Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பர்நெட், சீமோன், எஸ்டன், கேலப்

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—ஓசியானியாவில்

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—ஓசியானியாவில்

ரெனி என்ற சகோதரிக்கு சுமார் 35 வயது. ஆஸ்திரேலியாவில் யெகோவாவுக்கு சுறுசுறுப்பாக ஊழியம் செய்கிற குடும்பத்தில் பிறந்தவர். ரெனி சொல்கிறார், “தேவை அதிகம் இருக்கிற இடங்கள்ல சேவை செய்றதுக்காக நாங்க நிறைய ஊர்களுக்கு மாறிப்போயிருக்கோம். நான் சந்தோஷப்படுற மாதிரிதான் என் அப்பா-அம்மா எல்லாத்தையும் செய்வாங்க. நானும் என் பிள்ளைங்களுக்கு அப்படித்தான் செய்யணும்னு ஆசைப்படுறேன்.”

ரெனியுடைய கணவர் ஷேனுக்கும் (கிட்டத்தட்ட 39 வயது) அதே ஆசைதான் இருந்தது. அவர் சொல்கிறார், “எங்களுக்கு ரெண்டாவது குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் ஒருநாள் காவற்கோபுரத்துல ஒரு அனுபவத்தை படிச்சோம். * (அடிக்குறிப்பை பாருங்கள்.) தென்மேற்கு பசிபிக் கடலில் இருந்த டோங்கா தீவுக்கு ஒரு குடும்பம் படகில போய் சாட்சி கொடுத்ததைப் பத்தி அதுல இருந்தது. நாங்களும் தேவை இருக்கிற இடத்துல சேவை செய்யணும்னு ஆசைப்பட்டோம். உடனே ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து கிளை அலுவலகத்துக்கு கடிதம் எழுதுனோம். * (அடிக்குறிப்பை பாருங்கள்.) அவங்க எங்களை டோங்கோ தீவுல ஊழியம் செய்ய சொன்னப்போ எங்களுக்கு ஒரே ஆச்சரியமா இருந்துச்சு!”

ஜேக்கப், ரெனி, ஸ்கை, ஷேன்

ஷேன், ரெனி மற்றும் அவர்களுடைய இரண்டு பிள்ளைகள் ஜேக்கப், ஸ்கை ஆகியோர் டோங்கா தீவில் கிட்டத்தட்ட ஒரு வருஷம் இருந்தார்கள். அங்கே தொடர்ந்து கலவரம் நடந்ததால் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிப் போக வேண்டியிருந்தது. இருந்தாலும், தேவை அதிகமுள்ள இடத்தில் ஊழியம் செய்வதைப் பற்றி யோசித்துக்கொண்டு இருந்தார்கள். 2011-ல் ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கில் சுமார் 1,500 கி.மீ. தொலைவிலுள்ள நார்ஃபோக் என்ற குட்டி தீவுக்கு குடிமாறினார்கள். அங்கு போனதைப் பற்றி எப்படி உணர்கிறார்கள்? 14 வயது ஜேக்கப் சொல்கிறான், “யெகோவா எங்களுக்கு தேவையான எல்லாத்தையும் கொடுத்திருக்கார்; அதுமட்டுமில்ல, ஊழியத்தை சந்தோஷமா செய்றதுக்கும் உதவி செஞ்சிருக்கார்.”

குடும்பமாக சேவை செய்ய முயற்சி செய்யுங்கள்

ஷேன் குடும்பத்தைப் போலவே நிறைய குடும்பங்களும் தேவை அதிகமுள்ள இடத்தில் சந்தோஷமாக ஊழியம் செய்கிறார்கள். அதற்கு காரணம் என்ன?

“பைபிளை பத்தி தெரிஞ்சுக்க இங்க நிறைய பேர் ஆர்வமா இருந்தாங்க. அவங்களுக்கு தொடர்ந்து பைபிள் படிப்பு நடத்த எங்களுக்கு ஆசையா இருந்தது.” —பர்நெட்

பர்நெட்-சீமோன் தம்பதிக்கு (சுமார் 35 வயது) எஸ்டன், கேலப் (12 மற்றும் 9 வயது) என்ற இரண்டு பிள்ளைகள். ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்தில் பர்கீடவுன் என்ற ஒதுக்குப்புறமான ஊருக்கு அவர்கள் குடிமாறினார்கள். பர்நெட் சொல்கிறார், “மூணு இல்லன்னா நாலு வருஷத்துக்கு ஒரு தடவைதான் சாட்சிகள் இங்க ஊழியம் செய்வாங்க. ஆனா, பைபிளை பத்தி தெரிஞ்சுக்க இங்க நிறையப் பேர் ஆர்வமா இருந்தாங்க. அவங்களுக்கு தொடர்ந்து பைபிள் படிப்பு நடத்த எங்களுக்கு ஆசையா இருந்தது.”

ஜிம், ஜாக், மார்க், கேரன்

மார்க் மற்றும் கேரன் தம்பதிக்கு (சுமார் 53 வயது) ஜெஸிக்கா, ஜிம், ஜாக் என்ற மூன்று பிள்ளைகள். அந்த குடும்பத்தார் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னிக்கு பக்கத்தில் இருக்கும் நிறைய சபைகளில் சேவை செய்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் வடக்கு பகுதியிலுள்ள நுலன்பை என்ற இடத்துக்கு குடிமாறியிருக்கிறார்கள். அங்கு இருக்கிற நிறையப் பேர் சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். மார்க் இப்படி சொல்கிறார்: “நான் ஜனங்களை ரொம்ப நேசிக்கிறேன். அதனால சபையிலயும் ஊழியத்திலயும் எங்க அதிகமா தேவை இருக்கோ அங்க சேவை செய்ய ஆசைப்படுறேன்.” ஆரம்பத்தில் கேரன் அங்கு போக தயங்கினார். அவர் சொல்கிறார், “மார்க்கும் மத்தவங்களும் என்னை ரொம்ப உற்சாகப்படுத்துனாங்க. அதனால, அங்க போய்தான் பார்க்கலாமேனு நினைச்சேன். ஆனா, இங்க வந்ததுக்காக நான் இப்போ ரொம்ப சந்தோஷப்படுறேன்.”

பென்ஜமின், ஜேட், ஃபிரியா, கேரலின்

பென்ஜமின்-கேரலின் தம்பதிக்கு ஜேட் மற்றும் ஃபிரியா என்ற இரண்டு பெண் குழந்தைகள். 2011-ல் அவர்கள் ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்திலிருந்து தைமூர்-லெஸ்டா என்ற ஒரு சிறிய நாட்டுக்கு குடிமாறிப் போனார்கள். இது இந்தோனேசியாவிலுள்ள ஒரு தீவுக்கூட்டத்திலுள்ள தைமூர் தீவில் உள்ளது. பென்ஜமின் சொல்கிறார்: “நானும் கேரலினும் இதுக்கு முன்னாடி தைமூர்-லெஸ்டாவுல விசேஷ பயனியர்களா சேவை செஞ்சோம். அங்க ஊழியம் செய்றது ரொம்ப நல்லா இருந்துச்சு. அங்க இருந்த சகோதரர்கள் எல்லாரும் எங்களுக்கு நிறைய உதவி செஞ்சாங்க. அந்த இடத்தைவிட்டு வர்றதுக்கு எங்களுக்கு மனசே இல்லை. கண்டிப்பா திரும்பவும் இங்க வரணும்னு நினைச்சிட்டு இருந்தோம். எங்களுக்கு பிள்ளைங்க பிறந்ததுனால உடனே போக முடியல, இருந்தாலும் கொஞ்ச நாள் கழிச்சு போக தீர்மானிச்சோம்.” கேரலின் சொல்கிறார்: “மிஷனரிகள், பெத்தேல் ஊழியர்கள், விசேஷ பயனியர்களோடவே எங்க பிள்ளைங்க எப்பவும் இருக்கணும், அவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்னு நாங்க ஆசைப்பட்டோம்.”

சேவை செய்ய தயாராகுங்கள்

இயேசு அவருடைய சீடர்களிடம், “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், அதைக் கட்டி முடிக்கப் போதுமான வசதி தனக்கு இருக்கிறதா என்று முதலில் உட்கார்ந்து செலவைக் கணக்கிட்டுப் பார்க்காமல் இருப்பானா?” என்று சொன்னார். (லூக். 14:28) அதேபோல் ஒரு இடத்தைவிட்டு வேறொரு இடத்துக்கு குடிமாறிப்போக விரும்புகிறவர்கள் நன்றாக திட்டமிட வேண்டும். அவர்கள் எதையெல்லாம் திட்டமிட வேண்டும்?

கடவுளோடுள்ள நட்பை பலப்படுத்த வேண்டும். “மத்தவங்களுக்கு சேவை செய்றதுக்காகத்தான் அங்க போறோம், அவங்களுக்கு பாரமா இருக்கக் கூடாது. அதனால, அங்க போறதுக்கு முன்னாடியே யெகோவாவோட இருக்குற பந்தத்தை பலப்படுத்த நாங்க முயற்சி செஞ்சோம். அதோட, சபையிலயும் ஊழியத்துலயும் சுறுசுறுப்பா சேவை செஞ்சோம்” என்கிறார் பென்ஜமின்.

ஜேக்கப் இப்படி சொல்கிறார்: “நார்ஃபோக் தீவுக்கு போறதுக்கு முன்னாடி தேவை அதிகமுள்ள இடத்துக்கு குடிமாறிப்போன நிறையப் பேருடைய அனுபவங்களை காவற்கோபுரத்திலயும் விழித்தெழுவிலயும் படிச்சோம். அவங்க என்னென்ன கஷ்டங்களை அனுபவிச்சாங்க, யெகோவா அவங்கள எப்படியெல்லாம் கவனிச்சிக்கிட்டாருனு நாங்க குடும்பமா பேசினோம்.” ஜேக்கப்பின் தங்கை ஸ்கை (11 வயது) சொல்கிறாள்: “இதை பத்தி நான் யெகோவாகிட்ட நிறைய தடவை ஜெபம் செஞ்சேன். எங்க அப்பா அம்மாவோடு சேர்ந்தும் ஜெபம் செஞ்சேன்.”

மனதளவில் தயாராகுங்கள். ரெனி சொல்கிறார்: “என்னோட சொந்தக்காரங்களும் நண்பர்களும் எங்க வீட்டுக்கு பக்கத்துலயே இருந்ததுனால அங்க இருக்கிறது எனக்கு ரொம்ப வசதியா இருந்தது. இருந்தாலும், அதையெல்லாம் விட்டுட்டு வர்றதை பத்தி நான் யோசிக்கல. தேவை அதிகமுள்ள இடத்துக்கு குடும்பமா போறதுனால கிடைக்கப் போற சந்தோஷத்தை பத்தித்தான் யோசிச்சேன்.”

கலாச்சாரத்தை தெரிந்துகொள்ளுங்கள். தேவையுள்ள இடத்துக்கு போவதற்கு முன்பு அந்த இடம் எப்படி இருக்கும், அங்கு ஜனங்கள் எப்படி இருப்பார்கள் என்பதை எல்லாம் நிறையப் பேர் தெரிந்துகொள்கிறார்கள். மார்க் சொல்கிறார், “நுலன்பை என்ற இடத்தை பத்தி நல்லா தெரிஞ்சுக்கிறதுக்காக நிறைய படிச்சோம். அங்க இருக்கிற ஜனங்களை பத்தியும் அவங்களோட கலாச்சாரத்தை பத்தியும் நாங்க தெரிஞ்சிக்க அங்கிருக்கிற சகோதரர்கள் எங்களுக்கு அந்த ஊரோட நியூஸ் பேப்பரை அனுப்புனாங்க.”

நார்ஃபோக் தீவுக்கு குடிமாறிப்போன ஷேன் இப்படி சொல்கிறார்: “எல்லாத்தையும்விட யெகோவாவுக்கு பிடிச்ச குணங்களை காட்டுறதுக்கு நான் ரொம்ப முயற்சி செஞ்சேன். நான் நேர்மையா இருந்தா... பொறுமையா நடந்துக்கிட்டா... கடினமா உழைச்சா... இந்த உலகத்தில எங்க வேணும்னாலும் என்னால வாழ முடியும்.”

கஷ்டங்களை எப்படி சமாளிக்கலாம்?

தேவை அதிகமுள்ள இடத்தில் வெற்றிகரமாக சேவை செய்தவர்கள் 2 முக்கியமான விஷயத்தை சொல்கிறார்கள். ஒன்று, எதிர்பார்க்காத பிரச்சினைகள் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு, அந்த கஷ்டமான சூழ்நிலையை நினைத்து நாம் சோர்ந்து போகக் கூடாது. சில உதாரணங்களை நாம் பார்க்கலாம்:

ரெனி சொல்கிறார், “கஷ்டமான சூழ்நிலைமையக்கூட நல்லபடியா சமாளிக்க நான் கத்துக்கிட்டேன். உதாரணத்துக்கு, நார்ஃபோக் தீவுல கடல் கொந்தளிப்பு இருந்ததுனா, சரக்கு கப்பல் இங்க வராது. அதனால, மளிகை சாமான்கள் எல்லாம் சரியா கிடைக்காது, விலைவாசியும் அதிகமாயிடும். அதனால, நான் ரொம்ப சிக்கனமாதான் எல்லாத்தையும் செலவு செய்வேன்.” ரெனியின் கணவர் ஷேன் சொல்கிறார், “ஒரு வாரத்துக்கு எவ்வளவு செலவு செய்யணும்னு முடிவு செஞ்சோமோ அதுக்குள்ளயே எங்க செலவை பார்த்துக்கிட்டோம்.”

ஷேன் மற்றும் ரெனியின் மகன் ஜேக்கப்புக்கு வேறொரு சவால் இருந்தது. அவன் இப்படி சொல்கிறான், “எங்க சபையில எங்களை தவிர இன்னும் 7 பேர் இருந்தாங்க. அவங்க எல்லாரும் என்னைவிட பெரியவங்க. என் வயசுல எனக்கு பிரெண்ட்ஸ் யாருமே இல்ல. ஆனா, நான் சபையிலிருந்த எல்லாரோடும் சேர்ந்து ஊழியத்துக்கு போனேன். இப்போ அவங்க எல்லாரும் எனக்கு பிரெண்ட்ஸ்.”

ஜிம்முக்கும் (21 வயது) இதேபோன்ற பிரச்சினைதான். அவர் சொல்கிறார், “நுலன்பை சபையில இருந்து அடுத்த சபைக்கு போகணும்னா 725 கி.மீ. பயணம் செய்யணும். மாநாட்டுக்கு போகும்போதுதான் அவங்களோட பேசி பழக முடியும். அதனால, மாநாடு சமயத்துல ரொம்ப சீக்கிரமா போயிடுவோம். ஒவ்வொரு வருஷமும் மாநாடு சமயம் எங்களுக்கு மறக்க முடியாத சமயமா இருக்கும்.”

“இங்க வந்ததுக்காக நான் ரொம்ப சந்தோஷப்படுறோம்!”

“கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 10:22) தேவை அதிகமுள்ள இடத்தில் ஊழியம் செய்த நிறையப் பேர் இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

“கடவுளோட அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்குறவங்களை யெகோவா நல்லா கவனிச்சுக்குவார்னு எங்க ரெண்டு பிள்ளைங்களும் நல்லா புரிஞ்சுக்கிட்டாங்க. அந்த நம்பிக்கை தானா வரல, அதை அவங்களே உணர்ந்திருக்காங்க. நாங்க தேவை அதிகமுள்ள இடத்துக்கு போனதுனாலதான் எங்க பிள்ளைங்களால இதை புரிஞ்சுக்க முடிஞ்சது. இதுதான் எங்களுக்கு கிடைச்ச மிகப்பெரிய ஆசீர்வாதம்” என்று மார்க் சொல்கிறார்.

“என் மனைவியோடும் பிள்ளைங்களோடும் நான் இன்னும் நெருங்கி இருக்கிறேன். யெகோவா அவங்களுக்காக செஞ்சிருக்கிறத பத்தி அவங்களே சொல்றதை கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது” என்று ஷேன் சொல்கிறார். அவருடைய மகன் ஜேக்கப் இப்படி சொல்கிறார்: “இங்க இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இங்க வந்ததுக்காக நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்.”

^ பாரா. 3 டிசம்பர் 15, 2004 காவற்கோபுரத்தில் பக். 8-11-ல் “‘சிநேகத் தீவுகளில்’ கடவுளின் சிநேகிதர்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 3 ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து கிளை அலுவலகங்கள் 2012-ல் ஒன்றாக சேர்க்கப்பட்டது; இது ஆஸ்ட்ரலேசியா (Australasia) கிளை அலுவலகம் என்று அழைக்கப்படுகிறது.