Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுங்கள்

சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுங்கள்

‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணம் . . . சுயக்கட்டுப்பாடு.’—கலா. 5:22, 23.

பாடல்கள்: 83, 52

1, 2. (அ) சுயக்கட்டுப்பாடு இல்லாததால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன? (ஆ) நாம் ஏன் சுயக்கட்டுப்பாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது?

சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள யெகோவா நமக்கு உதவி செய்வார். (கலா. 5:22, 23) யெகோவா பரிபூரணமான விதத்தில் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுகிறார்; ஆனால், நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், அதைக் காட்டுவது நமக்கு ஒரு போராட்டமாக இருக்கிறது. உண்மையில், சுயக்கட்டுப்பாட்டைக் காட்டாததால்தான் இன்று மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் வருகின்றன. அதனால்தான், சிலர் முக்கியமான காரியங்களைத் தள்ளிப்போடுகிறார்கள் அல்லது பள்ளியில் சரியாகப் படிக்காமல் போகிறார்கள் அல்லது அலுவலகத்தில் சரியாக வேலை செய்யாமல் இருக்கிறார்கள். கண்டபடி பேசுவது, வெறித்தனமாகக் குடிப்பது, வன்முறையில் இறங்குவது, விவாகரத்து செய்வது, அநாவசியமாகக் கடன் வாங்குவது, ஏதோவொன்றுக்கு அடிமையாவது, சிறையில் தள்ளப்படுவது, மனவேதனையில் தவிப்பது, பாலியல் நோய்களால் அவதிப்படுவது, முறைகேடாகக் கருத்தரிப்பது போன்ற பிரச்சினைகளுக்குக் காரணமும் சுயக்கட்டுப்பாடு இல்லாததுதான்.—சங். 34:11-14.

2 சுயக்கட்டுப்பாட்டைக் காட்டாதவர்கள் தங்களுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, பிரச்சினைகளை உண்டாக்குகிறார்கள். காலங்கள் போகப்போக, மக்களுடைய சுயக்கட்டுப்பாடு குறைந்துகொண்டே போகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், நாம் “கடைசி நாட்களில்” வாழ்வதற்கு இதுவும் ஒரு அடையாளம் என்று பைபிளில் முன்கூட்டியே சொல்லப்பட்டிருக்கிறது.—2 தீ. 3:1-3.

3. நாம் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவது ஏன் அவசியம்?

3 இரண்டு முக்கியமான காரணங்களுக்காக நாம் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவது அவசியம். முதலாவதாக, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறவர்களுக்கு அவ்வளவாகப் பிரச்சினைகள் வருவதில்லை. அவர்களால் மற்றவர்களோடு நன்றாகப் பழக முடிகிறது, கோபத்தையும் கவலையையும் மனச்சோர்வையும் தவிர்க்க முடிகிறது. இரண்டாவதாக, நாம் கடவுளுடைய நண்பர்களாக இருக்க வேண்டுமென்றால், கெட்ட ஆசைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதைச் செய்யத்தான் ஆதாமும் ஏவாளும் தவறிவிட்டார்கள். (ஆதி. 3:6) அவர்களைப் போலவே, இன்று நிறைய பேர் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவதில்லை. அதனால், பயங்கரமான பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறார்கள்.

4. கெட்ட ஆசைகளைக் கட்டுப்படுத்த சிரமப்படுகிறவர்களுக்கு எந்த விஷயம் ஆறுதலாக இருக்கிறது?

4 நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவது கஷ்டம் என்பதை யெகோவா புரிந்துகொள்கிறார். அதே சமயத்தில், நம்முடைய கெட்ட ஆசைகளை அடக்குவதற்கு உதவி செய்யவும் அவர் விரும்புகிறார். (1 ரா. 8:46-50) அவர் நம்முடைய நண்பர், அவர் நம்மை நேசிக்கிறார். அதனால், உணர்ச்சிகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்த நாம் சிரமப்படும்போது அவர் அன்போடு உதவி செய்கிறார். இந்தக் கட்டுரையில், சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவதற்கு யெகோவாவின் உதாரணம் நமக்கு எப்படி உதவுகிறது என்று பார்ப்போம். அதோடு, பைபிளில் இருக்கிற மற்ற நல்ல உதாரணங்களையும் கெட்ட உதாரணங்களையும் கவனிப்போம். பிறகு, நமக்கு உதவியாக இருக்கும் நடைமுறையான குறிப்புகளைத் தெரிந்துகொள்வோம்.

யெகோவாவின் உதாரணம்

5, 6. சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவதில் யெகோவா எப்படி நல்ல உதாரணமாக இருக்கிறார்?

5 யெகோவா பரிபூரணமான விதத்தில் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுகிறார்; ஏனென்றால், அவர் எல்லா விதத்திலுமே பரிபூரணமாக இருக்கிறார். (உபா. 32:4) நாம் பாவ இயல்புள்ளவர்கள் என்பது உண்மைதான்; ஆனாலும், சுயக்கட்டுப்பாட்டைக் காட்டும் விஷயத்தில் முன்னேறுவதற்கு நாம் அவருடைய உதாரணத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போது, மனம் புண்படும் சமயங்களில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோம். யெகோவா சுயக்கட்டுப்பாட்டைக் காட்டிய சில சந்தர்ப்பங்கள் என்ன?

6 ஏதேன் தோட்டத்தில் சாத்தான் கலகம் செய்தபோது யெகோவா எப்படி நடந்துகொண்டார் என்பதை யோசித்துப் பாருங்கள். சாத்தான் கடவுளிடம் சவால்விட்டபோது, பரலோகத்திலிருந்த உண்மையுள்ள தேவதூதர்கள் எல்லாரும் ஒருவேளை அதிர்ச்சி அடைந்திருப்பார்கள், கோபப்பட்டிருப்பார்கள், வெறுப்படைந்திருப்பார்கள். சாத்தானால் ஏற்பட்டிருக்கிற எல்லா கஷ்டங்களையும் பற்றி யோசிக்கும்போது நீங்களும் அதேபோல் உணரலாம். ஆனால், யெகோவா எதையும் அவசரப்பட்டுச் செய்யவில்லை; எதைச் செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தார். சாத்தான் கலகம் செய்த விஷயத்தில், சட்டென்று கோபப்படுவதற்குப் பதிலாக இன்றுவரை பொறுமையாகவும் நியாயமாகவும் நடந்திருக்கிறார். (யாத். 34:6; யோபு 2:2-6) ஏன் இவ்வளவு காலம் அவர் பொறுமையாக இருக்கிறார்? ஏனென்றால், யாரும் அழிந்துபோகாமல் “எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.”—2 பே. 3:9.

7. யெகோவாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

7 நன்றாக யோசித்துவிட்டுத்தான் பேச வேண்டும் என்பதையும், அவசரப்பட்டு எதையும் செய்துவிடக் கூடாது என்பதையும் யெகோவாவின் உதாரணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். அதனால், நீங்கள் ஒரு முக்கியமான தீர்மானம் எடுக்கும்போது, நேரமெடுத்து நன்றாக யோசியுங்கள். சரியாகப் பேசுவதற்கு அல்லது நடந்துகொள்வதற்கு ஞானம் தரும்படி கடவுளிடம் கேளுங்கள். (சங். 141:3) நாம் கோபமாகவோ வருத்தமாகவோ இருக்கும்போது, சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறோம். அதனால், யோசிக்காமல் எதையாவது சொல்லிவிட்டு அல்லது செய்துவிட்டு பிற்பாடு ரொம்பவே வருத்தப்படுகிறோம்.—நீதி. 14:29; 15:28; 19:2.

நல்ல உதாரணங்களும் கெட்ட உதாரணங்களும்

8. (அ) சுயக்கட்டுப்பாட்டைக் காட்டியவர்களின் உதாரணங்களை எங்கே பார்க்கலாம்? (ஆ) போத்திபாரின் மனைவி வீசிய வலையில் சிக்காமல் இருக்க யோசேப்புக்கு எது உதவியது? (ஆரம்பப் படம்)

8 சுயக்கட்டுப்பாடு எந்தளவுக்கு மதிப்புள்ளது என்பதை எந்த பைபிள் உதாரணங்கள் காட்டுகின்றன? ஒருவேளை, யாக்கோபின் மகனாகிய யோசேப்பின் உதாரணம் உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். பார்வோனுடைய காவலர்களின் தலைவராகிய போத்திபாரின் வீட்டில் அவர் வேலை செய்துகொண்டிருந்தபோது, தனக்கு வந்த சோதனையைச் சமாளித்தார். அவர் “அழகான, வாட்டசாட்டமான வாலிபராக” இருந்ததால், போத்திபாரின் மனைவி அவரைப் பார்த்து மயங்கினாள். அவரைத் தன் வலையில் சிக்க வைக்க நிறைய தடவை முயற்சி செய்தாள். அவளுடைய வலையில் சிக்காமல் இருக்க யோசேப்புக்கு எது உதவியது? அவளுடைய ஆசைக்கு இணங்கிவிட்டால் என்ன நடக்கும் என்பதை அவர் முன்கூட்டியே நன்றாக யோசித்துப் பார்த்திருப்பார். அதனால்தான், அவருடைய அங்கியை அவள் பிடித்து இழுத்தபோது, அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். “நான் எப்படி இவ்வளவு பெரிய தவறு செய்து, கடவுளுக்கு விரோதமாகப் பாவம் பண்ணுவேன்?” என்றும் கேட்டார்.—ஆதி. 39:6, 9; நீதிமொழிகள் 1:10-ஐ வாசியுங்கள்.

9. கெட்ட ஆசைகளைத் தவிர்க்க நீங்கள் எப்படித் தயாராகலாம்?

9 யோசேப்பின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கடவுளுடைய சட்டங்களில் ஏதாவது ஒன்றை மீற வேண்டுமென்ற கெட்ட ஆசை நமக்கு வந்தால், அந்த ஆசையை விட்டொழிக்க வேண்டும். சிலர் யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு முன்னால் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டார்கள், வெறித்தனமாகக் குடித்தார்கள், புகைபிடித்தார்கள், போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார்கள், பாலியல் முறைகேட்டிலோ மற்ற கெட்ட பழக்கங்களிலோ ஈடுபட்டார்கள். ஞானஸ்நானம் எடுத்த பிறகும்கூட, அந்தப் பழக்கங்களில் ஈடுபடுவதற்கான ஆசை சிலசமயங்களில் அவர்களுக்கு வரலாம். உங்களுக்கும் அதேபோல் ஆசை வருகிறதா? அப்படியென்றால், கெட்ட ஆசைக்கு அடிபணியும்போது, யெகோவாவுடன் இருக்கும் உங்கள் பந்தம் எப்படிப் பாதிக்கப்படும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எந்தச் சூழ்நிலைகள் உங்கள் ஆசையைத் தூண்டிவிடலாம் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்; பிறகு, அந்தச் சூழ்நிலைகளை எப்படித் தவிர்க்கலாம் என்று யோசியுங்கள். (சங். 26:4, 5; நீதி. 22:3) கெட்ட ஆசையைத் தூண்டும் ஒரு சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக்கொண்டால், அதை அடக்குவதற்குத் தேவையான ஞானத்தையும் சுயக்கட்டுப்பாட்டையும் தரும்படி யெகோவாவிடம் கேளுங்கள்.

10, 11. (அ) நிறைய இளைஞர்களுக்குப் பள்ளியில் என்ன நடக்கிறது? (ஆ) கடவுளுடைய சட்டங்களை மீறாமல் இருக்க இளம் கிறிஸ்தவர்களுக்கு எது உதவும்?

10 யோசேப்புக்கு நடந்தது போலவே இன்று நிறைய இளைஞர்களுக்கு நடக்கிறது. கிம் என்ற இளம் சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். வாரயிறுதி நாட்களில் செக்ஸ் வைத்துக்கொண்டதாக அவளுடைய வகுப்பில் இருந்த மாணவிகள் அடிக்கடி பெருமையடிப்பார்கள். ஆனால், கிம் அவர்களைப் போல ஒழுக்கக்கேடாக நடக்காததால் அவர்களோடு சேர்ந்து பெருமையடிக்க முடியவில்லை. அதனால், சிலசமயங்களில் ஏதோ “தனியாக ஒதுக்கப்பட்டதுபோல்” அவள் உணர்ந்தாள். எந்தப் பையனையும் காதலிக்காததால் தன்னை முட்டாள் என்று அவர்கள் நினைத்துவிடுவார்களோ என்று பயந்தாள். உண்மையில், அவள் புத்திசாலித்தனமாகத்தான் நடந்துகொண்டாள். செக்ஸ் வைத்துக்கொள்வதற்கான ஆசை இள வயதில் ரொம்ப அதிகமாக இருக்கும் என்று அவளுக்குத் தெரியும். (2 தீ. 2:22) அவள் இன்னமும் ஒரு கன்னிப்பெண்ணாகத்தான் இருக்கிறாளா என்று மற்ற மாணவிகள் அடிக்கடி அவளிடம் கேட்பார்கள். அப்போது, செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பாததற்கான காரணத்தை எடுத்துச் சொல்ல அவளுக்கு வாய்ப்புக் கிடைத்தது. பாலியல் ஒழுக்கக்கேட்டில் விழுந்துவிடக் கூடாதென்ற தீர்மானத்தோடு இருக்கும் இளம் கிறிஸ்தவர்களைப் பார்த்து நாம் பெருமைப்படுகிறோம்! யெகோவாவும் அவர்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறார்!

11 ஆசையை அடக்காமல் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டவர்களுடைய உதாரணங்களும் பைபிளில் இருக்கின்றன. சுயக்கட்டுப்பாட்டைக் காட்டாதபோது நாம் எப்படி மோசமான விளைவுகளைச் சந்திப்போம் என்பதை பைபிள் காட்டுகிறது. நீங்களும் கிம்முடைய சூழ்நிலையில் இருக்கிறீர்களா? அப்படியென்றால், நீதிமொழிகள் 7-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் முட்டாள் வாலிபனைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அம்னோனைப் பற்றியும் அவனுடைய நடத்தையால் ஏற்பட்ட பயங்கரமான விளைவுகளைப் பற்றியும்கூட யோசித்துப் பாருங்கள். (2 சா. 13:1, 2, 10-15, 28-32) அப்படிப்பட்ட உதாரணங்களைப் பற்றிப் பெற்றோர்கள் குடும்ப வழிபாட்டில் கலந்துபேச வேண்டும்; அப்போது, சுயக்கட்டுப்பாட்டையும் ஞானத்தையும் வளர்த்துக்கொள்ள பிள்ளைகளுக்கு அவர்களால் உதவ முடியும்.

12. (அ) யோசேப்பு தன் சகோதரர்களிடம் பேசியபோது தன்னுடைய உணர்ச்சிகளை எப்படிக் கட்டுப்படுத்தினார்? (ஆ) எந்தச் சூழ்நிலைகளில் நம்முடைய உணர்ச்சிகளை நாம் கட்டுப்படுத்த வேண்டும்?

12 இன்னொரு சந்தர்ப்பத்திலும், யோசேப்பு சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவதில் அருமையான முன்மாதிரி வைத்தார். அவருடைய சகோதரர்கள் உணவு வாங்குவதற்காக எகிப்துக்கு வந்த சமயம் அது. அவர்களுடைய மனதில் உண்மையிலேயே என்ன இருக்கிறதென்று கண்டுபிடிக்க யோசேப்பு விரும்பியதால், தான்தான் அவர்களுடைய சகோதரன் என்பதை அவர்களிடம் சொல்லவில்லை. தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல்போனபோது, தனியாக ஒரு அறைக்குப் போய் அழுதார். (ஆதி. 43:30, 31; 45:1) ஒரு சகோதரரோ சகோதரியோ உங்கள் மனதைப் புண்படுத்திவிட்டால், யோசேப்பைப் போல சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுங்கள்; அப்போதுதான், பிற்பாடு வருத்தப்படும் அளவுக்கு எதையாவது சொல்லவோ செய்யவோ மாட்டீர்கள். (நீதி. 16:32; 17:27) ஒருவேளை, உங்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் யாராவது சபை நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம். அப்படியென்றால், தேவையில்லாமல் அவர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். அப்படிச் செய்வது கஷ்டம்தான். ஆனால், நீங்கள் யெகோவாவின் உதாரணத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்பதையும், அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்தால், அப்படிச் செய்வது சுலபமாக இருக்கும்.

13. தாவீது ராஜாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

13 தாவீது ராஜாவின் உதாரணத்திலிருந்தும் நாம் நன்மை அடைகிறோம். சவுலும் சீமேயியும் அவரைக் கோபப்படுத்தியபோது, அவர் பதிலுக்குக் கோபப்படவோ அவர்களுக்கு எதிராகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தவோ இல்லை. (1 சா. 26:9-11; 2 சா. 16:5-10) ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் தாவீது சுயக்கட்டுப்பாட்டைக் காட்டவில்லை. உதாரணத்துக்கு, பத்சேபாளோடு பாவம் செய்த சந்தர்ப்பத்திலும் பேராசைபிடித்த நாபாலைத் தாக்கப்போன சந்தர்ப்பத்திலும் அவர் சுயக்கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். (1 சா. 25:10-13; 2 சா. 11:2-4) தாவீதின் உதாரணத்திலிருந்து நாம் அருமையான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். முதலாவதாக, கடவுளுடைய மக்கள் மத்தியில் கண்காணிகளாக இருக்கிறவர்கள், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு சுயக்கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும். இரண்டாவதாக, யாருமே மிதமிஞ்சிய தன்னம்பிக்கையைக் காட்டக் கூடாது; அதாவது, தாங்கள் எந்த ஆசைக்கும் அடிபணிய வாய்ப்பில்லை என்று நினைக்கக் கூடாது.—1 கொ. 10:12.

நடைமுறையான ஆலோசனைகள்

14. ஒரு சகோதரருக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன, அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் அமைதியாக நடந்துகொள்வது ஏன் முக்கியம்?

14 சுயக்கட்டுப்பாட்டை இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்? லூஜி என்ற சகோதரருடைய அனுபவத்தைக் கவனியுங்கள்.அவருடைய காரை இன்னொரு கார் பின்பக்கத்தில் இடித்துவிட்டது. அந்தக் காரை ஓட்டியவர், தன்மேல் தப்பு இருந்தும் லூஜியைப் பார்த்துக் கன்னாபின்னாவென்று கத்த ஆரம்பித்துவிட்டார். அமைதியாக இருப்பதற்கு உதவும்படி லூஜி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். பிறகு, அந்த நபரை அமைதிப்படுத்த முயற்சி செய்தார். ஆனாலும், அந்த நபர் கத்திக்கொண்டே இருந்தார். அந்தச் சூழ்நிலையிலும், லூஜி கோபப்படாமல் சாந்தமாக நடந்துகொண்டார். ஒரு வாரம் கழித்து, மறுசந்திப்பு செய்வதற்காக லூஜி ஒரு பெண்ணின் வீட்டுக்குப் போனார். அவளுடைய கணவர்தான் தன்னோடு சண்டைபோட்டவர் என்று அப்போது தெரிந்துகொண்டார்! லூஜியைப் பார்த்ததும் அந்த நபருக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. மோசமாக நடந்துகொண்டதற்காக லூஜியிடம் அவர் மன்னிப்புக் கேட்டார். அதோடு, லூஜியின் இன்ஷுரன்ஸ் கம்பெனியைத் தொடர்புகொண்டு, அவருடைய காரைச் சீக்கிரமாகச் சரிசெய்ய ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார். அதுமட்டுமல்ல, பைபிளிலிருந்து லூஜி சொன்ன விஷயங்களை அவர் ஆர்வமாகக் கேட்டார். பிரச்சினை நடந்தபோது அமைதியாக இருந்தது எவ்வளவு நல்லதென்று லூஜி புரிந்துகொண்டார்; தான் கோபப்பட்டிருந்தால் நிலைமை எவ்வளவு மோசமாகியிருக்கும் என்பதையும் புரிந்துகொண்டார்.2 கொரிந்தியர் 6:3, 4-ஐ வாசியுங்கள்.

தன்னைப் பார்த்து கத்தும் ஒரு நபரிடம் ஒரு யெகோவாவின் சாட்சி எப்படி நடந்துகொள்கிறார் என்பது, அதே நபரை ஊழியத்தில் பார்க்கும்போது அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பாதிக்கும் (பாரா 14)

15, 16. பைபிளைப் படிப்பது, சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எப்படி உதவும்?

15 பைபிளைத் தவறாமலும் அர்த்தமுள்ள விதத்திலும் படிப்பது, சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள கிறிஸ்தவர்களுக்கு உதவும். யோசுவாவிடம் கடவுள் என்ன சொன்னார் என்று நினைத்துப் பாருங்கள். “இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டே இரு. அதில் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் கவனமாய்க் கடைப்பிடிப்பதற்காக ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் அதை வாசி. அப்போதுதான் வாழ்க்கையில் உனக்கு வெற்றி கிடைக்கும், நீ ஞானமாகவும் நடப்பாய்” என்று கடவுள் சொன்னார். (யோசு. 1:8) ஆனால், பைபிளைப் படிப்பது சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு எப்படி உதவும்?

16 சுயக்கட்டுப்பாட்டைக் காட்டினால் என்ன நன்மை கிடைக்கும் என்றும், காட்டாவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் சில பைபிள் உதாரணங்களின் மூலம் நாம் பார்த்தோம். நல்ல காரணத்துக்காகத்தான் யெகோவா இந்த உதாரணங்களை பைபிளில் பதிவு செய்திருக்கிறார். (ரோ. 15:4) அதனால், அவற்றை வாசிப்பதும், படிப்பதும், ஆழ்ந்து யோசிப்பதும் ஞானமானது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் அவை எப்படிப் பொருந்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். பைபிள் தரும் ஆலோசனைகளின்படி நடக்க உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். ஏதோவொரு விஷயத்தில் நீங்கள் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டாமல் இருக்கிறீர்களா? அப்படியென்றால், அதை ஒத்துக்கொள்ளுங்கள். பிறகு, அதைப் பற்றி ஜெபம் செய்துவிட்டு, நீங்கள் எப்படி முன்னேறலாம் என்று தெரிந்துகொள்ள கடினமாக முயற்சி செய்யுங்கள். (யாக். 1:5) நம்முடைய பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்து, உங்களுக்கு உதவும் நடைமுறையான ஆலோசனைகளைக் கண்டுபிடியுங்கள்.

17. சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள பிள்ளைகளுக்குப் பெற்றோர் எப்படியெல்லாம் உதவலாம்?

17 சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்? பிறக்கும்போதே பிள்ளைகளுக்கு இந்தக் குணம் வந்துவிடுவதில்லை என்பது பெற்றோர்களுக்குத் தெரியும். அவர்கள்தான் தங்களுடைய முன்மாதிரியின் மூலம் பிள்ளைகளுக்கு நல்ல குணங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். (எபே. 6:4) உங்கள் பிள்ளைகள் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவதில்லையா? அப்படியென்றால், நீங்கள் நல்ல முன்மாதிரி வைக்கிறீர்களா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். தவறாமல் ஊழியத்தில் கலந்துகொள்வதன் மூலமும், கூட்டங்களுக்குப் போவதன் மூலமும், குடும்ப வழிபாட்டை நடத்துவதன் மூலமும் நீங்கள் நல்ல முன்மாதிரி வைக்கலாம். தேவைப்படும்போது, பிள்ளைகளிடம் ‘முடியாது!’ என்று சொல்லத் தயங்காதீர்கள். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் யெகோவா வரம்புகளை வைத்திருந்தார். யெகோவாவின் அதிகாரத்தை மதிப்பதற்கு அவை அவர்களுக்கு உதவியிருக்கும். அதேபோல், பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கண்டிக்கும்போதும், அவர்களுக்கு நல்ல முன்மாதிரி வைக்கும்போதும், பிள்ளைகள் சுயக்கட்டுப்பாட்டை வளர்க்கக் கற்றுக்கொள்வார்கள். கடவுளுடைய அதிகாரத்தை விரும்பவும் அவருடைய தராதரங்களை மதிக்கவும் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது, பொன்னான குணங்களில் சிலவற்றை வளர்க்க நீங்கள் அவர்களுக்கு உதவுகிறீர்கள்!நீதிமொழிகள் 1:5, 7, 8-ஐ வாசியுங்கள்.

18. நம்முடைய நண்பர்களை நாம் ஏன் ஞானமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

18 நாம் பெற்றோரோ இல்லையோ, நண்பர்களை நாம் ஞானமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் நண்பர்கள் யெகோவாவை நேசிப்பவர்களாக இருந்தால், நல்ல லட்சியங்களை வைக்கவும் பிரச்சினைகளைத் தவிர்க்கவும் உங்களுக்கு உதவுவார்கள். (நீதி. 13:20) அவர்களுடைய நல்ல முன்மாதிரியைப் பார்த்து நீங்களும் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவீர்கள். அதேபோல், உங்களுடைய நல்ல நடத்தையைப் பார்த்து அவர்களும் உற்சாகமடைவார்கள். நாம் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டினால், கடவுளுடைய பிரியத்தைச் சம்பாதிக்கவும், சந்தோஷமாக வாழவும், அன்பானவர்களோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளவும் நம்மால் முடியும்.