படிப்புக் கட்டுரை 27
‘யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்’
“யெகோவாமேல் நம்பிக்கையாக இரு. தைரியமாக இரு, நெஞ்சத்தில் உறுதியோடு இரு.”—சங். 27:14.
பாட்டு 128 முடிவுவரை சகித்திருப்பாயே!
இந்தக் கட்டுரையில்... *
1. (அ) யெகோவா நமக்கு என்ன நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்? (ஆ) ‘யெகோவாமேல் நம்பிக்கையாக இருப்பது’ என்பதன் அர்த்தம் என்ன? (‘வார்த்தையின் விளக்கத்தை’ பாருங்கள்.)
தன்மேல் அன்பு வைத்திருப்பவர்களுக்கு யெகோவா ஒரு அழகான நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். சீக்கிரத்தில் நோய், வேதனை, மரணம் எல்லாவற்றையும் அவர் முடிவுக்குக் கொண்டுவரப்போகிறார். (வெளி. 21:3, 4) அவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிற ‘தாழ்மையான மக்கள்’ இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றுவதற்கு அவர் உதவி செய்வார். (சங். 37:9-11) அதுமட்டுமல்ல, அவரோடு ஒரு நெருக்கமான பந்தத்தை அனுபவிக்க நம் ஒவ்வொருவருக்கும் அவர் வாய்ப்பு கொடுப்பார். அந்தப் பந்தம் இப்போது நாம் அனுபவிக்கிற பந்தத்தைவிட ரொம்ப அருமையாக இருக்கும். இது எவ்வளவு அற்புதமான நம்பிக்கை! ஆனால், கடவுளுடைய வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேறும் என்று எதை வைத்து நாம் நம்பலாம்? யெகோவா ஒன்று சொன்னால் அதைச் செய்யாமல் இருக்கவே மாட்டார். அதனால் நாம் ‘யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கலாம்.’ * (சங். 27:14) அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக நாம் பொறுமையாகவும் சந்தோஷமாகவும் காத்திருக்க வேண்டும். அப்போதுதான், அவர்மேல் நம்பிக்கையாக இருக்கிறோம் என்று நம்மால் காட்ட முடியும்.—ஏசா. 55:10, 11.
2. யெகோவா ஏற்கெனவே என்ன செய்திருக்கிறார்?
2 சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர் என்பதை யெகோவா ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார். அதற்கு ஒரு தலைசிறந்த உதாரணத்தை இப்போது பார்க்கலாம். எல்லா தேசங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்த மக்களை உண்மை வணக்கத்தில் கூட்டிச்சேர்க்கப்போவதாக வெளிப்படுத்துதல் புத்தகத்தில் யெகோவா வாக்குக் கொடுத்தார். அவர்கள்தான் இன்றைக்கு “திரள் கூட்டமான” மக்களாக இருக்கிறார்கள். (வெளி. 7:9, 10) இந்தத் திரள் கூட்டத்தில், வெவ்வேறு இனங்களையும் மொழிகளையும் பின்னணிகளையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எல்லாரும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருக்கிறார்கள். (சங். 133:1; யோவா. 10:16) அவர்கள் ஆர்வமாக ஊழியம் செய்கிறார்கள். காதுகொடுத்துக் கேட்பவர்களுக்கு, புதிய உலகம் வரும் என்ற அவர்களுடைய நம்பிக்கையைப் பற்றிச் சொல்ல எப்போதும் தயாராக இருக்கிறார்கள். (மத். 28:19, 20; வெளி. 14:6, 7; 22:17) நீங்கள் திரள்கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரா? அப்படியென்றால், புதிய உலகம் வரப்போகிறது என்ற நம்பிக்கை உங்களுக்கு ஒரு பெரிய பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
3. சாத்தானுடைய குறிக்கோள் என்ன?
3 உங்களுடைய நம்பிக்கையை அழித்துவிட வேண்டும் என்றுதான் சாத்தான் நினைக்கிறான். யெகோவாவுக்கு உங்கள்மேல் அக்கறை கிடையாது, அவருடைய வாக்குறுதிகளைக் காப்பாற்ற மாட்டார் என்றெல்லாம் உங்களை நம்ப வைப்பதுதான் சாத்தானுடைய குறிக்கோள். அவன் நினைத்தபடியே நம்முடைய நம்பிக்கையை அழித்துவிட்டான் என்றால் நாம் தைரியத்தை இழந்துவிடுவோம், யெகோவாவுக்குச் சேவை செய்வதையும் ஒருவேளை நிறுத்திவிடுவோம். யோபுவின் நம்பிக்கையை அழிப்பதற்கும்கூட சாத்தான் முயற்சி செய்தான். அவர் யெகோவாவை வணங்குவதை நிறுத்திவிட வேண்டும் என்பதில் அவன் குறியாக இருந்தான்.
4. எதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்? (யோபு 1:9-12)
4 யோபுவின் உத்தமத்தைக் குலைத்துப்போடுவதற்கு சாத்தான் என்னென்ன சூழ்ச்சிகளைப் பயன்படுத்தினான்? (யோபு 1:9-12-ஐ வாசியுங்கள்.) யோபுவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கடவுள் நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்றும், அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் ஞாபகம் வைப்பது ஏன் முக்கியம்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்தக் கட்டுரையில் பதிலைப் பார்ப்போம்.
யோபுவின் நம்பிக்கையை அழிக்க சாத்தான் எடுத்த முயற்சி
5-6. கொஞ்சக் காலத்திலேயே யோபுவுக்கு என்னவெல்லாம் நடந்தது?
5 யோபுவின் வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. அவர் யெகோவாவோடு நெருக்கமான பந்தம் வைத்திருந்தார். அவருக்கு ஒரு பெரிய குடும்பம் இருந்தது. அவர்கள் எல்லாரும் சந்தோஷமாக இருந்தார்கள். யோபு பெரிய பணக்காரராகவும் இருந்தார். (யோபு 1:1-5) ஆனால், ஒரே நாளில் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே யோபு இழந்துவிட்டார். முதலில் அவருடைய சொத்தெல்லாம் அழிந்துபோனது. (யோபு 1:13-17) பிறகு, அவர் உயிரையே வைத்திருந்த அவருடைய எல்லா பிள்ளைகளும் இறந்துவிட்டார்கள். அவருடைய மனம் எப்படி சுக்குநூறாக உடைந்துபோயிருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரேவொரு பிள்ளை இறந்துபோனாலே பெற்றோர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால், யோபுவின் பத்துப் பிள்ளைகளும் ஒரே சமயத்தில் இறந்துவிட்டார்கள். அப்போது யோபுவும் அவருடைய மனைவியும் எந்தளவு துடிதுடித்துப்போயிருப்பார்கள்! அதிர்ச்சியிலும் துக்கத்திலும் வேதனையிலும் அவர்கள் இடிந்துபோயிருப்பார்கள்! யோபு தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டு அப்படியே தரையில் விழுந்துவிட்டார்.—யோபு 1:18-21அ.
6 அடுத்ததாக, மற்றவர்கள் பார்த்து அருவருக்கிற அளவுக்கு ஒரு கொடிய நோயை யோபுவுக்கு சாத்தான் வர வைத்தான். (யோபு 2:6-8; 7:5) ஒருசமயத்தில், ஊர் மக்கள் மத்தியில் யோபுவுக்கு ரொம்ப மதிப்புமரியாதை இருந்தது. எல்லாரும் ஆலோசனை கேட்க அவரிடம் வருவார்கள். (யோபு 31:18) ஆனால் இப்போது, யாரும் அவர் பக்கத்தில்கூட போகவில்லை. அவரை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். அவருடைய அண்ணன் தம்பிகளும், நெருங்கிய நண்பர்களும், ஏன் வீட்டு வேலைக்காரர்களும்கூட, அவரை வெறுத்தார்கள்.—யோபு 19:13, 14, 16.
7. (அ) தனக்கு ஏன் கஷ்டம் வந்ததாக யோபு நினைத்தார், ஆனாலும் அவர் என்ன செய்யவில்லை? (ஆ) படத்தில் பார்ப்பதைப் போன்ற சோதனைகள் நமக்கு எப்படி வரலாம்?
7 யெகோவா கோபமாக இருப்பதால்தான் இந்தக் கஷ்டங்களெல்லாம் வந்தன என்று யோபுவை நம்பவைக்க வேண்டுமென சாத்தான் நினைத்தான். உதாரணத்துக்கு, யோபுவின் பத்துப் பிள்ளைகள் ஒரு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வீட்டை தரைமட்டமாக்க சாத்தான் சூறாவளிக் காற்றை வர வைத்தான். (யோபு 1:18, 19) அதுமட்டுமல்ல, யோபுவின் ஆடுகளையும் அந்த ஆடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த வேலைக்காரர்களையும் கொன்றுபோடுவதற்காக வானத்திலிருந்து நெருப்பை வர வைத்தான். (யோபு 1:16) அந்தச் சூறாவளி காற்றும் நெருப்பும் வானத்திலிருந்து வந்ததால் யெகோவாதான் அதை வர வைத்திருப்பார் என்று யோபு நினைத்துக்கொண்டார். அதனால், யெகோவாவுக்கு கோபம் வருகிற மாதிரி ஏதோ செய்ததால்தான் தனக்கு இந்தத் தண்டனை கிடைத்தது என்று நினைத்தார். ஆனாலும், யோபு யெகோவாவைத் திட்டவே இல்லை. இவ்வளவு வருஷமாக யெகோவா எத்தனையோ நல்ல விஷயங்களைக் கொடுத்திருந்ததை யோபு மறக்கவில்லை. நல்லதை மட்டும் ஏற்றுக்கொண்டு கஷ்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியுமா என்று யோசித்தார். அதனால், “யெகோவாவின் பெயருக்கு என்றும் புகழ் சேரட்டும்” என்று சொன்னார். (யோபு 1:20, 21; 2:10) அதுவரை சாத்தான் யோபுவின் சொத்தையெல்லாம் அழித்திருந்தாலும், அவருடைய மனதையும் உடலையும் வாட்டி எடுத்திருந்தாலும், யோபு யெகோவாவுக்கு உண்மையாகவே இருந்தார். ஆனால், அவரை சாத்தான் அதோடு விட்டுவிடவில்லை.
8. யோபுவுக்கு எதிராக சாத்தான் அடுத்து என்ன சூழ்ச்சியைப் பயன்படுத்தினான்?
8 யோபுவுக்கு எதிராக சாத்தான் இன்னொரு சூழ்ச்சியையும் பயன்படுத்தினான். தான் எதற்குமே லாயக்கில்லாதவன் என்று யோபுவை உணர வைப்பதற்காக மூன்று போலி நண்பர்களைத் தூண்டினான். யோபு நிறைய அக்கிரமங்கள் செய்ததால்தான் இப்படிக் கஷ்டப்படுகிறார் என்று அந்த மூன்று பேரும் சொன்னார்கள். (யோபு 22:5-9) ஒருவேளை அவர் நிறைய நல்ல விஷயங்களை செய்தாலும் கடவுளை சந்தோஷப்படுத்த முடியாது என்று அவரை நம்ப வைக்கவும் முயற்சி செய்தார்கள். (யோபு 4:18; 22:2, 3; 25:4) கடவுளுக்கு அவர்மேல் அன்பு இல்லை... அவரை கவனித்துக்கொள்ள மாட்டார்... கடவுளை வணங்குவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை... என்றெல்லாம் யோபுவை நினைக்க வைக்க முயற்சி செய்தார்கள். அவர்கள் பேசியதையெல்லாம் கேட்ட பிறகு தன்னுடைய நிலைமை மாறும் என்ற கொஞ்சநஞ்ச நம்பிக்கைகூட யோபுவுக்கு இல்லாமல் போயிருக்கும்.
9. யோபுவால் எப்படித் தைரியமாகவும் உறுதியாகவும் இருக்க முடிந்தது?
9 இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். யோபு சாம்பலில் உட்கார்ந்திருக்கிறார். (யோபு 2:8) வலியில் தவியாய்த் தவிக்கிறார். அவருடைய நண்பர்கள் அவரை வார்த்தைகளால் சரமாரியாகத் தாக்குகிறார்கள். யோபு கெட்டவர் என்றும், அவர் எந்த நல்ல விஷயத்தையும் செய்யவில்லை என்றும் சொல்கிறார்கள். அவருடைய பிரச்சினைகள் பாறாங்கல் போல அவருடைய மனதை அழுத்துகின்றன. பிள்ளைகளை இழந்த சோகம் அவருடைய நெஞ்சைப் பிழிகிறது. முதலில் யோபு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். (யோபு 2:13–3:1) அவர் அமைதியாக இருப்பதைப் பார்க்கும்போது, இனிமேல் அவர் யெகோவாவை வணங்க மாட்டார் என்று அவருடைய நண்பர்கள் நினைப்பதுபோல் தெரிகிறது. ஆனால், அது தப்புக்கணக்கு. ஏனென்றால், ஒருகட்டத்தில் “சாகும்வரை நான் என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன்” என்று யோபு சொல்கிறார். (யோபு 27:5) அநேகமாக, தலைநிமிர்ந்து அந்த மூன்று பேரையும் நேருக்குநேர் பார்த்து அவர் அப்படிச் சொல்லியிருப்பார். உச்சக்கட்ட வேதனையில் இருந்தபோதும், யோபுவால் எப்படி இவ்வளவு தைரியமாகவும் உறுதியாகவும் இருக்க முடிந்தது? சோர்வின் எல்லைக்கே அவர் போனாலும், கடவுள் தன்னுடைய நிலைமையை மாற்றுவார் என்ற நம்பிக்கையை அவர் விடவே இல்லை. தன்னுடைய உயிரே போனாலும் யெகோவா தனக்கு உயிர் கொடுத்து மறுபடியும் வாழவைப்பார் என்று அவர் நம்பினார்.—யோபு 14:13-15.
யோபுவைப்போல் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?
10. யோபுவின் பதிவிலிருந்து நாம் எதையெல்லாம் கற்றுக்கொள்கிறோம்?
10 யெகோவாவைவிட்டு விலகுவதற்கு சாத்தானால் நம்மைக் கட்டாயப்படுத்த முடியாது என்று யோபுவின் பதிவிலிருந்து கற்றுக்கொள்கிறோம். நமக்கு நடக்கிற எல்லா விஷயத்தைப் பற்றியும் யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும் என்றும் கற்றுக்கொள்கிறோம். அதுமட்டுமல்ல, வேறு சில முக்கியமான பாடங்களையும் கற்றுக்கொள்கிறோம். அந்தப் பாடங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
11. நாம் யெகோவாவை எப்போதுமே நம்பினால் எதில் உறுதியாக இருக்கலாம்? (யாக்கோபு 4:7)
11 நாம் யெகோவாவை எப்போதுமே நம்பினோம் என்றால், எந்தக் கஷ்டங்கள் வந்தாலும் நம்மால் சகித்திருக்கவும், சாத்தானை எதிர்த்து நிற்கவும் முடியுமென்று யோபு நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அப்படி நாம் சாத்தானை எதிர்த்து நிற்கும்போது அவன் நம்மைவிட்டு ஓடிப்போவான் என்று பைபிள் உறுதியளிக்கிறது.—யாக்கோபு 4:7-ஐ வாசியுங்கள்.
12. உயிர்த்தெழுதல் நம்பிக்கை யோபுவை எப்படிப் பலப்படுத்தியது?
12 உயிர்த்தெழுதல் நடக்கும் என்பதில் நாம் எப்போதுமே நம்பிக்கையாக இருக்க வேண்டும். போன கட்டுரையில் பார்த்தபடி, நம்முடைய உத்தமத்தைக் குலைத்துப்போடுவதற்கு மரண பயத்தை சாத்தான் பயன்படுத்துகிறான். யோபுவின் விஷயத்தில், ‘தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள யோபு எதை வேண்டுமானாலும் செய்வார், தன்னுடைய உத்தமத்தைக்கூட விட்டுக்கொடுத்துவிடுவார்’ என்று சாத்தான் மறைமுகமாகச் சொன்னான். ஆனால், சாத்தான் சொன்னது பொய்யாகிவிட்டது. உயிர் போகும் நிலைமையில்கூட யோபு யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். யெகோவா நல்லது செய்வார், தன்னுடைய நிலைமையை மாற்றுவார் என்று உறுதியாக நம்பியதால்தான் அவரால் சகித்திருக்க முடிந்தது. ஒருவேளை, உயிரோடு இருக்கும்போதே தன்னுடைய நிலைமையை யெகோவா மாற்றவில்லை என்றாலும் இறந்த பிறகு எதிர்காலத்தில் தனக்கு உயிர் கொடுத்து மறுபடியும் தன்னை வாழ வைப்பார் என்று யோபு நம்பினார். உயிர்த்தெழுதல் நடக்கும் என்பதில் யோபுவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அதே நம்பிக்கை நமக்கும் இருந்தது என்றால், சாவை சந்திக்கிற நிலைமையில்கூட நம்முடைய உத்தமத்தை நாம் விட மாட்டோம்.
13. யோபுவுக்கு எதிராக சாத்தான் பயன்படுத்திய சூழ்ச்சிகளை நாம் ஏன் நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்?
13 யோபுவுக்கு எதிராக சாத்தான் பயன்படுத்திய சூழ்ச்சிகளைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், அதே சூழ்ச்சிகளைத்தான் இன்றைக்கு நமக்கு எதிராகவும் அவன் பயன்படுத்துகிறான். சாத்தான் என்ன குற்றம் சுமத்தியிருக்கிறான் என்று கவனியுங்கள். ‘ஒரு மனுஷன் [யோபு மட்டுமல்ல] தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராயிருப்பான்’ என்று அவன் சொன்னான் (யோபு 2:4, 5) அப்படியென்றால், நமக்கு யெகோவாமேல் உண்மையிலேயே அன்பு இல்லை என்றும், நம்முடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அவரைவிட்டு விலகுவதற்குக்கூட நாம் தயங்க மாட்டோம் என்றும் சொல்லாமல் சொன்னான். அதுமட்டுமல்ல, கடவுளுக்கு நம்மேல் அன்பு இல்லை என்றும், அவரைப் பிரியப்படுத்துவதற்கு நாம் எதைச் செய்தாலும் அவர் அதைக் கண்டுகொள்ள மாட்டார் என்றும் மறைமுகமாகச் சொன்னான். சாத்தானுடைய சூழ்ச்சிகளைப் பற்றி யெகோவா நமக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அதனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிற நாம் அவனுடைய பொய்களை நம்பி ஏமாந்துபோக மாட்டோம்.
14. நமக்கு வருகிற கஷ்டங்கள் எதைப் புரிந்துகொள்வதற்கு உதவும்? உதாரணத்தோடு விளக்குங்கள்.
14 நமக்கு வருகிற கஷ்டங்களை, நம்மைநாமே புரிந்துகொள்ள உதவுகிற வாய்ப்பாக நாம் பார்க்க வேண்டும். யோபுவுக்கு வந்த கஷ்டங்கள், அவருக்கு இருந்த குறைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றைச் சரிசெய்வதற்கும் அவருக்கு உதவின. உதாரணத்துக்கு, மனத்தாழ்மையை அவர் இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று புரிந்துகொண்டார். (யோபு 42:3) நாமும்கூட சோதனைகளைச் சந்திக்கும்போது, நம்மைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். நிக்கோலை * என்ற சகோதரருக்கு நிறைய உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. ஆனாலும், அவரை ஜெயிலில் போட்டார்கள். “ஜெயில் ஒரு எக்ஸ்ரே மாதிரி. நமக்குள்ள மறஞ்சிருக்குற குணங்கள அது படம்பிடிச்சு காட்டும்” என்று அவர் சொல்கிறார். நம்மிடம் இருக்கிற குறைகளை முதலில் தெரிந்துகொண்டோம் என்றால், பிறகு அவற்றைச் சரிசெய்ய நம்மால் முயற்சி எடுக்க முடியும்.
15. யார் சொல்வதை நாம் கேட்க வேண்டும், ஏன்?
15 யெகோவா சொல்வதைத்தான் நாம் கேட்க வேண்டும், எதிரிகள் சொல்வதை அல்ல! யெகோவா பேசியபோது யோபு கவனமாகக் கேட்டார். ஒரு கருத்தில், யெகோவா யோபுவிடம், ‘நான் படைச்சிருக்குறத எல்லாம் நீ பாத்தியா, எனக்கு எவ்வளவு சக்தி இருக்குனு உனக்கு புரியுதா? உனக்கு என்னெல்லாம் நடந்திருக்குனு எனக்கு நல்லா தெரியும். உன்னை என்னால கவனிச்சுக்க முடியாதுனு நினைக்கிறியா?’ என்று கேட்டார். யோபு மனத்தாழ்மையாக தன்மேல் இருந்த தப்பை ஒத்துக்கொண்டார். யெகோவா செய்த எல்லா நல்ல விஷயத்துக்கும் நன்றியோடு இப்படிச் சொன்னார்: “உங்களைப் பற்றி என் காதுகளால் கேட்டிருக்கிறேன். இப்போது என் கண்களாலேயே உங்களைப் பார்க்கிறேன்.” (யோபு 42:5) இதைச் சொன்னபோது அநேகமாக யோபு இன்னும் சாம்பலில்தான் உட்கார்ந்திருந்தார். உடல் முழுக்க கொப்புளம். பிள்ளைகளைப் பறிகொடுத்த துக்கம்வேறு அவருடைய நெஞ்சை அடைத்துக்கொண்டிருந்தது. ஆனாலும், யோபுவுக்குத் தன்னுடைய அன்பும் அங்கீகாரமும் இருக்கிறது என்பதை யெகோவா தெளிவாகச் சொன்னார்.—யோபு 42:7, 8.
16. நமக்குக் கஷ்டங்கள் வரும்போது எதை நம் மனதில் வைக்க வேண்டும்? (ஏசாயா 49:15, 16)
16 இன்றைக்கும்கூட மக்கள் நம்மைக் கேவலமாகப் பேசலாம். நாம் எதற்குமே லாயக்கில்லை என்பதுபோல் அவர்கள் நம்மை நடத்தலாம். நம்முடைய பெயரை அல்லது நம்முடைய அமைப்பின் பெயரைக் கெடுக்க நினைத்து, “இல்லாததையும் பொல்லாததையும்” சொல்லலாம். (மத். 5:11) ஆனால், யோபுவின் பதிவிலிருந்து நாம் சில விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். நமக்கு என்ன கஷ்டங்கள் வந்தாலும் யெகோவாவுக்கு உண்மையாக இருப்போம் என்று யெகோவா நம்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். யெகோவா நம்மை நேசிக்கிறார். அவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களை அவர் கைவிடவே மாட்டார். (ஏசாயா 49:15, 16-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய எதிரிகள் சொல்லும் அப்பட்டமான பொய்களைக் காதிலேயே வாங்காதீர்கள். ஜேம்ஸ் என்ற சகோதரர் துருக்கியில் இருக்கிறார். அவருடைய குடும்பத்துக்குக் கஷ்டத்துக்குமேல் கஷ்டம் வந்தது. அவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். “கடவுளோட மக்கள பத்தி மத்தவங்க சொல்ற பொய்கள காதுல வாங்கினா சோர்ந்துதான் போவோம்னு நாங்க புரிஞ்சுகிட்டோம். அதனால கடவுளோட அரசாங்கம் தர்ற நம்பிக்கைய பத்தியே யோசிக்க ஆரம்பிச்சோம். யெகோவாவோட சேவையையும் சுறுசுறுப்பா செஞ்சோம். அதனால எங்களோட சந்தோஷத்தை இழக்காம இருக்க முடிஞ்சுது” என்று அவர் சொல்கிறார். யோபுவைப் போலவே யெகோவா சொல்வதைத்தான் நாம் கேட்போம். எதிரிகள் சொல்கிற பொய் நம்முடைய நம்பிக்கையை அழிப்பதற்கு விட மாட்டோம்.
உங்கள் நம்பிக்கையே உங்கள் பலம்
17. எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற உண்மையுள்ள ஆண்கள்-பெண்களின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
17 யெகோவாவின் ஊழியர்களில் யோபு மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ பேர் பயங்கரமான கஷ்டங்கள் மத்தியிலும் தைரியமாகவும் உறுதியாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களைத்தான் ‘திரண்ட மேகம் போன்ற சாட்சிகள்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபி. 12:1) அவர்கள் எல்லாருக்கும் பயங்கரமான சோதனைகள் வந்தன. ஆனாலும், தங்களுடைய கடைசி மூச்சுவரை யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள். (எபி. 11:36-40) அவர்களுடைய சகிப்புத்தன்மையும் கடின உழைப்பும் வீணாகிவிட்டதா? கண்டிப்பாக இல்லை. கடவுளுடைய வாக்குறுதிகளெல்லாம் நிறைவேறுவதைத் தங்களுடைய வாழ்நாளில் அவர்கள் பார்க்கவில்லைதான். ஆனாலும், யெகோவாமேல் நம்பிக்கையாகவே இருந்தார்கள். யெகோவாவின் அங்கீகாரம் தங்களுக்கு இருந்ததை அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அதனால், அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதைக் கண்டிப்பாக பார்ப்பார்கள் என்று நம்பினார்கள். (எபி. 11:4, 5) அவர்களுடைய உதாரணம், யெகோவாமேல் நாம் தொடர்ந்து நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதற்கு உதவுகிறது.
18. என்ன செய்ய நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள்? (எபிரெயர் 11:6)
18 உலக நிலைமைகள் மோசமாகிக்கொண்டே போகின்றன. (2 தீ. 3:13) யெகோவாவின் மக்களைச் சோதிப்பதை சாத்தான் நிறுத்தவே இல்லை. நமக்கு முன்னால் என்ன சவால்கள் காத்திருந்தாலும் சரி, யெகோவாவுக்காகக் கடினமாக உழைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். “உயிருள்ள கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்பதை நாம் எப்போதுமே மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். (1 தீ. 4:10) யெகோவா யோபுவை ஆசீர்வதித்ததைப் பற்றி யோசித்துப் பாருங்கள். “யெகோவா கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்” என அது காட்டுகிறது, இல்லையா? (யாக். 5:11) நாமும் யெகோவாவுக்குக் கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும். “அவரை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறார்” என்றும் உறுதியாக நம்ப வேண்டும்.—எபிரெயர் 11:6-ஐ வாசியுங்கள்.
பாட்டு 150 மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்
^ பயங்கரமான கஷ்டங்களைத் தாங்கிக்கொண்ட ஒருவர் என்று சொன்னாலே பெரும்பாலும் யோபுதான் நம்முடைய மனதுக்கு வருவார். அவருடைய அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? யெகோவாவைவிட்டு விலகுவதற்கு சாத்தானால் நம்மைக் கட்டாயப்படுத்த முடியாது என்று கற்றுக்கொள்கிறோம். அதோடு, நமக்கு நடக்கிற எல்லா விஷயத்தைப் பற்றியும் யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும் என்று கற்றுக்கொள்கிறோம். அதுமட்டுமல்ல, யோபுவின் கஷ்டங்களை எப்படி யெகோவா முடிவுக்குக் கொண்டுவந்தாரோ அதேபோல் நாம் படுகிற எல்லா கஷ்டங்களையும் ஒருநாள் முடிவுக்கு கொண்டுவருவார் என்று தெரிந்துகொள்கிறோம். இதையெல்லாம் நாம் முழுமையாக நம்புகிறோம் என்பதைச் செயலில் காட்ட வேண்டும். அப்போதுதான், நாம் ‘யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறோம்’ என்று சொல்ல முடியும்.
^ வார்த்தையின் விளக்கம்: “நம்பிக்கை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தை ஒரு விஷயத்துக்காக ஆர்வமாக எதிர்பார்த்து “காத்திருப்பதை” குறிக்கிறது. அதுமட்டுமல்ல, ஒருவரை நம்பியிருப்பதை அல்லது சார்ந்திருப்பதைக் குறிக்கிறது.—சங். 25:2, 3; 62:5.
^ சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
^ படவிளக்கம்: யோபுவும் அவருடைய மனைவியும், தங்கள் பிள்ளைகள் இறந்துகிடப்பதைப் பார்த்துத் துடிதுடித்துப் போனார்கள்.
^ படவிளக்கம்: நிறைய சோதனைகள் வந்தாலும், யோபு கடைசிவரை சகித்திருந்தார். அவரும் அவருடைய மனைவியும், யெகோவா தங்கள் குடும்பத்துக்குக் கொடுத்திருந்த ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்துப் பார்க்கிறார்கள்.