Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 21

யெகோவா நம் ஜெபங்களுக்கு எப்படிப் பதில் தருகிறார்?

யெகோவா நம் ஜெபங்களுக்கு எப்படிப் பதில் தருகிறார்?

‘அவரிடம் கேட்டுக்கொண்ட காரியங்கள் நமக்குக் கிடைக்கும் என்பதை அறிந்திருக்கிறோம்.’—1 யோ. 5:15.

பாட்டு 41 நான் வேண்டும்போது கேளும் யெகோவாவே!

இந்தக் கட்டுரையில்... a

1-2. சிலசமயம் நம் ஜெபங்களைப் பற்றி நமக்கு என்ன தோன்றலாம்?

 யெகோவா உங்கள் ஜெபங்களுக்குப் பதில் தராததுபோல் என்றைக்காவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? உங்களுக்கு மட்டுமல்ல, நிறைய சகோதர சகோதரிகளுக்கும் அப்படித் தோன்றியிருக்கிறது, முக்கியமாக அவர்கள் ஏதாவது ஒரு பிரச்சினையில் இருக்கும்போது! நாமும் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கித் தவிக்கும்போது, யெகோவா எப்படி நம் ஜெபங்களுக்குப் பதில் தருகிறார் என்பதைப் புரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கலாம்.

2 யெகோவா தன் மக்களுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறார் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்? (1 யோ. 5:15) சிலசமயம், நம் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காததுபோல் ஏன் நமக்குத் தோன்றுகிறது? இன்று யெகோவா என்னென்ன வழிகளில் நம் ஜெபங்களுக்குப் பதில் தருகிறார்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

நாம் எதிர்பார்க்கும் விதத்தில் யெகோவா பதில் தராமல் இருக்கலாம்

3. நாம் ஜெபம் செய்ய வேண்டுமென்று யெகோவா ஏன் ஆசைப்படுகிறார்?

3 யெகோவா நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார்... நம்மைப் பொக்கிஷம்போல் பார்க்கிறார்... என்றெல்லாம் பைபிள் சொல்கிறது. (ஆகா. 2:7, அடிக்குறிப்பு; 1 யோ. 4:10) அதனால்தான், நாம் அவரிடம் உதவி கேட்டு ஜெபம் செய்ய வேண்டுமென்று சொல்கிறார். (1 பே. 5:6, 7) நாம் அவரிடம் நெருங்கியிருப்பதற்கும், நமக்கு வரும் பிரச்சினைகளை நல்லபடியாக சமாளிப்பதற்கும் உதவி செய்ய அவர் ஆசைப்படுகிறார்.

எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதன் மூலம் தாவீதின் ஜெபங்களுக்கு யெகோவா பதில் கொடுத்தார் (பாரா 4)

4. யெகோவா தன் மக்களுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்? (படத்தையும் பாருங்கள்.)

4 யெகோவா தன் மக்களுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுத்ததைப் பற்றி பைபிளில் நிறைய பதிவுகள் இருக்கின்றன. உங்களுக்கு ஏதாவது ஓர் உதாரணம் ஞாபகம் வருகிறதா? இப்போது, தாவீது ராஜாவின் உதாரணத்தைப் பார்க்கலாம். வாழ்நாளெல்லாம் பயங்கரமான எதிரிகளோடு அவர் போராட வேண்டியிருந்தது. அதனால், அடிக்கடி யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்தார். ஒருசமயம் அவர், “யெகோவாவே, என் ஜெபத்தைக் கேளுங்கள். உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள். உங்களுடைய உண்மைத்தன்மைக்கும் நீதிக்கும் ஏற்றபடி எனக்குப் பதில் கொடுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டார். (சங். 143:1) யெகோவா தாவீதின் ஜெபத்தைக் கேட்டு எதிரிகளிடமிருந்து அவரைக் காப்பாற்றினார். (1 சா. 19:10, 18-20; 2 சா. 5:17-25) அதனால் தாவீது, “யெகோவா தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்” என்று நம்பிக்கையோடு சொன்னார். நாமும் அவரைப் போலவே நம்பிக்கையோடு இருக்கலாம்.—சங். 145:18.

சகித்திருப்பதற்குப் பலம் தருவதன் மூலம் பவுலின் ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தார் (பாரா 5)

5. பைபிள் காலங்களில், தன் மக்கள் எதிர்பார்த்த விதத்தில்தான் யெகோவா அவர்களுக்குப் பதில் தந்தாரா? ஓர் உதாரணம் சொல்லுங்கள். (படத்தையும் பாருங்கள்.)

5 நாம் எதிர்பார்க்கும் விதத்தில் யெகோவா நம் ஜெபங்களுக்குப் பதில் தராமல் இருக்கலாம். அப்போஸ்தலன் பவுலின் விஷயத்தில் அதுதான் நடந்தது. அவருடைய ‘உடலில் குத்திக்கொண்டிருந்த ஒரு முள்ளை’ எடுத்துவிடும்படி அவர் யெகோவாவிடம் கேட்டார். குறிப்பாக இந்தப் பிரச்சினையைப் பற்றி அவர் மூன்று தடவை ஜெபம் செய்தார். யெகோவா அந்த ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தாரா? ஆமாம், ஆனால் பவுல் எதிர்பார்த்த விதத்தில் அல்ல! அந்தப் பிரச்சினையை எடுத்துப்போடுவதற்குப் பதிலாக, தொடர்ந்து தனக்கு உண்மையோடு சேவை செய்ய பவுலுக்கு அவர் சக்தி கொடுத்தார்.—2 கொ. 12:7-10.

6. சிலசமயம் நம் ஜெபங்களுக்கு யெகோவா பதில் தராததுபோல் ஏன் தெரியலாம்?

6 சிலசமயம், நம் ஜெபங்களுக்குக்கூட நாம் எதிர்பார்க்கும் பதில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், ஒன்று மட்டும் உறுதி: நமக்கு உண்மையிலேயே எது நல்லது என்று நம்மைவிட யெகோவாவுக்குத்தான் நன்றாகத் தெரியும். சொல்லப்போனால், ‘நாம் கேட்பதையும் நினைப்பதையும்விட மிக அதிகமாக, பல மடங்கு அதிகமாக எல்லாவற்றையும் செய்ய அவர் வல்லவராக’ இருக்கிறார். (எபே. 3:20) அதனால், நாம் எதிர்பார்க்காத ஒரு நேரத்தில் அல்லது விதத்தில் அவர் நம் ஜெபங்களுக்குப் பதில் தரலாம்.

7. ஜெபத்தில் நாம் கேட்கும் விஷயத்தைச் சிலசமயம் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம்? ஓர் உதாரணம் சொல்லுங்கள்.

7 யெகோவாவின் விருப்பம் என்னவென்று கொஞ்சம் தெளிவாகத் தெரியவரும்போது, அதற்கு ஏற்றபடி நம் ஜெபத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம். மார்ட்டின் பொயட்சிங்கர் என்ற சகோதரரின் உதாரணத்தைக் கவனியுங்கள். கல்யாணமான கொஞ்ச நாளிலேயே அவரை நாசி சித்திரவதை முகாமில் போட்டுவிட்டார்கள். ஆரம்பத்தில் அவர், ‘யெகோவாவே, நான் என் மனைவியைப் பார்த்துக்கொள்ள வேண்டும், மறுபடியும் ஊழியம் செய்ய வேண்டும், அதனால் என்னை இங்கிருந்து விடுதலை செய்யுங்கள்’ என்று ஜெபம் செய்துகொண்டிருந்தார். இப்படியே இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. ஆனால், யெகோவா அவரை விடுதலை செய்வார் என்பதற்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. அதனால் அவர், “யெகோவா அப்பா, நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்? அதைத் தயவுசெய்து எனக்குப் புரிய வையுங்கள்” என்று ஜெபம் செய்ய ஆரம்பித்தார். அதன் பிறகு, அந்த முகாமில் இருந்த மற்ற சகோதரர்களின் நிலைமையை யோசிக்க ஆரம்பித்தார். அவர்களில் நிறைய பேர் தங்களுடைய மனைவி பிள்ளைகளை நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். அதனால் சகோதரர் பொயட்சிங்கர், “யெகோவா அப்பா, எனக்கு ஒரு புது நியமிப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. என்னுடைய சகோதரர்களைப் பலப்படுத்துவதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும் உதவி செய்யுங்கள்” என்று ஜெபம் செய்தார். அடுத்த ஒன்பது வருஷங்களுக்கு அந்த நியமிப்பைத்தான் அவர் செய்தார்!

8. ஜெபம் செய்யும்போது என்ன முக்கியமான விஷயத்தை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?

8 யெகோவா தன் விருப்பத்தை அவர் நினைத்திருக்கும் நேரத்தில் நிறைவேற்றுவார் என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் இருக்கும் எல்லா பிரச்சினைகளையும் நிரந்தரமாக ஒழிக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம். உதாரணத்துக்கு, இயற்கைப் பேரழிவு, வியாதி, மரணம் போன்ற பிரச்சினைகளைத் துடைத்தழிக்க அவர் விரும்புகிறார். தன்னுடைய அரசாங்கத்தின் மூலம் இதை அவர் செய்து முடிப்பார். (தானி. 2:44; வெளி. 21:3, 4) ஆனால் அந்தச் சமயம் வரும்வரை, இந்த உலகத்தை ஆட்சி செய்ய சாத்தானை அவர் விட்டுவைத்திருக்கிறார். b (யோவா. 12:31; வெளி. 12:9) இப்போது இந்த உலகத்தில் இருக்கும் பிரச்சினைகளை யெகோவா சரிசெய்துகொண்டு இருந்தால், சாத்தான்தான் நல்லபடியாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறான் என்பதுபோல் ஆகிவிடும். அதனால், யெகோவா தன் வாக்குறுதிகளை நிறைவேற்றும்வரை நாம் காத்திருக்க வேண்டும். அதுவரை அவர் நம்மை அம்போவென்று விட்டுவிட மாட்டார், கண்டிப்பாக நமக்கு உதவி செய்வார். அவர் உதவி செய்யும் சில வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

இன்று யெகோவா நம் ஜெபங்களுக்குப் பதில் தரும் வழிகள்

9. நல்ல முடிவுகளை எடுக்க யெகோவா எப்படி நமக்கு உதவி செய்கிறார்? உதாரணம் சொல்லுங்கள்.

9 அவர் நமக்கு ஞானத்தைத் தருகிறார். நல்ல முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான ஞானத்தைத் தருவதாக யெகோவா நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். நம் வாழ்க்கையையே மாற்றிவிடும் முடிவுகளை நாம் எடுக்கும்போது, உதாரணத்துக்கு கல்யாணம் செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கும்போது, யெகோவா தரும் ஞானம் கண்டிப்பாக நமக்குத் தேவை. (யாக். 1:5) கல்யாணமாகாத சகோதரி மரியாவின் உதாரணத்தை இப்போது பார்க்கலாம். c ஒழுங்கான பயனியர் சேவையை அவர் சந்தோஷமாக செய்துகொண்டிருந்தார். அப்போது, ஒரு சகோதரரைச் சந்தித்தார். அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “நாங்கள் நண்பர்களாகப் பழகப் பழக, எங்களுக்கு ஒருவரை ஒருவர் ரொம்பப் பிடித்துப்போய்விட்டது. நான் ஒரு முடிவை எடுத்தே தீர வேண்டுமென்று எனக்குப் புரிந்தது. அதனால், அதைப் பற்றி நான் நிறைய ஜெபம் பண்ணினேன், ரொம்ப உருக்கமாக ஜெபம் பண்ணினேன். யெகோவாவின் வழிநடத்துதல் எனக்குத் தேவைப்பட்டது. அதேசமயத்தில், அவர் எனக்காக முடிவெடுக்க மாட்டார் என்று எனக்குத் தெரியும்” என்று சொல்கிறார். ஞானத்துக்காக அவர் செய்த ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்ததை அவர் புரிந்துகொண்டார். எப்படி? நம்முடைய பிரசுரங்களை அவர் ஆராய்ச்சி செய்தபோது, அவருடைய கேள்விகளுக்குப் பதில் தரும் கட்டுரைகளைக் கண்டுபிடித்தார். யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்யும் அவருடைய அம்மா கொடுத்த ஞானமான ஆலோசனையைக்கூட அவர் ஏற்றுக்கொண்டார். அதனால், உணர்ச்சிவசப்பட்டு ஒரு முடிவை எடுப்பதற்குப் பதிலாக, நன்றாக யோசித்துப் பார்த்து சரியான முடிவை எடுக்க அவரால் முடிந்தது.

சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தை யெகோவா எப்படி நமக்குக் கொடுக்கிறார்? (பாரா 10)

10. பிலிப்பியர் 4:13-ன்படி, யெகோவா தன் மக்களுக்கு எப்படி உதவி செய்வார்? ஓர் உதாரணம் சொல்லுங்கள். (படத்தையும் பாருங்கள்.)

10 சகித்திருப்பதற்கான பலத்தை அவர் நமக்குத் தருகிறார். கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள அப்போஸ்தலன் பவுலுக்கு யெகோவா பலம் கொடுத்தது போலவே நமக்கும் கொடுப்பார். (பிலிப்பியர் 4:13-ஐ வாசியுங்கள்.) கஷ்டமான சூழ்நிலைகளைச் சகித்துக்கொள்ள பெஞ்சமின் என்ற சகோதரருக்கு யெகோவா எப்படி உதவி செய்தார் என்று பார்க்கலாம். சின்ன வயது முழுக்க, ஆப்பிரிக்காவில் இருக்கும் அகதிகள் முகாம்களில்தான் அவர் தன் குடும்பத்தோடு வாழ்ந்தார். அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள பலம் கேட்டு அவரிடம் எப்போதும் ஜெபம் பண்ணிக்கொண்டே இருந்தேன். யெகோவா என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு மன நிம்மதியைக் கொடுத்தார்... பிரசங்கிப்பதற்குத் தைரியத்தைக் கொடுத்தார்... அவரோடு நெருக்கமாக இருப்பதற்கு உதவுகிற பிரசுரங்களையும் கொடுத்தார். மற்ற சகோதர சகோதரிகளின் அனுபவங்களை நான் படித்தேன்; சகித்திருக்க யெகோவா எப்படியெல்லாம் அவர்களுக்கு உதவினார் என்று தெரிந்துகொண்டேன். யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற மன உறுதியை அது எனக்குக் கொடுத்தது” என்று சொல்கிறார்.

சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி யெகோவா உங்களுக்கு உதவி செய்திருக்கிறாரா? (பாராக்கள் 11-12) d

11-12. நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்க யெகோவா எப்படி நம் சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தலாம்? (படத்தையும் பாருங்கள்.)

11 சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி அவர் உதவுகிறார். இயேசு, தான் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி ரொம்ப உருக்கமாக ஜெபம் செய்தார். தெய்வ நிந்தனை செய்தவன் என்ற குற்றச்சாட்டைச் சுமப்பதற்குத் தன்னை விட்டுவிட வேண்டாம் என்று யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டார். ஆனால், அவர் கேட்டதைச் செய்வதற்குப் பதிலாக, யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பி அவரைப் பலப்படுத்தினார். (லூக். 22:42, 43) இன்றும் யெகோவா சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி நமக்கு உதவி செய்யலாம். அவர்கள் நமக்கு ஃபோன் செய்து அல்லது நேரில் வந்து பார்த்து நம்மை உற்சாகப்படுத்தலாம். “நல்ல வார்த்தை” சொல்லி சகோதர சகோதரிகளைப் பலப்படுத்த நாம் எல்லாரும் வாய்ப்புகளைத் தேடலாம், இல்லையா?—நீதி. 12:25.

12 மிரியம் என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவருடைய கணவர் இறந்து சில வாரங்கள்தான் ஆகியிருந்தன. தனிமை அவரை வாட்டி எடுத்தது. சொல்ல முடியாத சோகத்தில் அவர் மூழ்கிவிட்டார். கதறிக் கதறி அழுதுகொண்டே இருந்தார். யாரிடமாவது பேச வேண்டும்போல் அவருக்கு இருந்தது. அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “யாருக்கும் ஃபோன் பண்ணி பேச எனக்கு தெம்பே இல்லை. அதனால் யெகோவாவிடம் ஜெபம் பண்ணினேன். நான் அழுது ஜெபம் பண்ணிக்கொண்டு இருந்தபோதே என் ஃபோன் அடித்தது. எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டாக இருந்த ஒரு மூப்பர்தான் ஃபோன் பண்ணியிருந்தார்” என்று சொல்கிறார். அந்த மூப்பரும் அவருடைய மனைவியும் மிரியமை ஆறுதல்படுத்தினார்கள். ஃபோன் செய்ய யெகோவாதான் அந்த மூப்பரைத் தூண்டினார் என்பதில் மிரியமுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

உலக மக்களைப் பயன்படுத்தி யெகோவா எப்படி நமக்கு உதவி செய்யலாம்? (பாராக்கள் 13-14)

13. யெகோவா தன்னை வணங்காதவர்களைப் பயன்படுத்திக்கூட நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கலாம் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்லுங்கள்.

13 உலக மக்களைப் பயன்படுத்தி அவர் உதவி செய்யலாம். (நீதி. 21:1) சிலசமயம், யெகோவா தன் மக்களின் ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பதற்காகத் தன்னை வணங்காதவர்களையும் பயன்படுத்துகிறார். உதாரணத்துக்கு, எருசலேமுக்குப் போய் அதைத் திரும்பக் கட்டுவதற்குத் தன்னை அனுப்பும்படி நெகேமியா கேட்டபோது, அதற்கு அனுமதி கொடுக்க அர்தசஷ்டா ராஜாவை யெகோவா தூண்டினார். (நெ. 2:3-6) இன்றும், யெகோவா தன்னை வணங்காதவர்களைப் பயன்படுத்திக்கூட நமக்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம்.

14. சூ ஹிங்கின் அனுபவத்தில் உங்கள் மனதைத் தொட்ட விஷயம் எது? (படத்தையும் பாருங்கள்.)

14 சூ ஹிங் என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். தன்னுடைய டாக்டரைப் பயன்படுத்தி யெகோவா தனக்கு உதவி செய்ததாக அவர் சொல்கிறார். அவருடைய மகனுக்குப் பல மனநலப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவனுக்கு ஒரு பெரிய விபத்தும் நடந்தது. அவனைப் பார்த்துக்கொள்வதற்காக சூ ஹிங்கும் அவருடைய கணவரும் தங்கள் வேலையை விட்டுவிட்டார்கள். அதனால், அவர்களுக்குப் பணப் பிரச்சினையும் வந்துவிட்டது. ‘இதற்குமேல் முடியாது’ என்ற அளவுக்குப் போய்விட்டதாக சூ ஹிங் சொல்கிறார். மனதில் இருப்பதையெல்லாம் அவர் யெகோவாவிடம் கொட்டினார், உதவிக்காக அவரிடம் கெஞ்சினார். அதன் பிறகு, அவர்களுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்பதில் அவர்களுடைய டாக்டர் தீவிரமாகிவிட்டார்! அதனால், அவர்களுக்கு அரசாங்க சலுகைகள் கிடைத்தன, குறைந்த வாடகையில் வீடும் கிடைத்தது. அதைப் பற்றி சூ ஹிங் சொல்லும்போது, “யெகோவா எங்கள் கூடவே இருந்து எங்களுக்கு உதவியதை எங்களால் பார்க்க முடிந்தது. அவர் உண்மையிலேயே ‘ஜெபத்தைக் கேட்கிறவர்தான்’” என்று சொன்னார்.—சங். 65:2.

யெகோவாவின் பதிலைப் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் விசுவாசம் தேவை

15. யெகோவா தன் ஜெபங்களுக்குப் பதில் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு சகோதரிக்கு எது உதவி செய்தது?

15 நம் ஜெபங்களுக்கு எப்போதுமே அற்புதமான விதத்தில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நமக்கு என்ன தேவையோ அது கண்டிப்பாகக் கிடைத்துவிடும். அதனால், உங்கள் ஜெபங்களுக்கு யெகோவா எப்படிப் பதில் கொடுக்கிறார் என்று பார்த்துக்கொண்டே இருங்கள். யோக்கோ என்ற சகோதரியின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். அவருடைய ஜெபங்களுக்கு யெகோவா பதில் கொடுக்காததுபோல் அவருக்குத் தோன்றியது. அதன் பிறகு, யெகோவாவிடம் கேட்ட விஷயங்களையெல்லாம் அவர் எழுதிவைக்க ஆரம்பித்தார். கொஞ்ச நாள் கழித்து அதை எடுத்துப் பார்த்தபோது, அவர் செய்த முக்கால்வாசி ஜெபங்களுக்கு யெகோவா ஏற்கெனவே பதில் கொடுத்திருந்தார். அதில் சில ஜெபங்களை அவரே மறந்துவிட்டார், ஆனாலும் யெகோவா பதில் கொடுத்திருந்தார். நாமும் அவ்வப்போது, யெகோவா எப்படியெல்லாம் நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறார் என்பதை நேரமெடுத்து யோசித்துப் பார்க்க வேண்டும்.—சங். 66:19, 20.

16. ஜெபம் செய்யும் விஷயத்தில் நாம் எப்படி விசுவாசத்தைக் காட்டலாம்? (எபிரெயர் 11:6)

16 ஜெபம் செய்வதன் மூலமாக மட்டுமல்ல, அந்த ஜெபத்துக்கு எப்படிப்பட்ட பதில் கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதன் மூலமாகவும் நம் விசுவாசத்தைக் காட்டலாம். (எபிரெயர் 11:6-ஐ வாசியுங்கள்.) மைக் மற்றும் அவருடைய மனைவி க்றிஸியின் உதாரணத்தைக் கவனியுங்கள். பெத்தேலில் சேவை செய்ய அவர்கள் ஆசைப்பட்டார்கள். அதைப் பற்றி மைக் சொல்லும்போது, “நிறைய வருஷங்களாக நாங்கள் பெத்தேல் சேவைக்கு அப்ளிகேஷன் போட்டோம், அதைப் பற்றித் திரும்பத் திரும்ப யெகோவாவிடம் ஜெபம் பண்ணிக்கொண்டே இருந்தோம். ஆனாலும், பெத்தேலிலிருந்து எங்களைக் கூப்பிடவே இல்லை” என்று சொன்னார். இருந்தாலும், அவர்களை எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம் என்று யெகோவாவுக்குத் தெரியும் என்பதை மைக்கும் க்றிஸியும் உறுதியாக நம்பினார்கள். அவர்களுடைய ஆசை நிறைவேறவில்லை என்றாலும், அவர்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்துகொண்டே இருந்தார்கள். தேவை அதிகமுள்ள இடத்தில் ஒழுங்கான பயனியராக சேவை செய்தார்கள், கட்டுமான வேலையும் செய்தார்கள். இப்போது அவர்கள் வட்டார சேவை செய்கிறார்கள். மைக் இப்படிச் சொல்கிறார்: “யெகோவா எப்போதுமே நாங்கள் எதிர்பார்த்த மாதிரிதான் எங்கள் ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தார் என்று சொல்ல முடியாது. ஆனால், அவர் கண்டிப்பாக பதில் கொடுத்திருக்கிறார். அதுவும் நாங்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு சூப்பராக பதில் கொடுத்திருக்கிறார்.”

17-18. சங்கீதம் 86:6, 7-ன்படி நாம் எதில் நம்பிக்கையோடு இருக்கலாம்?

17 சங்கீதம் 86:6, 7-ஐ வாசியுங்கள். யெகோவா தன் ஜெபங்களைக் கேட்டுப் பதில் கொடுத்தார் என்பதில் தாவீதுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. நீங்களும் அதே நம்பிக்கையோடு இருக்கலாம். இந்தக் கட்டுரையில் நாம் பார்த்த உதாரணங்கள் எதைக் காட்டுகின்றன? யெகோவா நமக்கு ஞானத்தைத் தருவார்... சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தைக் கொடுப்பார்... சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி உதவி செய்வார்... தன்னை வணங்காதவர்களைப் பயன்படுத்திக்கூட நமக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்.

18 யெகோவா நாம் எதிர்பார்க்கும் விதத்தில் நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பார் என்று சொல்ல முடியாதுதான். ஆனால், அவர் கண்டிப்பாகப் பதில் கொடுப்பார் என்று நமக்குத் தெரியும். நமக்கு எப்போது என்ன தேவையோ அப்போது அதை அவர் கொடுப்பார். அதனால், யெகோவா உங்களைப் பார்த்துக்கொள்வார் என்ற விசுவாசத்தோடு தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். இப்போது மட்டுமல்ல, வரப்போகும் புதிய உலகத்திலும் ‘எல்லா உயிர்களின் ஆசைகளையும் திருப்திப்படுத்துவார்’ என்பதில் நம்பிக்கையோடு இருங்கள்.—சங். 145:16.

பாட்டு 46 யெகோவாவே, நன்றி!

a யெகோவாவின் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி நாம் எதைக் கேட்டாலும் அதைக் கொடுப்பதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். பிரச்சினைகள் வரும்போது அவருக்கு உண்மையாக இருக்க அவர் நமக்கு உதவி செய்வார் என்று நாம் நிச்சயம் நம்பலாம். நம் ஜெபங்களுக்கு யெகோவா எப்படியெல்லாம் பதில் தருகிறார் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

b இந்த உலகத்தை ஆட்சி செய்ய சாத்தானை ஏன் யெகோவா விட்டுவைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள, ஜூன் 2017 காவற்கோபுரத்தில் வந்த, “மிக முக்கியமான விஷயத்தைப் பற்றியே யோசியுங்கள்!” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

c சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

d பட விளக்கம்: ஓர் அம்மாவும் மகளும் அகதிகளாக வேறொரு நாட்டுக்குப் போகிறார்கள். அங்கு இருக்கும் சகோதர சகோதரிகள் அவர்களை அன்பாக வரவேற்று, தேவையான உதவிகளைச் செய்கிறார்கள்.