Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 32

கடவுளுக்கு முன்னால் மனத்தாழ்மையோடும் அடக்கத்தோடும் நடந்துகொள்ளுங்கள்

கடவுளுக்கு முன்னால் மனத்தாழ்மையோடும் அடக்கத்தோடும் நடந்துகொள்ளுங்கள்

‘அடக்கத்தோடு உன் கடவுளுடைய வழியில் நட.’—மீ. 6:8.

பாட்டு 26 தேவனோடு நடப்பீரே!

இந்தக் கட்டுரையில்... *

1. யெகோவாவின் மனத்தாழ்மையைப் பற்றி தாவீது என்ன சொன்னார்?

யெகோவா உண்மையிலேயே மனத்தாழ்மையாக இருக்கிறாரா? நிச்சயமாக! “உங்களுடைய மீட்பின் கேடயத்தை எனக்குக் கொடுக்கிறீர்கள், உங்கள் மனத்தாழ்மையால் என்னை உயர்த்துகிறீர்கள்” என்று தாவீது ஒரு தடவை சொன்னார். (2 சா. 22:36; சங். 18:35) சாமுவேல் தீர்க்கதரிசி தன்னுடைய வீட்டுக்கு வந்து இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக தன்னை அபிஷேகம் செய்த சமயத்தை மனதில்வைத்து தாவீது இதை எழுதியிருக்கலாம். எட்டு மகன்களில் தாவீதுதான் கடைசி மகன். இருந்தாலும், சவுல் ராஜாவுக்குப் பதிலாக யெகோவா அவரைத்தான் தேர்ந்தெடுத்தார்.—1 சா. 16:1, 10-13.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

2 “அவர் வானத்தையும் பூமியையும் குனிந்து பார்க்கிறார். எளியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார். ஏழையை . . .  உயர்த்துகிறார். அவனை அதிபதிகளோடு உட்கார வைக்கிறார்” என்று ஒரு சங்கீதக்காரர் எழுதினார். (சங். 113:6-8) இந்தச் சங்கீதக்காரரின் உணர்வுகள்தான் தாவீதுக்கும் இருந்தன. மனத்தாழ்மை என்ற குணத்தை யெகோவா எப்படியெல்லாம் காட்டியிருக்கிறார் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அதிலிருந்து சில முக்கியமான பாடங்களையும் கற்றுக்கொள்ளப்போகிறோம். அடுத்ததாக, அடக்கம் என்கிற குணத்தைப் பற்றி சவுல் ராஜாவிடமிருந்தும் தானியேல் தீர்க்கதரிசியிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் கற்றுக்கொள்ளப்போகிறோம்.

யெகோவாவுடைய உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

3. யெகோவா நம்மிடம் எப்படி நடந்துகொள்கிறார், இதிலிருந்து அவரைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

3 பாவ இயல்புள்ள தன்னுடைய ஊழியர்களிடம் நடந்துகொள்கிற விதத்திலிருந்து, தான் மனத்தாழ்மையுள்ளவர் என்பதை யெகோவா காட்டுகிறார். தன்னை வணங்குகிறவர்களாக மட்டுமல்ல, தன்னுடைய நண்பர்களாகவும் அவர் நம்மைப் பார்க்கிறார். (சங். 25:14) நம்முடைய பாவங்களுக்குத் தன்னுடைய மகனையே பலியாகக் கொடுத்தார். இப்படி, நாம் அவருடைய நண்பர்களாவதற்கு அவர்தான் முதல்படி எடுத்தார். அப்படியென்றால், அவர் நம்மேல் எந்தளவு இரக்கத்தையும் கரிசனையையும் காட்டியிருக்கிறார்!

4. யெகோவா நமக்கு என்ன கொடுத்திருக்கிறார், ஏன்?

4 யெகோவா மனத்தாழ்மையுள்ளவர் என்பதை இன்னொரு விஷயமும் காட்டுகிறது. யெகோவா நினைத்திருந்தால் நம்மை ரோபோக்களைப் போல் படைத்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. நாம் எப்படி வாழ வேண்டுமென்று முடிவெடுக்கும் திறமையை நமக்குக் கொடுத்திருக்கிறார். அவருடைய சாயலில் நம்மைப் படைத்திருக்கிறார், சொந்தமாகத் தீர்மானம் எடுக்கிற சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார். யெகோவாவோடு ஒப்பிடும்போது நாம் எல்லாரும் வெறும் தூசுதான்! இருந்தாலும், அவர்மேல் இருக்கிற அன்பால் நாம் அவரை வணங்க வேண்டுமென்று விரும்புகிறார். அவருக்குக் கீழ்ப்படிவதால் வரும் நன்மைகளைப் புரிந்துகொண்டு அவருக்கு சேவை செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறார். (உபா. 10:12; ஏசா. 48:17, 18) யெகோவாவுடைய மனத்தாழ்மையைப் பற்றி நினைத்துப்பார்க்கும்போது நம் மனம் நன்றியால் நிரம்புகிறது, இல்லையா?

பரலோகக் காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தன்னோடு சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்பவர்களோடு இயேசு நின்றுகொண்டிருக்கிறார். தங்களைச் சுற்றி நிற்கும் ஏராளமான தேவதூதர்களை அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தேவதூதர்களில் சிலர், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வதற்காகப் பூமியை நோக்கி வருகிறார்கள். இந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கிற எல்லாருக்கும் யெகோவா அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார் (பாரா 5)

5. மனத்தாழ்மையாக இருப்பதற்கு யெகோவா நமக்கு எப்படிக் கற்றுக்கொடுக்கிறார்? (அட்டைப் படம்)

5 நம்மை நடத்துகிற விதத்தின் மூலம் யெகோவா நமக்கு மனத்தாழ்மையைக் கற்றுக்கொடுக்கிறார். இந்தப் பிரபஞ்சத்திலேயே ரொம்ப ஞானமுள்ளவர் என்றால், அது யெகோவாதான்! இருந்தாலும், மற்றவர்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்வதற்கு அவர் தயாராக இருக்கிறார். உதாரணத்துக்கு, எல்லாவற்றையும் படைப்பதற்கு இயேசுவைத் தனக்கு உதவியாக வைத்துக்கொண்டார். (நீதி. 8:27-30; கொலோ. 1:15, 16) யெகோவா சர்வவல்லமையுள்ளவராக இருந்தாலும் மற்றவர்களுக்கும் அதிகாரத்தைக் கொடுக்கிறார். உதாரணத்துக்கு, தன்னுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசுவை நியமித்திருக்கிறார். அதோடு, இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்யப்போகிற 1,44,000 பேருக்கும் அவர் அதிகாரத்தைக் கொடுக்கப்போகிறார். (லூக். 12:32) ராஜாவாகவும் தலைமைக் குருவாகவும் இருப்பதற்கு இயேசுவுக்கு அவர் பயிற்சி கொடுத்திருக்கிறார். (எபி. 5:8, 9) அதுமட்டுமல்ல, இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்யப்போகிறவர்களுக்கும் பயிற்சி கொடுக்கிறார். ஆனால், அவர்கள் தங்களுடைய பொறுப்பை செய்யும்போது ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் தலையிட மாட்டார். அதற்குப் பதிலாக, தன்னுடைய விருப்பத்தை அவர்கள் செய்வார்கள் என்று முழுமையாக நம்புவார்.—வெளி. 5:10.

மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதன் மூலமும் வேலைகளைப் பிரித்துக் கொடுப்பதன் மூலமும் நாம் யெகோவாவைப் போல் நடந்துகொள்கிறோம் (பாராக்கள் 6-7) *

6-7. வேலையைப் பிரித்துக் கொடுக்கிற விஷயத்தில் யெகோவாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 எதைச் செய்வதற்கும் யெகோவாவுக்கு மற்றவர்களுடைய உதவி தேவையில்லை. இருந்தாலும், அவர் மற்றவர்களுக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுக்கிறார். அப்படியிருக்கும்போது, சாதாரண மனிதர்களான நாம் இன்னும் எந்தளவுக்கு நம்முடைய வேலைகளைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்! ஒருவேளை, நீங்கள் குடும்பத் தலைவராகவோ சபை மூப்பராகவோ இருக்கலாம். அப்படியென்றால், யெகோவாவுடைய உதாரணத்தைப் பின்பற்றி மற்றவர்களுக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுங்கள். அப்படிக் கொடுத்த பிறகு, அவர்கள் செய்கிற ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் தலையிட வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். ஆனால், அந்த எண்ணத்தை விட்டுவிடுங்கள். யெகோவாவைப் போல் நடந்துகொள்ளும்போது, உங்களுடைய வேலைகள் முடிவது மட்டுமல்லாமல் உங்களால் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கவும் முடியும். அதோடு, அவர்களுடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்தவும் முடியும். (ஏசா. 41:10) அதிகாரத்தில் இருப்பவர்கள் யெகோவாவிடமிருந்து வேறு எதையும் கற்றுக்கொள்ளலாம்?

7 தன்னுடைய பரலோகப் பிள்ளைகளான தேவதூதர்களுடைய கருத்துகளைக் கேட்பதற்கு யெகோவா ஆர்வத்தோடு இருப்பதாக பைபிள் காட்டுகிறது. (1 ரா. 22:19-22) அப்படியென்றால் பெற்றோர்களே, நீங்கள் எப்படி யெகோவாவைப் போல் நடந்துகொள்ளலாம்? பொருத்தமான சமயங்களில், ஒரு வேலையை எப்படிச் செய்யலாம் என்று உங்கள் பிள்ளைகளிடம் கேளுங்கள். அவர்கள் சொல்வது சரியாக இருந்தால், அதன்படியே செய்யுங்கள்.

8. ஆபிரகாமிடமும் சாராளிடமும் யெகோவா எப்படிப் பொறுமையாக நடந்துகொண்டார்?

8 யெகோவாவின் மனத்தாழ்மை, அவர் காட்டுகிற பொறுமை என்ற குணத்தின் மூலமும் பளிச்சிடுகிறது. உதாரணத்துக்கு, தன்னுடைய முடிவுகளைப் பற்றித் தன்னுடைய ஊழியர்கள் மரியாதையான விதத்தில் கேள்விகள் கேட்கும்போது, யெகோவா பொறுமையாக இருக்கிறார். சோதோம் கொமோராவை அழிக்க வேண்டுமென்று யெகோவா முடிவெடுத்தபோது ஆபிரகாம் தன் மனதில் இருந்த சந்தேகங்களைக் கேட்டார். அதையெல்லாம் யெகோவா பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்டார். (ஆதி. 18:22-33) இப்போது, ஆபிரகாமுடைய மனைவி சாராளிடம் யெகோவா எப்படி நடந்துகொண்டார் என்று யோசித்துப்பாருங்கள். வயதான காலத்தில் சாராளுக்குக் குழந்தை பிறக்கும் என்று யெகோவா சொன்னபோது அவள் சிரித்தாள். அதற்காக, அவர் புண்பட்டுவிடவில்லை, சாராளின் மேல் கோபப்படவும் இல்லை. (ஆதி. 18:10-14) அதற்குப் பதிலாக சாராளை மதிப்புமரியாதையோடு நடத்தினார்.

9. யெகோவாவுடைய உதாரணத்திலிருந்து பெற்றோர்களும் மூப்பர்களும் என்ன கற்றுக்கொள்ளலாம்?

9 பெற்றோர்களே! மூப்பர்களே! யெகோவாவிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? நீங்கள் எடுக்கும் முடிவுகளைப் பற்றி உங்கள் கண்காணிப்பின் கீழ் இருப்பவர்கள் கேள்வி கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வீர்கள்? நீங்கள் எடுத்த முடிவு சரிதான் என்று உடனே நியாயப்படுத்த ஆரம்பித்துவிடுவீர்களா அல்லது அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்று புரிந்துகொள்ள முயற்சி செய்வீர்களா? அதிகாரத்தில் இருப்பவர்கள் யெகோவாவைப் போல் நடந்துகொண்டால் குடும்பங்களும் சபைகளும் பிரயோஜனமடையும். மனத்தாழ்மையைப் பற்றி யெகோவாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இதுவரை பார்த்தோம். இப்போது, அடக்கத்தைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் உதாரணங்களிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்கப்போகிறோம்.

மற்றவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

10. நமக்குக் கற்றுக்கொடுப்பதற்காக மற்றவர்களுடைய உதாரணங்களை யெகோவா எப்படிப் பயன்படுத்துகிறார்?

10 நமக்குக் கற்றுக்கொடுப்பதற்காக, நம்முடைய ‘மகத்தான போதகரான’ யெகோவா நிறைய உதாரணங்களை பைபிளில் பதிவு செய்திருக்கிறார். (ஏசா. 30:20, 21) அடக்கத்தையும், கடவுளைச் சந்தோஷப்படுத்துகிற மற்ற குணங்களையும் காட்டிய நிறைய பேருடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. அந்த உதாரணங்களைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது நம்மால் நிறைய கற்றுக்கொள்ள முடியும். இதைப் போன்ற குணங்களைக் காட்டாதவர்களின் உதாரணங்களும் பைபிளில் இருக்கின்றன. அதிலிருந்தும் நம்மால் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.—சங். 37:37; 1 கொ. 10:11.

11. சவுலுடைய உதாரணம் நமக்கு எப்படி எச்சரிக்கையாக இருக்கிறது?

11 சவுல் ராஜாவுடைய வாழ்க்கையில் என்ன நடந்ததென்று யோசித்துப்பாருங்கள். இளம் வயதில் அவர் அடக்கமானவராக இருந்தார். அவருடைய வரம்புகளைப் பற்றித் தெரிந்துவைத்திருந்தார். சொல்லப்போனால், கூடுதல் பொறுப்பை எடுத்துச் செய்வதற்குத் தயங்கினார். (1 சா. 9:21; 10:20-22) ஆனாலும், காலப்போக்கில் சவுல் அகங்காரம் பிடித்தவராக மாறிவிட்டார். ராஜாவான கொஞ்சக் காலத்திலேயே இந்தக் கெட்ட புத்தியைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஒருசமயம், சாமுவேல் தீர்க்கதரிசிக்காக காத்திருந்தபோது சவுல் பொறுமையை இழந்துவிட்டார். யெகோவா தன்னுடைய மக்களின் சார்பாக ஏதாவது செய்வார் என்று நம்புவதற்குப் பதிலாக, தனக்கு அதிகாரம் இல்லாதபோதும் தகன பலியைச் செலுத்தினார். அதனால், யெகோவாவுடைய தயவை இழந்துவிட்டார்; காலப்போக்கில் அவருடைய ராஜ பதவியும் பறிபோனது. (1 சா. 13:8-14) நாம் அகங்காரமாக நடந்துகொள்ளக் கூடாது என்ற பாடத்தை சவுலிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். இந்தப் பாடத்தை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டால், நாம் ஞானமுள்ளவர்களாக இருப்போம்.

12. தானியேல் எப்படி அடக்கத்தோடு நடந்துகொண்டார்?

12 தானியேல் தீர்க்கதரிசி சவுலைப் போல் அகங்காரமாக நடந்துகொள்ளவில்லை. தன்னுடைய வாழ்க்கை முழுவதும் மனத்தாழ்மையாக இருந்தார், அடக்கத்தோடு நடந்துகொண்டார். வழிநடத்துதலுக்காக எப்போதும் யெகோவாவையே நம்பியிருந்தார். உதாரணத்துக்கு, நேபுகாத்நேச்சாரின் கனவுக்கு அர்த்தம் சொல்ல யெகோவா தானியேலைப் பயன்படுத்தினார். அந்தச் சமயத்தில், தானியேல் தனக்குப் புகழ் சேர்க்காமல் யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தார். எவ்வளவு அடக்கமாக நடந்துகொண்டார் பார்த்தீர்களா! (தானி. 2:26-28) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? ‘நீங்க கொடுத்த பேச்சு ரொம்ப நல்லா இருந்துச்சு’ என்று சகோதர சகோதரிகள் நம்மைப் பாராட்டலாம். இல்லையென்றால், ஊழியத்தில் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கலாம். அப்போது, நமக்குப் புகழ் சேர்க்காமல் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். யெகோவாவுடைய உதவியில்லாமல் நம்மால் எதையும் சாதித்திருக்க முடியாது என்பதை அடக்கத்தோடு ஒத்துக்கொள்ள வேண்டும். (பிலி. 4:13) இப்படியெல்லாம் செய்யும்போது இயேசுவைப் போலவும் நடந்துகொள்கிறோம் என்று அர்த்தம். எப்படிச் சொல்லலாம்?

13. யோவான் 5:19, 30-ல் இருக்கும் இயேசுவுடைய வார்த்தைகளிலிருந்து அடக்கமாக இருப்பதைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?

13 யெகோவாவுடைய பரிபூரண மகனாக இருந்தபோதும், இயேசு எப்போதுமே யெகோவாவையே நம்பியிருந்தார். (யோவான் 5:19-யும், 30-யும் வாசியுங்கள்.) தன்னுடைய தந்தையிடமிருந்து அதிகாரத்தைப் பறித்துக்கொள்ள ஒருபோதும் அவர் முயற்சி செய்யவில்லை. அவரைப் பற்றி பிலிப்பியர் 2:6 இப்படிச் சொல்கிறது: “கடவுளுடைய ஸ்தானத்தைப் பறித்துக்கொள்ளவோ அவருக்குச் சமமாக இருக்கவோ [இயேசு] நினைக்கவில்லை.“ கீழ்ப்படிதலுள்ள மகனாக, தனக்கிருந்த வரம்புகளை இயேசு புரிந்துவைத்திருந்தார். தன்னுடைய தந்தையின் அதிகாரத்தை மதித்தார்.

தன்னுடைய வரம்புகளை இயேசு தெரிந்துவைத்திருந்தார், அதை மனதார ஏற்றுக்கொண்டார் (பாரா 14)

14. தன்னுடைய அதிகாரத்தில் இல்லாத ஒரு விஷயத்தைச் செய்யும்படி தன்னிடம் கேட்கப்பட்டபோது இயேசு என்ன செய்தார்?

14 ஒரு தடவை யாக்கோபு மற்றும் யோவானுடைய அம்மா இயேசுவிடம் வந்து, ‘நீங்க ராஜாவா ஆகுறப்போ, என்னோட ஒரு மகனை உங்களோட வலதுபக்கத்துலயும் இன்னொரு மகனை இடதுபக்கத்துலயும் உட்கார வையுங்க’ என்று கேட்டார். அப்போது, அந்த முடிவை எடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லையென்றும், தன்னுடைய பரலோகத் தந்தைக்குத்தான் இருக்கிறது என்றும் இயேசு உடனடியாகச் சொல்லிவிட்டார். (மத். 20:20-23) தன்னுடைய வரம்புகளை அவர் புரிந்துவைத்திருந்தார், அதை மனதார ஏற்றுக்கொண்டார். அவர் அடக்கமாக இருந்தார். யெகோவா சொல்லாத எதையும் அவர் செய்யவில்லை. (யோவா. 12:49) நாம் எப்படி இயேசுவைப் போல் நடந்துகொள்ளலாம்?

நாம் எப்படி இயேசுவைப் போல் அடக்கமாக நடந்துகொள்ளலாம்? (பாராக்கள் 15-16) *

15-16. ஒன்று கொரிந்தியர் 4:6-ல் இருக்கும் அறிவுரையின்படி நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

15 ஒன்று கொரிந்தியர் 4:6-ல் இருக்கும் அறிவுரையின்படி செய்தால் இயேசுவைப் போல் நடந்துகொள்கிறோம் என்று அர்த்தம். “எழுதப்பட்ட விஷயங்களுக்கு மிஞ்சிப் போகாதீர்கள்” என்று அந்த வசனம் சொல்கிறது. அதனால் யாராவது நம்மிடம் வந்து அறிவுரை கேட்கும்போது, நம்முடைய சொந்த அபிப்பிராயங்களையோ நம் மனதில் முதலில் தோன்றும் விஷயங்களையோ அவர்கள்மேல் திணிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, பைபிளிலோ நம்முடைய பிரசுரங்களிலோ இருக்கும் அறிவுரைகளை அவர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். இப்படிச் செய்யும்போது, நம்முடைய வரம்புகளைப் புரிந்து நடந்துகொள்கிறோம் என்று அர்த்தம். நம்முடைய கருத்துகளைவிட யெகோவாவுடைய ‘கட்டளைகள்தான் நீதியானவை’ என்பதைக் காட்டுகிறோம் என்றும் அர்த்தம்.—வெளி. 15:3, 4.

16 யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதற்காக மட்டுமல்ல, வேறுசில காரணங்களுக்காகவும் நாம் அடக்கமாக நடந்துகொள்ள வேண்டும். மனத்தாழ்மையோடும் அடக்கத்தோடும் நடந்துகொள்ளும்போது, நமக்குச் சந்தோஷம் கிடைக்கும். அதோடு, மற்றவர்களோடு ஒத்துப்போகவும் முடியும். எப்படியென்று இப்போது பார்க்கலாம்.

மனத்தாழ்மையோடும் அடக்கத்தோடும் நடப்பதால் வரும் நன்மைகள்

17. மனத்தாழ்மையாகவும் அடக்கமாகவும் இருப்பவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று ஏன் சொல்லலாம்?

17 நாம் மனத்தாழ்மையோடும் அடக்கத்தோடும் நடந்துகொள்ளும்போது நம் சந்தோஷம் பெருகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எப்படி? நம் வரம்புகளைத் தெரிந்துவைத்திருந்தால், மற்றவர்கள் நமக்கு உதவிக்கரம் நீட்டும்போது நாம் சந்தோஷப்படுவோம், அதற்காக நன்றியோடும் இருப்போம். பத்து தொழுநோயாளிகளை இயேசு குணப்படுத்தியபோது என்ன நடந்ததென்று யோசித்துப்பாருங்கள். இயேசு மட்டும் குணப்படுத்தவில்லையென்றால் அந்தக் கொடூரமான நோய் அவர்களைவிட்டுப் போயிருக்காது. இதைப் புரிந்துகொண்டு, ஒருவன் மட்டும் திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி சொன்னான். அவனுக்கு மனத்தாழ்மையும் அடக்கமும் இருந்ததால்தான் தனக்குக் கிடைத்த உதவிக்காக நன்றியோடு இருந்தான், கடவுளையும் மகிமைப்படுத்தினான்.—லூக். 17:11-19.

18. மற்றவர்களோடு ஒத்துப்போவதற்கு மனத்தாழ்மையும் அடக்கமும் எப்படி உதவும்? (ரோமர் 12:10)

18 மனத்தாழ்மையாகவும் அடக்கமாகவும் இருப்பவர்கள் மற்றவர்களோடு சுலபமாக ஒத்துப்போவார்கள், அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் கிடைப்பதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், மற்றவர்களிடமும் நல்ல குணங்கள் இருக்கின்றன என்பதை அவர்கள் ஒத்துக்கொள்வார்கள். அவர்கள்மேல் நம்பிக்கையும் வைப்பார்கள். மற்றவர்களுக்கு ஏதாவது நியமிப்பு கிடைத்து அதை அவர்கள் நன்றாகச் செய்யும்போது, அதைப் பார்த்து சந்தோஷப்படுவார்கள், அவர்களைப் பாராட்டுவார்கள், அவர்களை மதிப்பார்கள்.ரோமர் 12:10-ஐ வாசியுங்கள்.

19. நாம் ஏன் தலைக்கனத்தைத் தவிர்க்க வேண்டும்?

19 தலைக்கனம் பிடித்தவர்கள் அவ்வளவு சீக்கிரம் மற்றவர்களைப் பாராட்ட மாட்டார்கள். தங்களுக்கே எல்லா பாராட்டும் வந்துசேர வேண்டுமென்று நினைப்பார்கள். பெரும்பாலும், தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். எல்லாவற்றிலும் தாங்கள்தான் முதலிடத்தில் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். மற்றவர்களுக்குப் பயிற்சியும் கொடுக்க மாட்டார்கள், வேலைகளையும் பிரித்துக் கொடுக்க மாட்டார்கள். ‘இந்த வேலைய நான் செஞ்சாதான் சரியா இருக்கும்’ என்று நினைப்பார்கள். தலைக்கனம் பிடித்தவர்களிடம் லட்சிய வெறியும் பொறாமையும் ஒட்டிக்கொண்டிருக்கும். (கலா. 5:26) இப்படிப்பட்டவர்களுக்கு நிலையான நட்பு கிடைப்பது ரொம்பக் கஷ்டம். ஒருவேளை நம்மிடம் தலைக்கனம் இருப்பது தெரியவந்தால், நம்மையே ‘மாற்றிக்கொள்வதற்கு’ யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபம் செய்ய வேண்டும். அப்போதுதான், இந்தக் கெட்ட குணம் நம் மனதில் ஆழமாக வேர்விடாதபடி நம்மால் பார்த்துக்கொள்ள முடியும்.—ரோ. 12:2.

20. நாம் ஏன் மனத்தாழ்மையாகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும்?

20 யெகோவா நமக்கு முன்மாதிரி வைத்திருப்பதற்காக நாம் அவருக்கு எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! யெகோவா தன்னுடைய ஊழியர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தில் அவருடைய மனத்தாழ்மை பளிச்சென்று தெரிகிறது. அவரைப் போலவே நாமும் நடந்துகொள்ள வேண்டும். அதோடு, கடவுளோடு அடக்கமாக நடந்த நிறைய பேருடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. அவர்களைப் போல் நாமும் வாழ வேண்டும். யெகோவாவுக்குச் சேரவேண்டிய மகிமையையும் மாண்பையும் எப்போதும் அவருக்கே கொடுக்க வேண்டும். (வெளி. 4:11) இப்படியெல்லாம் செய்தால், நம் பரலோகத் தந்தையின் வழியில் நம்மால் நடக்க முடியும். மனத்தாழ்மையாகவும் அடக்கமாகவும் இருப்பவர்களை அவர் நெஞ்சார நேசிக்கிறார்!

பாட்டு 125 தேவ அமைப்புக்குப் பற்றுமாறாமல் கீழ்ப்படிவோம்

^ பாரா. 5 மனத்தாழ்மையுள்ள ஒருவர் இரக்கத்தையும் கரிசனையையும் காட்டுவார். அப்படியென்றால், யெகோவா மனத்தாழ்மையானவர் என்று சொல்வது ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது. மனத்தாழ்மையாக இருப்பது எப்படியென்று யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். அடக்கம் என்கிற குணத்தைப் பற்றி சவுல் ராஜாவிடமிருந்தும் தானியேல் தீர்க்கதரிசியிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.

^ பாரா. 58 படவிளக்கம்: சபையின் ஊழியப் பகுதி சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்வதற்கு ஒரு மூப்பர் ஓர் இளம் சகோதரருக்கு நேரமெடுத்து பயிற்சி கொடுக்கிறார். அந்த இளம் சகோதரர் செய்யும் ஒவ்வொரு வேலையையும் அந்த மூப்பர் கண்காணித்துக்கொண்டே இருப்பதில்லை. அந்த வேலையை அவராகவே செய்வதற்கு அந்த மூப்பர் விட்டுவிடுகிறார்.

^ பாரா. 62 படவிளக்கம்: சர்ச்சில் நடக்கும் ஒரு கல்யாணத்துக்குப் போகலாமா என்று ஒரு சகோதரி மூப்பரிடம் கேட்கிறார். தன்னுடைய சொந்தக் கருத்தைச் சொல்வதற்குப் பதிலாக பைபிளிலிருக்கும் நியமங்களை அந்த மூப்பர் எடுத்துக்காட்டுகிறார்.