யெகோவாவின் நண்பர்களைப் போல் இருங்கள்
“தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு யெகோவா நெருங்கிய நண்பராக இருக்கிறார்.”—சங். 25:14, NW.
பாடல்கள்: 106, 118
1-3. (அ) நாம் யெகோவாவுடைய நண்பராக முடியும் என்று எப்படி உறுதியாகச் சொல்லலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் யாரைப் பற்றியெல்லாம் பார்க்கப் போகிறோம்?
ஆபிரகாமை கடவுளுடைய நண்பர் என்று பைபிள் மூன்று முறை சொல்கிறது. (2 நா. 20:7; ஏசா. 41:8; யாக். 2:23) அவரை மட்டும்தான் கடவுளுடைய நண்பர் என்று பைபிள் நேரடியாக சொல்கிறது. அப்படியென்றால், வேறு யாராலும் கடவுளுடைய நண்பராக முடியாதா? இல்லை. நம் எல்லாராலும் யெகோவாவுடைய நண்பராக முடியும் என்று பைபிள் சொல்கிறது.
2 கடவுளுடைய நண்பர்களாக இருந்த நிறையப் பேரைப் பற்றி பைபிளில் படிக்கிறோம். அவர்களுக்கு யெகோவாமீது பயபக்தியும் விசுவாசமும் இருந்ததால் அவருடைய நண்பர்களாக ஆனார்கள். (சங்கீதம் 25:14, NW-ஐ பின்குறிப்பிலிருந்து வாசியுங்கள்.) [1] அவர்களைத்தான் ‘திரண்டிருக்கும் மேகம் போன்ற சாட்சிகள்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார்.—எபி. 12:1.
3 யெகோவாவுடைய நண்பர்களாக இருந்த மூன்று பேரைப் பற்றி இப்போது பார்க்கலாம். (1) உண்மையாக இருந்த இளம் விதவை ரூத், (2) நல்ல ராஜாவாக இருந்த எசேக்கியா, (3) மனத்தாழ்மையாக இருந்த இயேசுவின் அம்மா மரியாள். இவர்கள் ஒவ்வொருவரும் யெகோவாவுடைய நண்பராக இருந்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
உண்மையான அன்பைக் காட்டினாள்
4, 5. என்ன முக்கியமான தீர்மானத்தை ரூத் எடுக்க வேண்டியிருந்தது, அது ஏன் ரொம்ப கஷ்டமாக இருந்தது? (ஆரம்பப் படம்)
4 நகோமியும் அவருடைய 2 மருமகள்களும் மோவாபிலிருந்து இஸ்ரவேலுக்கு நடந்துபோகிறார்கள். ஒர்பாள் பாதி வழியிலேயே மோவாபுக்குத் திரும்பி போய்விடுகிறாள். ஆனால், நகோமி தன் சொந்த நாட்டுக்குப் போவதில் உறுதியாக இருக்கிறார். ரூத் இப்போது என்ன செய்வாள்? தன் குடும்பத்தோடு இருக்க மோவாபுக்கே திரும்பிப் போவாளா, இல்லை தன் மாமியாரோடு இருக்க பெத்லகேமுக்குப் போவாளா? இந்த முக்கியமான தீர்மானத்தை ரூத் எடுக்க வேண்டியிருந்தது.—ரூத் 1:1-8, 14.
5 ரூத்தின் குடும்பத்தார் மோவாபில் இருந்தார்கள். அவள் மோவாபுக்குப் போனால் அவர்கள் ஒருவேளை அவளைக் கவனித்துக்கொள்வார்கள். அங்கிருக்கிற ஜனங்களை, அங்கு பேசுகிற மொழியை, அந்த ஊர் கலாச்சாரத்தைப் பற்றியெல்லாம் ரூத்துக்கு நன்றாகத் தெரியும். ரூத்துக்கு பெத்லகேமில் இப்படிப்பட்ட வாழ்க்கையைக் கொடுக்க முடியும் என்று நகோமியால் உறுதியாகச் சொல்ல முடியாது. அதோடு, ரூத்துக்கு ஒரு நல்ல கணவனையோ ஒரு குடும்பத்தையோ கொடுக்க முடியுமா என்று நினைத்தும் நகோமி கவலைப்பட்டார். அதனால் அவளைத் திரும்பவும் மோவாபுக்கே போகச் சொல்கிறார். அதுமட்டுமல்ல ஒர்பாள் ஏற்கெனவே ‘தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய்விட்டாள்.’ (ரூத் 1:9-15) ஆனால் ரூத் அப்படிச் செய்யவில்லை.
6. (அ) ரூத் என்ன ஞானமான தீர்மானத்தை எடுத்தாள்? (ஆ) ரூத் யெகோவாவின் “செட்டைகளின்கீழ் அடைக்கலமாய்” வந்ததாக போவாஸ் ஏன் சொன்னார்?
6 யெகோவாவைப் பற்றி ரூத் தன் கணவனிடமிருந்து அல்லது நகோமியிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கலாம். மோவாபில் இருந்த தெய்வங்களைப் போல் யெகோவா இல்லை என்பதை ரூத் புரிந்துகொண்டாள். ரூத் யெகோவாவை நேசித்தாள், அவரை மட்டும்தான் வணங்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டதால் ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுத்தாள். அதனால் நகோமியிடம், “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” என்று சொன்னாள். (ரூத் 1:16) நகோமியின்மீது ரூத்துக்கு இருந்த அன்பைப் பார்க்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது! ஆனால், யெகோவாமீது ரூத்துக்கு இருந்த அன்பைப் பார்க்கும்போது அதைவிட ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா! போவாஸுக்கும் அப்படித்தான் இருந்தது. அதனால்தான், “கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய்” வந்ததற்காக ரூத்தை அவர் புகழ்ந்தார். (ரூத் 2:12-ஐ வாசியுங்கள்.) ஒரு பறவை அதன் சிறகுகளின்கீழ் குஞ்சுகளை பாதுகாப்பதை இந்த வார்த்தைகள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. (சங். 36:7; 91:1-4) அந்த பறவையைப் போல் யெகோவாவும் ரூத்தைப் பாதுகாத்தார். அவள் காட்டிய விசுவாசத்திற்காக ஆசீர்வதித்தார். தான் எடுத்த தீர்மானத்தை நினைத்து ரூத் கொஞ்சம்கூட வருத்தப்பட்டிருக்க மாட்டாள்.
7. யெகோவாவுக்கு தங்களை அர்ப்பணிக்க தயங்குகிறவர்களுக்கு எது உதவியாக இருக்கும்?
7 இன்று நிறையப் பேர் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவருடைய ‘சிறகுகளின்கீழ் அடைக்கலமாக’ வருவதில்லை. அதாவது, அவரையே முழுமையாக நம்புவதில்லை. யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க அவர்கள் தயங்குகிறார்கள். நீங்களும் அப்படி உணர்கிறீர்களா? யெகோவாவுக்கு அர்ப்பணிக்க நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். இன்று எல்லாருமே ஏதாவது ஒரு கடவுளை வணங்குகிறார்கள். (யோசு. 24:15) ஆனால், உண்மையான கடவுளை வணங்குவதுதான் ஞானமானது. யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிப்பதன் மூலம், அவர் உங்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார் என்று நம்புவதைக் காட்டுகிறீர்கள். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், தன்னைத் தொடர்ந்து வணங்க யெகோவா நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார். ரூத்துக்கும் அதைத்தான் செய்தார்.
அவர் யெகோவாவையே நம்பியிருந்தார்
8. எசேக்கியா எப்படிப்பட்ட சூழலில் வளர்ந்தார்?
8 எசேக்கியாவின் வாழ்க்கை ரூத்தின் வாழ்க்கையிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. யெகோவாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேசத்தில் எசேக்கியா பிறந்தார். இருந்தாலும் அந்த தேசத்தில் இருந்த எல்லாரும் யெகோவாவை உண்மையோடு வணங்கவில்லை. உதாரணத்துக்கு, எசேக்கியாவின் அப்பா ஆகாஸ் கெட்ட ராஜாவாக இருந்தார். கடவுளுடைய ஆலயத்துக்கு அவர் மதிப்பு கொடுக்கவில்லை. பொய் தெய்வங்களை வணங்க மக்களைத் தூண்டினார். சொந்த 2 இரா. 16:2-4, 10-17; 2 நா. 28:1-3.
மகன்களையே பொய் தெய்வங்களுக்குப் பலியாகக் கொடுக்கும் அளவுக்கு கொடூரமாக நடந்துகொண்டார். இப்படிப்பட்ட மோசமான சூழலில்தான் எசேக்கியா வளர்ந்தார்.—9, 10. (அ) யெகோவாமீது எசேக்கியா கோபப்படுவதற்கு ஏதாவது வாய்ப்பு இருந்ததா? (ஆ) யெகோவாமீது நாம் ஏன் கோபப்படக் கூடாது? (இ) ஒருவர் எப்படிப்பட்டவராக ஆவார் என்பதை அவர் வளரும் சூழலை வைத்து தீர்மானிக்க முடியுமா?
9 ஆகாஸ் நடந்துகொண்டதைப் பார்த்து எசேக்கியா யெகோவாமீது கோபப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் கோபப்படவில்லை. இன்று நிறைய பேர் எசேக்கியா அனுபவித்த அளவுக்கு கஷ்டங்களை அனுபவிப்பதில்லை. இருந்தாலும், அவர்களுக்கு வரும் பிரச்சினைகளை நினைத்து யெகோவாமீதும் அவருடைய அமைப்புமீதும் கோபப்படுகிறார்கள். (நீதி. 19:3) இன்னும் சிலர் மோசமான சூழலில் வளர்ந்ததால் கஷ்டப்படுவதாக சொல்கிறார்கள். அல்லது அப்பா-அம்மா செய்த தவறுகளைப் பார்த்து அவர்களும் அதை செய்வதாக சொல்கிறார்கள். (எசே. 18:2, 3) இதெல்லாம் நியாயமான காரணங்களாக இருக்க முடியுமா?
10 நிச்சயம் இருக்காது. இதற்கு எசேக்கியாவின் வாழ்க்கையே ஒரு நல்ல உதாரணம். யெகோவாமீது கோபப்படுவதற்கு நமக்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. ஏனென்றால் யெகோவா மனிதர்களுக்கு ஒருநாளும் கஷ்டத்தைக் கொடுக்க மாட்டார். (யோபு 34:10) பொதுவாக பிள்ளைகள், அப்பா-அம்மாவிடமிருந்து நல்லதையும் கற்றுக்கொள்ளலாம் கெட்டதையும் கற்றுக்கொள்ளலாம். (நீதி. 22:6; கொலோ. 3:21) அதற்காக அப்பா-அம்மா எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் பிள்ளைகளும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனென்றால், எது சரி எது தவறு என்று தீர்மானிக்கும் உரிமையை யெகோவா எல்லாருக்குமே கொடுத்திருக்கிறார். (உபா. 30:19) இந்த உரிமையை எசேக்கியா எப்படிப் பயன்படுத்தினார்?
11. ஒரு நல்ல ராஜாவாக இருக்க எசேக்கியாவுக்கு எது உதவியது?
11 ஆகாஸ் இவ்வளவு மோசமான ராஜாவாக இருந்தாலும் அவருடைய மகன் எசேக்கியா நல்ல ராஜாவாக இருந்தார். (2 இராஜாக்கள் 18:5, 6-ஐ வாசியுங்கள்.) அவருடைய அப்பாவைப் போல் அவர் நடந்துகொள்ளவில்லை. அதற்கு பதிலாக யெகோவாவின் தீர்க்கதரிசிகளான ஏசாயா, மீகா, ஓசியா ஆகியோர் சொன்னதைக் கேட்டார். அவர்கள் சொன்ன ஆலோசனைகளையும் புத்திமதிகளையும் கேட்டு நடந்தார். அதனால் அவருடைய அப்பா செய்த நிறைய தவறுகளை அவரால் சரிசெய்ய முடிந்தது. அவர் ஆலயத்தைச் சுத்தம் செய்தார், மக்களை மன்னிக்கும்படி யெகோவாவிடம் கெஞ்சி கேட்டார். நாட்டில் இருந்த சிலைகளை எல்லாம் ஒழித்துக் கட்டினார். (2 நா. 29:1-11, 18-24; 31:1) அதன்பின் அசீரியா ராஜாவான சனகெரிப் எருசலேமை தாக்கப்போவதாக பயமுறுத்தியபோது அசாதாரண தைரியத்தையும் விசவாசத்தையும் காட்டினார். யெகோவா நிச்சயம் பாதுகாப்பார் என்று நம்பினார். தைரியமாக இருக்க மக்களை உற்சாகப்படுத்தினார். (2 நா. 32:7, 8) ஒருசமயம் அவர் பெருமையாக நடந்துகொண்டார், இருந்தாலும் யெகோவா அவரை திருத்தியபோது அதை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார். (2 நா. 32:24-26) உண்மையில் எசேக்கியா நமக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறார். மோசமான சூழலில் அவர் வளர்ந்தாலும் அதையெல்லாம் காரணம் காட்டி அவர் கெட்டவராக நடந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக யெகோவாவுடைய நண்பர் என்பதைக் காட்டினார்.
12. எசேக்கியாவைப் போலவே இன்று நிறையப் பேர் என்ன தீர்மானம் எடுத்திருக்கிறார்கள்?
12 இன்று நாம் அன்பே இல்லாத உலகத்தில் வாழ்கிறோம், மக்கள் ரொம்ப கொடூரமாக நடந்துகொள்கிறார்கள். நிறையப் பிள்ளைகளுக்கு அப்பா-அம்மாவின் அன்பும் அரவணைப்பும் கிடைப்பதில்லை. (2 தீ. 3:1-5) நிறைய கிறிஸ்தவர்கள் மோசமான சூழலில் வளர்ந்தாலும் யெகோவாவின் நண்பர்களாக இருக்க தீர்மானித்திருக்கிறார்கள். எசேக்கியாவைப் போலவே அவர்களும் வளர்ந்த சூழலை காரணம் காட்டி மோசமாக நடந்துகொள்வதில்லை. நம் எல்லாருக்கும் யெகோவா நல்லது-கெட்டதை தீர்மானிக்கிற உரிமையைக் கொடுத்திருக்கிறார். எசேக்கியாவைப் போலவே நாமும் அந்த உரிமையை நல்ல விதத்தில் பயன்படுத்தலாம். யெகோவாவையே எப்போதும் வணங்கலாம், அவருக்குப் புகழ் சேர்க்கலாம்.
“இதோ! நான் யெகோவாவின் அடிமைப் பெண்”
13, 14. கடவுள் கொடுத்த வேலையை செய்வது மரியாளுக்கு ஏன் கஷ்டமாக இருந்திருக்கலாம், இருந்தாலும் காபிரியேல் அதைச் சொன்னபோது மரியாள் என்ன சொன்னாள்?
13 எசேக்கியா வாழ்ந்து பல வருடங்களுக்குப் பிறகு ஒரு இளம் பெண் யெகோவாவின் நெருங்கிய நண்பராக இருந்தாள். அவளுடைய பெயர் மரியாள். யாருக்கும் கிடைக்காத ஒரு பெரிய பாக்கியம் அவளுக்குக் கிடைத்தது. அதாவது கடவுளுடைய மகனையே பெற்றெடுத்து வளர்க்கும் பாக்கியம் கிடைத்தது. இவ்வளவு பெரிய பொறுப்பை யெகோவா மரியாளுக்கு கொடுத்தார் என்றால் அவளை எந்தளவு நேசித்திருப்பார், அவள்மீது எந்தளவு நம்பிக்கை வைத்திருப்பார்! இந்தப் பெரிய பொறுப்பைப் பற்றி முதல் முதலில் கேட்டபோது மரியாள் என்ன சொன்னாள்?
14 மரியாளுக்குக் கிடைத்த இந்த பாக்கியத்தைப் பற்றி நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் மரியாள் அந்தச் சமயத்தில் எதையெல்லாம் நினைத்து கவலைப்பட்டிருப்பாள் என்பதைப் பற்றி யோசிக்க நாம் மறந்திருப்போம். உதாரணத்துக்கு, ஒரு ஆணோடு உறவு வைத்துக்கொள்ளாமலேயே மரியாள் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்று காபிரியேல் தூதன் சொன்னார். ஆனால், இதைப் பற்றி அந்த தூதன் மரியாளுடைய குடும்பத்தில் இருந்தவர்களிடமும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடமும் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் மரியாளைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? மரியாள் யோசேப்புக்கு துரோகம் செய்யவில்லை என்பதை எப்படிப் புரிய வைப்பாள்? அதோடு, கடவுளுடைய மகனை நல்லபடியாக வளர்க்கும் பெரிய பொறுப்பும் அவளுக்கு இருந்தது. மரியாள் வேறு எதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டிருப்பாள் என்று நமக்கு தெரியாது. ஆனால், காபிரியேல் தூதன் சொன்னதுமே மரியாள் என்ன சொன்னாள் என்பது மட்டும் நமக்குத் தெரியும். “இதோ! நான் யெகோவாவின் அடிமைப் பெண்! உங்கள் வார்த்தையின்படியே எனக்கு நடக்கட்டும்” என்று சொன்னாள்.—லூக். 1:26-38.
15. மரியாளுக்கு யெகோவாமீது அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது என்று எப்படி சொல்லலாம்?
கலா. 5:22; எபே. 2:8) தன்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த மரியாளும் கடினமாக முயற்சி செய்தாள். அது நமக்கு எப்படி தெரியும்? அதைத் தெரிந்துகொள்ள, மரியாள் கவனித்து கேட்ட விதத்தைப் பற்றியும் பேசிய விஷயங்களை பற்றியும் பார்க்கலாம்.
15 மரியாளுக்கு யெகோவாமீது அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது. ஒரு அடிமைப் பெண்ணைப் போல் கடவுள் சொல்வதை எல்லாம் செய்ய அவள் தயாராக இருந்தாள். தன்னை யெகோவா கவனித்துக்கொள்வார், பத்திரமாக பார்த்துக்கொள்வார் என்று மரியாள் நம்பினாள். மரியாளுக்கு எப்படி இந்தளவு விசுவாசம் இருந்தது? விசுவாசம் என்ற குணம் யாருக்கும் தானாக வருவதில்லை. அதை வளர்க்க கடினமாக முயற்சி செய்ய வேண்டும், அந்த முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும். (16. மரியாள் நன்றாக கவனித்து கேட்டாள் என்று எப்படி சொல்லலாம்?
16 மரியாள் கவனித்து கேட்டாள். “கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும்” இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (யாக். 1:19) எந்தவொரு விஷயத்தையும் மரியாள் கவனித்து கேட்டாள்; முக்கியமாக யெகோவாவைப் பற்றிய விஷயங்களை அவள் நன்றாக கவனித்து கேட்டாள் என்று பைபிள் சொல்கிறது. அந்த விஷயங்களை அவள் ஆழமாக யோசித்துப் பார்த்தாள். அதற்கு 2 சம்பவங்களைக் கவனியுங்கள்: இயேசு பிறந்த சமயத்தில் சில மேய்ப்பர்கள் ஒரு தூதன் சொன்ன விஷயங்களை மரியாளிடம் சொன்னார்கள். அதற்கு பிறகு, இயேசுவுக்கு 12 வயது இருக்கும்போது அவர் சொன்ன விஷயத்தைக் கேட்டு மரியாள் ரொம்பவே ஆச்சரியப்பட்டாள். இந்த 2 சமயங்களிலும் மரியாள் கவனமாக கேட்டாள், நடந்ததை ஞாபகத்தில் வைத்துக்கொண்டாள், அதைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்த்தாள்.—லூக்கா 2:16-19, 49, 51-ஐ வாசியுங்கள்.
17. மரியாள் பேசிய விஷயங்களில் இருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?
17 மரியாள் பேசிய விஷயங்கள். மரியாள் பேசிய நிறைய விஷயங்கள் பைபிளில் இல்லை. என்றாலும் அவளைப் பற்றிய பைபிள் பதிவுகளில் லூக்கா 1:46-55-லுள்ள பதிவில்தான் அவள் அதிகமாகப் பேசியிருக்கிறாள். இந்த வசனங்களில் இருந்து, மரியாள் எபிரெய வேதாகமத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தாள் என்று சொல்லலாம். ஏனென்றால், மரியாளின் வார்த்தைகள் சாமுவேலின் அம்மா அன்னாள் சொன்ன வார்த்தைகளை போலவே இருந்தது. (1 சா. 2:1-10) மரியாள் அந்த சமயத்தில் 20 தடவைக்கும் அதிகமாக பைபிள் வசனங்களை பயன்படுத்தி இருக்கலாம். அவளுடைய நெருங்கிய நண்பரான யெகோவாவிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்களைப் பேசுவது என்றால் மரியாளுக்கு ரொம்ப பிடிக்கும் என்று இதிலிருந்து தெரிகிறது.
18. என்னென்ன வழிகளில் நாம் மரியாளைப் போல் விசுவாசம் காட்டலாம்?
18 சிலநேரம் நமக்குக்கூட மரியாளுக்கு கிடைத்த மாதிரி கஷ்டமான நியமிப்புகள் கிடைக்கலாம். அதை நம்மால் செய்யவே முடியாது என்று நாம் நினைக்கலாம். அந்த மாதிரி நேரத்தில் நாம் மரியாளைப் போல் நடந்துகொள்ள வேண்டும். அந்த நியமிப்பை மனத்தாழ்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், யெகோவா நமக்கு உதவி செய்வார் என்று நம்ப வேண்டும். மரியாளைப் போலவே விசுவாசத்தைக் காட்டுவதற்கு நாம் யெகோவா சொல்வதை கவனமாகக் கேட்க வேண்டும், அவரைப் பற்றியும் அவருடைய விருப்பத்தைப் பற்றியும் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் உற்சாகமாக சொல்ல வேண்டும்.—சங். 77:11, 12; லூக். 8:18; ரோ. 10:15.
19. விசுவாசத்தைக் காட்டுவதில் சிறந்த உதாரணமாக இருந்தவர்களைப் போல் நடந்தால் நாம் எதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம்?
19 ஆபிரகாமைப் போலவே ரூத், எசேக்கியா, மரியாளும் யெகோவாவுக்கு நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அதோடு, இவர்களைப் போலவே ‘மேகம் போன்ற சாட்சிகள்’ நிறையப் பேருக்கு இந்த அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விசுவாசத்தைக் காட்டுவதில் இவர்கள் எல்லாருமே சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள். (எபி. 6:11, 12) இவர்களைப் போலவே நடக்கும்போது நாமும் கடைசிவரை யெகோவாவுடைய நண்பர்களாக இருப்போம்.
[பின் குறிப்பு]
^ [1] (பாரா 2) சங்கீதம் 25:14, NW: “தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு யெகோவா நெருங்கிய நண்பராக இருக்கிறார்.”