Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

யெகோவா என் சேவையை ஆசீர்வதித்தார்

யெகோவா என் சேவையை ஆசீர்வதித்தார்

என்னை அமெரிக்க ராணுவத்தில் இரண்டாவது முறையாக சேர சொன்னார்கள். ராணுவத்தில் சேராததற்காக நான் ஏற்கெனவே ஜெயிலில் இருந்தேன் என்று அந்த அதிகாரியிடம் சொன்னேன். ‘திரும்பவும் என்னை ஜெயில்ல போட போறீங்களா?’ என்று அவரிடம் கேட்டேன்.

1926-ல் அமெரிக்காவிலுள்ள ஒஹாயோவில் க்ருக்ஸ்வில் என்ற கிராமத்தில் நான் பிறந்தேன். நாங்கள் மொத்தம் 8 பிள்ளைகள். அப்பா அம்மாவுக்கு அந்தளவு கடவுள் பக்தி இல்லையென்றாலும் எங்களை சர்ச்சுக்கு போக சொல்வார்கள். நான் மெத்தடிஸ்ட் சர்ச்சுக்கு போனேன். எனக்கு 14 வயது இருந்தபோது சர்ச் பாதிரி எனக்கு ஒரு பரிசு கொடுத்தார். ஏனென்றால், அந்த வருஷம் முழுவதும் நான் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் சர்ச்சுக்கு போனேன்.

யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள மார்கரெட் வாக்கர் (இடது பக்கத்தில் இருந்து இரண்டாவது) எனக்கு உதவினார்

என் வீட்டு பக்கத்தில் மார்கரெட் வாக்கர் என்ற ஒரு யெகோவாவின் சாட்சி இருந்தார். அந்த சகோதரி என் அம்மாவுக்கு பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுத்தார். ஒருநாள் அம்மாவோடு சேர்ந்து நானும் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அவர்களைப் படிக்கவிடாமல் தொந்தரவு செய்வேன் என்று நினைத்து அம்மா என்னை வெளியில் போக சொன்னார். இருந்தாலும், அவர்கள் 2 பேரும் என்ன படிக்கிறார்கள் என்று நான் கேட்டுக்கொண்டு இருப்பேன். ஒருநாள் அந்த சகோதரி என்னிடம், “உனக்கு கடவுளோட பெயர் தெரியுமா?” என்று கேட்டார். “அதுதான் எல்லாருக்கும் தெரியுமே, அவர் பெயர் கடவுள்” என்று சொன்னேன். அதற்கு அவர், “உன் பைபிள்ல சங்கீதம் 83:17-ஐ படிச்சு பாரு” என்று சொன்னார். அப்போதுதான் கடவுளுடைய பெயர் யெகோவா என்று தெரிந்துகொண்டேன். உடனே என் நண்பர்களிடம் போய், “நீங்க வீட்டுக்கு போனதும் சங்கீதம் 83:17-ஐ படிச்சு பாருங்க, அதுல கடவுளோட பெயர் இருக்கு” என்று சொன்னேன். ஒருவிதத்தில் நான் அப்போதே ஊழியம் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

நான் 1941-ல் ஞானஸ்நானம் எடுத்தேன். கொஞ்ச நாளில் எனக்கு புத்தகப் படிப்பை நடத்தும் பொறுப்பு கிடைத்தது. புத்தகப் படிப்புக்கு என் அம்மாவையும் கூடப்பிறந்தவர்களையும் கூப்பிட்டேன், அவர்களும் வந்தார்கள். ஆனால், அப்பாவுக்கு அதில் இஷ்டமே இல்லை.

வீட்டில் பயங்கர எதிர்ப்பு

சபையில் எனக்கு நிறைய பொறுப்புகள் கிடைத்தது. அமைப்பு வெளியிட்ட நிறைய புத்தகங்கள் வீட்டில் இருந்தன. ஒருநாள் அப்பா என்னிடம், “அந்த புத்தகத்தை எல்லாம் மூட்டை கட்டிகிட்டு இந்த வீட்டைவிட்டு போயிடு” என்று சொன்னார். அதனால், நான் ஒஹாயோவில் இருந்த ஜானஸ்வில் என்ற இடத்துக்கு போனேன். ஆனால், அடிக்கடி வீட்டுக்கு போய் எல்லாரையும் உற்சாகப்படுத்தினேன்.

அம்மாவை கூட்டங்களுக்குப் போக அப்பா விடவே இல்லை. சிலநேரம் அம்மா கூட்டங்களுக்கு போகும்போது பின்னாலேயே போய் தரதரவென்று அப்பா வீட்டுக்கு இழுத்துக்கொண்டு வருவார். ஆனால், அம்மா இன்னொரு கதவு வழியாக கூட்டத்துக்கு போவார். “கவலைப்படாதீங்க அம்மா, கொஞ்ச நாள்தான் இப்படி துரத்துவார். அப்புறம் கண்டுக்காம விட்டிடுவார்” என்று அம்மாவிடம் சொன்னேன். கொஞ்ச நாட்களிலேயே நான் சொன்ன மாதிரி நடந்தது. பிறகு, எந்த பிரச்சினையும் இல்லாமல் அம்மா கூட்டங்களுக்கு போனார்.

1943-ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது, நான் சபையில் பேச்சுகள் கொடுக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு பேச்சுக்கு பிறகும் எனக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகள், நன்றாக பேச்சு கொடுக்க உதவியாக இருந்தது.

போரில் கலந்துகொள்ளவில்லை

1944-ல் இரண்டாவது உலகப் போர் நடந்துகொண்டு இருந்தபோது, என்னை ராணுவத்தில் சேர சொன்னார்கள். கொலம்பஸில் இருந்த போர்ட் ஹேஸ் என்ற ராணுவ தளத்தில் எனக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது. சில ஃபார்ம்களில் என்னை பற்றிய விவரங்களை எழுதி கொடுத்தேன். ஆனால், நான் ராணுவத்தில் சேர மாட்டேன் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் சொன்னேன். அதனால் அவர்கள் என்னை விட்டுவிட்டார்கள். ஆனால் கொஞ்ச நாளைக்கு பிறகு, ஒரு போலீஸ் அதிகாரி என் வீட்டுக்கு வந்து, “உன்னை கைது செய்ய வாரண்டோட வந்திருக்கேன்” என்று சொன்னார்.

இரண்டு வாரத்துக்கு பிறகு கோர்ட்டில் நீதிபதி இப்படி சொன்னார்: “என்னை கேட்டா உனக்கு ஆயுள் தண்டனை கொடுக்கணும்னு சொல்வேன். சரி, நீ ஏதாவது சொல்ல நினைக்கிறீயா?” அதற்கு நான் அவரிடம், “நீங்க என்னை ஒரு ஊழியக்காரனாதான் விசாரிக்கணும். * (அடிக்குறிப்பை பாருங்கள்.) ஏன்னா, நான் வீடுவீடா போய் கடவுளுடைய அரசாங்கத்தை பத்திதான் எல்லார்கிட்டயும் சொல்றேன்” என்று சொன்னேன். அந்த நீதிபதி அங்கிருந்த ஜூரிகளிடம், “அவன் ஊழியக்காரனா இல்லையாங்கிறத தீர்மானிக்கிறதுக்காக நீங்க இங்க வரல. * (அடிக்குறிப்பை பாருங்கள்.) அவன் ராணுவத்தில சேர்ந்தானா இல்லையானு தீர்மானிக்கதான் வந்திருக்கீங்க” என்று சொன்னார். அரைமணி நேரத்துக்குள் என்னை குற்றவாளி என்று தீர்ப்பு சொன்னார்கள். கென்டக்கியில் இருக்கிற ஆஷ்லாண்டில் எனக்கு 5 வருஷம் ஜெயில் தண்டனை கொடுத்தார்கள்.

ஜெயிலில் யெகோவா பாதுகாத்தார்

முதல் இரண்டு வாரம் நான் ஒஹாயோவிலுள்ள கொலம்பஸில் இருந்த ஜெயிலில் இருந்தேன். முதல் நாளே நான் யெகோவாவிடம், “5 வருஷம் என்னால இந்த அறையிலயே அடைஞ்சு கிடைக்க முடியாது. ஆனா எனக்கு என்ன செய்றதுனே தெரியல” என்று ஜெபம் செய்தேன்.

அடுத்த நாள் அங்கிருந்த அதிகாரிகள் என்னை அந்த அறையில் இருந்து வெளியே போகவிட்டார்கள். அப்போது வாட்டசாட்டமாக இருந்த ஒரு கைதி அங்கே நின்றுகொண்டிருந்தார். நாங்கள் 2 பேரும் அங்கிருந்த ஒரு ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது அவர் என்னிடம், ‘ஏய் பொடியா, நீ ஏன் ஜெயிலுக்கு வந்த?” என்று கேட்டார். அவரிடம், “நான் ஒரு யெகோவாவின் சாட்சி” என்று சொன்னேன். “அப்படியா, அப்போ உன்னை ஏன் ஜெயில்ல போட்டாங்க?” என்று கேட்டார். அதற்கு நான், “யெகோவாவின் சாட்சிகள் போருக்கு போக மாட்டாங்க, கொலை செய்ய மாட்டாங்க” என்று சொன்னேன். அதற்கு அவர், “நீ கொலை செய்யாததுக்காக உன்னை ஜெயில்ல போட்டிருக்காங்க, ஆனா மத்தவங்களை, கொலை செஞ்சதுக்காக ஜெயில்ல போட்டிருக்காங்க. இதுல ஏதாவது அர்த்தம் இருக்கா” என்று கேட்டார். “இல்லை” என்று சொன்னேன்.

அதற்குப் பிறகு அவர், “நான் 15 வருஷமா வேறொரு ஜெயில்ல இருந்தேன். அங்க நான் உங்களோட பத்திரிகைகளை படிச்சிருக்கேன்” என்று சொன்னார். உடனே நான் யெகோவாவிடம், “நான் உங்களை பத்தி இவருக்கு சொல்றதுக்கு உதவி செய்யுங்க” என்று ஜெபம் செய்தேன். அந்த நபர் என்னிடம், “உன்மேல யாராவது கை வைச்சா உடனே ஒரு குரல் கொடு, அவங்களை நான் பார்த்துக்கிறேன்” என்று சொன்னார். அதனால், அங்கிருந்த 50 கைதிகளால் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை.

போரில் கலந்துகொள்ளாததால் கென்டக்கி ஜெயிலில் இருந்த யெகோவாவின் சாட்சிகளோடு நானும் இருந்தேன்

அதற்குப் பிறகு என்னை ஆஷ்லாண்டில் இருந்த ஜெயிலில் போட்டார்கள். அனுபவமுள்ள சகோதரர்கள் சிலர் அங்கிருந்தார்கள். நானும் மற்ற சகோதரர்களும் யெகோவாவோடு நெருங்கி இருக்க அவர்கள் உதவி செய்தார்கள். ஒவ்வொரு வாரமும் எங்களை சில பைபிள் அதிகாரங்களை படிக்க சொல்வார்கள். பிறகு ஒரு கூட்டத்தில் அதிலிருந்து எங்களிடம் சில கேள்விகளை கேட்பார்கள். அந்தக் கூட்டத்தை “பைபிள் பீஸ்” (Bible Bees) என்று சொல்வோம். ஜெயிலில் நாங்கள் ஒரு பெரிய அறையில் இருந்தோம். அங்கு சுவரோடு ஒட்டி நிறைய கட்டில்களை போட்டிருப்பார்கள். எந்த கட்டிலில் இருக்கிறவர்களிடம் யார் பேச வேண்டும் என்று ஒரு சகோதரர் சொல்வார். அவர் என்னிடம், “ராபிசன், இந்தந்த கட்டில்ல இருக்கிறவங்ககிட்ட நீ பேசணும். அவங்க இங்க இருந்து போறதுக்குள்ள நீ எப்படியாவது அவங்களுக்கு நற்செய்தியை சொல்லிடணும்” என்று சொல்வார். இப்படி செய்ததால் எங்களால் ஒழுங்கான முறையில் ஊழியம் செய்ய முடிந்தது.

ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு

1945-ல் இரண்டாவது உலகப் போர் முடிந்த பிறகும் நான் சில நாள் ஜெயிலில் இருந்தேன். அப்போது என் குடும்பத்தை நினைத்து எனக்கு கவலையாக இருந்தது. ஏனென்றால், “நீ மட்டும் இல்லன்னா மத்தவங்களை என் வழிக்கு கொண்டுவந்திடுவேன்” என்று அப்பா என்னிடம் சொல்லியிருந்தார். ஆனால் நான் விடுதலையாகி வந்தபோது ரொம்ப ஆச்சரியமான விஷயம் நடந்தது. அப்பா எதிர்த்தாலும் என் குடும்பத்தில் இருந்த ஏழு பேர் கூட்டங்களுக்கு போய்க்கொண்டு இருந்தார்கள். என்னுடைய ஒரு தங்கை ஞானஸ்நானம் எடுத்திருந்தாள்.

1913-லிருந்து யெகோவாவுக்கு சேவை செய்யும் பரலோக நம்பிக்கையுள்ள டெமீட்ரியஸ் பாப்பாஜார்ஜ் என்ற சகோதரரோடு ஊழியம் செய்யும்போது

1950-ல் கொரியாவில் போர் ஆரம்பித்தது, அதில் அமெரிக்க ராணுவமும் கலந்துகொண்டது. இரண்டாவது முறையாக போரில் சேர்வதற்காக என்னை போர்ட் ஹேஸ்க்கு போக சொன்னார்கள். அங்கு ஒரு தேர்வு நடந்தது. அப்போது ஒரு ராணுவ அதிகாரி என்னிடம், “அதிக மார்க் வாங்குனவங்கள்ல நீயும் ஒருத்தன்” என்று சொன்னார். அதற்கு நான், “அது பரவாயில்ல ஆனா நான் ராணுவத்தில சேர மாட்டேன்” என்று சொன்னேன். அவரிடம் 2 தீமோத்தேயு 2:3-ஐ பயன்படுத்தி, “நான் ஏற்கெனவே இயேசு கிறிஸ்துவோட படைவீரனா இருக்கேன்” என்று சொன்னேன். ரொம்ப நேரம் யோசித்த பிறகு அவர் என்னிடம், “சரி நீ போகலாம்” என்று சொன்னார்.

சீக்கிரத்திலேயே ஒஹாயோவில் இருக்கிற சின்சினாட்டியில் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் நடந்த பெத்தேல் கூட்டத்துக்கு நான் போனேன். அப்போது, கடவுளுடைய அரசாங்கத்துக்காக நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்கள் பெத்தேலில் சேவை செய்ய வரலாம் என்று சகோதரர் மில்டன் ஹென்ஷல் சொன்னார். பெத்தேலில் சேவை செய்ய விண்ணப்பித்தேன். 1954-ல் இருந்து புருக்லின் பெத்தேலில் சேவை செய்கிறேன்.

எனக்கு பெத்தேலில் எப்போதும் வேலை இருந்துகொண்டே இருக்கும். நான் பல வருஷங்களாக, பிரிண்டரியிலும் அலுவலகங்களிலும் இருக்கிற பாய்லர்களை ஆப்ரேட் செய்தேன், மெஷின்களை ரிப்பேர் செய்வேன், பூட்டுகளை சரி செய்வேன். நியு யார்க்கில் மாநாட்டு மன்றங்களிலும் நான் வேலை செய்திருக்கிறேன்.

புருக்லின் பெத்தேலில் பாய்லர்களை பராமரிக்கும்போது

பெத்தேலில் தினமும் காலையில் தினவசனம் படிப்பதும் ஒவ்வொரு வாரமும் காவற்கோபுரம் படிப்பதும் எனக்கு ரொம்ப பிடிக்கும். சபையில் இருக்கிறவர்களோடு ஊழியம் செய்வதும் எனக்கு பிடித்த விஷயம். யெகோவாவின் சாட்சியாக இருக்கிற ஒவ்வொருவரும் இதையெல்லாம் செய்ய வேண்டும். அப்பா-அம்மா பிள்ளைகளோடு சேர்ந்து தினவசனத்தை படிக்கும்போது... குடும்ப வழிபாடு செய்யும்போது... கூட்டங்களுக்கு போகும்போது... உற்சாகமாக ஊழியம் செய்யும்போது... குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் யெகோவாவோடு நெருங்கி இருக்க முடியும்.

பெத்தேலிலும் சபையிலும் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதில் சிலர் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள், அவர்கள் பரலோகத்துக்கு போய்விட்டார்கள். பெத்தேலில் சேவை செய்கிறவர்களும் சரி மற்றவர்களும் சரி, எல்லாருமே தவறு செய்பவர்கள்தான். அதனால், சகோதரர்களோடு ஏதாவது பிரச்சினை வந்தால் அதை உடனே சரிசெய்ய நான் முயற்சி செய்வேன். அந்த சமயத்தில் மத்தேயு 5:23, 24–ஐ யோசித்துப் பார்ப்பேன் “என்னை மன்னிச்சிடுங்க” என்று சொல்வது அவ்வளவு சுலபமில்லை. ஆனால், அப்படி சொன்னால் நிறைய பிரச்சினைகளை நம்மால் சமாளிக்க முடியும்.

எனக்கு கிடைத்த பலன்கள்

எனக்கு வயதானதால் இப்போது வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய முடிவதில்லை. இருந்தாலும் நான் ஊழியம் செய்வதை நிறுத்தவில்லை. நான் சீன மொழியை கொஞ்சம் கற்றுக்கொண்டேன். அதனால், தெரு ஊழியம் செய்தேன். சீன மக்களிடம் நற்செய்தியை சொல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். சிலசமயம் ஆர்வம் காட்டியவர்களிடம் பேசி 30-லிருந்து 40 பத்திரிகை வரைக்கும் கொடுத்திருக்கிறேன்.

புருக்லினில் சீன மொழியைப் பேசுகிற மக்களிடம் நற்செய்தியை சொல்லும்போது

சீனாவிலும் எனக்கு ஒரு மறுசந்திப்பு இருந்தது! எப்படியென்று யோசிக்கிறீர்களா? ஒருநாள் பழக்கடையை விளம்பரப்படுத்துவதற்காக ஒரு இளம் பெண் எல்லாருக்கும் ஒரு பேப்பரை கொடுத்துக்கொண்டு இருந்தாள். அவள் எனக்கும் கொடுத்தாள். நான் அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டு சீன மொழியில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு தன்னுடைய பெயர் கேட்டீ என்று சொன்னாள். அதற்குப் பிறகு அவள் எப்போதெல்லாம் என்னை பார்க்கிறாளோ அப்போதெல்லாம் என்னிடம் வந்து பேசுவாள். காய்கறி, பழங்களின் பெயர்களை நான் அவளுக்கு ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுத்தேன். அந்த பெயர்களை நான் சொல்ல சொல்ல அவளும் என்னோடு சேர்ந்து சொல்லுவாள். அதோடு, சில பைபிள் வசனங்களையும் நான் அவளுக்கு விளக்கினேன். அதற்குப் பிறகு அவளுக்கு பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை கொடுத்தேன். ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு அவளை பார்க்க முடியவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு அதேமாதிரி விளம்பர பேப்பரை கொடுத்துக்கொண்டிருந்த இன்னொரு இளம் பெண்ணுக்கும் நான் பத்திரிகைகளை கொடுத்தேன். அடுத்த வாரம் அந்த பெண் என்னிடம் அவளுடைய ஃபோனை கொடுத்து, “சீனாவுல இருக்கிற ஒருத்தர்கிட்ட பேசுங்க” என்று சொன்னாள். ஆனால், “எனக்கு சீனாவுல யாரையும் தெரியாது” என்று சொன்னேன். இருந்தாலும் அவள் என்னை பேச சொல்லி வற்புறுத்தியதால் நான் அந்த ஃபோனை வாங்கி, “ஹலோ, நான் ராபிசன் பேசுறேன்” என்று சொன்னேன். உடனே “ராபி, நான் கேட்டீ பேசுறேன். நான் சீனாவுல இருக்கேன்” என்று அவள் சொன்னாள். “சீனாவுலயா?” என்று நான் கேட்டேன். உடனே அவள், “ஆமா ராபி. உங்ககிட்ட ஃபோனை கொடுத்தது என் தங்கச்சி. நீங்க எனக்கு நிறைய நல்ல விஷயம் சொல்லிக்கொடுத்தீங்க. அதேமாதிரி என் தங்கச்சிக்கும் சொல்லிக்கொடுங்க” என்று சொன்னாள். “நிச்சயம் சொல்லிக்கொடுக்குறேன். நீ எங்க இருக்குறனு சொன்னதுக்கு ரொம்ப தேங்ஸ் கேட்டீ” என்று சொன்னேன். சிலநாள் கழித்து நான் கேட்டீவுடைய தங்கையையும் பார்க்கவில்லை. அவர்கள் 2 பேரும் எங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் அவர்கள் நிச்சயம் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

நான் 73 வருஷங்களாக யெகோவாவுக்கு சேவை செய்துகொண்டு இருக்கிறேன். ஜெயிலில் இருந்தபோது அவருக்கு பிடித்த மாதிரி இருக்க யெகோவா எனக்கு உதவி செய்ததற்காக நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். அப்பா எவ்வளவு எதிர்த்தாலும் நான் யெகோவாவை சேவிப்பதில் தீர்மானமாக இருந்தது என் கூடப்பிறந்தவர்களை உற்சாகப்படுத்தியதாக அவர்கள் சொன்னார்கள். அம்மாவும் என் கூடப்பிறந்தவர்களில் 6 பேரும் ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார்கள். சாவதற்கு முன்பு, என் அப்பாவின் மனம் மாறியது, அவர் ஒருசில கூட்டங்களுக்கும் வந்தார்.

யெகோவா விருப்பப்பட்டால் என் நண்பர்களும் குடும்பத்தில் இருக்கிறவர்களும் புதிய உலகத்தில் உயிரோடு வருவார்கள். நமக்கு பிடித்தவர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! *—அடிக்குறிப்பைப் பாருங்கள்

^ பாரா. 14 முன்பெல்லாம் அமெரிக்காவில் ஊழியம் செய்தவர்கள் ராணுவத்தில் சேர வேண்டிய அவசியம் இல்லை.

^ பாரா. 14 சாதாரண மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிலரைத்தான் ஜூரிகள் என்று சொல்வார்கள். நீதிமன்றத்தில் ஒரு வழக்கை விசாரணை செய்யும்போது இவர்களும் அதைக் கேட்பார்கள். அதை வைத்து ஒருவர் குற்றவாளியா இல்லையா என்று நீதிபதியிடம் சொல்வார்கள்.

^ பாரா. 32 இந்தக் கட்டுரையைத் தயாரிக்கும்போது கார்வென் ராபிசன் இறந்துவிட்டார்.