Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘தைரியமாக . . . செயல்படுங்கள்’

‘தைரியமாக . . . செயல்படுங்கள்’

“தைரியமாகவும் உறுதியாகவும் இரு; வேலையைத் தொடங்கு [“செயல்படு,” பொது மொழிபெயர்ப்பு]. எதற்கும் பயப்படாதே, திகிலடையாதே. . . . யெகோவா உன் கூடவே இருக்கிறார்.” —1 நா. 28:20.

பாடல்கள்: 60, 29

1, 2. (அ) சாலொமோனுக்கு என்ன முக்கியமான நியமிப்பு கிடைத்தது? (ஆ) சாலொமோனின் விஷயத்தில் தாவீது எதை நினைத்துக் கவலைப்பட்டார்?

யெகோவா சாலொமோனுக்கு ஒரு விசேஷ நியமிப்பைக் கொடுத்தார். எருசலேமில் தனக்காக ஒரு ஆலயத்தைக் கட்டும் வேலையை மேற்பார்வை செய்ய அவரைத் தேர்ந்தெடுத்தார். அதுதான், சரித்திரத்திலேயே மிக முக்கியமான கட்டுமான வேலை! அந்த ஆலயம் “மிக மிகப் பிரமாண்டமாய்” இருக்க வேண்டியிருந்தது, உலகமே பாராட்டும் அளவுக்கு அழகாக இருக்க வேண்டியிருந்தது. அதைவிட முக்கியமாக, ‘உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் ஆலயமாக’ அது இருக்க வேண்டியிருந்தது.—1 நா. 22:1, 5, 9-11.

2 சாலொமோனுக்குக் கடவுள் துணையாக இருப்பார் என்று தாவீது ராஜா நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், சாலொமோன் ‘சின்னப் பையனாகவும், அனுபவம் போதாதவராகவும்’ இருந்தார். அதனால், அந்த ஆலயத்தைக் கட்டும் நியமிப்பை ஏற்றுக்கொள்ளும் தைரியம் அவருக்கு இருந்திருக்குமா? அல்லது, வயதும் அனுபவமும் போதாதென்று சொல்லி அந்த நியமிப்பை ஏற்றுக்கொள்ளாமல் போயிருப்பாரா? சாலொமோன் அந்த வேலையைச் செய்து முடிக்க, தைரியமாக செயல்பட வேண்டியிருந்தது.

3. தைரியமாக இருப்பதைப் பற்றித் தன்னுடைய அப்பா தாவீதிடமிருந்து சாலொமோன் என்ன கற்றுக்கொண்டார்?

3 தைரியமாக இருப்பதைப் பற்றித் தன்னுடைய அப்பா தாவீதிடமிருந்து சாலொமோன் நிறைய கற்றிருப்பார். தாவீது, சின்ன வயசிலேயே தன்னுடைய அப்பாவின் ஆடுகளைக் காட்டு விலங்குகளிடமிருந்து காப்பாற்றினார். (1 சா. 17:34, 35) பெரிய போர்வீரனாகவும் பயங்கரமான ராட்சதனாகவும் இருந்த கோலியாத்தோடு சண்டை போட்டபோதும் அவர் ரொம்பவே தைரியத்தைக் காட்டினார். கடவுளுடைய உதவியோடு ஒரு சின்னக் கூழாங்கல்லை வைத்து அவர் கோலியாத்தை வீழ்த்தினார்.—1 சா. 17:45, 49, 50.

4. சாலொமோன் ஏன் தைரியத்தைக் காட்ட வேண்டியிருந்தது?

4 தைரியமாக இருந்து ஆலயத்தைக் கட்டும்படி சாலொமோனை உற்சாகப்படுத்துவதற்கு தாவீதுதான் சரியான நபர் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. (1 நாளாகமம் 28:20-ஐ வாசியுங்கள்.) சாலொமோன் தைரியத்தைக் காட்டியிருக்காவிட்டால், பயத்திலேயே முடங்கிப்போயிருப்பார். அதாவது, வேலையை ஆரம்பித்திருக்கக்கூட மாட்டார். அப்படி வேலையை ஆரம்பிக்காமல் இருப்பது, நியமிப்பைச் சரியாகச் செய்து முடிக்காததைவிட மோசமானது.

5. நமக்கு ஏன் தைரியம் தேவை?

5 சாலொமோனைப் போலவே நமக்கும் யெகோவாவின் உதவி கிடைத்தால்தான், தைரியமாக இருக்கவும், யெகோவா கொடுக்கிற வேலையைச் செய்யவும் நம்மால் முடியும். அதனால், அன்று தைரியத்தைக் காட்டிய சிலருடைய உதாரணங்களைப் பார்க்கலாம். அதன் பிறகு, நாம் எப்படித் தைரியத்தோடு நம் வேலையைச் செய்து முடிக்கலாம் என்று யோசித்துப் பார்க்கலாம்.

தைரியம் காட்டியவர்கள்

6. யோசேப்பின் தைரியம் உங்கள் மனதை ஏன் தொடுகிறது?

6 பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவதற்கு போத்திபாரின் மனைவி ஆசைகாட்டியபோது, யோசேப்பு தைரியமாக நடந்துகொண்டார். அவளுடைய ஆசைக்கு இணங்க மறுத்தால் தன் உயிருக்கே ஆபத்து என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும், அவளுடைய வலையில் விழுவதற்குப் பதிலாகத் தைரியத்தைக் காட்டினார்; உடனடியாக அவளைவிட்டு ஓடிப்போனார்.—ஆதி. 39:10, 12.

7. ராகாப் எப்படித் தைரியத்தைக் காட்டினாள்? (ஆரம்பப் படம்)

7 தைரியத்துக்கு இன்னொரு உதாரணம் ராகாப். இஸ்ரவேலைச் சேர்ந்த உளவாளிகள் எரிகோவில் இருந்த அவளுடைய வீட்டுக்குப் போனபோது, அவள் பயந்துபோய் அவர்களுக்கு உதவி செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவள் யெகோவாவை நம்பியதால், தைரியத்தோடு அவர்கள் இரண்டு பேரையும் ஒளித்து வைத்தாள்; அங்கிருந்து பத்திரமாகத் தப்பித்துப் போவதற்கும் உதவினாள். (யோசு. 2:4, 5, 9, 12-16) யெகோவாதான் உண்மையான கடவுள் என்று ராகாப் நம்பினாள். அவர் அந்தத் தேசத்தை இஸ்ரவேலர்களின் கையில் கொடுப்பார் என்றும் உறுதியாக நம்பினாள். மற்ற மனிதர்களை நினைத்து அவள் பயப்படவில்லை, எரிகோவின் ராஜாவையும் அவருடைய ஆட்களையும் நினைத்துக்கூடப் பயப்படவில்லை. அதற்குப் பதிலாக, தைரியமாகச் செயல்பட்டு, தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றினாள்.—யோசு. 6:22, 23.

8. இயேசுவின் தைரியத்தைப் பார்த்தது அவருடைய அப்போஸ்தலர்களுக்கு எப்படி உதவியது?

8 இயேசுவின் உண்மையுள்ள அப்போஸ்தலர்களும் ரொம்பவே தைரியத்தைக் காட்டினார்கள். இயேசு எப்படித் தைரியத்தைக் காட்டினார் என்று அவர்கள் பார்த்திருந்தார்கள். அதனால், அவரைப் போலவே அவர்களால் தைரியமாக இருக்க முடிந்தது. (மத். 8:28-32; யோவா. 2:13-17; 18:3-5) இயேசுவைப் பற்றிக் கற்றுத்தரக் கூடாதென்று சதுசேயர்கள் அவர்களுக்குக் கட்டளை கொடுத்தார்கள்; ஆனால், அந்த மிரட்டலுக்கெல்லாம் அவர்கள் மசியவில்லை.—அப். 5:17, 18, 27-29.

9. இரண்டு தீமோத்தேயு 1:7-ன்படி நமக்கு எப்படித் தைரியம் கிடைக்கிறது?

9 யோசேப்பும், ராகாபும், இயேசுவும், அவருடைய அப்போஸ்தலர்களும் சரியானதைச் செய்ய வேண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தார்கள். தங்களையே நம்பியதால் அல்ல, யெகோவாவை நம்பியதால்தான் அவர்கள் தைரியத்தைக் காட்டினார்கள். நமக்கும் தைரியம் தேவைப்படும்போது, நம்மையே நம்பியிருக்காமல் யெகோவாவை நம்பியிருக்க வேண்டும். (2 தீமோத்தேயு 1:7-ஐ வாசியுங்கள்.) குடும்பத்திலும் சபையிலும் நாம் எப்படித் தைரியத்தைக் காட்ட வேண்டுமென்று இப்போது பார்க்கலாம்.

தைரியம் தேவைப்படுகிற சூழ்நிலைகள்

10. இளம் கிறிஸ்தவர்களுக்கு ஏன் தைரியம் தேவை?

10 யெகோவாவுக்குப் பிரியமாக நடக்க, இளம் கிறிஸ்தவர்கள் நிறைய சூழ்நிலைகளில் தைரியத்தைக் காட்ட வேண்டியிருக்கிறது. அதற்கு சாலொமோனின் உதாரணம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். சாலொமோன் தைரியத்தோடு சரியான தீர்மானங்களை எடுத்து, கடவுளுடைய ஆலயத்தைக் கட்டி முடித்தார். இளம் கிறிஸ்தவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் அவரைப் பின்பற்றவும் வேண்டும். உண்மைதான், அவர்கள் பெற்றோரிடம் உதவி கேட்கலாம், அப்படிக் கேட்கவும் வேண்டும்! இருந்தாலும், சில முக்கியமான தீர்மானங்களை அவர்கள்தான் எடுக்க வேண்டும். (நீதி. 27:11) யாரை நண்பர்களாகத் தேர்ந்தெடுப்பது, எந்தப் பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது, ஒழுக்க விஷயத்தில் எப்படி சுத்தமாக இருப்பது, எப்போது ஞானஸ்நானம் எடுப்பது போன்ற விஷயங்களில் சரியான தீர்மானங்களை எடுக்க அவர்களுக்குத் தைரியம் தேவை. ஏனென்றால், கடவுளைப் பழித்துப் பேசுகிற சாத்தானுடைய விருப்பத்துக்கு மாறாக அவர்கள் நடக்க வேண்டியிருக்கிறது.

11, 12. (அ) மோசே எப்படித் தைரியத்தைக் காட்டினார்? (ஆ) இளம் பிள்ளைகள் எப்படி மோசேயின் உதாரணத்தைப் பின்பற்றலாம்?

11 என்ன லட்சியங்களை வைக்கலாம் என்று இளம் பிள்ளைகள் முடிவெடுக்க வேண்டும். இது அவர்கள் எடுக்க வேண்டிய முக்கியமான தீர்மானங்களில் ஒன்று. சில நாடுகளில், உயர்கல்வி படிப்பதையும் கைநிறைய சம்பாதிப்பதையும் லட்சியமாக வைக்கும்படி இளம் பிள்ளைகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மற்ற நாடுகளில், பொருளாதாரப் பிரச்சினைகள் இருப்பதால், வேலைக்குப் போய்க் குடும்பத்தைக் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்று இளம் பிள்ளைகள் நினைக்கலாம். நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, மோசேயின் உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். அவர் பார்வோனின் மகளால் வளர்க்கப்பட்டார். அவர் நினைத்திருந்தால், பெரிய பணக்காரராக அல்லது செல்வாக்கு படைத்தவராக ஆவதையே லட்சியமாக வைத்திருக்கலாம். அப்படிப்பட்ட லட்சியத்தை வைக்கும்படி எகிப்தியர்களாக இருந்த அவருடைய குடும்பத்தாரும் ஆசிரியர்களும் ஆலோசகர்களும் எந்தளவுக்கு அவரை வற்புறுத்தியிருப்பார்கள்! ஆனால் மோசே, யெகோவாவின் மக்களோடு இருக்க வேண்டுமென்ற தைரியமான தீர்மானத்தை எடுத்தார். எகிப்தையும் அங்கிருந்த செல்வங்களையும் விட்டுவந்த பிறகு, அவர் யெகோவாவை முழுமையாக நம்பியிருந்தார். (எபி. 11:24-26) அதனால், யெகோவா அவருக்கு நிறைய ஆசீர்வாதங்களைக் கொடுத்தார்; எதிர்காலத்தில் இன்னும் நிறைய ஆசீர்வாதங்களையும் கொடுப்பார்.

12 இளம் பிள்ளைகள் யெகோவாவின் சேவையில் தைரியமாக சில லட்சியங்களை வைக்கும்போதும், அவற்றுக்குத் தங்கள் வாழ்க்கையில் முதலிடம் தரும்போதும், யெகோவா அவர்களை ஆசீர்வதிப்பார். குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள யெகோவா அவர்களுக்கு உதவுவார். முதல் நூற்றாண்டில், இளைஞரான தீமோத்தேயு தன் வாழ்க்கையில் கடவுளுடைய சேவைக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். நீங்களும் அப்படியே செய்யலாம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)பிலிப்பியர் 2:19-22-ஐ வாசியுங்கள்.

வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் தைரியத்தைக் காட்ட நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்களா? (பாராக்கள் 13-17)

13. தன்னுடைய லட்சியங்களை அடைய ஒரு இளம் சகோதரிக்கு ஏன் தைரியம் தேவைப்பட்டது?

13 அமெரிக்காவில் இருக்கிற அலபாமாவில் வாழும் ஒரு சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். கடவுளுடைய சேவையில் லட்சியங்களை வைக்க அவருக்குத் தைரியம் தேவைப்பட்டது. “சின்ன வயசிலிருந்தே எனக்கு கூச்ச சுபாவம் ஜாஸ்தி. ராஜ்ய மன்றத்துல யார்கிட்டயும் வாய் திறக்க மாட்டேன். முன்ன பின்ன தெரியாதவங்களோட வீட்டுக் கதவ தட்டறதுக்கு பயந்து நடுங்குவேன்” என்று அவர் எழுதுகிறார். ஆனால், பெற்றோரின் உதவியோடும் சபையில் இருந்த மற்றவர்களுடைய உதவியோடும், ஒழுங்கான பயனியராக ஆகும் லட்சியத்தை அவர் அடைந்தார். “மேல்படிப்பு படிக்கணும்... பெரிய ஆளா வரணும்... பணம் பொருள் குவிக்கணும்... இதெல்லாம்தான் நல்ல லட்சியங்கள்னு சாத்தானோட உலகம் சொல்லுது” என்று அவர் சொல்கிறார். ஆனால், பெரும்பாலான மக்களால் அந்த லட்சியங்களை அடைய முடியாது என்றும், அவற்றால் வலியும் வேதனையும்தான் மிஞ்சுகிறது என்றும் அவர் புரிந்துகொண்டார். “யெகோவாவுக்கு சேவை செய்யறதுனால நான் ரொம்ப சந்தோஷமாவும் திருப்தியாவும் இருக்கேன்” என்றும் அவர் சொல்கிறார்.

14. கிறிஸ்தவப் பெற்றோர்களுக்கு என்ன சூழ்நிலைகளில் தைரியம் தேவைப்படுகிறது?

14 கிறிஸ்தவப் பெற்றோர்களுக்கும் தைரியம் தேவைப்படுகிறது. உதாரணத்துக்கு, குடும்ப வழிபாட்டுக்கும் வெளி ஊழியத்துக்கும் சபைக் கூட்டங்களுக்கும் நீங்கள் ஒதுக்கியிருக்கிற நேரங்களில் வேலை செய்யும்படி உங்கள் முதலாளி அடிக்கடி கேட்கலாம். முடியாது என்று சொல்லவும், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி வைக்கவும் உங்களுக்குத் தைரியம் தேவை. ஒருவேளை, உங்கள் பிள்ளைகள் சில விஷயங்களைச் செய்யக் கூடாதென்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சபையில் இருக்கிற சில பெற்றோர்கள், அவற்றைச் செய்வதற்கு தங்கள் பிள்ளைகளை அனுமதிக்கலாம். நீங்கள் ஏன் உங்கள் பிள்ளைகளை அனுமதிப்பதில்லை என்று அந்தப் பெற்றோர் கேட்கும்போது, நீங்கள் தைரியத்தோடும் மரியாதையோடும் அவர்களுக்கு விளக்குவீர்களா?

15. சங்கீதம் 37:25 மற்றும் எபிரெயர் 13:5 பெற்றோர்களுக்கு எப்படி உதவும்?

15 கடவுளுடைய சேவையில் லட்சியங்களை வைக்கவும், அவற்றை அடையவும் பிள்ளைகளுக்கு உதவி செய்ய பெற்றோர்களுக்குத் தைரியம் தேவைப்படுகிறது. உதாரணத்துக்கு, பயனியர் ஊழியம் செய்யவோ, தேவை இருக்கும் இடங்களில் சேவை செய்யவோ, பெத்தேல் சேவை செய்யவோ, ராஜ்ய மன்றங்கள் மற்றும் மாநாட்டு மன்றங்களின் கட்டுமான வேலையில் உதவி செய்யவோ பிள்ளைகளை உற்சாகப்படுத்த சில பெற்றோர்கள் தயங்கலாம். ஒருவேளை, வயதான காலத்தில் தங்களைக் கவனித்துக்கொள்ள பிள்ளைகள் இருக்க மாட்டார்களோ என்று நினைத்து அவர்கள் பயப்படலாம். ஆனால், ஞானமுள்ள பெற்றோர்கள் தைரியத்தைக் காட்டுகிறார்கள். யெகோவா தன் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறார்கள். (சங்கீதம் 37:25-ஐயும், எபிரெயர் 13:5-ஐயும் வாசியுங்கள்.) அப்படித் தைரியத்தோடு யெகோவாவை நம்பியிருக்கும் பெற்றோர்கள், அதேபோல் நடந்துகொள்ள தங்கள் பிள்ளைகளுக்கு உதவுகிறார்கள்.—1 சா. 1:27, 28; 2 தீ. 3:14, 15.

16. கடவுளுடைய சேவையில் லட்சியங்களை வைக்க சில பெற்றோர்கள் எப்படித் தங்கள் பிள்ளைகளுக்கு உதவியிருக்கிறார்கள்? இது எப்படி அவர்களுடைய பிள்ளைகளுக்குப் பிரயோஜனமாக இருந்திருக்கிறது?

16 அமெரிக்காவில் இருக்கும் ஒரு கணவனும் மனைவியும், யெகோவாவின் சேவைக்கு முக்கியத்துவம் தர தங்களுடைய பிள்ளைகளுக்கு உதவினார்கள். அந்தக் கணவன் இப்படிச் சொல்கிறார்: “எங்க பிள்ளைங்க நடக்கவும் பேசவும் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, பயனியர் ஊழியம் செய்யறதுனாலயும் சபை வேலைகள செய்யறதுனாலயும் எவ்ளோ சந்தோஷம் கிடைக்குதுன்னு அவங்ககிட்ட சொல்லிட்டே இருப்போம். இப்போ அதுதான் அவங்களோட லட்சியம்.” ஆன்மீக லட்சியங்களை வைப்பதும், அதை அடைவதும், சாத்தானுடைய உலகத்திலிருந்து வருகிற அழுத்தங்களை சமாளிக்கவும், யெகோவாவின் சேவையில் கவனம் செலுத்தவும் பிள்ளைகளுக்கு உதவுவதாக அவர் சொல்கிறார். இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான ஒரு சகோதரர் இப்படி எழுதினார்: “விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி சம்பந்தப்பட்ட லட்சியங்களை அடைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உதவுகிறார்கள். அதற்காக நிறைய முயற்சி எடுக்கிறார்கள், நிறைய செலவு செய்கிறார்கள். ஆனால், யெகோவாவோடு நல்ல பந்தத்தை வளர்க்க உதவும் லட்சியங்களை வைக்க பிள்ளைகளுக்கு உதவுவது எவ்வளவு ஞானமானது! ஆன்மீக லட்சியங்களை வைப்பதற்கும் அவற்றை அடைவதற்கும் எங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து உழைத்தது ரொம்ப திருப்தியைத் தந்திருக்கிறது.” கடவுளுடைய சேவையில் லட்சியங்களை வைக்கவும் அவற்றை அடையவும் பிள்ளைகளுக்கு உதவுகிற பெற்றோர்கள் கடவுளுடைய பிரியத்தைச் சம்பாதிக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

சபையில் தைரியம்

17. கிறிஸ்தவ சபையில் எப்படித் தைரியத்தைக் காட்டலாம் என்பதற்கு உதாரணங்கள் கொடுங்கள்.

17 சபையிலும் நாம் தைரியத்தைக் காட்ட வேண்டும். உதாரணத்துக்கு, பாவம் செய்த ஒருவரை நீதிவிசாரணை செய்யும்போது அல்லது உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு உதவி செய்யும்போது மூப்பர்கள் தைரியத்தைக் காட்ட வேண்டும். மூப்பர்களில் சிலர் சிறைச்சாலைகளுக்குப் போய், பைபிள் படிப்புகளையோ கூட்டங்களையோ நடத்துகிறார்கள். கல்யாணமாகாத சகோதரிகளைப் பற்றி என்ன சொல்லலாம்? தைரியத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்ய அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர்கள் பயனியர் ஊழியம் செய்யலாம், தேவை அதிகம் இருக்கும் இடங்களுக்குப் போய் சேவை செய்யலாம், உள்ளூர் கட்டுமான வேலைகளில் ஈடுபடலாம், அல்லது ராஜ்ய பிரசங்கிப்பாளர்களுக்கான பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம். சிலர் கிலியட் பள்ளிக்குக்கூட அழைக்கப்படுகிறார்கள்.

18. வயதான சகோதரிகள் எப்படித் தைரியத்தைக் காட்டலாம்?

18 வயதான சகோதரிகளை நாம் நேசிக்கிறோம். அவர்கள் சபையில் இருப்பதற்காக நன்றியோடு இருக்கிறோம். அவர்களில் சிலரால், முன்புபோல் அதிகமாக ஊழியம் செய்ய முடியாவிட்டாலும், தைரியத்தோடு செயல்பட முடியும். (தீத்து 2:3-5-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, அடக்கமாக உடை உடுத்தும் விஷயத்தில் ஒரு இளம் சகோதரிக்கு அறிவுரை சொல்லும்படி மூப்பர்கள் கேட்கும்போது, வயதான சகோதரிகள் தைரியத்தைக் காட்ட வேண்டும். அவர்கள் அந்தச் சகோதரியைத் திட்டாமல், உடை உடுத்துவது சம்பந்தமாக அவள் எடுக்கும் தீர்மானம் மற்றவர்களை எப்படிப் பாதிக்கிறது என்று யோசித்துப் பார்க்கும்படி அன்போடு சொல்ல வேண்டும். (1 தீ. 2:9, 10) வயதான சகோதரிகள் இப்படிப்பட்ட விதங்களில் அன்பு காட்டும்போது சபை பலப்படும்.

19. (அ) ஞானஸ்நானம் எடுத்த சகோதரர்கள் எப்படித் தைரியத்தைக் காட்டலாம்? (ஆ) பிலிப்பியர் 2:13 மற்றும் 4:13, தைரியத்தைக் காட்ட எப்படிச் சகோதரர்களுக்கு உதவும்?

19 ஞானஸ்நானம் எடுத்த சகோதரர்களும் தைரியமாகச் செயல்பட வேண்டும். உதவி ஊழியர்களாகவும் மூப்பர்களாகவும் சேவை செய்ய அவர்கள் முன்வரும்போது சபைக்கு ரொம்பவே பிரயோஜனமாக இருக்கும். (1 தீ. 3:1) ஆனால், சிலர் அந்த பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயங்கலாம். ஒருவேளை, ஒரு சகோதரர் முன்பு தவறுகளைச் செய்திருக்கலாம். அதனால், உதவி ஊழியராகவோ மூப்பராகவோ சேவை செய்ய தனக்குத் தகுதி இல்லையென்று நினைக்கலாம். அல்லது, அப்படிச் சேவை செய்யும் அளவுக்குத் தனக்கு திறமை இல்லையென்று ஒரு சகோதரர் நினைக்கலாம். நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? அப்படியென்றால், தைரியத்தை வரவழைத்துக்கொள்ள யெகோவா உங்களுக்கு உதவி செய்வார். (பிலிப்பியர் 2:13-ஐயும், 4:13-ஐயும் வாசியுங்கள்.) மோசேயின் உதாரணத்தை நினைத்துப் பாருங்கள். யெகோவா கொடுத்த வேலையைத் தன்னால் செய்ய முடியாது என்றுதான் அவரும் நினைத்தார். (யாத். 3:11) ஆனால், தைரியமாக அந்த வேலையைச் செய்ய யெகோவா அவருக்கு உதவினார். ஞானஸ்நானம் எடுத்த ஒரு சகோதரருக்கு அப்படிப்பட்ட தைரியம் எப்படிக் கிடைக்கும்? உதவிக்காக அவர் யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம், தினமும் பைபிளைப் படிக்கலாம். பைபிள் கதாபாத்திரங்கள் எப்படித் தைரியத்தைக் காட்டினார்கள் என்று தியானித்துப் பார்க்கலாம். பயிற்சி கொடுக்கும்படி மனத்தாழ்மையோடு மூப்பர்களிடம் கேட்கலாம். சபையில் என்ன உதவி தேவைப்பட்டாலும் அதைச் செய்ய முன்வரலாம். ஞானஸ்நானம் எடுத்த சகோதரர்களே, நீங்கள் எல்லாரும் தைரியமாக இருந்து, சபைக்காகக் கடினமாக உழையுங்கள்!

“யெகோவா உன் கூடவே இருக்கிறார்”

20, 21. (அ) தாவீது எதைப் பற்றி சாலொமோனுக்கு ஞாபகப்படுத்தினார்? (ஆ) எதைப் பற்றி நாம் உறுதியாக இருக்கலாம்?

20 ஆலயத்தைக் கட்டி முடிக்கும்வரை யெகோவா சாலொமோனோடு இருப்பார் என்று தாவீது ராஜா அவருக்கு ஞாபகப்படுத்தினார். (1 நா. 28:20) சாலொமோன் கண்டிப்பாக அந்த வார்த்தைகளைத் தியானித்துப் பார்த்திருப்பார். அதனால், தனக்கு வயதும் அனுபவமும் போதாது என்று சொல்லிக்கொண்டு அவர் அந்த வேலையைச் செய்யாமல் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, மிகுந்த தைரியத்தைக் காட்டினார். யெகோவாவின் உதவியோடு, அந்தப் பிரமாண்டமான ஆலயத்தை ஏழரை வருஷங்களில் கட்டி முடித்தார்.

21 யெகோவா சாலொமோனுக்கு உதவியது போலவே நமக்கும் உதவுவார். குடும்பத்திலும் சரி, சபையிலும் சரி, தைரியத்தைக் காட்டுவதற்கும் நம் வேலையைச் செய்து முடிப்பதற்கும் அவர் நமக்கு உதவுவார். (ஏசா. 41:10, 13) நாம் தைரியத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யும்போது, இப்போதும் எதிர்காலத்திலும் அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்பது உறுதி! அதனால், ‘தைரியமாக . . . செயல்படுங்கள்.’

^ பாரா. 12 கடவுளுடைய சேவையில் லட்சியங்கள் வைப்பதற்கான சில ஆலோசனைகளை, ஜூலை 15, 2004 காவற்கோபுரத்தில் வெளிவந்த, “ஆன்மீக இலக்குகளால் உங்கள் படைப்பாளருக்கு மகிமை சேருங்கள்” என்ற கட்டுரையில் படித்துப் பாருங்கள்.