Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 52

கஷ்ட காலத்தைச் சமாளிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள்

கஷ்ட காலத்தைச் சமாளிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள்

“நல்லது செய்ய வேண்டியவர்களுக்கு நீ அதைச் செய்யாமல் இருந்துவிடாதே. அதுவும், உதவி செய்ய சக்தி இருக்கும்போது அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.”—நீதி. 3:27.

பாட்டு 103 மேய்ப்பர்கள்—கடவுள் தரும் பரிசு

இந்தக் கட்டுரையில்... a

1. யெகோவா தன் ஊழியர்களின் ஜெபங்களுக்கு பொதுவாக எப்படிப் பதில் தருகிறார்?

 ஊக்கமாக ஜெபம் செய்கிறவர்களுக்குப் பதில் கொடுக்க யெகோவா உங்களையும்கூடப் பயன்படுத்தலாம். நீங்கள் மூப்பரோ, உதவி ஊழியரோ, பயனியரோ, பிரஸ்தாபியோ, சிறியவரோ, பெரியவரோ, சகோதரரோ, சகோதரியோ, யாராக இருந்தாலும் சரி, அவர் உங்களைப் பயன்படுத்தலாம். யெகோவாவை நேசிக்கிற ஒருவர் உதவிக்காக ஜெபம் பண்ணும்போது அவருக்கு ‘மிகவும் ஆறுதலாக இருக்க’ மூப்பர்களையும் மற்ற சகோதர சகோதரிகளையும் யெகோவா அடிக்கடி பயன்படுத்துகிறார். (கொலோ. 4:11) இந்த விதத்தில் யெகோவாவுக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கும் சேவை செய்வது நமக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்! ஒரு கொள்ளைநோயோ, பேரழிவோ, துன்புறுத்தலோ வரும்போது நம் சகோதர சகோதரிகளுக்கு நம்மால் பக்கபலமாக இருக்க முடியும்.

கொள்ளைநோய் பரவும்போது

2. ஒரு கொள்ளைநோய் பரவும்போது மற்றவர்களுக்கு உதவுவது ஏன் கஷ்டமாகிவிடலாம்?

2 ஒரு கொள்ளைநோய் பரவும்போது மற்றவர்களுக்கு உதவுவது கஷ்டமாகிவிடலாம். உதாரணத்துக்கு, நம் நண்பர்களைப் போய்ப் பார்க்கவோ பணக் கஷ்டத்தில் இருக்கிறவர்களை சாப்பிடக் கூப்பிடவோ நாம் ஆசைப்படலாம், ஆனால், அது பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாம். இல்லையென்றால், நம் குடும்பத்திலேயே பணக் கஷ்டம் இருக்கலாம் அல்லது யாருக்காவது உடம்பு முடியாமல் இருக்கலாம். இந்த எல்லா பிரச்சினைகளும் ஒருபக்கம் இருந்தாலும், நம்மால் முடிந்த விதத்தில் சகோதர சகோதரிகளுக்கு உதவ ஆசைப்படுகிறோம். அதைப் பார்த்து யெகோவா ரொம்ப சந்தோஷப்படுகிறார். (நீதி. 3:27; 19:17) நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்?

3. டெய்ஸியின் சபை மூப்பர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? (எரேமியா 23:4)

3 மூப்பர்கள் என்ன செய்யலாம்? ஆடுகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். (எரேமியா 23:4-ஐ வாசியுங்கள்.) போன கட்டுரையில் நாம் பார்த்த டெய்ஸி சொல்லும்போது, “என்னோட ஊழிய தொகுதியில இருந்த மூப்பர்கள் எங்களோட அடிக்கடி ஊழியம் பண்ணாங்க, மத்த சமயங்கள்லயும் எங்களோட நேரம் செலவு செஞ்சாங்க” என்று சொல்கிறார். b அந்த மூப்பர்கள் முன்கூட்டியே இவ்வளவு முயற்சி எடுத்து நட்பாகப் பழகியதால்தான் கொரோனா பரவ ஆரம்பித்தபோதும் சரி, டெய்ஸியின் குடும்பத்தில் சிலர் அதற்குப் பலியானபோதும் சரி, அவருக்கு உதவுவது அந்த மூப்பர்களுக்குக் கொஞ்சம் சுலபமாக இருந்தது.

4. டெய்ஸிக்கு உதவுவது மூப்பர்களுக்கு ஏன் சுலபமாக இருந்தது, அதிலிருந்து எல்லா மூப்பர்களும் என்ன கற்றுக்கொள்ளலாம்?

4 “மூப்பர்கள் ஏற்கெனவே என்னோட நண்பர்களா இருந்ததுனால என் கவலைகள சொல்றதும் மனசுவிட்டு பேசுறதும் ஈஸியா இருந்துச்சு” என்று டெய்ஸி சொல்கிறார். இதிலிருந்து மூப்பர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? நெருக்கடியான சமயம் வருவதற்கு முன்பே ஆடுகளை நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய ஃப்ரெண்டாக இருங்கள். பெருந்தொற்றினால் அவர்களை நேரில் போய்ப் பார்க்க முடியவில்லை என்றால் மற்ற வழிகளில் அவர்களிடம் பேசுங்கள். டெய்ஸி இப்படிச் சொல்கிறார்: “சிலசமயம் ஒரே நாள்ல நிறைய மூப்பர்கள் எனக்கு ஃபோன் பண்ணாங்க, மெசேஜ் பண்ணாங்க. அவங்க சொன்ன வசனங்கள் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தாலும், அந்த சமயத்துல அதெல்லாம் எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு.”

5. சகோதர சகோதரிகளுக்கு என்ன தேவை என்பதை மூப்பர்கள் எப்படித் தெரிந்துகொண்டு உதவி செய்யலாம்?

5 சகோதர சகோதரிகளுக்கு என்ன உதவி தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு வழி, அவர்களைத் தர்மசங்கடப்படுத்தாத விதத்தில் நாசூக்காக சில கேள்விகளைக் கேட்பதுதான். (நீதி. 20:5) இதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்: அவர்களுக்குத் தேவையான சாப்பாடு... மருந்துமாத்திரை... மற்ற பொருள்கள் எல்லாம் இருக்கிறதா? அவர்களுக்கு வேலை பறிபோகிற மாதிரியோ, வீட்டு வாடகை கொடுக்க முடியாத மாதிரியோ சூழ்நிலை இருக்கிறதா? அரசாங்க சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு ஏதாவது உதவி தேவையா? டெய்ஸிக்கு சகோதர சகோதரிகள் பணம், பொருள் கொடுத்து உதவி செய்தார்கள். ஆனால் அவருக்கு ரொம்ப உதவியாக இருந்தது, பைபிளிலிருந்து மூப்பர்கள் கொடுத்த உற்சாகமும் அவர்கள் காட்டிய அன்பும்தான். இதைப் பற்றி டெய்ஸி இப்படிச் சொல்கிறார்: “மூப்பர்கள் என்கூட சேர்ந்து ஜெபம் பண்ணாங்க. அவங்க என்ன ஜெபம் பண்ணாங்கன்னு எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா அப்ப எனக்கு எப்படி இருந்துச்சுங்கறத என்னால மறக்கவே முடியாது. யெகோவாவே என்கிட்ட ‘நீ தனியா இல்ல’ன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு.”—ஏசா. 41:10, 13.

கூட்டத்தில் ஒரு பகுதியை நடத்தும் சகோதரர், நேரில் வந்திருப்பவர்கள் சொல்லும் பதில்களைக் கேட்டு சந்தோஷப்படுகிறார். உடம்பு சரியில்லாததால் வீடியோ கான்ஃப்ரன்ஸ் வழியாக ஒரு சகோதரர் சொல்லும் பதிலைக் கேட்டும் சந்தோஷப்படுகிறார் (பாரா 6)

6. சபையில் இருக்கிற ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம்? (படத்தைப் பாருங்கள்.)

6 மற்றவர்கள் என்ன செய்யலாம்? முக்கியமாக மூப்பர்கள்தான் சபையில் இருக்கிறவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாம் நினைப்பது நியாயம்தான். ஆனால், நாம் எல்லாருமே ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும், ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்று யெகோவா சொல்கிறார். (கலா. 6:10) உடம்பு சரியில்லாதவர்களுக்கு நாம் ஏதாவது சின்னதாக செய்தால்கூட அவர்கள் ரொம்ப உற்சாகமாகிவிடுவார்கள். ஒரு சகோதரரை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு குட்டிப் பிள்ளை ஒரு கார்டு எழுதி அனுப்பலாம் அல்லது எதையாவது வரைந்து கொடுக்கலாம். ஒரு வாலிபர் ஒரு வயதான சகோதரிக்குத் தேவையான பொருள்களைக் கடைக்குப் போய் வாங்கித் தரலாம் அல்லது வேறு வேலைகளைச் செய்து கொடுக்கலாம். சபையில் இருக்கும் மற்றவர்கள் உடம்பு முடியாதவர்களுக்காக எதையாவது சமைத்துக் கொண்டுபோய்ப் பாதுகாப்பாகக் கொடுத்துவிட்டு வரலாம். பெருந்தொற்று சமயத்தில் சபையில் இருக்கும் எல்லாருக்குமே உற்சாகம் தேவைப்படும். ஒருவேளை, கூட்டம் முடிந்து ரொம்ப நேரம் இருந்து சகோதர சகோதரிகளிடம் நாம் பேசலாம், நேரிலும் சரி, வீடியோவிலும் சரி! மூப்பர்களுக்கு உற்சாகம் தேவையா? கண்டிப்பாக! பெருந்தொற்று சமயத்தில் அவர்களுக்கு ஏகப்பட்ட வேலை இருக்கும். அதையெல்லாம் செய்ததற்காக சில சகோதர சகோதரிகள் அவர்களுக்கு தேங்க்-யூ கார்டு அனுப்பியிருக்கிறார்கள். ‘ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தவும், ஒருவரை ஒருவர் பலப்படுத்தவும்’ நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது எவ்வளவு நன்றாக இருக்கும்!—1 தெ. 5:11.

பேரழிவு ஏற்படும்போது

7. பேரழிவினால் என்ன பாதிப்புகள் வரலாம்?

7 பேரழிவு ஏற்படும்போது, கண்ணை மூடி திறப்பதற்குள் ஒருவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடலாம். அவர் தன் வீட்டையோ பொருள்களையோ அன்பானவர்களையோகூட பறிகொடுத்துவிடலாம். சகோதர சகோதரிகளுக்கும்கூட இதுபோன்ற சோக சம்பவங்கள் நடக்கின்றன. நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்?

8. பேரழிவு வருவதற்கு முன்பே மூப்பர்களும் குடும்பத் தலைவர்களும் என்ன செய்யலாம்?

8 மூப்பர்கள் என்ன செய்யலாம்? மூப்பர்களே, ஒரு பேரழிவு வருவதற்கு முன்பாகவே அதற்குத் தயாராக இருக்க சகோதர சகோதரிகளுக்கு உதவுங்கள். பாதுகாப்பாக இருக்கவும் மூப்பர்களைத் தொடர்புகொள்ளவும் என்ன செய்ய வேண்டுமென்று அவர்கள் எல்லாரும் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். போன கட்டுரையில் நாம் பார்த்த மார்கரெட்டின் சபையில் இருந்த மூப்பர்கள் ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறார்கள். சபைத் தேவைகள் பகுதியில், “காட்டுத்தீ பரவுற காலம் இன்னும் முடியல” என்று அவர்கள் சொன்னார்கள். இருக்கிற இடத்தைவிட்டு வெளியேறும்படி அதிகாரிகள் சொன்னாலோ, நிலைமை ஆபத்தாக மாறுகிற மாதிரி தெரிந்தாலோ உடனடியாகக் கிளம்ப வேண்டும் என்றும் சொன்னார்கள். அது சரியான சமயத்தில் கொடுக்கப்பட்ட ஆலோசனை! ஐந்தே வாரத்தில் படுபயங்கரமான காட்டுத்தீ அங்கே பரவ ஆரம்பித்தது. இந்த மாதிரி பேரழிவு சமயத்தில் குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் என்ன பண்ண வேண்டும் என்பதை குடும்ப வழிபாட்டில் குடும்பத் தலைவர்கள் பேசி வைத்துக்கொள்ளலாம். இப்படி, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தயாராக இருந்தால் பேரழிவு வரும்போது உங்களால் பதட்டப்படாமல் இருக்க முடியும்.

9. பேரழிவுக்கு முன்பும் பின்பும் மூப்பர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

9 நீங்கள் ஒரு தொகுதி கண்காணியாக இருந்தால், பேரழிவு வருவதற்கு முன்பே உங்கள் தொகுதியில் இருக்கிற எல்லாருடைய ஃபோன் நம்பர்களையும் அட்ரஸையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அவை சரியாகத்தான் இருக்கின்றனவா என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போதுதான், பேரழிவு வரும்போது அவர்கள் எல்லாரையும் உங்களால் தொடர்புகொள்ளவும் முடியும், அவர்களுக்கு என்ன தேவை என்பதைக் கண்டுபிடிக்கவும் முடியும். நீங்கள் கண்டுபிடித்த தகவலையெல்லாம் உடனடியாக மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்புங்கள். அவர் அதை வட்டாரக் கண்காணிக்கு அனுப்பி வைப்பார். இப்படி எல்லாரும் சேர்ந்து உழைக்கும்போது, சகோதர சகோதரிகளுக்குச் சிறந்த விதத்தில் உதவ முடியும். காட்டுத்தீ பரவிய பிறகு மார்கரெட்டுடைய வட்டாரக் கண்காணி 36 மணிநேரம் விழித்திருந்து வேலை பார்த்தார். ஏனென்றால், காட்டுத்தீ பரவியதால் கிட்டத்தட்ட 450 சகோதர சகோதரிகள் இடம் மாற வேண்டியிருந்தது. அவர்களைத் தொடர்புகொள்ளும் வேலையையும் கவனித்துக்கொள்ளும் வேலையையும் மூப்பர்கள் நன்றாகச் செய்வதற்கு அந்த வட்டாரக் கண்காணி உதவி செய்தார். (2 கொ. 11:27) அதனால், பாதிக்கப்பட்ட எல்லாருக்குமே தங்குவதற்கு இடம் கிடைத்தது.

10. ஆடுகளைக் கவனித்துக்கொள்ளும் வேலையை மூப்பர்கள் ஏன் ரொம்ப முக்கியமானதாக நினைக்கிறார்கள்? (யோவான் 21:15)

10 சகோதர சகோதரிகளுக்கு பைபிளிலிருந்து உற்சாகத்தைக் கொடுப்பதும், கவலையைச் சமாளிக்க உதவுவதும் மூப்பர்களின் ஒரு பொறுப்பு. (1 பே. 5:2) பேரழிவு வந்தால், ஒவ்வொரு சகோதரரும் சகோதரியும் பாதுகாப்பாக இருக்கிறார்களா... அவர்களுக்கு சாப்பாடும் துணிமணியும், தங்குவதற்கு இடமும் இருக்கிறதா... என்பதையெல்லாம் மூப்பர்கள் முதலில் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு, நிறைய மாதத்துக்கு சகோதர சகோதரிகளுக்கு பைபிளிலிருந்து உற்சாகம் தேவைப்படலாம், மனதுக்கு ஆறுதலும் தேவைப்படலாம். (யோவான் 21:15-ஐ வாசியுங்கள்.) கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்யும் ஹரால்ட், பேரழிவில் பாதிக்கப்பட்ட நிறைய பேரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர் இப்படிச் சொல்கிறார்: “அவங்க மனசளவுல குணமாகறதுக்கு டைம் எடுக்கும். அவங்க மறுபடியும் பழைய மாதிரியே வாழ ஆரம்பிக்கலாம். ஆனா, பறிகொடுத்த அன்பானவங்களோட ஞாபகமோ, உயிருக்கு உயிரான ஒரு பொருளோட ஞாபகமோ, பேரழிவில சிக்குன ஞாபகமோ ரொம்ப நாளைக்கு அவங்கள வாட்டி எடுக்கலாம். இந்த நினைவுகள் திரும்ப திரும்ப அவங்கள சோகத்துல மூழ்கடிச்சிடலாம். அதுக்காக அவங்களுக்கு விசுவாசம் இல்லன்னு அர்த்தம் கிடையாது. மனுஷங்களுக்கு இந்த மாதிரி நடக்குறது இயல்புதான்.”

11. பேரழிவில் தப்பித்த குடும்பங்களுக்கு என்ன உதவிகள் தேவைப்படும்?

11 “அழுகிறவர்களோடு அழுங்கள்” என்ற பைபிள் அறிவுரையின்படி மூப்பர்கள் நடந்துகொள்கிறார்கள். (ரோ. 12:15) பேரழிவிலிருந்து உயிர் தப்பியவர்களுக்கு மூப்பர்கள் ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கும். முக்கியமாக, யெகோவாவின் அன்பும் சகோதர சகோதரிகளுடைய அன்பும் அவர்களுக்கு எப்போதுமே இருக்கும் என்பதை மூப்பர்கள் அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருக்கும். ஜெபம் பண்ணுவது, பைபிள் படிப்பது, கூட்டங்களுக்கு போவது, ஊழியம் செய்வது போன்ற விஷயங்களையெல்லாம் தொடர்ந்து செய்ய அவர்களுக்கு உதவ வேண்டியிருக்கும். மூப்பர்கள் பெற்றோர்களுக்கும் உதவி செய்யலாம். எப்படி? எந்தப் பேரழிவாலும் அழிக்க முடியாத விஷயங்களைப் பற்றியே யோசிக்க பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தலாம். பெற்றோர்களே, யெகோவா எப்போதுமே உங்கள் பிள்ளைகளுடைய ஃப்ரெண்டாக இருப்பார் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள். அவர்களுக்கு உதவி செய்ய அவர் எப்போதுமே ரெடியாக இருக்கிறார் என்பதையும் சொல்லுங்கள். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு உதவி செய்ய உலகம் முழுவதும் ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது என்பதையும் ஞாபகப்படுத்துங்கள்.—1 பே. 2:17.

உங்கள் பகுதியில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களால் வாலண்டியராக உதவ முடியுமா? (பாரா 12) e

12. நிவாரண வேலைக்கு மற்றவர்கள் எப்படி உதவலாம்? (படத்தைப் பாருங்கள்.)

12 மற்றவர்கள் என்ன செய்யலாம்? நீங்கள் இருக்கிற ஏரியாவுக்குப் பக்கத்தில் பெரிய பேரழிவு வந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதை மூப்பர்களிடம் கேளுங்கள். ஒருவேளை, பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கோ கட்டுமான வாலண்டியர்களுக்கோ கொஞ்ச நாட்கள் உங்கள் வீட்டில் தங்க நீங்கள் இடம் கொடுக்கலாம். சாப்பாடோ மற்ற பொருள்களோ தேவைப்படுகிறவர்களுக்கு அதைக் கொண்டுபோய்க் கொடுக்கலாம். பேரழிவு ரொம்ப தூரத்தில் நடந்தால்கூட உங்களால் உதவ முடியும். எப்படி? பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜெபம் செய்யலாம். (2 கொ. 1:8-11) உலகளாவிய வேலைக்கு நன்கொடை கொடுப்பதன் மூலமாகக்கூட நிவாரண வேலைக்கு நீங்கள் உதவலாம். (2 கொ. 8:2-5) எங்கே பேரழிவு நடந்தாலும் உங்களால் போய் உதவ முடியும் என்றால், அதைப் பற்றி மூப்பர்களிடம் பேசுங்கள். நிவாரண வேலைக்காக உங்களுக்கு அழைப்பு வந்தால், அநேகமாக உங்களுக்குப் பயிற்சி கொடுப்பார்கள். அதன் பிறகு, எங்கே... எப்போது... தேவை இருக்கிறதோ அங்கே உங்களைக் கூப்பிடுவார்கள்.

துன்புறுத்தல் வரும்போது

13. நம் வேலை தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளில் இருக்கிற சகோதரர்களுக்கு என்ன பிரச்சினைகள் வருகின்றன?

13 நம் வேலை தடை செய்யப்பட்டிருக்கிற நாடுகளில் துன்புறுத்தலால் சகோதர சகோதரிகள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். அதோடு, நம்மைப் போலவே அவர்களுக்கும் பணக் கஷ்டமோ வியாதியோ வரலாம், இல்லையென்றால் அன்பானவர்களை அவர்கள் மரணத்தில் பறிகொடுக்கலாம். அங்கே இருக்கும் மூப்பர்களால் உற்சாகம் தேவைப்படுபவர்களைப் போய்ப் பார்க்க முடியாமல் இருக்கலாம். அவர்களிடம் சுதந்திரமாகப் பேச முடியாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் போன கட்டுரையில் நாம் பார்த்த ஆன்ட்ரேவும் இருந்தார். அவருடைய ஊழியத் தொகுதியிலிருந்த ஒரு சகோதரி பணக் கஷ்டத்தில் இருந்தார். அவருக்கு கார் ஆக்ஸிடன்டும் ஆகிவிட்டது. அதனால், அவருக்கு நிறைய ஆபரேஷன் பண்ண வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு அவரால் வேலைக்கும் போக முடியவில்லை. தடை ஒருபக்கம்... பெருந்தொற்று ஒருபக்கம்... என்று இத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், அங்கிருந்த சகோதரர்கள் அந்தச் சகோதரிக்கு தங்களால் முடிந்த எல்லா உதவியையும் செய்தார்கள். யெகோவா எல்லாவற்றையுமே கவனித்துக்கொண்டிருந்தார்.

14. மூப்பர்கள் யெகோவாவை நம்பியிருப்பதை எப்படிக் காட்டலாம்?

14 மூப்பர்கள் என்ன செய்யலாம்? ஆன்ட்ரே ஜெபம் செய்துவிட்டு தன்னால் முடிந்ததைச் செய்தார். யெகோவா எப்படி அவருக்குப் பதில் கொடுத்தார்? அந்தச் சபையில் உதவி செய்யும் நிலைமையில் இருந்த சகோதர சகோதரிகளை யெகோவா தூண்டினார். சிலர் அந்தச் சகோதரியை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். வேறு சிலர் பண உதவி செய்தார்கள். இப்படி, அவர்களால் முடிந்ததைச் செய்தார்கள். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து தைரியமாக எடுத்த முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்தார். இந்த விதத்தில், அந்தச் சகோதரிக்கு எல்லா உதவியும் கிடைக்கிற மாதிரி அவர் பார்த்துக்கொண்டார். (எபி. 13:16) மூப்பர்களே, நீங்கள் இருக்கும் நாட்டில் நம் வேலை தடை செய்யப்பட்டிருந்தால், உதவி செய்யும் பொறுப்பை மற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுங்கள். (எரே. 36:5, 6) எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவை நம்பியிருங்கள். சகோதர சகோதரிகளைப் பார்த்துக்கொள்ள அவர் உங்களுக்கு உதவுவார்.

15. துன்புறுத்தல் சமயத்தில் சகோதர சகோதரிகளோடு நாம் எப்படி ஒற்றுமையாக இருக்கலாம்?

15 மற்றவர்கள் என்ன செய்யலாம்? நம் வேலைக்குத் தடை வரும்போது நாம் சின்னச் சின்னத் தொகுதிகளாகத்தான் கூடிவர வேண்டியிருக்கும். அதனால், எப்போதையும்விட அப்போது சமாதானமாக இருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். சாத்தானோடுதான் நாம் சண்டை போட வேண்டும், சகோதர சகோதரிகளோடு அல்ல. அதனால், சகோதர சகோதரிகளுடைய குறைகளைக் கண்டுகொள்ளாதீர்கள். அவர்களோடு ஏதாவது பிரச்சினை வந்தால், உடனடியாகப் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். (நீதி. 19:11; எபே. 4:26) மற்றவர்களுக்கு உதவ நீங்கள் முதல் படி எடுங்கள். (தீத். 3:14) போன பாராவில் நாம் பார்த்த அந்தச் சகோதரிக்கு அவருடைய ஊழியத் தொகுதியில் இருந்த எல்லாருமே உதவி செய்ததால், அவர்கள் எல்லாரும் ஒரு குடும்பம் மாதிரி நெருக்கமாக ஆனார்கள்.—சங். 133:1.

16. கொலோசெயர் 4:3, 18 சொல்கிறபடி, துன்புறுத்தப்படுகிற சகோதர சகோதரிகளுக்கு நாம் எப்படி உதவலாம்?

16 அரசாங்கம் தடை போட்டிருந்தாலும், ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்கிறார்கள். கடவுளுக்கு உண்மையாக இருந்ததற்காக சிலர் ஜெயிலுக்குக்கூட போயிருக்கிறார்கள். அவர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பங்களுக்காகவும் நாம் ஜெபம் பண்ணலாம். அவர்களுக்கு உதவி செய்யும் சகோதர சகோதரிகளுக்காகக்கூட நாம் ஜெபம் பண்ணலாம். ஏனென்றால், அவர்கள் தங்களுடைய சுதந்திரத்தையே பணயம் வைத்து, துன்புறுத்தப்படுகிறவர்களுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்து உதவுகிறார்கள், நீதிமன்றத்தில் அவர்கள் சார்பாகப் பேசுகிறார்கள், யெகோவாமேல் தொடர்ந்து நம்பிக்கை வைக்க அவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். c (கொலோசெயர் 4:3, 18-ஐ வாசியுங்கள்.) இப்படிப்பட்டவர்களுக்காக நீங்கள் செய்யும் ஜெபங்களுக்கு இருக்கும் சக்தியை ஒருநாளும் குறைத்து எடைபோடாதீர்கள்.—2 தெ. 3:1, 2; 1 தீ. 2:1, 2.

துன்புறுத்தலுக்காக உங்கள் குடும்பத்தை இப்போதே நீங்கள் எப்படித் தயார்படுத்தலாம்? (பாரா 17)

17. துன்புறுத்தலுக்காக நீங்கள் இப்போதே எப்படித் தயாராகலாம்?

17 நீங்களும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் துன்புறுத்தலைச் சந்திக்க இப்போதே தயாராகலாம். (அப். 14:22) எப்படியெல்லாம் நீங்கள் துன்புறுத்தப்படலாம் என்பதைப் பற்றியே யோசிக்காதீர்கள். அதற்குப் பதிலாக, யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் நட்பைப் பலப்படுத்துங்கள். அப்படிச் செய்ய உங்கள் பிள்ளைகளுக்கும் உதவுங்கள். சிலசமயம் உங்களுக்குக் கவலையாக இருந்தால் மனதில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டிவிடுங்கள். (சங். 62:7, 8) யெகோவாவை நாம் நம்புவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன என்று குடும்பமாகக் கலந்துபேசுங்கள். d பேரழிவு விஷயத்தில் எப்படியோ அதே மாதிரிதான் துன்புறுத்தல் விஷயத்திலும் நீங்கள் முன்கூட்டியே தயாராக இருப்பதையும் யெகோவாமீது நம்பிக்கை வைத்திருப்பதையும் உங்கள் பிள்ளைகள் பார்க்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் தைரியமாகவும் நிம்மதியாகவும் இருப்பார்கள்.

18. நமக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது?

18 நாம் பதட்டப்படாமலும் கவலைப்படாமலும் இருக்க தேவசமாதானம் நமக்கு உதவி செய்கிறது. (பிலி. 4:6, 7) கொள்ளைநோயோ பேரழிவோ துன்புறுத்தலோ வந்தால்கூட யெகோவா தேவசமாதானத்தைக் கொடுத்து நம் மனதை அமைதிப்படுத்துகிறார். கடினமாக உழைக்கும் மூப்பர்களை வைத்து அவர் நம்மைக் கவனித்துக்கொள்கிறார். அதோடு, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் வாய்ப்பை நம் எல்லாருக்குமே கொடுத்திருக்கிறார். இப்போது நாம் ஓரளவு சமாதானமான காலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அதனால், எதிர்காலத்தில் வரப்போகிற பெரிய பெரிய பிரச்சினைகளைச் சந்திக்கவும், ‘மிகுந்த உபத்திரவத்தை’ சந்திக்கவும் இப்போதே நாம் தயாராக வேண்டும். (மத். 24:21) மிகுந்த உபத்திரவத்தின்போது நாம் சமாதானத்தை இழந்துவிடாமல் இருக்க வேண்டும், அப்படிச் செய்ய மற்றவர்களுக்கும் உதவ வேண்டும். மிகுந்த உபத்திரவத்துக்குப் பிறகு, நம்மைக் கவலைப்படுத்தும் எந்தப் பிரச்சினையுமே வராது. உண்மையான சமாதானம் நமக்கு என்றென்றும் இருக்கும். இப்படியொரு சமாதானத்தை நமக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் எப்போதுமே யெகோவாவின் ஆசையாக இருந்திருக்கிறது.—ஏசா. 26:3, 4.

பாட்டு 109 ஊக்கமாக அன்பு காட்டுங்கள்

a கஷ்டத்தில் இருக்கிற தன் ஊழியர்களுக்கு உதவி செய்ய யெகோவா அடிக்கடி தன்னுடைய மற்ற ஊழியர்களைப் பயன்படுத்துகிறார். சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்த அவர் உங்களையும் பயன்படுத்தலாம். நாம் எப்படியெல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்யலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

b சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

c சிறையில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்காகக் கடிதங்கள் எழுதி கிளை அலுவலகத்துக்கோ உலகத் தலைமை அலுவலகத்துக்கோ தயவுசெய்து அனுப்பாதீர்கள். ஏனென்றால், அவர்களுக்கு அந்தக் கடிதங்களை அனுப்பும் ஏற்பாடு அங்கு இல்லை.

d ஜூலை 2019 காவற்கோபுரத்தில் வந்த ‘துன்புறுத்தலைச் சந்திக்க இப்போதே தயாராகுங்கள்’ என்ற கட்டுரையைப் பாருங்கள்.

e பட விளக்கம்: பேரழிவுக்குப் பிறகு கூடாரத்தில் தங்கியிருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒரு தம்பதி சில உணவுப் பொருள்களை எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.