Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

ஆன்மீக முதிர்ச்சி உள்ளவர்களோடு வேலை செய்தது என் பாக்கியம்!

ஆன்மீக முதிர்ச்சி உள்ளவர்களோடு வேலை செய்தது என் பாக்கியம்!

என்னுடைய அப்பாவும் அம்மாவும் (ஜேம்ஸ் மற்றும் ஜெஸி சின்க்ளேர்), 1930-களின் மத்தியில், நியு யார்க் நகரத்திலுள்ள ப்ராங்ஸ் என்ற ஊருக்குக் குடிமாறிப் போனார்கள். அவர்களைப் போலவே ஸ்காட்லாந்திலிருந்து வந்திருந்த வில்லீ ஸ்னேடன் என்பவரோடு அவர்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது. சந்தித்த சில நிமிஷங்களிலேயே, அவர்கள் தங்களுடைய குடும்பங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். நான் பிறப்பதற்குச் சில வருஷங்களுக்கு முன்புதான் இது நடந்தது.

முதல் உலகப் போருக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்பு, என் அம்மாவுடைய அப்பாவும் அண்ணனும் மீன்பிடிக்க ஒரு படகில் போய்க்கொண்டிருந்தார்கள். அந்தப் படகு வட கடலில் இருந்த ஒரு சுரங்கத்தில் மோதியதால், அவர்கள் இரண்டு பேரும் கடலில் மூழ்கி இறந்துவிட்டார்கள். அந்த விஷயத்தை ஒருநாள் வில்லீயிடம் என் அம்மா சொன்னார். உடனே வில்லீ, “உங்க அப்பா நரகத்துல இருக்காரு!” என்று சொன்னார். * வில்லீ ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்தார். அவர் சொன்னதைக் கேட்டபோது அம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்படித்தான், பைபிள் சத்தியம் அம்மாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

வில்லீ மற்றும் லிஸ் ஸ்னேடன்

என் தாத்தா ரொம்ப நல்லவர். அதனால், அவர் நரகத்தில் இருப்பதாக வில்லீ சொன்னது அம்மாவுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால் வில்லீ, “இயேசு நரகத்துல இருக்காருன்னு நான் சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்?” என்றும் கேட்டார். அப்போது, சர்ச்சில் கற்றுக்கொண்ட ஒரு ஜெபம் அம்மாவின் ஞாபகத்துக்கு வந்தது; அந்த ஜெபத்தில், இயேசு நரகத்துக்குப் போனதாகவும் அதன் பிறகு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அதனால், ‘கெட்டவங்கள வாட்டி வதைக்கற இடம்தான் நரகம்னா, இயேசு ஏன் அங்க போகணும்?’ என்று யோசித்தார். அப்போதுதான், பைபிளிலுள்ள உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் அம்மாவுக்கு வந்தது. அதனால், ப்ராங்ஸ் சபையில் நடந்த கூட்டங்களுக்கு அவர் போக ஆரம்பித்தார். 1940-ல் ஞானஸ்நானமும் எடுத்தார்.

அம்மாவோடும், சில வருஷங்களுக்குப் பிறகு அப்பாவோடும்

அப்போதெல்லாம், பிள்ளைகளோடு சேர்ந்து பைபிளைப் படிக்கும்படி கிறிஸ்தவப் பெற்றோர்களுக்கு அவ்வளவாகச் சொல்லப்படவில்லை. நான் குழந்தையாக இருந்தபோது, கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் என் அம்மா வாரயிறுதி நாட்களில் போவார். அப்போது, அப்பா என்னைக் கவனித்துக்கொள்வார். சில வருஷங்களுக்குப் பிறகு, அப்பாவும்நானும் அம்மாவோடு சேர்ந்து கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தோம். அம்மா நிறைய ஊழியம் செய்தார், ஆர்வமுள்ள நிறைய பேருக்கு பைபிள் படிப்பு நடத்தினார். சிலசமயங்களில், நிறைய பேரை ஒன்றாக உட்கார வைத்தும் படிப்பு நடத்தியிருக்கிறார்; ஏனென்றால், அவர்களுடைய வீடுகள் பக்கத்துப் பக்கத்தில்தான் இருந்தன. பள்ளி விடுமுறையின்போது நான் அம்மாவோடு ஊழியத்துக்குப் போவேன். இப்படித்தான், பைபிளைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்; பைபிளை மற்றவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம் என்றும் தெரிந்துகொண்டேன்.

சின்ன வயதில் நான் சத்தியத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனோதானோவென்று இருந்துவிட்டேன். இதைச் சொல்வதற்கே எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 12 வயதில் பிரஸ்தாபியாக ஆனேன். அதுமுதல், தவறாமல் ஊழியத்தில் கலந்துகொண்டேன். 16 வயதில், யெகோவாவுக்கு என்னை அர்ப்பணித்தேன். ஜூலை 24, 1954-ல், கனடாவிலுள்ள டோரான்டோவில் நடந்த ஒரு மாநாட்டில் ஞானஸ்நானம் எடுத்தேன்.

பெத்தேல் சேவை

பெத்தேலில் சேவை செய்துகொண்டிருந்த சில சகோதரர்கள் என் சபையில் இருந்தார்கள். முன்பு பெத்தேலில் சேவை செய்திருந்த சகோதரர்களும் இருந்தார்கள். அவர்களைப் பார்த்து நான் ரொம்பவே உற்சாகம் அடைந்தேன். பைபிளில் இருக்கும் உண்மைகளைப் பற்றி அவர்கள் திறமையாகப் பேசியதையும் விளக்கியதையும் பார்த்து நான் அசந்துபோனேன். பட்டப்படிப்பு படிக்கச் சொல்லி என் பள்ளி ஆசிரியர்கள் சொன்னார்கள். ஆனால் பெத்தேலுக்குப் போவதுதான் என் லட்சியமாக இருந்தது. அதனால், டோரான்டோவில் நடந்த மாநாட்டில் நான் பெத்தேல் சேவைக்கு விண்ணப்பித்தேன். 1955-ல் நியு யார்க் நகரத்திலுள்ள யாங்க்கி ஸ்டேடியத்தில் நடந்த மாநாட்டில் மறுபடியும் பெத்தேல் சேவைக்கு விண்ணப்பித்தேன். 17 வயதில், பெத்தேலிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. செப்டம்பர் 19, 1955-ல் புருக்லின் பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்தேன். பெத்தேலுக்குப் போன இரண்டாவது நாள், 117 ஆடம்ஸ் தெருவிலிருந்த பைண்டிங் இலாகாவில் வேலை செய்ய ஆரம்பித்தேன். கொஞ்ச நாளிலேயே, கேதரிங் மெஷினில் (gathering machine) வேலை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு புத்தகத்தின் பகுதிகளை, அதாவது 32-பக்கங்கள் கொண்ட பகுதிகளை, அந்த மெஷின் ஒன்றுசேர்க்கும்; அவற்றை இன்னொரு மெஷின் தைக்கும்.

17 வயதில் புருக்லின் பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்தபோது

எனக்கு டைப் அடிக்கத் தெரிந்திருந்தது. அதனால், பைண்டிங் இலாகாவில் கிட்டத்தட்ட ஒரு மாதம் வேலை செய்த பிறகு, பத்திரிகை இலாகாவுக்கு அனுப்பப்பட்டேன். அப்போதெல்லாம், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்குப் புதிதாக சந்தா செய்தவர்களுடைய விலாசங்கள் டைப் செய்யப்பட்டு, ஸ்டென்சில்கள் தயாரிக்கப்பட்டன. சில மாதங்களுக்குப் பிறகு, ஷிப்பிங் இலாகாவில் வேலை செய்தேன். உலகம் முழுவதும் அனுப்ப வேண்டிய பிரசுரங்களை வண்டியில் ஏற்றி துறைமுகங்களுக்குக் கொண்டுபோக டிரைவருக்கு உதவி செய்ய முடியுமா என்று ஷிப்பிங் இலாகாவின் கண்காணி க்ளாஸ் ஜென்சன் கேட்டார். அமெரிக்காவில் இருந்த எல்லா சபைகளுக்கும் அனுப்ப வேண்டிய பத்திரிகைகளை அஞ்சல் நிலையத்துக்கும் எடுத்துக்கொண்டு போக வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட வேலைகள் செய்தால் என் உடம்பு நன்றாகத் தேறும் என்று சகோதரர் ஜென்சன் சொன்னார். ஏனென்றால், அப்போது என்னுடைய எடை வெறும் 57 கிலோதான்! பார்க்க எலும்பும் தோலுமாக இருந்தேன். துறைமுகங்களுக்கும் அஞ்சல் நிலையத்துக்கும் போவதும் வருவதுமாக இருந்ததால் என் உடம்பு நன்றாகத் தேறியது. சகோதரர் ஜென்சன் என்னுடைய நல்லதுக்குத்தான் எனக்கு இந்த வேலையைக் கொடுத்திருந்தார்!

சபைகள் ஆர்டர் செய்த பத்திரிகைகளைப் பத்திரிகை இலாகா அனுப்பி வைத்தது. புருக்லினில் நம் பத்திரிகைகள் நிறைய மொழிகளில் அச்சடிக்கப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பப்பட்டன; அதனால், அந்த மொழிகளைப் பற்றி என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. அவற்றில் சில மொழிகளைப் பற்றி அதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால், நம் பத்திரிகைகளின் லட்சக்கணக்கான பிரதிகள் தொலைதூர இடங்களுக்கெல்லாம் அனுப்பப்பட்டதைப் பார்த்து நான் சந்தோஷப்பட்டேன். அவற்றில் பல இடங்களுக்குப் போகும் பாக்கியம் எனக்குப் பிற்பாடு கிடைக்கும் என்று அப்போது நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

ராபர்ட் வாலன், சார்ல்ஸ் மாலஹன் மற்றும் டான் ஆடம்ஸ் ஆகியவர்களோடு டேவிட் சின்க்ளேர்

1961-ல், க்ரான்ட் சூட்டர் என்ற சகோதரரின் கண்காணிப்பின்கீழ் பொருளாளர் அலுவலகத்தில் வேலை செய்யும்படி நான் நியமிக்கப்பட்டேன். அங்கே சில வருஷங்கள் வேலை செய்த பிறகு, சகோதரர் நேதன் நாரின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டேன். அந்தச் சமயத்தில், நம்முடைய உலகளாவிய வேலையை அவர்தான் தலைமைதாங்கி நடத்திவந்தார். அவருடைய அலுவலகத்தில் வேலை செய்த ஒரு சகோதரர் ஒரு மாதத்துக்கு ராஜ்ய ஊழியப் பள்ளிக்குப் போகப்போவதாகவும், அதன்பின் ஊழிய இலாகாவில் நியமிக்கப்படப்போவதாகவும் சகோதரர் நார் சொன்னார். அதனால், அவருடைய இடத்தில், டான் ஆடம்ஸ் என்ற சகோதரரோடு சேர்ந்து வேலை செய்ய நான் நியமிக்கப்பட்டேன். 1955-ல் நடந்த மாநாட்டில் என்னுடைய பெத்தேல் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட சகோதரர்தான் டான் ஆடம்ஸ். அந்த அலுவலகத்தில் வேலை பார்த்த மற்ற இரண்டு சகோதரர்கள், ராபர்ட் வாலன் மற்றும் சார்ல்ஸ் மாலஹன். நாங்கள் நான்கு பேரும் 50 வருஷங்களுக்கு மேலாக ஒன்றாக வேலை செய்தோம். அப்படிப்பட்ட ஆன்மீக முதிர்ச்சியுள்ள, உண்மையுள்ள சகோதரர்களோடு சேவை செய்தது ரொம்பவும் சந்தோஷமான ஒரு அனுபவம்!—சங். 133:1.

1970-ல், முதல்முறையாக மண்டலக் கண்காணியாக வெனிசுவேலா போயிருந்தபோது

1970-ல், உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகங்களைச் சந்திக்க நான் நியமிக்கப்பட்டேன். வருஷத்துக்கு ஒரு தடவை அல்லது இரண்டு வருஷங்களுக்கு ஒரு தடவை, சில வாரங்களுக்கு அப்படிக் கிளை அலுவலகங்களைச் சந்தித்தேன். அந்த சந்திப்பை மண்டலக் கண்காணியின் சந்திப்பு என்று அப்போது சொல்வார்கள். நான் உலகம் முழுவதும் இருந்த பெத்தேல் குடும்பங்களையும் மிஷனரிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது; ஆன்மீக ரீதியில் அவர்களை உற்சாகப்படுத்தவும், கிளை அலுவலகப் பதிவுகளை சரிபார்க்கவும் வேண்டியிருந்தது. கிலியட் பள்ளியின் ஆரம்ப வகுப்புகளில் பட்டம் பெற்ற சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். அவர்கள் அவ்வளவு காலமாக வெளிநாடுகளில் உண்மையோடு சேவை செய்துவந்தார்கள். மண்டலக் கண்காணியாக, 90-க்கும் அதிகமான நாடுகளுக்குப் போய்வரும் பாக்கியம் கிடைத்ததற்காக நான் ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன்.

90 நாடுகளுக்கும் அதிகமான நாடுகளிலுள்ள சகோதரர்களைச் சந்தித்தது சந்தோஷமான ஒரு அனுபவம்!

உண்மையான தோழி கிடைத்தாள்!

புருக்லினில் இருந்த பெத்தேல் குடும்பத்தார் எல்லாரும் நியு யார்க் நகரத்திலிருந்த சபைகளில் நியமிக்கப்பட்டார்கள். நான் ப்ராங்ஸில் இருந்த சபையில் நியமிக்கப்பட்டேன். அந்த ஊரில் இருந்த சபை வளர்ந்து, இரண்டாகப் பிரிந்திருந்தது. முதல் சபை, வட ப்ராங்ஸ் சபை என்று அழைக்கப்பட்டது. அந்தச் சபையில்தான் நான் நியமிக்கப்பட்டிருந்தேன்.

1960-களின் மத்தியில், லாட்வியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் அந்தச் சபையின் பிராந்தியத்துக்குக் குடிமாறி வந்தார்கள். அவர்கள் தென் ப்ராங்ஸில் இருந்தபோது யெகோவாவின் சாட்சிகளாக ஆகியிருந்தார்கள். அவர்களுடைய மூத்த மகளான லீவ்யா, பள்ளிப் படிப்பை முடித்ததுமே ஒழுங்கான பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தாள். சில மாதங்களுக்குப் பிறகு, தேவை அதிகமிருந்த மாஸசூஸெட்ஸ் பகுதிக்குக் குடிமாறிப் போனாள். சபையில் நடந்த நல்ல விஷயங்களைப் பற்றி நான் அவளுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தேன். அவளும், பாஸ்டன் பகுதியில் ஊழியம் செய்தபோது கிடைத்த நல்ல அனுபவங்களைப் பற்றி எனக்கு எழுதுவாள்.

லீவ்யாவோடு

சில வருஷங்களுக்குப் பிறகு, அவள் விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டாள். யெகோவாவுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய அவள் விரும்பியதால், பெத்தேல் சேவைக்கு விண்ணப்பித்தாள். 1971-ல் அவள் பெத்தேலுக்கு அழைக்கப்பட்டாள். யெகோவா எனக்கு ஒரு அறிகுறி காட்டியதுபோல் தெரிந்தது! அக்டோபர் 27, 1973-ல் நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். சகோதரர் நார் எங்களுடைய கல்யாணப் பேச்சைக் கொடுத்தார். அது எங்களுக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்! “நல்ல மனைவியைத் தேடிக்கொள்கிறவன் நல்ல ஆசீர்வாதத்தைத் தேடிக்கொள்கிறான். யெகோவாவின் பிரியத்தையும் பெறுகிறான்” என்று நீதிமொழிகள் 18:22 சொல்கிறது. லீவ்யாவும் நானும் 40 வருஷங்களுக்கும் மேலாக பெத்தேலில் சேவை செய்கிறோம். அதே ப்ராங்ஸ் பகுதியில் உள்ள ஒரு சபைக்குத்தான் இப்போதும் போகிறோம்.

கிறிஸ்துவின் சகோதரர்களோடு செய்த சேவை

சகோதரர் நாருடன் வேலை செய்தது ஒரு அருமையான அனுபவம். அவர் சத்தியத்துக்காக ஓயாமல் உழைத்தார். உலகம் முழுவதும் இருந்த மிஷனரிகளின் சேவையை அவர் உயர்வாக மதித்தார். ஏனென்றால், அவர்களில் நிறைய பேர், சாட்சிகளே இல்லாத நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். 1976-ல் சகோதரர் நார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் படுத்தபடுக்கையாக இருந்தபோது, இன்னும் வெளிவராத ஒரு பிரசுரத்திலிருந்து வாசித்துக் காட்டும்படி ஒரு தடவை என்னிடம் சொன்னார். நான் வாசிப்பதைக் கேட்பதற்காக சகோதரர் ஃப்ரெட்ரிக் ஃப்ரான்ஸையும் கூப்பிடச் சொன்னார். சகோதரர் ஃப்ரான்ஸுக்கு பார்வை மங்கியிருந்ததால், சகோதரர் நார் நிறைய நேரம் அவருக்கு அப்படிப்பட்ட பிரசுரங்களை வாசித்துக் காட்டியிருந்தாராம். இதைப் பிற்பாடுதான் நான் தெரிந்துகொண்டேன்.

1977-ல், டானியேல் மற்றும் மரீனா சிட்லிக்குடன் மண்டல சந்திப்புக்குப் போயிருந்தபோது

சகோதரர் நார் 1977-ல் இறந்தார். தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையை அவர் உண்மையோடு முடித்திருந்ததை நினைத்து, அவருக்கு நெருக்கமானவர்கள் ஆறுதல் அடைந்தார்கள். (வெளி. 2:10) அதன் பிறகு, சகோதரர் ஃப்ரான்ஸ் நம் வேலையைத் தலைமைதாங்கி நடத்தினார்.

அந்தச் சமயத்தில், சகோதரர் நாருடன் பல பத்தாண்டுகளாக வேலை செய்திருந்த மில்டன் ஹென்ஷலுக்கு நான் செக்ரெட்டரியாக இருந்தேன். ஆனால், சகோதரர் ஃப்ரான்ஸுக்குத் தேவைப்படுகிற எல்லா உதவிகளையும் செய்துவிட்டுதான் மற்ற வேலைகளை நான் கவனிக்க வேண்டுமென்று சகோதரர் ஹென்ஷல் சொன்னார். பிரசுரங்கள் வெளியாவதற்குமுன் அவற்றைத் தவறாமல் சகோதரர் ஃப்ரான்ஸுக்கு நான் வாசித்துக் காட்டுவேன். அவர் அதை நன்றாகக் கவனித்துக் கேட்பார், கேட்பதையெல்லாம் அப்படியே ஞாபகத்தில் வைத்துக்கொள்வார். டிசம்பர் 1992-ல் அவர் தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கும்வரை அவருக்கு அப்படி உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்காக ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன்!

124 கொலம்பியா ஹைட்ஸ்; இங்குதான் நிறைய வருஷங்களாக நான் வேலை செய்தேன்

பெத்தேலில் நான் சேவை செய்ய ஆரம்பித்து 61 வருஷங்கள் ஆகின்றன; நாட்கள் வேகமாக ஓடிவிட்டன. என் அப்பா அம்மா இரண்டு பேருமே, சாகும்வரை யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தார்கள். புது உலகத்தில் அவர்களை வரவேற்பதற்காக ஆசையோடு காத்திருக்கிறேன். (யோவா. 5:28, 29) உலகம் முழுவதும் உள்ள கடவுளுடைய மக்களின் சார்பாக, உண்மையுள்ள ஆண்களோடும் பெண்களோடும் வேலை செய்யும் அருமையான பாக்கியத்தோடு ஒப்பிடும்போது, இந்த உலகம் தருகிற எல்லாமே வீண் என்றுதான் சொல்வேன். பல வருஷங்களாக முழுநேர ஊழியம் செய்திருக்கும் நானும் என் மனைவியும், ‘யெகோவா தரும் சந்தோஷம்தான் எங்களுக்குப் பலத்த கோட்டை’ என்று மனமார சொல்வோம்.—நெ. 8:10.

யெகோவாவின் அமைப்பில் யார் இருக்கிறார்களோ இல்லையோ, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உண்மைகளை அறிவிக்கும் வேலை தொடர்ந்து நடக்கிறது. இத்தனை வருஷங்களாக, ஆன்மீக முதிர்ச்சியுள்ள உண்மையுள்ள சகோதர சகோதரிகளோடு வேலை செய்யும் சந்தோஷமும் பாக்கியமும் எனக்குக் கிடைத்திருக்கிறது. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களோடும் நான் வேலை செய்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது பூமியில் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட ஆன்மீக முதிர்ச்சியுள்ள உண்மையுள்ள கிறிஸ்தவர்களோடு சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் நன்றியோடு இருக்கிறேன்.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 5 பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள ஷியோல், ஹேடீஸ் என்ற மூல மொழி வார்த்தைகள், மனிதர்களுடைய பொதுவான கல்லறையைக் குறிக்கின்றன. ஆனால், அவற்றை “நரகம்” என்று சில பைபிள்கள் மொழிபெயர்த்திருக்கின்றன.