Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 29

நம் தலைவர் இயேசுவுக்கு ஆதரவு கொடுங்கள்

நம் தலைவர் இயேசுவுக்கு ஆதரவு கொடுங்கள்

“பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.”—மத். 28:18.

பாட்டு 13 ஏசு நமக்கு முன்மாதிரி

இந்தக் கட்டுரையில்... *

1. யெகோவாவின் விருப்பம் என்ன?

 நல்ல செய்தி இன்றைக்கு உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பம். (மாற். 13:10; 1 தீ. 2:3, 4) இது யெகோவாவின் வேலை. இது ரொம்ப முக்கியமான வேலையாக இருப்பதால் இதை வழிநடத்துவதற்கு அவருடைய அன்பு மகனை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். திறமையான கண்காணியாக இருக்கிற இயேசு இந்த வேலையை வழிநடத்திக்கொண்டிருப்பதால், முடிவு வருவதற்கு முன்பு, யெகோவா விரும்பும் விதமாக இந்த வேலை செய்து முடிக்கப்படும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.—மத். 24:14.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?

2 இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைக்கு பிரமாண்டமான விதத்தில் பிரசங்க வேலை நடந்துகொண்டிருக்கிறது. இந்த வேலையைச் செய்வதற்கு நம்மை வழிநடத்துவதற்காகவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து நமக்குக் கற்றுக்கொடுப்பதற்காகவும் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ இயேசு பயன்படுத்திக்கொண்டு வருகிறார். (மத். 24:45) இதையெல்லாம் அவர் எப்படிச் செய்கிறார் என்று இந்தக் கட்டுரையில் நாம் பார்ப்போம். இயேசுவுக்கும் உண்மையுள்ள அடிமைக்கும் நாம் ஒவ்வொருவரும் எப்படி ஆதரவு கொடுக்கலாம் என்பதையும் பார்ப்போம்.

இயேசு பிரசங்க வேலையை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்

3. இயேசுவுக்கு என்ன அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது?

3 பிரசங்க வேலையை இயேசுதான் வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இது நமக்கு எப்படித் தெரியும்? பரலோகத்துக்குப் போவதற்கு சற்று முன்பு கலிலேயாவில் இருக்கிற ஒரு மலையில் இயேசு தன்னுடைய சீஷர்களைப் பார்த்துப் பேசினார். “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார். அதைச் சொன்ன பிறகுதான், ‘நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்குங்கள்’ என்ற கட்டளையை அவர்களுக்குக் கொடுத்தார். (மத். 28:18, 19) அப்படியென்றால், இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரங்களில் பிரசங்க வேலையை வழிநடத்துவதும் ஒன்று என்பது தெரிகிறது.

4. பிரசங்க வேலையை இயேசு இன்றுவரை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?

4 பிரசங்கிக்கிற வேலையும் சீஷராக்குகிற வேலையும் ‘எல்லா தேசத்திலும்’ நடக்கும் என்று இயேசு சொன்னார். அதோடு, ‘இந்தச் சகாப்தத்தின் கடைசி கட்டம்வரை எல்லா நாட்களிலும்’ அவர் நம் கூடவே இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். (மத். 28:20) அப்படியென்றால், நம்முடைய நாள்வரை இயேசு பிரசங்க வேலையைத் தொடர்ந்து வழிநடத்துவார் என்று இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

5. சங்கீதம் 110:3 நிறைவேறுவதற்கு நாம் எப்படி உதவி செய்கிறோம்?

5 கடைசி காலத்தில் பிரசங்க வேலையைச் செய்ய போதுமான அளவுக்கு ஆட்கள் இருக்க மாட்டார்களோ என்று நினைத்து இயேசு கவலைப்படவில்லை. ஏனென்றால், “நீங்கள் உங்களுடைய படைபலத்தைத் திரட்டும் நாளில், உங்களுடைய மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை அர்ப்பணிப்பார்கள்” என்று சங்கீதப் புத்தகத்தில் சொல்லியிருக்கிற தீர்க்கதரிசனம் நிறைவேறும் என்று அவருக்குத் தெரியும். (சங். 110:3) நல்ல செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லும்போது இயேசுவுக்கும் உண்மையுள்ள அடிமைக்கும் நீங்கள் ஆதரவு கொடுக்கிறீர்கள். அதோடு, இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்கும் உதவி செய்கிறீர்கள். இன்றைக்கு பிரசங்க வேலை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், அதில் சில சவால்களும் இருக்கின்றன.

6. இன்றைக்கு நல்ல செய்தியைச் சொல்கிறவர்களுக்கு இருக்கிற ஒரு சவால் என்ன?

6 நல்ல செய்தியைச் சொல்கிறவர்களுக்கு வருகிற ஒரு சவால், அவர்கள் எதிர்ப்பை சந்திப்பதுதான். விசுவாசதுரோகிகள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் நம்முடைய வேலையைப் பற்றித் தப்புத் தப்பாகச் சொல்கிறார்கள். அதை நம்பி நம்முடைய சொந்தக்காரர்களும் நமக்குத் தெரிந்தவர்களும், நம்மோடு வேலை செய்பவர்களும் யெகோவாவை வணங்க விடாமலும் நல்ல செய்தியைச் சொல்ல விடாமலும் நம்மைத் தடுக்கலாம். சில நாடுகளில் எதிரிகள் நம்மை மிரட்டுகிறார்கள், பயமுறுத்துகிறார்கள், கைது செய்கிறார்கள், ஜெயிலில்கூட போடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து நாம் ஆச்சரியப்படுவதில்லை. ஏனென்றால், “நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால் எல்லா தேசத்து மக்களும் உங்களை வெறுப்பார்கள்” என்று இயேசு முன்பே சொல்லியிருக்கிறார். (மத். 24:9) இப்படி நமக்குத் துன்புறுத்தல் வருவதே யெகோவாவின் ஆதரவு நமக்கு இருக்கிறது என்பதற்கு ஒரு ஆதாரம். (மத். 5:11, 12) இந்த எல்லா எதிர்ப்புக்கும் பின்னால் இருப்பது சாத்தான்தான். ஆனால், அவனைவிட இயேசுவுக்கு நிறைய சக்தி இருக்கிறது. அவருடைய ஆதரவால் எல்லா தேசத்து மக்களுக்கும் நல்ல செய்தியை நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

7. வெளிப்படுத்துதல் 14:6, 7 நிறைவேறி வருகிறது என்பதற்கு என்ன ஆதாரத்தை உங்களால் பார்க்க முடிகிறது?

7 நல்ல செய்தியைச் சொல்வதற்கு நமக்கு இன்றைக்கு இருக்கிற இன்னொரு சவால், உலகத்தில் நிறைய மொழிகள் இருப்பதுதான். ஆனால், இந்தத் தடையையும் தாண்டி எல்லா தேசத்து மக்களுக்கும் நல்ல செய்தி பிரசங்கிக்கப்படும் என்று அப்போஸ்தலன் யோவானுக்கு இயேசு தீர்க்கதரிசனமாக சொன்னார். (வெளிப்படுத்துதல் 14:6, 7-ஐ வாசியுங்கள்.) அவர் சொன்னது இன்றைக்கு அப்படியே நிறைவேறிக்கொண்டு வருகிறது. நம்மால் முடிந்த அளவுக்கு நிறைய மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்கிறோம். இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கிற மக்களால் jw.org வெப்சைட்டிலிருந்து 1,000-க்கும் அதிகமான மொழிகளில் பைபிள் விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. சீஷராக்கும் வேலையில் நாம் முக்கியமாகப் பயன்படுத்துகிற இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தை 700-க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. காது கேட்காதவர்களுக்காக வீடியோக்கள் மூலமாகவும் கண் தெரியாதவர்களுக்காக ப்ரெயில் பிரசுரங்கள் மூலமாகவும் பைபிளைப் பற்றி நாம் கற்றுக்கொடுக்கிறோம். பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி வருவதை நாம் கண்ணாரப் பார்க்கிறோம். இன்றைக்கு, ‘மற்ற தேசங்களைச் சேர்ந்த எல்லா பாஷைக்காரர்களும்’ பைபிள் சத்தியம் என்ற ‘சுத்தமான பாஷையை’ பேச கற்றுக்கொண்டிருக்கிறார்கள். (சக. 8:23; செப். 3:9) இவையெல்லாமே திறமையுள்ள கண்காணியாக இருக்கிற இயேசு கிறிஸ்து மூலமாகத்தான் நடக்கிறது.

8. நாம் செய்கிற பிரசங்க வேலையால் இதுவரைக்கும் என்னென்ன நன்மைகள் கிடைத்திருக்கின்றன?

8 இன்றைக்கு 240 நாடுகளைச் சேர்ந்த 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் யெகோவாவின் அமைப்பில் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கானவர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். எவ்வளவு பேர் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் என்பதைவிட, அவர்கள் எப்படிப்பட்ட அருமையான குணங்களை வளர்த்திருக்கிறார்கள் என்பதுதான் பெரிய விஷயம். பைபிள் சொல்கிறபடி, இவர்கள் எல்லாருமே “புதிய சுபாவத்தை” வளர்த்திருக்கிறார்கள். (கொலோ. 3:8-10) ஒழுக்கக்கேடாகவும், கொடூரமாகவும், பாரபட்சமாகவும், தேசப்பற்று உள்ளவர்களாகவும், இருந்த நிறைய பேர் தங்களை மாற்றிக்கொண்டு புதிய சுபாவத்தை வளர்த்திருக்கிறார்கள். “போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று ஏசாயா 2:4-ல் சொல்லியிருக்கிற வார்த்தைகள்கூட அவர்களுடைய விஷயத்தில் நிறைவேறிக்கொண்டு வருகிறது. புதிய சுபாவத்தைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள நாம் கடினமாக முயற்சி செய்வதைப் பார்க்கிற நிறைய பேர் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இப்படி, புதிய சுபாவத்தை வளர்த்துக்கொள்ளும்போது நம்முடைய கண்காணியான கிறிஸ்து இயேசு சொல்கிறபடியே நடக்கிறோம் என்பதையும் நாம் நிரூபிக்கிறோம். (யோவா. 13:35; 1 பே. 2:12) இது எதுவுமே தற்செயலாக நடக்கவில்லை. நமக்குத் தேவையான உதவியை எல்லாம் இயேசுதான் செய்துகொண்டு வருகிறார்.

உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை இயேசு நியமித்திருக்கிறார்

9. மத்தேயு 24:45-47 சொல்கிறபடி, கடைசி நாட்களில் என்ன நடக்கும் என்று இயேசு சொன்னார்?

9 மத்தேயு 24:45-47-ஐ வாசியுங்கள். பைபிள் விஷயங்களைக் கற்றுக்கொடுப்பதற்காக கடைசி நாட்களில் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ நியமிப்பதாக இயேசு முன்கூட்டியே சொல்லியிருந்தார். அவர் சொன்னது போலவே அந்த அடிமை இன்றைக்கு கடினமாக உழைத்துக்கொண்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. நம்முடைய கண்காணியான இயேசு பரலோக நம்பிக்கையுள்ள இந்தச் சின்ன தொகுதியைப் பயன்படுத்தி கடவுளுடைய மக்களுக்கும் ஆர்வமுள்ள மற்ற ஜனங்களுக்கும் “ஏற்ற வேளையில்” பைபிள் விஷயங்களைச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இவர்கள் மற்றவர்களுடைய விசுவாசத்துக்குத் தங்களை அதிகாரிகளாக நினைத்துக்கொள்வதில்லை. (2 கொ. 1:24) அதற்குப் பதிலாக, இயேசு கிறிஸ்துதான் தன்னுடைய மக்களுக்கு “தலைவராகவும் அதிகாரியாகவும்” இருக்கிறார் என்பதைப் புரிந்துவைத்திருக்கிறார்கள்.—ஏசா. 55:4.

10. யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை வணங்குவதற்கு படத்தில் காட்டப்பட்டிருக்கிற எந்தப் புத்தகம் உங்களுக்கு உதவி செய்தது?

10 ஆர்வமுள்ள ஜனங்கள் பைபிள் சத்தியங்களை ருசிப்பதற்காக, 1919-லிருந்து உண்மையுள்ள அடிமை ஏராளமான பிரசுரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, 1921-ல் கடவுளின் சுரமண்டலம் என்ற ஆங்கில புத்தகத்தை வெளியிட்டார்கள். பைபிளில் ஆர்வம் காட்டியவர்களுக்கு அதில் இருக்கிற அடிப்படை விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பதற்கு இந்தப் புத்தகம் ரொம்ப உதவியாக இருந்தது. காலம் மாற மாற அதற்கு ஏற்ற விதமாக நிறைய பிரசுரங்களை வெளியிட்டார்கள். “தேவனே சத்தியபரர்” என்ற ஆங்கில புத்தகத்தையும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது? போன்ற புத்தகங்களை வெளியிட்டார்கள். சமீபத்தில் இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற அருமையான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த எல்லா புத்தகங்களும் அந்தந்த காலங்களில் பைபிள் சத்தியங்களைச் சொல்வதற்கு ஏற்ற புத்தகங்களாக இருந்திருக்கின்றன. யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் அவர்மேல் அன்பை வளர்த்துக்கொள்வதற்கும் இதில் எந்தப் புத்தகம் உங்களுக்கு உதவி செய்தது?

11. நாம் எல்லாருமே யெகோவாவைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் ஆழமாகப் படித்துத் தெரிந்துகொள்வது ஏன் ரொம்ப முக்கியம்?

11 புதிதாக பைபிள் படிப்பு படிக்கிறவர்கள் மட்டுமல்ல, நாம் எல்லாருமே யெகோவாவைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் ஆழமாகப் படித்துத் தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். “திட உணவோ முதிர்ச்சியுள்ளவர்களுக்கே உரியது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். பைபிளிலிருந்து கற்றுக்கொள்கிற விஷயங்களின்படி நாம் நடந்தோமென்றால், “சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க” முடியும் என்றும் அவர் சொன்னார். (எபி. 5:14) இன்றைக்கு ஒழுக்க விஷயத்தில் உலகமே ரொம்ப சீரழிந்து கிடக்கிறது. அதனால், யெகோவா கொடுத்திருக்கிற நெறிமுறைகளின்படி நடப்பது உண்மையிலேயே ஒரு சவால்தான். ஆனால், நம்முடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்வதற்கு நமக்கு என்ன தேவையோ அது நமக்குக் கிடைக்கும்படி இயேசு பார்த்துக்கொள்கிறார். அது, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. அதை உண்மையுள்ள அடிமை இயேசுவின் வழிநடத்துதலின் கீழ் நமக்குத் தயாரித்துக் கொடுக்கிறார்கள்.

12. இயேசுவைப் போல நாமும் கடவுளுடைய பெயருக்கு எப்படியெல்லாம் மதிப்பு மரியாதை கொடுத்திருக்கிறோம்?

12 இயேசுவைப் போல் நாமும் கடவுளுடைய பெயருக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதையைக் கொடுத்திருக்கிறோம். (யோவா. 17:6, 26) உதாரணத்துக்கு, 1931-ல் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை நாம் ஏற்றுக்கொண்டோம். இப்படிச் செய்வதன் மூலமாக நம்முடைய அன்பான அப்பா யெகோவாவோடு எந்தளவுக்கு ஒரு விசேஷமான பந்தத்தை வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டியிருக்கிறோம். (ஏசா. 43:10-12) அதே வருஷம் அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு, புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் கடவுளுடைய பெயர் எங்கெல்லாம் வர வேண்டுமோ அங்கெல்லாம் அதைத் திரும்பவும் நாம் பயன்படுத்தியிருக்கிறோம். இதற்கு நேர்மாறாக, மற்ற சர்ச்சுகள் தங்களுடைய நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து யெகோவாவின் பெயரை நீக்கியிருக்கின்றன.

இயேசு தன்னுடைய மக்களை ஒழுங்கமைக்கிறார்

13. இன்றைக்கு இயேசு ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ பயன்படுத்திக்கொண்டு வருகிறார் என்பதை நீங்கள் எதை வைத்து நம்புகிறீர்கள்? (யோவான் 6:68)

13 மக்கள் கடவுளுக்குத் தூய வணக்கத்தைச் செலுத்துவதற்காக “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” மூலமாக ஒரு அருமையான அமைப்பை இயேசு ஏற்படுத்தியிருக்கிறார். அந்த அமைப்பைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவேளை, அப்போஸ்தலன் பேதுருவைப் போலவே நீங்களும் நினைக்கலாம். அவர் இயேசுவிடம், “நாங்கள் யாரிடம் போவோம்? முடிவில்லாத வாழ்வைத் தருகிற வார்த்தைகள் உங்களிடம்தானே இருக்கின்றன” என்று சொன்னார். (யோவா. 6:68) யெகோவாவின் அமைப்புக்குள் மட்டும் நாம் வரவில்லை என்றால், இன்றைக்கு நம்முடைய நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இந்த அமைப்பின் மூலம்தான் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்குத் தேவையான எல்லாமே கிடைக்கும்படி கிறிஸ்து பார்த்துக்கொள்கிறார். ஊழியத்தைத் திறமையாக செய்வதற்கான பயிற்சியும் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல, “புதிய சுபாவத்தை” வளர்த்துக்கொண்டு யெகோவாவுக்குப் பிரியமாக நடப்பதற்கும் அவர் உதவி செய்கிறார்.—எபே. 4:24.

14. கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து இருந்ததால் நீங்கள் எப்படி நன்மை அடைந்தீர்கள்?

14 நெருக்கடியான காலகட்டத்தில்கூட இயேசு ஞானமான ஆலோசனைகளைக் கொடுத்து நம்மை வழிநடத்துகிறார். அதனால் கிடைத்த நன்மைகளை இந்த கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் நம்மால் பார்க்க முடிந்தது. என்ன செய்வது என்றே தெரியாமல் இந்த உலகமே விழிபிதுங்கி நின்ற சமயத்தில் நாம் பாதுகாப்பாக இருப்பதற்குத் தேவையான தெளிவான ஆலோசனைகள் நமக்குக் கிடைக்கும்படி இயேசு பார்த்துக்கொண்டார். வெளியே போகும்போது முகக்கவசம் (mask) போடும்படியும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படியும் அமைப்பு நமக்கு ஆலோசனை கொடுத்தது. சபையில் இருக்கிற சகோதர சகோதரிகள் எல்லாரிடமும் ஃபோன் செய்து பேசச் சொல்லி, மூப்பர்களுக்கு அமைப்பு ஆலோசனை கொடுத்தது. சபையில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா... யெகோவாவோடு நெருக்கமாக இருக்கிறார்களா... என்று பார்த்துக்கொள்ளும்படி அவர்களிடம் சொல்லப்பட்டது. (ஏசா. 32:1, 2) ஆளும் குழுவின் அறிக்கைகள் மூலமாகவும் நமக்கு நிறைய ஆலோசனையும் உற்சாகமும் கிடைத்தன.

15. கூட்டங்களை நடத்துவதற்கும் ஊழியம் செய்வதற்கும் பெருந்தொற்று சமயத்தில் என்ன ஆலோசனைகள் கிடைத்தன, அதனால் என்ன பலன்கள் கிடைத்திருக்கின்றன?

15 பெருந்தொற்று சமயத்தில் கூட்டங்களை எப்படி நடத்துவது, ஊழியத்தை எப்படிச் செய்வது என்பதற்கான தெளிவான ஆலோசனைகள் நமக்குக் கிடைத்தன. கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தோம். ஊழியத்தைக்கூட முழுக்க முழுக்க கடிதம் வழியாகவும், ஃபோன் வழியாகவும் செய்ய ஆரம்பித்தோம். நாம் எடுத்த எல்லா முயற்சிகளையும் யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்திருப்பதாக நிறைய கிளை அலுவலகங்களிலிருந்து அறிக்கை வந்திருக்கிறது. சொல்லப்போனால், பெருந்தொற்று சமயத்தில் நிறைய பேருக்கு நல்ல நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.—“ நம் ஊழியத்தை யெகோவா ஆசீர்வதிக்கிறார்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

16. எந்த விஷயத்தில் நாம் உறுதியாக இருக்கலாம்?

16 பெருந்தொற்று சமயத்தில் அமைப்பு அளவுக்கு அதிகமாக கட்டுப்பாடுகளைப் போட்டதாக சிலர் நினைத்திருக்கலாம். ஆனால், அமைப்பு கொடுத்த ஆலோசனைகள் எவ்வளவு ஞானமாக இருந்தன என்று நம்மால் ஒவ்வொரு தடவையும் பார்க்க முடிந்தது. (மத். 11:19) இயேசு தன்னுடைய மக்களை எவ்வளவு அன்பாக வழிநடத்துகிறார் என்று ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் சரி, யெகோவாவும் அவருடைய அன்பு மகனும் நம் கூடவே இருப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்குக் கிடைக்கிறது.—எபிரெயர் 13:5, 6-ஐ வாசியுங்கள்.

17. நம்முடைய தலைவரான இயேசுவுடைய வழிநடத்துதலின் கீழே வேலை செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

17 இயேசு நம்முடைய தலைவராக இருப்பது நமக்குக் கிடைத்த எவ்வளவு பெரிய பாக்கியம், இல்லையா? இனம், தேசம், மொழி என எந்த வித்தியாசமும் பார்க்காத ஒரு அமைப்பில் நாம் இருக்கிறோம். கடவுளுடைய வார்த்தையிலிருந்து நமக்கு நிறைய ஆலோசனைகள் கிடைக்கின்றன. ஊழியம் செய்வதற்குத் தேவையான எல்லா பயிற்சியும் கிடைக்கிறது. அதோடு, புதிய சுபாவத்தை வளர்த்துக்கொள்ள நம் ஒவ்வொருவருக்குமே உதவி கிடைக்கிறது. ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டவும் நாம் கற்றுக்கொள்கிறோம். அப்படியென்றால், இயேசு நம்முடைய தலைவராக இருப்பதை நினைத்து நாம் ரொம்பவே பெருமைப்படலாம்.

பாட்டு 16 மகனை ராஜாவாக தந்த யெகோவாவைப் புகழுங்கள்!

^ இன்றைக்கு லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் சுறுசுறுப்பாக நல்ல செய்தியைச் சொல்கிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால், நம்முடைய எஜமானர் இயேசு கிறிஸ்துவுடைய கண்காணிப்பின் கீழ் நீங்கள் இந்த வேலையைச் செய்கிறீர்கள் என்று அர்த்தம். இன்றைக்கு நடக்கிற பிரசங்க வேலையை இயேசுதான் வழிநடத்துகிறார் என்பதற்கான ஆதாரங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது, கிறிஸ்துவின் வழிநடத்துதலின் கீழ் தொடர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நாம் உறுதியாக இருப்போம்.