Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையாக இருந்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்

உண்மையாக இருந்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்

‘உத்தமனுக்கு நீர் உத்தமராக இருக்கிறீர்.’—சங். 18:25.

பாடல்கள்: 63, 43

1, 2. தாவீது எப்படி யெகோவாவுக்கு உண்மையாக நடந்துகொண்டார்? (ஆரம்பப் படம்)

கும்மிருட்டாக இருந்த யூதேயா வனாந்தரத்தில் சவுலும் 3,000 படைவீரர்களும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். தாவீதும் அபிசாயும் அவர்கள் ஒவ்வொருவரையும் தாண்டி மெதுவாக சவுலிடம் போகிறார்கள். தாவீதை கொலை செய்வதற்காகத்தான் சவுல் அங்கே வந்திருக்கிறார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சவுலைப் பார்த்து அபிசாய், “இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா?” என்று தாவீதிடம் மெதுவாக கேட்கிறார். அதற்கு தாவீது சொன்ன பதில் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது! அவர் அபிசாயிடம், “அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? . . . நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” என்றார்.—1 சா. 26:8-12.

2 யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றால் சவுலுக்கு மரியாதை காட்ட வேண்டும், அவருக்கு எந்தக் கெடுதலும் செய்யக் கூடாது என்று தாவீதுக்கு தெரிந்திருந்தது. ஏனென்றால், யெகோவாதான் சவுலை ராஜாவாக தேர்ந்தெடுத்தார் என்று அவருக்கு நன்றாக தெரியும். இன்று நாமும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும், அவரால் நியமிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்.சங்கீதம் 18:25-ஐ வாசியுங்கள்.

3. அபிசாய் எப்படி தாவீதுக்கு உண்மையாக நடந்துகொண்டார்?

3 தாவீதை யெகோவா ராஜாவாக தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை அபிசாய் புரிந்துகொண்டதால் அவருக்கு மரியாதை காட்டினார். ஆனால், தாவீது ராஜாவான பிறகு பெரிய தவறுகளைச் செய்தார். உரியாவின் மனைவியோடு தவறான உறவு வைத்துக்கொண்டார். அதோடு போரில் உரியாவை கொலை செய்வதற்கு ஏற்பாடு செய்யும்படி யோவாபுக்கு கடிதம் எழுதினார். (2 சா. 11:2-4, 14, 15; 1 நா. 2:16) யோவாப் அபிசாயின் சகோதரன் என்பதால் தாவீது செய்த தவறு அபிசாயிக்கு தெரிந்திருக்கலாம். அப்படியிருந்தும் அவர் தாவீதுக்கு தொடர்ந்து மரியாதை காட்டினார். அதோடு, அபிசாய் படைத்தளபதியாக இருந்ததால் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜாவாக முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்வதற்குப் பதிலாக தாவீதுக்கு உண்மையாக இருந்தார், எதிரிகளிடமிருந்து அவரைக் காப்பாற்றினார்.—2 சா. 10:10; 20:6; 21:15-17.

4. (அ) யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததில் தாவீது ஒரு நல்ல உதாரணம் என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) யாரைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்?

4 தாவீது யெகோவாவுக்கு கடைசிவரை உண்மையாக இருந்தார். யெகோவாவையும் இஸ்ரவேலர்களையும் கேலி செய்த கோலியாத் என்ற ராட்சதனை இளம் வயதில் தாவீது கொலை செய்தார். (1 சா. 17:23, 26, 48-51) ராஜாவாக இருந்த சமயத்தில் அவர் பெரிய பாவங்களை செய்தபோது யெகோவாவின் தீர்க்கதரிசியான நாத்தான் அந்த பாவங்களைப் புரியவைத்து அவரைத் திருத்தினார். உடனே, தாவீது தன் தவறை உணர்ந்துகொண்டு மனந்திரும்பினார். (2 சா. 12:1-5, 13) வயதான பின்பும் யெகோவாவுக்கு ஆலயம் கட்டுவதற்கு தேவையான நிறைய பொருள்களை தாராளமாக கொடுத்தார். (1 நா. 29:1-5) தாவீது மிகப்பெரிய தவறுகளைச் செய்தாலும் கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். (சங். 51:4, 10; 86:2) இந்தக் கட்டுரையில் தாவீதையும் அவர் காலத்தில் வாழ்ந்த சிலரையும் பற்றி பார்க்கப் போகிறோம். யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம், அவருக்கு உண்மையாக இருக்க என்னென்ன குணங்கள் நமக்கு உதவும் என்று அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளப் போகிறோம்.

நீங்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பீர்களா?

5. அபிசாய் செய்த தவறிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

5 அபிசாய் தாவீதுக்கு உண்மையாக இருந்ததால்தான் சவுலை கொலை செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால், யெகோவா தேர்ந்தெடுத்த ஒருவருக்கு கெடுதல் செய்வது தவறு என்று தாவீதுக்கு தெரிந்திருந்ததால் சவுலை கொல்ல அவர் விடவில்லை. (1 சா. 26:8-11) இந்த சம்பவத்திலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்: யாருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும்போது நம்முடைய சூழ்நிலைக்கு உதவும் பைபிள் நியமங்களை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

6. குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் உண்மையாக இருக்க நாம் ஆசைப்பட்டாலும் நாம் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

6 நம்முடைய நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் உண்மையாக இருக்க நாம் ஆசைப்படுவோம். இருந்தாலும், நாம் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால் நாம் யோசிக்கும் விஷயங்கள் நம்மை தவறாக வழிநடத்தலாம். (எரே. 17:9) நாம் நேசிக்கிற ஒருவர் ஏதாவது தவறு செய்து யெகோவாவை விட்டு விலகினால் நாம் ஒரு விஷயத்தை எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டும்: வேறு யாரையும்விட யெகோவாவுக்குத்தான் நாம் முதலில் உண்மையாக இருக்க வேண்டும்.மத்தேயு 22:37-ஐ வாசியுங்கள்.

7. கஷ்டமான சூழ்நிலையில் ஒரு சகோதரி எப்படி யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்?

7 உங்கள் குடும்பத்தில் யாராவது சபைநீக்கம் செய்யப்பட்டால் அந்தச் சமயத்திலும் நீங்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டலாம். உதாரணத்துக்கு, அனிதா என்ற சகோதரியை எடுத்துக்கொள்ளுங்கள். [1] (பின்குறிப்பு) சபைநீக்கம் செய்யப்பட்ட அவருடைய அம்மா, அனிதாவுக்கு ஒருநாள் ஃபோன் செய்து அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று சொன்னார். குடும்பத்தில் யாரும் அவரிடம் பேசாததால் மனவேதனையில் இருப்பதாக சொன்னார். அதைக் கேட்டபோது அனிதாவுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அம்மாவுக்கு நிச்சயம் கடிதம் எழுதுவதாக சொன்னார். ஆனால், கடிதம் எழுதுவதற்கு முன்பு அனிதா சில பைபிள் நியமங்களைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்த்தார். (1 கொ. 5:11; 2 யோ. 9-11) யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்ததாலும் மனந்திரும்பாமல் இருந்ததாலும்தான் குடும்பத்தில் இருப்பவர்கள் அம்மாவிடம் பேசுவதில்லை என்பதை அந்த கடிதத்தில் அன்பாக சொன்னார். யெகோவாவிடம் திரும்பி வந்தால் மட்டும்தான் அம்மாவின் மனதில் இருக்கும் வேதனை எல்லாம் மறையும் என்றும் எழுதினார்.—யாக். 4:8.

8. யெகோவாவுக்கு உண்மையாக இருக்க என்னென்ன குணங்கள் நமக்கு உதவும்?

8 தாவீதின் காலத்தில் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்கள் மனத்தாழ்மை, கனிவு, தைரியம் போன்ற குணங்களைக் காட்டினார்கள். யெகோவாவுக்கு உண்மையாக இருக்க இந்தக் குணங்கள் நமக்கு எப்படி உதவும் என்று பார்க்கலாம்.

மனத்தாழ்மையாக இருக்க வேண்டும்

9. அப்னேர் ஏன் தாவீதைக் கொலை செய்ய நினைத்தான்?

9 கோலியாத்தின் தலையை தாவீது சவுலிடம் கொண்டுவந்ததை யோனத்தானும் படைத்தளபதியான அப்னேரும் பார்த்தார்கள். அதனால் யோனத்தான், தாவீதின் நெருங்கிய நண்பராக ஆனார், அவருக்கு உண்மையாக இருந்தார். (1 சா. 17:57-18:3) ஆனால் அப்னேர் அப்படி இல்லை. சொல்லப்போனால், தாவீதை கொலை செய்ய சவுலுக்கு பின்னர் உதவியும் செய்தான். (1 சா. 26:1-5; சங். 54:3) தாவீதைத்தான் அடுத்த ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது யோனத்தானுக்கும் அப்னேருக்கும் தெரியும். ஆனால் சவுல் இறந்த பிறகும் அப்னேர் தாவீதுக்கு ஆதரவாக இல்லை. அதற்கு பதிலாக சவுலின் மகன் இஸ்போசேத்தை ராஜாவாக்க முயற்சி செய்தான். அதன்பின் அவனுக்கே ராஜாவாக வேண்டும் என்ற ஆசை வந்திருக்கலாம். அதனால்தான் சவுலின் மனைவிகளில் ஒருவரோடு தவறான உறவு வைத்துக்கொண்டான். தாவீதைப் பற்றி யோனத்தான் உணர்ந்த விதத்துக்கும் அப்னேர் உணர்ந்த விதத்துக்கும் ஏன் வித்தியாசம் இருந்தது? ஏனென்றால் யோனத்தான் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார், மனத்தாழ்மையாக இருந்தார். ஆனால் அப்னேர் அப்படி இல்லை.—2 சா. 2:8-10; 3:6-11.

10. அப்சலோம் ஏன் கடவுளுக்கு உண்மையாக இல்லை?

10 தாவீதின் மகன் அப்சலோமுக்கு கொஞ்சம்கூட மனத்தாழ்மை இல்லாததால் அவன் கடவுளுக்கு உண்மையாக இருக்கவில்லை. அதுமட்டுமல்ல, அவன் ராஜாவாக வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதனால், “இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.” (2 சா. 15:1) நிறைய இஸ்ரவேலர்களின் மனதை தன்பக்கம் கவர்ந்தான், தனக்கு உண்மையாக இருக்க மக்களைத் தூண்டினான். தாவீதை யெகோவாதான் ராஜாவாக தேர்ந்தெடுத்தார் என்பது தெரிந்திருந்தபோதிலும் அவரை கொலை செய்ய முயற்சி செய்தான்.—2 சா. 15:13, 14; 17:1-4.

11. அப்னேர், அப்சலோம், பாருக்—இவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

11 அப்னேரையும் அப்சலோமையும் போல் ஒருவர் பதவிக்காக ஆசைப்பட்டால், அவரால் கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியாது. நாம் யெகோவாவை நேசிப்பதால், சுயநலமாக, மோசமாக நடந்துகொள்ள விரும்பமாட்டோம். இருந்தாலும் பெரிய வேலை, கைநிறைய சம்பளம் வேண்டுமென்று நாம் ஆசைப்பட்டால் யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தத்தையே அது பாதிக்கும். எரேமியாவின் செயலரான பாருக்கும் இதுபோன்ற ஏதோ ஒரு விஷயத்துக்காக ஆசைப்பட்டார். அதனால் யெகோவாவுடைய சேவையில் சந்தோஷத்தை இழந்தார். அப்போது யெகோவா பாருக்கிடம், “நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழுத்தேசத்துக்கும் இப்படியே நடக்கும். நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே” என்று சொன்னார். (எரே. 45:4, 5) பாருக் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தது போலவே நாமும் யெகோவாவுக்கு கீழ்ப்படிய வேண்டும். ஏனென்றால், சீக்கிரத்தில் அவர் இந்த பொல்லாத உலகத்தை அழிக்கப்போகிறார்.

12. சொந்த ஆசைகளுக்கு இடம் கொடுத்தால் நம்மால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியுமா, விளக்குங்கள்.

12 மெக்சிகோவில் இருக்கும் டானியேல் என்ற சகோதரர், யாருக்கு உண்மையாக இருப்பது என்ற முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தது. அவர் யெகோவாவை வணங்காத ஒரு பெண்ணை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டார். அதைப் பற்றி டானியேல் சொல்கிறார்: “நான் பயனியர் செய்ய ஆரம்பிச்சதுக்கு அப்புறமும் அவளுக்கு லெட்டர் எழுதிட்டு இருந்தேன். ஆனா கடைசியா அனுபவமுள்ள ஒரு மூப்பர்கிட்ட என் சூழ்நிலைமையை சொன்னேன். யாருக்கு உண்மையாக இருக்குறதுனு தெரியாம குழம்பி போயிருக்கேன்னு அவர்கிட்ட சொன்னேன். அப்படி சொல்றதுக்கு எனக்கு மனத்தாழ்மை தேவைப்பட்டுச்சு. கடவுளுக்கு உண்மையா இருக்கணும்னா லெட்டர் எழுதுறத நான் நிறுத்தணும்னு அந்த மூப்பர் எனக்கு புரியவைச்சார். நிறைய தடவை யெகோவாகிட்ட அழுது ஜெபம் செஞ்சேன், லெட்டர் எழுதுறத நான் நிறுத்துனேன். சீக்கிரத்துலயே ஊழியத்தை நான் ரொம்ப சந்தோஷமா செய்ய ஆரம்பிச்சேன்.” அதன்பின் டானியேல் யெகோவாவை வணங்கும் ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொண்டார், இப்போது வட்டாரக் கண்காணியாக சேவை செய்கிறார்.

கனிவாக நடந்துகொள்ள வேண்டும்

சபையில் இருக்கிற ஒருவர் பெரிய தவறை செய்தால் மூப்பர்களிடம் இருந்து உதவி பெறும்படி அவரிடம் சொல்வீர்களா? (பாரா 14)

13. தாவீது தவறு செய்தபோது, நாத்தான் எப்படி யெகோவாவுக்கும் தாவீதுக்கும் உண்மையாக இருந்தார்?

13 நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கும்போது மற்றவர்களுக்கும் உண்மையாக இருப்போம். யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை அனுபவிக்க அவர்களுக்கு உதவுவோம். நாத்தான் தீர்க்கதரிசி யெகோவாவுக்கும் தாவீதுக்கும் உண்மையாக இருந்தார். தாவீது ஒரு பெண்ணோடு தவறான உறவு வைத்துக்கொண்டதோடு அவளுடைய கணவனையும் கொலை செய்தார். அவரை கண்டித்து திருத்துவதற்காக நாத்தானை யெகோவா அனுப்பினார். நாத்தான் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தார், தைரியமாக நடந்துகொண்டார். அதேசமயம் அவர் ஞானமாகவும் நடந்துகொண்டார், தாவீதிடம் கனிவாக பேசினார். தாவீது எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டார் என்பதை புரியவைக்க நினைத்தார். அதற்கு, ஒரு ஏழைக்கு சொந்தமான ஒரேயொரு ஆட்டுக்குட்டியை திருடிய பணக்காரனைப் பற்றிய கதையைச் சொன்னார். அதைக் கேட்டதும் தாவீதுக்கு அந்தப் பணக்காரன்மீது பயங்கர கோபம் வந்தது. அப்போது நாத்தான் தாவீதைப் பார்த்து, “நீயே அந்த மனுஷன்” என்று சொன்னார். யெகோவாவுக்கு விரோதமாக எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டார் என்பதை தாவீது புரிந்துகொண்டார்.—2 சா. 12:1-7, 13.

14. யெகோவாவுக்கும் சரி, நண்பர்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் சரி, நீங்கள் எப்படி உண்மையாக இருக்கலாம்?

14 உங்களாலும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும். அதோடு, மற்றவர்களிடம் கனிவாக நடந்துகொள்வதன் மூலம் அவர்களிடமும் உண்மையாக இருக்க முடியும். உதாரணத்துக்கு ஒரு சகோதரர் பெரிய தவறை செய்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் அதைச் செய்ததற்கான அத்தாட்சி உங்களிடம் இருக்கிறது. அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அதுவும் அவர் உங்களுடைய நெருங்கிய நண்பராக அல்லது குடும்ப அங்கத்தினராக இருந்தால் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதுதான் ரொம்ப முக்கியம் என்று உங்களுக்கு தெரியும். ஒருவேளை அவர் செய்த தவறை நீங்கள் மூடிமறைத்தால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது! அந்த சமயத்தில் நாத்தானைப் போல் கனிவாக நடந்துகொள்ளுங்கள். அதேசமயம் உறுதியாக இருங்கள். மூப்பர்களிடம் சீக்கிரமாக உதவி கேட்கும்படி அந்த சகோதரரிடம் சொல்லுங்கள். அவர் அப்படிக் கேட்கவில்லை என்றால் நீங்களே போய் மூப்பர்களிடம் சொல்லுங்கள். இப்படிச் செய்யும்போது நீங்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பீர்கள். அதேசமயம் அந்த சகோதரரிடமும் கனிவாக நடந்துகொள்வீர்கள். ஏனென்றால் அந்த சகோதரர் மறுபடியும் யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை அனுபவிக்க மூப்பர்கள் அவருக்கு உதவி செய்வார்கள். அவர்கள் அவரை அன்பாகவும் சாந்தமாகவும் திருத்துவார்கள்.லேவியராகமம் 5:1; கலாத்தியர் 6:1-ஐ வாசியுங்கள்.

தைரியமாக இருக்க வேண்டும்

15, 16. கடவுளுக்கு உண்மையாக இருக்க ஊசாயிக்கு ஏன் தைரியம் தேவைப்பட்டது?

15 ஊசாய் தாவீதின் நெருங்கிய நண்பராக இருந்தார், அவருக்கு உண்மையாகவும் இருந்தார். ஆனால் அப்சலோமை ராஜாவாக்க மக்கள் நினைத்தபோது தாவீதுக்கும் கடவுளுக்கும் உண்மையாக இருக்க ஊசாயிக்கு அதிக தைரியம் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் பதவியைப் பறிப்பதற்காக அப்சலோம் தன் படைவீரர்களோடு எருசலேமுக்கு வந்தான். தாவீதும் ஊரைவிட்டு ஓடிப்போய்விட்டார். (2 சா. 15:13; 16:15) அப்போது ஊசாய் என்ன செய்தார்? தாவீதை விட்டுவிட்டு அப்சலோம் பக்கம் சாய்ந்தாரா? இல்லவே இல்லை. தாவீதுக்கு வயதாகி இருந்தாலும்... அவரைக் கொல்ல நிறையப் பேர் முயற்சி செய்தாலும்... அவர் தாவீதுக்கு உண்மையோடு இருந்தார். ஏனென்றால் யெகோவாதான் தாவீதை ராஜாவாக தேர்ந்தெடுத்தார் என்பதை ஊசாய் புரிந்துவைத்திருந்தார். அதனால் தாவீதை பார்க்க அவர் ஒலிவ மலைக்கு போனார்.—2 சா. 15:30, 32.

16 ஊசாயை எருசலேமுக்கு போகும்படியும் அப்சலோமின் நண்பராக நடிக்கும்படியும் தாவீது சொன்னார். அதுமட்டுமல்ல, அகித்தோப்பேலின் திட்டத்தை முறியடிக்கும்படியும் சொன்னார். ஊசாய், தாவீதுக்கு கீழ்ப்படிய தன் உயிரையே பணயம் வைத்ததோடு யெகோவாவுக்கும் உண்மையாக இருந்தார். ஊசாயிக்கு உதவும்படி தாவீது ஜெபம் செய்ததால் அப்சலோம் அகித்தோப்பேலின் ஆலோசனையைக் கேட்பதற்கு பதிலாக ஊசாயின் ஆலோசனையைக் கேட்டான்.—2 சா. 15:31; 17:14.

17. உண்மையாக இருக்க நமக்கு ஏன் தைரியம் தேவைப்படுகிறது?

17 யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நமக்கு தைரியம் தேவைப்படுகிறது. அதேசமயம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு, கூட வேலை செய்பவர்களுக்கு, அரசாங்க அதிகாரிகளுக்கு கீழ்ப்படிவதற்கு பதிலாக யெகோவாவுக்கு கீழ்ப்படிய நமக்கு தைரியம் தேவைப்படுகிறது. ஜப்பானில் இருக்கும் டாரோ, சின்ன வயதிலிருந்தே தன்னுடைய அப்பா-அம்மாவுக்கு பிடித்ததைத்தான் செய்வார். அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பார், எப்போதும் அவர்களுக்கு உண்மையாக இருப்பார். அவர்கள்மீது அன்பு இருந்ததால்தான் அதையெல்லாம் செய்தார். ஆனால், அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தார். அது அவருடைய அப்பா-அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அது டாரோவுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. கூட்டங்களுக்கு தொடர்ந்து போகப்போவதைப் பற்றி சொல்வதும் அவருக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. டாரோ சொல்கிறார், “அவங்களுக்கு என்மேல இருந்த கோபம் குறையவே இல்லை. ரொம்ப வருஷமா அவங்களை பார்க்குறதுக்குகூட என்னை விடல. நான் எடுத்த தீர்மானத்துல உறுதியா இருக்குறதுக்கு யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சேன். இப்போ அவங்க மனசு கொஞ்சம் மாறியிருக்கு. அடிக்கடி அவங்களைப் போய் பார்க்க முடியுது.”நீதிமொழிகள் 29:25-ஐ வாசியுங்கள்.

18. இந்தக் கட்டுரையில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

18 தாவீது, யோனத்தான், நாத்தான், ஊசாயைப் போல் நாமும் யெகோவாவுக்கு எப்போதும் உண்மையாக இருக்கலாம். அதனால் வரும் சந்தோஷத்தையும் திருப்தியையும் நாம் அனுபவிக்கலாம். ஆனால், யெகோவாவுக்கு உண்மையாக இல்லாத அப்சலோமையும் அப்னேரையும் போல் இருக்க நாம் ஒருநாளும் விரும்பமாட்டோம். நாம் எல்லாரும் தவறு செய்கிறவர்களாக இருந்தாலும் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதுதான் நம் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானது என்பதை காட்ட தீர்மானமாக இருக்க வேண்டும்.

^ [1] (பாரா 7) சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.