Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 33

உயிர்த்தெழுதல்​—⁠கடவுளுடைய அன்பையும், ஞானத்தையும், பொறுமையையும் வெளிக்காட்டுகிறது

உயிர்த்தெழுதல்​—⁠கடவுளுடைய அன்பையும், ஞானத்தையும், பொறுமையையும் வெளிக்காட்டுகிறது

“நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.” —அப். 24:15.

பாட்டு 111 அவர் அழைப்பார்

இந்தக் கட்டுரையில்... *

1. யெகோவா ஏன் எல்லாவற்றையும் படைத்தார்?

யெகோவா மட்டுமே தனியாக இருந்த ஒரு காலம் இருந்தது! தனியாக இருந்தபோதும் அவர் தனிமையில் தவித்துக்கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், அவர் சந்தோஷமாக இருப்பதற்கு மற்றவர்கள் அவரோடு இருக்க வேண்டுமென்ற அவசியம் இருக்கவில்லை. ஆனாலும், அவருக்கு அன்பு இருந்ததால்தான் படைப்பு வேலைகளை ஆரம்பித்தார். (சங். 36:9; 1 யோ. 4:19) தன்னுடைய படைப்புகளும் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்.

2. யெகோவாவின் படைப்பு வேலைகளைப் பற்றி இயேசுவும் தேவதூதர்களும் எப்படி உணர்ந்தார்கள்?

2 முதலில், தன்னுடைய மகன் இயேசுவை யெகோவா படைத்தார். பிறகு, அவர் மூலம் புத்திக்கூர்மையுள்ள கோடிக்கணக்கான தேவதூதர்களையும் மற்ற ‘எல்லாவற்றையும். . .  படைத்தார்.’ (கொலோ. 1:16) தன்னுடைய பரலோகத் தந்தையோடு சேர்ந்து வேலை செய்வதில் இயேசு ரொம்ப சந்தோஷப்பட்டார். (நீதி. 8:30) யெகோவாவும், அவருடைய கைதேர்ந்த கலைஞனான இயேசுவும், வானத்தையும் பூமியையும் படைத்தபோது தேவதூதர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். பூமியையும், பூமியில் இருக்கும் ஒவ்வொன்றையும், கடைசியாக மனிதர்களையும் யெகோவா படைத்தபோது அவர்கள் எல்லாரும் ‘சந்தோஷ ஆரவாரம் செய்திருப்பார்கள்’ என்பதில் சந்தேகம் இல்லை. (யோபு 38:7; நீதி. 8:31) இந்த ஒவ்வொரு படைப்பிலும் யெகோவாவின் அன்பும் ஞானமும் பளிச்சென்று தெரிந்தது.—சங். 104:24; ரோ. 1:20.

3. மீட்புவிலையால் நமக்குக் கிடைக்கப்போகிற நன்மையைப் பற்றி ஒன்று கொரிந்தியர் 15:21, 22 என்ன சொல்கிறது?

3 தான் படைத்த இந்த அழகு கொஞ்சும் பூமியில் மனிதர்கள் என்றென்றும் சந்தோஷமாக வாழ வேண்டுமென்று யெகோவா நினைத்தார். ஆனால், ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் கடைசியில் செத்துப்போனார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்களுடைய சந்ததியில் வந்த எல்லாருமே என்றாவது ஒருநாள் சாக வேண்டிய நிலைமை வந்தது. (ரோ. 5:12) அதற்காக, மனிதர்களை அம்போவென்று யெகோவா விட்டுவிட்டாரா? இல்லை! ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த உடனே, மனிதர்களை மீட்பதற்காக அவர் என்ன செய்யப்போகிறார் என்று சொன்னார். (ஆதி. 3:15) அதாவது, ஆதாம் ஏவாளுடைய சந்ததியில் வரப்போகும் எல்லாரையும் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்வதற்காக மீட்புவிலையைக் கொடுக்க முடிவு செய்தார். மீட்புவிலையின் அடிப்படையில், தனக்குச் சேவை செய்ய விரும்புகிற ஒவ்வொருவருக்கும் முடிவில்லாத வாழ்க்கையை அவரால் தர முடியும்.—யோவா. 3:16; ரோ. 6:23; 1 கொரிந்தியர் 15:21, 22-ஐ வாசியுங்கள்.

4. எந்தெந்த கேள்விகளுக்கு இந்தக் கட்டுரையில் பதில்களைப் பார்ப்போம்?

4 உயிர்த்தெழுதல் சம்பந்தமாக நமக்கு நிறைய கேள்விகள் இருக்கலாம். உதாரணத்துக்கு, உயிர்த்தெழுதல் எந்த விதத்தில் நடக்கலாம்? நம் பாசத்துக்குரியவர்கள் உயிரோடு எழுந்துவரும்போது, அவர்களை நம்மால் அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா? உயிர்த்தெழுதல் எந்த விதங்களில் நமக்கு சந்தோஷத்தைத் தரும்? உயிர்த்தெழுதலைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது, யெகோவாவின் அன்பு... ஞானம்... பொறுமை... ஆகியவற்றைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.

உயிர்த்தெழுதல் எந்த விதத்தில் நடக்கலாம்?

5. எல்லா மக்களும் ஒரேசமயத்தில் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள் என்று நாம் ஏன் நம்பலாம்?

5 தன்னுடைய மகன் மூலம் கோடிக்கணக்கான மக்களை யெகோவா உயிரோடு எழுப்பப் போகிறார். ஆனால், அவர்கள் அத்தனை பேரையும் ஒரேசமயத்தில் உயிர்த்தெழுப்ப மாட்டார் என்று நம்பலாம். ஏனென்றால், திடீரென்று அத்தனை பேரும் உயிரோடு வந்துவிட்டால், பூமியில் குழப்பம்தான் மிஞ்சும். யெகோவா எதையும் எப்போதும் ஒழுங்கற்ற முறையில் செய்ய மாட்டார். எந்தக் குழப்பமும் இல்லாமல் மக்கள் சமாதானமாக வாழ வேண்டுமென்றால், எல்லாவற்றையும் ஒழுங்கான முறையில் செய்ய வேண்டுமென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். (1 கொ. 14:33) அவர் இயேசுவோடு சேர்ந்து இந்தப் பூமியைப் படைத்தபோது, ஞானத்தையும் பொறுமையையும் காட்டினார். எப்படிச் சொல்கிறோம்? மனிதர்களைப் படைப்பதற்கு முன்பு, அவர்கள் வாழ்வதற்குத் தகுந்தபடி இந்தப் பூமியைப் படிப்படியாகத் தயார்படுத்தியதன் மூலம் அவர் அந்தக் குணங்களைக் காட்டினார். இயேசுவும் தன்னுடைய ஆயிர வருஷ ஆட்சியில் அந்தக் குணங்களைக் காட்டுவார். எப்படி? அர்மகெதோனில் தப்பிப்பிழைப்பவர்கள், உயிர்த்தெழுந்து வருபவர்களுக்காக பூமியைத் தயார்படுத்தும்போது இயேசுவும் அவர்களோடு சேர்ந்து உழைப்பார். அப்போது, அவர் அந்தக் குணங்களைக் காட்டுவார்.

அர்மகெதோனில் தப்பிப்பிழைப்பவர்கள், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும், யெகோவாவின் நெறிமுறைகளைப் பற்றியும், உயிர்த்தெழுந்து வருபவர்களுக்குச் சொல்லித்தருவார்கள் (பாரா 6) *

6. அப்போஸ்தலர் 24:15-ன்படி, உயிர்த்தெழுந்து வருபவர்களில் யாரும் இருப்பார்கள்?

6 எல்லாவற்றுக்கும் மேலாக, அர்மகெதோனில் தப்பிப்பிழைப்பவர்கள், உயிர்த்தெழுந்து வருபவர்களுக்குக் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் அவருடைய நெறிமுறைகளைப் பற்றியும் சொல்லித்தர வேண்டியிருக்கும். ஏனென்றால், உயிர்த்தெழுந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள், ‘அநீதிமான்களின்’ தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். (அப்போஸ்தலர் 24:15-ஐ வாசியுங்கள்.) அதனால், கிறிஸ்துவின் மீட்புவிலையிலிருந்து பிரயோஜனமடைவதற்கு அவர்கள் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். யெகோவாவைப் பற்றி எதுவுமே தெரியாத கோடிக்கணக்கான மக்களுக்கு அவரைப் பற்றிச் சொல்லிக்கொடுப்பது எவ்வளவு பிரமாண்டமான ஒரு வேலையாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்! அப்படியென்றால், இந்த வேலை எப்படி நடக்கும்? இப்போது எப்படி பைபிள் படிப்பை நடத்துகிறோமோ, அதேபோல் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கற்றுக்கொடுப்போமா? அவர்கள் எல்லாரும் ஒவ்வொரு சபைக்கு நியமிக்கப்பட்டு, தங்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்து வருபவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக பயிற்சி பெறுவார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்! கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் இந்த “பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.“ (ஏசா. 11:9) அந்த ஆயிர வருஷம் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக வேலை செய்வோம், அது நமக்கு சந்தோஷத்தை அள்ளித்தரும்.

7. உயிர்த்தெழுந்து வருபவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போது, யெகோவாவின் மக்கள் ஏன் அனுதாபம் காட்டுவார்கள்?

7 கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சியின்போது, பூமியில் வாழும் யெகோவாவின் பிள்ளைகள் எல்லாரும் அவருடைய மனதை மகிழ்விக்க நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அதனால், உயிர்த்தெழுந்து வருபவர்களுக்கு அவர்கள் அனுதாபம் காட்டுவார்கள். தங்களுடைய பாவ ஆசைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், யெகோவாவின் நெறிமுறைகளின்படி வாழ்வதற்கும் உதவுவார்கள். (1 பே. 3:8) உயிர்த்தெழுந்து வருபவர்கள், யெகோவாவின் மக்கள் மனத்தாழ்மையோடு ‘[தங்களுடைய] மீட்புக்காக உழைத்து வருவதை’ பார்ப்பார்கள். (பிலி. 2:12) அவர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்கவும் ஆசைப்படுவார்கள்.

உயிர்த்தெழுந்து வருபவர்களை நம்மால் அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா?

8. நம் பாசத்துக்குரியவர்கள் உயிர்த்தெழுந்து வரும்போது நம்மால் அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமென்று எப்படிச் சொல்லலாம்?

8 உயிர்த்தெழுந்து வருபவர்களை நம்மால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்று நம்புவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஏற்கெனவே நடந்த உயிர்த்தெழுதல்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவற்றை வைத்துப்பார்க்கும்போது, ஒருவர் இறப்பதற்கு கொஞ்சம் முன்பு எப்படி இருந்தாரோ, எப்படிப் பேசினாரோ, எப்படி யோசித்தாரோ, அதே விதத்தில்தான் அவரை யெகோவா மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார் என்பது தெரிகிறது. மரணத்தை தூக்கத்துக்கும், உயிர்த்தெழுதலை தூக்கத்திலிருந்து எழுந்திருப்பதற்கும் இயேசு ஒப்பிட்டார் என்பதை மனதில் வையுங்கள். (மத். 9:18, 24; யோவா. 11:11-13) ஒருவர் தூங்குவதற்கு முன்பு பார்ப்பதற்கு எப்படி இருந்தாரோ, எப்படிப் பேசினாரோ, அதேமாதிரிதான் தூங்கி எழுந்த பின்பும் இருப்பார்! அவருடைய நினைவுகளும் அப்படியேதான் இருக்கும். லாசருவின் உயிர்த்தெழுதலைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர் இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்ததால், அவருடைய உடல் அழுக ஆரம்பித்திருந்தது. இருந்தாலும், அவரை இயேசு உயிர்த்தெழுப்பியபோது, லாசருவின் சகோதரிகள் அவரை உடனடியாக அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்கள். லாசருவும் தன்னுடைய சகோதரிகளை நன்றாக ஞாபகம் வைத்திருந்தார்.—யோவா. 11:38-44; 12:1, 2.

9. உயிர்த்தெழுந்து வருபவர்களுக்கு ஏன் பரிபூரண மனதும் உடலும் இருக்காது?

9 கிறிஸ்துவின் ஆட்சியின் கீழ் வாழ்கிற யாருமே “எனக்கு உடம்பு சரியில்லை” என்று சொல்ல மாட்டார்களென்று யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 33:24; ரோ. 6:7) அதனால், உயிர்த்தெழுந்து வருகிற எல்லாருக்கும் ஆரோக்கியமான உடலை யெகோவா கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், உடனடியாக அவர்கள் பரிபூரணமானவர்களாக ஆகிவிட மாட்டார்கள். ஒருவேளை அப்படி ஆகிவிட்டால், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அவர்கள் ரொம்பவே வித்தியாசமானவர்களாக தெரியலாம். கிறிஸ்துவின் ஆட்சியில், எல்லாரும் படிப்படியாகத்தான் பரிபூரணமானவர்களாக ஆவார்கள். ஆயிர வருஷ முடிவில்தான் தன்னுடைய தந்தையிடம் இயேசு ஆட்சியை ஒப்படைப்பார். அப்போது அந்த ஆட்சி, மனிதர்களைப் பரிபூரணமானவர்களாக ஆக்கியிருக்கும், யெகோவாவின் விருப்பத்தையும் முழுமையாக செய்து முடித்திருக்கும்.—1 கொ. 15:24-28; வெளி. 20:1-3.

உயிர்த்தெழுதல்—சந்தோஷத்தை அள்ளித்தரும்!

10. உயிர்த்தெழுதல் நடக்கும்போது உங்கள் உணர்வுகள் எப்படி இருக்கும்?

10 உங்கள் அன்புக்குரியவர்கள் உயிரோடு எழுந்துவரும்போது, அவர்களைக் கட்டித்தழுவி வரவேற்கிற அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்! சந்தோஷத்தில் சிரிப்பீர்களா அல்லது அழுவீர்களா? அல்லது, யெகோவாவைப் புகழ்ந்து பாடுவீர்களா? எப்படியிருந்தாலும் ஒரு விஷயம் நிச்சயம்! உயிர்த்தெழுதல் என்கிற பொன்னான பரிசைக் கொடுத்த அன்பு அப்பாவான யெகோவாமீதும், அவருடைய சுயநலமில்லாத மகனான இயேசுமீதும் உங்களுக்குள் அன்பு பெருக்கெடுக்கும்!

11. கடவுளுடைய நீதியான நெறிமுறைகளுக்குத் தகுந்தபடி வாழ்பவர்களுக்கு என்ன கிடைக்குமென்று யோவான் 5:28, 29 சொல்கிறது?

11 உயிர்த்தெழுந்து வருபவர்கள், தங்களுடைய பழைய சுபாவத்தைக் களைந்து போட்டுவிட்டு கடவுளுடைய நீதியான நெறிமுறைகளுக்குத் தகுந்தபடி தங்களுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்போது எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்! இப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்பவர்கள், பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், மாற்றங்களைச் செய்ய மறுப்பவர்களை, பூஞ்சோலையில் வாழ்வதற்கோ, அங்கே நிலவுகிற சமாதானத்தைக் கெடுப்பதற்கோ கடவுள் அனுமதிக்க மாட்டார்.—ஏசா. 65:20; யோவான் 5:28, 29-ஐ வாசியுங்கள்.

12. பூஞ்சோலை பூமியில் வாழ்பவர்கள்மீது யெகோவா எப்படி ஆசீர்வாதத்தைப் பொழிவார்?

12 “யெகோவா தரும் ஆசீர்வாதம்தான் ஒருவருக்குக் கிடைக்கும் சொத்து. அதனோடு சேர்த்து அவர் எந்த வேதனையையும் கொடுக்க மாட்டார்” என்று நீதிமொழிகள் 10:22 சொல்கிறது. இது எவ்வளவு உண்மை என்பதை ஆயிர வருஷ ஆட்சியில் கடவுளுடைய மக்கள் உணருவார்கள். கடவுளுடைய சக்தியின் உதவியால், அவருடன் இருக்கிற பந்தத்தை அவருடைய மக்கள் பலப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அதாவது, கிறிஸ்துவைப் போலவே ஆவதில் முன்னேறிக்கொண்டே இருப்பார்கள். பரிபூரணத்தை நோக்கி வளர்ந்துகொண்டே இருப்பார்கள். (யோவா. 13:15-17; எபே. 4:23, 24) தினம் தினம் அவர்களுடைய ஆரோக்கியம் கூடிக்கொண்டே போகும். அருமையான மக்களாக மாறிக்கொண்டே இருப்பார்கள். அப்போது அவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷம் பெருக்கெடுத்து ஓடும், இல்லையா? (யோபு 33:25) உயிர்த்தெழுதலைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்ப்பது இப்போதே உங்களுக்கு எப்படி உதவியாக இருக்கும் என்று பார்க்கலாம்.

யெகோவாவுடைய அன்பைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

13. சங்கீதம் 139:1-4-ன்படி, யெகோவாவுக்கு நம்மைப் பற்றி எல்லாமே தெரியும் என்பதை உயிர்த்தெழுதல் எப்படி நிரூபிக்கிறது?

13 நாம் ஏற்கெனவே பார்த்ததைப் போல், ஒருவரை யெகோவா உயிரோடு எழுப்பும்போது, அவருடைய நினைவுகள்... சுபாவம்... என எல்லாவற்றையும் திரும்பவும் கொடுப்பார். இதிலிருந்து என்ன தெரிகிறது? யெகோவா உங்களை ரொம்ப நேசிக்கிறார்! அதனால்தான், நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள்... எப்படி உணருகிறீர்கள்... என்ன சொல்கிறீர்கள்... என்ன செய்கிறீர்கள்... என எல்லாவற்றையும் கவனித்து, அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்கிறார். அதனால், உங்களை உயிர்த்தெழுப்ப யெகோவா முடிவு செய்துவிட்டால், உங்களுடைய நினைவுகள்... மனப்பான்மை... சுபாவம்... என எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுப்பது அவருக்குக் கஷ்டமான விஷயமே கிடையாது. நம் ஒவ்வொருவர்மீதும் யெகோவா எந்தளவு அக்கறை வைத்திருக்கிறார் என்பது தாவீதுக்குத் தெரிந்திருந்தது! (சங்கீதம் 139:1-4-ஐ வாசியுங்கள்.) யெகோவா நம்மைப் பற்றி முழுமையாகத் தெரிந்துவைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும்போது நாம் எப்படி உணருகிறோம்?

14. யெகோவாவுக்கு நம்மைப் பற்றி எல்லாமே தெரியும் என்பதைப் புரிந்துகொள்ளும்போது நாம் எப்படி உணர வேண்டும்?

14 யெகோவாவுக்கு நம்மைப் பற்றி எல்லாமே தெரியும் என்ற விஷயத்தை யோசிக்கும்போது, ‘அப்படீனா, என்னோட குறைகளும் அவருக்கு தெரியுமே!’ என்று நினைத்து நாம் கவலைப்பட வேண்டுமா? தேவையில்லை! அவர் நம்மேல் ரொம்ப அக்கறை வைத்திருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிற தனித்தன்மையை அவர் மதிக்கிறார். நம்மைப் பொக்கிஷம்போல் நினைக்கிறார். நம் வாழ்க்கை அனுபவங்கள் நம்மை எப்படிப்பட்ட ஆட்களாக மாற்றியிருக்கின்றன என்பதையும் அவர் கவனமாகப் பார்க்கிறார். இதையெல்லாம் யோசிக்கும்போது நமக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது! நாம் தனியாள் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் யெகோவா நம் பக்கத்திலேயே இருக்கிறார். நமக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.—2 நா. 16:9.

யெகோவாவின் ஞானத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

15. யெகோவா ஞானமானவர் என்பதை உயிர்த்தெழுதல் எப்படி நிரூபிக்கிறது?

15 மரண பயம் என்பது சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் பயன்படுத்துகிற வலிமையான ஓர் ஆயுதம்! அவர்கள் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி, மக்கள் தங்களுடைய நண்பர்களைக் காட்டிக்கொடுக்கும்படி செய்கிறார்கள் அல்லது தங்களுடைய நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்கும்படி செய்கிறார்கள். ஆனால், நம்மைப் பொறுத்தவரை இந்த ஆயுதம் வெறும் புஸ்வாணம்தான்! ஏனென்றால், எதிரிகள் நம்மைக் கொலை செய்தாலும் யெகோவா மறுபடியும் நம்மை உயிரோடு கொண்டுவருவார் என்பது நமக்குத் தெரியும். (வெளி. 2:10) யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தை எந்தச் சக்தியாலும் முறிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். (ரோ. 8:35-39) உயிர்த்தெழுதல் நம்பிக்கையைக் கொடுத்ததன் மூலம், தான் எவ்வளவு ஞானமானவர் என்பதை யெகோவா நிரூபித்திருக்கிறார். இந்த நம்பிக்கையின் மூலம், சாத்தானுடைய வலிமையான ஆயுதத்தை யெகோவா செயலிழக்கும்படி செய்திருக்கிறார். அதேசமயத்தில், ‘அசாத்திய தைரியம்’ என்கிற ஆயுதத்தை நம்முடைய கைகளில் கொடுத்திருக்கிறார்.

நம்முடைய பொருளாதார தேவைகளைக் கவனித்துக்கொள்வதாக யெகோவா கொடுத்திருக்கிற வாக்குறுதியை நாம் நம்புகிறோம் என்பதை நாம் எடுக்கிற முடிவுகள் காட்டுகின்றனவா? (பாரா 16) *

16. நீங்கள் என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும், யெகோவாவை எந்தளவு நம்புகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் எப்படி உதவும்?

16 எதிரிகள் உங்களைக் கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? யெகோவா மறுபடியும் உங்களை உயிரோடு கொண்டுவருவார் என்பதை நம்புவீர்களா? அதைத் தெரிந்துகொள்ள இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஒவ்வொரு நாளும் நான் எடுக்கிற சின்ன சின்ன தீர்மானங்கள், கடவுள்மேல நான் நம்பிக்கை வைச்சிருக்கிறேங்குறத காட்டுதா? (லூக். 16:10) நான் வாழ்ற விதம், கடவுளோட அரசாங்கத்த முதலிடத்துல வைக்குறவங்களோட தேவைகள யெகோவா பார்த்துக்குவாருனு நான் நம்புறத காட்டுதா?’ (மத். 6:31-33) இந்தக் கேள்விகளுக்கு ‘ஆமாம்’ என்று நீங்கள் பதில் சொன்னால், யெகோவாவை நம்புகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையில் என்ன சோதனைகள் எட்டிப் பார்த்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்றும் அர்த்தம்.—நீதி. 3:5, 6

யெகோவாவின் பொறுமையைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

17. (அ) யெகோவா பொறுமையானவர் என்பதை உயிர்த்தெழுதல் எப்படிக் காட்டுகிறது? (ஆ) அவருடைய பொறுமைக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?

17 இந்த உலகத்துக்கு முடிவுகட்டப்போகிற நாளையும் நேரத்தையும் யெகோவா ஏற்கெனவே குறித்துவிட்டார். (மத். 24:36) அந்த நாளும் நேரமும் வருவதற்கு முன்பாகவே தன்னுடைய பொறுமையை இழந்து இந்த உலகத்தை அழித்துவிட மாட்டார். இறந்தவர்களை உயிரோடு எழுப்புவதற்கு அவர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்! ஆனாலும், பொறுமையாக இருக்கிறார். (யோபு 14:14, 15) ஏனென்றால், சரியான நேரத்துக்காக அவர் காத்துக்கொண்டிருக்கிறார். (யோவா. 5:28) அவர் இப்படிப் பொறுமையோடு இருப்பதற்காக நாம் ரொம்ப நன்றியோடு இருக்க வேண்டும். இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: அவர் இப்படிப் பொறுமையோடு இருப்பதால்தானே நமக்கும் ஏராளமான மற்ற ஜனங்களுக்கும் ‘மனம் திருந்துவதற்கு’ வாய்ப்பு கிடைத்திருக்கிறது! (2 பே. 3:9) எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார். அதனால், யெகோவாவின் பொறுமைக்கு நாம் நன்றி காட்ட வேண்டும். இதை எப்படிச் செய்யலாம்? ‘முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு இருப்பவர்களை’ தேடிக் கண்டுபிடிப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதன் மூலமும், யெகோவாவை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் அவர்களுக்கு உதவுவதன் மூலமும் நாம் நன்றி காட்டலாம். (அப். 13:48) இப்படிச் செய்தால், யெகோவாவின் பொறுமையால் நாம் நன்மையடைந்ததுபோல் அவர்களும் நன்மையடைவார்கள்.

18. நாம் ஏன் மற்றவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும்?

18 ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் நாம் பரிபூரணமானவர்களாக ஆகும்வரை யெகோவா நம்மேல் பொறுமையாக இருப்பார். அதுவரைக்கும் நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு அவர் தயாராக இருக்கிறார். அப்படியென்றால், நாமும் மற்றவர்களிடம் இருக்கிற நல்லதை மட்டும் பார்ப்பதும், அவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்வதும் முக்கியம், இல்லையா? இப்போது, ஒரு சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவருடைய கணவர், அளவுக்கு அதிகமான மனப்பதற்றத்தால் பாதிக்கப்பட்டதால், கூட்டங்களுக்குப் போவதை நிறுத்திவிட்டார். அந்தச் சகோதரி இப்படிச் சொல்கிறார்: “எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு. எங்களோட வாழ்க்கை திடீர்னு தலைகீழா மாறிடுச்சு. நாங்க செய்ய நினைச்சத எங்களால செய்ய முடியாம போயிடுச்சு.” இருந்தாலும், தன்னுடைய கணவரிடம் அன்பாகவும் பொறுமையாகவும் அவர் நடந்துகொண்டார். யெகோவாவை முழுமையாக நம்பினார், அதனால் அவர் சோர்ந்துவிடவில்லை. யெகோவாவைப் போலவே, பிரச்சினையைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், தன்னுடைய கணவரிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பற்றி யோசித்தார். “என் கணவர்கிட்ட தங்கமான குணங்கள் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா பிரச்சினையிலிருந்து மீண்டுவர அவர் முயற்சி செஞ்சிட்டிருக்கிறாரு” என்று அந்தச் சகோதரி சொல்கிறார். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நம்முடைய குடும்பத்திலோ சபையிலோ இருக்கிற யாராவது தங்களுடைய பிரச்சினைகளைச் சமாளிக்க முயற்சி செய்துகொண்டிருந்தால், அவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்வது ரொம்ப முக்கியம்.

19. என்ன செய்வதற்கு நாம் உறுதியோடு இருக்க வேண்டும்?

19 பூமி படைக்கப்பட்டபோது, இயேசுவும் தேவதூதர்களும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். எதிர்காலத்தில், யெகோவாவை நேசிக்கிற... அவருக்குச் சேவை செய்கிற... பரிபூரண மக்கள் இந்தப் பூமி முழுவதும் நிரம்பியிருப்பதைப் பார்க்கும்போது, அவர்கள் இன்னும் எந்தளவு சந்தோஷப்படுவார்கள்! இயேசுவுடன் சேர்ந்து ஆட்சி செய்வதற்காக இந்தப் பூமியிலிருந்து பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர்களும், தங்களுடைய உழைப்பால் நாம் எப்படிப் பிரயோஜனமடைகிறோம் என்பதைப் பார்க்கும்போது, எந்தளவு பூரிப்படைவார்கள்! (வெளி. 4:4, 9-11; 5:9, 10) வலி... வேதனை... நோய்நொடி... மரணம்... ஆகியவற்றால் வருகிற கண்ணீரெல்லாம் போய், நம் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மட்டுமே வரப்போகிற அந்தக் காலத்தையும் கற்பனை செய்துபாருங்கள். (வெளி. 21:4) அப்படிப்பட்ட காலம் வரும்வரை, அன்பாக... ஞானமாக... பொறுமையாக... நடந்துகொள்கிற நம் அப்பா யெகோவாவைப் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். இப்படிச் செய்தால், உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட புயல் தாக்கினாலும் சந்தோஷத்தை இழந்துவிட மாட்டீர்கள். (யாக். 1:2-4) இறந்தவர்கள் “உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று யெகோவா வாக்குறுதி கொடுத்திருப்பதற்காக அவருக்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!—அப். 24:15.

பாட்டு 130 உயிர் ஓர் அற்புதமே

^ பாரா. 5 யெகோவா அப்பா அன்பானவர், ஞானமானவர், பொறுமையானவர்! எல்லாவற்றையும் அவர் படைத்த விதத்திலும், இறந்தவர்களை உயிரோடு கொண்டுவருவதாக அவர் தந்திருக்கிற வாக்குறுதியிலும் இந்தக் குணங்கள் தெரிகின்றன. உயிர்த்தெழுதல் சம்பந்தமாக நமக்கு ஒருவேளை சில கேள்விகள் இருக்கலாம். இந்தக் கட்டுரையில் அவற்றுக்குப் பதில் தெரிந்துகொள்வீர்கள். யெகோவா எந்தளவுக்கு அன்பானவர், ஞானமானவர், பொறுமையானவர் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்.

^ பாரா. 59 படவிளக்கம்: நூற்றுக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் இறந்துபோன ஒருவர், ஆயிர வருஷ ஆட்சியில் உயிர்த்தெழுந்து வருகிறார். கிறிஸ்துவின் மீட்புப் பலியிலிருந்து பிரயோஜனமடைவதற்கு அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி, அர்மகெதோனில் தப்பிப்பிழைத்த ஒரு சகோதரர் அவருக்குச் சந்தோஷமாகச் சொல்லித்தருகிறார்.

^ பாரா. 61 படவிளக்கம்: ஒரு சகோதரர், வாரத்தின் சில நாட்களில் தன்னால் ஓவர்டைம் செய்ய முடியாது என்பதைத் தன் முதலாளியிடம் விளக்குகிறார். அதாவது, அந்த நாட்களில், சாயங்கால நேரத்தை யெகோவாவின் வழிபாடு சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செய்வதற்காக ஒதுக்கிவைத்திருப்பதால், தன்னால் ஓவர்டைம் செய்ய முடியாது என்று சொல்கிறார். தேவைப்பட்டால் மற்ற நாட்களில் ஓவர்டைம் செய்வதற்குத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.