Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 27

யாரும் உங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்காதீர்கள்!

யாரும் உங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்காதீர்கள்!

‘உங்களில் யாரும் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக எண்ணாதீர்கள். . . . தெளிந்த புத்தி இருப்பதைக் காட்டுங்கள்.’—ரோ. 12:3.

பாட்டு 77 மன்னியுங்கள்

இந்தக் கட்டுரையில்... *

1. பிலிப்பியர் 2:3-ல் என்ன அறிவுரை கொடுக்கப்பட்டிருக்கிறது, அதன்படி செய்வதால் நமக்கு என்ன நன்மை?

நமக்கு எது நல்லதென்று யெகோவாவுக்குத் தெரியும். அதனால், அவருடைய நெறிமுறைகளுக்கு நாம் மனத்தாழ்மையோடு கீழ்ப்படிகிறோம். (எபே. 4:22-24) நமக்கு மனத்தாழ்மை இருந்தால், நம்முடைய விருப்பத்தைவிட யெகோவாவின் விருப்பத்துக்கு முன்னுரிமை கொடுப்போம். மற்றவர்களை நம்மைவிட உயர்ந்தவர்கள் என்று நினைப்போம். அப்போது, யெகோவாவிடமும் சகோதர சகோதரிகளிடமும் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடியும்.—பிலிப்பியர் 2:3-ஐ வாசியுங்கள்.

2. அப்போஸ்தலன் பவுல் எதை ஒத்துக்கொண்டார், இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 நாம் ஜாக்கிரதையாக இல்லையென்றால், இந்த உலக மக்களிடம் இருக்கிற தலைக்கனம், சுயநலம் * போன்ற குணங்கள் சுலபமாக நம்மைத் தொற்றிக்கொள்ளும். முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களுக்கும் இந்த ஆபத்து இருந்தது. உதாரணத்துக்கு, ரோமர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: ‘உங்களில் யாரும் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக எண்ணாதீர்கள். . . . தெளிந்த புத்தி இருப்பதைக் காட்டுங்கள்.’ (ரோ. 12:3) நம்மைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்காமல், ஓரளவுக்கு நினைப்பதில் தவறில்லை என்பதை பவுலும் ஒத்துக்கொண்டார். அப்படியென்றால், நம்மைப் பற்றிய சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்வதற்கு, மனத்தாழ்மை தேவை. (1) நம்முடைய மண வாழ்க்கையிலும், (2) சபை பொறுப்புகளைச் செய்வதிலும், (3) சோஷியல் மீடியாவைப் பயன்படுத்துவதிலும் நம்மைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்காமல் இருப்பதற்கு மனத்தாழ்மை எப்படி உதவும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

மனத்தாழ்மை—மணவாழ்க்கையில்

3. கணவன் மனைவிக்கு இடையில் ஏன் பிரச்சினைகள் வரலாம், சிலர் என்ன முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்?

3 கணவனும் மனைவியும் ஒன்றுசேர்ந்து வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிப்பதற்காகத்தான் கல்யாணம் என்ற ஏற்பாட்டை யெகோவா செய்தார். ஆனால், யாருமே பரிபூரணமானவர்கள் கிடையாது. அதனால், கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினைகள் வருவது சகஜம். சொல்லப்போனால், கல்யாணம் செய்பவர்களுக்கு உபத்திரவங்கள் வரும் என்று பவுல் எழுதினார். (1 கொ. 7:28) சில தம்பதிகளுக்கு இடையில் எப்போது பார்த்தாலும் பிரச்சினைகள் வருவதால், ‘உங்கள கல்யாணம் பண்ணியிருக்கவே கூடாது’ என்று ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்கிறார்கள். இந்த உலகத்தின் எண்ணத்தை அவர்கள் வளர்த்துக்கொண்டால், விவாகரத்துதான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிடலாம். இப்படிப்பட்டவர்கள், தங்களைப் பற்றி மட்டும்தான் யோசிக்கிறார்கள். விவாகரத்து செய்துகொண்டால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.

4. நாம் என்ன நினைக்கக் கூடாது?

4 கல்யாண வாழ்க்கையில் நீங்கள் தோல்வி அடைந்துவிட்டதாக நினைக்கக் கூடாது. விவாகரத்து செய்வதற்கு, பாலியல் முறைகேடு ஒன்றுதான் காரணமாக இருக்க வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. (மத். 5:32) அதனால், பவுல் சொன்ன உபத்திரவங்கள் நம் வாழ்க்கையில் வரும்போது, நாம் தலைக்கனத்தோடு நடந்துகொள்ளக் கூடாது. அப்படி நடந்துகொண்டால், இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடலாம்: ‘இவருக்கு என்மேல கொஞ்சம்கூட அக்கறை இல்ல,’ ‘இவர் என்கிட்ட அன்பாவே நடந்துக்க மாட்டேங்கறாரு,’ ‘வேற ஒருத்தர கல்யாணம் பண்ணியிருந்தா, என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும்.’ இப்படியெல்லாம் நினைத்தால், உங்களைப் பற்றி மட்டும்தான் யோசிக்கிறீர்களே தவிர உங்கள் கணவன் அல்லது மனைவியைப் பற்றி யோசிக்கவில்லை என்று அர்த்தம். இந்த விஷயத்தைப் பற்றி உலகம் என்ன சொல்கிறது? ‘உங்க மனசு சொல்றத கேளுங்க. விவாகரத்து செய்றதுதான் உங்களுக்கு சந்தோஷத்த தரும்னு நினைச்சீங்கனா, அத செய்ய தயங்காதீங்க.’ ஆனால் கடவுள் என்ன சொல்கிறார்? “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்” என்று சொல்கிறார். (பிலி. 2:4) உங்கள் விவாகம் ‘ரத்து’ ஆக வேண்டுமென்று யெகோவா ஆசைப்படவில்லை. அது என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறார். (மத். 19:6) இதைப் பற்றி முடிவெடுக்கும்போது, உங்களைப் பற்றி மட்டும் யோசிக்காமல், முதலில் யெகோவா அதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதையும் யோசிக்க வேண்டும். நீங்கள் அப்படி யோசிக்க வேண்டுமென்றுதான் யெகோவாவும் ஆசைப்படுகிறார்.

5. எபேசியர் 5:33-ன்படி, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் எப்படி நடத்த வேண்டும்?

5 கணவர்களும் மனைவிகளும் ஒருவரை ஒருவர் அன்பாகவும் மரியாதையாகவும் நடத்த வேண்டும். (எபேசியர் 5:33-ஐ வாசியுங்கள்.) உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்று யோசிப்பதற்குப் பதிலாக, நீங்கள் என்ன கொடுக்கலாம் என்பதைப் பற்றி யோசிக்கும்படி பைபிள் சொல்கிறது. (அப். 20:35) அப்படியென்றால், அன்பும் மரியாதையும் காட்டுவதற்குக் கணவன் மனைவிக்கு எந்தக் குணம் உதவும்? மனத்தாழ்மை என்ற குணம்தான்! இந்தக் குணத்தைக் காட்டுகிற கணவர்களும் மனைவிகளும் தங்களுக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல் “மற்றவர்களுக்கு” பிரயோஜனமானதைத் தேடுவார்கள்.—1 கொ. 10:24.

மனத்தாழ்மையோடு இருக்கிற தம்பதிகள், ஏட்டிக்குப்போட்டியாக நடந்துகொள்ளாமல் ஒன்றுசேர்ந்து வேலை செய்வார்கள் (பாரா 6)

6. ஸ்டீவன்-ஸ்டெஃபானி தம்பதி சொன்னதிலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொள்கிறீர்கள்?

6 கிறிஸ்தவத் தம்பதிகள் நிறைய பேருடைய கல்யாண வாழ்க்கை இனிப்பதற்கு மனத்தாழ்மை என்ற குணம் ரொம்ப உதவியாக இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு, ஸ்டீவன்—ஸ்டெஃபானி தம்பதி சொல்வதைக் கவனியுங்கள். “நீங்க ஒரு ‘டீம்’ அப்படிங்கறத ஞாபகம் வைச்சிக்கிட்டீங்கனா, முக்கியமா பிரச்சினைகள் வர்றப்போ, ஒண்ணு சேர்ந்து செயல்படுவீங்க. ‘எனக்கு எது நல்லது’னு யோசிக்கிறதுக்கு பதிலா, ‘நமக்கு எது நல்லது’னு யோசிப்பீங்க” என்று ஸ்டீவன் சொல்கிறார். ஸ்டெஃபானியும் ஸ்டீவனைப் போல்தான் நினைக்கிறார். “தொட்டதுக்கெல்லாம் வாக்குவாதம் செய்ற ஒருத்தர்கூட வாழ்றதுக்கு யாருக்குமே பிடிக்காது. அதனால, எங்களுக்குள்ள வாக்குவாதம் வர்றப்போ, பிரச்சினை என்னங்குறத முதல்ல கண்டுபிடிப்போம். அப்புறம், ஜெபம் செய்வோம். அதுக்கு அப்புறம், அத பத்தி ஆராய்ச்சி செய்வோம். கடைசியா, அத பத்தி பேசுவோம். பிரச்சினையத்தான் நாங்க தாக்குவோமே தவிர எங்கள ஒருத்தருக்கொருத்தரு தாக்கிக்க மாட்டோம்” என்று ஸ்டெஃபானி சொல்கிறார். கணவர்களும் மனைவிகளும் தங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்காமல் இருந்தால் அவர்களுடைய வாழ்க்கை எப்போதும் தேன்போல் தித்திக்கும்.

‘எப்போதும் மனத்தாழ்மையோடு’ யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்

7. நியமிப்புகள் கிடைக்கும்போது சகோதரர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

7 யெகோவாவுக்குச் சேவை செய்வதை நாம் பெரிய பாக்கியமாக நினைக்கிறோம். (சங். 27:4; 84:10) அதிலும், நியமிப்பை ஏற்றுக்கொள்வதற்குச் சகோதரர்கள் முன்வருகிறார்கள் என்றால், அது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்! சொல்லப்போனால், “கண்காணியாவதற்கு முயற்சி செய்கிற ஒருவர் சிறந்த வேலையை விரும்புகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீ. 3:1) ஆனால் நியமிப்புகள் கிடைக்கும்போது, சகோதரர்கள் தங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்கக் கூடாது. (லூக். 17:7-10) மனத்தாழ்மையோடு மற்றவர்களுக்குச் சேவை செய்வதுதான் அவர்களுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.—2 கொ. 12:15.

8. தியோத்திரேப்பு, உசியா மற்றும் அப்சலோமின் உதாரணங்களிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?

8 தங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைத்த சிலரைப் பற்றி பைபிள் சொல்கிறது. அவையெல்லாம் நமக்கு அபாயச்சங்குகளைப் போல் இருக்கின்றன! தியோத்திரேப்பு அடக்கமாக நடந்துகொள்ளவில்லை; சபையில் “முதலிடம்” பெறத் துடித்தான். (3 யோ. 9) உசியா ஒருகட்டத்தில் தலைக்கனத்தோடு நடந்துகொண்டார். யெகோவா தனக்குக் கொடுக்காத வேலையைத் துணிச்சலோடு செய்தார். (2 நா. 26:16-21) அப்சலோம் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டுமென்று ஆசைப்பட்டான். அதனால், மக்களைத் தன் பக்கமாக இழுப்பதற்கு சதித்திட்டம் தீட்டினான். (2 சா. 15:2-6) தங்களுக்குத் தாங்களே புகழைத் தேடி அலைகிறவர்களை யெகோவாவுக்குச் சுத்தமாகப் பிடிக்காது என்பது இவர்களுடைய அனுபவங்கள் காட்டுகின்றன. (நீதி. 25:27) ஒருவருக்கு தலைக்கனமும் லட்சிய வெறியும் இருந்தால், கடைசியில் அது அழிவில் போய்தான் முடியும்.—நீதி. 16:18.

9. இயேசு நமக்கு என்ன முன்மாதிரி வைத்திருக்கிறார்?

9 இப்போது, ஒரு நல்ல உதாரணத்தைப் பார்க்கலாம். இயேசுவின் உதாரணம்தான் அது. “அவர் கடவுளுடைய சாயலில் இருந்தபோதிலும், கடவுளுடைய ஸ்தானத்தைப் பறித்துக்கொள்ளவோ அவருக்குச் சமமாக இருக்கவோ நினைக்கவில்லை.” (பிலி. 2:6) யெகோவாவுக்கு அடுத்ததாக அதிக அதிகாரம்படைத்தவர் இயேசுதான்! இருந்தாலும், தன்னைப் பற்றி அவர் அளவுக்கு அதிகமாக நினைக்கவில்லை. “உங்கள் எல்லாரிலும் யார் தன்னைத் தாழ்த்திக்கொள்கிறானோ அவனே உயர்ந்தவனாக இருப்பான்” என்று தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். (லூக். 9:48) இயேசுவைப் போலவே மனத்தாழ்மையோடு நடந்துகொள்கிற பயனியர்கள், உதவி ஊழியர்கள், மூப்பர்கள் மற்றும் வட்டாரக் கண்காணிகளோடு சேர்ந்து சேவை செய்வது உண்மையிலேயே ஓர் ஆசீர்வாதம்தான்! நாம் மனத்தாழ்மையோடு நடந்துகொண்டால், கடவுளுடைய அமைப்பில் நிலவுகிற அன்பான சூழலுக்கு நம்மாலும் பங்களிக்க முடியும்.—யோவா. 13:35.

10. சபையில் இருக்கிற பிரச்சினைகள் சரியாகக் கையாளப்படவில்லை என்று நினைத்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

10 சபையில் பிரச்சினைகள் இருப்பதாகவும், அவை சரியாகக் கையாளப்படவில்லை என்பதாகவும் சிலசமயங்களில் நீங்கள் நினைக்கலாம். அப்போது என்ன செய்வீர்கள்? குறை சொல்வதற்குப் பதிலாக, முன்னின்று வழிநடத்துபவர்களை ஆதரிப்பதன் மூலம் நீங்கள் மனத்தாழ்மையைக் காட்டலாம். (எபி. 13:17) இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்: ‘சரி செஞ்சே ஆகணும்னு நினைக்கிற அளவுக்கு இது ஒரு பெரிய பிரச்சினையா? இத சரி செய்றதுக்கு இதுதான் பொருத்தமான சமயமா? இத சரி செய்ற அதிகாரம் எனக்கு இருக்கா? சரி செய்யணும்னு நான் ஏன் நினைக்கிறேன், சபையோட ஒற்றுமைய கட்டிக்காக்குறதுக்காகவா இல்ல என்னை முக்கியமானவனா காட்டிக்குறதுக்காகவா?’

சபை பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு திறமை இருந்தால் மட்டும் போதாது, மனத்தாழ்மையும் இருக்க வேண்டும் (பாரா 11) *

11. எபேசியர் 4:2, 3-ன்படி நாம் மனத்தாழ்மையோடு யெகோவாவுக்குச் சேவை செய்தால், என்ன பலன்கள் கிடைக்கும்?

11 யெகோவாவின் பார்வையில், திறமையைவிட மனத்தாழ்மைதான் முக்கியம்; நாம் எந்தளவு சாதிக்கிறோம் என்பதைவிட எந்தளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். அதனால், மனத்தாழ்மையோடு யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்போது, சபையின் ஒற்றுமைக்கு உங்களால் உரம் சேர்க்க முடியும். (எபேசியர் 4:2, 3-ஐ வாசியுங்கள்.) மனத்தாழ்மையோடு இருக்கிறோம் என்பதை எப்படியெல்லாம் காட்டலாம்? ஊழியத்தைச் சுறுசுறுப்பாகச் செய்யுங்கள். அன்பான செயல்களைச் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் சேவை செய்யலாம் என்று யோசியுங்கள். பொறுப்புகளில் இருப்பவர்களை மட்டுமல்ல, எல்லாரையும் உபசரியுங்கள். (மத். 6:1-4; லூக். 14:12-14) சகோதர சகோதரிகளோடு சேர்ந்து மனத்தாழ்மையோடு வேலை செய்யும்போது, நீங்கள் எவ்வளவு திறமையானவர் என்பதை மட்டுமல்ல, நீங்கள் எவ்வளவு தாழ்மையானவர் என்பதையும் அவர்கள் கவனிப்பார்கள்.

மனத்தாழ்மை—சோஷியல் மீடியாவைப் பயன்படுத்தும்போது

12. நட்புகளைச் சம்பாதிப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? விளக்குங்கள்.

12 நண்பர்களோடும் குடும்பத்தாரோடும் சேர்ந்து நாம் சந்தோஷமான தருணங்களை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் யெகோவாவின் ஆசை! (சங். 133:1) இயேசுவுக்கும் நல்ல நண்பர்கள் இருந்தார்கள். (யோவா. 15:15) உண்மையான நண்பர்களால் கிடைக்கிற நன்மைகளைப் பற்றி பைபிள் சொல்கிறது. (நீதி. 17:17; 18:24) நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வது நல்லதல்ல என்றும் பைபிள் சொல்கிறது. (நீதி. 18:1) தனிமையைப் போக்குகிற அருமருந்தாகவும், நண்பர்களைச் சம்பாதிப்பதற்கான சிறந்த வழியாகவும் சிலர் சோஷியல் மீடியாவைப் பார்க்கிறார்கள். ஆனால், ஜாக்கிரதை!

13. சோஷியல் மீடியாவைப் பயன்படுத்துகிற சிலரை, தனிமை உணர்வும் மனச்சோர்வும் வாட்டியெடுப்பதற்கு என்ன காரணம்?

13 சோஷியல் மீடியாவில் மற்றவர்கள் போடுகிற தகவல்களைப் படிப்பதற்கும், அவர்களுடைய ஃபோட்டோக்களைப் பார்ப்பதற்கும் சிலர் மணிக்கணக்காக நேரம் செலவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு தனிமை உணர்வும் மனச்சோர்வும்தான் மிஞ்சுவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஏன்? பொதுவாக, தங்கள் வாழ்க்கையில் அனுபவித்த சந்தோஷமான தருணங்களில் எடுத்த ஃபோட்டோக்களைத்தான் மக்கள் சோஷியல் மீடியாவில் போடுவார்கள். அதிலும், தங்களுடைய சிறந்த ஃபோட்டோக்களைத்தான் போடுவார்கள். அதோடு, நண்பர்களோடு எடுத்த ஃபோட்டோக்களையும், தாங்கள் பார்த்து ரசித்த இடங்களில் எடுத்த ஃபோட்டோக்களையும் போடுவார்கள். இதைப் பார்க்கிற ஒருவர், தன்னுடைய வாழ்க்கையை அவர்களுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து, தன் வாழ்க்கை ரொம்பச் சலிப்புத்தட்டுவதாக நினைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. 19 வயதான ஒரு சகோதரி இதைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “சனி ஞாயிறுகள்ல மத்தவங்க ஜாலியா இருக்குறத பார்க்குறப்போ, எனக்கு பொறாமையா இருக்கு. நான் மட்டும் வீட்டுல அடைஞ்சு கிடக்குறதா தோணுது.”

14. சோஷியல் மீடியாவை ஞானமாகப் பயன்படுத்துகிற விஷயத்தில், 1 பேதுரு 3:8-ல் இருக்கிற ஆலோசனை நமக்கு எப்படி உதவும்?

14 சோஷியல் மீடியாவை நல்ல விதத்திலும் நாம் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு, குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் தொடர்பில் இருப்பதற்கு அது ரொம்பப் பிரயோஜனமாக இருக்கிறது. ஆனால், சிலர் அதைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கவனித்திருக்கிறீர்களா? தங்களைப் பார்த்து மற்றவர்கள் பிரமித்துப்போக வேண்டும் என்பதற்காக, சில குறிப்புகளையும் ஃபோட்டோக்களையும் போடுகிறார்கள். ‘என்னைப் பார், என் அழகைப் பார்’ என்று அவர்கள் சொல்வதுபோல் இது இருக்கிறது! சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், தங்களுடைய ஃபோட்டோக்களையும் மற்றவர்களுடைய ஃபோட்டோக்களையும் பற்றிய அநாகரீகமான, அசிங்கமான குறிப்புகளைப் போடுகிறார்கள். இப்படியெல்லாம் செய்வது, கிறிஸ்தவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய மனத்தாழ்மை, அனுதாபம் போன்ற குணங்களுக்கு எதிரானவை.1 பேதுரு 3:8-ஐ வாசியுங்கள்.

சோஷியல் மீடியாவில் நீங்கள் போடுகிற விஷயங்கள், உங்களைப் பற்றி என்ன சொல்கின்றன? நீங்கள் பெருமையடிப்பவர் என்றா, மனத்தாழ்மையானவர் என்றா? (பாரா 15)

15. நம்மை நாமே உயர்வாக நினைக்காமல் இருப்பதற்கு பைபிள் எப்படி உதவுகிறது?

15 நீங்கள் சோஷியல் மீடியாவைப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியென்றால், இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சோஷியல் மீடியால நான் போடுற குறிப்புகளும் ஃபோட்டோக்களும், என்னை பத்தி நானே பெருமையடிச்சிக்கிற மாதிரி இருக்கா? மத்தவங்க பார்த்து பொறாமைப்படுற மாதிரி இருக்கா?’ பைபிள் இப்படிச் சொல்கிறது: “உலகத்தில் இருக்கிற எல்லாமே, அதாவது உடலின் ஆசையும் கண்களின் ஆசையும் பொருள் வசதிகளைப் பகட்டாகக் காட்டிக்கொள்கிற குணமும், பரலோகத் தகப்பனிடமிருந்து வருவதில்லை, இந்த உலகத்திடமிருந்துதான் வருகின்றன.” (1 யோ. 2:16) ‘பொருள் வசதிகளைப் பகட்டாகக் காட்டிக்கொள்கிற குணம்’ என்ற வாக்கியத்தை, “நம்மிடமுள்ள பொருள்களால் மிகவும் கர்வமாக உணர்தல்” என்று வேறொரு பைபிள் மொழிபெயர்ப்பு சொல்கிறது. தங்களைத் தாங்களே உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று கிறிஸ்தவர்கள் நினைப்பதில்லை. அதற்குப் பதிலாக, ‘வறட்டு கௌரவம் பார்க்காமலும், ஒருவருக்கொருவர் போட்டி போடாமலும், ஒருவர்மேல் ஒருவர் வயிற்றெரிச்சல் படாமலும் இருங்கள்” என்ற பைபிள் அறிவுரைக்குக் கீழ்ப்படிகிறார்கள். (கலா. 5:26) நாம் மனத்தாழ்மையோடு இருந்தால், இந்த உலக ஜனங்களைப் போல் நம்மை நாமே உயர்வாக நினைக்க மாட்டோம்.

‘தெளிந்த புத்தி இருப்பதைக் காட்டுங்கள்’

16. தலைக்கனத்தை நாம் ஏன் தூக்கியெறிந்துவிட வேண்டும்?

16 தலைக்கனம் இருப்பவர்களிடம் “தெளிந்த புத்தி” இருக்காது. அதனால், நாம் மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வது அவசியம். (ரோ. 12:3) தலைக்கனத்தோடு நடந்துகொள்பவர்கள், எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிறவர்களாக இருப்பார்கள், பெருமைபிடித்தவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய யோசனைகள், அவர்களுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி கெடுதலைத்தான் உண்டாக்கும். தங்களுடைய யோசனைகளை அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால், தங்கள் மனதைக் கெடுப்பதற்கு சாத்தானுக்கு இடம்கொடுத்துவிடுவார்கள். (2 கொ. 4:4; 11:3) ஆனால் மனத்தாழ்மையோடு இருப்பவர்கள், தெளிந்த புத்தியோடு நடந்துகொள்வார்கள். தங்களைப் பற்றிய சரியான எண்ணம் அவர்களுக்கு இருக்கும். நிறைய விதங்களில் மற்றவர்கள் தங்களைவிட உயர்ந்தவர்கள் என்பதை ஒத்துக்கொள்வார்கள். (பிலி. 2:3) அதோடு, “தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்” என்பதும் அவர்களுக்குத் தெரியும். (1 பே. 5:5) தெளிந்த புத்தியோடு இருப்பவர்கள், யெகோவாவின் எதிர்ப்பைச் சம்பாதித்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருப்பார்கள்.

17. தொடர்ந்து மனத்தாழ்மையோடு இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

17 நாம் தொடர்ந்து மனத்தாழ்மையோடு இருக்க வேண்டுமென்றால், “பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட்டு . . . புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்” என்ற பைபிள் அறிவுரையின்படி செய்ய வேண்டும். அப்படிச் செய்வதற்கு, கடினமாக உழைக்க வேண்டும். இயேசுவைப் பற்றி ஆழமாகப் படிக்க வேண்டும். எந்தளவு அவரைப் பின்பற்ற முடியுமோ, அந்தளவு அவரை நெருக்கமாகப் பின்பற்ற வேண்டும். (கொலோ. 3:9, 10; 1 பே. 2:21) இப்படியெல்லாம் செய்தால், நம் கல்யாண வாழ்க்கை தித்திக்கும், சபையின் ஒற்றுமை செழித்து வளரும். அதோடு, சோஷியல் மீடியாவை எப்படி ஞானமாகப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துகொள்வோம். எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் பிரியத்தையும் சம்பாதிப்போம்.

பாட்டு 80 நல்மனம்

^ பாரா. 5 தலைக்கனம் பிடித்த, சுயநலமான மக்கள் நிறைந்த ஓர் உலகத்தில் நாம் வாழ்கிறோம். அதனால், அவர்களுடைய குணங்கள் நம்மைத் தொற்றிக்கொள்ளாமல் இருப்பதற்கு நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக மூன்று விஷயங்களில் நம்மைப் பற்றி எப்படி அளவுக்கு அதிகமாக நினைக்காமல் இருக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 2 வார்த்தைகளின் விளக்கம்: தலைக்கனம் பிடித்த ஒருவர், மற்றவர்களைவிட தன்னை உயர்வாக நினைப்பார். இப்படி, அவர் சுயநலமாக நடந்துகொள்வார். ஆனால், மனத்தாழ்மையோடு நடந்துகொள்கிறவரிடம் சுயநலம் என்பது துளிகூட இருக்காது. மற்றவர்களைவிட தன்னை அவர் உயர்வாக நினைக்க மாட்டார்.

^ பாரா. 56 படவிளக்கம்: ஒரு மூப்பர், மாநாட்டில் திறமையாகப் பேச்சு கொடுக்கிறார், கண்காணியாகவும் இருக்கிறார். அதேசமயத்தில், ஊழியத்தை முன்னின்று வழிநடத்துகிறார்; ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்கிற வேலையிலும் ஈடுபடுகிறார்.