Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 30

தொடர்ந்து சத்தியத்தில் நடங்கள்

தொடர்ந்து சத்தியத்தில் நடங்கள்

“என் பிள்ளைகள் தொடர்ந்து சத்தியத்தில் நடக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது ஏற்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் இல்லை.”—3 யோ. 4.

பாட்டு 65 ‘வழி இதுவே!’

இந்தக் கட்டுரையில்... *

1. எது நமக்குச் சந்தோஷத்தைத் தருமென்று 3 யோவான் 3, 4 சொல்கிறது?

நிறைய பேர் சத்தியத்தைத் தெரிந்துகொள்வதற்கு யோவான் உதவினார். அவர்கள் எல்லாரும் தொடர்ந்து சத்தியத்தில் நடக்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோது, யோவானுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! அவர்கள் எல்லாரும் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தார்கள். அதனால், அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்காக யோவான் கடினமாக உழைத்தார். அவர்கள் எல்லாரையும் தன்னுடைய பிள்ளைகளைப் போல் அவர் நினைத்தார். அதேபோல், நம்முடைய பிள்ளைகளும் நம்மிடம் பைபிள் படித்தவர்களும் தங்களை யெகோவாவுக்கு அர்ப்பணித்து தொடர்ந்து சத்தியத்தில் நடப்பதைப் பார்க்கும்போது, நாம் பூரித்துப்போய்விடுகிறோம்!—3 யோவான் 3, 4-ஐ வாசியுங்கள்.

2. என்ன காரணத்துக்காக யோவான் அந்தக் கடிதங்களை எழுதினார்?

2 கி.பி 98-ல் எபேசு நகரத்தில் அல்லது அதற்குப் பக்கத்தில் யோவான் வாழ்ந்திருக்கலாம். பத்மு தீவிலிருந்து விடுதலையானதற்குப் பிறகு அவர் அங்கு போயிருக்கலாம். கிட்டத்தட்ட அந்தச் சமயத்தில்தான் யெகோவா தன்னுடைய சக்தியை யோவானுக்குக் கொடுத்து மூன்று கடிதங்களை எழுத வைத்தார். அன்றைக்கு இருந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் இயேசுமீது வைத்திருந்த விசுவாசத்தை இழந்துவிடாமல் இருப்பதற்கும், தொடர்ந்து சத்தியத்தில் நடக்க அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும்தான் அவர் அந்தக் கடிதங்களை எழுதினார்.

3. எந்தெந்த கேள்விகளுக்கு இந்தக் கட்டுரையில் பதில்களைப் பார்ப்போம்?

3 யோவான்தான் கடைசியாக வாழ்ந்த அப்போஸ்தலன். பொய் போதகர்கள் சபையில் நுழைந்து சகோதர சகோதரிகளைத் தவறாக வழிநடத்திக்கொண்டு இருந்ததைப் பார்த்து யோவான் ரொம்பக் கவலைப்பட்டார். * (1 யோ. 2:18, 19, 26) அந்த விசுவாசதுரோகிகள், தங்களுக்கு யெகோவாவைப் பற்றித் தெரியும் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அதனால், யெகோவாவுடைய சக்தியால் யோவான் தூண்டப்பட்டு, சபைகளுக்கு அறிவுரைகளைக் கொடுத்தார். அவற்றைப் படிக்கும்போது, இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வீர்கள்: தொடர்ந்து சத்தியத்தில் நடப்பது என்றால் என்ன? அப்படித் தொடர்ந்து நடப்பதற்கு என்னென்ன விஷயங்கள் இடைஞ்சலாக இருக்கலாம்? தொடர்ந்து சத்தியத்தில் நடப்பதற்கு நாம் ஒருவருக்கொருவர் எப்படி உதவியாக இருக்கலாம்?

தொடர்ந்து சத்தியத்தில் நடப்பது என்றால் என்ன?

4. ஒன்று யோவான் 2:3-6 மற்றும் இரண்டு யோவான் 4, 6-ன்படி சத்தியத்தில் தொடர்ந்து நடப்பதில் எவையெல்லாம் அடங்கியிருக்கின்றன?

4 தொடர்ந்து சத்தியத்தில் நடக்க வேண்டுமென்றால், பைபிளில் இருக்கும் உண்மைகளை நன்றாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதோடு, யெகோவாவின் ‘கட்டளைகளைக் கடைப்பிடிக்க’ வேண்டும். அதாவது, கீழ்ப்படிய வேண்டும். (1 யோவான் 2:3-6-யும், 2 யோவான் 4, 6-யும் வாசியுங்கள்.) இந்த விஷயத்தில் இயேசு கிறிஸ்து நல்ல முன்மாதிரி வைத்திருக்கிறார். அதனால், மிக நெருக்கமாக அவரைப் பின்பற்றினால் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய முடியும்.—யோவா. 8:29; 1 பே. 2:21.

5. எதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்?

5 தொடர்ந்து சத்தியத்தில் நடக்க வேண்டுமென்றால், யெகோவா சத்தியத்தின் கடவுள் என்பதையும் பைபிளில் அவர் சொல்லியிருப்பது எல்லாமே உண்மை என்பதையும் நாம் உறுதியாக நம்ப வேண்டும். இயேசுதான் மேசியா என்பதையும் நாம் உறுதியாக நம்ப வேண்டும். இன்றைக்கு நிறைய பேர், கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு நியமிக்கப்பட்டிருப்பதை நம்புவதில்லை. இந்தச் சத்தியங்களை உறுதியாக நம்பாதவர்களைத் தவறான வழிக்குக் கொண்டு போவதற்கென்றே “ஏமாற்றுக்காரர்கள் நிறைய பேர்” இருப்பதாக யோவான் எச்சரித்தார். (2 யோ. 7-11) “இயேசுவைக் கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறவனைத் தவிர வேறு யார் பொய்யன்?” என்றும் யோவான் எழுதினார். (1 யோ. 2:22) அப்படியென்றால், நாம் ஏமாந்து போகாமல் இருப்பதற்கு ஒரே வழி, பைபிளை நன்றாகப் படிப்பதுதான். அப்படிப் படித்தால், யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். (யோவா. 17:3) அப்போதுதான், நமக்குள் சத்தியம் இருக்கிறது என்பதை உறுதியாக நம்புவோம்.

தொடர்ந்து சத்தியத்தில் நடப்பதற்கு என்னென்ன விஷயங்கள் தடையாக இருக்கலாம்?

6. இளம் கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் ஒரு தடை என்ன?

6 முதல் தடை, மனித தத்துவங்கள். இந்த வலையில் சிக்கிக்கொள்ளாதபடி எல்லா கிறிஸ்தவர்களும் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். (1 யோ. 2:26) குறிப்பாக, இளம் கிறிஸ்தவர்கள் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். “என்னோட இளம் வயசுல, இந்த உலகத்தோட போதனைகள பார்த்து, உதாரணத்துக்கு பரிணாமக் கோட்பாடு... மனித தத்துவங்கள்... இதையெல்லாம் பார்த்து, நான் குழம்பிப்போயிட்டேன். சிலசமயங்கள்ல இந்த போதனைகளெல்லாம் எனக்கு நியாயமா பட்டுச்சு. பைபிள் சொல்றத எல்லாம் ஒதுக்கித்தள்ளிட்டு, ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்குற எல்லாத்தையும் ஏத்துக்குறது சரி இல்லங்குறதும் எனக்கு தோணுச்சு” என்று பிரான்சைச் சேர்ந்த 25 வயது சகோதரி அலெக்சியா * சொல்கிறார். பிறகு, உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகத்தை அலெக்சியா படித்தார். அதைப் படித்த சில வாரங்களிலேயே அவருடைய குழப்பமெல்லாம் தீர்ந்தது. “பைபிள்ல இருக்குறதெல்லாம் உண்மைங்குறத நான் நிச்சயப்படுத்திக்கிட்டேன். அதுல இருக்கிற நெறிமுறைகளின்படி வாழ்ந்தாதான் சந்தோஷமும் சமாதானமும் கிடைக்குங்குறதையும் நான் புரிஞ்சிக்கிட்டேன்” என்றும் சொல்கிறார்.

7. நாம் என்ன செய்யக் கூடாது, ஏன்?

7 எல்லா கிறிஸ்தவர்களும், அவர்கள் இளைஞர்களாக இருந்தாலும் சரி வயதானவர்களாக இருந்தாலும் சரி, இரட்டை வாழ்க்கை வாழக் கூடாது. சத்தியத்திலும் நடந்துகொண்டு ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையையும் வாழ முடியாது என்று யோவான் சொன்னார். (1 யோ. 1:6) இன்றைக்கும் சரி எதிர்காலத்திலும் சரி கடவுளுடைய பிரியத்தைச் சம்பாதிக்க வேண்டுமென்றால், நாம் செய்யும் ஒவ்வொன்றையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், ரகசியமாக ஏதாவது பாவம் செய்துவிடலாம் என்று நினைக்க முடியாது.—எபி. 4:13.

8. நாம் எதைத் தவிர்க்க வேண்டும்?

8 இரண்டாவது தடை, பாவத்தைப் பற்றிய இந்த உலகத்தின் கருத்து. “எங்களிடம் பாவம் இல்லை” என்று சொன்னால், நம்மையே ஏமாற்றிக்கொள்கிறவர்களாக இருப்போம்” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோ. 1:8) ஒருவர் வேண்டுமென்றே பாவம் செய்துவிட்டு, கடவுளிடமும் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடியுமென்று யோவானுடைய நாட்களிலிருந்த விசுவாசதுரோகிகள் சொன்னார்கள். இன்றைக்கும் அதேபோல் நினைக்கும் ஆட்கள் மத்தியில்தான் நாம் வாழ்கிறோம். நிறைய பேர், தங்களுக்குக் கடவுள்மேல் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால், யெகோவா எதையெல்லாம் பாவம் என்று சொல்கிறாரோ அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. முக்கியமாக, செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யெகோவாவின் கருத்தை அவர்கள் ஒதுக்கித்தள்ளுகிறார்கள். யெகோவா எதை பாவம் என்று சொல்கிறாரோ, அதை ‘இது எங்களோட தனிப்பட்ட விஷயம்’ என்று அவர்கள் சொல்கிறார்கள்.

இளைஞர்களே, யெகோவா ஒரு விஷயத்தை ஏன் சரி என்று சொல்கிறார், ஏன் தவறு என்று சொல்கிறார் என்பதைத் தெரிந்துவைத்துகொள்ளுங்கள். அப்போதுதான், உங்களுடைய நம்பிக்கையை ஆதரித்துப் பேச முடியும் (பாரா 9) *

9. பைபிள் சொல்வதுபோல் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதன் மூலம் இளம் கிறிஸ்தவர்கள் எப்படிப் பிரயோஜனம் அடைகிறார்கள்?

9 இளம் கிறிஸ்தவர்களோடு படிப்பவர்கள் மற்றும் அவர்களோடு வேலை செய்பவர்கள், செக்ஸ் சம்பந்தப்பட்ட தங்களுடைய கருத்துகளை அவர்கள்மேல் திணிக்க முயற்சி செய்கிறார்கள். அலெக்ஸாண்டர் என்ற சகோதரரின் வாழ்க்கையிலும் இதுதான் நடந்தது. “செக்ஸ் வெச்சுக்க சொல்லி என்கூட பள்ளியில படிக்கிற பொண்ணுங்க சிலர் என்னை கட்டாயப்படுத்துனாங்க. எனக்கு கேர்ள் ஃபிரண்ட் இல்லாததுனால ஓரினச்சேர்க்கையிலதான் எனக்கு ஈடுபாடு இருக்குதுனு அவங்க நெனச்சிக்கிட்டாங்க” என்கிறார் அலெக்ஸாண்டர். இதுபோன்ற சோதனைகள் உங்களுக்கும் வருகிறதா? அப்படியென்றால், பைபிள் சொல்வதுபோல் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். அப்படி இருந்தால், உங்களுடைய சுயமரியாதை... ஆரோக்கியம்... உணர்ச்சிகள்... யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தம்... என எல்லாவற்றையும் நீங்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும். சோதனைகளை ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கும்போது, சரியானதைச் செய்வது உங்களுக்குச் சுலபமாகிவிடும். செக்ஸ் சம்பந்தப்பட்ட தாறுமாறான கருத்துகளை சாத்தான்தான் இந்த உலகத்தில் பரப்பி வைத்திருக்கிறான் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற விஷயங்களுக்கு நீங்கள் அடிபணியாமல் இருந்தால், ‘பொல்லாதவனை உங்களால் ஜெயிக்க முடியும்.’—1 யோ. 2:14.

10. சுத்தமான மனசாட்சியோடு யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கு 1 யோவான் 1:9-ல் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் எப்படி உதவுகிறது?

10 எதையெல்லாம் பாவம் என்பதை முடிவு செய்யும் உரிமை யெகோவாவுக்கு இருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். அதனால், பாவத்தில் விழுந்துவிடாமல் இருப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். ஒருவேளை பாவம் செய்துவிட்டால், அந்தப் பாவத்தை யெகோவாவிடம் ஒத்துக்கொள்கிறோம். (1 யோவான் 1:9-ஐ வாசியுங்கள்.) மோசமான பாவம் செய்துவிட்டால், உதவிக்காக மூப்பர்களிடம் போகிறோம். ஏனென்றால், நம்மைக் கவனித்துக்கொள்வதற்காக அவர்களைத்தான் யெகோவா நியமித்திருக்கிறார். (யாக். 5:14-16) அதேசமயத்தில், முன்பு செய்த பாவத்தை நினைத்து மனதுக்குள் புழுங்கிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்குத் தன்னுடைய சொந்த மகனையே மீட்புப் பலியாக யெகோவா கொடுத்திருக்கிறார். மனம் திருந்துகிற பாவிகளை மன்னிப்பதாக யெகோவா வெறுமனே பேச்சுக்காக சொல்லவில்லை. அவர் நிஜமாகவே மன்னிக்கிறார். சுத்தமான மனசாட்சியோடு தன்னை வணங்குவதற்கு அவர் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.—1 யோ. 2:1, 2, 12; 3:19, 20.

11. நம்முடைய விசுவாசத்தைத் தரைமட்டமாக்கும் கருத்துகளிலிருந்து எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?

11 மூன்றாவது தடை, விசுவாசதுரோகிகளுடைய கருத்துகள். கிறிஸ்தவ சபை ஆரம்பித்த சமயத்திலிருந்தே கடவுளுடைய உண்மை ஊழியர்களின் மனதில் சந்தேக விதைகளை விதைப்பதற்கு நிறைய ஏமாற்றுக்காரர்களை பிசாசு பயன்படுத்திக்கொண்டு வருகிறான். அதனால், உண்மை எது பொய் எது என்று கண்டுபிடிக்க நாம் தெரிந்துகொள்ள வேண்டும். * இன்றைக்கு, நம்முடைய எதிரிகள் இன்டர்நெட்டையோ சோஷியல் மீடியாவையோ பயன்படுத்தி, யெகோவாமேல் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் சகோதர சகோதரிகள்மேல் வைத்திருக்கும் அன்பையும் தரைமட்டமாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பது யார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இந்த எல்லா கருத்துகளையும் ஒதுக்கித்தள்ளுங்கள்.—1 யோ. 4:1, 6; வெளி. 12:9.

12. நம்முடைய விசுவாசத்தை நாம் ஏன் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்?

12 சாத்தானுடைய தாக்குதல்களை எதிர்த்து நிற்க வேண்டுமென்றால், இயேசுவின் மேல் இருக்கும் நம்பிக்கையை அதிகமாக்க வேண்டும். அதோடு, தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் யெகோவா இயேசுவை எப்படிப் பயன்படுத்துகிறார் என்ற விஷயத்தையும் நாம் உறுதியாய் நம்ப வேண்டும். உண்மையும் விவேகமும் உள்ள அடிமைமேல் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த அடிமையைப் பயன்படுத்திதான் யெகோவா நம்மை வழிநடத்திக்கொண்டு வருகிறார் என்பதையும் நாம் நம்ப வேண்டும். (மத். 24:45-47) பைபிளைத் தவறாமல் படிப்பதன் மூலம் இந்த நம்பிக்கைகளை நாம் பலப்படுத்திக்கொள்ளலாம். அப்படிச் செய்தால், ஆழமாக வேரூன்றியிருக்கும் மரத்தைப் போல் நம்முடைய விசுவாசம் இருக்கும். இதேபோன்ற கருத்தைத்தான் கொலோசெ சபைக்கு எழுதிய கடிதத்தில் பவுல் சொன்னார். “நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவை எப்படி ஏற்றுக்கொண்டீர்களோ, அப்படியே அவரோடு தொடர்ந்து ஒன்றுபட்டு நடங்கள். . . . அவரில் வேரூன்றியவர்களாகவும், அவர்மேல் கட்டப்படுகிறவர்களாகவும், விசுவாசத்தில் பலப்படுகிறவர்களாகவும் இருங்கள்” என்று சொன்னார். (கொலோ. 2:6, 7) நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொண்டால், சாத்தானாலும் சரி, அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் வேறு யாராலும் சரி, நம்மை அசைக்க முடியாது.—2 யோ. 8, 9

13. நாம் எதை எதிர்பார்க்கலாம், ஏன்?

13 “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று யோவான் எழுதினார். (1 யோ. 5:19) அதனால், இந்த உலகம் நம்மைக் கண்டிப்பாக வெறுக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். (1 யோ. 3:13) அதுவும் இந்த உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க சாத்தானுடைய கோபம் அதிகமாகும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (வெளி. 12:12) ஒழுக்கக்கேடான விஷயங்கள்மேல் இருக்கும் ஒரு ஈர்ப்பு, விசுவாசதுரோகிகள் சொல்கிற பொய்கள் போன்ற விஷயங்களைப் பயன்படுத்தி சாத்தான் மறைமுகமாகத் தாக்குகிறான். அதுமட்டுமல்ல, கொடூரமாகத் துன்புறுத்துவதன் மூலம் நேரடியாகவே அவன் தாக்குகிறான். நம்முடைய பிரசங்க வேலையைத் தடுத்து நிறுத்தவும் நம்முடைய விசுவாசத்தைத் தரைமட்டமாக்கவும் கொஞ்சம் காலம்தான் இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும். அதனால், சில நாடுகளில் நம்முடைய வேலைக்குக் கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் போடப்பட்டிருப்பதை நினைத்து நாம் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. இப்படிப்பட்ட நாடுகளில் இருக்கும் நம் சகோதர சகோதரிகள் இதையெல்லாம் சமாளித்துக்கொண்டு இருக்கிறார்கள். சாத்தான் என்னதான் சதித்திட்டம் தீட்டினாலும், நம்மால் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்பதை இவர்கள் எல்லாரும் நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தொடர்ந்து சத்தியத்தில் நடக்க ஒருவருக்கொருவர் உதவுங்கள்

14. தொடர்ந்து சத்தியத்தில் நடக்க நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு உதவுவதற்கு ஒரு வழி என்ன?

14 தொடர்ந்து சத்தியத்தில் நடக்க நம் சகோதர சகோதரிகளுக்கு உதவுவதற்கான ஒரு வழி, அவர்கள்மேல் கரிசனை காட்டுவது. (1 யோ. 3:10, 11, 16-18) எல்லாமே சுமுகமாகப் போகும்போது மட்டும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டினால் போதாது, பிரச்சினைகள் வரும்போதும் நாம் தொடர்ந்து அன்பு காட்ட வேண்டும். உதாரணத்துக்கு, யாராவது ஒரு சகோதரரோ சகோதரியோ தாங்கள் ரொம்ப நேசித்த ஒருவரை மரணத்தில் பறிகொடுத்திருக்கிறார்களா? அப்படியென்றால், அவர்களுக்கு ஆறுதல் தேவைப்படலாம், மற்ற உதவிகளும் தேவைப்படலாம். சகோதர சகோதரிகள் யாராவது இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? அப்படியென்றால், ராஜ்ய மன்றங்களையோ வீடுகளையோ நாம் கட்டிக்கொடுக்க வேண்டியிருக்கலாம். சொல்லில் மட்டுமல்ல, ரொம்ப முக்கியமாக நம்முடைய செயல்களிலும் அன்பையும் கரிசனையையும் காட்ட வேண்டும்.

15. நாம் என்ன செய்ய வேண்டும் என்று 1 யோவான் 4:7, 8 சொல்கிறது?

15 நாம் ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்போது, நம்முடைய பரலோகத் தந்தையைப் போலவே நடந்துகொள்கிறோம் என்று அர்த்தம். (1 யோவான் 4:7, 8-ஐ வாசியுங்கள்.) அப்படி அன்பு காட்டுவதற்கு இன்னொரு முக்கியமான வழி, ஒருவரை ஒருவர் மன்னிப்பது! உதாரணத்துக்கு, யாராவது நம்மைப் புண்படுத்திவிட்டு அதற்குப் பிறகு மன்னிப்பு கேட்கலாம். அப்போது, அவர்கள் செய்த தவறை மன்னித்து மறப்பது மூலம் நாம் அவர்கள்மேல் அன்பு காட்டலாம். (கொலோ. 3:13) அல்டோ என்ற சகோதரருடைய விஷயத்தில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். ஒரு சகோதரர்மேல் அல்டோ ரொம்ப மதிப்பு மரியாதை வைத்திருந்தார். ஆனால் தன்னுடைய கலாச்சாரத்தைப் பற்றி அந்தச் சகோதரர் தவறாகப் பேசியதை அல்டோ கேள்விப்பட்டார். “அவரை பத்தி தப்பா நினைக்காம இருக்குறதுக்கு உதவி செய்யுங்கனு கேட்டு ஜெபம் செஞ்சிட்டே இருந்தேன்” என்று அல்டோ சொல்கிறார். அதோடு, அந்தச் சகோதரரோடு சேர்ந்து ஊழியம் செய்வதென்றும் அவர் முடிவெடுத்தார். அப்படி ஊழியம் செய்தபோது, தன்னுடைய கலாச்சாரத்தைப் பற்றி அந்தச் சகோதரர் சொன்னது தன்னை எந்தளவுக்குப் புண்படுத்தியது என்பதைத் தெரியப்படுத்தினார். அல்டோ இப்படிச் சொல்கிறார்: “நான் எந்தளவுக்கு புண்பட்டிருக்கிறேன்னு அவருக்கு தெரிஞ்சப்போ அவரு மன்னிப்பு கேட்டாரு. அவரு பேசுன தொனியில இருந்தே அவரு உண்மையிலேயே வருத்தப்படுறாருங்குறத நான் புரிஞ்சிக்கிட்டேன். நாங்க பிரச்சினைய மறந்துட்டு தொடர்ந்து நண்பர்களா இருந்தோம்.”

16-17. நாம் என்ன செய்வதற்கு உறுதியாக இருக்க வேண்டும்?

16 சகோதர சகோதரிகள்மேல் அப்போஸ்தலன் யோவான் ஆழமான அன்பு வைத்திருந்தார். அவர்கள் பலமான விசுவாசத்தோடு இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அவர் எழுதிய கடிதங்களில் இருக்கிற அறிவுரைகளைப் படிக்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது. அவரைப் போலவே அன்பு காட்டுகிற ஆண்களும் பெண்களும் கிறிஸ்துவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!—1 யோ. 2:27.

17 இதுவரை பார்த்த எல்லா விஷயங்களையும் நம்முடைய மனதில் நாம் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து சத்தியத்தில் நடக்க வேண்டும் என்பதிலும், நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். பைபிளைப் படித்து, அதன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இயேசுமீது இருக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும். மனித தத்துவங்களையும் விசுவாசதுரோகிகளுடைய போதனைகளையும் ஒதுக்கித்தள்ள வேண்டும். இரட்டை வாழ்க்கை வாழக் கூடாது. பாவம் செய்வதற்கான தூண்டுதலைக் கட்டுப்படுத்த வேண்டும். யெகோவாவுடைய உயர்ந்த நெறிமுறைகளின்படி வாழ வேண்டும். நம்மைப் புண்படுத்தியவர்களை மன்னிப்பது மூலமும், உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் மூலமும் நம்முடைய சகோதர சகோதரிகள் தொடர்ந்து சத்தியத்தில் நடப்பதற்கு நாம் உதவ வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் எவ்வளவு பிரச்சினைகள் நம்மை அழுத்தினாலும் நம்மால் சத்தியத்தில் தொடர்ந்து நடக்க முடியும்.

பாட்டு 11 யெகோவாவின் நெஞ்சத்தை மகிழ்விப்போம்

^ பாரா. 5 பொய்க்குத் தகப்பனான சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் உலகத்தில் நாம் வாழ்கிறோம். அதனால், தொடர்ந்து சத்தியத்தில் நடப்பது பெரிய போராட்டமாக இருக்கிறது. முதல் நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கும் இதே போராட்டம்தான் இருந்தது. அவர்களுக்கும் நமக்கும் உதவுவதற்காக யோவானுக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுத்து மூன்று கடிதங்களை யெகோவா எழுத வைத்தார். தொடர்ந்து சத்தியத்தில் நடப்பதற்கு இடைஞ்சலாக இருக்கும் விஷயங்களைக் கண்டுபிடிப்பதற்கும், அதையெல்லாம் சரிசெய்வதற்கும் அந்தக் கடிதங்கள் நமக்கு உதவுகின்றன.

^ பாரா. 3 யோவான் கடிதம் எழுதியபோது இருந்த சூழல்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

^ பாரா. 6 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 11 ஆகஸ்ட் 2018 காவற்கோபுரத்தில் இருக்கிற “எல்லா உண்மைகளும் உங்களுக்குத் தெரியுமா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 59 படங்களின் விளக்கம்: ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதில் தவறு இல்லை என்று மற்றவர்கள் பேசுவதை ஓர் இளம் சகோதரி பள்ளியில் கேட்கிறாள். அதை ஊக்குவிக்கும் போஸ்டர்களையும் பார்க்கிறாள். (சில நாடுகளில் ஓரினச்சேர்க்கையைக் குறிப்பதற்கு வானவில் வண்ணங்களைப் பயன்படுத்துகிறார்கள்.) யெகோவாவுக்கு எது பிடிக்கும் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறாள். அப்படிச் செய்வதால், கஷ்டமான சூழ்நிலையை அவளால் சமாளிக்க முடிகிறது.