Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 34

யெகோவாவின் சபையில் நீங்கள் மதிப்புள்ளவர்கள்!

யெகோவாவின் சபையில் நீங்கள் மதிப்புள்ளவர்கள்!

“உடல் ஒன்று, ஆனால் அதற்குப் பல உறுப்புகள் இருக்கின்றன. இப்படி, உடலில் பல உறுப்புகள் இருந்தாலும் அவை எல்லாமே ஒரே உடலாக இருக்கின்றன; அதுபோலத்தான் கிறிஸ்துவின் உடலும் இருக்கிறது.”—1 கொ. 12:12.

பாட்டு 53 ஐக்கியமாய் உழைப்போம்

இந்தக் கட்டுரையில்... *

1. நமக்கு என்ன பாக்கியம் கிடைத்திருக்கிறது?

யெகோவாவுடைய சபையின் பாகமாக இருப்பது நமக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம்! சமாதானமான, சந்தோஷமான மக்கள் நிறைந்த ஆன்மீகப் பூஞ்சோலையில் நாம் இருக்கிறோம். அப்படியென்றால், யெகோவாவின் சபையில் உங்களுடைய பங்கு என்ன?

2. எந்த உவமையை அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய கடிதங்களில் பயன்படுத்தியிருக்கிறார்?

2 சபையில் நமக்கு இருக்கிற பங்கைப் புரிந்துகொள்வதற்கு, அப்போஸ்தலன் பவுல் பயன்படுத்திய ஒரு உவமை நமக்கு உதவும். கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு அவர் எழுதிய நிறைய கடிதங்களில் இந்த உவமையைப் பயன்படுத்தியிருக்கிறார். கிறிஸ்தவ சபையை மனித உடலுக்கு அவர் ஒப்பிட்டார். சபையில் இருக்கிற தனித்தனி நபர்களை உடலின் உறுப்புகளுக்கு ஒப்பிட்டார்.—ரோ. 12:4-8; 1 கொ. 12:12-27; எபே. 4:16.

3. என்ன மூன்று பாடங்களை இந்தக் கட்டுரையில் கற்றுக்கொள்ளப்போகிறோம்?

3 சபையில் இருக்கிற நாம் ஒவ்வொருவரும் மதிப்புள்ளவர்கள்! நம் எல்லாராலும் சபையைப் பலப்படுத்த முடியும். இனம், குலம், பொருளாதாரம், சமூக அந்தஸ்து, கலாச்சாரம் அல்லது கல்வி என எந்த வித்தியாசமும் இல்லாமல் நாம் எல்லாருமே சபையில் மதிப்புள்ளவர்கள்தான்! பவுலின் உவமையிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். முதலில், நாம் ஒவ்வொருவரும் சபையில் மதிப்புள்ளவர்கள் என்று ஏன் சொல்லலாம் என்பதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். இரண்டாவதாக, சபையில் நமக்கு என்ன பங்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்குக் கஷ்டப்படும்போது நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். மூன்றாவதாக, சபையில் நமக்கு இருக்கிற பங்கைச் செய்வதில் நாம் ஏன் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

யெகோவாவின் சபையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது

4. ரோமர் 12:4, 5-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

4 யெகோவாவின் குடும்பத்தில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கியமான இடம் இருக்கிறது. இதுதான் பவுலின் உவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற முதல் பாடம். அதைப் பற்றி பவுல் இப்படிச் சொன்னார்: “ஒரே உடலில் பல உறுப்புகள் இருந்தாலும் எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை; அதேபோல், நாமும் பலராக இருந்தாலும் கிறிஸ்துவோடு ஒன்றுபட்டு ஒரே உடலாக இருக்கிறோம். ஆனால், ஒன்றையொன்று சார்ந்திருக்கிற தனித்தனி உறுப்புகளாக இருக்கிறோம்.” (ரோ. 12:4, 5) பவுல் என்ன சொல்லவருகிறார்? நம் ஒவ்வொருவருக்கும் சபையில் வித்தியாசமான பங்கு இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் மதிப்புள்ளவர்கள்தான்!

சபையில் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பங்கு இருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள் (பாராக்கள் 5-12) *

5. சபைகளுக்கு யெகோவா என்ன ‘பரிசுகளை’ கொடுத்திருக்கிறார்?

5 சபையில் நம் எல்லாருக்குமே ஒரு பங்கு இருக்கிறது. முதலில், நம்மை முன்நின்று வழிநடத்துகிறவர்களைப் பற்றிப் பார்க்கலாம். (1 தெ. 5:12; எபி. 13:17) கிறிஸ்துவின் மூலம் தன்னுடைய சபைக்கு “மனிதர்களைப் பரிசுகளாக” யெகோவா கொடுத்திருக்கிறார். (எபே. 4:8) இந்த ‘பரிசுகளில்’ ஆளும் குழு அங்கத்தினர்கள், ஆளும் குழுவின் உதவியாளர்கள், கிளை அலுவலகக் குழு அங்கத்தினர்கள், வட்டாரக் கண்காணிகள், அமைப்பு நடத்துகிற பள்ளிகளின் போதனையாளர்கள், சபை மூப்பர்கள், உதவி ஊழியர்கள் ஆகியவர்கள் அடங்குவார்கள். யெகோவாவின் விலைமதிப்புள்ள ஆடுகளைக் கவனித்துக்கொள்வதற்கும் சபைகளைப் பலப்படுத்துவதற்கும் கடவுளுடைய சக்தியின் மூலம் இந்தச் சகோதரர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.—1 பே. 5:2, 3.

6. ஒன்று தெசலோனிக்கேயர் 2:6-8 சொல்வதுபோல, கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்பட்ட சகோதரர்கள் எதற்காகக் கடினமாக உழைக்கிறார்கள்?

6 வெவ்வேறு பொறுப்புகளைக் கவனித்துக்கொள்வதற்காக, கடவுளுடைய சக்தியால் சகோதரர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நம் முழு உடலும் செயல்படுவதற்கு, கைகளையும் கால்களையும் போலவே உடலில் இருக்கிற மற்ற உறுப்புகளும் உதவியாக இருக்கின்றன. அதேபோல், கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்படுகிற சகோதரர்கள் முழு சபையும் செயல்படுவதற்குக் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் தங்களுக்குப் புகழ் சேர்ப்பதில்லை. அதற்குப் பதிலாக, சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் கடினமாக உழைக்கிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 2:6-8-ஐ வாசியுங்கள்.) சுயநலமில்லாத, தகுதிபெற்ற இந்தச் சகோதரர்களைக் கொடுத்ததற்காக யெகோவாவுக்கு ரொம்ப நன்றி!

7. முழுநேர ஊழியர்கள் என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்?

7 சபையில் இருக்கிற சிலர் மிஷனரிகளாக, விசேஷ பயனியர்களாக அல்லது ஒழுங்கான பயனியர்களாக நியமிக்கப்படலாம். உலகம் முழுவதும் இருக்கிற இதுபோன்ற அருமையான சகோதர சகோதரிகள், பிரசங்கித்து சீஷராக்கும் வேலையை முழுநேரமாகச் செய்கிறார்கள். இதன் மூலம் நிறைய பேர் கிறிஸ்து இயேசுவின் சீஷராவதற்கு உதவியிருக்கிறார்கள். இவர்களிடம் சொத்துசுகம் இல்லையென்றாலும், இவர்களுக்கு யெகோவா ஆசீர்வாதத்தை அள்ளிக்கொடுத்திருக்கிறார். (மாற். 10:29, 30) இந்த அருமையான சகோதர சகோதரிகளை நாம் ரொம்ப நேசிக்கிறோம். நம்முடைய சபைகளில் அவர்கள் இருப்பதை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறோம்.

8. நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிற ஒவ்வொரு பிரஸ்தாபியும் யெகோவாவின் பார்வையில் முக்கியமானவர் என்று ஏன் சொல்கிறோம்?

8 நியமிக்கப்பட்ட சகோதரர்களும் முழுநேர ஊழியர்களும்தான் சபையில் முக்கியமானவர்களா? அப்படியில்லை. நல்ல செய்தியைச் சொல்கிற ஒவ்வொரு பிரஸ்தாபியும் கடவுளுக்கும் சரி, சபைக்கும் சரி முக்கியமானவர்தான்! (ரோ. 10:15; 1 கொ. 3:6-9) ஏன் அப்படிச் சொல்கிறோம்? மற்றவர்களை இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக ஆக்குவதுதான் சபையின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று. (மத். 28:19, 20; 1 தீ. 2:4) அதனால், சபையில் இருக்கிற எல்லாருமே, அவர்கள் ஞானஸ்நானம் எடுத்த பிரஸ்தாபிகளாக இருந்தாலும் சரி, ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபிகளாக இருந்தாலும் சரி, இந்த வேலைக்கு முதலிடம் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்.—மத். 24:14.

9. நம் சபைகளில் இருக்கிற சகோதரிகளை நாம் ஏன் உயர்வாக மதிக்கிறோம்?

9 சபையில் சகோதரிகளுக்கு முக்கியமான இடம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு யெகோவா மதிப்பு கொடுக்கிறார். மனைவிகளாக, அம்மாக்களாக, கணவனை இழந்த சகோதரிகளாக, கல்யாணம் ஆகாத சகோதரிகளாக தனக்கு உண்மையாகச் சேவை செய்கிற இவர்கள் எல்லாரையும் யெகோவா உயர்வாக மதிக்கிறார். யெகோவாவின் மனதைச் சந்தோஷப்படுத்திய பெண்களைப் பற்றி பைபிள் நிறைய தடவை பேசுகிறது. இவர்கள் எல்லாரும் ஞானத்தையும், விசுவாசத்தையும், ஆர்வத்துடிப்பையும், தைரியத்தையும், தாராள குணத்தையும் காட்டினார்கள், நல்ல செயல்களைச் செய்தார்கள். இப்படி, மற்றவர்களுக்கு முன்மாதிரிகளாக இருந்ததற்காக பைபிள் இவர்களைப் பாராட்டிப் பேசுகிறது. (லூக். 8:2, 3; அப். 16:14, 15; ரோ. 16:3, 6; பிலி. 4:3; எபி. 11:11, 31, 35) இதுபோன்ற தங்கமான குணங்களைக் காட்டுகிற சகோதரிகள் இன்றும் நம் சபைகளில் இருப்பதற்காக யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்!

10. வயதான சகோதர சகோதரிகளை நாம் ஏன் உயர்வாக மதிக்கிறோம்?

10 வயதான நிறைய பேர் நம் சபைகளில் இருப்பதும் ஓர் ஆசீர்வாதம்தான்! சில சபைகளில் இருக்கிற வயதான சகோதர சகோதரிகள் வாழ்க்கை முழுவதும் யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்திருக்கிறார்கள். வயதான வேறுசிலர், சமீபத்தில்தான் சத்தியத்துக்கு வந்திருப்பார்கள். எது எப்படியிருந்தாலும், இவர்கள் எல்லாருக்கும் வயதாகிக்கொண்டே போவதால், உடல்நலப் பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கலாம். அதனால் சபையிலும் சரி, ஊழியத்திலும் சரி, இவர்களால் அதிகமாக எதுவும் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனாலும், தங்களால் முடிந்தளவுக்கு ஊழியம் செய்கிறார்கள். மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் பயிற்சி கொடுப்பதற்கும் தங்களுடைய சக்தியையெல்லாம் பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் நிறைய பிரயோஜனமடைகிறோம். யெகோவாவுடைய பார்வையிலும் நம்முடைய பார்வையிலும் அவர்கள் உண்மையிலேயே அழகானவர்கள்தான்!—நீதி. 16:31.

11-12. உங்கள் சபையில் இருக்கிற இளம் பிள்ளைகளால் நீங்கள் எப்படி உற்சாகம் அடைந்திருக்கிறீர்கள்?

11 இளம் பிள்ளைகளைப் பற்றி இப்போது யோசித்துப்பார்க்கலாம். பிசாசாகிய சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற இந்த உலகத்தில்தான் அவர்கள் வளருகிறார்கள். அதோடு, அவனுடைய மோசமான கருத்துகளால் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். (1 யோ. 5:19) இந்த மாதிரியான சூழ்நிலையில் அவர்கள் வளருவதால், நிறைய சவால்களைச் சந்திக்கிறார்கள். இருந்தாலும், சபைகளில் அவர்கள் பதில் சொல்கிறார்கள், ஊழியத்தைச் சுறுசுறுப்பாகச் செய்கிறார்கள், தங்களுடைய நம்பிக்கையைப் பற்றித் தைரியமாகப் பேசுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது! அதனால், இளம் பிள்ளைகளும் கிறிஸ்தவ சபையில் முக்கியமானவர்கள்தான்!—சங். 8:2.

12 ஆனாலும், தாங்களும் சபையில் முக்கியமானவர்கள்தான் என்பதை நம்புவது சகோதர சகோதரிகள் சிலருக்குக் கஷ்டமாக இருக்கிறது. அப்படியென்றால், இந்த மாதிரியான எண்ணத்தைக் கைவிடுவதற்கு எது உதவும்? அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

சபையில் நீங்கள் முக்கியமானவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்

13-14. சபையில் தாங்கள் முக்கியமானவர்கள் இல்லை என்று சிலர் ஏன் நினைக்கலாம்?

13 இன்று நிறைய பேர், தங்களால் சபைக்குப் பெரிதாக ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்று நினைக்கிறார்கள். அதைப் பற்றி பவுல் இப்படி எழுதினார்: “கால், ‘நான் கை அல்ல, அதனால் நான் உடலின் பாகமல்ல’ என்று சொன்னால், அது உடலின் பாகமல்ல என்றாகிவிடுமா? காது, ‘நான் கண் அல்ல, அதனால் நான் உடலின் பாகமல்ல’ என்று சொன்னால், அது உடலின் பாகமல்ல என்றாகிவிடுமா?” (1 கொ. 12:15, 16) அப்படியென்றால், பவுல் கற்றுக்கொடுக்கிற இரண்டாவது பாடம் என்ன?

14 சபையில் இருக்கிற மற்றவர்களோடு உங்களை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால், உங்களை நீங்களே தாழ்வாக நினைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுதான், பவுலின் உவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற இரண்டாவது பாடம். சபையில் இருக்கிற சிலருக்கு நன்றாகக் கற்றுக்கொடுக்கிற திறமை இருக்கலாம். சிலருக்கு எல்லாவற்றையும் நன்றாக ஒழுங்கமைக்கிற திறமை இருக்கலாம். சிலர், மற்றவர்களை ஆறுதல்படுத்துவதிலும் பலப்படுத்துவதிலும் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்து, ‘அவங்க அளவுக்கு எனக்கு திறமை இல்ல’ என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். அப்படியென்றால், நீங்கள் மனத்தாழ்மையாக, அடக்கமாக இருப்பதை இது காட்டுகிறது. (பிலி. 2:3) ஆனால், நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஏனென்றால், ரொம்பத் திறமைசாலியாக இருப்பவர்களோடு எப்போது பார்த்தாலும் உங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தால், நீங்கள் சோர்ந்துபோய்விடுவீர்கள். பவுல் சொன்னதுபோல், சபையில் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று நினைக்கும் அளவுக்குக்கூட நீங்கள் போய்விடலாம். இந்த மாதிரியான எண்ணங்களைக் கைவிடுவதற்கு உங்களுக்கு எது உதவும்?

15. ஒன்று கொரிந்தியர் 12:4-11–ன்படி, நமக்கு இருக்கிற திறமைகளைப் பற்றி நாம் என்ன புரிந்துவைத்திருக்க வேண்டும்?

15 இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்கள் சிலருக்குத் தன்னுடைய சக்தியின் மூலம் அற்புதமான சில வரங்களை யெகோவா கொடுத்திருந்தார். ஆனால், எல்லாருக்கும் ஒரேமாதிரியான வரங்களைக் கொடுக்கவில்லை. (1 கொரிந்தியர் 12:4-11-ஐ வாசியுங்கள்.) ஒவ்வொருவருக்கும் யெகோவா ஒவ்வொரு விதமான வரங்களைக் கொடுத்திருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரையும் மதிப்புள்ளவர்களாக நினைத்தார். இன்று நமக்கு அப்படிப்பட்ட அற்புத வரங்கள் கிடைப்பதில்லை. ஆனாலும், அதன் நியமங்கள் இன்றைக்கும் நமக்குப் பொருந்துகின்றன. அதாவது, நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் இருந்தாலும் நம் ஒவ்வொருவரையும் மதிப்புள்ளவர்களாக யெகோவா நினைக்கிறார்.

16. அப்போஸ்தலன் பவுல் சொன்ன எந்த அறிவுரையின்படி நாம் நடந்துகொள்ள வேண்டும்?

16 மற்ற சகோதர சகோதரிகளோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்காமல், கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த இந்த அறிவுரையின்படி நாம் நடந்துகொள்ள வேண்டும்: “ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களை ஆராய்ந்து பார்க்கட்டும். அப்போது, அவன் மற்றவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படாமல் தன்னைப் பார்த்தே சந்தோஷப்படுவான்.”—கலா. 6:4.

17. பவுல் கொடுத்த அறிவுரையின்படி நடந்தால் நாம் எப்படிப் பிரயோஜனமடைவோம்?

17 அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையின்படி நம்மை நாமே சுயபரிசோதனை செய்துபார்த்தால், நமக்கென்று தனிப்பட்ட திறமைகள் இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, மேடையிலிருந்து நன்றாகப் பேச்சுக் கொடுக்கும் திறமை ஒரு மூப்பருக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், சீஷராக்கும் வேலையை நன்றாகச் செய்யும் திறமை அவருக்கு இருக்கும். ஒருவேளை, மற்ற மூப்பர்களைப் போல எல்லாவற்றையும் நன்றாக ஒழுங்கமைக்கும் திறமை அவருக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அன்பான, கரிசனையான மூப்பர் என்ற பெயரை அவர் எடுத்திருப்பார். ஆலோசனைக்காக சகோதர சகோதரிகள் அவரிடம் தயங்காமல் போகும் விதத்தில் அவர் நடந்துகொள்ளலாம். அல்லது, உபசரிப்பதில் அவர் பேர்போனவராக இருக்கலாம். (எபி. 13:2, 16) நம்மிடம் இருக்கிற திறமைகளைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துவைத்திருந்தால், சபைக்கு நாம் பிரயோஜனமாக இருக்க முடியும் என்பதை நினைத்து சந்தோஷப்படுவோம். அதுமட்டுமல்ல, நம்மிடம் இல்லாத திறமைகள் வேறு சகோதர சகோதரிகளுக்கு இருப்பதைப் பார்த்து பொறாமைப்படவும் மாட்டோம்.

18. நம்முடைய திறமைகளை நாம் எப்படி மெருகேற்றலாம்?

18 சபையில் நாம் யாராக இருந்தாலும் சரி, நம்முடைய சேவையை நன்றாகச் செய்ய வேண்டுமென்ற ஆசையை நாம் எல்லாருமே வளர்த்துக்கொள்ள வேண்டும். அதோடு, நம்முடைய திறமைகளையும் தொடர்ந்து மெருகேற்ற வேண்டும். இப்படிச் செய்வதற்கு யெகோவா தன்னுடைய அமைப்பு மூலம் நமக்கு அருமையாகப் பயிற்சி கொடுக்கிறார். உதாரணத்துக்கு, ஊழியத்தை எப்படித் திறமையாகச் செய்யலாம் என்பதற்கான பயிற்சி வார நாட்களில் நடக்கிற கூட்டத்தில் கிடைக்கிறது. அந்தப் பயிற்சியை நீங்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்களா?

19. ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்ள வேண்டுமென்ற குறிக்கோளை நீங்கள் எப்படி எட்டிப்பிடிக்கலாம்?

19 ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியின் மூலமாகவும் அமைப்பு நமக்கு அருமையான பயிற்சி கொடுக்கிறது. இந்தப் பள்ளியில் யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்? முழுநேர சேவை செய்கிற 23-லிருந்து 65 வயதுக்குள் இருக்கிற சகோதர சகோதரிகள் எல்லாருமே கலந்துகொள்ளலாம். ‘இந்த பள்ளியில கலந்துக்கிற தகுதியெல்லாம் எனக்கு இல்ல’ என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்தப் பள்ளியில் ஏன் கலந்துகொள்ள முடியாது என்பதற்கான காரணங்களைப் பட்டியல் போடாமல், ஏன் கலந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்பதற்கான காரணங்களைப் பட்டியல் போடுங்கள். இப்படிச் செய்தால், இந்தப் பள்ளியில் கலந்துகொள்வதற்கான தகுதிகளை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். யெகோவாவுடைய உதவியும் உங்களுடைய கடின உழைப்பும் இருந்தால், எட்டாக்கனியாக நினைத்த இந்தப் பள்ளியை உங்களால் எட்டிப்பிடிக்க முடியும்.

சபையைப் பலப்படுத்த உங்கள் திறமைகளைப் பயன்படுத்துங்கள்

20. ரோமர் 12:6-8-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

20 பவுலின் உவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்றாவது பாடம் ரோமர் 12:6-8-ல் இருக்கிறது. (வாசியுங்கள்.) சபையில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான வரங்கள் இருப்பதாக, அதாவது திறமைகள் இருப்பதாக, இந்த வசனங்களிலும் பவுல் சொல்லியிருக்கிறார். ஆனால், இன்னொரு முக்கியமான விஷயத்தை இந்த வசனங்களில் வலியுறுத்துகிறார். சபையைப் பலப்படுத்துவதற்காக நம்முடைய திறமைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த விஷயம்.

21-22. ராபர்ட் மற்றும் ஃபெலிஸிடமிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

21 இப்போது சகோதரர் ராபர்ட்டின் * அனுபவத்தைப் பார்க்கலாம். வெளிநாட்டில் சேவை செய்துகொண்டிருந்த அவரை அவருடைய சொந்த நாட்டிலிருந்த பெத்தேலுக்கு நியமித்தார்கள். அவர் ஏதோ தப்பு செய்ததால் அவருடைய நியமிப்பை மாற்றவில்லை என்று சகோதரர்கள் அவருக்கு உறுதியளித்தார்கள். இருந்தாலும், அவர் என்ன நினைத்தார் என்பதை அவரே சொல்வதைக் கேளுங்கள்: “என்னோட நியமிப்ப நான் சரியா செய்யாதனாலதான் என்னை பெத்தேலுக்கு மாத்திட்டாங்கனு நினைச்சு பல மாதங்களா கவலையில மூழ்கிட்டேன். சிலசமயங்கள்ல பெத்தேலவிட்டு போயிடலாமானுகூட நினைச்சேன்.” திரும்பவும் அவருக்கு எப்படிச் சந்தோஷம் கிடைத்தது? இப்போது இருக்கிற நியமிப்பை நன்றாகச் செய்வதற்காகத்தான் முன்பிருந்த நியமிப்பில் யெகோவா நமக்குப் பயிற்சி கொடுக்கிறார் என்பதை ஒரு மூப்பர் அவருக்கு ஞாபகப்படுத்தினார். பழையதைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டு, இப்போது செய்ய வேண்டியதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்பதை ராபர்ட் புரிந்துகொண்டார்.

22 இதே மாதிரியான பிரச்சினையைச் சந்தித்த சகோதரர் ஃபெலிஸ் எபிஸ்கோப்போவின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். அவரும் அவருடைய மனைவியும் 1956-ல் நடந்த கிலியட் பள்ளியில் பட்டம் பெற்ற பின் பொலிவியாவில் வட்டாரச் சேவை செய்வதற்காக நியமிக்கப்பட்டார்கள். ஆனால், 1964-ல் அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. “நாங்க ரொம்ப நேசிச்ச நியமிப்ப விட்டுட்டு வர்றது கஷ்டமா இருந்துச்சு. கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு நான் அத நினைச்சு கவலப்பட்டுட்டே இருந்தேன். ஆனா, யெகோவாவோட உதவியால என்னோட எண்ணத்த மாத்திக்கிட்டேன். ஒரு அப்பாவா என்னோட பொறுப்ப நான் நல்லா செய்யணுங்கிறத பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன்” என்று ஃபெலிஸ் சொன்னார். ராபர்ட் மாதிரியோ ஃபெலிஸ் மாதிரியோ நீங்கள் நினைக்கிறீர்களா? முன்பு செய்த நியமிப்புகளை இப்போது செய்ய முடியவில்லையே என்று நினைத்து கவலைப்படுகிறீர்களா? அப்படியென்றால், பழையதை மறந்துவிட்டு யெகோவாவுக்காகவும் சகோதர சகோதரிகளுக்காகவும் இப்போது உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி யோசித்தால் உங்களுக்குச் சந்தோஷம் கிடைக்கும். சுறுசுறுப்பாக இருங்கள். மற்றவர்களுக்கு உதவுவதற்காக உங்கள் திறமைகளைப் பயன்படுத்துங்கள். இப்படிச் செய்தால், உங்களால் சபையைப் பலப்படுத்த முடியும். அது உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும்.

23. நாம் எதைப் பற்றி யோசித்துப்பார்க்க வேண்டும்? அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

23 நம் ஒவ்வொருவரையும் யெகோவா மதிப்புள்ளவர்களாக நினைக்கிறார். நாம் எல்லாருமே அவருடைய குடும்பத்தில் ஒருவராக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். நம் சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துவதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதை யோசித்து அதைச் செய்வதற்குக் கடினமாக உழைத்தால் நாமும் சபையில் முக்கியமானவர்கள்தான் என்பதைப் புரிந்துகொள்வோம். ஆனால், இப்போது ஒரு கேள்வி: சபையில் இருக்கிற மற்றவர்களைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? அவர்களுக்கு நாம் எப்படி மதிப்பு மரியாதை காட்டலாம்? இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாட்டு 107 யெகோவாவின் மா மலைக்கு வருக!

^ பாரா. 5 யெகோவாவின் பார்வையில் மதிப்புள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று நாம் எல்லாருமே ஆசைப்படுகிறோம். ஆனால், அவருக்குப் பிரயோஜனமுள்ளவர்களாக இருக்க முடியுமா என்ற எண்ணம் சிலசமயங்களில் நமக்கு வரலாம். யெகோவாவின் சபையில் இருக்கிற நாம் ஒவ்வொருவரும் மதிப்புள்ளவர்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும்.

^ பாரா. 21 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 62 படங்களின் விளக்கம்: கூட்டத்துக்கு முன்பும், கூட்டத்தின்போதும், அதற்குப் பின்பும் நடக்கிற விஷயங்களை இந்த மூன்று படங்கள் காட்டுகின்றன. படம் 1: புதிதாக கூட்டத்துக்கு வந்திருக்கிற ஒருவரை ஒரு மூப்பர் அன்பாக வரவேற்கிறார். ஓர் இளம் சகோதரர் மைக்கை எடுத்துவைக்கிறார். ஒரு சகோதரி, வயதான இன்னொரு சகோதரியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். படம் 2: இளைஞர்களும் வயதானவர்களும் காவற்கோபுர படிப்பில் பதில் சொல்வதற்குக் கைகளைத் தூக்கிக்கொண்டிருக்கிறார்கள். படம் 3: ஒரு கணவனும் மனைவியும் ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். நன்கொடைப் பெட்டியில் நன்கொடை போடுவதற்கு ஓர் அம்மா தன்னுடைய பிள்ளைக்கு உதவி செய்கிறார். ஒரு சகோதரர், பிரசுர இலாகாவைப் பார்த்துக்கொள்கிறார். இன்னொரு சகோதரர், வயதான ஒரு சகோதரியை உற்சாகப்படுத்துகிறார்.