Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ள’ நீங்கள் தயாரா?

‘பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ள’ நீங்கள் தயாரா?

“சாந்தமாக இருப்பவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும்” என்று இயேசு சொன்னார். (மத். 5:5) இது நிறைவேற நாம் ஆசையாகக் காத்திருக்கிறோம். பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் பூமியை எப்படிச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்? இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாக பூமியை ஆட்சி செய்வதன் மூலமாக! (வெளி. 5:10; 20:6) மற்ற உண்மைக் கிறிஸ்தவர்கள் இந்தப் பூமியை எப்படிச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்? எந்தக் குறையும் இல்லாமல் சமாதானமாக, சந்தோஷமாக என்றென்றும் இந்தப் பூமியில் வாழ்வதன் மூலமாகத்தான்! அப்படி வாழும்போது, பூமியைப் பண்படுத்துவது... உயிரோடு எழுப்பப்படுகிறவர்களைக் கவனித்துக்கொள்வது... அவர்களுக்குச் சொல்லித்தருவது... போன்ற முக்கியமான நிறைய வேலைகளை அவர்கள் செய்வார்கள். அதையெல்லாம் செய்ய நாம் ஆசையாக இருக்கிறோம் என்பதை இப்போதே காட்ட முடியும். எப்படி?

பூமியைப் பண்படுத்த நீங்கள் தயாரா?

“பூமியை நிரப்புங்கள், அதைப் பண்படுத்துங்கள்” என்ற கட்டளையை யெகோவா ஆதாம் ஏவாளுக்குக் கொடுத்தார். (ஆதி. 1:28) அப்படியென்றால், இந்த முழு பூமியும் ஒரு அழகான பூஞ்சோலையாக ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய மனதில் இருந்தது என்று தெரிகிறது. அவர் கொடுத்த கட்டளை, என்றென்றும் பூமியில் வாழப்போகிறவர்களுக்கும் பொருந்தும். ஆதாம் ஏவாளுக்கு ஏதேன் தோட்டம் இருந்தது. அதை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதுபடுத்தியிருந்தால் போதும். ஆனால், அர்மகெதோனில் தப்பித்துப் போகிறவர்களுக்கு, அந்த மாதிரி தோட்டம் எதுவும் இருக்காது. அதனால், பூமியைப் பூஞ்சோலையாக மாற்றுகிற வேலையை அவர்கள் முதலிலிருந்து செய்ய வேண்டியிருக்கும். அர்மகெதோன் முடிந்த கையோடு, அழிந்தும் சிதைந்தும் கிடைக்கிற எல்லா இடங்களையும் அவர்கள் சுத்தப்படுத்த வேண்டியிருக்கும். அப்படியென்றால், அவர்களுக்கு எக்கச்சக்கமான வேலை இருக்கும்.

பாபிலோனிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்த இஸ்ரவேலர்களுக்கும் இதே சூழ்நிலைதான் இருந்தது. அவர்களுடைய நாடு 70 வருஷங்களுக்கு மனித நடமாட்டமே இல்லாமல் வெறும் காடாகக் கிடந்தது. ஆனால், “[யெகோவா] அங்கே உள்ள வனாந்தரத்தை ஏதேன் தோட்டம்போல் ஆக்குவார். அங்கே இருக்கிற பாலைநிலத்தை யெகோவாவின் தோட்டம்போல் மாற்றுவார்” என்று ஏசாயா தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருந்தார். (ஏசா. 51:3) யெகோவாவின் உதவியோடு இஸ்ரவேலர்கள் தங்கள் நாட்டைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவந்தார்கள். எதிர்காலத்தில் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளப் போகிறவர்களும் யெகோவாவின் உதவியோடு அதை ஒரு அழகான பூஞ்சோலையாக மாற்றுவார்கள். அந்த வேலையைச் செய்ய உங்களுக்கும் ஆசை இருக்கிறது என்பதை நீங்கள் இப்போதே காட்ட முடியும்.

அதற்கு ஒரு வழி, உங்களுடைய வீட்டையும் சுற்றி இருக்கிற இடத்தையும் சுத்தமாகவும் நீட்டாகவும் வைத்துக்கொள்ள வேண்டும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எப்படி இருந்தாலும் சரி! உங்களுடைய ராஜ்ய மன்றத்தையும் மாநாட்டு மன்றத்தையும்கூட சுத்தமாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் நீங்கள் உதவலாம். உங்களுடைய சூழ்நிலை அனுமதித்தால், வாலண்டியர்களாக நிவாரண வேலையைச் செய்வதற்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். தேவைப்படுகிறபோது உங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவ தயாராக இருக்கிறீர்கள் என்பதை இது காட்டும். ‘பூஞ்சோலை பூமில வாழ்றதுக்கு வாய்ப்பு கிடைச்சா, அங்க பயன்படுத்துறதுக்கு தேவையான திறமைகள என்னால இப்பவே வளர்த்துக்க முடியுமா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

உயிரோடு எழுப்பப்படுகிறவர்களைக் கவனித்துக்கொள்ள நீங்கள் தயாரா?

யவீருவின் மகளை உயிரோடு எழுப்பிய உடனே அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுக்கச் சொல்லி இயேசு சொன்னார். (மாற். 5:42, 43) உயிரோடு வந்த அந்த 12 வயது சிறு பெண்ணைக் கவனித்துக்கொள்வது அவ்வளவு பெரிய வேலையாக இருந்திருக்காது. ஆனால், “நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் [மனிதகுமாரனின்] குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்” என்று இயேசு கொடுத்த வாக்குறுதி நிறைவேறும்போது நமக்கு எவ்வளவு வேலை இருக்கும்! (யோவா. 5:28, 29) அந்த வேலைகளைப் பற்றிய விவரம் பைபிளில் இல்லையென்றாலும், உயிரோடு எழுப்பப்படுகிறவர்களுக்கு சாப்பாடும் துணிமணியும் வீடும் கண்டிப்பாகத் தேவைப்படும். அவர்களுக்கு உதவ உங்களுக்கு ஆசை இருக்கிறது என்பதை இப்போதே உங்களால் காட்ட முடியும். எப்படி?

பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ள நீங்கள் இப்போதே தயாராக இருக்கிறீர்கள் என்பதை எப்படிக் காட்டலாம்?

வட்டாரக் கண்காணி உங்கள் சபையைச் சந்திக்கப்போவதாக அறிவிப்பு செய்யப்படும்போது அவரை உபசரிப்பதற்கு உங்கள் பெயரைக் கொடுக்கிறீர்களா? பெத்தேல் ஊழியர்களுக்கோ வட்டார கண்காணிகளுக்கோ நியமிப்பு மாறும்போது, உங்களால் அவர்களுக்கு ஒரு வீட்டைத் தேடித்தர முடியுமா? நீங்கள் இருக்கிற இடத்தில் மண்டல மாநாடோ விசேஷ மாநாடோ நடந்தால், மாநாட்டுக்கு முன்பும் பின்பும் உங்களால் வாலண்டியராக சேவை செய்ய முடியுமா? இல்லையென்றால், மாநாட்டுக்கு வருபவர்களை உங்களால் வரவேற்க முடியுமா?

உயிரோடு எழுப்பப்படுகிறவர்களுக்குச் சொல்லித்தர நீங்கள் தயாரா?

அப்போஸ்தலர் 24:15 சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, கோடிக்கணக்கானவர்கள் உயிரோடு வருவார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். அதில் நிறைய பேருக்கு யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பே கிடைத்திருக்காது. அவர்கள் உயிரோடு வந்த பிறகுதான் அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். a கடவுளுக்கு ரொம்ப காலமாக உண்மையாக சேவை செய்துகொண்டு வருகிறவர்கள் அவரைப் பற்றி அவர்களுக்குச் சொல்லித்தருவார்கள். (ஏசா. 11:9) ஷார்லெட் என்ற சகோதரி அந்த வேலையைச் செய்ய ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறார். அவர் ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் ஊழியம் செய்திருக்கிறார். “உயிரோட வர்றவங்களுக்கு சொல்லிக்கொடுக்குற காலம் எப்போ வரும்னு நான் ரொம்ப ஆசையா இருக்கேன். யெகோவாவ பத்தி தெரிஞ்சுக்காம இறந்துபோனவங்கள பத்தி படிக்குறப்போ, ‘அவங்களுக்கு மட்டும் யெகோவாவ பத்தி தெரிஞ்சிருந்தா அவங்க வாழ்க்கையே வேற மாதிரி இருந்திருக்கும்’னு அடிக்கடி யோசிச்சிருக்கேன். யெகோவாவுக்கு சேவை செஞ்சா வாழ்க்கை எவ்ளோ நல்லா இருக்கும்னு உயிரோட வர்றவங்களுக்கு சொல்ல நான் துடிச்சிட்டு இருக்கேன்” என்று அவர் சந்தோஷமாகச் சொல்கிறார்.

இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பு வாழ்ந்த யெகோவாவின் ஊழியர்களுக்கும்கூட நிறைய விஷயங்களை நாம் சொல்லித்தர வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, தானியேல் எழுதிய தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறின என்று அவருக்கே விளக்கிச் சொல்வது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். (தானி. 12:8) அதேபோல், ரூத்திடமும் நகோமியிடமும் அவர்களுடைய வம்சாவளியில்தான் மேசியா வந்தார் என்று சொல்வது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும், இல்லையா? இந்த மாதிரி ஒரு பிரம்மாண்டமான வேலையில் நமக்கும் ஒரு பங்கு கிடைப்பது உண்மையிலேயே ஒரு பெரிய பாக்கியமாக இருக்கும். அதுவும், இன்றைக்கு இருக்கிற எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் அந்த வேலையைச் செய்வது நமக்கு ரொம்ப நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

உயிரோடு வருகிறவர்களுக்குக் கற்றுக்கொடுக்க நீங்கள் ஆசையாகக் காத்திருக்கிறீர்கள் என்பதை இப்போதே எப்படிக் காட்டலாம்? கற்றுக்கொடுக்கிற திறமைகளை நீங்கள் வளர்த்துக்கொள்ளலாம். அதோடு, தவறாமல் பிரசங்க வேலையைச் செய்யலாம். (மத். 24:14) வயதானதாலோ வேறு ஏதாவது காரணத்தாலோ முன்புபோல் உங்களால் நிறைய செய்ய முடியவில்லை என்றாலும் முடிந்தளவுக்குச் செய்ய நீங்கள் முயற்சி எடுக்கலாம். அப்படிச் செய்யும்போது, உயிரோடு வருகிறவர்களுக்குச் சொல்லித்தர நீங்கள் ஆசையாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்ட முடியும்.

இப்போது கேள்வி என்னவென்றால், பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ள நீங்கள் உண்மையிலேயே விரும்புகிறீர்களா? பூமியைப் பண்படுத்த... உயிரோடு எழுப்பப்படுகிறவர்களைக் கவனித்துக்கொள்ள... அவர்களுக்குச் சொல்லித்தர... நீங்கள் ஆசையாக இருக்கிறீர்களா? அப்படியென்றால், அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதை இப்போதே காட்டுங்கள். பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும்போது செய்யப்போகிற வேலைகளைப் போலவே இப்போதும் வேலைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் செய்வதற்குக் கிடைக்கிற எந்த வாய்ப்பையும் நழுவ விடாதீர்கள்!

a செப்டம்பர் 2022 காவற்கோபுரத்தில் வந்திருக்கிற, “பலரை நீதியின் வழிக்குக் கொண்டுவரும் வேலை” என்ற கட்டுரையைப் பாருங்கள்.