Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

செய்யவேண்டிய கடமையைத்தான் செய்தேன்

செய்யவேண்டிய கடமையைத்தான் செய்தேன்

டொனால்ட் ரிட்லி 30 வருஷத்துக்கும் மேல் யெகோவாவின் சாட்சிகளின் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடினார். இரத்தம் ஏற்றிக்கொள்ள மறுப்பதற்கு நோயாளிகளுக்கு இருக்கும் உரிமையை மற்றவர்களுக்குப் புரிய வைப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். அமெரிக்காவில் இருக்கும் உயர் நீதிமன்றங்களில் நடந்த நிறைய வழக்குகளில் யெகோவாவின் சாட்சிகள் ஜெயிப்பதற்கு இவர் உதவினார். இவருடைய நண்பர்கள் இவரை டான் என்று கூப்பிடுவார்கள். இவர் கடினமாக உழைப்பவர், மனத்தாழ்மையானவர், தியாகங்கள் செய்வதற்கு தயாராக இருப்பவர்.

2019-ல் நரம்பியல் சம்பந்தப்பட்ட அபூர்வமான ஒரு நோய் இவரைத் தாக்கியது. அது குணப்படுத்த முடியாத ஒரு நோய்! அந்த நோய் தீவிரமாகி ஆகஸ்ட் 16, 2019-ல் டொனால்ட் இறந்துவிட்டார்.

1954-ஆம் வருஷம், அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் இருக்கிற செ. பாலில் நான் பிறந்தேன். நாங்கள் கத்தோலிக்கர்கள், எங்கள் குடும்பம் நடுத்தரமான ஒரு குடும்பம். எங்கள் அப்பா அம்மாவுக்கு நாங்கள் மொத்தம் 5 பேர். நான்தான் இரண்டாவது பிள்ளை. கத்தோலிக்க சர்ச்சைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளியில் நான் படித்தேன். சர்ச் ஆராதனைகளில் பாதிரியாருக்கு உதவியாளாக இருந்தேன். இருந்தாலும், பைபிளைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. எல்லாவற்றையும் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்பினாலும், சர்ச் மேலிருந்த நம்பிக்கை எனக்கு போய்விட்டது.

சத்தியத்தைக் கற்றுக்கொண்டேன்

வில்லியம் மிஷல் சட்டக் கல்லூரியில் முதல் வருஷம் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு தம்பதி என் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள்! அவர்கள் வந்த சமயத்தில் நான் துணி துவைத்துக்கொண்டிருந்ததால், பிறகு வந்து என்னைச் சந்திப்பதாகக் கரிசனையோடு சொன்னார்கள். அப்படி வந்தபோது, “நல்லவங்களுக்கு ஏன் நல்லதே நடக்க மாட்டேங்குது? உண்மையிலேயே சந்தோஷமா இருக்கணும்னா என்ன செய்யணும்?” என்று அவர்களிடம் கேட்டேன். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தையும், கண்ணைக் கவரும் பச்சை நிறத்தில் இருந்த புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளையும் அவர்கள் கொடுத்தார்கள். பைபிள் படிப்புக்கும் நான் ஒத்துக்கொண்டேன். பைபிள் படிப்பு ஒருவிதத்தில் என் கண்ணைத் திறந்தது என்றே சொல்லலாம். கடவுளுடைய அரசாங்கம் மனிதர்களை ஆட்சி செய்யப்போகிறது என்பதைத் தெரிந்துகொண்டது எனக்கு ரொம்பச் சந்தோஷத்தைக் கொடுத்தது. மனுஷனுடைய அரசாங்கம் படுதோல்வி அடைந்திருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. வலி, வேதனை, அநீதி, துயரம் ஆகியவற்றைத்தான் மனிதனுடைய அரசாங்கம் கொடுத்திருக்கிறது.

1982-ன் ஆரம்பத்தில் யெகோவாவுக்கு என்னை அர்ப்பணித்தேன். அந்த வருஷத்திலேயே செ. பாலில் இருந்த ஒரு பெரிய சமூக நலக்கூடத்தில், “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியம்” என்ற மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் ஞானஸ்நானமும் எடுத்தேன். வக்கீல் ஆவதற்கு எழுதவேண்டிய ஒரு பரீட்சைக்காக அடுத்த வாரமே அந்த சமூக நலக்கூடத்துக்கு மறுபடியும் போனேன். அக்டோபர் ஆரம்பத்தில் அந்தப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதால், வக்கீல் தொழிலை ஆரம்பிக்க தகுதி பெற்றேன்.

“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியம்” என்ற அந்த மாநாட்டில் புருக்லின் பெத்தேலில் சேவை செய்த மைக் ரிச்சர்ட்சனை சந்தித்தேன். தலைமை அலுவலகத்தில் சட்ட இலாகா ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பற்றி அவர் விளக்கினார். அந்தச் சமயத்தில் அப்போஸ்தலர் 8:36-ல் இருக்கும் எத்தியோப்பிய அதிகாரியின் வார்த்தைகள்தான் என்னுடைய ஞாபகத்துக்கு வந்தன. ‘சட்ட இலாகாவில் வேலை செய்வதற்கு இனி எனக்கு என்ன தடை?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். அதனால், பெத்தேல் சேவைக்கு விண்ணப்பித்தேன்.

நான் யெகோவாவின் சாட்சியாக ஆனது என்னுடைய அப்பா அம்மாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. பெத்தேலில் வேலை செய்வதால் ஒரு வக்கீலாக எனக்கு என்ன இலாபம் கிடைக்கப்போகிறது என்று என்னுடைய அப்பா கேட்டார். நான் வாலண்டியராக சேவை செய்யப்போவதாக அவரிடம் சொன்னேன். உதவித் தொகையாக மாதத்துக்கு 75 டாலர் கிடைக்குமென்றும் சொன்னேன். அந்தச் சமயத்தில் பெத்தேல் ஊழியர்களுக்கு கிடைத்துக்கொண்டிருந்த மாதத் தொகை அதுதான்.

நீதிமன்றத்தில் வேலை செய்வதாக நான் ஏற்கெனவே ஒத்துக்கொண்டிருந்ததால், புருக்லின் பெத்தேலுக்கு 1984-ல்தான் போக முடிந்தது. சட்ட இலாகாவில் நான் நியமிக்கப்பட்டேன். நீதிமன்றத்தில் கிடைத்த அனுபவம் எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது.

ஸ்டேன்லி தியேட்டர் புதுப்பிக்கப்படுகிறது

ஸ்டேன்லி தியேட்டரை நாம் வாங்கியபோது

நவம்பர் 1983-ல், ஜெர்ஸி நகரத்தில் இருக்கிற ஸ்டேன்லி தியேட்டரை அமைப்பு வாங்கியது. இந்த நகரம் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் இருக்கிறது. அந்தக் கட்டிடத்தில் இருந்த மின் இணைப்பு வேலைகளையும் பிளம்பிங் வேலைகளையும் புதுப்பிப்பதற்கு உள்ளூர் அதிகாரிகளிடம் சகோதரர்கள் அனுமதி கேட்டார்கள். அப்படிக் கேட்டபோது அந்தக் கட்டிடத்தை யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டு மன்றமாக பயன்படுத்தப்போவதாக அவர்களிடம் விளக்கினார்கள். ஆனால், அதிகாரிகள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், அந்த நகரத்தின் சட்டத்தின்படி, மத வழிபாடு சம்பந்தப்பட்ட கட்டிடங்கள் மக்கள் குடியிருக்கிற பகுதியில்தான் இருக்க வேண்டும். ஆனால் ஸ்டேன்லி தியேட்டர் வியாபாரப் பகுதியில் இருந்ததால், அனுமதி கிடைக்கவில்லை. மறுபடியும் சகோதரர்கள் அந்த அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார்கள். அப்போதும் அந்த அதிகாரிகள் ஒத்துக்கொள்ளவில்லை.

நான் பெத்தேலுக்குப் போன முதல் வாரம்! அப்போது, நமக்கு அனுமதி கொடுக்க மறுத்ததை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் நம்முடைய அமைப்பு ஒரு வழக்கு போட்டது. மினசோட்டா மாகாணத்தின் செ. பால் நகரத்தில் இருக்கிற மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு வருஷங்கள் வேலை செய்த பிறகு பெத்தேலுக்கு வந்திருந்ததால், இந்த மாதிரியான நிறைய வழக்குகளைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. திரைப்படங்கள், இசை நிகழ்ச்சிகள் போன்ற நிறைய பொது நிகழ்ச்சிகள் ஸ்டேன்லி தியேட்டரில் நடந்திருக்கும்போது, மத நிகழ்ச்சிகள் நடத்துவது மட்டும் எப்படி சட்ட விரோதம் ஆகுமென்று நம்முடைய வழக்கறிஞர்களில் ஒருவர் வாதாடினார். அந்த நீதிமன்றம் நம்முடைய வாதத்தை ஏற்றுக்கொண்டு, நம்முடைய மத சுதந்திரத்துக்கு எதிராக ஜெர்ஸி நகர அதிகாரிகள் நடந்துகொண்டதாக தீர்ப்பு கொடுத்தது. அதோடு, நமக்குத் தேவையான எல்லா அனுமதியையும் கொடுக்கும்படி கட்டளை போட்டது. சட்டத்தைப் பயன்படுத்தி தன்னுடைய வேலை தொடர்ந்து நடப்பதற்கு அமைப்பு எடுத்த முயற்சிகளை யெகோவா எப்படியெல்லாம் ஆசீர்வதித்தார் என்பதை நான் கண்ணாரப் பார்த்தேன். அதில் எனக்கும் ஒரு சிறிய பங்கு இருப்பதை நினைத்து ரொம்பச் சந்தோஷப்பட்டேன்.

அந்தத் தியேட்டரைப் புதுப்பிக்கும் வேலையை பிரமாண்டமான அளவில் சகோதரர்கள் ஆரம்பித்தார்கள். அந்த வேலை ஆரம்பித்து ஒரு வருஷத்துக்குள்ளேயே, அதாவது செப்டம்பர் 8, 1985 அன்று, 79-ஆவது கிலியட் பள்ளியின் பட்டமளிப்பு விழா அந்த மாநாட்டு மன்றத்தில் நடந்தது. கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் தொடர்ந்து முன்னேறுவதில் எனக்கும் ஒரு பங்கு கிடைத்ததை நான் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். பெத்தேலுக்கு வருவதற்குமுன் நான் செய்த வக்கீல் தொழிலில் கிடைத்த சந்தோஷத்தைவிட, சட்ட இலாகாவில் வேலை செய்வது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது. இந்த மாதிரி நிறைய வழக்குகளைக் கையாளுவதற்கு யெகோவா என்னைப் பயன்படுத்தப்போகிறார் என்ற விஷயம் அப்போது எனக்குத் தெரியாது.

இரத்தமில்லாத சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு நமக்கு இருக்கும் உரிமைக்காக வாதாடினேன்

1980-களில் யெகோவாவின் சாட்சிகளுக்கு அடிக்கடி ஒரு பிரச்சினை வந்தது. அதாவது, வயதுவந்த யெகோவாவின் சாட்சிகள் இரத்தமில்லாத சிகிச்சையை ஏற்றுக்கொள்ள விரும்பியபோது, மருத்துவமனைகளும் மருத்துவர்களும் பெரும்பாலும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. கர்ப்பிணிகளாக இருந்த சகோதரிகளுக்கும் இது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. ஏனென்றால், இரத்தம் ஏற்றிக்கொள்ள மறுப்பதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என்று நீதிபதிகள் நினைத்தார்கள். அவர்கள் இரத்தம் ஏற்றிக்கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு பிறக்கப்போகிற குழந்தைகள் ஒருவேளை தாய் இல்லாத பிள்ளைகள் ஆகிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அவர்கள் நினைத்தார்கள்.

டிசம்பர் 29, 1988-ல் சகோதரி டென்னிஸ் நிக்கோலோவுக்கு ஆண்குழந்தை பிறந்ததற்குப் பிறகு, அவருக்குக் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டது. அவருடைய ஹீமோகுளோபின் அளவு 5-க்கும் கீழே போய்விட்டதால் அவருடைய உயிர் ஆபத்தில் இருந்தது. அதனால், இரத்தம் ஏற்றிக்கொள்ளச் சொல்லி அவரிடம் மருத்துவர் சொன்னார். ஆனால், அவர் அதை மறுத்துவிட்டார். அடுத்த நாள் காலையில் அவருக்கு இரத்தம் ஏற்றிக்கொள்ள அனுமதி கொடுக்கச் சொல்லி ஆஸ்பத்திரி நிர்வாகம் நீதிமன்றத்தைக் கேட்டது. எந்த விசாரணையும் செய்யாமலேயே சகோதரிக்கு இரத்தம் ஏற்றுவதற்கு நீதிபதி அனுமதி கொடுத்துவிட்டார். இந்த விஷயத்தை சகோதரியிடமோ அவருடைய கணவரிடமோகூட நீதிபதி தெரியப்படுத்தவில்லை.

டிசம்பர் 30 வெள்ளிக்கிழமை அன்று, சகோதரியின் கணவரும் அவருடைய குடும்பத்தாரும் இரத்தம் ஏற்றுவதற்கு உறுதியாக மறுப்பு தெரிவித்தும், ஆஸ்பத்திரி நிர்வாகம் சகோதரிக்கு இரத்தம் ஏற்றிவிட்டது. சகோதரிக்கு இரத்தம் ஏற்றவிடாமல் தடுத்ததாகச் சொல்லி அவருடைய குடும்பத்தாரும் சில மூப்பர்களும் அன்று சாயங்காலம் கைது செய்யப்பட்டார்கள். இந்தத் தகவல், டிசம்பர் 31, சனிக்கிழமை காலையில் நியு யார்க் நகரத்திலும், அதைச் சுற்றி இருக்கும் எல்லா இடங்களிலும் பரவியது. செய்தித்தாள்களிலும், டிவியிலும், ரேடியோவிலும் இந்தச் செய்தி வந்தது.

ஃபிலிப் ப்ரம்லியும் நானும் எங்களுடைய இளவயதில்

திங்கள்கிழமை காலையில், மேல் நீதிமன்ற நீதிபதி மில்டன் மோலனிடம் நான் பேசினேன். இந்த வழக்கைப் பற்றிய எல்லா விவரங்களையும் எடுத்து சொன்னேன். இந்த வழக்கை ஏற்கெனவே கையாண்ட நீதிபதி எந்த விசாரணையும் செய்யாமலேயே தீர்ப்பு கொடுத்துவிட்டார் என்பதையும் அவரிடம் சொன்னேன். இந்த வழக்கு சம்பந்தப்பட்ட கூடுதலான விவரங்களையும், சட்டங்களையும் பற்றிப் பேசுவதற்கு தன்னுடைய அலுவலகத்துக்கு அன்று சாயங்காலம் வரச் சொல்லி நீதிபதி மோலன் சொன்னார். நான் போனபோது என்னுடைய கண்காணி ஃபிலிப் ப்ரம்லியும் என்னோடு வந்தார். மருத்துவமனை சார்பாக வாதாடிய வக்கீலையும் நீதிபதி வரச்சொல்லியிருந்தார். எங்களுக்குள் காரசாரமான விவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், “நிதானமா பேசுங்க” என்று சகோதரர் பிரம்லி தன்னுடைய நோட்புக்கில் எழுதி காட்டினார். அவர் சொன்ன ஆலோசனை சரியாகத்தான் இருந்தது. ஏனென்றால், அந்த வக்கீல் சொன்னதையெல்லாம் தவறு என்று நிரூபிப்பதற்காக நான் காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தேன்.

காவற்கோபுரம் மற்றும் ஸ்ட்ராட்டன் கிராமத்துக்கு இடையில் நடந்த வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நம் சார்பாக வாதாடிய வக்கீல்கள். இடமிருந்து வலம்: ரிச்சர்ட் மோக்கே, க்ரகெரி ஓல்ட்ஸ், பால் பொலிடோரோ, ஃபிலிப் ப்ரம்லி, நான், மற்றும் மார்யோ மொரேனோ—ஜனவரி 8, 2003 ஆங்கில விழித்தெழுவை பாருங்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்குப் பிறகு, ‘நாளைக்கு காலையில முதல் வேலையா இந்த வழக்கை விசாரிக்கலாம்’ என்று நீதிபதி மோலன் சொன்னார். நாங்கள் அவருடைய அலுவலகத்தை விட்டுக் கிளம்பியபோது, மருத்துவமனை சார்பாக வாதாடப்போகிற வக்கீலுடைய பாடு நாளை திண்டாட்டம்தான் என்று நீதிபதி மோலன் சொன்னார். அதாவது, அவருடைய தரப்பு வாதம் சரி என்று நிரூபிப்பது ரொம்ப கஷ்டம் என்று சொல்லாமல் சொன்னார். அந்தச் சமயத்தில், நாம்தான் ஜெயிக்கப்போகிறோம் என்று யெகோவாவே சொன்னதுபோல் இருந்தது. தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு யெகோவா எங்களையும் பயன்படுத்துகிறார் என்று நினைத்தபோது, எனக்கு புல்லரித்தது.

அடுத்த நாள் நடக்கப்போகிற வழக்கு விசாரணைக்காக ராத்திரி ரொம்ப நேரம் தயாரித்தோம். புருக்லின் பெத்தேலுக்குப் பக்கத்திலேயே நீதிமன்றம் இருந்ததால், சட்ட இலாகாவிலிருந்து நாங்கள் கிட்டத்தட்ட 12 பேர் நடந்தே அங்கே போனோம். எங்களுடைய தரப்பு வாதத்தை கேட்ட பிறகு, நான்கு நீதிபதிகள் அடங்கிய குழு, இரத்தம் ஏற்றுவது சம்பந்தமாக ஏற்கெனவே கொடுக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்தது. இந்த உயர் நீதிமன்றம், சகோதரி நிக்கோலோவுக்கு சாதகமாகத் தீர்ப்பு கொடுத்தது. அதோடு, நோயாளியின் கருத்தைக் கேட்காமலேயே தீர்ப்பு கொடுப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் சொல்லியது.

இரத்தம் ஏற்றிக்கொள்ளாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ள சகோதரி நிக்கோலோவுக்கு உரிமை இருக்கிறது என்பதை நியு யார்க்கின் மேல் முறையீட்டு நீதிமன்றமும் கொஞ்ச காலத்தில் உறுதிப்படுத்தியது. அமெரிக்க மாகாணங்களில் இருந்த உயர் நீதிமன்றங்களில் இரத்தம் சம்பந்தமாக நடந்த கிட்டத்தட்ட நான்கு வழக்குகளில் நான் ஆஜரானேன். அதில் இதுதான் முதல் வழக்கு. (“ மாகாண உச்ச நீதிமன்றங்களில் கிடைத்த வெற்றிகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) அதோடு, குழந்தைகள் பராமரிப்பு, விவாகரத்து, நிலங்கள் மற்றும் கட்டிடங்களைப் பயன்படுத்துகிற விஷயம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பெத்தேலிலிருந்த வழக்கறிஞர்களோடு சேர்ந்து நான் வேலை செய்தேன்.

கல்யாணமும் குடும்ப வாழ்க்கையும்

என்னுடைய மனைவி டானோடு

என்னுடைய மனைவி டானை நான் முதன்முதலில் பார்த்தபோது, அவளுக்கு ஏற்கெனவே விவாகரத்து ஆகியிருந்தது. அவளுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அவள் வேலையும் செய்துகொண்டு பயனியர் ஊழியமும் செய்துகொண்டிருந்தாள். வாழ்க்கையில் அவளுக்கு எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தபோதும் யெகோவாவுக்குச் சேவை செய்வதில் உறுதியாக இருந்தாள். அதைப் பார்த்து நான் அசந்துபோனேன். 1992-ல் நியு யார்க் நகரத்தில் நடந்த “ஒளிகொண்டு செல்வோர்” மாவட்ட மாநாட்டில் நாங்கள் கலந்துகொண்டோம். அவளைக் கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணத்தில், ‘நாம் ஒருவருக்கொருவர் நன்றாகத் தெரிந்துகொள்ளலாமா?’ என்று கேட்டேன். ஒரு வருஷத்துக்குப் பிறகு நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். யெகோவாவோடு அவளுக்கு ஒரு நல்ல பந்தம் இருந்தது. எப்போதுமே அவள் ‘கலகலவென்று’ இருப்பாள். உண்மையிலேயே அவள் யெகோவாவிடமிருந்து கிடைத்த பரிசு என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கை முழுவதும் அவள் எனக்கு நல்லதைத்தான் செய்திருக்கிறாள்.—நீதி. 31:12.

நாங்கள் கல்யாணம் செய்துகொண்டபோது அவளுக்கு 11 வயதில் ஒரு மகனும், 13 வயதிலும் 16 வயதிலும் இரண்டு மகள்களும் இருந்தார்கள். ஒரு நல்ல அப்பாவாக இருக்க ஆசைப்பட்டதால், வளர்ப்பு பெற்றோர் சம்பந்தமாக நம்முடைய பிரசுரங்களில் வந்த தகவல்களை கவனமாகப் படித்தேன். என்னால் முடிந்தளவுக்கு அதன்படியெல்லாம் செய்தேன். காலங்கள் போகப்போக நிறைய சவால்கள் வந்தன. இருந்தாலும், ஒரு நல்ல நண்பராகவும், அன்பான அப்பாவாகவும் பிள்ளைகள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அதை நினைத்து நான் ரொம்பச் சந்தோஷப்பட்டேன். என் பிள்ளைகளுடைய நண்பர்களுக்காக எங்கள் வீட்டுக் கதவு திறந்தே இருந்தது; அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம். அவர்கள் வந்துவிட்டுப் போவது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

2013-ல் நாங்கள் விஸ்கான்ஸினுக்குக் குடிமாறிப் போனோம். வயதான என்னுடைய அப்பாவையும் என் மனைவியின் அப்பா அம்மாவையும் பார்த்துக்கொள்வதற்காக அங்கே போனோம். அதனால், இனிமேல் பெத்தேலுக்குப் போய் வேலை செய்ய முடியாது என்று நினைத்தேன். ஆனால், ஒரு தற்காலிக வாலண்டியராக தொடர்ந்து சட்ட இலாகாவுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதை நினைத்து நான் ரொம்பச் சந்தோஷப்பட்டேன்.

ஒரு பெரிய இடி

செப்டம்பர் 2018-ல் என் தொண்டையில் ஏதோ பிரச்சினை இருந்ததுபோல் தெரிந்தது. அதனால், உள்ளூர் மருத்துவரிடம் போனேன். ஆனால், என்ன பிரச்சினை என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னொரு மருத்துவரிடம் போனபோது, நரம்பியல் நிபுணரைப் பார்க்கச் சொல்லி அவர் சிபாரிசு செய்தார். ஜனவரி 2019-ல், ஒரு அரிய வகையான பக்கவாத நோய் (progressive supranuclear palsy) எனக்கு வந்திருக்கலாம் என்று அந்த நரம்பியல் நிபுணர் சொன்னார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடுவதற்காக நான் போனேன். அந்த விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய வருஷங்களாக நான் அதை விளையாடிக்கொண்டிருந்தேன். ஆனால், இந்தத் தடவை விளையாடியபோது என் வலது கையின் மணிக்கட்டு உடைந்துவிட்டது. என்னுடைய தசைகள் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நான் அப்போதுதான் புரிந்துகொண்டேன். என்னுடைய நோய் தீவிரமாகிக்கொண்டே போனது. என்னால் சரியாகப் பேச முடியவில்லை, நடமாட முடியவில்லை, எதையும் விழுங்கவும் முடியவில்லை.

ஒரு வக்கீலாக யெகோவாவுடைய அமைப்புக்கு என்னால் உதவ முடிந்ததை நினைத்து நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். அதைப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். என்னுடைய துறை சம்பந்தப்பட்ட பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் நிறைய கட்டுரைகளை எழுதும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட சட்டங்களைப் பற்றிக் கலந்துபேசுகிற கருத்தரங்குகளிலும் நான் கலந்துகொண்டேன். இப்படி உலகத்தில் பல இடங்களில் நடந்த கருத்தரங்குகளுக்கு நான் போயிருக்கிறேன். இரத்தம் இல்லாத சிகிச்சையை ஏற்றுக்கொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு இருக்கும் உரிமையைப் பற்றி அந்தக் கருத்தரங்குகளில் பேசியிருக்கிறேன். இருந்தாலும், லூக்கா 17:10-ல் இருக்கும் வார்த்தைகள்தான் என்னுடைய ஞாபகத்துக்கு வருகின்றன. ‘நான் ஒன்றுக்கும் உதவாத அடிமை; செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்தேன்.’