Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம் வரலாற்றுச் சுவடுகள்

சவுண்ட் கார்

சவுண்ட் கார்

“எஜமானரோட சேவையை செய்றதுக்கு பிரேசில்ல ஒரு சவுண்ட் கார்தான் இருக்கு. அங்க இருக்கிற லட்சக்கணக்கான மக்கள் இதை ‘உவாட்ச் டவர் சவுண்ட் கார்’-னு சொல்லுவாங்க.”—நத்தான்யேல் ஆல்ஸ்டன் யூல், 1938.

1930-1935 வரை பிரேசிலில் பிரசங்க வேலை ரொம்ப மந்தமாக இருந்தது. 1935-ல் பயனியர்களாக இருந்த நத்தான்யேலும் அவருடைய மனைவியும் சகோதரர் ரதர்ஃபோர்டுக்கு கடிதம் எழுதினார்கள். ‘எங்க வேணும்னாலும் சேவை செய்ய நாங்க தயாராக இருக்கோம்’ என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்கள். சகோதரர் ரதர்ஃபோர்டுதான் அந்தச் சமயத்தில் பிரசங்க வேலையை வழிநடத்தி வந்தார்.

நத்தான்யேலுக்கு அப்போது 62 வயது. அவர் ஓய்வு பெற்ற ஒரு இன்ஜினியர். அமெரிக்காவில், சான் பிரான்ஸிஸ்கோவில் இருக்கும் ஒரு சபையில் அவர் சர்வீஸ் டைரக்டராக சேவை செய்தார், பிரசங்க வேலையை கவனித்துக்கொண்டார். நற்செய்தியை எல்லாருக்கும் சொல்வதற்கு ஒலிபெருக்கி கருவிகளைப் பயன்படுத்தினார். பிறகு அவருக்கு, பல மொழிகளை பேசும் மக்கள் இருந்த பிரேசிலில் கிளை அலுவலக ஊழியராக சேவை செய்யும் நியமிப்பு கிடைத்தது. அவருக்கு இருந்த அனுபவமும் ஊழியத்தில் இருந்த ஆர்வமும் இந்தப் புதிய நியமிப்பை நன்றாக செய்ய உதவியாக இருந்தது.

1936-ல் நத்தான்யேலும் அவருடைய மனைவியும் பிரேசிலுக்கு வந்தார்கள். அவர்களோடு ஆன்டான்யூ பி. ஆன்ட்ரேடி என்ற பயனியர் சகோதரரும் வந்திருந்தார். நற்செய்தியை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க இவர் உதவினார். 35 ஃபோனோகிராஃபுகளையும் ஒரு சவுண்ட் காரையும் அவர்கள் கொண்டுவந்தார்கள். உலகத்திலேயே 5-வது பெரிய நாடான பிரேசிலில் அப்போது 60 யெகோவாவின் சாட்சிகள்தான் இருந்தார்கள். ஆனால், ஒருசில வருஷத்திலேயே லட்சக்கணக்கான மக்களுக்கு நற்செய்தியை சொல்வதற்கு இந்தப் புதிய கருவிகள் ரொம்ப உதவியாக இருந்தன.

நத்தான்யேலும் அவருடைய மனைவியும் பிரேசிலுக்கு வந்து ஒரு மாதத்திற்கு பிறகு அங்கு முதல் மாநாட்டை (service convention) நடத்த கிளை அலுவலகம் ஏற்பாடு செய்தது. அது சாவோ போலோவில் நடந்தது. மாநாட்டில் கொடுக்கப்போகும் பொதுப்பேச்சை பற்றி சவுண்ட் காரில் போய் மக்களுக்கு அவர்கள் சொன்னார்கள். அதனால், 110 பேர் மாநாட்டுக்கு வந்தார்கள். ஊழியத்தை இன்னும் ஆர்வமாக செய்வதற்கு அந்த மாநாடு சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தியது. சாட்சி அட்டையையும் அமைப்பு வெளியிட்ட புத்தகங்களையும் ஃபோனோகிராஃபையும் பயன்படுத்தி நற்செய்தியை சொல்ல அவர்கள் கற்றுக்கொண்டார்கள். ஃபோனோகிராஃபில் ஆங்கிலம், போலிஷ், ஜெர்மன், ஹங்கேரியன், ஸ்பானிஷ் மொழிகளிலும் பிறகு போர்ச்சுகீஸ் மொழியிலும் பேச்சுகளைப் போட்டுக்காட்டினார்கள்.

பிரேசிலில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு நற்செய்தியை சொல்ல இந்த சவுண்ட் கார் பயன்படுத்தப்பட்டது

1937-ல் சாவோ போலோ, ரியோ டி ஜெனிரோ, குரிடிபா ஆகிய இடங்களில் மூன்று மாநாடுகள் நடந்தன. பிரசங்க வேலையைச் செய்ய சகோதர சகோதரிகளை இந்த மாநாடு உற்சாகப்படுத்தியது. மாநாட்டுக்கு வந்தவர்களோடு சேர்ந்து வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய இந்த சவுண்ட் கார் பயன்படுத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் சிறுவனாக இருந்த ஸூஸெ மக்லாவ்ஸ்கி இப்படி எழுதினார்: “ஒரு ஸ்டான்டுல நம்ம புத்தகங்களை வைச்சிடுவோம். சவுண்ட் கார்ல பைபிள் செய்தியை போட்டு காட்டுவோம். சத்தம் கேட்டு வெளியில வர்றவங்ககிட்ட நாங்க பேசுவோம்.”

ஆறுகளில்தான் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. பக்கத்திலேயே சிலர் குளித்துக்கொண்டு இருந்தார்கள். இவர்கள் எல்லாருக்கும் நற்செய்தியை பிரசங்கிக்க சவுண்ட் கார் எவ்வளவு உதவியாக இருந்திருக்கும்! சகோதரர் ரதர்ஃபோர்டின் பதிவு செய்யப்பட்ட ஞானஸ்நானப் பேச்சு கணீர் கணீரென்று கேட்டது. அந்தப் பேச்சு போர்ச்சுகீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோது ஆர்வமாக இருந்தவர்கள் காரை சுற்றி நின்று கேட்டார்கள். பிறகு, ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட சமயத்தில் போலிஷ் மொழியில் பதிவு செய்யப்பட்ட ராஜ்ய பாடல்கள் போடப்பட்டது. சில சகோதர சகோதரிகள் அவர்களுடைய சொந்த மொழியில் அந்தப் பாடல்களைப் பாடினார்கள். “பெந்தெகோஸ்தே நாளில் சொல்லப்பட்ட விஷயங்களை, எல்லாரும் அவர்களுடைய சொந்த மொழியில் புரிந்துகொண்டதைத்தான் இந்தச் சம்பவம் ஞாபகப்படுத்தியது” என்று 1938 இயர்புக் சொல்கிறது.

மாநாட்டுக்கு பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சாவோ போலோவிலும் அதைச் சுற்றி இருந்த மற்ற நகரங்களிலும் சவுண்ட் காரில் பைபிள் பேச்சுகளை போட்டுக் காட்டினார்கள். பூங்காக்களில், வீடுகள் இருந்த பகுதிகளில், தொழிற்சாலைகளில் எல்லாம் போட்டுக் காட்டினார்கள். சாவோ போலோவில் இருந்து 97 கி.மீ. (60 மைல்) தூரத்தில் இருந்த தொழுநோயாளிகளின் காலனியில் ஒவ்வொரு மாதமும் 3,000 பேருக்கு சவுண்ட் காரில் பைபிள் பேச்சை போட்டுக் காட்டினார்கள். சீக்கிரத்தில் அங்கு ஒரு சபை ஆரம்பிக்கப்பட்டது. நிறையப் பேர் சபைக்கு வர ஆரம்பித்தார்கள். அவர்கள் அந்த நோயால் ரொம்பவே கஷ்டப்பட்டாலும், தொழுநோயாளிகள் தங்கியிருக்கும் இன்னொரு காலனிக்கு போய் ஆறுதல் அளிக்கும் பைபிள் செய்தியைச் சொல்ல முயற்சி செய்தார்கள். அதற்கு அனுமதியும் கிடைத்தது.

1938-ன் முடிவில் போர்ச்சுகீஸ் மொழியில் பதிவு செய்யப்பட்ட பைபிள் பேச்சுகள் கிடைத்தது. கல்லறை திருநாள் அன்று சவுண்ட் காரில் ஒவ்வொரு கல்லறைக்கும் போய் அங்கு வந்தவர்களிடம், “இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?,” “யெகோவா” போன்ற தலைப்புகளில் பேச்சுகளை போட்டுக் காட்டினார்கள். துக்கத்தில் இருந்த கிட்டத்தட்ட 40,000 பேர் அந்தப் பேச்சுகளைக் கேட்டார்கள்.

சவுண்ட் காரை பயன்படுத்தி பைபிளில் இருக்கும் உண்மைகளை மக்களுக்கு தைரியமாக சொன்னதால் சர்ச் பாதிரியார்களுக்கு ரொம்பவே கோபம் வந்தது. அதனால் அந்தக் காரை பயன்படுத்துவதை நிறுத்தும்படி அதிகாரிகளை வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். அப்போது நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி நத்தான்யேலின் மனைவி சொல்கிறார். பாதிரியார் ஒருவர் சவுண்ட் காரை சுற்றி வளைக்கும்படி ரவுடி கும்பலை தூண்டிவிட்டார். அந்தச் சமயத்தில் அங்கு மேயரும் சில போலீஸ் அதிகாரிகளும் வந்தார்கள்; பைபிள் பேச்சை முழுவதுமாக கேட்டார்கள். அந்த மேயர் நம் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டும் போனார். அதனால் அன்று எந்தக் கலவரமும் நடக்கவில்லை. நற்செய்தியை அறிவிப்பதில் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் ‘மிகப்பெரிய ராஜாவான யெகோவாவுக்கு சேவை செய்வதற்கும் அவருடைய பெயரை எல்லாருக்கும் சொல்வதற்கும் 1939-வது வருஷம் சிறந்த வருஷமாக இருந்தது’ என்று 1940 இயர்புக் சொல்கிறது.

‘உவாட்ச் டவர் சவுண்ட் கார்’ பிரேசில் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு பரிசு! லட்சக்கணக்கான மக்களுக்கு பைபிளில் இருக்கும் உண்மைகளை சொல்ல இந்தக் கார் ரொம்பவே உதவியாக இருந்தது. 1941-ல் சவுண்ட் கார் விற்கப்பட்டாலும் நற்செய்தி இன்னும் அங்கு ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பரந்து விரிந்த நாடான பிரேசிலில் யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து நற்செய்தியை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.—பிரேசிலிலுள்ள வரலாற்றுச் சுவடுகளிலிருந்து.