Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒஹாயோவிலுள்ள சீடர் பாயிண்ட்டில் 1919-ல் நடந்த மாநாட்டில் சகோதரர் ரதர்ஃபோர்ட் பேசிக்கொண்டிருக்கிறார்

1919​—நூறு வருஷங்களுக்கு முன்பு

1919​—நூறு வருஷங்களுக்கு முன்பு

அது 1919-ம் வருஷம்! நான்கு வருஷங்களுக்கும் மேல் நடந்துகொண்டிருந்த மகா போர் (பிற்பாடு, முதல் உலகப் போர் என்று அழைக்கப்பட்டது) அப்போதுதான் முடிவுக்கு வந்திருந்தது. 1918-ன் கடைசியில், போர் செய்வதைத் தேசங்கள் நிறுத்தின. ஜனவரி 18, 1919-ல் பாரிஸ் சமாதான மாநாடு ஆரம்பமானது. அந்த மாநாட்டின் சாதனைகளில் வெர்செயில்ஸ் ஒப்பந்தமும் ஒன்று. ஜெர்மனிக்கு எதிராகக் கூட்டணி நாடுகள் செய்துவந்த போரை அந்த ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவந்தது. ஜூன் 28, 1919-ல் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

சர்வதேச சங்கம் என்ற ஒரு புதிய அமைப்பையும் வெர்செயில்ஸ் ஒப்பந்தம் ஏற்படுத்தியது. “சர்வதேச ஒற்றுமையை அதிகமாக்குவதும், சமாதானத்தையும் பாதுகாப்பையும் சர்வதேச அளவில் நிலைநாட்டுவதும்” அந்தச் சங்கத்தின் குறிக்கோளாக இருந்தது. நிறைய சர்ச் அமைப்புகள் அந்தச் சங்கத்தை ஆதரித்தன. அந்தச் சங்கம், “பூமியில் கடவுளுடைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கிற ஓர் அரசியல் அமைப்பு” என்று அமெரிக்காவின் சர்ச்சஸ் ஆஃப் க்ரைஸ்ட் கூட்டமைப்புக் குழு சொன்னது. இப்படிச் சொல்லி அந்தச் சங்கத்துக்கு தன் ஆதரவைக் காட்டியது. அதோடு, பாரிஸ் சமாதான மாநாட்டுக்குத் தன்னுடைய பிரதிநிதிகளை அனுப்பியது. அந்த மாநாடு, ‘உலக சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்திருப்பதாக’ அந்தப் பிரதிநிதிகளில் ஒருவர் சொன்னார்.

அந்தச் சமயத்தில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமானது உண்மைதான்! ஆனால், அந்த மாநாட்டில் இருந்த மனிதர்களால் அல்ல, யெகோவாவால் அது ஆரம்பமானது. எப்படி? 1919-ல், அதுவரை இல்லாதளவுக்கு பிரசங்க வேலையை மும்முரமாகச் செய்ய யெகோவா தன்னுடைய மக்களுக்குப் புத்துயிர் கொடுத்தார். அப்போது, பிரசங்க வேலையில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமானது! ஆனால், அந்த வேலை ஆரம்பமாவதற்கு முன்பு, ஒரு பெரிய மாற்றத்தை பைபிள் மாணாக்கர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.

கஷ்டமான ஒரு முடிவு

ஜோஸஃப் ரதர்ஃபோர்ட்

உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியின் இயக்குநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வருடாந்தர ஓட்டெடுப்பு ஜனவரி 4, 1919 சனிக்கிழமை அன்று திட்டமிடப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில், யெகோவாவின் மக்களை முன்னின்று வழிநடத்திய சகோதரர் ஜோஸஃப் ரதர்ஃபோர்டும் மற்ற ஏழு சகோதரர்களும் அநியாயமாக கைது செய்யப்பட்டு, அட்லாண்டாவில் இருக்கிற ஒரு சிறையில் போடப்பட்டார்கள். (அட்லாண்டா என்ற நகரம், அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கிறது.) இப்போது சகோதரர்கள் கஷ்டமான ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது. சிறையில் போடப்பட்ட இயக்குநர்களையே மறுபடியும் தேர்ந்தெடுப்பதா? அல்லது, வேறு யாரையாவது தேர்ந்தெடுப்பதா?

இவான்டர் காயர்ட்

சிறையில் இருந்த சகோதரர் ரதர்ஃபோர்ட், அமைப்பின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். வேறு யாரையாவது பிரசிடென்ட்டாக தேர்ந்தெடுப்பது நல்லது என்று சில சகோதரர்கள் நினைத்தார்கள். சகோதரர் ரதர்ஃபோர்டுக்கு இது தெரியவந்ததால், ஓட்டெடுப்புக்காகக் கூடிவந்திருந்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், சகோதரர் இவான்டர் காயர்டை பிரசிடென்ட்டாக சிபாரிசு செய்திருந்தார். சகோதரர் காயர்ட் மிகவும் “சாந்தமான,” “விவேகமான” ஒரு சகோதரர் என்றும், “எஜமானுக்கு தன்னை அர்ப்பணித்தவர்” என்றும் சகோதரர் ரதர்ஃபோர்ட் எழுதியிருந்தார். இருந்தாலும், ஓட்டெடுப்பை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைப்பது நல்லது என்று நிறைய சகோதரர்கள் நினைத்தார்கள். சிறையில் இருந்த சகோதரர்கள் சார்பாக வாதாடிக்கொண்டிருந்த வழக்கறிஞர்களும் அதை ஒத்துக்கொண்டார்கள். இதைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது பதற்றமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.

ரிச்சர்ட் பார்பர்

அந்தச் சமயத்தில் ஒரு சகோதரர் ஒரு விஷயத்தைச் சொன்னார். அவர் சொன்ன விஷயம், எரிந்துகொண்டிருக்கும் நெருப்பை தண்ணீர் ஊற்றி அணைப்பதுபோல் இருந்தது என்று ரிச்சர்ட் பார்பர் பிற்பாடு சொன்னார். அவர் சொன்னது இதுதான்: “சட்டத்த பத்தியெல்லாம் எனக்கு அவ்வளவா தெரியாது. ஆனா, உண்மைத்தன்மையோட இருக்குறதுக்கு எது தேவைனு எனக்கு தெரியும். உண்மைத்தன்மையோட நடந்துக்கணும்னுதான் கடவுள் எதிர்பார்க்கிறாரு. ஓட்டெடுப்பு நடத்தி சகோதரர் ரதர்ஃபோர்ட மறுபடியும் பிரசிடென்ட்டா தேர்ந்தெடுக்குறது நல்லது. கடவுளுக்கு உண்மைத்தன்மைய காட்டுறதுக்கு இதவிட நல்ல வழி வேற எதுவும் இருக்க முடியாது.”—சங். 18:25.

அலெக்ஸாண்டர் மேக்மில்லன்

அடுத்த நாள் என்ன நடந்தது என்பதை சகோதரர் ரதர்ஃபோர்டுடன் சிறையில் இருந்த அலெக்ஸாண்டர் மேக்மில்லன் பிற்பாடு சொன்னார். தன்னுடைய அறையின் சுவரை சகோதரர் ரதர்ஃபோர்ட் தட்டியதாகவும், “கையை நீட்டுங்க” என்று சொல்லி ஒரு தந்தியை கொடுத்ததாகவும் சொன்னார். அதில் இருந்த சுருக்கமான செய்தியைப் பார்த்த உடனேயே மேக்மில்லன் விஷயத்தைப் புரிந்துகொண்டாராம். “ரதர்ஃபோர்ட் வைஸ் வான் பார்பர் ஆன்டர்சென் புல்லி மற்றும் ஸ்பில் பிரசிடென்ட் முதல் மூன்று அதிகாரிகள் உங்களுக்கு எங்கள் அன்பு” என்று அந்தத் தந்தியில் இருந்தது. ஏற்கெனவே இயக்குநர்களாக இருந்த எல்லாரும் மறுபடியும் இயக்குநர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அந்தத் தந்தியில் சொல்லப்பட்டிருந்தது. ஜோஸஃப் ரதர்ஃபோர்ட் பிரசிடென்ட்டாகவும் வில்லியம் வான் ஆம்பர்க் செயலர்-பொருளாளராகவும் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தது. இப்படி, சகோதரர் ஜோஸஃப் ரதர்ஃபோர்ட் மறுபடியும் பிரசிடென்ட்டாக தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார்.

விடுதலை!

இந்த எட்டு சகோதரர்களையும் விடுதலை செய்யும்படி கேட்டு பைபிள் மாணாக்கர்கள் ஒரு மனுவைத் தயாரித்தார்கள். தைரியமாகச் செயல்பட்ட இந்தச் சகோதர சகோதரிகள் 7,00,000-க்கும் அதிகமான மக்களிடம் கையெழுத்து வாங்கினார்கள். அந்த மனுவை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு முன்பாகவே, அதாவது மார்ச் 26, 1919 புதன்கிழமை அன்றே, சகோதரர் ரதர்ஃபோர்டும் மற்ற ஏழு சகோதரர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

தன்னை வரவேற்ற சகோதரர்களுக்கு ரதர்ஃபோர்ட் ஒரு பேச்சு கொடுத்தார். அதில், “இன்னும் கஷ்டமான காலத்த சந்திக்கிறதுக்கு நம்மள தயார்படுத்துறதுக்காகத்தான் இப்படி நடந்திருக்குனு உறுதியா நம்புறேன் . . . உங்க சகோதரர்கள சிறையில இருந்து வெளிய கொண்டுவர்றதுக்காக மட்டும் நீங்க போராடுல. அது வெறுமனே உங்க போராட்டத்தோட ஒரு பாகம்தான். . . . யெகோவாவுக்கு மகிமை சேர்க்குறதுதான் உங்க போராட்டத்தோட முக்கிய நோக்கம். அப்படிப் போராடுனவங்களுக்கு அருமையான ஆசீர்வாதம் கிடைச்சிருக்கு” என்று சொன்னார்.

இந்த வழக்கு விசாரணையில் யெகோவாவின் கை இருந்ததாகத் தெரிகிறது! மே 14, 1919-ல் மேல் முறையீடு நீதிமன்றம் இப்படித் தீர்ப்பு கொடுத்தது: “இந்த வழக்கின் பிரதிவாதிகள் . . . பாரபட்சமற்ற முறையில் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடக்காததால், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு மாற்றப்படுகிறது.” சகோதரர்கள்மீது கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்ததால், அவர்களை மன்னித்துவிடுவதாகவோ அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை குறைக்கப்படுவதாகவோ தீர்ப்பு வந்திருந்தால், அந்தத் தீர்ப்பு அவர்களைப் பற்றிய ஆவணங்களில் பதிவாகியிருக்கும். ஆனால் அப்படி எந்தத் தீர்ப்பும் வரவில்லை, வேறு எந்தக் குற்றமும் அவர்கள்மீது சுமத்தப்படவில்லை. அதனால், நீதிபதி ரதர்ஃபோர்டால் தன்னுடைய சட்டப்பூர்வ தகுதிகளைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. யெகோவாவின் மக்களின் சார்பாக ஐக்கிய மாகாணங்களின் உச்ச நீதிமன்றத்தில் அவரால் தொடர்ந்து ஆஜராக முடிந்தது. சிறையிலிருந்து விடுதலையான பிறகு நிறைய தடவை அவர் அப்படி ஆஜரானார்.

ஊழியம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம்

“எஜமான் நம்மள பரலோகத்துக்கு கூட்டிக்கிட்டு போறதுக்காக நாம எல்லாரும் காத்துட்டு இருக்கிற இந்த சமயத்துல, நாம ஒண்ணுமே செய்யாம சும்மா உட்கார்ந்துட்டு இருக்கப்போறதில்ல” என்று பேசிக்கொண்டதாக சகோதரர் மேக்மில்லன் பிற்பாடு சொன்னார். “எஜமானோட விருப்பம் என்னங்குறத தெரிஞ்சுக்குறதுக்கு ஏதாவது பண்ணனும்னு நாங்க புரிஞ்சுக்கிட்டோம்” என்றும் அவர் சொன்னார்.

ஆனால், பல வருஷங்களாகச் செய்துவந்த வேலையைத் தலைமை அலுவலகத்தில் இருந்த சகோதரர்களால் உடனடியாகத் தொடர முடியவில்லை. ஏன்? அவர்கள் சிறையில் இருந்தபோது, பிரசுரங்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பிளேட்டுகள் நாசமாகியிருந்தன. அதனால் அவர்கள் ரொம்பவே சோர்ந்துவிட்டார்கள். பிரசங்க வேலை முடிவுக்கு வந்துவிட்டதாகக்கூட நினைக்க ஆரம்பித்தார்கள்.

பைபிள் மாணாக்கர்கள் பிரசங்கித்த செய்தியைக் கேட்க மக்கள் இன்னமும் ஆர்வமாக இருந்தார்களா? இதைத் தெரிந்துகொள்ள ஒரு பேச்சு கொடுக்கலாம் என்று சகோதரர் ரதர்ஃபோர்ட் முடிவு செய்தார். அதைக் கேட்க பொது மக்களை அழைப்பதென்றும் சகோதரர்கள் முடிவு செய்தார்கள். “யாருமே அந்த கூட்டத்துக்கு வரலனா, நம்ம வேல முடிவுக்கு வந்துடுச்சுனு தெரிஞ்சிக்கலாம்” என்று மேக்மில்லன் சொன்னார்.

கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் 1919-ல் சகோதரர் ரதர்ஃபோர்ட் கொடுத்த “துயரப்படும் மனிதவர்க்கத்துக்கு நம்பிக்கை” என்ற பேச்சின் செய்தித்தாள் விளம்பரம்

மே 4, 1919, ஞாயிற்றுக்கிழமைதான் பேச்சு கொடுப்பதற்கான நாள்! அப்போது, சகோதரர் ரதர்ஃபோர்டின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருந்தது. ஆனாலும், “துயரப்படும் மனிதவர்க்கத்துக்கு நம்பிக்கை” என்ற தலைப்பில் கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் பேச்சு கொடுத்தார். அதைக் கேட்க 3,500 பேர் வந்திருந்தார்கள். இடம் இல்லாததால் நூற்றுக்கணக்கான பேர் திரும்பிப் போய்விட்டார்கள். அடுத்த நாள் 1,500 பேர் வந்திருந்தார்கள். சகோதரர்களுக்குப் பதில் கிடைத்தது! மக்களுக்கு இன்னமும் ஆர்வம் இருந்தது தெளிவானது.

அடுத்ததாக சகோதரர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் அன்று செய்தது, யெகோவாவின் சாட்சிகள் செய்யும் ஊழியத்துக்கு இன்றுவரை ரொம்பவே உதவியாக இருக்கிறது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

எதிர்கால வளர்ச்சிக்காகத் தயாரானார்கள்

ஆகஸ்ட் 1, 1919 தேதியிட்ட காவற்கோபுரத்தில் ஒரு அறிவிப்பு வந்தது. செப்டம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் ஒஹாயோவிலுள்ள சீடர் பாயிண்ட்டில் ஒரு பொது மாநாடு நடக்கப்போவதாக அது சொன்னது. “அதுல கண்டிப்பா கலந்துக்கணும்னு எல்லாருமே நினைச்சாங்க” என்று மிஸ்சௌரியைச் சேர்ந்த க்ளாரென்ஸ் பீட்டி என்ற இளம் பைபிள் மாணாக்கர் சொன்னார். 6000-க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் அதில் கலந்துகொண்டார்கள். எதிர்பார்த்ததைவிட இது அதிகமான கூட்டம்! பக்கத்திலிருந்த ஈரி ஏரியில் 200-க்கும் அதிகமானவர்கள் ஞானஸ்நானம் எடுத்ததைப் பார்த்து மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.

அக்டோபர் 1, 1919-ல் வெளிவந்த த கோல்டன் ஏஜ் பத்திரிகையின் முதல் இதழுடைய அட்டைப் படம்

மாநாட்டின் ஐந்தாம் நாள், அதாவது செப்டம்பர் 5, 1919 அன்று, “சக வேலையாட்களுக்கு ஒரு செய்தி” என்ற தலைப்பில் சகோதரர் ரதர்ஃபோர்ட் ஒரு பேச்சு கொடுத்தார். அப்போது, த கோல்டன் ஏஜ் * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) என்ற புதிய பத்திரிகையை வெளியிட்டார். “அந்தந்த சமயத்தில் நடக்கும் முக்கிய சம்பவங்களைப் பற்றியும், அவை ஏன் நடக்கின்றன என்பதைப் பற்றி பைபிள் சொல்லும் விளக்கங்களையும்” அந்தப் பத்திரிகை சொல்லும் என்று சகோதரர் ரதர்ஃபோர்ட் குறிப்பிட்டார்.

இந்தப் புதிய பத்திரிகையைப் பயன்படுத்தி தைரியமாக ஊழியம் செய்யும்படி பைபிள் மாணாக்கர்களுக்குச் சொல்லப்பட்டது. ஊழியத்தை ஒழுங்கமைப்பது சம்பந்தமாக அனுப்பப்பட்ட ஒரு கடிதம் இப்படிச் சொன்னது: “அர்ப்பணிக்கப்பட்ட [ஞானஸ்நானம் பெற்ற] ஒவ்வொருவரும் கடவுளுக்குச் சேவை செய்வதைப் பெரிய பாக்கியமாக நினைக்க வேண்டும். இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், உலக மக்களுக்குப் பிரசங்கிப்பதற்காக நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.” இந்த அழைப்பை ஏராளமானவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்! டிசம்பர் மாதத்துக்குள், ஆர்வத்துடிப்போடு செயல்பட்ட சகோதர சகோதரிகள், இந்தப் புதிய பத்திரிகைக்கு 50,000-க்கும் அதிகமான சந்தாக்களைச் செய்தார்கள்.

த கோல்டன் ஏஜ் பத்திரிகைகள் ஏற்றப்பட்ட வாகனத்துக்குப் பக்கத்தில் சகோதரர்கள் நிற்கிறார்கள். (புருக்லின், நியு யார்க்)

1919-ன் கடைசிக்குள் என்னென்ன விஷயங்கள் நடந்தன? யெகோவாவின் மக்கள் ஒழுங்கமைக்கப்பட்டார்கள். புதுத்தெம்போடு செயல்பட ஆரம்பித்தார்கள். கடைசி நாட்களோடு சம்பந்தப்பட்ட முக்கியமான நிறைய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின. மல்கியா 3:1-4-ல் சொல்லப்பட்டிருப்பதுபோல், யெகோவாவின் மக்கள் சோதிக்கப்பட்டு புடமிடப்பட்ட காலம் முடிவுக்கு வந்தது. ‘மகா பாபிலோனிலிருந்து’ யெகோவாவின் மக்கள் விடுதலை ஆனார்கள். அதோடு, ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ இயேசு நியமித்தார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (வெளி. 18:2, 4; மத். 24:45) தங்களிடமிருந்து யெகோவா எதிர்பார்ப்பதை செய்ய பைபிள் மாணாக்கர்கள் தயாராக இருந்தார்கள்!

^ பாரா. 22 இந்தப் பத்திரிகையின் பெயர் 1937-ல் கான்ஸலேஷன் என்று மாற்றப்பட்டது. 1946 முதல் விழித்தெழு! என்று அழைக்கப்படுகிறது.