும் இல்லை, குருமார் ஏற்பாடும் இல்லை. அதுமட்டுமல்ல, அந்த ஊரில் யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் மதித்து நடந்தவர்களைவிட பொய் தெய்வங்களை வணங்கியவர்கள்தான் நிறைய பேர் இருந்தார்கள். அதனால், யெகோவாவுக்கு உண்மையாக இருந்த ஆயிரக்கணக்கான யூதர்கள், அவர்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பிப் போய் உண்மை வணக்கத்தைத் திரும்பவும் ஆரம்பிப்பதற்கு ஆசை ஆசையாகக் காத்திருந்தார்கள்.

4. இஸ்ரவேலுக்குத் திரும்பிப்போக முடிவெடுத்த யூதர்களுக்கு என்ன உதவி செய்வதாக யெகோவா வாக்குக் கொடுத்தார்?

4 பாபிலோனிலிருந்து இஸ்ரவேலுக்குப் போக கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகும். அந்தப் பயணம் ரொம்ப கஷ்டமாகவும் இருக்கும். ஆனால், இடையில் வரும் எல்லா தடைகளையும் நீக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார். ஏசாயா இப்படி எழுதினார்: “யெகோவாவுக்கு வழியைத் தயார்படுத்துங்கள்! நம் கடவுளுக்காக பாலைவனத்தில் ஒரு சமமான நெடுஞ்சாலையை அமையுங்கள். . . . மேடுபள்ளமான நிலத்தைச் சமமாக்குங்கள். கரடுமுரடான நிலத்தைச் சமவெளியாக்குங்கள்.” (ஏசா. 40:3, 4) கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: பாலைவனம் வழியாக ஒரு சமமான நெடுஞ்சாலை! பயணம் செய்கிறவர்களுக்கு அது எவ்வளவு வசதியாக இருக்கும்! மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள் என அவர்கள் ஏறி இறங்கவோ சுற்றிப்போகவோ வேண்டாம். போக வேண்டிய இடத்துக்கு நேராகவும் வேகமாகவும் போய்விடலாம்.

5. பாபிலோனுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையில் இருந்த அடையாள அர்த்தமுள்ள நெடுஞ்சாலையின் பெயர் என்ன?

5 இன்று இருக்கும் நிறைய நெடுஞ்சாலைகளுக்கு பெயரோ எண்ணோ இருக்கிறது. அதேபோல், அடையாள அர்த்தத்தில் ஏசாயா சொன்ன நெடுஞ்சாலைக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அவர் இப்படிச் சொன்னார்: “ஒரு நெடுஞ்சாலை இருக்கும். அது பரிசுத்தமான வழி என்று அழைக்கப்படும். பரிசுத்தமில்லாத யாருமே அதில் நடந்துபோக மாட்டார்கள்.” (ஏசா. 35:8) இஸ்ரவேலர்களின் காலத்தில் இந்த வாக்குறுதி எப்படி நிறைவேறியது? நம்முடைய காலத்தில் எப்படி நிறைவேறுகிறது?

“பரிசுத்தமான வழி”—அன்றும் இன்றும்

6. அந்த நெடுஞ்சாலை ஏன் “பரிசுத்தமான வழி” என்று சொல்லப்பட்டிருக்கிறது?

6 “பரிசுத்தமான வழி”—இந்த நெடுஞ்சாலையின் பெயரே எவ்வளவு அழகாக இருக்கிறது! அது ஏன் “பரிசுத்தமான வழி” என்று சொல்லப்பட்டிருக்கிறது? ஏனென்றால், ‘பரிசுத்தமில்லாத யாருக்குமே’ இஸ்ரவேல் தேசத்தில் இடம் கிடையாது. அதாவது, ஒழுக்கக்கேடாக நடந்துகொள்கிற... சிலை வழிபாடு செய்கிற... அல்லது மற்ற மோசமான பாவங்களைச் செய்கிற... யூதர்கள் யாருக்குமே அங்கு இடம் கிடையாது. பாபிலோனைவிட்டு இஸ்ரவேலுக்குத் திரும்பிவரும் யூதர்கள் யெகோவாவுக்கு ‘பரிசுத்தமான ஜனங்களாக’ இருப்பார்கள். (உபா. 7:6) அதற்காக, அவர்கள் யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கு இனி எந்த மாற்றங்களும் செய்ய வேண்டியதில்லை என்று அர்த்தம் கிடையாது.

7. சில யூதர்கள் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது? உதாரணம் சொல்லுங்கள்.

7 நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், யூதர்களில் பெரும்பாலானோர் பாபிலோனில்தான் பிறந்தார்கள். அநேகமாக, அவர்களில் நிறைய பேர் சில விதங்களில் பாபிலோனியர்களைப் போலவே யோசித்திருக்கலாம், நடந்திருக்கலாம். இஸ்ரவேலுக்கு யூதர்கள் வர ஆரம்பித்து பல வருஷங்கள் ஆன பிறகு, அவர்களில் சிலர் பொய் தெய்வங்களை வணங்கிய பெண்களைக் கல்யாணம் செய்திருந்த விஷயத்தை எஸ்றா கேள்விப்பட்டார். (யாத். 34:15, 16; எஸ்றா 9:1, 2) சில வருஷங்களுக்குப் பிறகு, இஸ்ரவேலில் பிறந்த பிள்ளைகளுக்கு யூதர்களுடைய மொழியே தெரியவில்லை என்பதை ஆளுநரான நெகேமியா கேள்விப்பட்டபோது அதிர்ச்சி அடைந்தார். (உபா. 6:6, 7; நெ. 13:23, 24) கடவுளுடைய வார்த்தை முக்கியமாக எபிரெய மொழியில்தான் எழுதப்பட்டிருந்தது. அந்த மொழியே தெரியவில்லை என்றால் அவர்களால் எப்படி யெகோவாமேல் அன்பு காட்ட கற்றுக்கொண்டு அவரை வணங்க முடியும்? (எஸ்றா 10:3, 44) அப்படியென்றால், யூதர்கள் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. இஸ்ரவேலில் உண்மை வணக்கம் படிப்படியாகப் பழைய நிலைமைக்கு வந்துகொண்டிருந்ததால் அங்கிருந்து அந்த மாற்றங்களைச் செய்வது அவர்களுக்குச் சுலபமாக இருந்திருக்கலாம்.—நெ. 8:8, 9.

1919-லிருந்து லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் மகா பாபிலோனைவிட்டு வெளியே வந்து, ‘பரிசுத்தமான வழியில்’ பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் (பாரா 8)

8. அன்று யூதர்களுக்கு நடந்த விஷயங்களுக்கும் இன்று நமக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)

8 ‘அதெல்லாம் சரிதான். ஆனால், அன்று யூதர்களுக்கு நடந்த விஷயங்களுக்கும் இன்று நமக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?’ என்று சிலர் யோசிக்கலாம். நிச்சயம் சம்பந்தம் இருக்கிறது. ஏனென்றால், ஒரு விதத்தில் நாமும் இன்று ‘பரிசுத்தமான வழியில்தான்’ பயணம் செய்துகொண்டிருக்கிறோம். நாம் பரலோக நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும் சரி, ‘வேறே ஆடுகளாக’ இருந்தாலும் சரி, தொடர்ந்து அந்த வழியில் பயணம் செய்ய வேண்டும். (யோவா. 10:16) ஏனென்றால், அந்த வழி இன்று நாம் ஆன்மீகப் பூஞ்சோலையில் இருப்பதற்கும் எதிர்காலத்தில் பூஞ்சோலை பூமியில் இருப்பதற்கும் வழிநடத்துகிறது. b கி.பி. 1919-லிருந்து லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும், பொய் மத உலகப் பேரரசாக இருக்கும் மகா பாபிலோனைவிட்டு வெளியே வந்து, இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அநேகமாக, நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கலாம். கிட்டத்தட்ட 100 வருஷங்களுக்கு முன்பு மக்கள் அதில் நடக்க ஆரம்பித்திருந்தாலும், அந்த நெடுஞ்சாலையைத் தயார்படுத்தும் வேலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது.

நெடுஞ்சாலையைத் தயார்படுத்தும் வேலை

9. ஏசாயா 57:14 சொல்வதுபோல், “பரிசுத்தமான வழி” எப்படித் தயார்படுத்தப்பட்டது?

9 பாபிலோனிலிருந்து யூதர்கள் திரும்பி வருவதற்குத் தடையாக இருந்த எல்லாவற்றையும் யெகோவா நீக்கிவிட்டார். (ஏசாயா 57:14-ஐ வாசியுங்கள்.) இன்று இருக்கும் ‘பரிசுத்தமான வழியை’ பற்றி என்ன சொல்லலாம்? மக்கள் மகா பாபிலோனைவிட்டு வெளியில் வருவதற்காக, யெகோவா தனக்குப் பயந்து நடந்தவர்களைப் பயன்படுத்தி இந்த வழியில் இருந்த தடைகளை நீக்கியிருக்கிறார். 1919-க்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவர் இதைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். (ஏசாயா 40:3-ஐ ஒப்பிடுங்கள்.) நல்ல ஜனங்கள் மகா பாபிலோனைவிட்டு வெளியே வந்து யெகோவாவின் மக்களோடு சேர்ந்து அவரை வணங்குவதற்காக அந்த நெடுஞ்சாலை தயார்படுத்தப்பட்டது. அதற்காக என்னவெல்லாம் வேலை செய்ய வேண்டியிருந்தது? அதில் சில வேலைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, மகா பாபிலோனைவிட்டு மக்கள் வெளியில் வருவதற்கான வழி தயார்படுத்தப்பட்டது (பாராக்கள் 10-11)

10-11. பைபிளில் இருக்கும் உண்மைகள் பரவுவதற்கு அச்சடிக்கும் வேலையும் மொழிபெயர்ப்பு வேலையும் எப்படி உதவி செய்திருக்கின்றன? (படத்தையும் பாருங்கள்.)

10 அச்சடிக்கும் வேலை. கிட்டத்தட்ட 1450 வரை, கைப்பட எழுதிதான் பைபிள் நகல் எடுக்கப்பட்டது. அப்படி நகல் எடுப்பதற்கு ரொம்ப நாள் எடுத்தது. அந்தச் சமயத்தில் பைபிளின் விலை ரொம்ப அதிகமாக இருந்ததால், அதை வாங்குவது மக்களுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால், அச்சடிக்கும் மெஷினைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு நிறைய பைபிள்களைத் தயாரிக்க முடிந்தது, மக்களின் கையில் சேர்க்கவும் முடிந்தது.

11 மொழிபெயர்க்கும் வேலை. பல நூற்றாண்டுகளாகவே பைபிள் லத்தீன் மொழியில்தான் கிடைத்தது. நன்றாகப் படித்தவர்களுக்கு மட்டும்தான் அந்த மொழி புரிந்தது. ஆனால், அச்சடிப்பது ரொம்ப சுலபமாகிவிட்ட பிறகு, கடவுளை நேசித்த சிலர் சாதாரண மக்கள் பேசும் மொழியில்கூட பைபிளை மொழிபெயர்க்க ஆரம்பித்தார்கள். அதனால், சர்ச்சுகள் சொல்லிக்கொடுக்கும் விஷயமெல்லாம் உண்மையிலேயே பைபிளில் இருக்கிறதா என்று மக்களால் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.

மகா பாபிலோனைவிட்டு மக்கள் வெளியில் வருவதற்கான வழி தயார்படுத்தப்பட்டது (பாராக்கள் 12-14) c

12-13. கிட்டத்தட்ட 1835-லிருந்து, பைபிளைக் கவனமாகப் படித்த சிலர் பொய் போதனைகளை எப்படி வெட்டவெளிச்சமாக்க ஆரம்பித்தார்கள்? உதாரணம் சொல்லுங்கள்.

12 பைபிள் படிப்புக்கான கருவிகள். சிலர் பைபிளை ரொம்ப கவனமாகப் படித்து அதில் சொல்லியிருக்கிற உண்மைகளை நன்றாகப் புரிந்துகொண்டார்கள். புரிந்துகொண்ட விஷயங்களை அவர்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்கும் சொன்னதால், சர்ச் பாதிரிகள் அவர்கள்மேல் பயங்கரமாகக் கோபப்பட்டார்கள். கிட்டத்தட்ட 1835-லிருந்து, பைபிளைக் கவனமாகப் படித்த நிறைய பேர், சர்ச் சொல்லித்தரும் பொய் போதனைகளை வெட்டவெளிச்சமாக்குவதற்கு துண்டுப்பிரதிகளை வெளியிட ஆரம்பித்தார்கள்.

13 கிட்டத்தட்ட 1835-ல், கடவுள் பக்தியுள்ள ஹென்றி க்ரூ என்பவர், இறந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு துண்டுப்பிரதியை வெளியிட்டார். அதில், சாவாமை என்பது சர்ச்சில் சொல்லிக் கொடுக்கப்படுவது போல ஒருவர் பிறக்கும்போதே அவருக்குக் கிடைப்பது அல்ல, அது கடவுள் கொடுக்கும் பரிசு என்று அவர் பைபிளிலிருந்தே தெளிவாக எடுத்துக் காட்டியிருந்தார். 1837-ல், ஜார்ஜ் ஸ்டார்ஸ் என்ற ஒரு பாதிரி ரயிலில் போய்க்கொண்டு இருந்தபோது இந்தத் துண்டுப்பிரதியைப் பார்த்தார். அதை வாசித்தபோது ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்துகொண்டார். அதை மற்றவர்களுக்குச் சொல்ல அவர் ஆசைப்பட்டார். 1842-ல், எல்லாரையும் யோசிக்க வைக்கிற ஒரு தலைப்பில் அடுத்தடுத்து சில பேச்சுகளை அவர் கொடுத்தார். “கெட்டவர்களுக்கு சாவாமையா?—ஓர்  ஆய்வு” என்பதுதான் அந்த தலைப்பு. அதற்குப் பிறகு அவர் வெளியிட்ட விஷயங்கள் ஒரு இளம் வாலிபருடைய மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அவர்தான் சார்ல்ஸ் டேஸ் ரஸல்.

14. ‘பரிசுத்தமான வழி’ முன்பே தயார்படுத்தப்பட்டதால் சகோதரர் ரஸலும் அவரோடு இருந்தவர்களும் எப்படி நன்மை அடைந்தார்கள்? (படத்தையும் பாருங்கள்.)

14 ‘பரிசுத்தமான வழி’ முன்பே தயார்படுத்தப்பட்டதால் சகோதரர் ரஸலும் அவரோடு இருந்தவர்களும் எப்படி நன்மை அடைந்தார்கள்? முன்பே தயாரிக்கப்பட்ட அகராதிகளும் கன்கார்டன்சும் நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளும் பைபிளை நன்றாகப் படிக்க அவர்களுக்கு உதவி செய்தன. ஹென்றி க்ரூ, ஜார்ஜ் ஸ்டார்ஸ் போன்றவர்கள் செய்த ஆராய்ச்சிகளும் அவர்களுக்கு உதவின. இதையெல்லாம் பயன்படுத்தி சகோதரர் ரஸலும் அவரோடு இருந்தவர்களும் பைபிள் தலைப்புகளில் நிறைய புத்தகங்களையும் துண்டுப்பிரதிகளையும் வெளியிட்டார்கள். இந்த விதத்தில், ‘பரிசுத்தமான வழியை’ தயார்படுத்தும் வேலையில் அவர்களுக்கும் ஒரு பங்கு இருந்தது.

15. 1919-ல் என்ன முக்கியமான விஷயங்கள் நடந்தன?

15 1919-ல் கடவுளுடைய மக்கள் மகா பாபிலோனின் பிடியிலிருந்து விடுதலையானார்கள். அதே வருஷத்தில்தான், “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” நியமிக்கப்பட்டார்கள். (மத். 24:45-47) அதுமுதல் அவர்கள், ‘பரிசுத்தமான வழியை’ கண்டுபிடிக்கவும் அதில் நடக்கவும் நல்ல ஜனங்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்கள். முன்பு இருந்த உண்மையுள்ள ஆட்கள் ‘பரிசுத்தமான வழியை’ தயார்படுத்தி வைத்திருந்ததால், புதிதாக வந்தவர்களால் யெகோவாவைப் பற்றியும் அவருடைய விருப்பத்தைப் பற்றியும் நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. (நீதி. 4:18) யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ ஆரம்பிக்கவும் முடிந்தது. தன்னுடைய மக்கள் எல்லா மாற்றத்தையும் ஒரேயடியாக செய்ய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கவில்லை. அதற்குப் பதிலாக, கொஞ்சம் கொஞ்சமாக அதைச் செய்ய உதவியிருக்கிறார். (“ மாற்றங்கள் செய்ய யெகோவா படிப்படியாக உதவுகிறார்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) நாம் யெகோவாவை முழுமையாகப் பிரியப்படுத்தும் காலம் வரும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!—கொலோ. 1:10.

“பரிசுத்தமான வழி” இன்றும் திறந்திருக்கிறது

16. 1919-லிருந்து ‘பரிசுத்தமான வழியில்’ என்ன பராமரிப்பு வேலை நடந்துகொண்டிருக்கிறது? (ஏசாயா 48:17; 60:17)

16 சாலை என்றாலே அதைக் கண்டிப்பாகப் பராமரிக்க வேண்டும். அதேபோல், 1919-லிருந்து ‘பரிசுத்தமான வழியிலும்’ பராமரிப்பு வேலை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. மகா பாபிலோனைவிட்டு இன்னும் நிறைய பேர் வெளியே வருவதற்குத் தேவையான உதவிகளெல்லாம் செய்யப்பட்டிருக்கிறது. உண்மையும் விவேகமும் உள்ள அடிமை தாங்கள் நியமிக்கப்பட்ட உடனேயே வேலையை ஆரம்பித்தார்கள். 1921-ல், புதிதாக பைபிளைப் படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக கடவுளின் சுரமண்டலம் என்ற ஆங்கில புத்தகத்தை வெளியிட்டார்கள். அது 36 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 60 லட்சம் பிரதிகள் விநியோகிக்கப்பட்டன. நிறைய பேர் பைபிள் உண்மைகளை அதிலிருந்து தெரிந்துகொண்டார்கள். சமீபத்தில், பைபிள் படிப்பை நடத்துவதற்காக இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற புது புத்தகம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இந்தக் கடைசி நாட்களில், யெகோவா தன் அமைப்பைப் பயன்படுத்தி நமக்கு ஏராளமான ஆன்மீக உணவை அள்ளித் தந்துகொண்டே இருக்கிறார். ‘பரிசுத்தமான வழியில்’ தொடர்ந்து நடக்க அது நமக்கு உதவி செய்கிறது.—ஏசாயா 48:17-ஐயும், 60:17-ஐயும் வாசியுங்கள்.

17-18. “பரிசுத்தமான வழி” நம்மை எங்கே கொண்டுபோகிறது?

17 பைபிள் படிப்பை ஒருவர் ஏற்றுக்கொள்ளும்போது ‘பரிசுத்தமான வழியில்’ நடக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. சிலர் கொஞ்ச தூரம் மட்டும் அந்த வழியில் போய்விட்டு, பிறகு தங்கள் பயணத்தை நிறுத்திக்கொள்கிறார்கள். ஆனால் மற்றவர்கள், கடைசிவரை அதில் பயணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அந்த வழி கடைசியில் நம்மை எங்கே கொண்டு போகிறது?

18 பரலோக நம்பிக்கை உள்ளவர்களை பரலோகத்தில் இருக்கும் ‘கடவுளுடைய பூஞ்சோலைக்கு’ அந்த வழி கொண்டுபோகிறது. (வெளி. 2:7) பூமியில் வாழும் நம்பிக்கை உள்ளவர்களை ஆயிர வருஷங்களின் முடிவில் பரிபூரணமான வாழ்க்கைக்குக் கொண்டுபோகிறது. இன்று நீங்கள் அந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டிருந்தால், விட்டுவந்த விஷயங்களைத் திரும்பிப் பார்க்காதீர்கள். பயணத்தை முடிக்கும்வரை அந்த நெடுஞ்சாலையைவிட்டு எங்கும் போகாதீர்கள்! உங்கள் பயணம் இனிதே அமைய எங்கள் வாழ்த்துக்கள்!

பாட்டு 24 வாருங்கள் யெகோவாவின் மலைக்கு!

a பாபிலோனிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேலர்கள் அடையாள அர்த்தமுள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்த நெடுஞ்சாலைக்கு “பரிசுத்தமான வழி” என்று யெகோவா பெயர் வைத்தார். அப்படியொரு நெடுஞ்சாலை இன்றும் இருக்கிறதா? இருக்கிறது! கி.பி. 1919-லிருந்து லட்சக்கணக்கானவர்கள் மகா பாபிலோனை விட்டுவிட்டு, “பரிசுத்தமான வழி” என்ற நெடுஞ்சாலையில் பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். கடைசிவரை, நாம் எல்லாரும் அந்த நெடுஞ்சாலையிலேயே பயணம் செய்வது ரொம்ப ரொம்ப முக்கியம்.

c பட விளக்கம்: சகோதரர் ரஸலும் அவரோடு இருந்தவர்களும் முன்பே தயாரிக்கப்பட்ட சில ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்தி பைபிளைப் படித்தார்கள்.