Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவை சந்தோஷமாக சேவியுங்கள்

யெகோவாவை சந்தோஷமாக சேவியுங்கள்

உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் எது? உங்கள் கல்யாண நாளா, அல்லது உங்கள் முதல் குழந்தை பிறந்த சமயமா? இல்லையென்றால் நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த நாளா? ஞானஸ்நானம் எடுத்த நாள்தான் உங்கள் வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியமான, சந்தோஷமான நாளாக இருந்திருக்கும். நீங்கள் யெகோவாமீது முழு இருதயத்தோடு, மூச்சோடு, மனதோடு, பலத்தோடு அன்பு வைத்திருப்பதை அன்று காட்டியிருப்பீர்கள். அதை பார்த்த சகோதர சகோதரிகள் எந்தளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்!—மாற். 12:30.

ஞானஸ்நானம் எடுத்த சமயத்திலிருந்து நீங்கள் யெகோவாவை ரொம்ப சந்தோஷமாக சேவித்து வந்திருப்பீர்கள். ஆனால், சில பிரஸ்தாபிகள் ஆரம்பத்தில் இருந்த அளவுக்கு இப்போது சந்தோஷமாக சேவிப்பதில்லை. ஏன்? யெகோவாவை தொடர்ந்து சந்தோஷமாக சேவிக்க என்ன காரணங்கள் இருக்கிறது?

ஏன் சந்தோஷத்தை இழந்திருக்கிறார்கள்?

நற்செய்தி நமக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. ஏனென்றால், சீக்கிரத்தில் யெகோவா இந்த மோசமான உலகத்தை அழித்து பூஞ்சோலை பூமியைக் கொண்டுவரப் போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். “கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது” என்று செப்பனியா 1:14 சொல்கிறது. ஆனால், அந்த நாள் தாமதமாவதுபோல் நமக்கு தெரியலாம். அதனால், ஆரம்பத்தில் இருந்த சந்தோஷத்தை நாம் இழந்துவிடலாம், யெகோவாவுடைய சேவையிலும் மந்தமாகிவிடலாம்.—நீதி. 13:12.

நம் சகோதர சகோதரிகளோடு இருக்கும்போது யெகோவாவுக்கு இன்னும் நன்றாக சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை நமக்குள் அதிகமாகும். ஒருவேளை யெகோவாவின் மக்கள் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்துதான் நாம் யெகோவாவை வணங்க ஆரம்பித்திருக்கலாம். யெகோவாவுக்கு சந்தோஷமாக சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையும் வந்திருக்கலாம். (1 பே. 2:12) ஆனால், ஒரு சகோதரரோ சகோதரியோ யெகோவாவுக்கு பிடிக்காததை செய்ததால் கண்டிக்கப்பட்டிருக்கலாம். அதை பார்த்து நம்மில் சிலர் சோர்வடைந்திருக்கலாம். அதனால், யெகோவாவை சேவிப்பதில் சந்தோஷத்தை இழந்துவிட்டிருக்கலாம்.

பண ஆசையும் நம் சந்தோஷத்தை இழக்க காரணமாக இருக்கலாம். எப்படி? நமக்கு அவசியம் இல்லாத பொருள்களை வாங்கி குவிக்க வேண்டும் என்ற ஆசையை சாத்தானின் உலகம் நமக்குள் தூண்டுகிறது. ஆனால், இயேசு சொன்ன இந்த அறிவுரையை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்: “ஒருவனாலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஏனென்றால், அவன் ஒருவரை வெறுத்து மற்றவரை நேசிப்பான்; அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை உதாசீனப்படுத்துவான். கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஒரே நேரத்தில் அடிமையாக இருக்க முடியாது.” (மத். 6:24) ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கி குவிக்க வேண்டும், அதேசமயம் யெகோவாவுக்கும் சந்தோஷமாக சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பது போல் இருக்கும்.

சந்தோஷமாக சேவை செய்ய காரணங்கள்

யெகோவாமீது நமக்கு அன்பிருந்தால் அவருக்கு சேவை செய்வது நமக்கு பாரமாக இருக்காது. (1 யோ. 5:3) “உழைத்துக் களைத்துப் போனவர்களே, பெருஞ்சுமை சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தை உங்கள்மீது ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஏனென்றால், என்னுடைய நுகம் மென்மையாகவும் என்னுடைய சுமை லேசாகவும் இருக்கிறது” என்று இயேசு சொன்னார். (மத். 11:28-30) உண்மை கிறிஸ்தவராக இருப்பது நமக்கு புத்துணர்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கிறது. யெகோவாவை சந்தோஷமாக சேவிப்பதற்கு நமக்கு நியாயமான காரணங்கள் இருக்கிறது. இப்போது அதில் 3 காரணங்களை பார்க்கலாம்.—ஆப. 3:18.

நாம் சந்தோஷமான கடவுளை வணங்குகிறோம். (அப். 17:28; 1 தீ. 1:11) யெகோவாதான் நம்மை படைத்தவர். நம் உயிர் அவருக்குத்தான் சொந்தம். அதனால் நாம் ஞானஸ்நானம் எடுத்து எத்தனை வருடங்கள் ஆகியிருந்தாலும் சரி, நாம் யெகோவாவை தொடர்ந்து சந்தோஷமாக சேவிக்க தீர்மானமாக இருக்கலாம்.

எதிர்கால ஆசீர்வாதத்தை யோசித்துப் பார்ப்பதால்... ஊழியத்தை சுறுசுறுப்பாக செய்வதால்... எக்டர் சந்தோஷமாக இருக்கிறார்

எக்டர் என்ற சகோதரர் 40 வருடங்களாக வட்டாரக் கண்காணியாக சேவை செய்தார். “முதிர்வயதிலும்” அவர் யெகோவாவை சந்தோஷமாக சேவிக்கிறார். (சங். 92:12-15) அவருடைய மனைவியின் உடல்நலம் மோசமாகி வருவதால் அவரால் யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய முடியவில்லை. இருந்தாலும் அவர் சந்தோஷமாக சேவை செய்கிறார். அவர் சொல்கிறார், “என் மனைவியோட உடம்பு நாளுக்கு நாள் மோசமாயிட்டே வர்றதை பார்க்குறது எனக்கு கஷ்டமா இருக்கு. அவளை கவனிச்சுக்கிறதும் சவாலா இருக்கு. இதெல்லாம் நினைச்சு சோர்ந்து போறதுக்கு பதிலா யெகோவாவுக்கு சந்தோஷமா சேவை செய்ய நான் முயற்சி செய்றேன். மனுஷங்களை ஒரு நல்ல காரணத்துக்காகத்தான் யெகோவா படைச்சிருக்கார். என் உயிர் அவருக்கு சொந்தங்கற ஒரு விஷயமே அவரை நேசிக்கவும் அவருக்கு முழு மனசோட சேவை செய்யவும் எனக்கு போதும். ஊழியத்தை சுறுசுறுப்பா செய்ய முயற்சி செய்றேன், அதோட எதிர்காலத்துல கிடைக்கப் போற ஆசீர்வாதத்தை பத்தியே எப்பவும் யோசிச்சு பார்க்குறேன். சந்தோஷத்தை இழக்காம இருக்க இது எனக்கு உதவுது.”

நாம் சந்தோஷமாக வாழ்வதற்காக யெகோவா மீட்புப் பலியை கொடுத்திருக்கிறார். “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்” என்று பைபிள் சொல்கிறது. (யோவா. 3:16) கடவுள் கொடுத்த இந்த அருமையான பரிசின் மீது நாம் நம்பிக்கை வைத்தால் நம் பாவங்கள் மன்னிக்கப்படும், முடிவில்லா வாழ்வையும் நாம் அனுபவிப்போம். யெகோவாவுக்கு நன்றியோடு இருக்க இதைவிட வேறு ஏதாவது காரணம் நமக்கு வேண்டுமா? இந்த பரிசுக்கு நாம் நன்றியோடு இருந்தால், யெகோவாவை சந்தோஷமாக சேவிப்போம்.

வாழ்க்கையை எளிமையாக்கிக்கொண்டு கீஸஸ் யெகோவாவுக்கு பல வருஷம் சந்தோஷமாக சேவை செய்தார்

மெக்சிகோவில் இருந்த கீஸஸ் என்ற சகோதரர் இப்படி சொல்கிறார்: “24 மணிநேரமும் நான் வேலை, வேலைனுதான் இருந்தேன். சிலசமயம் தொடர்ந்து 5 ஷிஃப்ட் (Shift) வேலை செய்வேன். அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லதான், ஆனா பணம் சம்பாதிக்கணுங்கிற ஆசையில நான் அப்படி செஞ்சேன். அதுக்கு அப்புறம் யெகோவாவை பத்தியும் அவரோட அன்பு மகனை நமக்காக கொடுத்ததைப் பத்தியும் தெரிஞ்சிக்கிட்டேன். அதனால, யெகோவாவுக்கு சேவை செய்யணுங்கிற ஆசை எனக்குள் அதிகமாச்சு. என்னையே அவருக்கு அர்ப்பணிச்சேன். 28 வருஷமா செஞ்சிட்டு இருந்த வேலையை விட்டுட்டு முழுநேர ஊழியம் செய்ய ஆரம்பிச்சேன்.” இப்படித்தான் அவர் யெகோவாவுக்கு சந்தோஷமாக சேவை செய்ய ஆரம்பித்தார்.

சுத்தமான வாழ்க்கை வாழ்வதால் சந்தோஷமாக இருக்கிறோம். யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது? அப்போஸ்தலன் பவுல் ரோமில் இருந்த கிறிஸ்தவர்களிடம், “முன்பு நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தாலும்” இப்போது “நீதிக்கு அடிமைகளானீர்கள்” என்று சொன்னார். அவர்கள் சுத்தமான வாழ்க்கை வாழ்ந்ததால் முடிவில்லா வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. (ரோ. 6:17-22) நாமும் யெகோவாவுக்கு கீழ்ப்படிவதால் சுத்தமான வாழ்க்கை வாழ்கிறோம். ஒழுக்கங்கெட்ட, வன்முறை நிறைந்த வாழ்க்கையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கிறோம். சந்தோஷமாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் இல்லையா!

“யெகோவாவை சேவிக்க ஆரம்பிச்சதுல இருந்துதான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”​—கெய்மி

குத்துச்சண்டை வீரராக இருந்த கெய்மி என்பவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அவர் பரிணாமத்தை நம்பினார். அவர் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தபோது சகோதர சகோதரிகள் காட்டிய அன்பை பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டார். ஆனால், பழைய வாழ்க்கையை விட்டு வருவது அவருக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. கடவுள் இருக்கிறார் என்பதை நம்ப உதவும்படி அவர் ஜெபம் செய்தார். கெய்மி சொல்கிறார்: “கடவுள் இருக்கிறார் என்பதை கொஞ்சம் கொஞ்சமா நம்ப ஆரம்பிச்சேன். அவர் ரொம்ப அன்பானவர், இரக்கமுள்ளவர்னு புரிஞ்சுக்கிட்டேன். யெகோவாவோட நீதியான சட்டங்களுக்கு கீழ்ப்படிஞ்சது எனக்கு பாதுகாப்பை கொடுத்தது. நான் மட்டும் மாறாம இருந்திருந்தா குத்துச்சண்டை வீரர்களா இருந்த என் நண்பர்களை போல நானும் செத்து போயிருப்பேன். யெகோவாவை சேவிக்க ஆரம்பிச்சதுல இருந்துதான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”

சோர்ந்து போகாதீர்கள்!

இந்த பொல்லாத உலகத்துக்கு முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. அந்த நாளுக்காக காத்திருக்கும் இந்த சமயத்தில் நாம் எப்படி உணர வேண்டும்? நாம் யெகோவாவின் விருப்பத்தை செய்கிறோம், முடிவில்லா வாழ்வுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். அதனால், “நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருப்போமாக; நாம் சோர்ந்துபோகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்.” (கலா. 6:8, 9) அப்படியென்றால், யெகோவாவின் உதவியோடு நாம் தொடர்ந்து சகித்திருக்கலாம், ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பதற்கு தேவையான குணங்களை வளர்க்க முயற்சி செய்யலாம், தொடர்ந்து யெகோவாவை சந்தோஷமாக சேவிக்கலாம்.—வெளி. 7:9, 13, 14; யாக். 1:2-4.

நாம் பொறுமையாக சகித்திருந்தால் யெகோவா நிச்சயம் பலன் அளிப்பார். ஏனென்றால் நாம் எடுக்கும் முயற்சியை, அவர்மீது காட்டும் அன்பை, அவருடைய பெயர்மீது நாம் வைத்திருக்கும் மரியாதையை அவர் பார்க்கிறார். நாம் தொடர்ந்து அவரை சந்தோஷமாக சேவித்தால் சங்கீதக்காரனான தாவீதைப் போல் நாமும் இப்படி சொல்வோம்: “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.”—சங். 16:8, 9.