Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 31

ஜெபம் என்ற பாக்கியத்தைப் பொக்கிஷமாக நினையுங்கள்

ஜெபம் என்ற பாக்கியத்தைப் பொக்கிஷமாக நினையுங்கள்

“என் ஜெபம் நன்றாகத் தயாரிக்கப்பட்டு உங்கள் முன்னால் செலுத்தப்படுகிற தூபப்பொருள்போல் இருக்கட்டும்.”—சங். 141:2, அடிக்குறிப்பு.

பாட்டு 47 தினமும் ஜெபம் செய்வாய்

இந்தக் கட்டுரையில்... *

1. யெகோவாவிடம் ஜெபத்தில் பேசுவதற்கு நமக்குக் கிடைத்த வாய்ப்பை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்?

 வானத்தையும் பூமியையும் படைத்தவரிடம் ஜெபத்தில் பேசுவதற்கான அற்புதமான பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இதைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அவரிடம் நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நம் இதயத்தில் இருப்பதையெல்லாம் கொட்டி ஜெபம் செய்யலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம். அதற்காக முன்கூட்டியே அவரிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக கிடந்தாலும் சரி, ஜெயிலில் இருந்தாலும் சரி, நம்முடைய அன்பான அப்பா யெகோவாவிடம் நம்மால் ஜெபம் செய்ய முடியும். நம்முடைய ஜெபத்தை அவர் கவனித்துக் கேட்பார் என்ற நம்பிக்கையோடு அவரிடம் பேசலாம். ஆனால், நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான பாக்கியத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

2. ஜெபம் செய்யும் பாக்கியத்தை தாவீது ராஜா ரொம்பப் பொக்கிஷமாக நினைத்தார் என்று நமக்கு எப்படித் தெரியும்?

2 ஜெபம் செய்கிற பாக்கியத்தை தாவீது ராஜா ரொம்பப் பொக்கிஷமாக நினைத்தார். அவர் யெகோவாவைப் புகழ்ந்து பாடியபோது, “என் ஜெபம் நன்றாகத் தயாரிக்கப்பட்டு உங்கள் முன்னால் செலுத்தப்படுகிற தூபப்பொருள்போல் இருக்கட்டும்” என்று சொன்னார். (சங். 141:1, 2 அடிக்குறிப்பு) தாவீதின் காலத்தில், குருமார்கள் யெகோவாவை வணங்குவதற்காகத் தூபப்பொருளைப் பயன்படுத்தினார்கள். அந்தத் தூபப்பொருளை ரொம்பக் கவனமாக பார்த்துப் பார்த்து தயாரித்தார்கள். (யாத். 30:34, 35) அதேபோல், தாவீதும் தன்னுடைய அப்பா யெகோவாவிடம் பேசுவதற்கு முன்னால், எதைப் பற்றியெல்லாம் பேசலாம் என்று ரொம்பக் கவனமாக யோசித்துப்பார்க்க விரும்பினார். அதனால்தான், அவருடைய ஜெபத்தைத் தூபப்பொருளோடு ஒப்பிட்டுச் சொன்னார். நம்முடைய விருப்பமும் அதுதான். நம்முடைய ஜெபம் யெகோவாவை சந்தோஷப்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

3. நாம் யெகோவாவிடம் என்ன மனப்பான்மையோடு ஜெபம் செய்ய வேண்டும், ஏன்?

3 நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது அவரிடம் மதிப்புமரியாதையோடு பேச வேண்டும். அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள ஏசாயா, எசேக்கியேல், தானியேல், யோவான் ஆகியவர்களுக்குக் கிடைத்த தரிசனத்தைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இவர்கள் எல்லாருக்கும் வித்தியாசமான தரிசனங்கள் கிடைத்தாலும் அதில் ஒரு விஷயம் பொதுவாக இருந்தது. இந்த எல்லா தரிசனங்களிலுமே யெகோவா ஒரு கம்பீரமான ராஜாவாக தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “யெகோவா மிகவும் உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதை” ஏசாயா பார்த்தார். (ஏசா. 6:1-3) யெகோவா தன்னுடைய பரலோக ரதத்தில் உட்கார்ந்து கொண்டிருந்ததையும் “அவரைச் சுற்றியிருந்த பிரகாசமான வெளிச்சம், . . . வானவில்லைப் போல” இருந்ததையும் எசேக்கியேல் பார்த்தார். (எசே. 1:26-28) “யுகம் யுகமாக வாழ்கிறவர்” வெள்ளை உடையில் இருப்பதையும் அவருடைய சிம்மாசனத்திலிருந்து நெருப்பு வருவதையும் தானியேல் பார்த்தார். (தானி. 7:9, 10) யெகோவா ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதையும் அவரைச் சுற்றி மரகதம்போல் ஜொலிக்கிற ஒரு வானவில் இருப்பதையும் யோவான் பார்த்தார். (வெளி. 4:2-4) யெகோவா எவ்வளவு கம்பீரமாகவும் மகிமையாகவும் இருக்கிறார் என்பதை யோசித்துப் பார்க்கும்போது, அவரிடம் பேசுவதற்கு நமக்குக் கிடைத்திருக்கிற பாக்கியம் எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால், நாம் அவரிடம் ரொம்பப் பயபக்தியோடு ஜெபம் செய்ய வேண்டும். சரி, அவரிடம் என்னென்ன விஷயங்களுக்காக நாம் ஜெபம் செய்யலாம்?

“நீங்கள் இப்படி ஜெபம் செய்யுங்கள்”

4. மத்தேயு 6:9, 10-ல் இயேசு சொல்லிக்கொடுத்த ஜெபத்தில் முதலில் சொல்லப்பட்டிருக்கிற சில விஷயங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

4 மத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள். கடவுளுக்குப் பிடித்த விதமாக எப்படி ஜெபம் செய்யலாம் என்று மலைப் பிரசங்கத்தில் இயேசு தன்னுடைய சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். “நீங்கள் இப்படி ஜெபம் செய்யுங்கள்” என்று சொன்ன பிறகு, யெகோவாவின் நோக்கத்தோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட சில முக்கியமான விஷயங்களை இயேசு முதலில் சொன்னார். யெகோவாவின் பெயர் பரிசுத்தப்பட வேண்டும் என்றும் அவருடைய அரசாங்கம் வர வேண்டும் என்றும் ஜெபம் செய்யச் சொன்னார். ஏனென்றால், அதுதான் கடவுளுடைய எதிரிகள் எல்லாரையும் அழிக்கப்போகிறது. அடுத்ததாக, எதிர்காலத்தில் பூமியில் நடக்கப்போகிற நல்ல விஷயங்களுக்காகவும் மனிதர்களுக்குக் கிடைக்கப்போகிற ஆசீர்வாதங்களுக்காகவும் ஜெபம் செய்யச் சொன்னார். இப்படிப்பட்ட விஷயங்களுக்காக ஜெபம் செய்வதன் மூலம், யெகோவாவின் விருப்பம் நிறைவேறுவதைத்தான் நாம் முக்கியமாக நினைக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.

5. நம்முடைய சொந்த விஷயங்களுக்காக ஜெபம் செய்வது சரியா? விளக்குங்கள்.

5 அந்த ஜெபத்தில் இயேசு அடுத்ததாகச் சொல்லிக் கொடுத்த விஷயங்களிலிருந்து நம்முடைய சொந்த விஷயங்களுக்காக ஜெபம் செய்வதும் சரிதான் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். அந்தந்த நாளுக்குத் தேவையான உணவுக்காக நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம், நாம் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கலாம், சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க உதவி கேட்கலாம், பொல்லாதவனிடமிருந்து காப்பாற்றும்படியும் கேட்கலாம். (மத். 6:11-13) இந்த விஷயங்களுக்காக ஜெபம் செய்யும்போது, அவரையே முழுமையாக நம்பியிருக்கிறோம் என்பதையும் அவரை சந்தோஷப்படுத்த ஆசைப்படுகிறோம் என்பதையும் நாம் காட்டுகிறோம்.

ஒரு கணவர் தன்னுடைய மனைவியோடு சேர்ந்து என்னென்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம்? (பாரா 6) *

6. இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்களுக்காக மட்டும்தான் நாம் ஜெபம் செய்ய வேண்டுமா? விளக்குங்கள்.

6 தான் சொல்லிக்கொடுத்த அந்த ஜெபத்தின் வார்த்தைகளை நாம் அப்படியே சொல்லி ஜெபம் செய்ய வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கவில்லை. சொல்லப்போனால் இயேசுவும்கூட ஒவ்வொரு சூழ்நிலையிலும் தனக்கு எது முக்கியமாக இருந்ததோ அதற்காக ஜெபம் செய்தார். (மத். 26:39, 42; யோவா. 17:1-26) அதேபோல், நாமும் நமக்கு ஏதாவது கவலைகளோ பிரச்சினைகளோ இருந்தால் அதற்காகவும் ஜெபம் செய்யலாம். ஒருவேளை, ஏதாவது தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தால் ஞானத்துக்காகவும் புரிந்துகொள்ளும் திறனுக்காகவும் ஜெபம் செய்யலாம். (சங். 119:33, 34) ஒரு கஷ்டமான நியமிப்பை செய்ய வேண்டியிருந்தால் அறிவையும் பகுத்தறிவையும் கேட்டு ஜெபம் செய்யலாம். (நீதி. 2:6) பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்காக ஜெபம் செய்யலாம். அதேபோல் பிள்ளைகளும் தங்கள் பெற்றோருக்காக ஜெபம் செய்யலாம். நாம் எல்லாருமே நம்மிடம் பைபிள் படிப்பவர்களுக்காகவும் ஊழியத்தில் நாம் பார்க்கிற மக்களுக்காகவும் ஜெபம் செய்யலாம். அப்படி, அவர்களுக்காக ஜெபம் செய்வது முக்கியம். ஜெபம் செய்யும்போது நாம் இன்னொரு விஷயத்தையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். நமக்குத் தேவையான விஷயங்களை மட்டுமே ஜெபத்தில் கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது.

என்னென்ன விஷயங்களுக்காக ஜெபத்தில் யெகோவாவைப் புகழலாம், அவருக்கு நன்றி சொல்லலாம்? (பாராக்கள் 7-9) *

7. ஜெபத்தில் நாம் ஏன் யெகோவாவைப் புகழ வேண்டும்?

7 ஜெபம் செய்யும்போது நாம் யெகோவாவைப் புகழ்வதற்கும் மறந்துவிடக் கூடாது. நம்முடைய புகழைப் பெறுவதற்கு யெகோவாவைவிட தகுதியானவர் வேறு யார் இருக்க முடியும்? யெகோவா “நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.” அவர் “இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள். . . . சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் அளவில்லாமல் காட்டுகிறவர்.” (சங். 86:5, 15) யெகோவாவிடம் இருக்கிற நல்ல குணங்களுக்காகவும் அவர் செய்கிற நல்ல விஷயங்களுக்காகவும் நாம் அவரைப் புகழ வேண்டும்.

8. நம்முடைய ஜெபத்தில் எதற்காக எல்லாம் யெகோவாவுக்கு நன்றி சொல்லலாம்? (சங்கீதம் 104:12-15, 24)

8 ஜெபத்தில், யெகோவாவைப் புகழ்வது மட்டுமல்லாமல் அவர் நமக்காகச் செய்திருக்கிற அற்புதமான விஷயங்களுக்காக நன்றியும் சொல்ல வேண்டும். நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நம்முடைய அன்பான அப்பா யெகோவா நிறைய விஷயங்களைச் செய்திருக்கிறார். உதாரணத்துக்கு, நம்மால் வண்ண வண்ண பூக்களைப் பார்க்க முடிகிறது, வகைவகையான உணவுகளை ருசிக்க முடிகிறது. நண்பர்களோடு சந்தோஷமாகப் பேசி பொழுதைக் கழிக்க முடிகிறது. (சங்கீதம் 104:12-15, 24-ஐ வாசியுங்கள்.) எல்லாவற்றையும்விட முக்கியமாக, நம்முடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்வதற்காக ஏராளமான விஷயங்களை யெகோவா சொல்லிக் கொடுப்பதற்காகவும், நமக்கு ஒரு அருமையான எதிர்கால நம்பிக்கையைக் கொடுத்திருப்பதற்காகவும் நாம் அவருக்கு நன்றி சொல்லலாம்.

9. யெகோவாவுக்கு நன்றி சொல்ல மறந்துவிடாமல் இருப்பதற்கு எது நமக்கு உதவி செய்யும்? (1 தெசலோனிக்கேயர் 5:17, 18)

9 யெகோவா செய்திருக்கிற எல்லாவற்றுக்கும் நன்றி சொல்வதற்கு சிலசமயங்களில் நாம் மறந்துவிடலாம். அப்படியென்றால், அதையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்? எதற்காக எல்லாம் நீங்கள் யெகோவாவிடம் ஜெபம் செய்தீர்கள் என்பதை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கேட்டதற்கு யெகோவா எப்படிப் பதில் கொடுத்திருக்கிறார் என்பதை அவ்வப்போது யோசித்துப்பாருங்கள். பின்பு, யெகோவா உங்களுக்குக் கொடுத்த பதிலுக்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:17, 18-ஐ வாசியுங்கள்.) இதைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்: நாம் செய்த ஒரு நல்ல விஷயத்துக்காக யாராவது ஒருவர் நமக்கு நன்றி சொல்லும்போது நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும், இல்லையா? அதுபோலவே, நாம் செய்த ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்ததற்காக நாம் அவருக்கு நன்றி சொல்லும்போது அது அவருடைய மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். (கொலோ. 3:15) ஆனால், நாம் யெகோவாவுக்கு நன்றி சொல்வதற்கு வேறொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அது என்ன?

அன்பு மகனையே கொடுத்ததற்காக யெகோவாவுக்கு ஜெபத்தில் நன்றி சொல்லுங்கள்

10. ஒன்று பேதுரு 2:21 சொல்கிறபடி, இயேசுவை இந்தப் பூமிக்கு அனுப்பியதற்காக நாம் ஏன் யெகோவாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்?

10 ஒன்று பேதுரு 2:21-ஐ வாசியுங்கள். தன்னைப் பற்றி நமக்குக் கற்றுக்கொடுப்பதற்கு யெகோவா தன்னுடைய அன்பு மகனை இந்தப் பூமிக்கு அனுப்பியதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி ஆழமாக படிக்கும்போது நாம் யெகோவாவைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். அவருக்குப் பிடித்தபடி எப்படி நடந்துகொள்ளலாம் என்பதையும் தெரிந்துகொள்கிறோம். கிறிஸ்துவின் பலியில் நாம் விசுவாசம் வைத்தால்தான் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடியும், அவரோடு சமாதானமாகவும் இருக்க முடியும்.—ரோ. 5:1.

11. நாம் ஏன் இயேசுவின் பெயரில் ஜெபம் செய்ய வேண்டும்?

11 இயேசு மூலம் ஜெபம் செய்யும் பாக்கியம் கிடைத்திருப்பதற்காக நாம் யெகோவாவுக்கு நன்றி சொல்லலாம். ஏனென்றால், நம்முடைய ஜெபத்துக்குப் பதில் கொடுக்க யெகோவா இயேசுவைப் பயன்படுத்துகிறார். நாம் இயேசுவின் பெயரில் ஜெபம் செய்யும்போது யெகோவா நம்முடைய ஜெபத்தைக் கவனித்துக்கேட்கிறார். அதற்குப் பதில் கொடுக்கிறார். அதனால்தான், “மகன் மூலம் தகப்பன் மகிமைப்படும்படி, என் பெயரில் நீங்கள் எதைக் கேட்டாலும் அதைச் செய்வேன்” என்று இயேசு சொன்னார்.—யோவா. 14:13, 14.

12. யெகோவா தன்னுடைய மகனை நமக்குக் கொடுத்ததற்காக நன்றி சொல்ல வேறென்ன காரணமும் இருக்கிறது?

12 இயேசுவின் மீட்புப் பலியின் மூலமாக யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார். ‘பரலோகத்தில் மகிமையுள்ளவரின் சிம்மாசனத்துக்கு வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற . . . தலைமைக் குரு’ என்று இயேசுவைப் பற்றி பைபிள் சொல்கிறது. (எபி. 8:1, 2) அதோடு, ‘பரலோகத் தகப்பனோடு இருக்கிற இயேசு கிறிஸ்து நமக்குத் துணையாக இருப்பார்’ என்றும் பைபிள் சொல்கிறது. (1 யோ. 2:1) நம்முடைய பலவீனங்கள் எல்லாவற்றையுமே புரிந்துகொண்டு, ‘நமக்காகப் பரிந்து பேசுகிற’ ஒரு தலைமைக் குருவை யெகோவா நமக்குக் கொடுத்ததற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! (ரோ. 8:34; எபி. 4:15) இயேசுவின் மீட்புப் பலி மட்டும் இல்லையென்றால், பாவ இயல்புள்ள மனிதர்களாக இருக்கிற நம்மால் யெகோவாவிடம் ஜெபத்தில் பேசவே முடியாது. அப்படியென்றால், யெகோவா தன்னுடைய செல்ல மகனையே ஒரு விலைமதிப்புள்ள பரிசாக நமக்குக் கொடுத்ததற்காக நன்றியோடு இருக்க வேண்டும், இல்லையா?

உங்கள் சகோதர சகோதரிகளுக்காகவும் ஜெபம் செய்யுங்கள்

13. தன்னுடைய சீஷர்கள்மேல் அன்பு வைத்திருந்ததை இறப்பதற்கு முந்தின ராத்திரி இயேசு எப்படிக் காட்டினார்?

13 இயேசு இறப்பதற்கு முந்தின ராத்திரி தன்னுடைய சீஷர்களுக்காக ரொம்ப நேரம் ஜெபம் செய்தார். ‘பொல்லாதவனிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கும்படி’ அந்த ஜெபத்தில் அவருடைய அப்பாவிடம் சொன்னார். (யோவா. 17:15) இயேசுவுக்கு அவருடைய சீஷர்கள்மேல் எவ்வளவு அன்பு! சீக்கிரத்தில், தனக்குப் பயங்கரமான கஷ்டங்கள் வரும் என்று இயேசுவுக்குத் தெரியும். ஆனாலும், அந்தச் சமயத்தில்கூட அவருடைய சீஷர்களை நினைத்து இயேசு கவலைப்பட்டார்.

சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்யும்போது நாம் எதைப் பற்றியெல்லாம் கேட்கலாம்? (பாராக்கள் 14-16) *

14. நம்முடைய சகோதர சகோதரிகளை நேசிக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?

14 இயேசுவைப் போல் நாமும் நம்முடைய தேவைகளைப் பற்றி மட்டுமே யோசிப்பதில்லை. நம்முடைய சகோதர சகோதரிகளுக்காகவும் நாம் தவறாமல் ஜெபம் செய்கிறோம். அப்படிச் செய்யும்போது ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டும்படி இயேசு கொடுத்த கட்டளைக்கு நாம் கீழ்ப்படிகிறோம் என்பதைக் காட்டுகிறோம். (யோவா. 13:34) அதோடு, நம்முடைய சகோதர சகோதரிகள்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பதை நாம் யெகோவாவுக்குக் காட்டுகிறோம். சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று நாம் நினைக்க வேண்டியதில்லை. சொல்லப்போனால், “நீதிமானின் மன்றாட்டு மிகவும் வலிமையுள்ளது” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது.—யாக். 5:16.

15. நம்முடைய சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்வது ஏன் முக்கியம்?

15 நம்முடைய சகோதர சகோதரிகள் நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். அதனால் அவர்களுக்காக நாம் ஜெபம் செய்வது ரொம்ப முக்கியம். நோய், இயற்கைப் பேரழிவு, உள்நாட்டுக் கலவரம், துன்புறுத்தல் போன்ற பல கஷ்டங்களை அனுபவிக்கிற நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு உதவச் சொல்லி நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். இப்படிக் கஷ்டத்தில் தவிப்பவர்களுக்கு உதவி செய்வதற்காகக் கடினமாக உழைக்கிற சகோதர சகோதரிகளுக்காகவும் நாம் ஜெபம் செய்யலாம். ஒருவேளை, பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கிற சகோதர சகோதரிகள் சிலரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அப்படியென்றால், அவர்களுடைய பெயரைச் சொல்லி அவர்களுக்காக நீங்கள் ஜெபம் செய்யலாம். அப்படி ஜெபம் செய்யும்போது, சகோதர சகோதரிகள்மேல் உண்மையிலேயே அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.

16. நம்மை வழிநடத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்வது ஏன் முக்கியம்?

16 சபையை வழிநடத்துகிற சகோதரர்களுக்காகவும் நாம் ஜெபம் செய்ய வேண்டும். அப்படி நாம் செய்ய வேண்டுமென்று இந்த சகோதரர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது அவர்களுக்கு ரொம்ப உதவியாகவும் இருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் அப்படித்தான் உணர்ந்தார். “நல்ல செய்தியின் பரிசுத்த ரகசியத்தைத் தைரியமாகப் பேசுவதற்குக் கடவுள் என் வாயில் வார்த்தைகளைத் தர வேண்டுமென்று எனக்காகவும் ஜெபம் செய்யுங்கள்” என்று அவர் சொன்னார். (எபே. 6:19) இன்றைக்கும் சபையை வழிநடத்துவதற்காகக் கடினமாக உழைக்கிற சகோதரர்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். அவர்கள் செய்கிற எல்லா வேலைகளையும் ஆசீர்வதிக்கச் சொல்லி நாம் யெகோவாவிடம் கேட்கும்போது அவர்கள்மேல் அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.

மற்றவர்கள் சார்பாக ஜெபம் செய்யும்போது

17-18. எப்போதெல்லாம் நாம் மற்றவர்கள் சார்பாக ஜெபம் செய்ய வேண்டியிருக்கலாம், அப்போது நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?

17 சிலசமயங்களில், மற்றவர்கள் சார்பாக நாம் ஜெபம் செய்ய வேண்டியிருக்கலாம். உதாரணத்துக்கு, ஒரு சகோதரி தன்னுடைய பைபிள் படிப்புக்கு வேறொரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு போகும்போது ஆரம்ப ஜெபத்தைச் செய்யும்படி அந்தச் சகோதரியிடம் கேட்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், பைபிள் மாணவரைப் பற்றி அவருக்கு அவ்வளவாகத் தெரியாததால் படிப்பு முடிக்கும்போது ஜெபம் செய்வதாகச் சொல்லலாம். அப்படிச் செய்யும்போது பைபிள் மாணவருடைய தேவைகளைப் புரிந்துகொண்டு, அவருக்கு ஏற்ற மாதிரி ஜெபம் செய்வது அந்தச் சகோதரிக்குச் சுலபமாக இருக்கும்.

18 வெளி ஊழியக் கூட்டத்திலோ சபைக் கூட்டத்திலோ ஜெபம் செய்யும் வாய்ப்பு ஒரு சகோதரருக்குக் கிடைக்கலாம். அப்படி வாய்ப்புக் கிடைக்கும்போது, அந்தக் கூட்டத்தின் நோக்கத்தை அந்த சகோதரர் மனதில் வைப்பது முக்கியம். சபைக்கு ஆலோசனை கொடுக்கும் விதமாகவோ, அறிவிப்பு செய்யும் விதமாகவோ அந்த ஜெபம் இருக்கக் கூடாது. பொதுவாக, சபைக் கூட்டங்களில் பாட்டுக்கும் ஜெபத்துக்கும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது. அதனால், ஜெபம் செய்கிற சகோதரர் “நிறைய வார்த்தைகளை” சொல்லி ஜெபம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. குறிப்பாக, ஆரம்ப ஜெபம் செய்கிறவர்கள் அப்படிச் செய்ய வேண்டியதில்லை.—மத். 6:7.

ஜெபத்துக்கு வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுங்கள்

19. யெகோவாவின் நாளுக்குத் தயாராக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

19 யெகோவாவின் நாள் நெருங்க நெருங்க நம்முடைய வாழ்க்கையில் ஜெபத்துக்கு நாம் ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “அதனால், விழித்திருந்து எப்போதும் மன்றாடுங்கள். அப்படிச் செய்தால்தான், நடக்கப்போகிற இவை எல்லாவற்றிலிருந்தும் உங்களால் தப்பிக்க முடியும்.” (லூக். 21:36) அப்படியென்றால், நாம் எப்போதும் ஜெபம் செய்தால்தான், நம்முடைய விசுவாசம் பலமாக இருக்கும், யெகோவாவின் நாளைச் சந்திக்கவும் நாம் தயாராக இருப்போம்.

20. நம்முடைய ஜெபம் வாசனையான தூபப்பொருளைப் போல் இருக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

20 இதுவரைக்கும் நாம் என்னவெல்லாம் பார்த்தோம்? ஜெபம் செய்வதற்கு நமக்குக் கிடைத்திருக்கிற வாய்ப்பை ஒரு பொக்கிஷமாக நாம் நினைக்க வேண்டும். நம்முடைய ஜெபத்தில், யெகோவாவின் நோக்கத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்ட விஷயங்களை நாம் முதலில் கேட்க வேண்டும். அதோடு, கடவுளுடைய மகனுக்காகவும் அவருடைய அரசாங்கத்துக்காகவும் நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம் என்பதைச் சொல்ல வேண்டும். நம்முடைய சகோதர சகோதரிகளுக்காகவும் நாம் ஜெபம் செய்ய வேண்டும். அதேசமயத்தில், அன்றாட தேவைகளுக்காகவும் நம்முடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்வதற்கு உதவி கேட்டும் ஜெபம் செய்ய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். ஜெபத்தில் நாம் எதைப் பற்றியெல்லாம் கேட்கப்போகிறோம் என்பதை ரொம்பக் கவனமாக யோசித்துப் பார்க்கும்போது நமக்குக் கிடைத்திருக்கிற இந்த அற்புதமான வாய்ப்பை நாம் எவ்வளவு உயர்வாக நினைக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். அப்படி நாம் செய்யும்போது, நம்முடைய ஜெபங்கள் வாசனையான தூபப்பொருளைப் போல் யெகோவாவுக்குப் ‘பிரியமானதாக’ இருக்கும்.—நீதி. 15:8.

பாட்டு 45 என் இதயத்தின் தியானம்

^ யெகோவாவிடம் ஜெபம் செய்வதை நமக்குக் கிடைத்த ஒரு பெரிய பாக்கியமாக நாம் நினைக்கிறோம். நம்முடைய ஜெபம் அவரை சந்தோஷப்படுத்துகிற ஒரு வாசனையான தூபப்பொருள்போல் இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் ஜெபம் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம். அதோடு, மற்றவர்கள் சார்பாக ஜெபம் செய்கிறபோது எதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பார்க்கலாம்.

^ படவிளக்கம்: ஒரு கணவர் தன்னுடைய மனைவியோடு சேர்ந்து தங்களுடைய மகள் பள்ளியில் பாதுகாப்பாக இருப்பதற்காகவும், உடம்பு சரியில்லாமல் இருக்கிற வயதான அப்பாவுக்காகவும், ஒரு பைபிள் மாணவருடைய முன்னேற்றத்துக்காகவும் ஜெபம் செய்கிறார்.

^ படவிளக்கம்: ஒரு இளம் சகோதரர் இயேசுவின் மீட்புப் பலிக்காகவும் அழகான இந்த பூமிக்காகவும் சத்தான உணவுப் பொருள்களுக்காகவும் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறார்.

^ படவிளக்கம்: ஆளும் குழுவுக்கும் இயற்கைப் பேரழிவுகளையும் துன்புறுத்தலையும் அனுபவிக்கிறவர்களுக்கும் உதவச் சொல்லி ஒரு சகோதரி யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார்.