கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் சாதிக்கும்?
பூமி இன்று படுமோசமான நிலையில் இருக்கிறது. இப்படி இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்பவில்லை என்பது இயேசுவுக்குத் தெரியும். அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் இந்த நிலைமையை சரிசெய்ய முடியும் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான், கடவுளுடைய அரசாங்கம் வருவதற்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று அவர் தன் சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். சரி, கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் சாதிக்கும்?
கடவுளுடைய அரசாங்கத்தின் சாதனை
இயேசு கொடுத்த அடையாளங்களைப் பற்றிப் போன கட்டுரையில் படித்தோம். கடவுளுடைய அரசாங்கத்தின் ஆட்சி பரலோகத்தில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பதை அந்த அடையாளம் ஆணித்தரமாக நிரூபிக்கிறது. இயேசு கிறிஸ்துதான் அந்த அரசாங்கத்தின் அரசர்.
ஆட்சிப் பீடத்தில் உட்கார்ந்தபோது, சாத்தானையும் அவனோடு சேர்ந்த பேய்களையும் பரலோகத்திலிருந்து இயேசு விரட்டியடித்தார். அதனால், பூமியில் மட்டும்தான் தங்கள் கைவரிசையை அவர்களால் காட்ட முடியும். 1914 முதல் இந்தப் பூமியில் நிலைமை படுமோசமானதுக்கு இதுவும் ஒரு காரணம்.—வெளிப்படுத்துதல் 12:7, 9.
பூமியில் நிலைமை மோசமாகிக்கொண்டே போவது என்னவோ உண்மைதான். இருந்தாலும், கடவுளுடைய அரசாங்கத்தின் அரசரான இயேசு, மக்களுக்குப் பல வழிகளில் உதவி செய்திருக்கிறார். அவர் பூமியில் இருந்தபோது சொன்ன மாதிரியே, இன்று உலகம் முழுவதும் பைபிள் கல்வி பெரியளவில் கொடுக்கப்படுகிறது. பைபிளில் இருக்கும் பொன்னான ஆலோசனைகளை நிறைய பேர் தெரிந்துகொள்கிறார்கள், அதன்படி வாழவும் செய்கிறார்கள். (ஏசாயா 2:2-4) பைபிள் கல்வி கிடைத்ததால், லட்சக்கணக்கான ஆட்கள் குடும்ப வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்கிறார்கள். வேலையே கதி என்று கிடப்பதில்லை. வாழ்க்கையில் எது முக்கியம் என்பதைப் புரிந்து வாழ்கிறார்கள். பணத்தின் பின்னால் ஓடியோடி, தங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பதில்லை. இப்படி, அந்தப் பைபிள் கல்வியால் இப்போதே பிரயோஜனம் அடைகிறார்கள். எதிர்காலத்தில் கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக வாழ்வதற்கான தகுதியையும் வளர்த்துக்கொள்கிறார்கள்.
கடவுளுடைய அரசாங்கம் அடுத்து என்ன சாதிக்கப் போகிறது?
பரலோகத்தில் இயேசு ஆட்சி செய்து வந்தாலும், பூமியில் மனிதர்கள்தான் இன்னும் ஆட்சி செய்து வருகிறார்கள். இயேசுவிடம் கடவுள் இப்படிச் சொல்லியிருக்கிறார்: “உன் எதிரிகளின் நடுவே ஆட்சி செய் [அதாவது, அவர்கள்மேல் அதிகாரத்தைச் செலுத்து].” (சங்கீதம் 110:2) சீக்கிரத்தில், கடவுளுடைய அரசாங்கத்தின் எதிரிகள் எல்லாரையும் இயேசு ஒழித்துக்கட்டுவார். கடவுளுக்கு கீழ்ப்படிய விரும்புகிற ஆட்களுக்குப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை தருவார்.
சீக்கிரத்தில், கடவுளுடைய அரசாங்கம்...
-
பொய் மதங்களை ஒழித்துக்கட்டும். இந்த மதங்கள், கடவுளைப் பற்றிய பொய்களைச் சொல்லிக்கொடுத்திருக்கின்றன, மக்களுடைய வாழ்க்கையைக் கஷ்டமாக்கியிருக்கின்றன. இப்படிப்பட்ட எல்லா மதங்களுமே இல்லாமல் போகும். பொய் மதத்தை ஒரு விபச்சாரி என்று பைபிள் விவரிக்கிறது. அதனுடைய அழிவு நிறைய பேருக்கு அதிர்ச்சியாக இருக்கும்.—வெளிப்படுத்துதல் 17:15, 16.
-
மனித ஆட்சிக்கு முடிவுகட்டும். கடவுளுடைய அரசாங்கம் மற்ற எல்லா ஆட்சிக்கும் முடிவு கொண்டுவரும்!—வெளிப்படுத்துதல் 19:15, 17, 18.
-
கெட்டவர்களை அழிக்கும். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் கெட்டதையே செய்கிறவர்களுக்கு என்ன நடக்கும்? “பொல்லாதவர்கள் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்படுவார்கள்.”—நீதிமொழிகள் 2:22.
-
சாத்தானையும் பேய்களையும் ஒழிக்கும். சாத்தானாலும் பேய்களாலும் இனியும் ‘தேசங்களை ஏமாற்ற முடியாது.’—வெளிப்படுத்துதல் 20:3. 10.
கடவுளுடைய அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு என்ன நடக்கும்?
கடவுளுடைய அரசாங்கம் மனிதர்களுக்கு என்ன செய்யும்?
பரலோகத்தில் இருந்து ஆட்சி செய்யும் இயேசு, இதுவரை எந்த மனித ஆட்சியாளராலும் சாதிக்க முடியாததை சாதித்துக் காட்டுவார். மனிதர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1,44,000 பேரோடு சேர்ந்து அவர் ஆட்சி செய்வார். (வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1, 3) கடவுளுடைய விருப்பம் பூமியில் நடக்கும்படி அவர் பார்த்துக்கொள்வார். பூமியில் குடியிருக்கிறவர்களுக்குக் கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?
-
நோயையும் மரணத்தையும் நீக்கிவிடும். “‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.” “இனிமேல் மரணம் இருக்காது.”—ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:4.
-
உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும். “உன் பிள்ளைகள் . . . மிகுந்த சமாதானத்தோடு இருப்பார்கள்.” “ஒவ்வொருவரும் தங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.”—ஏசாயா 54:13; மீகா 4:4.
-
திருப்தியான வேலையைத் தரும். “நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தங்கள் உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள். அவர்களுடைய கடின உழைப்பு வீண்போகாது.”—ஏசாயா 65:22, 23.
-
சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்கும். “வனாந்தரமும் வறண்ட நிலமும் பூரிப்படையும். பாலைநிலம் பூ பூத்து, களைகட்டும்.”—ஏசாயா 35:1.
-
என்றென்றும் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லித்தரும். “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.”—யோவான் 17:3.
இந்த எல்லா சந்தோஷங்களையும் நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறார். (ஏசாயா 48:18) இந்த அருமையான வாழ்க்கை உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? பதில், அடுத்த கட்டுரையில்.