Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 28

கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!

கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!

“உலகத்தின் அரசாங்கம் நம் எஜமானுக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் சொந்தமான அரசாங்கமானது.”—வெளி. 11:15.

பாட்டு 22 கடவுளுடைய ஆட்சி வருக!

இந்தக் கட்டுரையில்... *

1. எதை நாம் உறுதியாக நம்பலாம், ஏன்?

 உலக நிலைமைகளைப் பார்க்கும்போது, ‘எல்லாம் ஒருநாள் சரியாகிவிடும்’ என்று நம்புவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், இன்றைக்குக் குடும்பத்தில் அன்பும் பாசமும் இல்லை. மக்கள் கொடூரமானவர்களாக... சுயநலக்காரர்களாக... இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களை நம்புவதற்கும்கூட சிலருக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஆனால், உண்மையில், இதையெல்லாம் பார்க்கும்போது ‘எல்லாம் சீக்கிரத்தில் சரியாகப்போகிறது’ என்ற நம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும். ஏன்? ஏனென்றால், “கடைசி நாட்களில்” ஜனங்கள் எப்படி இருப்பார்கள் என்று பைபிள் தீர்க்கதரிசனமாக சொன்னதோ அதைத்தான் நாம் கண்ணாரப் பார்க்கிறோம். (2 தீ. 3:1-5) நியாயமாக யோசிக்கும் யாராலும் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறிக்கொண்டு வருகிறது என்பதை மறுக்க முடியாது. அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவான கிறிஸ்து இயேசு ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பதற்கும் இது ஒரு அத்தாட்சியாக இருக்கிறது. ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பைபிளில் இருக்கிற நிறைய தீர்க்கதரிசனங்களில் இது வெறும் ஒன்றுதான். நம்முடைய காலத்தில் நிறைவேறிக் கொண்டிருக்கிற மற்ற தீர்க்கதரிசனங்களைப் பற்றிப் பார்க்கும்போது நம்முடைய விசுவாசம் இன்னும் பலமாகும்.

தானியேல் புத்தகத்திலும் வெளிப்படுத்துதல் புத்தகத்திலும் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்கள் எல்லாமே ஒரு ஜிக்சா புதிர் விளையாட்டில் இருக்கிற துண்டுகளைப் போல் ஒன்றோடொன்று பொருந்துவதைப் பார்க்கும்போது, யெகோவாவின் கால அட்டவணையில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். (பாரா 2)

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம், ஏன்? (அட்டைப் படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.)

2 இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்? (1) கடவுளுடைய அரசாங்கம் எப்போது ஆட்சி செய்ய ஆரம்பித்தது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிற ஒரு தீர்க்கதரிசனத்தைப் பார்ப்போம். (2) கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவான இயேசு, பரலோகத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிற தீர்க்கதரிசனங்களைப் பார்ப்போம். (3) கடவுளுடைய எதிரிகள் எப்படி அழிக்கப்படுவார்கள் என்பதைக் காட்டும் சில தீர்க்கதரிசனங்களையும் பார்ப்போம். இந்தத் தீர்க்கதரிசனங்கள் எல்லாமே ஒரு ஜிக்சா புதிர் விளையாட்டில் இருக்கிற துண்டுகளைப் போல் ஒன்றோடொன்று பொருந்துவதைப் பார்க்கும்போது, யெகோவாவின் கால அட்டவணையில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

கடவுளுடைய அரசாங்கம் எப்போது ஆட்சி செய்ய ஆரம்பித்தது?

3. கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவைப் பற்றி தானியேல் 7:13, 14-ல் இருக்கிற தீர்க்கதரிசனம் நமக்கு என்ன நம்பிக்கையைக் கொடுக்கிறது?

3 கிறிஸ்து இயேசு, கடவுளுடைய அரசாங்கத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளராக இருப்பார் என்ற நம்பிக்கையை தானியேல் 7:13, 14-ல் இருக்கிற தீர்க்கதரிசனம் நமக்குக் கொடுக்கிறது. எல்லா தேசத்தைச் சேர்ந்த ஜனங்களும் அவருக்கு சந்தோஷமாக ‘சேவை செய்வார்கள்.’ அவருடைய ஆட்சி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். தானியேல் புத்தகத்தில் இருக்கிற இன்னொரு தீர்க்கதரிசனத்தில், “ஏழு காலங்கள்” என்றழைக்கப்பட்ட ஒரு காலப்பகுதியின் முடிவில் இயேசு தன்னுடைய ஆட்சியை ஆரம்பிப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தச் சந்தோஷமான விஷயம் எப்போது நடந்தது?

4. கிறிஸ்து எந்த வருஷத்தில் ராஜாவாக ஆனார் என்பதைக் கண்டுபிடிக்க தானியேல் 4:10-17 எப்படி உதவி செய்கிறது? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

4 தானியேல் 4:10-17-ஐ வாசியுங்கள். “ஏழு காலங்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிற காலப்பகுதி 2,520 வருஷங்களைக் குறிக்கிறது. இந்தக் காலப்பகுதி கி.மு. 607-ல் ஆரம்பித்தது. அப்போதுதான், எருசலேமில் யெகோவாவின் சிம்மாசனத்தில் ஆட்சி செய்த கடைசி ராஜாவை பாபிலோனியர்கள் நீக்கினார்கள். இந்தக் காலப்பகுதி கி.பி. 1914-ல் முடிவடைந்தது. அப்போதுதான் ‘உரிமைக்காரரான’ இயேசுவை, யெகோவா தன்னுடைய அரசாங்கத்தின் ராஜாவாக ஆக்கினார். *எசே. 21:25-27.

5. ‘ஏழு காலங்களை’ பற்றிய தீர்க்கதரிசனத்தைத் தெரிந்துகொள்வதால் நமக்கு என்ன நன்மை?

5 இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதால் நமக்கு என்ன நன்மை? ‘ஏழு காலங்களை’ பற்றிய தீர்க்கதரிசனத்தைத் தெரிந்துகொண்டது, யெகோவா தன்னுடைய வாக்குறுதிகளைச் சரியான நேரத்தில் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது. தன்னுடைய மகன் இயேசுவைச் சரியாக எந்தச் சமயத்தில் ராஜாவாக ஆக்க வேண்டுமென்று யெகோவா ஏற்கெனவே முடிவு செய்திருந்தார். அந்த நேரம் வந்தபோது யெகோவா அதைச் செய்தார். அதேபோல், தான் முடிவு செய்திருக்கிற சமயத்தில் மற்ற தீர்க்கதரிசனங்களையும் யெகோவா நிறைவேற்றுவார். யெகோவாவின் நாள் “கொஞ்சம்கூடத் தாமதிக்காது!”—ஆப. 2:3.

கிறிஸ்து, கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக ஆகிவிட்டார் என்று நமக்கு எப்படித் தெரியும்?

6. (அ) கிறிஸ்து பரலோகத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பதற்கு என்ன ஆதாரங்களை நாம் பூமியில் பார்க்கிறோம்? (ஆ) இந்த ஆதாரங்களை வெளிப்படுத்துதல் 6:2-8-ல் இருக்கிற தீர்க்கதரிசனம் எப்படி உறுதிப்படுத்துகிறது?

6 பரலோகத்தில் தன்னுடைய ஆட்சி ஆரம்பிக்கும்போது இந்த உலகத்தில் என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்பதை இயேசு பூமியில் இருந்தபோது சொன்னார். போர், பஞ்சம், நிலநடுக்கம் போன்றவை நடக்கும் என்று அவர் சொன்னார். அதோடு, “அடுத்தடுத்து பல இடங்களில்” கொள்ளைநோய்கள் உண்டாகும் என்றும் சொன்னார். இந்த கோவிட்-19 பெருந்தொற்றும் அதற்கு ஒரு உதாரணம்தான். இந்தச் சம்பவங்கள் கிறிஸ்துவுடைய பிரசன்னத்துக்கு ‘அடையாளமாக’ இருக்கின்றன. (மத். 24:3, 7; லூக். 21:7, 10, 11) இயேசு, பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்டு 60 வருஷங்களுக்குப் பிறகு அப்போஸ்தலன் யோவானிடம் இந்தச் சம்பவங்கள் எல்லாம் நடக்கும் என்பதை மறுபடியும் உறுதிப்படுத்தினார். (வெளிப்படுத்துதல் 6:2-8-ஐ வாசியுங்கள்.) இயேசு 1914-ல் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக ஆனதிலிருந்து இந்தச் சம்பவங்கள் எல்லாமே நடந்துகொண்டிருக்கின்றன.

7. இயேசு ராஜாவான பிறகு பூமியில் ஏன் இவ்வளவு மோசமான சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன?

7 இயேசு ராஜாவான பிறகு பூமியில் சூழ்நிலை ஏன் இவ்வளவு மோசமாக ஆக ஆரம்பித்தது? வெளிப்படுத்துதல் 6:2-ல் பதில் இருக்கிறது. இயேசு ராஜாவாக ஆனவுடனே, முதலில் ஒரு போர் செய்தார். யாருக்கு எதிராகப் போர் செய்தார்? சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் எதிராகப் போர் செய்தார். வெளிப்படுத்துதல் 12-ஆம் அதிகாரம் சொல்கிறபடி, அந்தப் போரில் சாத்தான் தோற்றுப்போனதால் அவனும் அவனோடு சேர்ந்த பேய்களும் பூமிக்குத் தள்ளப்பட்டார்கள். அதனால், ஆத்திரம் அடைந்த சாத்தான் தன்னுடைய கோபத்தையெல்லாம் மனிதர்கள்மேல் காட்டிக்கொண்டிருக்கிறான். இந்தச் சம்பவத்தால் பூமியில் இருக்கிறவர்களுக்கு “ஐயோ, கேடு!” என்று பைபிள் சொல்கிறது.—வெளி. 12:7-12.

கெட்ட செய்திகளை கேட்கும்போது நாம் சந்தோஷப்படுவதில்லை. அதற்குப் பதிலாக பைபிள் தீர்க்கதரிசனம்தான் நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறோம்; அதனால், கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது என்ற நம் நம்பிக்கை பலமாகிறது (பாரா 8)

8. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேறுவதைப் பார்ப்பதால் நமக்கு என்ன நன்மை?

8 இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதால் நமக்கு என்ன நன்மை? உலகம் முழுவதும் நடக்கிற சம்பவங்களையும் மக்கள் நாளுக்குநாள் மோசமானவர்களாக ஆவதையும் பார்க்கும்போது இயேசு ராஜாவாகிவிட்டதை நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால், மக்கள் சுயநலமாக... கொடூரமாக... நடந்துகொள்வதைப் பார்த்து நாம் எரிச்சல் அடைவதற்குப் பதிலாக இதெல்லாம் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்தான் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. (சங். 37:1) அர்மகெதோன் நெருங்க நெருங்க இந்த உலகத்தின் நிலைமை இன்னும் மோசமாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம். (மாற். 13:8; 2 தீ. 3:13) நம்மைச் சுற்றி ஏன் இவ்வளவு மோசமான விஷயங்கள் நடக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதற்காக நம்முடைய அன்பான அப்பா யெகோவாவுக்கு நாம் ரொம்ப நன்றியோடு இருக்க வேண்டும்.

கடவுளுடைய அரசாங்கத்தின் எதிரிகள் எப்படி அழிக்கப்படுவார்கள்?

9. கடைசி உலக வல்லரசைப் பற்றி தானியேல் 2:28, 31-35 எப்படி விவரிக்கிறது, அது எப்போது ஆட்சி செய்ய ஆரம்பித்தது?

9 தானியேல் 2:28, 31-35-ஐ வாசியுங்கள். இந்தத் தீர்க்கதரிசனம் இன்றைக்கு நிறைவேறி வருவதை நாம் பார்க்கிறோம். “கடைசி நாட்களில்,” அதாவது கிறிஸ்துவின் ஆட்சி ஆரம்பித்த பிறகு, என்ன நடக்கும் என்பதை நேபுகாத்நேச்சார் பார்த்த அந்தக் கனவிலிருந்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்தக் கனவில் அவர் பார்த்த சிலையின் பாதங்கள் “பாதி இரும்பாலும் பாதி களிமண்ணாலும்” செய்யப்பட்டிருந்தன. இது கடைசி உலக வல்லரசைக் குறிக்கிறது. இயேசுவின் எதிரிகளில் இந்த உலக வல்லரசும் ஒன்று. இந்த உலக வல்லரசு ஏற்கெனவே ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. முதல் உலகப் போரின் சமயத்தில், அமெரிக்காவோடு பிரிட்டன் கூட்டணி வைத்துக்கொண்டு ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசாக உருவானது. ஆனால், இந்த வல்லரசு மற்ற உலக வல்லரசுகளிலிருந்து இரண்டு விஷயங்களில் வித்தியாசமாக இருக்கும் என்று நேபுகாத்நேச்சாரின் கனவு காட்டுகிறது.

10. (அ) ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசைப் பற்றி தானியேல் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருப்பது எப்படி இன்றைக்குத் துல்லியமாக நிறைவேறி வருகிறது? (ஆ) நாம் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? (“ களிமண் விஷயத்தில் ஜாக்கிரதை!” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

10 முதல் வித்தியாசம் என்னவென்றால், ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு மற்ற உலக வல்லரசுகளைப் போல் தங்கம், வெள்ளி போன்ற உறுதியான உலோகங்களால் அடையாளப்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக, இரும்பும் களிமண்ணும் சேர்ந்த கலவையால் அடையாளப்படுத்தப்படுகிறது. இதில் களிமண் என்பது பொதுமக்களைக் குறிக்கிறது. (தானி. 2:43) இந்த மக்கள், தேர்தல் விஷயங்களில் தலையிடுகிறார்கள். சமூக உரிமை போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள், தொழிலாளர் சங்கங்களையும் அமைக்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வதன் மூலமாக இந்த உலக வல்லரசு செய்ய நினைப்பதை செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.

11. ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு ஆட்சி செய்கிற காலத்தில் நாம் வாழ்வது, முடிவு நெருங்கிவிட்டது என்ற நம்முடைய நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்துகிறது?

11 இரண்டாவது வித்தியாசம் என்னவென்றால், பாதங்களைக் குறிக்கிற ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசுதான் பைபிள் சொல்கிற கடைசி உலக வல்லரசு. அதற்குப் பிறகு வேறெந்த உலக வல்லரசும் வராது. அது, அர்மகெதோன் யுத்தத்தில் கடவுளுடைய அரசாங்கத்தால் அழிக்கப்படும். மற்றெல்லா மனித அரசாங்கங்களும் அதோடு சேர்த்து அழிக்கப்படும். *வெளி. 16:13, 14, 16; 19:19, 20.

12. தானியேல் தீர்க்கதரிசனம் வேறென்ன ஆதாரத்தைக் கொடுக்கிறது, அது நமக்கு எப்படி ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது?

12 இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதால் நமக்கு என்ன நன்மை? நாம் கடைசி நாட்களில்தான் வாழ்கிறோம் என்பதற்கு தானியேல் தீர்க்கதரிசனம் இன்னொரு ஆதாரத்தையும் கொடுக்கிறது. பாபிலோனுக்குப் பிறகு நான்கு உலக வல்லரசுகள் வரும் என்று 2,500 வருஷங்களுக்கு முன்பே தானியேல் சொன்னார். அந்த உலக வல்லரசுகள், கடவுளுடைய மக்களை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று சொன்னார். அதோடு, ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசுதான் அவற்றில் கடைசி உலக வல்லரசாக இருக்கும் என்பதும் அவர் சொன்னதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இது நமக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் கொடுக்கிறது. கடவுளுடைய அரசாங்கம் எல்லா மனித அரசாங்கங்களையும் நீக்கிவிட்டு முழு பூமியையும் சீக்கிரத்தில் ஆட்சி செய்யும்.—தானி. 2:44.

13. வெளிப்படுத்துதல் 17:9-12-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘எட்டாவது ராஜாவும்’ ‘பத்து ராஜாக்களும்’ எதற்கு அடையாளமாக இருக்கின்றன, இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியிருக்கிறது?

13 வெளிப்படுத்துதல் 17:9-12-ஐ வாசியுங்கள். முதல் உலகப் போர் சமயத்தில் பயங்கரமான அழிவு ஏற்பட்டதால் இன்னொரு பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறும் விதத்தில் ஒரு சம்பவம் நடந்தது. உலகம் முழுவதும் சமாதானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று உலகத் தலைவர்கள் நினைத்தார்கள். அதனால், ஜனவரி 1920-ல் சர்வதேச சங்கத்தை அவர்கள் ஏற்படுத்தினார்கள். அக்டோபர் 1945-ல் அது ஐநா சபையாக உருவானது. இதுதான் “எட்டாவது ராஜா.” ஆனால், இது ஒரு உலக வல்லரசு கிடையாது. சொல்லப்போனால், உலக அரசாங்கங்களின் ஆதரவால்தான் இது செயல்படுகிறது. இந்த அரசாங்கங்களைத்தான் ‘பத்து ராஜாக்கள்’ என்று அடையாள அர்த்தத்தில் பைபிள் சொல்கிறது.

14-15. (அ) வெளிப்படுத்துதல் 17:3-5 ‘மகா பாபிலோனை’ பற்றி என்ன சொல்கிறது? (ஆ) பொய் மதங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

14 வெளிப்படுத்துதல் 17:3-5-ஐ வாசியுங்கள். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் ஒரு விபச்சாரியைப் பார்க்கிறார். அவளுடைய பெயர் “மகா பாபிலோன்.” அவள் உலகத்தில் இருக்கிற எல்லா பொய் மதங்களுக்கும் அடையாளமாக இருக்கிறாள். பல காலமாகவே பொய் மதங்கள் உலக அரசாங்கங்களோடு கூட்டுச் சேர்ந்து செயல்பட்டிருக்கின்றன, அதற்கு ஆதரவு கொடுத்திருக்கின்றன. ஆனால், சீக்கிரத்தில் யெகோவா “தன்னுடைய எண்ணத்தை” அரசியல் தலைவர்களின் இதயத்தில் வைப்பார். அப்போது என்ன ஆகும்? அந்த அரசாங்கங்கள், அதாவது “பத்து ராஜாக்கள்,” பொய் மதங்களைத் தாக்கி அதை முழுமையாக அழித்துவிடும்.—வெளி. 17:1, 2, 16, 17.

15 மகா பாபிலோனுக்கு அழிவு நெருங்கிவிட்டது என்று நமக்கு எப்படித் தெரியும்? பைபிள் காலங்களில் இருந்த பாபிலோன் நகரத்தைச் சுற்றி ஓடிய யூப்ரடிஸ் ஆறு அந்த நகரத்துக்குப் பாதுகாப்பாக இருந்தது. அதைப் போலவே மகா பாபிலோனுக்கு ஆதரவு கொடுக்கிற கோடிக்கணக்கான மக்கள் அதற்கு பாதுகாப்பு கொடுக்கிற ‘தண்ணீர்’ போல இருக்கிறார்கள் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. (வெளி. 17:15) ஆனால், இந்தத் தண்ணீர் ‘வற்றிப்போகும்’ என்று அது சொல்கிறது. அப்படியென்றால், பொய் மதத்தை ஆதரிக்கிறவர்கள் அதைவிட்டு வெளியே வருவார்கள் என்று அர்த்தம். (வெளி. 16:12) அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இன்றைக்கு நிறைய பேர் பொய் மதங்களை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடி மற்ற இடங்களுக்குப் போகிறார்கள்.

16. ஐநா சபை ஏற்படுத்தப்பட்டதைப் பற்றியும் மகா பாபிலோனுக்கு வரப்போகும் அழிவைப் பற்றியும் சொல்கிற தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்வதால் நமக்கு என்ன நன்மை?

16 இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதால் நமக்கு என்ன நன்மை? ஐநா சபை ஏற்படுத்தப்பட்டிருப்பதும் பொய் மதத்துக்கு இருக்கும் ஆதரவு குறைந்துகொண்டே வருவதும் நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதற்குக் கூடுதலான அத்தாட்சிகளாக இருக்கின்றன. மகா பாபிலோனை ஆதரிக்கிற மக்கள் குறைந்துகொண்டே வந்தாலும் அதற்கு அழிவு வேறு விதத்தில் வரும். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, அந்த ‘பத்து ராஜாக்களுடைய’ இதயத்தில், அதாவது ஐநா சபைக்கு ஆதரவு கொடுக்கிற உலகத் தலைவர்களுடைய இதயத்தில், யெகோவா ‘தன்னுடைய எண்ணத்தை வைப்பார்.’ அந்த ஐநா சபை, பொய் மதங்களைத் திடீரென்று தாக்கும். அது இந்த உலகத்துக்கே ஆச்சரியமாக இருக்கும். * (வெளி. 18:8-10) மகா பாபிலோனின் அழிவைப் பார்த்து இந்த உலகமே கதிகலங்கிப் போகும். அதனால், பயங்கரமான கஷ்டங்கள் வரலாம். ஆனால், கடவுளுடைய மக்கள் இரண்டு விஷயங்களை நினைத்து சந்தோஷப்படுவார்கள். பல காலமாக யெகோவாவுக்கு எதிரியாக இருந்த இந்தப் பொய் மதங்கள் அடியோடு ஒழிந்துபோனதை நினைத்து அவர்கள் ரொம்ப சந்தோஷப்படுவார்கள். அடுத்ததாக, இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து சீக்கிரத்தில் விடுதலை கிடைக்கப்போவதை நினைத்து அவர்கள் சந்தோஷப்படுவார்கள்.—லூக். 21:28.

எதிர்காலத்தை தைரியமாகச் சந்தியுங்கள்

17-18. (அ) நாம் தொடர்ந்து நம்முடைய விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?

17 ‘உண்மையான அறிவு பெருகும்’ என்று தானியேல் ஏற்கெனவே சொன்னார். அவர் சொன்னது இன்றைக்கு அப்படியே நிறைவேறிக்கொண்டிருக்கிறது. நம்முடைய நாளில் நிறைவேறிக்கொண்டிருக்கிற தீர்க்கதரிசனங்களைப் பற்றி நாம் இப்போது நன்றாகப் புரிந்திருக்கிறோம். (தானி. 12:4, 9, 10) இந்தத் தீர்க்கதரிசனங்கள் எவ்வளவு துல்லியமாக நிறைவேறிக்கொண்டு வருகின்றன என்பதைப் பார்க்கும்போது யெகோவாமீதும் அவருடைய வார்த்தைமீதும் நமக்கு நம்பிக்கையும் மரியாதையும் அதிகமாகிறது. (ஏசா. 46:10; 55:11) அதனால், பைபிளை ஆர்வத்தோடு படித்து உங்களுடைய விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்துங்கள். யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள மற்றவர்களுக்கும் உதவுங்கள். தன்னை முழுமையாக நம்பியிருப்பவர்களை யெகோவா பாதுகாப்பார். அவர்களை ‘எப்போதும் சமாதானத்தோடு வாழ வைப்பார்.’—ஏசா. 26:3.

18 கடைசி நாட்களில் இருக்கிற கிறிஸ்தவ சபையைப் பற்றி சொல்லியிருக்கிற தீர்க்கதரிசனங்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். அப்படிப் பார்க்கும்போது, இந்தத் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நாம் கடைசி நாட்களில்தான் வாழ்கிறோம் என்பதை எப்படி நிரூபிக்கின்றன என்று தெரிந்துகொள்வோம். அதோடு, நம்முடைய ராஜா இயேசு, அவரை உண்மையாகப் பின்பற்றுபவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்குக் கூடுதலான ஆதாரங்களையும் பார்ப்போம்.

பாட்டு 61 சாட்சிகளே, முன்னே செல்லுங்கள்!

^ விறுவிறுப்பான சம்பவங்கள் நடக்கிற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது என்பதை நிறைய பைபிள் தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன. அவற்றில் சில தீர்க்கதரிசனங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அப்போது, யெகோவாமேல் நமக்கு இருக்கிற விசுவாசம் இன்னும் பலமாகும். அதோடு, இப்போதும் எதிர்காலத்திலும் பதட்டப்படாமல் யெகோவாவையே முழுமையாக நம்பியிருப்போம்.

^ இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் பாடம் 32-ல் குறிப்பு 4-ஐப் பாருங்கள். அதோடு, jw.org.-ல் கடவுளுடைய ஆட்சி 1914-ல் ஆரம்பமானது என்ற வீடியோவையும் பாருங்கள்.

^ தானியேல் சொன்ன தீர்க்கதரிசனத்தைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள ஜூன் 15, 2012 காவற்கோபுரத்தில் பக்கம் 14-19-ஐப் பாருங்கள்.

^ ரொம்பச் சீக்கிரத்தில் என்ன நடக்கப்போகிறது என்று கூடுதலாகத் தெரிந்துகொள்ள கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது! புத்தகத்தில் 21-ம் அதிகாரத்தைப் பாருங்கள்.