Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள்

யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள்

கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுவே நிற்கும் சாட்சி.’—1 சா. 20:42.

பாடல்கள்: 125, 62

1, 2. யோனத்தானுக்கும் தாவீதுக்கும் இருந்த நட்பு உண்மைத்தன்மைக்கு சிறந்த உதாரணம் என்று எப்படிச் சொல்லலாம்?

இளம் தாவீதுக்கு இருந்த தைரியத்தை பார்த்து யோனத்தான் நிச்சயம் ஆச்சரியப்பட்டிருப்பார்! ஏனென்றால், கோலியாத் என்ற ராட்சதனை கொன்று அவனுடைய ‘தலையை’ சவுலிடம் தாவீது கொண்டுவந்தார். (1 சா. 17:57) கடவுள் தாவீதோடு இருக்கிறார் என்பதை யோனத்தான் நன்றாகப் புரிந்துகொண்டார். அந்தச் சமயத்திலிருந்தே தாவீதும் அவரும் நல்ல நண்பர்களாக ஆனார்கள். ஒருவருக்கு ஒருவர் எப்போதும் உண்மையாக இருக்க தீர்மானித்தார்கள். (1 சா. 18:1-3) தீர்மானித்தது போலவே யோனத்தான் கடைசிவரை தாவீதுக்கு உண்மையாக இருந்தார்.

2 சவுலுக்கு அடுத்ததாக யெகோவா யோனத்தானை ராஜாவாக தேர்ந்தெடுக்கவில்லை, தாவீதை தேர்ந்தெடுத்தார். இருந்தாலும், யோனத்தான் தாவீதுக்கு உண்மையாக இருந்தார். தாவீதை கொலை செய்ய சவுல் முயற்சி செய்தபோது யோனத்தானுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. தாவீது ஒளிந்துகொண்டிருந்த இடம் யோனத்தானுக்கு தெரிந்திருந்ததால் அவரைப் பார்த்து யெகோவாவை நம்பியிருக்கும்படி உற்சாகப்படுத்தினார். அதோடு, “நீர் பயப்பட வேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டுபிடிக்க மாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்” என்று சொல்லி அவரைத் தைரியப்படுத்தினார்.—1 சா. 23:16, 17.

3. யாருக்கு உண்மையாக இருப்பதை யோனத்தான் ரொம்ப முக்கியம் என்று நினைத்தார், அது நமக்கு எப்படித் தெரியும்? (ஆரம்பப் படம்)

3 உண்மையாக நடந்துகொள்ளும் ஆட்களை நாம் எல்லாருமே ரொம்ப உயர்வாக மதிப்போம். அதனால்தான் நாம் யோனத்தானையும் உயர்வாக மதிக்கிறோம். ஆனால் அவர் தாவீதுக்கு உண்மையாக இருந்ததால் மட்டுமல்ல யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததால்தான் அவரை உயர்வாக மதிக்கிறோம். சொல்லப்போனால் யோனத்தான் யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததால்தான் தாவீதுக்கு உண்மையாக இருந்தார். தாவீது ராஜாவாக ஆவார் என்று தெரிந்தபோது அவர் பொறாமைப்படவில்லை. யெகோவாவையே முழுமையாக நம்பி இருக்க தாவீதுக்கு உதவி செய்தார். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருப்பதாகவும் வாக்குக் கொடுத்தார்கள். அதனால்தான், “கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி” என்ற வார்த்தைகளின்படி வாழ்ந்தார்கள்.—1 சா. 20:42.

4. (அ) எது நமக்கு உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் கொடுக்கும்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?

4 குடும்பத்தில் இருப்பவர்களிடம், நண்பர்களிடம், சபையில் இருப்பவர்களிடம் நாமும் உண்மையாக இருக்க வேண்டும். (1 தெ. 2:10, 11) ஆனால், யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதுதான் எல்லாவற்றையும்விட ரொம்ப முக்கியமானது. ஏனென்றால், அவர்தான் நமக்கு உயிர் கொடுத்தவர். (வெளி. 4:11) அவருக்கு நாம் உண்மையாக இருந்தால் நாம் ரொம்ப சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்போம். ஆனால், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்றால் கஷ்டமான சூழ்நிலைகளிலும் நாம் அவரையே நம்பியிருக்க வேண்டும். இந்தக் கட்டுரையில் நாம் 4 சூழ்நிலைகளைப் பார்க்கப் போகிறோம். அதிகாரத்தில் இருக்கிறவர்கள் அநியாயமாக நடந்துகொள்ளும்போது... யாருக்கு உண்மையாக இருப்பது என்று நாம் தீர்மானிக்கும்போது... மூப்பர்கள் நம்மை தவறாகப் புரிந்துகொள்ளும்போது... கொடுத்த வாக்கை காப்பாற்றுவது கஷ்டமாக இருக்கும்போது... யெகோவாவுக்கு எப்படி உண்மையாக இருக்கலாம் என்பதை யோனத்தானின் உதாரணத்திலிருந்து பார்க்கலாம்.

அதிகாரத்தில் இருக்கிறவர்கள் அநியாயமாக நடந்துகொள்ளும்போது...

5. சவுலுடைய ஆட்சியில் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது இஸ்ரவேலர்களுக்கு ஏன் கஷ்டமாக இருந்தது?

5 சவுலை ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்தாலும் அவர் யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போனார். அதனால் யெகோவா அவரை ஒதுக்கிவிட்டார். (1 சா. 15:17-23) இருந்தாலும் தொடர்ந்து ஆட்சி செய்ய சவுலை அனுமதித்தார். அவர் ‘யெகோவாவுடைய சிங்காசனத்தில்’ இருந்து ஆட்சி செய்தாலும் நிறைய கெட்ட விஷயங்களை செய்தார். அதனால், யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது இஸ்ரவேலர்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.—1 நா. 29:23.

6. யோனத்தான் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார் என்று எப்படிச் சொல்லலாம்?

6 சவுல் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனாலும் அவருடைய மகன் யோனத்தான் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். (1 சா. 13:13, 14) ஒருசமயம், இஸ்ரவேலரைத் தாக்குவதற்காக பெலிஸ்தர்கள் 30,000 ரதங்களோடு ஒரு பெரிய படையாக வந்தார்கள். சவுலிடம் 600 போர் வீரர்கள்தான் இருந்தார்கள். சவுலையும் யோனத்தானையும் தவிர வேறு யாரிடமும் போர் ஆயுதங்கள் இல்லை. ஆனால் யோனத்தான் ரொம்ப தைரியமாக இருந்தார். “கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்” என்று சாமுவேல் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்திருந்தார். (1 சா. 12:22) அதனால் தன் படைவீரனிடம், “அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை” என்று சொன்னார். அவர்கள் இருவரும் சேர்ந்து பெலிஸ்தர்களில் சுமார் 20 பேரை கொன்றார்கள். யோனத்தானுக்கு யெகோவாமீது அந்தளவுக்கு நம்பிக்கை இருந்ததால் யெகோவா அவருக்கு உதவி செய்தார், பூமி அதிரும்படி செய்தார். அதை பார்த்து பயந்துபோன பெலிஸ்தர்கள் ஒருவரை ஒருவர் வெட்டி கொன்றார்கள். அதனால் இஸ்ரவேலர்கள் போரில் ஜெயித்தார்கள்.—1 சா. 13:5, 15, 22; 14:1, 2, 6, 14, 15, 20.

7. யோனத்தான் அவருடைய அப்பாவிடம் எப்படி நடந்துகொண்டார்?

7 சவுல் யெகோவாவுக்கு பிடித்த மாதிரி நடக்கவில்லை என்றாலும் யோனத்தான் முடிந்தளவு அவருடைய அப்பாவுக்கு கீழ்ப்படிந்தார். உதாரணத்துக்கு, அவருடைய அப்பாவோடு சேர்ந்து யெகோவாவுடைய மக்களுக்காகப் போர் செய்தார்.—1 சா. 31:1, 2

8, 9. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை காட்டுவதன் மூலம் நாம் கடவுளுக்கு உண்மையாக இருக்கிறோம் என்று எப்படி சொல்ல முடியும்?

8 யெகோவாவுடைய சட்டங்களுக்கு விரோதமாக இல்லாதவரை மனித அரசாங்கங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். அப்படிச் செய்தால் யோனத்தானைப் போலவே நாமும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறோம் என்று சொல்ல முடியும். மனித அரசாங்கங்களை யெகோவா அனுமதித்திருப்பதால் நாம் அவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். (ரோமர் 13:1, 2-ஐ வாசியுங்கள்.) அரசாங்க அதிகாரிகள் நேர்மையாக நடக்கவில்லை என்றாலும் நாம் அவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டும். சொல்லப்போனால், யெகோவா யாருக்கெல்லாம் அதிகாரம் கொடுத்திருக்கிறாரோ அவர்களுக்கு எல்லாம் நாம் மதிப்பும் மரியாதையும் கொடுத்தால்தான் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறோம் என்று சொல்ல முடியும்.—1 கொ. 11:3; எபி. 13:17.

யெகோவாவை வணங்காத மணத்துணைக்கு மரியாதை காட்டுவதன் மூலம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும் (பாரா 9)

9 தென் அமெரிக்காவில் இருக்கும் நான்ஸியின் அனுபவத்தை கவனியுங்கள். [1] (பின்குறிப்பு) அவளுடைய கணவர் அவளை மோசமாக நடத்தினாலும் அவருக்கு மதிப்பு கொடுப்பதன் மூலம் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தாள். நான்ஸி ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பதால் அவளுடைய கணவர் அவளை கேவலமாகப் பேசி மனதை காயப்படுத்துவார், சிலசமயம் அவளிடம் பேசவே மாட்டார். பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு போய்விடுவதாக மிரட்டுவார். ஆனால் நான்ஸி ஒருநாளும் ‘தீமைக்குத் தீமை செய்யவில்லை.’ நல்ல மனைவியாக இருக்க தன்னால் முடிந்தவரை முயற்சி செய்தாள். கணவருக்கு சாப்பாடு சமைத்துக் கொடுத்தாள், துணிமணிகளை துவைத்துக் கொடுத்தாள், அவருடைய சொந்தக்காரர்களை நல்லபடியாக கவனித்துக்கொண்டாள். (ரோ. 12:17) அவளால் முடிந்தபோதெல்லாம் கணவருடைய குடும்பத்தோடும் நண்பர்களோடும் நேரம் செலவிட்டாள். ஒருசமயம் அவளுடைய மாமனாரின் சவ அடக்க நிகழ்ச்சிக்காக வேறொரு ஊருக்குப் போக வேண்டியிருந்தது. போவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் நான்ஸி செய்தாள். சவ அடக்க நிகழ்ச்சி முடியும்வரை தன்னுடைய கணவருக்காக சர்ச்சுக்கு வெளியிலேயே காத்துக்கொண்டிருந்தாள். பல வருடங்களுக்குப் பிறகு அவளுடைய கணவரிடம் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது. நான்ஸி ரொம்ப பொறுமையாகவும் மரியாதையாகவும் நடந்துகொண்டதால் அவளுடைய கணவரின் மனம் இளகியது. இப்போதெல்லாம் கூட்டங்களுக்குப் போவதற்கு நான்ஸியை உற்சாகப்படுத்துகிறார். அவளை கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டு போவதோடு சிலசமயம் அவரும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.—1 பே. 3:1, 2.

யாருக்கு உண்மையாக இருப்பது என்று தீர்மானிக்கும்போது...

10. யாருக்கு உண்மையாக இருப்பது என்று யோனத்தான் எதை வைத்து தீர்மானித்தார்?

10 தாவீதை கொலை செய்யப்போவதாக சவுல் சொன்னபோது யோனத்தான் பாசப் போராட்டத்தில் தவியாய் தவித்தார். யாருக்கு உண்மையாக இருப்பது, அப்பாவுக்கா உயிர்த்தோழனுக்கா என்று யோசித்தார். ஆனால் யெகோவா, தாவீதின் பக்கம்தான் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டதால் தாவீதுக்கு உண்மையாக இருக்க யோனத்தான் தீர்மானித்தார். அதனால் தாவீதை ஒளிந்துகொள்ளும்படி எச்சரித்தார். அதோடு, தாவீதை கொலை செய்வது தவறு என்பதையும் சவுலுக்கு புரியவைத்தார்.1 சாமுவேல் 19:1-6-ஐ வாசியுங்கள்.

11, 12. யெகோவாமீது நாம் வைத்திருக்கும் அன்பு அவருக்கு உண்மையாக இருக்க நமக்கு எப்படி உதவும்?

11 ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஆலிஸ் என்ற சகோதரியும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்தான் இருந்தாள். பைபிளிலிருந்து தெரிந்துகொண்ட விஷயங்களை அவளுடைய குடும்பத்தாரிடம் சொன்னாள். இனிமேல் கிறிஸ்மஸ் கொண்டாட போவதில்லை என்றும் அதற்கான காரணத்தையும் அவர்களிடம் விளக்கினாள். அது அவர்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை; ஆனால் போகப்போக அவள்மீது வெறுப்பைக் காட்டினார்கள். ஆலிஸுக்கு தங்கள்மீது கொஞ்சம்கூட பாசமே இல்லை என்று நினைத்தார்கள். ‘உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கல, என் முகத்திலேயே முழிக்காத, போயிடு’ என்று அவளுடைய அம்மா சொல்லிவிட்டார். “அம்மா இப்படி சொல்வாங்கனு நான் கொஞ்சம்கூட நினைச்சு பார்க்கல. என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்துச்சு. என் வீட்டுல இருக்குறவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். இருந்தாலும் யெகோவாவுக்கும் இயேசுவுக்கும்தான் முதலிடம் கொடுக்கணும்னு நான் தீர்மானிச்சேன். அடுத்த மாநாட்டிலேயே நான் ஞானஸ்நானம் எடுத்தேன்” என்று ஆலிஸ் சொல்கிறாள்.—மத். 10:37.

12 நாம் யாருக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் யெகோவாவைவிட நாம் வாழும் நாட்டுக்கு, நாம் விளையாடும் அணிக்கு, நம் பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிடுவோம். உதாரணத்துக்கு ஹென்றி, செஸ் (chess) விளையாடுவதில் கெட்டிக்காரன். இந்த விளையாட்டில் அவனுடைய பள்ளிதான் எப்போதும் முதலிடத்தில் இருந்தது. அதை கட்டிக் காப்பாற்றுவதற்காக ஹென்றி கடினமாக பயிற்சி செய்தான். அதனால் வாரயிறுதி நாட்களில் ஊழியத்தையும் கூட்டங்களையும் தொடர்ந்து தவறவிட்டான். பள்ளியைவிட யெகோவாவுக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை ஹென்றி புரிந்துகொண்டான். அதனால் பள்ளியில் செஸ் அணியிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டான்.—மத். 6:33.

13. யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால் குடும்ப பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம்?

13 சிலசமயம் குடும்பத்தில் யாரை திருப்திப்படுத்துவது என்று தீர்மானிப்பதும் நமக்கு கஷ்டமாக இருக்கலாம். அதைப் பற்றி கெவின் இப்படி சொல்கிறார்: “என் அம்மாவுக்கு வயசானதால அவங்களை அடிக்கடி போய் பார்க்கணும், முடிஞ்சப்போ எல்லாம் அவங்களை வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்னு ஆசைப்பட்டேன். ஆனா என் மனைவிக்கும் அம்மாவுக்கும் ஒத்தே போகாது. ஆரம்பத்துல யாரைத் திருப்திப்படுத்துறதுனே தெரியாம ஒரே குழப்பமா இருந்துச்சு.” இந்த சூழ்நிலையை சமாளிக்க கெவினுக்கு பைபிள் உதவியது. தன் மனைவியின் விருப்பத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டார். அதனால் தன் மனைவிக்கு எது பிடிக்கும் என்று யோசித்து ஒரு நல்ல தீர்மானத்தை எடுத்தார். கடவுளுக்கு உண்மையாக இருக்க வேண்டும்... பைபிளுக்கு கீழ்ப்படிய வேண்டும்... என்பதை கெவின் உணர்ந்துகொண்டதால் தன் அம்மாவை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதை மனைவியிடம் அன்பாக எடுத்துச் சொன்னார். அதேசமயம், அம்மாவும் தன் மனைவியை பாசமாக, மரியாதையாக நடத்த வேண்டும் என்பதை அன்பாக புரியவைத்தார்.ஆதியாகமம் 2:24 மற்றும் 1 கொரிந்தியர் 13:4, 5-ஐ வாசியுங்கள்.

மற்றவர்கள் நம்மை தவறாகப் புரிந்துகொள்ளும்போது...

14. யோனத்தானிடம் சவுல் எப்படி நடந்துகொண்டார்?

14 பொறுப்பில் உள்ள சகோதரர்கள் நம்மிடம் அநியாயமாக நடந்துகொண்டாலும் நம்மால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும். யெகோவா சவுலை ராஜாவாக தேர்ந்தெடுத்தாலும் சவுல் தன்னுடைய சொந்த மகனிடமே ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை. யோனத்தான் தாவீதை ஏன் உயிருக்கு உயிராக நேசித்தார் என்பதை புரிந்துகொள்ளவில்லை. யோனத்தான் தாவீதுக்கு உதவி செய்ய நினைத்தபோது அவர்மீது சவுல் பயங்கரமாக கோபப்பட்டார். மற்றவர்கள்முன் அவரை கேவலமாகத் திட்டினார். இருந்தாலும் யோனத்தான் அவருடைய அப்பாவுக்கு மரியாதை காட்டினார். அதேசமயம், யெகோவாவுக்கும் அவர் தேர்ந்தெடுத்த தாவீதுக்கும் உண்மையாக இருந்தார்.—1 சா. 20:30-41.

15. நம்மிடம் யாராவது அநியாயமாக நடந்துகொண்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?

15 சபையில் இருக்கும் மூப்பர்கள் எல்லாரிடமும் ஒரேமாதிரி நடந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆனால் மூப்பர்களும் தவறு செய்பவர்கள்தான். சிலசமயம் அவர்கள் நம்மை தவறாகப் புரிந்துகொள்ளலாம். (1 சா. 1:13-17) அந்த சமயத்திலும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்.

சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது கஷ்டமாக இருக்கும்போது...

16. எந்தெந்த சூழ்நிலைகளில் நாம் சுயநலமாக இல்லாமல் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும்?

16 தாவீதுக்குப் பதிலாக யோனத்தான் ராஜாவாக வேண்டுமென்று சவுல் ஆசைப்பட்டார். (1 சா. 20:31) ஆனால் யோனத்தான் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க விரும்பியதால் அவர் சுயநலமாக நடந்துகொள்ளவில்லை. தாவீதின் நண்பரானார், அவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றினார். சொல்லப்போனால், யெகோவாவை நேசித்து அவருக்கு உண்மையாக இருக்கிற எல்லாரும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். ‘ஆணையிட்டதில் அவர்களுக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருப்பார்கள்.’ (சங். 15:4) யெகோவாவுக்கு நாம் உண்மையாக இருப்பதால்தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுகிறோம். உதாரணத்துக்கு, வியாபார விஷயத்தில் நாம் ஒருவருக்கு வாக்கு கொடுத்தால் என்ன நஷ்டம் வந்தாலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவோம். அதேபோல் கல்யாண வாழ்க்கையில் என்ன பிரச்சினை வந்தாலும் சரி, யெகோவாமீது நமக்கு அன்பு இருந்தால் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்போம்.மல்கியா 2:13-16-ஐ வாசியுங்கள்.

யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதால் வியாபார விஷயத்தில் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுகிறோம் (பாரா 16)

17. இந்தக் கட்டுரையிலிருந்து நீங்கள் என்ன விஷயங்களை கற்றுக்கொண்டீர்கள்?

17 கஷ்டமான சூழ்நிலையிலும் யோனத்தானைப் போலவே யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நீங்கள் ஆசைப்படலாம். அப்படியென்றால், சகோதர சகோதரிகள் உங்கள் மனதை காயப்படுத்தினாலும் அவர்களுக்கு உண்மையாக இருங்கள். அப்போது யெகோவா ரொம்ப சந்தோஷப்படுவார், நீங்களும் ரொம்ப சந்தோஷமாக, திருப்தியாக இருப்பீர்கள். (நீதி. 27:11) உங்களுக்கு எது நல்லதோ அதையே யெகோவா எப்போதும் செய்வார், உங்களை அன்பாக கவனித்துக்கொள்வார் என்பதில் நீங்கள் நிச்சயமாக இருக்கலாம். தாவீதின் காலத்தில் வாழ்ந்தவர்களில் உண்மையாக இருந்தவர்களைப் பற்றியும் உண்மையாக இல்லாதவர்களைப் பற்றியும் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

^ [1] (பாரா 9) சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.